தூதுபத் திரியன் னத்தைத் தொலைக்கும்
பூத் தாதுண்டாக்கும் மேதகு காய்ச்சே டத்தை மீட்கும்
வேர் மூன்று தோஷம் சேதமாய்ப் போகச் செய்யும்
பதார்த்த சூடாமணி
தூதுபத்தி ரியுண்டு தொலைக்கும் பூ
தாது மெத்த மிகுத்திடு தழைத்திடுங் காய்
கூறுகின்ற இருமலை மாத்திடும் வேர்
வாதபித்த சிலேத்தும மாற்றுமே
அகத்தியர் 2000
தூதுவளை உணவைச் சமிபாடு அடையவைக்கும். இதன் பூ ஆண்மையை அதிகரிக்கும். காய் நெஞ்சில் கட்டிய சளியை வெளியேற்றும். தூதுவளையின் வேர் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று தோஷங்களையுமே விலக்கும் என்பதை மேற்காணும் இரண்டு பாடல்களும் அறியத் தருகின்றன.
மேலதிகவிபரம்:
தூதுவளை முட்கள் நிறைந்த தண்டு உடைய ஏறுகொடி. இலைகளிலும் ஒரு சில முட்கள் காணப்படும். ஊதா நிறப்பூக்களும் பச்சைநிறக்காய்களும் சிவப்புநிறப்பழங்களும் உடையது தூதுவளை. இதன் இலை, காய், பழம் அனைத்துமே சளிக்கட்டை அகற்றக் கூடியன. நுரையீரல் கோளாறுகளுக்குத் தூதுவளை மருந்தாகும். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இருமல் போன்ற சுவாச நோய்களுக்கு சிகிச்சையளிக்க தூதுவளை பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. தூதுவளைக்கு சுவாசக்குழாய்களை விரிவடையச் செய்யக்கூடிய குணமும், சளியை வெளிக்கொண்டுவரக்கூடிய குணமும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தூதுவளை ஒட்சியெதிரிகளைக் கொண்டுள்ளது, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்கவும் புற்றுநோய் மற்றும் இதயநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
தூதுவளை நீரிழிவு எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க தூதுவளை உதவும் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
மார்பில் சளிக்கட்டு, இருமல் போன்றவற்றுக்கு தூதுவளை ரசம் அல்லது தூதுவளைக் குடிநீர் அருந்தலாம். தூதுவளை 15 கிராமுடன் 500 மில்லிலீட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து தண்ணீர் அரைவாசியாக வற்றியவுடன் குடிநீரை வடித்தெடுத்து அக்குடிநீரில் 30 முதல் 40 மில்லிலீட்டர் வரை ஒருநாளைக்கு மூன்று தடவைகள் குடித்துவர இருமல், இரைப்பு, சளியுடன்கூடிய காய்ச்சல் என்பன குணமாகும்.
தூதுவளங்காயை மோரில் ஊறவைத்துப் பின்னர் வற்றலாகக் காயவைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும். குளிர்காலத்தில் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்து உணவுடன் சேர்த்துக்கொண்டால் ஆஸ்துமாக் குணங்கள் குறையும்.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கித் துவையல் செய்து வாரத்துக்கு இருமுறை உணவில் சேர்த்துவர தாம்பத்ய உறவு மேம்படும் என்றும், இதன் பூவை உட்கொண்டாலும் ஆண்மை சக்தி பெருகும் என்றும் கூறப்படுகிறது. மருந்தாகவும் உணவாகவும் பயன்படும் தூதுவளைக்கீரையைச் சேர்த்து தோசை, ரசம், சம்பல் (துவையல்) செய்து சாப்பிடலாம்.
தூதுவளைத் தோசை
தூதுவளைத் தோசை செய்ய காலையில் 1 கப் இட்லி அரிசி, ½ கப் உளுந்து, இவற்றைத் தனித்தனியாகக் குறைந்தது மூன்று மணிநேரம் ஊற வைக்கவும். ஒரு கைப்பிடி தூதுவளை இலைகளைக் கழுவிச் சுத்தம் செய்தபின்னர் ஊறவைத்த அரிசி மற்றும் உளுந்துடன் சேர்த்துவிடவும். இக்கலவையுடன் 1/4 தேக்கரண்டி வெந்தயமும் உப்பு தேவையான அளவும் சேர்த்துத் தண்ணீர் விட்டு மிருதுவாக அரைக்கவும். இந்தத் தோசைமாவில் தோசை சுட்டு சாப்பிடலாம்.
