பொதுவாக முழுமையான சுவை எனப்படுவது, நாக்கினால் உணரப்படும் சுவை, மூக்கினால் உணர்ந்து கொள்ளும் மணம், கண்ணினால் காணும் வடிவம் என்பவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாடாகும். இவ்வாறான சுவைகளுக்கு, பொதுவாக தாவரப்பொருட்களில் உள்ள தாவர இரசாயனங்களே (Phytochemicals) காரணமாகின்றன. ஏறத்தாழ 25000 தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் நன்மைதரக்கூடிய இரசாயனங்களும் உள்ளன. நச்சுப்பொருட்களும் உள்ளன. இவற்றின் அடிப்படையில் உடலுக்கு நன்மை தரக்கூடிய, நோய்களில் இருந்து பாதுகாக்கக்கூடிய தாவர இரசாயனங்களை அதிகமாகக் கொண்டிருக்கக் கூடியனவும், விரும்பக்கூடிய சுவைகளையும் மணங்களையும் நிறங்களையும் தரக்கூடிய பொருட்களுமே சுவையூட்டிகளாக அதிகம் நமது பாரம்பரிய உணவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் உள்ள தாவர இரசாயனங்கள் பல்வேறுபட்ட மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கின்றன. இவை பொதுவாக பழங்கள், மரக்கறிகள், விதைகளின் தோற்பகுதிகளிலேயே அதிகம் காணப்படுகின்றன. எனவே தோற்பகுதியுடன் பயன்படுத்துவதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அதேபோல் சமைக்கும்போது அல்லது பதப்படுத்தும்போது தாவர இரசாயனங்களின் திறன்கள் குறைவடையும் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுவையூட்டிகள் பொதுவாக உயிர்ச்சத்துக்களையும் கனியுப்புக்களையும் அதிகமாகக்கொண்டவை. அதேபோல் தாவர இரசாயனங்கள், நார்ச்சத்துக்களை என்பனவற்றையம் அதிகமாகக் கொண்டவை. இதனால் போசாக்கு என்ற நிலைக்கு அப்பாற்பட்டு சிறந்த ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதற்கும் நோய்களில் இருந்து பாதுகாக்கக் கூடியனவாகவும், ஏற்பட்ட நோய்களை மாற்றக்கூடியனவாகவும் இருப்பதால் இவை செயற்பாட்டு உணவுகளாக (Functional foods) உதவக் கூடியன. உடலில் உள்ள நன்நுண்ணுயிரிகளின் (Probiotics) வளர்ச்சிக்கு ஏற்ற நன்நுண்ணுயிரிப் போசிகளாகவும் (Prebiotics) காணப்படுகின்றன.
Anti Lithogenic – பித்தப்பை கல் உருவாதலைத் தடுத்தல்.
இவற்றில் மிளகு, மஞ்சள், சீரகம், பெருங்காயம், வேர்க்கொம்பு, ஏலம், வெந்தயம், உள்ளி என்பன உடலை இயக்கும் உயிர்த்தாதுக்களான வாதம், பித்தம், கபம் எனப்படும் திரிதோசங்களையும் சமநிலையில் வைத்திருக்கக்கூடியன. இதனால் இவை திரிதோச சம திரவியங்கள் எனப்படுகின்றன. இதனால் உணவுகளின் மாறுபாடுகள், பருவகால மாறுபாடுகள் என்பவற்றில் இருந்தும் உடலில் ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடுகளில் இருந்தும் பாதுகாக்கின்றன. அதாவது உணவுகளில் உள்ள ஒவ்வாமைகளை நீக்கக் கூடியனவாகவும் அவற்றினால் ஏற்படும் திரிதோச சமநிலைக் குழப்பத்தை (ஆரோக்கிய குழப்பத்தை) நீக்கக்கூடியனவாகவும், பருவகாலங்கள் மற்றும் சிறுபொழுதுகளான காலை, மதியம், இரவு என்பவற்றுக்கு பொருத்தமில்லாத வகையில் உணவுகளை உள்ளெடுக்கும்போது ஏற்படும் உபாதைகளைத் தடுக்கக்கூடியனவாகவும் இருக்கின்றன. இவற்றின் அடிப்படையில் நமது ஆரோக்கியத்தை பாதுகாக்க இவை உணவில் சேர்க்கப்படுவது அவசியமாகின்றது.
