மத நீக்க ஆன்மீக எழுச்சி
Arts
21 நிமிட வாசிப்பு

மத நீக்க ஆன்மீக எழுச்சி

May 2, 2024 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம் மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

மத நாயகம் இயக்கி வந்த மனித சமூக வரலாற்றில் ஜனநாயகத்தினுடைய இயங்காற்றல் வேகம் கொள்ளத் தொடங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டை இப்போது அலச வேண்டியவர்களாக இருக்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைக்கூறில் (1789) ஏற்பட்டிருந்த பிரான்சியப் புரட்சி நிலப்பிரபுத்துவ முடியாட்சியைத் தகர்த்ததைத் தொடர்ந்து முதலாளித்துவ ஜனநாயக வாழ்முறை விரிவாக்கம் பெற்று வளர்ந்தது. அரை நுற்றாண்டுப் போராட்டங்கள் ஊடாகவே முதலாளித்துவ ஜனநாயக அரசு முறைமை நிலைபேறான உறுதியினைப் பிரான்சிலும் எட்ட இயலுமாயிற்று. அவ்வாறு எட்டிய போது பாட்டாளி வர்க்கம் தனக்கான அமைப்பாக்கத்தை (கம்யூனிஸ்ட் கட்சியை) ஐரோப்பிய அளவில் வடிவப்படுத்தியவாறு ஏற்றத் தாழ்வான வாழ்வியலை ஒழித்துக் கட்டுவதன் வாயிலாகச் சமத்துவத்தை வென்றெடுப்பதற்கு உரிய வர்க்கப் போராட்டக் களத்தைத் திறந்ததுமன்றி அதனை முனைப்பாக்கவும் தொடங்கிவிட்டிருந்தது.

அன்றைய வர்க்கப் போராட்டக் கூர்முனையாகத் திகழ்ந்த பிரான்சில் சோசலிச நாட்டம் மேலோங்கிய சமகாலத்தில் திணை அரசியல் முறைமையை வெளிப்படுத்தும் செயற்களமாக நீண்ட வரலாற்றுத் தடத்தில் இயங்கிய தமிழகம் எவ்வகை மாற்றங்களை அரங்கேற்றியது? எமக்கான திணை அரசியல் சமூகத்திலும், வர்க்க அரசியல் முனைப்பாகச் செயலாற்றிய ஐரோப்பாவிலும் எவ்வகை வகிபாகத்தை மதம் பெற்றிருந்தது என்பதனை விளக்கம் கொள்வதன் வாயிலாக இதனைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்தின் மதமாக இயங்கிய கிறிஸ்தவம் தனக்கான திருச்சபை மூலமாக அரசு நிர்வாகத்தைத் தனது கண்காணிப்புக்குள்ளும் கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொண்டது. எந்தவொரு அரச குலம் ஐரோப்பிய நாடொன்றை ஆட்சி செய்வதாயினும் திருச்சபையின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்க வேண்டும். அந்த நாடு அரசால் மட்டுமன்றி திருச்சபை ஊடாக மதத்தாலும் ஆளப்படுவதாக இருந்தது. சமூக மனசாட்சியாக அமையவல்ல கல்வி, இலக்கியம், கலை என்பனவும் மதத்தைச் சார்ந்தே இயங்க அனுமதிக்கப்பட்டன. அறிவியல் (விஞ்ஞானத்) தேடல் முற்றாகத் தடுக்கப்பட்டிருந்தது. நிலப்பிரபுத்துவ அரசைத் தகர்த்து மக்களால் மக்கள் ஆளப்படும் அரசாக அமையும் ஜனநாயகக் குடியரசுக் கட்டமைப்பின் தேவை எழுச்சி பெற்றபோது அரசு, கல்வி, பண்பாட்டுச் செயலொங்குகள் என்பன யாவும் மதச் சார்பற்றதாக இயங்க வேண்டும் என்ற அறிவுப் புரட்சியுடன் இணைந்ததாக அந்த மாற்றம் அங்கே நடந்தேற வேண்டியிருந்தது!

