தமிழ்ப் பண்பாட்டின் ஆரம்பம் தொட்டு மத்தியகால நிறைவு வரையான வளர்ச்சி நிலைகளைப் பார்த்து வந்துள்ளோம். நவீன யுகத் தொடக்கத்தில் ஆன்மிக நாத்திகம் என்ற புதிய கருத்தியல் நிலைப்பாடு பாரதியூடாக அறிமுகம் ஆகியிருந்தமையைச் சென்ற அமர்வில் பேசுபொருள் ஆக்கியிருந்தோம். அதன் அடுத்த பரிணமிப்பாக நாத்திகவாத அணியொன்று வெகுஜன இயக்கத்தை எழுச்சியுறச் செய்து தமிழக மண்ணில் பாரிய மாற்றத்துக்கு வித்திட்டிருந்தமையை இங்கு கவனம் கொள்ளவோம்.
வர்க்கப் பிளவாக்கம் நடந்தேறிய ஐரோப்பிய வாழ்நிலை சாத்தியப்படுத்தியிருந்த எண்ணப் போக்கின் பிரகாரம் ஆன்மிகம் – நாத்திகம் என்பவற்றினிடையே ஊடாட்டம் சாத்தியமில்லை; ஒன்றை மறுத்து மற்றது மேலெழும் எதிர் நிலைப்பட்ட பிளவாக்கம் அவற்றிடையே நிலவுவதான எடுகோள் ஐரோப்பியச் சிந்தனையின் கண் உள்ளது. ஒட்டுமொத்த முழுச் சமூகச் சக்தி (திணை) மேலாதிக்கம் பெற்றுச் சுரண்டலை மேற்கொள்வதாக அமைந்துள்ள எமக்கான வாழ்வியலில் இத்தகைய அதள பாதாள வேறுபாட்டுடன் ஆன்மிகமும் நாத்திகமும் இயக்கம் பெற்றுவரவில்லை.
‘நாத்திகம் என்பது கடவுள் மறுப்புக் கோட்பாடு’ என்பதான அர்த்தம் ஐரோப்பியச் சிந்தனையை உள்வாங்கிய பின்னர் இங்கு நடைமுறைப்பட்டது. முன்னரான இயக்கப் போக்கில் வேதாகமமே ஒட்டுமொத்தச் சமூகத்தின் மிகப் பெரும்பான்மையினர் இடையே மேலாதிக்கம் செலுத்தி வந்த காரணத்தால், வேத மறுப்பாளரை நாத்திகராகக் கருதும் நிலை காணப்பட்டது. ஒரு பரம்பொருளுக்குக் கட்டுப்பட்ட பரிவாரத் தெய்வங்களை உடையதான இந்துமத எழுச்சி ஏற்படத் தொடங்கிய கி.பி. 4 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், தமது பரம்பொருளை மறுத்து இன்னொரு தெய்வத்தைப் பரம்பொருளென வழிபடுபவரை நாத்திகர் எனச் சாடுகின்ற நிலையும் ஏற்பட்டிருந்தது. சிவ பக்தர்களான இராவணன், இரண்யன் போன்றோர் வைணவ நெறியின் படி நாத்திகர்களாகவே சித்திரிக்கப்படுவர். வைதிக மதப் பிரிவாக இருந்த போதிலும் ‘யார் பரம்பொருள்’ என்ற குறுகிய வரம்புக்குள் வந்தமையால் நாத்திக எல்லையும் சுருங்கிப் போக நேர்கிறது.
