இலக்கியம் கடந்த காலத்தை சாம்பல் புழுதிகளிலிருந்து வெளியே எடுத்துவரும் வல்லமை உடையது. ஆகவேதான் அதிகார வர்க்கம், எழுதுபவர்களை எப்போதும் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஓர் இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டுமென்றால், அவர்களை அடையாளப்படுத்தும் ஆவணங்களை அழிக்கவேண்டுமென, அன்றைய பேரரசுகளிலிருந்து இன்றைய நவீன அரசுகள் வரை முயல்கின்றன. காலனித்துவத்திலிருந்து விடுபட்ட இலங்கையில், தமிழர்கள் தாம் ஒடுக்கப்படுவதற்கு எதிராகச் செயற்படத் தொடங்கியதை சிங்கள அதிகார வர்க்கம் நன்கு விளங்கிக்கொண்டதால்தான், அரிய நூல்களையும், ஓலைச்சுவடிகளையும், ஆவணங்களையும் கொண்டிருந்த யாழ் நூலகத்தை எரித்தது. ஆனால் பெளதீகமான நூல்களைத்தான் அழிக்க முடியும், இனமொன்றின் வரலாற்றை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது என்பதே உண்மை. அதற்கு ஆதாரமாகத்தான் இன்றைக்கும் ஈழப்போராட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் நிறைய நூல்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அவ்வாறு நமக்குப் பரிச்சயமான கதைகளைச் சொல்கின்ற ஓர் ஆவணமாக சங்கரி சந்திரனின் ‘சூரியக் கடவுளின் பாடல்’ (Song of the Sun God) எனும் நாவலைச் சொல்லலாம். சங்கரி, 70களின் மத்தியில் ஈழத்தமிழ்ப் பெற்றோருக்கு இங்கிலாந்தில் பிறந்தவர். நாவல், 1930களில், இலங்கையின் தெல்லிப்பளையிலிருந்தும் அளவெட்டியிலிருந்தும் தொடங்குகின்றது. கொழும்பில் பிரபலமான ஒரு வைத்தியரான ரஞ்சன், நளாவைத் திருமணம் செய்கின்றார். ரஞ்சன், நளா தம்பதிக்கு பிரியா, நந்தன் என்கின்ற இருபிள்ளைகள் பிறக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் (1956) நடைபெறும் இனக்கலவரத்தில், கல்லோயா எனும் இடத்தில் நளாவின் உடன்பிறவாச் சகோதரனான மோகன் கொல்லப்படுகின்றார். அவரின் மனைவியான வாணி சிங்களக்காடையர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றார். இந்நிகழ்வுகளின் சாட்சியமாக அவர்களின் எட்டுவயது மகள் தாரா இருக்கின்றார்.
மோகன் – வாணி தம்பதியினரின் பிள்ளையான தாரா, இக்கொடும் நிகழ்வின்பின், நளாவின் பிள்ளைகளில் ஒருவராக வளர்த்தெடுக்கப்படுகின்றார். இந்த மூன்று பிள்ளைகளும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதை நாவல் சொல்கின்றபோது, அவர்களோடு கூடவே நாட்டின் இனப்பிரச்சினை சிக்கலாவதையும் நாம் அவதானிக்கின்றோம். தமிழர்களின் தொடக்ககால அமைதிப் போராட்டங்கள் வன்முறையின் மூலம் குழப்பப்பட்டதால், தந்தை செல்வநாயகத்தின் கட்சியினர் எப்படி தனித் தமிழீழப் பிரகடனம் எனும் முடிவிற்கு வந்தார்கள் என்பதையும் இந்நாவல் கவனப்படுத்துகின்றது.
நெருக்கமான சகோதரிகளைப் போல வளரும் பிரியாவும், தாராவும் ஒருபொழுது பிரிகின்ற சந்தர்ப்பம் வருகின்றது. வைத்தியரான தாரா இலங்கையில் தங்கிவிட, பிரியா சிவாவைத் திருமணம் செய்து இங்கிலாந்துக்குப் போகின்றார். தாரா யாழ்ப்பாண வைத்தியசாலையில் வேலை செய்கின்ற 80களின் தொடக்கத்தில், ‘இயக்கப் பெடியங்களுக்கு’ வைத்திய உதவிகள் செய்கின்றார் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்குள்ளாகிறார். பாலியல் வல்லுறவுக்கும் ஆளாகின்றார்.