சித்தமருத்துவத்தில் ஆரோக்கியம் என்பது உடலை இயக்குகின்ற வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருத்தலாகும். இச்சமநிலை உடலுக்கு ஆதாரமாக உள்ள உணவிலேயே தங்கியுள்ளது. புறக்காரணிகளால் ஏற்படும் சமநிலைக்குழப்பங்கள் மருந்துகளாலும் உணவினாலும் ஈடுசெய்தல் அவசியமாகின்றது. இதனையே யாழ்ப்பாண வைத்திய நூலான பரராசசேகரம் இவ்வாறு குறிப்பிடுகின்றது.
“நோயிலை யங்கி நீர்கால் நுடங்குடம் பொத்து நிற்கில்
ஆயுளுஞ் சுகமு முண்டா மன்னமப் படைவிற் சேரும்
ஏயசிந் தையினி லின்ப மிசைத்திடு மகிழ்ச்சி யெய்தும்
சேய்மனை வாழ்வி னோடு செல்வமுஞ் சிறக்கு மன்றே”
– பக்.111, பரராசசேகர வைத்தியம்:மூலமும் உரையும், தொகுதி 1-
உடலில் பித்தம் (அங்கி), கபம் (நீர்), வாதம் (கால்) ஆகிய மூன்றும் உணவின் பயனாக உடலுடன் ஒத்து இயங்கின் ஆயுளும் சுகமும் உண்டாகும். இதனால் நல்ல சிந்தனைகளும், இன்பமும், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வில் செல்வமும் சிறக்கும்.
பாரம்பரிய சுவையூட்டிகளில் திரிதோச / முக்குற்ற சமதிரவியங்கள்
“ஒன்றிய வாத பித்த கபமிவை யுயரா வண்ணம்
நன்றுறு கறிக ளெல்லா நாளுமே சமைப்ப ராய்ந்தோர்
தின்றிடு மிளகு மஞ்சள் சீரக முயர்ந்த காயம்
வென்றிகொள் சுக்கோ டேலம் வெந்தய முள்ளி சேர்த்தே”
-பக். 360, பதார்த்தகுண சிந்தாமணி-
உடலை இயக்கும் உயிர்த்தாதுக்களான வாதம், பித்தம், கபம் என்பன அதிகரிக்காது சமநிலையில் இருக்க தினமும் உண்ணும் உணவில் மிளகு, மஞ்சள், நற்சீரகம், பெருங்காயம், வேர்க்கொம்பு, ஏலம், வெந்தயம், உள்ளி என்பன சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மூன்று தோசங்களையும் சமநிலையில் வைத்திருப்பதால் இவை திரிதோச சம திரவியங்கள் எனப்படுகின்றன.