முன்னதாக பிராமண மதம் வேத காலம் தொட்டு இயற்கையின் அனைத்து அம்சங்களையும் வழிபட்டு வந்த நிலை கடந்து வேதாந்தம் எனும் பரிணமிப்பில் பிரமம் என்ற ‘ஒரு கடவுள் கோட்பாடு’ நோக்கி வளர்ந்த போது மீமாம்சகர்கள் அத்தகைய பிரமத்தின் இருப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு தனிக் கடவுள் மேலாண்மை பெறுவதான இந்தச் சிந்தனை முறைமையின் சமூக இயங்குநிலை தான் ‘முழு முதல் கடவுள்’ என்ற பரம்பொருளை உடையதான இந்து மதமாகப் பின்னர் பரிணாமித்து வந்தது. அத்தகைய ஒரு கடவுளை மறுத்த போதிலும் மீமாம்சகர்கள் நாத்திகர்களாகக் கருதப்படவில்லை; அவர்கள் வேத மந்திரங்களை முன்னிறுத்தியவாறு இயற்கை அம்சங்கள் அனைத்தையும் வழிபடும் போக்கில் உறுதியுடன் இயங்கிய காரணத்தால் நாத்திகவாத முத்திரை குத்தப்படாமல் காப்பாற்றப்பட்டனர் (பிற்கால மீமாம்சகர்கள் பரம்பொருளின் மேலாண்மை வலுப்பட்ட சூழலில் அந்தக் கடவுளின் இருப்பை அங்கீகரிக்க வேண்டியவர்களாக இருந்தனர் – பரம்பொருளை ஏற்றுக்கொண்டதன் வாயிலாக மீமாம்சம் தன்னைத் தக்கவைத்துக் கொண்டது).
ஏற்றத் தாழ்வான வாழ்வியல் வலுப்பட்டு வருகிற நிலையில் உடலுழைப்பில் ஈடுபடாத சாதிப் பிரிவினர் மேலாதிக்கம் பெற்று வரலாயினர்; அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களது கருத்தியலான பிரமக் கோட்பாடு செல்வாக்குப் பெற்று விருத்தியடைந்து வந்த போது, மீமாம்சம் போன்றவற்றால் ‘ஒரு கடவுள் கோட்பாடு’ தொடர்ந்தும் நிராகரிக்கப்பட இயலாத பலவீனம் ஏற்பட்டமையே, பூர்வ – உத்தர மீமாம்சகர்கள் என்ற வேறுபாட்டை முன்னிறுத்தியபடி அதன் இருப்புத் தொடரப்பட வழிசமைத்திருந்தது.
இயற்கை அம்சங்கள் அனைத்தையும் கடவுளர்களாக வழிபடும் ரிக் வேத நிலைப்பாட்டானது புராதன பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்துக்கு உரியது. நவீன சமூக எழுச்சியில் ‘முற்போக்கான பௌத்தத்தையும் சமணத்தையும் அழித்து மேலோங்கிய பிராமணியம்’ என்ற தாக்குதல் வலுப்பட்டு வந்த சூழலில் இந்த அம்சம் கவனங்கொள்ளப்படாமல் போனது. இந்தியத் தத்துவ வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் தெளிவுற விளக்கிய தேவி பிரசாத் சட்டோபாத்யாய, வைதீக நெறி முழுமையும் கருத்து முதல் வாத நிலைப்பட்டது என்ற எண்ணம் வலுப்பெறுவதற்கு இடமளித்திருந்தார். உண்மையில், வேறெந்தத் தனியொரு தெய்வத்தாலும் இயக்கப்படாமல், இயற்கையின் ஒவ்வொரு அம்சமும் தனித்தனிக் கடவுளர்களாக வழிபடப்படலாயினர்; அவர்கள் மீதான ரிஷிகளின் வசியப் பாடல்களை ஏற்றவர்களாக, அவற்றின்பால் இணக்கம் பெற்று அருள் பாலிப்பதான வழிபாட்டு முறையே ரிக் வேதச் சுலோகங்கள். அவை, வழி வழி வந்தோரால் மந்திரமாகக் கருதப்பட்டு ஓதப்பட்ட நிலையில் கடவுளால் அருளப்பட்ட ஒலி வடிவங்கள் அவை எனும் புராணிக மரபு பிற்காலத்தில் தோற்றம் பெற்றது.
