இலங்கை அரசியல் அமைப்பில் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இருப்பதன் அடிப்படையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு அரசும் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளதென அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அப்படி என்ன ஆபத்து பௌத்தத்துக்கு நேர்ந்துவிடும் அறிகுறி தென்பட்டதில் இதனை அவர் பேசும் நிலை ஏற்பட்டது? ‘அரசியலில் இருந்து மதம் விலக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்ற குரல் வலுத்து வருகிறது என்ற வகையில் இதனைக் கூற நேர்ந்ததாக சுட்டிக்காட்டியதுடன் ‘பௌத்தத்தைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது என அரசியலமைப்பு வலியுறுத்தியுள்ள காரணத்தால் எவர் ஆட்சியில் அமர்ந்தாலும் பௌத்த மதத்தை விருத்தி செய்யும் பணி முன்னெடுக்கப்படும் என்பதனை உத்தரவாதப்படுத்துவார்’ என அந்த உரையில் ஜனாதிபதி ஆணித்தரமாக கூறிச் சென்றார். ‘போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை’ என்று ஜனாதிபதிப் பொறுப்பைக் கையேற்றவுடன் பேசியவர், ‘மக்களின் அன்றாட வாழ்வுக்கு இடையூறாக இருந்த அரகலயப் போராளிகளுக்கு’ சிறைக் கம்பிகளின் உள்ளே போராடும் உரிமையைப் பெற்றுக் கொடுத்திருந்தார் என்பதனை இந்தப் பிரகடனத்துடன் பொருத்திப் பார்க்கலாம்!
இங்கும், பௌத்த மதம் அரசியல் ரீதியாகப் பேணிப் பாதுகாக்கப்படும் பொறுப்பை ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு அப்பால்’ வேறெவரும் கையேற்க வர வேண்டாம் என்பதுதான் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்தத் தொனி ஜனாதிபதியிடம் வெளிப்பட்டிருப்பதனை அரசியல் – பண்பாட்டுத் தளங்களின் இயங்கு முறைமையினைக் கூர்ந்து அவதானிப்பதன் வாயிலாகக் கண்டுகொள்ள இயலும். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அடாவடியான நடவடிக்கைகளில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் நிதிமன்றத் தடைகளுக்கு உள்ளாகும் போக்கு அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளன; ஞான சார தேரர் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேர்ந்துள்ளது. அத்தகையவர்களது இனவாதச் செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளியெறிவதற்கான செயலொழுங்குகளை மேற்கொள்வதனை விடுத்து அவர்கள் விதைத்த இனக்குரோதங்களை அறுவடை செய்த வண்ணம் பிக்குகளை அம்பலப்படுத்தும் கைங்கரியத்தையும் அரசு கெட்டித்தனமாகக் கையாண்டு வருகிறது. இன்னொரு பக்கம், துறவற ஒழுக்கத்தைக் கைவிட்டுத் தவறான பாலியல் நடத்தைகளில் ஈடுபடும் பிக்குகள் குறித்த அம்பலப்படுத்தல்களும் எக்காலத்தையும் விட இப்போது அதிகமாக வெளிப்படுத்தப்பட்டு வரக் காண்கிறோம்.
இலங்கையில் மதத்துக்கான முன்னுரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ள சூழல் காரணமாக அரசியல் ஈடுபாட்டை பிக்குகளிடம் இருந்து முற்றாக நீக்குவதற்கு இவ்வகையிலான பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொள்ளும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்பு ‘மதச்சார்பற்ற நாடு இந்தியா’ எனப் பிரகடனப்படுத்தியுள்ள சூழலில் அங்கே இந்து தத்துவம் ஆட்சியதிகாரத்தில் ஒரு தசாப்தத்துக்கு மேலாக நீடிக்க இயலுமாகியுள்ளது. தேர்தல் விதிகளை மீறி மதவாதப் பிரசாரங்களை மேற்கொண்டார் எனும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது தடவையாகவும் பிரதமராகப் பதவியேற்பதை எவ்வகையிலும் தடுத்து நிறுத்த இயலவில்லை. பொறுப்பேற்ற கையுடன் மதவாதச் செயற்திட்டங்களை மட்டுமன்றி அகண்ட பாரத விஸ்தரிப்புத் திட்டங்களை அரசு இனிச் செயலுருப்படுத்தும் என்ற விவகாரங்களும் பேசுபொருளாகி உள்ளன.