மிளகு
“மிளகினாற் சன்னி சூலை விடாச்சுரம் வாயு மந்தம்
ஒழிவில்கா மாலை சோகை யுறுகுன்மஞ் சிரங்க ரோசி
தெளிவிலாப் பீனி சம்மே சில்விடங் கபங்க ரப்பன்
இழிவுற வருத்து கின்ற வியம்பரும் வலியி னோடே”
திரம்பெறு மற்று நோயுந் தீர்த்திடு நாத்தி ருந்தும்
நிரம்பிய வழகு புத்தி நிகரிலா விளமை யுண்டாம்
உரம்பெறு பித்தத் தோர்க்கீதொவ் வாதென் றுரைத்தார் முன்னே
வரம்பெறு முனிவர் வாழ்த்த மலையகத் திருந்த கோவே”
-பக்.93, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
மிளகினால் பல உபத்திரவங்களும் தீரும். குறிப்பாக இங்கு முதலிலேயே குறிப்பிடப்படும் சன்னி என்னும் நோய் நிலையானது ஆரோக்கியத்துக்கு கேடான பல்வேறு காரணங்கள் ஒன்று சேரும்போது ஏற்படும் தீவிர நோய் நிலையாகும். இவ்வாறான நிலையில் உடலின் இயக்கங்கள் குறைந்து கபதோசமானது அதிகரித்து அறிவையிழக்கச் செய்து மயக்கத்தை உண்டாக்கி இறப்பினை ஏற்படுத்தக்கூடிய நோய் நிலையாகும். சன்னி நோயானது பிரதானமாக 13 வகையாகவும் உபபிரிவுகளாக 18 ஐயும் கொண்டு 31 வகையாகக் காணப்படுகின்றது. இந்நிலைகள் ஏற்படுவதை உணவில் ஒழுங்காக மிளகு சேர்த்துக் கொள்வதன் மூலம் தடுத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இதனாலேயே திரிதோச சம திரவியங்களில் மிளகு முதன்மையாக உள்ளது.
இவற்றின் அடிப்படையிலேயே மிளகானது பாடலில் கூறப்பட்டுள்ளதுபோல் வாத வலிகள், கடுமையான காய்ச்சல் நிலைகள், உடலில் வாயு சேர்தல், மந்தம், காமாலை, குருதிச்சோகை, வயிற்றுப்புண், சிரங்கு, பசியின்மை, பீனிசம், விடங்கள், கபநோய்கள், தோல் நோய்கள் போன்றவற்றில் சிறந்த பலனைத்தருகின்றது. இதனால் சித்தமருத்துவத்தில் பெரும்பாலான மருந்துகளில் மிளகு உள்ளடங்குகின்றது. மிளகானது நோய்களைத் தீர்ப்பதில் சிறந்ததொரு பத்தியமாகப் பங்குகொண்டு உடலுக்கு அழகையும், புத்திக் கூர்மையையும், இளமையையும் உண்டாக்கும். அதேவேளை உறுதியான பித்த உடலமைப்பினருக்கு மிளகானது ஒவ்வாது என்று சிவன் உரைத்ததாக சித்தர்கள் சொல்லியுள்ளனர்.
வெந்தயம், மஞ்சள்
“வெந்தயக் குணத்தைக் கேண்மோ மிகுசுரங்டி கழிச்ச லோடு
மந்தமு மற்று மாற்றும் வண்ணமார் மஞ்ச ளுக்கு
மந்தமார் நோய்க ரப்பன் வளர்பித்தங் கபங்கி ரந்தி
நிந்தைசெய் புலானாற் றம்போ நிறைமேனி யழகுண்டாமே”
-பக்.92, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
வெந்தயமானது காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மந்தம் என்பவற்றை குறைக்கக்கூடியது. உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது.
மஞ்சளுக்கு தோல் நோய்கள், பித்தம், கபம் என்வவற்றின் அதிகரிப்பினால் ஏற்படும் கிரந்தி ரோகங்கள், உடலில் ஏற்படும் துர்நாற்றம் என்பன இல்லாது உடல் அழகு பெறும்.
யாழ்ப்பாணத்தில் பால் காய்ச்சும்போது சிறு அளவு ( இரண்டு விரலால் எடுத்தல் – வெருகடிப்பிரமாணம்) மஞ்சள்தூள் சேர்த்து காய்ச்சிக் கொள்வார்கள். இதன் மூலம் பாலின் தரத்தினை அதிகரிப்பதோடு மஞ்சளின் பயனையும் பெற்றுக்கொள்ளலாம்.