ஆக, அனைத்து விவகாரங்களையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டியங்கும் ஒரு கடவுளை உடையதாக இல்லாத நாத்திக வகைப்பட்ட ஆன்மிகமே பிராமண மதத் தொடக்கத்தில் இருந்து வந்தது. காலப் போக்கில் ஏற்றத் தாழ்வான சமூக நியதி சாத்தியப்பட்டு, அனைத்தின் மீதும் மேலாதிக்கம் புரிவதற்கு அவசியப்பட்ட அதிகார மையமாகிவிட்ட வாழ்வியலின் பிரதிநிதியாக, கடவுளர்கள் மீதும் பேரரசரைப் போல் ஆணை செலுத்தும் சக்தியுடைய தனியொரு கடவுள் அவசியப்பட்ட நிலையில், வேதாந்தச் சிந்தனைக்கு உரிய பிரமம் கண்டு காட்டப்பட்டார். பிரமம் என்பவர் கருத்தியல் நிலைப்பட்டு சூட்சுமமாகத் திகழ, அதன் பிரதிபலிப்பாகவே இந்தப் பிரபஞ்சம் வெளிப்பட்டுக் காணப்படுவதாக முன்வைக்கப்படும் வேதாந்தம் கூட, முற்று முழுதாக கருத்து முதல் வாதச் சிந்தனையாக மட்டும் இருந்திருக்கவில்லை என்பதனைக் கவனம் கொள்வது அவசியம்.
ஆன்மிக நாத்திகத்தின் வேர்
இயற்கை அம்சங்கள் அப்படியே குறியீட்டு வடிவப்படுத்தப்பட்ட கடவுளர்களாகக்கப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்ட ரிக்வேத கால ‘மதத்தின்’ புராதன பொருள் முதல் வாதப் பண்பு கண்டுணரப்படாத சூழலில், பிராமண மதம் தத்துவார்த்த விரிவாக்கத்துடன் வெளிப்படுத்தியிருக்கும் ‘உண்மைப் பொருளான’ ஒரு கடவுள் பற்றிய பிரமக் கோட்பாட்டில், பொருள் முதல் வாதப் பக்கம் ஒன்றும் இருந்திருப்பதனை எப்படிப் புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்? கண்ணெதிரே காண்பன எல்லாம் கடவுள் என்பதற்கு அப்பால் கருத்தைச் செலுத்தி, நுண்மாண் நுழை புலத்துடன் அனைத்துக்கும் மேலான சக்தி ஏதும் இருப்பதற்கான சாத்தியமுள்ளதா என்ற தேடல், ரிக் வேதப் பாடல்களில் இல்லை; அதற்கான வாழ்வியல் தேவைகளும் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை. மேலாதிக்கச் சமூகச் சக்தியொன்று வரலாற்றரங்கில் பிரவேசித்த பின்னர், அந்த ரிக் வேத மரபின் தொடர்ச்சியாகவும் அதன் நிலை மறுப்பாகவும் எழுச்சி பெற்ற வேதாந்தச் சிந்தனை தான் ஆழமான தத்துவார்த்தத் தேடல்களில் மூழ்கியது. வேத ரிஷிகளின் உணர்வில் பிரதிபலித்த நிதர்சன உலகுக்கு உரியதாய் திகழ்ந்து, கண்கண்ட பொருளைக் கடவுளராகத் தரிசிப்பதற்கு அப்பால், அவற்றை இயக்கவல்ல வேறு ‘உட் பொருள்’ பற்றிய தத்துவத் தேடலின் பேறாக, பிரமம் கண்டு காட்டப்பட்டது. வெளியே தனித்து இயங்குகின்ற அந்த உண்மைப் பொருளின் பிரதிபலிப்பே இந்த உலகமும் பிரபஞ்சமும் என்ற சிந்தனையாக இந்த வேதாந்தம் அமையலாயிற்று. கண்ணெதிரே உள்ள ஸ்தூலப் பொருள் ஒவ்வொன்றும் ஒரேயொரு உண்மைத் தன்மை உடைய சூட்சுமப் பொருளான பிரமம் என்பதனைக் காண இயலாத மாயையின் கூட்டுறவில் உருவாகியுள்ள வெறும் தோற்ற மயக்கங்களே எனும் கருத்து முதல்வாத நிலைப்பட்ட வேதாந்த விளக்கத்தை யாக்ஞவல்கியர் முன்வைத்தார். பிராமண மதத்துக்கான இந்த வேதாந்த விளக்கம் பின்னர் இந்து மதப் பரிணமிப்பின் போது சங்கரரால் வளர்த்தெடுக்கப்பட்டது. பிரமத்தின் கூறாக உள்ள ஆன்மாவே உண்மைப் பொருள் எனக் கண்டுணர இடந்தராத மாயை நீங்கப்பெறும் போது, பிரமத்துடன் ஆன்மா இரண்டறக் கலப்பதாகிய அத்வைத நிலை சித்திக்கும் எனக் கூறுவதன் காரணமாக இந்த வேதாந்தச் சிந்தனையானது அத்வைதக் கோட்பாடு என்பதாகவும் அழைக்கப்படுகின்றது.