அதன் நிமித்தம் தாராவுக்குப் பிறக்கின்ற குழந்தையே ஸ்மிருதி. ஆனால் அந்தக் குழந்தை தன்னோடு (இலங்கையில்) வளர்ந்தால், தனக்கும் தன் தாய்க்கும் நிகழ்ந்த பாலியல் வன்முறையே தன் குழந்தைக்கும் நிகழக்கூடுமென்று அஞ்சி, ஸ்மிருதி பிறந்தவுடனேயே அவரைப் பிரியாவிடம் வளர்க்கக் கொடுக்கின்றார் தாரா. அவர் தனது சொந்தப் பிள்ளையைக் கையளித்துவிட்டு, போராளிகளின் ஆயுதப்போராட்டத்திற்கு உதவி செய்கின்ற ஒரு வைத்தியராக தன்னை மாற்றிக் கொள்கின்றார்.
இந்த நாவலானது 1930களில் தொடங்கி, 2010வரை நீள்கின்ற, மூன்று தலைமுறைகளின் கதைகளைச் சொல்கின்ற ஒரு புதினமாகும். ஒருவகையில் குடும்பங்களின் கதைகளினூடாக இந்தக் காலகட்டத்தின் ஈழத்தின் நிலைமாறும் அரசியல்/ ஆயுத வரலாறும் சமாந்தரமாகச் சொல்லப்படுகின்றது.
இலங்கைப் பிரதமரினதும், ஜனாதிபதியினதும் வைத்தியராக இருக்கும் ரஞ்சனுக்கு இலங்கையில் இருந்து வெளியேறும் கனவு ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் எண்பதுகளில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும், 83 ஜூலைக் கலவரமும் அவரை இலங்கைச் சூழலைவிட்டு வெளிநாட்டுக்குப்போக உந்தித்தள்ளுகின்றது. ரஞ்சனும், நளாவும் 83 இனப்படுகொலையில் இருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்புகின்றனர். காடையர் கூட்டம் நளாவை நெருப்பு மூட்டிக் கொல்ல முயற்சிக்கின்றது. அந்தக் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர், ரஞ்சன் ஜனாதிபதியின் வைத்தியர் என்று கண்டுபிடிக்கிறார். அதனால் ரஞ்சனும் நளாவும் உயிர் தப்புகின்றனர்.
ரஞ்சன், நளா, அவர்களின் பிள்ளைகள் என எல்லோரும் வெளிநாட்டுக்கு அகதியாக அடைக்கலம் கேட்டுச் செல்கின்றபோது இலங்கையைவிட்டு வெளியேற தாரா மட்டும் மறுத்து விடுகின்றார். எக்காரணம் கொண்டும் இலங்கையைவிட்டு வெளியேற விரும்பாத ஒருவராக அவர் இருக்கின்றார். அதேவேளை பிரியா, தாராவை வெளிநாட்டுக்கு வந்துவிடும்படியும், அவரின் குழந்தையான ஸ்மிருதியை தன்னோடு சேர்ந்து வளர்க்கலாமென்றும் சொல்கின்றபோது, தாரா அந்த அழைப்பை உறுதியாக மறுத்துவிடுகின்றார். ஸ்மிருதி, உண்மையான தாய் யாரென்று அறியாது பிரியாவின் குழந்தையாக வளர்கின்றார். பின்னர் பெரியவளாகித் திருமணம் செய்கின்றார். குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றார். அவுஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து, வாழவும் செய்கின்றார்.
முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போராட்டம் முடிவடையும்போது, தாரா அங்கே கடமையாற்றும் ஒரு வைத்தியராக இருக்கின்றார். அவர் இறுதியுத்தத்தில் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து, இலங்கை இராணுவமும், விடுதலைப்புலிகளும் யுத்தத்தின்போது செய்த மனிதவுரிமை மீறல்கள் குறித்துச் சாட்சியமளிக்கின்றார்.
