உலகில் கல்வி வளர்ச்சியும் நூலகங்களின் தோற்றமும் ஒன்றோடொன்று தொடர்புபட்டே வந்துள்ளன. யாழ்ப்பாணத்தின் நூலக வளர்ச்சியை நாம் ஆராய்வதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டினது கல்வி வளர்ச்சியைப் பற்றி ஆராய்வதும் அவசியமாகின்றது.
அந்நியராட்சிக்கு முன்பே யாழ்ப்பாணத்தில் கல்வி வளம் பெற்றிருந்தது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. இதனைக் கடந்த இயலில் கண்டிருந்தோம். குறிப்பாக 13ஆம், 14ஆம் நூற்றாண்டுகளில் ஆரியச் சக்கரவர்த்திகளது காலங்களில் இக்கல்வி வளர்ச்சி உச்சநிலை அடைந்திருந்ததெனக் கூறலாம். இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. இதனால் இக்காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதிகளில் கல்வி வளர்ச்சியும் நூலகங்களின் வளர்ச்சியும் இருந்தனவா என்பதை அறிவதற்கு போதிய சான்றுகளின்மை ஒரு குறைபாடாகவே உள்ளது.
சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளது காலத்திலேயே ‘சரஸ்வதி மகால்” என்ற பெயரில் நூல் நிலையம் ஒன்று இருந்ததாக அறியப்படுகின்றது. இதுவே யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூல் நிலைய வரலாற்றில் நாம் அறிகின்ற முதலாவது நூலகம் பற்றிய செய்தியாக உள்ளது. கையெழுத்துப் பிரதிகள் பல அங்கு சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன என்ற குறிப்பு மட்டுமே எமக்குக் கிடைக்கின்றது. அவ்வாறு சேகரிக்கப்பட்டு வைத்திருந்த பிரதிகளை யார் வாசித்தார்கள்? அவற்றை வாசிப்பதற்கு யாருக்கு உரிமை இருந்தன என்பன போன்ற விடயங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன. தற்கால நூலகப் பண்புக்கமைய சரஸ்வதி மகால் இருந்ததாவென்பதையும் விளங்கிக் கொள்ள முடியாதிருக்கின்றது.
வரோதய செகராசசேகரன் என்ற மன்னனின் காலத்தில் வைத்தியம், சோதிடம் போன்ற நூல்களும் மற்றும் பலவும் எழுதப்பட்டுள்ளன. வடமொழிப் புராணங்களும் மொழிபெயர்ப்புகளும் செய்யப்பட்டன. இப்படைப்புக்கள் அனைத்தும் ‘சரஸ்வதி மகாலயம்” என்ற நூல்நிலையமொன்றில் பாதுகாக்கப்பட்டன” என்று காலஞ்சென்ற பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
இவ்வரசனுக்குப் பின்னர் இவனது தம்பியாகிய பரராசசேகரன் யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆளுங்காலத்தில் ஊர்கள் தோறும் பாடசாலைகள் அமைத்தும் தமிழ்ச் சங்கமொன்று தாபித்தும் தமிழை வளர்த்ததாக அறிய முடிகின்றது. புலவர்களைக் கொண்டு பலவகையான நூல்களையும் இயற்றுவித்தான். இவன் அமைத்த தமிழ்ச் சங்கமே இரண்டாவது தமிழ்ச் சங்கமாகும்.
‘இம்மன்னன் அழிந்து போன சரஸ்வதி மகாலயமென்னும் பெயர் படைத்த நூலகத்தைப் புதுக்குவித்து அதில் இந்தியாவிலிருந்து தென்மொழி வடமொழி நூல்களை வருவித்துப் பலரும் படிக்குமாறு உதவினான்” எனக் கணேசையர் தமது ‘ஈழ நாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம்” என்னும் நூலில்; (பக் 9-10) குறிப்பிடுகிறார்.