ஸ்தூலப் பொருளை விடவும் சூட்சுமமான கருத்தியல் வடிவமான ஆன்மாவே உண்மைப் பொருள் என்ற அத்வைத வேதாந்தம் பிராமணர்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது; இந்தச் சிந்தனையை மக்கள் மயப்பட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் செயல்முறை வேதாந்தமாக வளர்த்தெடுத்துப் பிரயோகித்தவர் விவேகானந்தர். இன்றைய நவீன யுகத்தின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு ஊடாகவும் பிரமத்தின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த முயன்றவர் விவேகானந்தர். பிரபஞ்சமானது தனக்குள் இடம் பெறுகின்ற இயக்கத்தில், பழைய அகிலம் சிதறித் தூசாகவும் சக்தியாகவும் காணாமல் போக, வேறோரிடத்தின் தூசுப்படலத்துக்குரிய வேகப்படுகின்ற இயக்க வேகம், புதிய அகிலத்தைத் தோற்றுவிப்பதாக அமையப்பெற்றுள்ளது என்பது இன்றைய ஆய்வியல் வெளிப்பாடு. இந்த விளக்கமானது இந்தியச் சிந்தனை மரபில் வேதாந்தச் சிந்தனைக்கும் முந்தியதாக சாங்கியத்தின் வாயிலாக ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ளமையைக் கூறும் விவேகானந்தர், அத்தகைய இயக்கத்தைத் தொடங்கி வைப்பதாக இந்தப் பிரபஞ்சத்துக்கு வெளியே ஒரு பிரமம் இருந்து செயற்படுவதனைக் காட்டாத காரணத்தால், அத்தகைய பிரமத்தை முன்னிறுத்துகின்ற அத்வைத வேதாந்தம் மேலோங்கி வர நேர்ந்தது என வலியுறுத்துவார்.
சாங்கியம் வெளிப்படுத்தியிருந்த பிரபஞ்சப் படைப்புக் கோட்பாட்டை நவீன அறிவியல் அடிப்படைகளுடனும் அத்வைதத்துடனும் இணைத்து வெளிப்படுத்திய விவேகானந்தரின் சிறு பிரசுரத்தை, பாரதி தமிழாக்கித் தந்துள்ளார். தன்னையும் ஒரு அத்வைதியாகக் கூறிக்கொள்பவர் பாரதி; இருப்பினும், விவேகானந்தரின் கட்டுரையை முழுமையாகச் சொல்லி முடித்த பின்னர் “வெளியே இருந்து ஒரு பிரமம் இயங்குவதாக விவேகானந்தர் கூறுவதில் தவறுள்ளது; சாங்கியம் வெளிப்படுத்தியவாறு உள்ளியங்கும் ஆற்றலுடனே தான் பிரபஞ்ச இயக்கம் இடம் பெறுகிறது” என்ற தனது கருத்துரையுடனேயே அந்தத் தமிழாக்கப்பட்ட பிரசுரத்தை நிறைவு செய்திருந்தார் பாரதி.
யாக்ஞவல்கியர் தத்துவத் தெளிவுடன் முன்னிறுத்தி, சங்கரரால் வளர்த்தெடுக்கப்பட்ட கருத்து முதல் வாத நிலைப்பட்ட அத்வைதக் கோட்பாட்டை நவீன யுகத்துக்கு அமைவாக விவேகானந்தர் விருத்தி செய்து வழங்கியிருந்தார். அந்த வகையிலான ‘வெளியே இருந்து இயங்கும் பிரம்மத்தின் ஆற்றலை’ மறுத்த பின்னரும், பாரதி எப்படி அத்வைத வேதாந்தியாகத் தன்னை இனங்காட்ட இயலுமாக இருந்தது?