தூதுவளை ரசம்
தூதுவளை ரசம் செய்ய, 1/2 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி மிளகுத்தூள், 3 உள்ளிப்பல், 2 பச்சை மிளகாய் என்பவற்றுடன் ஒரு கைப்பிடி புதிதாகப் பறித்த தூதுவளை இலைகளைச் சேர்த்து கல்லுரலில் போட்டு இலேசாக இடித்தெடுக்கவும். ஒரு சிறிய துண்டு புளியை ஒரு கப் தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயைச் சூடாக்கி, கடுகு சேர்த்து, அது வெடித்ததும், ஒரு சிறிய துண்டு பெருங்காயம், ஒரு செத்தல் மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். பொடியாக நறுக்கிய 1 தக்காளியை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் புளித்தண்ணீரில் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கொதித்தவுடன் முன்னர் இடித்து வைத்துள்ள தூதுவளைக் கலவையை சேர்த்துக் கொதிக்கவைக்கவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும். இந்தத் தூதுவளைரசம் சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், சமிபாட்டுக்குறைவினால் ஏற்படும் வயிற்று வலியிலிருந்தும் நிவாரணம் தரும்.
தூதுவளைச் சம்பல்
தூதுவளைச் சம்பல் செய்ய, ஒரு பிடி தூதுவளை இலைகளைக் கழுவிச் சுத்தம் செய்யவும். சட்டியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயைச் சூடாக்கவும். அதில் செத்தல் மிளகாய் 2, உள்ளிப்பல் 1, தூதுவளை இலைகள் சேர்த்து இலைகள் வாடும் வரை வதக்கவும்.
தேங்காய்த் துருவல் 1/4 கப், சிறிது புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். கலவை ஆறியதும் அரைத்து எடுக்கவும். மதிய உணவின்போது சோற்றுடன் சேர்த்து உண்ணலாம், சுவையாக இருக்கும். நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது.
தூதுவளைப்பொடி
தூதுவளை இலைகள் தாராளமாகக் கிடைக்கும் காலத்தில் அவ்விலைகளைப் பொடிசெய்து வைத்துக்கொண்டு தோசை, ரசம் போன்றவை தயாரிப்பதற்கு இலைக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். தூதுவளைப் பொடி செய்ய, ஒரு கைப்பிடி அளவு தூதுவளை இலைகளைச் சேகரித்துக் கழுவிச் சுத்தம் செய்யவேண்டும். அனைத்து ஈரப்பதத்தையும் உறிஞ்சுவதற்கு இலைகளை சமையலறைத் துணியில் பரப்பவும். ஈரப்பதம் இல்லாது மிருதுவாக இருக்கும் போதே, மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுக்கவும். அரிதட்டில் வடித்து எடுத்த தூளை காற்றுப்புகாத பாத்திரம் ஒன்றில் சேமித்து வைக்கவும். (தற்போது தூதுவளைப் பொடியை ஒன்லைன் மூலம் ஓர்டர் செய்து பெற்றுக்கொள்ளகூடியதாக உள்ளது)
தூதுவளைப்பொடியை மருந்தாக எடுக்கும்போது 1/2 தேக்கரண்டி பொடியைத் தேன் அல்லது வெந்நீரில் கலந்து கொடுக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் ஒருபோதும் தூதுவளையை அதிகமாக உட்கொள்ளக்கூடாது.
தூதுவளையின் நன்மைகள் பற்றியும் அதன் பக்க விளைவுகள் பற்றியும் முழுமையாகப் புரிந்து கொள்ளக் கூடுதல் ஆராய்ச்சி தேவை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். எந்தவொரு மூலிகை மருந்தையும் போலவே, மருத்துவ நோக்கங்களுக்காக தூதுவளை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு சுகாதார வழங்குநருடன் கலந்து ஆலோசிப்பது அவசியம்.