முதலியார், செ. இராசநாயகம் அவர்கள் தனது ‘யாழ்ப்பாணச் சரித்திரம்” என்ற நூலில், (1933: பக். 17) செண்பகப் பெருமாள் வெற்றி கொண்ட போது தமிழ்ச் சங்கத்தைப் பின்னரும் நிறுவ வேண்டிப் புலவர்களையும் தமிழ் வித்துவான்களையும் ஒருங்கு சேர்த்து முன்போல் கழகம் நிறுவி வித்துவான்களுக்கு வேண்டிய சன்மானங்கள் செய்து தமிழ் மொழியைப் பொன் போல் போற்றி வளர்த்து வந்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவன் காலத்திலே யாழ்ப்பாணத்திலே கல்வி அறிவு சிறந்து விளங்கியதை வேறு வரலாற்று நூல்களும் எடுத்துக்காட்டி நிற்கின்றன. ‘யாழ்ப்பாண வைபவம்” என்னும் நூலிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ‘யாழ்ப்பாண சரித்திரம்” என்னும் நூலை எழுதிய ஜோன் என்பவரும் தமது நூலில் இதனைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
இக்குறிப்புகளும் யாழ்ப்பாணத்துச் ‘சரஸ்வதி மகாலயம்” என்ற நூல்நிலையம் பிற்காலத்தில் எத்தகையதொரு வளர்ச்சியைப் பெற்றிருந்ததென்பதை ஓரளவுக்கு அறியவைத்திருப்பினும், அந்த நூல் நிலையத்தினைப் பற்றிய மேலும் விரிவான தகவல்களை தெரிவிக்கவில்லை. எனவே ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் இந்நூல்நிலையம் கையெழுத்துப் பிரதிகளைச் சேர்த்து வைக்கின்ற ஒரு இடமாக இருந்திருக்கலாம் என்றே கருத வாய்ப்புள்ளது. எனவே இந்நூலகத்தினது தோற்றத்திற்கும், இருப்பிற்கும், வளர்ச்சிக்கும் அக்காலத்தில் ஏற்பட்டிருந்த இலக்கிய வளர்ச்சியே தூண்டுகோலாக அமைந்திருக்கலாம்.
பத்திரிகைகளின் பயன்பாட்டுக்கு முன்னதான புராதன நூலகங்கள் கீழைத்தேயங்களில் எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்ற எமது கற்பனை உருவகங்கள் 2003 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்ட சம்பவமொன்றினை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
10, 000 ஆண்டுக்கால தென்னாசிய வரலாற்றை தன்னகத்தே கொண்டதொரு நூலகத்தை 2003 இல் திபெத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். காகிதம் கண்டறியப்படாத ஒரு காலத்திலேயே அதனை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து அழிவிலிருந்து ஆவணப் பொக்கிஷத்தைப் பேணும் பொருட்டு திபெத்தில் ஒரு மடாலயத்தில் 84, 000 அரிய ஏட்டுச் சுவடிகளுடன் உருமறைப்புச் செய்துவைத்திருந்த நூலகமொன்றே 2003 இல் திபெத்தில் ஒரு புராதன மடாலயத்தில் அங்கு வாழும் பௌத்த மதத் துறவிகளால் தற்செயலாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.
திபெத் கடல் மட்டத்திற்கு மேல் 4300 மீட்டர் உயரத்தில் உள்ளதொரு நாடு. பௌத்த பெரும்பான்மையினரைக் கொண்ட நாடான திபெத்தில் வழக்கிலுள்ள பிரதானமான நான்கு பௌத்த பிரிவுகளில் சக்யபா பிரிவும் ஒன்று. 1073 ஆம் ஆண்டில், திபெத்தின் ஜிங்மாபா பௌத்த பிரிவினைப் பின்பற்றிவந்த கொங்கொக் கெய்ல்போ என்ற திபெத்திய மன்னனால் (1034-1102) தெற்கு திபெத்தில் சக்யா மடாலயம் கட்டப்பட்டது. இவர் சக்திவாய்ந்த அரச குடும்பமான Tsang Sakya மடாலயத்தின் வழி வந்தவர். இம்மடாலயத்தினர் பின்னர் பெல் சாக்ய என்றும் அழைக்கப்பட்டனர். அவருடைய மகனும், வாரிசுமான சக்யா குங்கா நிங்ஃபோ, திபெத்திய பௌத்தத்தின் நான்கு பெரிய பள்ளிகளில் ஒன்றான சக்யா பிரிவை வளர்த்தெடுத்தார் என்பது வரலாறு.
இந்த மடாலயம் 13ஆம் நூற்றாண்டுகளில் பிரபல்யமாகி இருந்தது. நீண்ட தரைவழிப் பயணம் செய்யும் யாத்திரீகர்களின் இளைப்பாறும் தங்குமடமாக மாத்திரமல்லாது பல பயண இலக்கியங்களின் காப்பகமாகவும் இம்மடாலயம் அமைந்திருந்தது. இம்மடாலயம் நூற்றுக்கும் அதிகமான கட்டடங்களுடன் திபெத்தின் மலைத் தொடர்களில் கம்பீரமாக நீண்டகாலம் நிலைத்திருந்தது. ஒரு கட்டத்தில் 40000 ஏடுகளினதும், பௌத்த மத சின்னங்களினதும், சிறந்த ஓவியங்களினதும், பௌத்த கட்டிட வளர்ச்சியின் விளைநிலமாகவும் இப்பிரதேசம் இருந்துவந்துள்ளது.