ஒருகட்டத்தில் ஸ்மிருதிக்கு உண்மையைச் சொல்லவேண்டிய சந்தர்ப்பம் வருகின்றது. இறுதியில் தாராவின் மகளான ஸ்மிருதி, தான் யாருடைய குழந்தை என்று அறியும்போது அதை அவர் எவ்வாறு எடுத்துக்கொள்கின்றார் என்பதையும், அதன்பிறகு அவருக்கும், அவரை வளர்த்த ‘தாயான’ பிரியாவிற்குமான உறவு என்னமாதிரி ஆகின்றது என்பதையும், வாசிக்கும் போது எம்மைப் பாதிக்கச் செய்யும் அளவிற்கு மிக ஆழமாக எழுதிச் செல்கின்றார், சங்கரி.
2000களின் தொடக்கத்தில் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை அதிரடியாக ‘இனி தமிழ் இலக்கியத்தை புலம்பெயர்ந்தோரே தலைமை தாங்குவார்கள்’ என்று அறைகூவல் செய்தார். அதன் நிமித்தம் ‘தமிழ் ஊழியமே என் சுவிஷேசமென’ அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து ஐரோப்பா, கனடா எனப் பயணங்களைச் செய்து, புலம்பெயர்ந்து எழுதுபவர்களை அவரின் ‘தமிழ்த்துவத்தின்’ கீழ் ஒருங்கிணைக்கவும் முயன்றார். ஆயினும் அன்றிலிருந்து இன்றுவரை, அதற்கான சில விடிவெள்ளிகள் புலம்பெயர்ந்த தேசத்தில் தோன்றியிருக்கின்றதே தவிர, அவை தொடர்ச்சியாகவும், ஆழமாகவும் வேரூன்றவில்லை. ஒருவகையில் அது அவரது உதிர்ந்துபோன கனவெனச் சொல்லலாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக, புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் அடுத்ததலைமுறை அவரவர் வாழும் நாடுகளில் காத்திரமான எழுத்தாளர்களாக முகிழ்த்துவரத் தொடங்கியிருக்கின்றது. அவர்கள் தமிழில் எழுதாவிட்டாலும், அவர்களில் பெரும்பாலானோரின் கதைக்களம் ஈழத்தைப் பின்புலமாக வைத்தே எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அனுக் அருட்பிரகாசம், வி.வி. (வாசுகி) கணேசானந்தன், ஷாரோன் பாலா, எஸ்ஜே சித்து, சங்கரி சந்திரன் என்று இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.
இவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழே வாசிக்கத் தெரியாது. வாசுகி, ஷாரோன், சங்கரி, சித்து போன்றோர் எழுபது/ எண்பதுகளில் புலம்பெயர்ந்த தேசங்களில் பிறந்தவர்கள். அவர்களுக்கு, தமிழில் எழுதப்பட்டவற்றையும்/ எழுதப்படுபவைகளையும் சரியாக வாசிக்கக்கூடத் தெரியாது. ஆனால் அவ்வளவு தத்ரூபமாக, யதார்த்தத்திலிருந்து விலகாமல் ஈழப்போராட்ட வரலாறு குறித்து எழுதுகின்றனர். அந்தளவுக்கு அவர்கள் தமிழ் வாழ்வு குறித்து தேடித்தேடி வாசிக்கின்றனர். தாங்கள் எழுதும் நாவல்களுக்காக பல்வேறு ஈழத்தமிழர்களைச் சந்தித்துப் பேசி தகவல்களைச் சேகரிக்கின்றனர்.
தனது உறவுகளை வெவ்வேறு நாடுகளில் சந்திக்கும்போது எழுதிய குறிப்புகளை வைத்திருந்தது இந்நாவலை எழுதுவதற்கு, மிகவும் உதவியது என சங்கரி சொல்கின்றார். அத்துடன் அவரின் அம்மம்மாவிடமிருந்து நிறையத் தகவல்களைப் பெற்றும் இருக்கின்றார். இதனை அவர் நாவலாக்க பத்து வருடங்களுக்கு மேலாகி இருக்கின்றது. இப்போது சங்கரி ஒரு கவனம் பெற்ற எழுத்தாளர். இந்நாவலுக்குப் பிறகு வெளியான ‘கறுவாத்தோட்டத்தில் தேநீர் நேரம்’ (Chai Time at Cinnamon Garden) என்ற நாவலுக்காக அவுஸ்திரேலியாவின் மதிப்பு வாய்ந்த ‘Miles Franklin Award’ விருதையும், பணப்பரிசாக 60,000 அவுஸ்திரேலிய டொலர்களையும் பெற்றிருக்கின்றார்.