யாக்ஞவல்கியரின் சம காலத்தில் இன்னொரு வேதாந்தப் பள்ளி, முந்திய வேதகால ஆன்மிக நாத்திக நிலைப்பாட்டின் தொடர்ச்சியாக, வெளியே இருந்து உலகை இயக்கும் ஒரு கடவுளுக்கான (பிரமத்தின்) இருப்பை நிராகரிக்கும் சிந்தனை வெளிப்பாட்டை வழங்கியுள்ளது. அதற்குரிய ஆளுமையாக உத்தாலகர் திகழ்கிறார். வேதப் படிப்பில் நிறைவு கண்ட திருப்தியை வெளிப்படுத்திய தனது மகனிடம், பிரமம் பற்றி அறியாத போது கற்றல் பூரணப்படவில்லை என்பதனைக் கூறுவார் உத்தாலகர்; அவரது மகனான சுவேத கேது பிரமம் பற்றி அறிய ஆர்வப்பட்ட போது, ஒரு பரிசோதனை வாயிலாக விளக்குவார். மாலையில் உப்புக்கட்டியை நீருள்ள பானை ஒன்றில் இடும்படி பணித்து, காலையில் அதனை எடுத்து வரச் சொல்வார்; உப்புக்கட்டி இருக்கவில்லை என்ற போது மேலே – கீழே – பக்கப்பாடுகளில் உள்ள நீரைச் சுவைக்கச் சொல்வார். எங்கும் உப்புச் சுவையை உணர இயலுமாக இருந்ததை உணர்த்தி, பிரமமும் அதுபோலவே தனது விரிவாக்கமான இந்தப் பிரபஞ்சத்தில் கலந்துள்ளது என்பார். கண்ணுக்குத் தெரியாத பிரமம் எப்படி இத்தனை பெரிய விஸ்தீரணமாக விரிவாக்கமடைய முடிந்தது என்ற கேள்வியை சுவேத கேது எழுப்பிய போது, மிகச் சிறிய ஆலம்பழத்திலுள்ள சிறிய விதையின் கண்னுக்குத் தெரியாத கருவில் இருந்து பிரமாண்டமான ஆலமர விருட்சம் வர இயலுமாக உள்ளமையை எடுத்துக் காட்டுவார் உத்தாலகர்.
இப் பிரபஞ்சத்துக்கே உரியதான பொருளாக இருப்பதோடு பொருள்களிடையே தாக்குறவு ஏற்பட்டு இயங்கும் ஆற்றலாகவும் பிரமம் இருப்பைப் பெற்றுள்ளது எனும் இந்த விளக்கம் மிகுந்த கவனிப்புக்கு உரியது. அந்தவகையில், பொருள் முதல் வாத நிலைப்பட்ட உத்தாலகரின் இந்தப் பிரமக் கோட்பாட்டின் விருத்தியை நவீன யுகத்துக்கு உரியதாக பாரதி வெளிப்படுத்தினார். அதேவேளை பாரதியின் ஆன்மிக நாத்திகம் இடையிட்டு வளர்ந்திருந்த கருத்து முதல் வாதத்தை நிலைமறுத்து (முந்திய பொருள் முதல் வாதச் சிந்தனை முறை நிலைமறுக்கப்பட்டு வெளிப்பட்டதனை நிலைமறுத்து) முன்வைக்கப்பட்டதாகும்; மட்டுமன்றி, முன்னரே அதற்கான வேர் இருந்துள்ளது என்பதும் கவனிப்புக்கு உரியது. கடவுள் மறுப்பான நாத்திகமாக இல்லாமல் ஆன்மிக நாத்திகமாக வலியுறுத்த ஏற்ற தளம் பாரதியின் மெய்ஞானத்துக்கு இவ்வகையில் வாய்த்திருந்தது.