பின்னாளில் அண்டை நாடான சீனாவின் கலாசாரப் புரட்சியின் போது கம்யூனிசத்தின் விரிவாக்க முயற்சியின் பயனாக மடாலயத்தின் பல கட்டடங்கள் அழிவுற்றன. அங்கிருந்த ஆவணங்களும் எதிரிகளால் தேடித்தேடி அழிக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் இமயமலைச்சாரலில் அமைந்திருந்த பல திபெத்திய பௌத்த மடாலய நூலகங்களில் காணப்பெற்ற பெறுமதி மிக்க திபெத்திய பௌத்த ஓவியங்கள், ஓலைச்சுருள்கள், பௌத்த கலாசார சிற்பங்கள் என்பன சூறையாடப்பட்டும், அழிக்கப்பட்டும் இல்லாமலாக்கப்பட்டதாக நம்பப்பட்டது. சீனாவில் மாசேதுங் காலத்தில் கூட (1966-1976) மிகுந்த அச்சத்துடன் திபெத்திய பௌத்த மடாலயங்கள் இப்பிரதேசத்தில் இயங்கிவந்துள்ளன.
இந்நிலையில் 2003இல் சாக்ய மடாலயத்தின் பிரதான ஒன்றுகூடல் மண்டபத்தின் சுவரில் சில பழுதுபார்க்கும் வேலைகள் தொடங்கப்பட்டன. அதற்காக 11 மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்ட அந்த பிரதான மண்டபச் சுவரின் ஒரு பகுதியை அகற்றிப் புனரமைக்கும் பணியைத் தொடங்கிய வேளையில் அந்தச் சுவருக்கும் அப்பால் அந்த ஒன்றுகூடல் மண்டபம் ஒடுக்கமான ஒரு சுற்றுப்பாதையைக் கொண்டிருப்பதாக பொறியியல் வல்லுநர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மிகக் கவனமாக மண்டபச் சுவரில் சிறியதொரு பகுதியை நீக்கி அதன் வழியாகக் கடந்து மண்டபச் சுவரின் மறுபுறம் இருந்த ஒடுக்கமான அந்தச் சுற்றுப்பாதையில் கால் பதித்த அவர்களுக்கு பேரதிசயம் ஒன்று காத்திருந்தது. சாக்ய மடாலயத்தின் பிரதான ஒன்றுகூடல் மண்டபத்தின் சுவர்களுக்கு அப்பால் 60 மீற்றர் நீளமானதும் 10 மீற்றர் உயரமானதுமான பாரிய மரத்தட்டுகளில் பத்திரமாகச் சுருட்டி பெட்டிகளில் வைத்து அடுக்கப்பட்டிருந்த நூற்றாண்டுத் தூசியுடன் கூடிய எண்பதாயிரம் ஆவணச் சுருள்கள் கொண்ட பெட்டிகள் அவர்களின் கண்களை விரியச்செய்தன. ஒவ்வொரு நீள்சதுரமான பெட்டியின் உள்ளேயும் சராசரி ஆறடி நீளமும் 18 அங்குல அகலமும் கொண்டதும் சுருள்கள் காணப்பட்டன. அவை 1000 ஆண்டுகால அறிவுலக வரலாற்றை சுமார் இருநூறாண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பொத்திப் பாதுகாத்து வைத்திருந்துள்ளன. இங்கு காணப்பெற்ற பல நூல்கள் இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தி பாதுகாப்பாக மட்டைகட்டப்பட்டும் உள்ளன. நூல் கட்டுமானத்தில் இரும்பின் பிரயோகம் திபெத்திய நாகரிகத்தில் இருந்துள்ளதென்பதை இது எடுத்துக்காட்டுவதாயுள்ளது.
அந்தச்சுருள்களில் முக்கியமான வரலாற்றாவணமாக கரைகளில் வண்ண அலங்கரிப்புகளுடன் கூடிய 20 தொகுதிகள் கொண்ட பெரு நூல் அங்கிருந்த மடாலய பௌத்த அறிஞர்களை துள்ளிக்குதிக்கவைத்தது. ஆம் முன்னைய படையெடுப்புகளின்போது அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டு வரலாற்றாசிரியர்களால் அடிக்கடி ஏக்கத்துடன் குறிப்பிடப்பட்டுவந்த திபெத்திய பௌத்த நூலும் அங்கு இருந்துள்ளது. ஆறடி நீளமும் 18 அங்குல அகலமும் கொண்ட பக்கங்களைக் கொண்ட பத்ரா இலைகள் எனப்படும் இவ்வோலைச்சுருள் தொகுதியின் முதல் நான்கு தொகுதிகளிலும் புத்த பகவானின் 1000 ஓவியங்கள் காணப்படுகின்றன. இத்தொகுதிகளில் அடங்கியுள்ள நூல்களின் ஒவ்வொரு பக்கத்தினதும் கரைகள் மிக அழகான வர்ண அலங்கரிப்புகளுடனோ தங்கமுலாம் பூசப்பட்டவையாகவோ காணப்பட்டுள்ளன.