ஈழம் பற்றி ஷாரோன் பாலா, சங்கரி சந்திரன் போன்ற இலங்கையில் பிறக்காதவர்கள் எழுதும் புதினங்கள் உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கின்றன. அவர்கள் ஈழத்தில் நடந்த முக்கிய சம்பவங்களை எவ்வித தயக்கமோ, சார்போ இல்லாது, உள்ளதை உள்ளபடி எழுதுகின்றனர். தமிழர்களின் திசைமாறிய மொழிக்கான/ நிலத்துக்கான போராட்டத்தை எவ்வளவிற்கு வெளிப்படையாகச் சொல்கின்றார்களோ, அந்தளவிற்கு ஈழத்தமிழர்கள் ஏன் போராட வேண்டி வந்தது என்பதையும் நேர்மையாக எழுதுகின்றனர்.
இன்றைக்கு தமிழ்ச்சூழலில், பிற்காலத்தைய ஆயுதப்போராட்டம் திசைமாறிப்போனதை வைத்து, தமிழர்கள் போராடப்புறப்பட்ட ஆரம்பப் புள்ளிகளே பிழையானது என்று நிரூபிக்க பலர் கடுமையாக முயன்று கொண்டிருக்கின்றனர். 50களில் அகிம்சைப் போராட்டமாக வெளிப்பட்ட தமிழரின் குரல்களை, சிங்களப் பேரினவாதம் எப்படி வன்முறையால் நசுக்கியது என்பதை சங்கரி, ஷாரோன் போன்றோர் மிகச்சரியாகவே முன்வைக்கின்றனர்.
தமிழரசுக்கட்சியினர் காலி முகத்திடலில் தனிச் சிங்களமொழிச் சட்டத்துக்கு எதிராக சத்தியாக்கிரகம் செய்தபோது, சிங்கள அரசியல்வாதிகள் உள்ளிட்ட காடையர்களால் அது வன்முறைகொண்டு அடக்கப்பட்டது. இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு மட்டக்களப்பு/ அம்பாறை போன்ற கிழக்குத் தமிழ் மக்களும் ஆதரவளித்திருந்தனர். அந்த ஆதரவைக் காணச்சகிக்காமலேயே, 1956இல் கல்லோயாக் குடியேற்றப் பகுதியில் தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரும் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த நிகழ்வு அன்று நிறுத்தப்பட்டிருந்தாலோ அல்லது அதற்கான பதில் நடவடிக்கை அன்றைய அரசால் எடுக்கப்பட்டிருந்தாலோ, 1958இல் அது பெரும் இனக்கலவரமாக வெடித்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. அதன் பிறகும் எத்தனையோ படுகொலைகள் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டு, 1983இல் அது பெரும் வெறுப்பு அரசியலாக வெடித்து, 3000இற்கும் மேற்பட்ட தமிழர்கள் திட்டமிடப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது வரலாறு நமக்குச் சொல்லும் கசப்பான உண்மையாகும். இதே சிங்களப் பெரும்பான்மை அரசு, இலங்கை சுதந்திரமடைய முன்னர், தமிழர்களுக்கு நிகழ்த்தியது போல, முஸ்லிம்கள் மீதும் கலவரங்களை நிகழ்த்தியதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பேரினவாதிகள் தமது அரசியலைச் செய்வதற்காக, ஏதேனும் ஒரு சிறுபான்மை இனத்தின் மீது வெறுப்பை உமிழ்வது அவசியமான தேவையாக இருக்கின்றது போலும்.