Solanum trilobatum L என்பது தூதுவளையின் இலத்தீன் விஞ்ஞானப்பெயர். Purple fruited pea eggplant என்பது தூதுவளையின் ஆங்கிலப்பெயர்.
தூதுவளைக்கு சிங்கவல்லி, தூதளம், அளர்க்கம் எனப் பலபெயர்கள் உண்டு. எனினும் இந்தத் தாவரத்துக்குத் தூதுவளை என்னும் பெயர் வந்ததற்கான காரணத்தை விளக்க பக்தியும் படிப்பினையும் ஊட்டும் ஒரு அழகான கதை உள்ளது.
சுந்தரருக்குப் பிடித்த தூதுவளைக்கறி
சூதம் பயிலும் பொழில்அம்பரில் தூய வாய்மை
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர்
ஏதம் புரியும் எயில்செற்றவர்க் கன்பர் வந்தால்
பாதம் பணிந்தார் அமுதூட்டுநற் பண்பின் மிக்கார்
சேக்கிழார்
அறுபத்துமூவருள் ஒருவராக எண்ணப்படும் சோமாசிமாறனார் தமிழ் நாட்டில் திருவம்பர் என்னும் ஊரில் பிறந்த ஓர் அந்தணர். சிவனடியார்கள் எவராயிருப்பினும் பாரபட்சம் காட்டாது அவர்களை ஆர்வமுடன் வரவேற்று உபசரித்து அனுப்புவது அவரது வழக்கம். சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதுடனும் சிவன்கோவில்களுக்குச் சென்று வழிபடுவதுடனும் நின்றுவிடாது சிவபிரானை முதல் விருந்தினராகப் போற்றிச் செய்யும் சிவவேள்விகளைச் செய்வதிலும் பெருவிருப்பு உடையவராக இருந்தார்.
சோமாசிமாறனார் ஒருமுறை திருவாரூர்க் கோயிலுக்குச் சென்றிருந்தபோதுதான் அவரது வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அங்குதான் தம்பிரான் தோழர் என அறியப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரையும் அவரது மனைவியாராகிய பரவையாரையும் நேரில் சந்தித்து உரையாடும் பெரும்பேறு சோமாசி மாறனுக்குக் கிடைத்தது. இந்தச் சந்திப்பின் மூலம் தாம் வாழ்நாள் முழுவதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஓர் அற்புத நிகழ்வு நடைபெறக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக சோமாசிமாறனார் நம்பினார்.
சிவபிரானுக்கு உரிய வேள்விகளைத் தொடர்ந்து செய்துவந்த சோமாசிமாறனுக்கு வேள்வித்தீயில் தாம் சமர்ப்பிக்கும் நைவேத்தியப் பொருள்களை ஒருமுறையேனும் சிவபிரானே நேரில்வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்னும் பேராசை இருந்தது.
தனது பக்திக்கு இரங்கி சிவபெருமான் நேரில் வருவார் என்பதில் சோமாசிக்கு நம்பிக்கை இல்லை. எனினும் சுந்தரரினதும் பரவையாரினதும் அறிமுகம் கிடைத்தபின்னர் தமது ஆசை நிறைவேறக்கூடிய சாத்தியம் இருப்பதாக அவர் நம்பினார். தம்பிரான் தோழரான சுந்தரமூர்த்திநாயனார் அழைத்தால் சிவபிரான் நிச்சயம் வருவார் என்பதில் இவருக்குச் சந்தேகமே இல்லை. எனவே முதலில் சுந்தரரைத் தனது நண்பராக்கிக் கொள்ள விரும்பினார். சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் தூதுவளைக்கீரை மிகவும் பிடித்த கறி என்பதை சுந்தரரின் மனைவியான பரவையார் மூலம் அறிந்துகொண்டார். தூதுவளைக்கீரை மூலம் நட்பை வளர்க்கலாம் என்று தீர்மானித்தார். நாள்தோறும் தவறாமல் தூதுவளைக்கீரை பறித்துப் பரவையாரிடம் கொடுத்துவந்தார். பரவையாரும் அதைப்பக்குவமாய்ச் சமைத்து சுந்தரருக்குப் பரிமாறிவந்தார்.