இங்கு கண்டறியப்பட்டுள்ள நூல்களும் பிற ஆவணங்களும் எமக்கு திபெத்திய மொழியில் மாத்திரமல்லாது சமஸ்கிருதம், மொங்கொலிய மொழி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. முழுமையான ஆய்வின்போது இன்னும் பல அதிசயங்களை நாம் எதிர்காலத்தில் சந்திக்கக்கூடும். கீழைத்தேய மருத்துவம், பௌத்த தத்துவம், திபெத்திய பயணிகளின் பயணக்குறிப்புகள், வரலாறு, அளவையியல் விலங்கு வேளாண்மை, விவசாயம் எனப் பல விடயங்கள் சார்ந்தும் இந்நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இதுவரை திபெத்தின் அறிவியல் வரலாற்றின்வழியாக அறியப்பெற்ற பல அறிஞர்களாலும், இன்றளவில் அறியப்படாத புதியவர்களாலும் இவை எழுதப்பட்டுள்ளன என்கிறார்கள். கண்டெடுக்கப்பட்ட இந்த ஓலைச் சுவடிச் சுரங்கத்தில் இதுவரை ஆய்வுசெய்த வரையில், 21 தொகுதிகளில் அடங்கியுள்ள சமஸ்கிருத சூத்திரங்கள் காணப்படுவதாக ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். பண்டைய கீழைத்தேய பயணிகளால் இலங்கையிலும், இந்தியாவிலும் இருந்து பண்டமாற்றாகக் கொண்டுசெல்லப்பட்ட ஏடுகளும் அங்கு இருக்கலாம். யார் கண்டார்?
வரலாற்றாய்வாளர்கள் இன்னுமொரு தகவலையும் வெளியிட்டுள்ளனர். இந்த நூல் சேர்க்கை, கிறிஸ்தவர்களின் வத்திக்கான் புனித நகரில் நிலக்கீழ்ச் சுரங்கங்களுடன் கூடியதாக 1475இல் அமைக்கப்பட்ட அப்பொஸ்தலர் நூலகம் போன்று பேரரசர் குப்ளாய் கானின் அறிவுறுத்தலின் பேரில் திபெத்திய பௌத்த மதகுருக்களால் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். 84,000 ஆவணங்களையும், ஏராளமான வர்ண ஓவியங்களையும், சிற்பங்களையும் அந்த மலைப் பிரதேசத்தில் கொண்டுசென்று சேர்ப்பதற்கு தனியொரு மடாலயத் துறவிகளால் முடிந்திருக்குமா என்ற இயல்பான சந்தேகமும் எழுகின்றது. மேலும் அங்கு காணப்பட்ட சில ஓவியங்களின் படி, நடைபாதையாக மடாலயத்தை நாடி வரும் யாத்திரிகர்கள் தம் பொதிகளில் ஏட்டுச் சுருள்களை காவிக்கொண்டு மலையேறிச் செல்லும் காட்சிகள் வரையப்பட்டிருக்கின்றன.
2003இல் சாக்ய மடாலயத்தின் பிரதான ஒன்றுகூடல் மண்டபத்தின் பின்னால் கண்டறியப்பட்ட இந்த முதுசொம் நீண்டகாலம் வெளியுலகிற்குத் தெரியப்படுத்தப்படவில்லை. 2015இல் தான் அங்கிருந்த 84,000 ஏடுகள், 26 வகையான சுவரோவியங்கள், மட்பாண்டக் கலைவடிவங்கள், இசைக்கருவிகள் உள்ளிட்ட பல உபகரணங்களும், புராதன சிற்ப, கலை வடிவங்கள் என்பனவும் இதுவரை இனம்காணப்பட்டு டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் 21ஆம் நூற்றாண்டுக்கேற்ற வகையில் வடிவமாற்றம் செய்யும் பணி தொடங்கப் பெற்றுள்ளது. இன்றளவில் இப்பணிகள் மிகவும் பாதுகாப்பான முறையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்துச் ‘சரஸ்வதி மகாலயம்” இன்று கண்டெடுக்கப்பட்டால் அதன் சேர்க்கைகள், இத்தகையதொரு வடிவத்திலே தான் காட்சியளித்திருக்கும்.
தொடரும்.