நற்சீரகம்
“சீரகக் குணத்தைக் கேளு திரிசுர மரோசி வாந்தி
காரமார் வெட்டை மூலக் கடுப்பொடு தாகம் வாயு
வாரமின் மேக பித்தந் தலைவலி மடியு மற்றும்
தீருங்கண் குளிருந் தேகந் திரமுறு வாச முண்டாம்”
-பக்.96, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
சீரகமானது முத்தோசங்களாலும் வரும் சுரங்களையும், உணவில் விருப்பமின்மை, பசியின்மை, வாந்தி, அதி உடற்சூடு, மூலம், அதனால் உண்டாகும் வலி, நீரிழிவினால் ஏற்படும் தாகம், வாயு, தலைவலி என்பனவற்றைக் குறைப்பதுடன் கண்ணுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கும். தேகத்துக்குப் பலத்தை உண்டாக்கும்.
சீரகத்தில் அதிகளவு இரும்புச்சத்து உண்டு. ஆனால் உடலால் அகத்துறிஞ்சக் கூடிய நிலையில் இல்லை (Fe3+ – Ferric). சீரகத்தினை ஓரு மண்சட்டியில் இட்டு அதற்கு மேலாக மூடி வருமாறு தேசிப்புளிச்சாற்றை விட்டு சூரிய ஒளியில் வைத்து உலரவிட்டுக்கொள்ள வேவண்டும். தேசிப்புளி நன்றாக ஊறி , சீரகம் நன்றாக ஈரப்பதன் இல்லாது காய்ந்து போனபின் எடுத்து தூளாக்கிக் கொள்ள வேண்டும். இந்நிலையில் சீரகமானது கறுத்து சற்று ஊதி இருக்கும். இங்கு நொதித்தல் செயற்பாட்டினால் Fe3+ (Ferric) ஆனது Fe2+ (Ferrous) ஆக உடலால் அகத்துறிஞ்சக் கூடிய நிலைக்கு மாறியிருக்கும். அதேநேரம் இரும்புச்சத்தின் அகத்துறிஞ்சலை அதிகரிக்கக்கூடிய உயிர்ச்சத்து C உம் அதிகம் காணப்படுவதால் தேவையான இரும்புச்சத்தானது எமக்குக் கிடைக்கின்றது. அதேபோல் சீரகத்தில் உள்ள நார்ச்சத்தானது சமிபாட்டைச் சீராக்குவதுடன் மலக்கட்டையும் நீக்குகின்றது. முக்கியமாக கர்ப்பம் தரித்துள்ள பெண்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு, அதனால் ஏற்படும் அதிகுருதி அமுக்கம், தலைச்சுற்று, வாந்தி, உணவு செரியாமை, மலக்கட்டு என்பவற்றுக்கு சிறந்தது. இதனை காலை, இரவு என 1 – 2 கிராம் தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம் (மருத்துவரின் ஆலோசனை அவசியம்).
பெருஞ்சீரகம் / சோம்பு
“யோனிநோய் குன்மம் உரூட்சைமந் தம்பொருமல்
பேனம்உறு காசம் பீலிகமிரைப் – பீனஉரை
சேர்க்கின்ற வாதமும்போஞ் சீர்பெரிய சீரகத்தால்
மூக்குநோ யில்லை மொழி”
-பக்.335, குணபாடம்-
பெருஞ்சீரகமானது பெண்களின் பிறப்புறுக்களில் வரும் நோய்கள், வயிற்றுப்புண், சுரம், அஜீரணம், வயிற்றுப்பொருமல், சளியுடன் கூடிய இருமல், மண்ணீரல் நோய்கள், சுவாசநோய்கள், சிறிதளவான வாதம், பீனிசம் என்பவற்றைக் குறைக்கும்.