நாத்திக ஆன்மீக வாதமும் நாத்திகவாதமும்
சிறிய அளவிலான சொத்துடைமை (நிலம், பசுநிரை என்பன) கிடைத்ததன் வாயிலாக உழைப்பிலிருந்து விலக்குப் பெற்றோரது சிந்தனையின் கருத்துருவாக வடிவம் பெற்ற ‘தனிப்பெரும் கடவுள்’ பற்றிய சிந்தனை பிரமக் கோட்பாட்டை முன்னிறுத்தியதான அதே கி.மு 6 ஆம் நூற்றாண்டில், நிலவுடைமையாளருக்கான வேத மரபை நிராகரித்தவாறு வணிக மேலாதிக்கக் கருத்தியலான பௌத்தமும் சமணமும் புத்தெழுச்சியுடன் மேலெழுந்து வந்தன. அன்று தொட்டு இன்றுவரை உலக மதங்களில் ஒன்றாக ஏற்கப்பட்ட பௌத்தமும், கடவுள் ஏற்பு இல்லாத ஆன்மீக நிலைப்பாட்டுக்கு உரிய ஒரு மதம் எனும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. சமணம், ஆசிவகம் போன்ற ஏனைய வேத மறுப்பு (அவைதிக) மதங்களும் கூட வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த முன்னோடிகளைக் கடவுளாகக் கொள்வனவே அன்றி தனிப்பெரும் சக்தியாக ஒரு தெய்வக் கோட்பாடுகளை முன்னிறுத்தியனவல்ல.
நிலப்பிரபுத்துவ எழுச்சிக்கு உரிய கி.பி 4 ஆம் நூற்றாண்டின் பின்னர், மேலான சக்தியாகப் பிரமம் பார்க்கப்பட்டதாகிய அதே வடிவில் யாக்ஞவல்கியரின் கண்ணோட்டம் இருந்திருக்கவில்லை; அப்போது தான் பல கடவுளரில் இருந்து வேறுபட்ட, தனிப்பெரும் சக்தியாக ஆரம்ப நிலைக்கு உரிய பிரமம் கண்டுகாட்டப்படுவதாக இருந்தது. நிலப்பிரபுத்துவம் வலுவுடன் மேலாதிக்கம் பெற்றுவிட்ட கி.பி 8 ஆம் நூற்றாண்டுகளில் பிரமத்துக்கான தத்துவ விளக்கங்களை மேவியதாக விஷ்ணு – சக்தி – சிவன் எனும் பரம்பொருள்களில் ஒன்றின் மேலாதிக்கம் ஒவ்வொரு சமூகத் தளங்களிலும் அதிகார உச்சத்தை எட்டியிருந்தது.
நிலப்பிரபுத்துவத்தை வலுப்படுத்தும் பிரமாணிய அதிகாரத்தைத் தகர்த்து ஜனநாயகப் பண்புடன் எங்கும் வியாபித்த, அனைவரையும் கடவுளின் கூறாகக் காணும் விவேகானந்தரின் செயல்முறை வேதாந்தத்தின் பிரமம், இந்து விடுதலை நெறிக்கு உரிய பரிணமிப்பைப் பெற்றிருந்தது. ஐரோப்பிய வணிகர்களுக்கு உரிய வைசியர்களது ஆட்சியைத் தகர்த்து, தேச விடுதலையூடாக சூத்திரர்களது அதிகாரம் ஏற்படும் வகையில், இந்து நோக்கை இவ் வகையில் திசைமுகப்படுத்துகிறவராக விவேகானந்தர் வெளிப்பட்டார். மேலான ஒரு தெய்வத்தின் அனுக்கிரகம் முன்னிறுத்தப்படுகிற வகையில் அவர் ஆன்மீகவாதத்தை தேசிய உணர்வுக்கு உதவும் கருவியாக ஆக்கிக்கொள்கிறார்.
எமக்கான சிந்தனை முறைமைக்கு விவேகானந்தர் வேதாந்தத்தை வலியுறுத்துவதனை எடுத்துரைக்கும் பாரதி, அதனையும் கடந்து (அதற்கு முன்னர் நிலவிய) ‘பச்சை வேதத்தை’ ஏற்றாக வேண்டும் என எடுத்துரைப்பார். வெளியே உள்ள ஒரு பிரமத்தின் கூறு அனைவருள்ளும் உறைந்திருப்பதாக வேதாந்தம் கூறுகிற போது, ஒருவகைச் சமத்துவம் ஊடாடிய போதிலும், வெளியே வல்லமை பொருந்தியதாக பிரமத்தின் இருப்புக் காணப்படுகின்றது. அவ்வகையில் மேலாதிக்கம் புரியும் ஒரு கடவுள் எங்கோ இருப்பதான கருத்தை மறுத்து, அனைத்துமே கடவுளின் கூறுகளே என்ற வேத காலச் சிந்தனையே பூரண சமத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமையும் என்பது பாரதியின் மதம். அந்த வகையில் பாரதி பொதுவுடமைச் சமூகத்தை வெற்றிகொள்ளும் புதிய பண்பாட்டு இயக்கத்தின் முன்னோடி ஆகிறார்.