பிரிட்டிசார் ‘சுதந்திரம்’ வழங்கிச் சென்ற நாள் முதலாக இலங்கையில் பிரதான பேசுபொருட்களில் ஒன்றாக இருந்த விடயம் ‘இந்திய விஸ்தரிப்பு வாதம்’. ஏனையவர்கள் அதனைச் சிறுகச் சிறுகப் பேசாப் பொருளாக்கி வந்தபோது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மட்டும் மிகப் பிரதான விவகாரமாகத் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது; அவர்களது ஐந்து வகுப்புகளில் ஒன்றாக ‘இந்திய விஸ்தரிப்பு வாதம்’ அமைந்திருந்தது. எழுபதாம் – எண்பதாம் ஆண்டுகளில் இவ்வாறு ஆணித்தரமாகப் பேசியதுடன் அதனை முன்னிறுத்திய போராட்டங்களையும் முன்னெடுத்து வந்த ஜே.வி.பி.யும் கூட இன்று அதனைக் கைவிட்டு விட்டது. சிங்களத் தேசிய நலனை முன்னுரிமையுடன் கையேற்று இயங்கும் அந்த அமைப்பு ‘சிங்கள இனத் தேசியம் சோசலிசத்தை உளப்பூர்வமாக செயலுருப்படுத்துவதன் வாயிலாக ஏனைய இனத் தேசியங்கள் மத்தியிலுள்ள சந்தேகங்களைக் களைந்து இலங்கையைச் சமத்துவப் பாதையில் முன்னெடுக்க இயலும்’ என்ற நம்பிக்கையைக் கொண்டு இயங்குகிறது. ஆயினும் தமிழினத் தேசியத்தின் பிரமாண்ட யுத்த முன்னெடுப்புக் காரணமாக அவர்களைப் பீடித்துள்ள ‘புலி அச்சம்’ இந்திய அரவணைப்புக்குள் சிங்களத் தேசியத்துக்கான பாதுகாப்பைத் தேடத் தூண்டியுள்ளது.
கடந்த நூற்றாண்டின் முற்கூறில் இடம்பெற்ற இந்தியாவின் சுதந்திரப் போராட்டவீறு அதனை விடுதலைத் தேசிய முன்னெடுப்பின் தொடர்ச்சியாக சோசலிச நாட்டத்துக்கு ஆட்படுத்த இடமுள்ளது என உணர்ந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கையைத் தமது பின் தளமாக எப்போதைக்குமானதாக வைத்திருக்க ஏற்றதான செயற்திட்டப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தது. இத்தகைய நடவடிக்கைகளில், இலங்கையினுள் இனத் தேசியங்களாக விருத்திபெறவுள்ள ஒவ்வொன்றையும் ஒன்றுடனொன்று முரண்பட்டு மோதுவதற்கான வெளிகளை அமைப்பது ஒரு அம்சம்; சிங்களத் தேசிய நலனுக்கு இந்தியாவினால் எப்போதும் ஆபத்து உள்ளது என்ற அச்ச உணர்வை வலுப்படுத்துவது மற்றொரு அம்சம். இன்றைய நான்கு இனத் தேசியங்களும் மற்றையதை எதிரியாகக் கருதி, அத்தகைய எதிரிக்கு எதிராகப் பாரதமாதாவை அரவணைக்க நிர்ப்பந்திக்கப்படும் அரசியல் செல்நெறி ஏறத்தாழ அரை நூற்றாண்டாக இயக்கம் பெற்று வந்தது. இப்போது இந்தியாவுக்கு எதிராகப் பின்தளமாக இலங்கையைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏகாதிபத்தியத் திணைக்கு இல்லை; இந்தியா ஏகாதிபத்திய அணிக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்கும் ஆபத் பந்தாவனாக உருமாற்றம் பெற்றுள்ளது. இலங்கையினுள்ளும் நான்கு இனத் தேசியங்களது தலைமைகளாக மேலாதிக்கத் தேசியவாத சக்திகள் கையோங்குவதற்கு இடமளிக்கப்பட்ட காரணத்தால் உலகின் இறுதி ஏகாதிபத்தியக் கடைமையை நடைமுறைப்படுத்தும் நாடாக அகண்ட பாரதம் திகழும் வகையிலான உத்வேகத்தை வழங்கும் நாடாக இலங்கை இணக்கம் கொள்ள ஏற்றதான அரசியல் செயலொழுங்குகள் முன்னேறி வருகின்றன.