மேலும் இதற்கு கர்ப்பவாயுவைக் குறைக்கும் தன்மையும் உண்டு. கர்ப்பவாயு என்பது பெண்களில் மாதவிடாய்க்கு முன்னர் வயிறு பொருமி மிகவும் வலிக்கும், மாதவிடாய் உண்டானால் வயிற்றுவலி தீரும், கருத்தரித்தால் அதனை அழிக்கும், இடுப்பு – தொடை உளையும், மயக்கம் உண்டாகும், மலத்தை இறுக்கும், அதேபோல் இடது பாதத்தில் வலியுண்டாகி அது மேல் நோக்கிப் பரவும், வெளியேறும் குருதி நிற்காது, தலை திமிர்க்கும், அடிவயிறு வாயுசேர்ந்து பொருமும், நாரி – மூட்டுக்கள் உளையும் நிலைகளைக் கொண்ட நோய் நிலையாகும்.
பெருங்காயம்
“…பெருங்காயம் வாயுக் குன்மம் பெருவாயுத் திரட்சி நீக்கும்”
-பக்.92, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
பெருங்காயமானது வாயு, அதனால் ஏற்படும் வயிற்றுப்புண், உடலில் வாயுவின் அதிகமான திரட்சி என்பனவற்றைக் குறைக்கும்.
வேர்க்கொம்பு / சுக்கு
வேர்க்கொம்பு அல்லது சுக்கு என்பது நன்றாகக் காய்ந்து உலர்ந்த இஞ்சியாகும்.
“கேள்சுக்கின் குணத்தைச் சூலை கெடுகபம் வாத வீக்கம்
கோளைநீர்க் கோவை மந்தங் குன்மநெஞ் செரிப்பு வாயு
ஈளையே புளித்தேப் பந்தா னிருமலே சுவாச காசம்
மூள்வலி மூன்று தோசம் முச்சுரந் தலைநோ யின்னும்
மலக்கட்டுச் செவிய டைப்பு வயிற்றுறு பொரும லோடு
விலக்கரு நோய்க ளெல்லாம் விலக் கிடுமென் றுரைத்தார்
சலத்தினைத் தவிர்த்த தன்வந் திரியெனும் பகவா னோடு
நலத்தகொங் கணரு மற்றை நவையிலா முனிவர் தாமும்”
-பக்.97, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
வேர்க்கொம்பு வயிற்று வலியினைக் குறைக்கும். கேடடைந்த கபம் மற்றும் வாத தோசங்களினால் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும். இதற்கு சளி, பீனிசம், தலையில் நீர்கோர்த்தல், மந்தம், வயிற்றுப்புண், நெஞ்செரிவு, வாயு, மூச்சுவிடுதலில் சிரமம் (ஆஸ்துமா), உணவு செரியாமல் புளித்த ஏப்பம், இருமல், சுவாசத் தொகுதியில் ஏற்படும் ஒவ்வாமை, மூன்று தோசங்களாலும் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி, தலைவலி என்பனவற்றுடன் மலக்கட்டு, செவியடைப்பு, வயிற்றுப்பொருமல் என்பன விலகுவதுடன் தீர்க்க கடினமான நோய்கள் எல்லாம் தீர்க்கும் குணமுண்டு என தன்வந்திரி பகவான் உடன் கொங்கணவர் மற்றும் அவருடனான சித்தர்கள் கூறியுள்ளனர்.
நமது யாழ்ப்பாண பாரம்பரியத்தில் தேநீருக்குப் பதிலாக நாம் சுக்கு, மல்லி, நற்சீரகம் சேர்ந்த பானத்தையே அருந்தி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
மல்லி
“…மிக்கதாங் கொத்த மல்லி குளிர்காய்ச்சல் வெட்டை வாயு
அக்கண மகற்ற லன்றி யரோசிகந் தனையு மாற்றும்…”
-பக்.91, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
மல்லியானது குளிர்காய்ச்சல், உடற்சூடு, வாயுவை உடனே அகற்றுவதுடன் உணவில் விருப்பமின்மை, பசியின்மை என்பவற்றையும் மாற்றும். குறிப்பாக எமது யாழ்ப்பாண பாரம்பரியத்ததில் மல்லிக்கென்று தனி இடம் உண்டு. குழந்தைகள், சிறுவர்களுக்கு ஏற்படும் காய்ச்சல், அஜீரணம் போன்றவற்றில் மல்லிக் குடிநீர் முக்கியமான பங்கு வகிக்கின்றது.