ஆற்றைக்கடந்துவந்துதான் பரவையாரிடம் தூதுவளையை கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு நாள் ஆற்றில் வெள்ளம்பெருகிவிட்டதால் சோமாசிமாறனால் ஆற்றை நீந்திக்கடக்கமுடியாமல் போய்விட்டது. அன்று சுந்தரருக்குத் தூதுவளைக்கறி கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் சோமாசி மாறன் என்னும் பிராமணர் ஒருவர் தினமும் தூதுவளை கொண்டுவந்து கொடுக்கும் விடயம் சுந்தரருக்குத் தெரியவந்தது. இப்படித்தான் சோமாசிமாறனார் சுந்தரருக்கு நண்பரானார்.
சோமாசியார் ஒருமுறை சுந்தரரோடு உரையாடக் கிடைத்த தருணத்தில் தாம் அடுத்துச் செய்யவிருக்கும் சிவவேள்வியின்போது சமர்ப்பிக்கப்படும் நைவேத்தியத்தைச் சிவபிரானே நேரில்வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்னும் தமது பெருவிருப்பத்தைச் சுந்தரரிடம் தெரிவித்தார். அப்போது உமக்காக இறைவனிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்று வாக்குக்கொடுத்த சுந்தரர் அவ்வாறே தமது நண்பரின் வேண்டுதலை இறைவனிடம் சமர்ப்பித்தார். சிவபிரான் அடியாரது வேண்டுதலை ஏற்றுக்கொண்டு தாம் வேள்விக்கு நேரில் வருவதாக ஒப்புதல் அளித்தார். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை போட்டார். நான் வேள்விக்கு வருகின்றேன். ஆனால் எப்போது வருவேன் எந்த வடிவத்தில் வருவேன் என்று சொல்லமாட்டேன். அவராகவே என்னை அறிந்துகொள்ளவேண்டும் என்பதை சோமாசிமாறனிடம் தெரிவித்துவிடுமாறு சிவபிரான் கூறிவிட்டார்.
ஒரு சுபமுகூர்த்த நாளில் வேதவிற்பன்னர்கள் புடைசூழ சோமாசி மாறனார் வேள்விச் சடங்குகளை நடத்திக்கொண்டிருந்தார். உச்சிவேளை நேரத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் இருபிள்ளைகளும் கூடவே நான்கு நாய்களுடன் யாகசாலைக்குள் நுழைந்தனர். அந்தப்பெண் தனது தலையில் கள் நிறைந்த குடம் ஒன்றைச் சுமந்திருந்தாள். இவர்களைக் கண்டதும் அங்கு கூடியிருந்த பிராமணர்கள் அனைவரும் வேகமாக யாகசாலையைவிட்டு வெளியேறி ஊருக்கு வெளியே ஓடினர். சோமாசிமாறனாரோ தாம் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.
அங்குவந்த குடும்பத் தலைவனுக்குத் யாகத்தில் படைத்து வைத்த பொருள்களைத் தானமாக வழங்கினார். அந்தக் கணமே கணவனும் மனைவியும் இருபிள்ளைகளும் அவர்களின் நாய்களும் மறைந்துவிட்டனர். சோமாசிமாறநாயனாரின் வேண்டுதல் பலித்தது. இறைவனின் அருள் அவருக்கு முழுமையாகக் கிடைத்தது.
ஊருக்கு வெளியே ஓடிச்சென்றிருந்த பிராமணர்கள் திரும்பிவந்தபின் நடந்த சம்பவத்தை அறிந்து தம்மைத்தாமே நொந்துகொண்டனர். இறைவனே நேரில் வந்தபோது தாம் ஊருக்குவெளியே ஓடிய பாவத்தைத் தீர்க்கவேண்டி அன்றுமுதல் ஒவ்வொரு நாளும் உச்சிவேளையில் ஊருக்கு வெளியே செல்லும் வழக்கத்தை நெடுங்காலமாகப் பின்பற்றிவந்தனர். சிவபெருமானிடம் தூது போவதற்காகத் தம்பிரான் தோழரான சுந்தரமூர்த்தி நாயனாரை வளைக்க உதவியதால் இந்தக் கீரைக்குத் தூதுவளை என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
தொடரும்.