தேசிய விடுதலை, சமத்துவத்தை வென்றெடுத்தல் எனும் இரண்டு குறிக்கோள்களின் சார்பாக அமைந்தனவாகிய வேதாந்தம், பச்சை வேதம் என்பன பேசுபொருளாக மேலெழுந்து வந்ததைப் போன்று சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் வாயிலாக பௌத்தமும் நாத்திகவாதமும் முன்னிலைக்கு உரியனவாகிருந்தன என்பதை அறிவோம். இவ்வகையில் சமூக நீதியின் பொருட்டு சாதிகளிடையே சமத்துவத்தை வென்றெடுப்பதற்கு முயற்சித்த முன்னோடியாகிய அயோத்திதாசர் திகழ்ந்தார்; தமிழ்ச் சமூகத்தின் முதல் மதமாகிய ஆசிவகத்தையும் அவர் பௌத்தமெனவே கருதி இயங்கினார் என்பதனை முந்திய இயல்களில் பேசுபொருள் ஆக்கியிருந்தோம். அவர் தமிழ் மக்களின் முதல் மதமாக பௌத்தத்தை முன்னிறுத்திய போதிலும், முன்னதாக இயங்கி வந்த ஆசிவகத்திடம் காணப்பட்ட பூரண சமத்துவப் பண்பு பின்னர் அதனை உள்வாங்கி மேலெழுந்த பௌத்தத்திடம் இருக்கவில்லை.
புத்தரின் காலத்திலேயே சமத்துவக் கருத்தியலுடன் ஆசிவகம் தனது பரப்புரையை முன்னிறுத்திப் பரப்புரை செய்த போதிலும், அதனை நிராகரித்தவாறு வணிகச் சாதியினருக்கு ஏற்புடையதான மேலாதிக்கவாதக் கருத்தியலை வரித்துக் கொண்டு கருத்துரைத்து இயங்குபவராகவே புத்தர் இருந்துள்ளார். அத்தைகய மேலாதிக்கவாத நிலைப்பாட்டுக்கு உரியதான புத்தரது ஆன்மிக வகைமையே பின்னர் அவரையே கடவுளாக வழிபடும் நிலப்பிரபுத்துவச் சமூக சக்திக்கான முழு முதல் பரம்பொருளாகப் பரிணமிப்பதற்கு இடமளித்திருந்தது. நவீன சமூகத்தில் புத்தரின் அடிப்படைகளுக்குத் திரும்பும் நவ பௌத்த முன்னெடுப்பை மேற்கொண்ட அம்பேத்கரை முன்னிறுத்தி அடுத்த இயலில் இவை குறித்து மேலும் பேச இயலும். புத்தரது நிலைப்பாடு கடவுளை நிராகரிப்பதாக அமைந்த போதிலும், அவரது நாத்திக ஆன்மிகமானது ஆன்மீகவாதத்தை மேலெழச் செய்து கடவுள் ஏற்புக்கும் இடமேற்படுத்திக் கொடுப்பதாகவே அமைந்திருந்தது என்பதை இங்கு கவனங் கொள்வோம்.
இத்தகைய இடைவெளி காணப்படுவதன் காரணத்தை முன்னிறுத்தியே பூரணமான நாத்திகவாதம் மட்டுமே சமூக நீதியை வெற்றிகொள்ள வழிவகுக்கும் ஒரேயொரு மார்க்கம் என்று பெரியார் கருத்துரைக்கும் இயக்கத்தை முன்னெடுத்தார். சென்ற நூற்றாண்டின் முற்பதாம் ஆண்டுகளில் பாரதியின் ஆன்மிக நாத்திகம் காணாப் பொருள் ஆகிவிட, நாத்திகவாதமும் ஆன்மிகவாதமும் முன்னிலைப்பட்டு சமூக – அரசியல் இயக்கத்தில் மேலாண்மை பெற்று வளர்ச்சியடைந்து வந்த செல்நெறி பற்றித் தொடர்ந்து விவாதிப்போம்.
தொடரும்.