ஏலம் – கச்சோலம்
“…உத்தம மான வேல முறுவாந்தி விக்கல் வெப்பு
மெத்திய சுரமே யீழை வீட்டுமென் றுரைப்பர் சித்தர்”
-பக்.94, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
ஏலம் ஆனது வாந்தி, விக்கல், உடற்சூடு அதிகரிப்பினால் ஏற்படும் காய்ச்சல், மூச்சுக்கஸ்டம் என்பனவற்றை விலக்கும் என்று சித்தர்கள் உரைப்பர்.
ஏலத்தின் தோல் கச்சோலம் எனப்படும்.
” … கச்சோலங் குளிர்ச்சி யுண்டாம்
நண்ணுநீர்க் கோவை யோடு நவிறலை வலிபோ மென்று
பண்புள பொதிகை நாதர் பகர்ந்திடு நூல்க ளோதும்”
-பக்.95, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
ஏலத்தின் தோல் ஆனது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். தலையில் நீர்கோர்த்தல், தலைப்பாரம், தலைவலி என்பனவற்றைக் போக்கும் என்று பொதிகை நாதர் என்றழைக்கப்படும் அகத்தியர் தன் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளி
“வசம்பிற்குச் சன்னி குன்மம் வலிவாயு விசம்போ மென்பர்
இசைந்திடு முள்ளிக் குத்தா னியம்பருஞ் சன்னி வாதம்
வசஞ்செயாச் சேட சீதம் வாயுநீர்க் கோவை மந்தம்
நிசந்தலை வலியு நீங்கு நிறையனல் பித்த முண்டாம்”
-பக்.96, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
உள்ளிக்கு வாத நோய்கள் அவற்றினால் ஏற்படக்கூடிய தீவிர நிலையான சன்னி, கட்டுப்படாத கப நோய்கள் (சளி, மிகை கொழுப்பு) வாயு, தலையில் நீர் கோர்த்தல், மந்தம், தலைவலி என்பன நீங்குவதுடன் பித்தம் அதிகரிக்கும். இதனால் நல்ல பசியுண்டாவதுடன் உணவும் நன்கு சீரணமாகும்.
கடுகு
“கடுகினற் குணத்தைக் கூறிற் காரமாம் வாயு மந்தம்
கெடுசன்னி குன்மந் தோசங் கிளத்திய வாதங் குட்டம்
படுவலி யேம யக்கம் பாறிடு மனலுண் டாக்கும்
வடுவிறா ழிதத்திற் காகு மாமென வகுக்கு நூலே”
-பக்.96, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
கடுகின் குணமானது, “கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது” என பழமொழியில் குறிப்பிடுவது போல் காரமானது. வாயு, மந்தம், கேட்டைத் தரக்கூடிய சன்னி, வயிற்றுப்புண், நாட்பட்ட வாதநோய்கள், குட்டம் போன்ற தோல்நோய்கள், வலிப்பு, மயக்கம் என்பனவற்றை குறைக்கக் கூடியது. பித்தத்தை அதிகரிக்கும். தாழிதத்துக்கு ஆகும் என்று நூல்கள் கூறுகின்றன.
ஓமம்
“…ஓமங் கூறரும் வலியே வாயு
கறையுற்ற விரைச்சன் மந்தங் கழிச்சலு மாற்று மென்ப…”
-பக்.92, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
ஓமமானது வயிற்றில் ஏற்படும் மந்தம், வயற்றுப்பொருமல், வாயு, வயிற்றுவலி, கழிச்சல் என்பனவற்றை மாற்றும்.