விடுதலைத் தேசிய நாட்டத்துடன் அர்ப்பணிப்புமிக்க பல தியாகங்களை ஆகுதியாக்கிய இலங்கை – இந்திய மக்கள் மத்தியிலிருந்து ஏகாதிபத்திய நாட்டமுடைய அணிகளே மேலாண்மை பெற இயலுமானது எப்படி?
விடுதலை மார்க்கத்துக்கான தத்துவமும் நடைமுறையும்
புதிதாகத் தோற்றம் பெற்ற முதலாளி வர்க்கம் தனது உடன் பிறப்பான பாட்டாளி வர்க்கத்துடன் ஒன்றிணைந்து, சமூக அமைப்பைத் தகர்த்தாக வேண்டிய வாழ்முறையுடன் இருந்த விவசாயி வர்க்கத்தை அணி திரட்டியவாறு, சமூக மாற்றப் புரட்சியை அரங்கேற்றித் தேசியக் கட்டமைப்பை வென்றெடுத்த ஐரோப்பியச் சமூக முறைமை போன்று எமது சாதியச் சமூகம் அமைந்திருக்கவில்லை. இருப்பைத் தகர்த்து மாற்றத்தை விதைப்பதாயினும் முன்னதாக இருந்து வரும் ‘முழுச் சமூக சக்திகளான’ சாதிகளே (திணைகளே) இயக்கம் பெற்று அதனை நிகழ்த்தியாக வேண்டும். மாற்றத்தை நாடுவோரை இயக்கும் தத்துவத்தில் சாதியப் பண்பு நிலவி வந்த இடத்தில் புதிதாகக் காலனித்துவ மனோபாவமும் இணைந்து கொண்டுள்ளது. விவசாய மேலாண்மையுடன் உருவான சாதியம் திணைப் பண்புகளை உள்ளடக்கியுள்ள வகையில், ஒன்றிணைக்கத்தக்க சக்திகளை ஐக்கியப்படுத்தியவாறு மாற்றத்தை முன்னெடுக்கும் திணை அரசியல் செயலொழுங்குகளுடன் இயங்குவது. அதுபோன்றதல்ல காலனித்துவம்; வர்க்கப் பிளவில் உருப்பெற்ற சமூகத்திலிருந்து முன்னதாக மேலெழுந்து வந்த மூலதனத் திரட்சியைக் கொண்டு இயங்குவதாகிய காலனித்துவம் சமூக சக்திகளைப் பிளவுபடுத்தியவாறு வரலாற்று இயக்கப் போக்கை முன்னகர்த்த முனைவது.
எமது சமூகத்தில் ஊடறுத்துச் செயற்படத் தொடங்கிய காலனித்துவம் இங்குள்ள ஆதிக்கச் சாதிகளுடன் கூட்டிணைந்தபடியேதான் தமக்குரியதான மேலாதிக்கத் திணை அரசியலைப் பிரயோகித்தது. முன்னதாக நிலப்பிரபுத்துவப் பொருளுற்பத்தி உறவில், சாதி பேதங்கள் வலியுறுத்தப்படுகிற அதேவேளை ஒவ்வொரு சாதிகள் இடையிலும் வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஊடாட்டம் கொள்ளும் கிராமிய வாழ்முறை நிலவியது. முழுமைப்பட்ட முதலாளித்துவ மாற்றியமைத்தலை அனுமதிக்காமலே அரை – நிலப்பிரபுத்துவ முறைமைக்குள் இயங்கிய காலனிய முதலாளித்துவமானது சாதிகளிடையிலான பிளவுபடுத்தலை அதீதமாக்கும் கைங்கரியத்தை மேற்கொண்டது. முன்னர் கிராமங்கள் ஒவ்வொன்றும் தனி அலகுகளாக இயங்கின; கிராமம் கடந்த உறவுகள் வலுவற்றனவாகவும் கிராமத்தினுள் சாதிகளிடையே ஊடாட்டம் வலுவானதாகவும் அமைந்திருந்தது. அரை – நிலப்பிரபுத்துவக்காலனிய முதலாளித்துவம் தோற்றம் பெற்றதில் இருந்து கிராமத்தினுள் சாதிகளிடையே பிளவுபடுத்தலை வலுப்படுத்தியவாறு கிராம எல்லைகள் தாண்டியதாக ஒவ்வொரு சாதிக்கும் உரிய சாதிச் சங்கங்கள் உருவாகத் தொடங்கின. முழுத் தேசம் தழுவி உருவாகும் சாதிகளுக்கான ஸ்தாபன மயப்படல் என்பது அடிப்படையில் முதலாளித்துவச் சமூக முறைமையின் இயக்கத்துக்குரிய பண்பு; வர்க்கப் பிளவடைந்த சமூகத்தில் ஒவ்வொரு வர்க்கங்களுக்குமான ஒன்றிணைந்த ஸ்தாபன அமைப்பாக்கம் போன்று சாதிச் சங்கங்கள் திணை அரசியலில் தவிர்க்கவியலாதன.