எங்குமே அவ்வளவு எளிதில் கிடைக்கப்பெறாத அரிய நூல்கள் இருந்த யாழ் நூலகத்தை இவர்கள் தீவைத்து எரித்தனர். பின்னர் ஆயுதப்போராட்டமாக மாறிய தமிழர் போராட்டத்தையும் மிக மோசமான முறையில் தோற்கடித்தார்கள். ஆனாலும் உண்மைகள் ஒருபோதும் புதைவதில்லை என்பதற்கிணங்க, தாம் செய்த தவறுகளோடு சேர்த்து, சிங்களப் பேரினவாதத்தின் கோரமுகங்களையும் வெளிப்படுத்தும் புதினங்களை தமிழர்கள் எழுதிக்கொண்டிருக்கின்றனர். அதை தமிழ் நிலத்தில் பிறக்காத/ வாழாத புதிய தலைமுறையும் எழுத்தில் கொண்டுவருவதுதான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. தமிழில் எழுதாவிட்டாலும், தமிழ் தமது அடையாளம் என்கின்ற புரிதலோடு இருக்கின்ற இப்புதிய தலைமுறைகள், புலம்பெயர் தேசத்தில் இருந்தபடி, சிங்களப் பேரினவாதிகளின் மனச்சாட்சியை நிலைகுலையச் செய்கின்றன.
இந்த நாவலில் இடம்பெறும் அவுஸ்திரேலியாவின் மூன்றாம் தலைமுறை, தமது உண்மையான ‘ஊர்’ எதுவாக இருக்கும் என்று தங்களுக்குள் தேடியபடி இருப்பார்கள். ஏதோ ஓரிடத்தில் அவர்கள், நாம் ‘இலங்கை அவுஸ்திரேலியர்கள்’ என்று அழைக்கப்படுவதை எதிர்த்து, ‘அவுஸ்திரேலிய தமிழர்கள்’ என்று அழைக்கப்படுவதையே விரும்புகின்றோம் எனச் சொல்வார்கள். கனடாவில்கூட இங்கு பிறந்த தலைமுறை தம்மை ஈழத்தமிழர்களாகவும், தமிழ்க் கனேடியர்களாகவுமே அடையாளப்படுத்த விரும்புகின்றார்கள். ஒருவகையில் தம்மை/ தமது பெற்றோரை சக குடிமக்களாக மதிக்காத நாடான இலங்கையை தமது அடையாளமாக முன்வைக்க இந்தத் தலைமுறையினர் விரும்புவதில்லை என்றுகூட இதனை எடுத்துக் கொள்ளலாம்.

‘சூரியக் கடவுளின் பாடல்’ என்கின்ற இந்த நாவலில் இராமாயணம்/ மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைகள் பேசப்படுகின்றன. பாஞ்சாலியை அர்ஜூனன் திருமணம் செய்துவிட்டு வரும்போது, அர்ஜூனன் தனது தாய் குந்திதேவியிடம் ‘நான் ஓர் அரிய பொருளைக் கொண்டுவந்திருக்கின்றேன்’ எனச் சொல்லுகின்றான். குந்திதேவி ‘நீ அதை ஐவரோடும் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ எனச் சொல்லுகின்றார். இதனால் பாஞ்சாலி பஞ்சபாண்டவர் ஐவருக்கும் மனைவியாகின்றார். அந்தக் கதை இந்த நாவலில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நினைவூட்டப்படுகின்றது. இந்த நாவலில் வரும் நளா, பிரியா, தாரா என பெரும்பாலான பாத்திரங்கள் தம் வாழ்வை பிறருடன் பெருந்தன்மையுடன் பகிர்ந்துகொள்கின்றன. பிறருக்காக வாழ விழைகின்றவர்களாகவே இந்தப் பெண் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. புலம்பெயர்தேசத்தில் வாழும் பிரியாவை விட, ஈழத்தில் வாழும் தாராவை, ஸ்மிருதியை எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவராகவும்/ முற்போக்கானவராகவும் படைத்திருப்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று.
மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்வை மட்டுமன்றி, அவர்களூடாக ஈழத்தின் 80 ஆண்டுகால தமிழர்களின் வரலாற்றையும் இந்நாவல் எடுத்துரைக்கின்றது. அலுப்பின்றி வாசிக்கக்கூடிய சுவாரசியமான மொழிநடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலைச் சமகாலத்தில் வெளிவந்த முக்கிய புதினங்களில் ஒன்றெனச் சொல்லலாம்.