ஓமம் அதிகளவிலான உயிர்ச்சத்துக்களான A, B1, B6, E என்பனவும் கல்சியம், பொஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, நாகம், செப்பு, மங்கனீசு, செலனியம் என்பனவற்றுடன் நிறைந்த நார்ச்சத்தையும் கொண்டது.
வயிற்றுப் பகுதியில் உள்ள மென்தசைகளின் இயக்கத்தை சீராக்கி வலிநிவாரணியாகத் தொழிற்படும். சிறுவர்களுக்கு மலக்கட்டு ஏற்படும்போது பச்சை ஓமம் (வறுக்காத) மலமிழக்கியாகத் தொழிற்படுகின்றது. குழந்தைகளுக்கு ஓமக் குடிநீர் சிறந்ததொரு மருந்தாகத் திகழ்வதற்கு இவையே காரணமாகின்றன.
கராம்பு
“காரமார் கராம்பி னல்ல குணத்தைக்கேள் கபமே கோழை
ஈரமில் குன்மம் வாத மீழையே வலியே சன்னி
தீருமே சீவ தாது சேர்ந்திடுஞ் சோம்பு தீரும்
சீருறு தாம்பூ லத்திற் சேர்த்தருந் திடவு நன்றே”
-பக்.96, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
காரச் சுவையுடைய கராம்பு கபதோசம், சளி, வயிற்றுப் புண், வாததோசத்தால் ஏற்படும் மூச்சுக் கஸ்டம் அதனால் ஏற்படும் வலியுடன் கூடிய சன்னி என்னும் தீவிர நிலை என்பனவற்றுக்கு சிறந்தது. அத்துடன் உயிர்தாதுக்கள் நன்னிலை அடைந்து பிராணவாயு ஆனது உடற்கலங்களுக்கு சீரகாக் கிடைப்பதன் மூலம் உடல் நன்நிலை அடைந்து சோம்பல், பலவீனம் தீரும்.
தாம்பூலத்தில் கராம்பு சேருகின்றது. தாம்பூலத்ததிற் சேரும் ஏனைய பொருட்கள் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, கராம்பு, ஏலம், வால்மிளகு, சாதிக்காய், சாதிபத்திரி, சுக்கு, காசுக்கட்டி என்பனவாகும். இவை சேர்ந்ததே தாம்பூலம் எனப்படும். தாம்பூலத்தில் புகையிலை சேர்வதில்லை. இது தமிழர் பாரம்பரியம். இங்கு தாம்பூலம் தரிப்பதற்கு விதிகள் உண்டு. அவ்வாறு இல்லாதுவிடின் அல்லது அளவுக்கு மீறி தாம்பூலம் தரிக்கும்போது மருந்துகளால் தீர்க்கமுடியாத நோய்கள் ஏற்படும் என யாழ்ப்பாண நூலான பரராச சேகரம் கூறுகின்றது.
“நாதனா ருரையி னேற நயந்ததாம் பூலங் கொள்ளின்
ஓதுமெய் வெளுப்புக் காட்டிப் பாண்டுநோ யுறுவ தாகும்
தாதுவுங் குறைந்து கண்ணி னொளிபல்லுந் தான்பா ழாகம்
மாதுகே ளிந்நோய் தீர மருந்தில்லை மதுவென் பாரே”
-பக்.111, பரராசசேகரம், அங்காதிபாதம்-
அதிக தடவைகள் தாம்பூலம் தரித்தால் உடல் வெளுத்து பாண்டுநோய் (Anaemia) உண்டாகும். உயிர், உடற்தாதுக்கள் நலிவடையும். கண்பார்வை குன்றும், பற்கள் கேடுறும் இவ்வாறு ஏற்படும் நோய்களுக்கு மருந்து இல்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.
தொடரும்.