முழுத் தேசம் எனும் எல்லை விரிவாக்கம் அனைத்துச் சாதிகளுக்கும் ஒரே வகையில் சாத்தியமானதாக அமையவில்லை. தமிழகத் தேச எல்லைக்கு அப்பால் மற்றைய சாதிகளுக்கு இருப்பு வாய்த்திருக்கவில்லை; பிராமணர் மட்டுமே இந்தியா முழுமையிலும் உள்ள அனைத்துச் தேசிய இனங்களிலும் இயங்கி வந்த ஒரே சாதியினர். ‘ஒரு பரம்பொருளுக்குக் கட்டுப்பட்ட பல வேறு சாதிச் சமயங்களின் கடவுளர்’ என்ற கருத்தியல் (பண்பாட்டு) இயக்கத்துக்கு உரிய இந்தியத் தேசம் என்பதன் இணைப்பு சக்தியாக ‘பிராமணத் தேசியம்’ இயக்கம் கொண்டிருந்தது. இனத் தேசியங்கள் ஒவ்வொன்றினதும் ஆளும் சாதிகளுடன் கூட்டமைத்து ஒவ்வொரு இனங்களில் மட்டுமன்றி முழுத் தேசத்துக்கும் உரிய மேலாதிக்கத்தையும் பெற்றிருந்த ஒரே சாதித் தேசியத்துக்கு உரியோராகப் பிராமணர் திகழ்ந்தனர். பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் இணக்கமாக இயங்குவது, பகுதிச் சுயராஜ்யம் கோருவது, பூரண சுயாட்சிக்காகப் போராடுவது எனும் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் இந்தியக் காங்கிரஸ் கட்சி இயங்கிய போது அதன் தலைமைத்துவம் மிக மிகப் பெரும்பான்மையாக பிராமணர்களால் நிறைந்திருந்தது. தமிழகத்தின் ஆதிக்க சாதியான வெள்ளாளர் மத்தியில் இருந்து வெளிப்பட்ட வ.உ. சிதம்பரனார் தவிர்ந்த ஏனைய தலைவர்கள் அனைவரும் பிராமணர்களாகவே விளங்கினர்!
அத்தகைய எழுச்சியானது எதிர்கால இந்தியாவைப் பிராமண மேலாதிக்கத்துக்கு ஆட்பட்டதாகக் கட்டமைப்பதற்கு வழிவகுக்கும் என்பதனை முன்னுணர்ந்த ஆளுமைகள் எதிர் – தேசிய அணி உருவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். தமிழகத்தில் அயோத்திதாசர் அத்தகைய ஆளுமையாக வெளிப்பட்டார். அவருடன் இணைந்து இயங்குபவராக இரட்டை மலை சீனிவாசன் திகழ்ந்தார்; தொடர்ந்து எம்.சி. ராஜா போன்ற ஆளுமைகள் அத்தகைய எதிர் தேசிய இயக்கத்தை வெவ்வேறு பரிமாணங்களில் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னெடுத்து வந்தனர். ஆயினும், அயோத்திதாசர் தொடங்கிவைத்த எதிர் தேசிய முன்னெடுப்பு தலித் அரசியலாகப் பரிணமிக்கவில்லை; அதன் காரணிகளை அடுத்த இயலில் பேசுபொருளாக வைத்துக் கொள்வோம்!
வலுவான எதிர் – தேசிய அரசியலுக்கான கருத்தியல் தளத்தை அயோத்திதாசர் கண்டறிந்து வெளிப்படுத்தியிருந்தார். இந்தியத் தேசியத்தைக் கட்டமைத்த பிராமணத் தேசியம் இந்து மத அடித்தளத்தில் வேதாந்தக் கருத்தியலை முன்னிறுத்தி வடிவப்படுத்திய போது பிராமணியத்துக்கு எதிரான மதச் செயலொழுங்குகளைத் தேடும் நிர்ப்பந்தம் அயோத்திதாசருக்கு ஏற்படலாயிற்று; தமிழர் மனக்கட்டமைப்பிலும் சடங்கு சம்பிரதாயங்களிலும் ‘பௌத்தத்தின்’ தாக்கமும் தொடர்ச்சியும் அதிகம் இருப்பதனைக் கண்டறிந்த அயோத்திதாசர் ‘பௌத்தமே தமிழ் மக்களின் பூர்வ மதம்’ என்ற உண்மையைக் கண்டு காட்டினார். அந்த ஆதித் தமிழரின் பூசகர்களாக (பிராமணர்களாக) பறையர்கள் இருந்தனர்; பின்னர் வேடதாரிப் பிராமணர்களால், தமிழர் மதம் வீழ்த்தப்பட்டு உண்மைப் பிராமணர்கள் ‘தீண்டாமைக்கு’ ஆட்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியாக மாற்றப்பட்டனர் எனும் விவாதங்களை அயோத்திதாசார் முன்னிறுத்தி இயக்கியிருந்தார்.
பூர்வத் தமிழர் மதமாக இருந்த ஆசிவகத்தையும் உட்படுத்தியதாகவே பௌத்தத்தை அயோத்திதாசர் இனங்கண்டிருந்தார் என்ற போதிலும் அதன் சமத்துவ நெறியை முழுமையாக உள்வாங்க ஏற்றதான பின்னணி அன்றைய சூழலில் வந்தமையவில்லை. பின்னர் இயக்கம் பெற்ற மேலாதிக்கவாத மத வடிவமான பௌத்தினுள் அந்த ஆசீவகம் கரந்துறைவதாக இருந்தது. பௌத்த மேலாதிக்க வாத எல்லைப்படுத்தல் காரணமாக தனது சாதியின் மேலாண்மையை வலியுறுத்தும் நியாயப்பாடுகளுக்குள் கட்டுப்பட்டுச் செயற்படும் வரலாற்றுப் பாத்திரத்தையே அயோத்திதாசரால் நிறைவு செய்ய இயலுமாக அமைந்தது. அதனொரு வெளிப்பாடாக அருந்ததியர்களை ‘இழிவான சாதியினரே’ என அடையாளப்படுத்தும் தவறு வெளிப்படுவதற்கு இடமளித்தார். இவ்வகையில் அமைந்த வெளியைக் காலனித்துவ ஆதிக்கம் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டது என்பது பற்றி அடுத்து வரும் இயல்களில் விவாதிப்போம்!
அயோத்திதாசரையும் காணாமலாக்கிய வண்ணம் தொடர்ந்து இயங்கிய இந்தியத் தேசிய எழுச்சி அலையின் தத்துவமும் கூட பூரண விடுதலைக்கு உரியதாக அமைந்திருக்கவில்லை; சாதிவாதப் பிளவுகளை வலுப்படுத்துகின்ற பிராமணியத்தின் வேதாந்தம் முன்னிறுத்திய சமத்துவம் என்பது ஆதிக்க சாதிகளுக்கு இடையேயான இணக்கத்துக்கு உரியதாக மட்டுப்பட்டிருந்தது.
பிளவுறாத விடுதலை நாட்டத்தின் கருத்தியல்
சாதிப் பிளவாக்கமடைந்து உருவான எமக்குரிய ஏற்றத் தாழ்வான வாழ்க்கை முறைக்கு ஏற்புடைய கருத்தியலை வழங்கிய பிரமாணியம் வலுப்பட்ட பின்னர் அதனை முறியடிப்பதற்கு முனைந்த சமூக சக்தியாக வணிகச் சாதி தோற்றம் பெற்றது; அத்தகைய புதியதொரு முழுச் சமூக சக்தியின் (திணையின்) கருத்தியலாகப் பௌத்தம் வெளிப்பட்டிருந்த நடைமுறை வட இந்தியாவுக்கு உரியது. வணிக மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும் பணியைத் தான் பௌத்தம் முன்னெடுத்தாக வேண்டி இருந்தது. நவீன சமூக உருவாக்கத்தில் நிலப்பிரபுத்துவப் பொருளுற்பத்தி உறவையும் அதற்கு அனுசரணையான சாதியத்தையும் தகர்ப்பதற்கெனப் பௌத்தத்தைக் கையேற்கும் போது அதனுள் உறைந்துள்ள வணிகத் திணை மேலாதிக்கப் பண்பு ஏற்படுத்தும் வரம்பிடுதலைத் தவிர்க்க இயலாமல் போய்விடுகிறது. தனிமனித விடுதலை பற்றிய பௌத்தத்தின் அக்கறை சமூக விடுதலைக்கானதாக விரிவாக்கம் பெற இயலாததாய் இருந்தது.
பௌத்தம் உருவாகிய சமூகப் பின்னணியில் இருந்து வேறுபட்ட வகையில் முந்தியதான அவைதிக மத நிலைப்பட்ட ஆசீவகம் தமிழகத்தில் இயங்கிய பின்னணி குறித்து ஏற்கனவே பேசி வந்துள்ளோம். வணிகக் கருத்தியல் ஆசிவகத்திடமும் அடிப்படையானதாக உள்ள போதிலும், மேலாதிக்க நாட்டத்துக்கு உரியதாக அது அமைந்திருக்கவில்லை; சமத்துவ ஊடாட்டத்துடன் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாகத் திணைகள் இடையே வர்த்தகப் பரிமாற்றம் நிகழ்ந்த காலச் சூழலுக்கு உரியதாக இயங்கி, தமிழர் பண்பாட்டை இயக்கி வந்த கருத்தியலாக ஆசீவகம் இருந்துள்ளது.
தமிழ்ப் பண்பாட்டுக்குக்குரிய இந்தப் பண்புக் கூறு நவீன சமூக உருவாக்கத்தின் போதும் தமிழகத்துக்கான தனி அடையாளத்தை வழங்கத் தவறவில்லை. இந்தியா முழுமையிலும் சாதிய வாதத்தைத் தகர்த்தத் தவறிய இந்தியத் தேசிய எழுச்சி பெருமெடுப்பில் இருந்தது; அதன் மீதான சந்தேகங்களுடன் சாதியத் தகர்ப்பை முன்னிலைப்படுத்தி இயங்கிய எதிர்த் தேசியம் காலனித்துவத்துக்கு முட்டுக்கொடுக்கும் தவறை தன்னையறியாமலே இழைத்து வந்தது. இந்தியத் தேசியம் பிராமணிய மேலாதிக்கத்தைத் தகர்த்தத் தவறுவது பற்றிய கவனக் குவிப்பை மேற்கொள்ளாமல், எதிர்த் தேசிய இயக்கங்களை ‘ஏகாதிபத்தியத்திடம் விலை போன காட்டிக் கொடுப்பாளர்கள்’ எனும் முத்திரை குத்தலை அன்றைய மார்க்சியர்கள் செய்திருந்தனர். தமிழகத்தில் முகிழ்த்த இந்தியாவின் முதல் மார்க்சியத் தலைவரான ம. சிங்காரவேலர் மட்டுமே காலனித்துவத் தகர்ப்புடன் சாதியத் தகர்ப்பையும் இணைத்துத் தொடர்ந்தும் செயற்பட்ட ஒரேயொரு மார்க்சியராக இருந்தார். அவருடைய அந்த அரசியல் இயங்கு முறைக்கான கருத்தியலை மார்க்சியத்தின் நாத்திக நிலைப்பாடு வழங்கியது.
இந்திய மரபுரிமைத் தொடர்ச்சியாக சாதிய – காலனித்துவ தகர்ப்புக்கான கருத்தியல் பாரதி வாயிலாக ஆன்மிக நாத்திகமாக வெளிப்பட்டிருந்தது. இந்தியச் சமூக அமைப்பின் பிரத்தியேகத் தன்மைகளை உட்படுத்தியதாக பாரதியின் ஆன்மிக நாத்திகம் அமைந்திருந்த வகையில் அதற்கான தனித்துவப் பண்புகள் நுனித்து ஆராயப்பட வேண்டிய ஒன்று. பின்னரான நாத்திகவாத அலை எழுச்சி பெற்றமையை அடுத்த இயலில் பார்ப்பதனூடாக இதனை இணைத்துப் பார்ப்பது பயனுடையது.
தொடரும்.