அடிமைகளால் போற்றப்பட்ட ஜேசு கிறிஸ்துவை நிலப்பிரத்துவத்துக்கானதாக மடை மாற்றியிருந்தது திருச்சபை. பண்ணைக்குச் சொந்தக்காரனான எசமானருடன் அவரது நிலத்துடன் பிணைக்கப்பட்டு பணியாற்றும் பண்ணையடிமையாகிய விவசாயியைத் திருச்சபையின் உள்ளூர் அமைப்பில் ஒன்றிணைப்பதன் வாயிலாக உழைப்பு அபகரிப்புக்குரிய செயலொழுங்குகளைக் ஐரோப்பாவில் கண்காணித்து மேற்கொள்ள வேண்டியிருந்தது. முன்னதாக இடம்பெற்ற கிரேக்க-உரோம் அடிமைப் புரட்சிகள் காரணமாக அந்த அடிமைகள் பின்பற்றிய மதத்தைக் கையேற்று திருச்சபை ஒன்றின் வாயிலாக மாற்றிப் புதுக்கிய வடிவில் ஆன்ம ஒருமையைப் பரப்புரை செய்ய வேண்டியிருந்தது. இந்த மண்ணிலே நிலப்பிரபுக்கள் சுகபோகங்களை அனுபவித்த போதிலும் விசுவாசமிக்க கிறிஸ்தவப் பண்ணையடிமைக்கு நித்திய சுவர்க்கம் மரணத்தின் பின் கிடைக்கும் என்ற ஆறுதலை வழங்குகின்ற போதனையைத் திருச்சபை முன்வைத்தது.

மதத்தின் போலிப் பரப்புரையாக அமைந்த ‘நித்திய சுவர்க்கம்’ பற்றிய மயக்கத்தைத் தகர்த்து முதலாளித்துவப் புரட்சி வாயிலாக நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவில் மண்ணுடன் இறுகப் பிணைக்கப்பட்டிருந்த விவசாயி தனது உற்பத்தி சக்தியைத் சுதந்திரமாக விலைபேச வல்லமை படைத்த பாட்டாளி வர்க்கமாகப் பரிணமிக்க இடமேற்படுத்தியாக வேண்டிய அவசியம் இருந்தது. அதன் காரணமாகக் கல்வி, அரசு என்பன மதசார்பற்று இயங்குவனவாக அமைய வகை செய்தாக வேண்டும் என்ற கோரிக்கையை எழுச்சி பெற்று வந்த முதலாளித்துவம் முன்னிறுத்தியது!

இன மரபுக் குழுக்கள் பிளவுபட்டு வர்க்கங்களாக சிதறிய ஐரோப்பியச் சமூகத்தில் எதிரெதிர் வர்க்கங்களை ஒரே மத நிறுவனத்துக்குள் ஒன்றிணைத்து ஆன்மீக ஒருங்கிணைப்பை முன்னெடுத்தாக வேண்டிய அவசியம் அங்கே இருந்தது. அத்தகைய ஒரு தேவை சாதியச் சமூகத்துக்கு இருந்ததில்லை; மட்டுமன்றி, கடின உடலுழைப்புக்குரிய சாதிப் பிரிவினரைத் தமது மத நிறுவனத்தினுள் அனுமதிக்க மறுத்துத் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் அளவில் விலகலைப் பேணுகின்ற நடைமுறைதான் இங்கு இருந்தது. அடிமை வர்க்கமாக மாற்றம் பெற்ற மக்கள் பிரிவினர் முன்னதாகத் தமது இன மரபுக் குழு வாழ்வில் பின்பற்றி வந்த பண்பாட்டையும் அதற்குரியதாக இருந்த மத அனுஷ்டானங்களையும் முற்றாகக் கைவிட வேண்டியவர்களாக ஐரோப்பாவில் மாற்றப்பட்டிருந்தனர். அடிமை வாழ்வு நீடித்த நிலையில் அவர்களுக்கானதாக அமைந்த கிறிஸ்தவத்தையே பின்னர் நிலப்பிரபுத்துவச் சுரண்டலின் அவசியம் காரணமாகப் ‘பொது மதமாக’ ஆக்கித் தமது வர்க்க நலனை முன்னெடுக்கும் வகையில் உழைக்கும் மக்களை வசப்படுத்த வேண்டியிருந்தது அங்கே. இன மரபுக் குழுக்கள் ஒவ்வொன்றும் தமக்கான பூர்வமத பண்பாட்டையும் குழுக்கள் சாதிகளாக மாற்றம் பெற்ற எமது சாதியச் சமூக வாழ்முறையில் சாதிகள் ஒவ்வொன்றும் தத்தமக்கான சமயங்களைக் கொண்டிருக்க அனுமதிக்கப்பட்டன (சாதிச் சமயங்கள் ஒவ்வொன்றிலும் போல மேலாதிக்கப் பரம்பொருளின் வரலாற்றுக்கும் சனாதனப் பழைமைப் பண்பைக் கூறிய படியே வரலாற்றுப் பணிக்கான கடமைப் பொறுப்புக்களும் வலியுறுத்தப்படும்). பலவேறு சாதிச் சமயங்களும் நிலப்பிரபுத்துவ சாதிய வர்க்கச் சமயத்துக்கு உரியவரான பரம்பொருளுக்கு (முழு முதல் கடவுளுக்கு) தமது சாதிக் கடவுள் கட்டுப்பட்டவர் என்ற மேலாதிக்கச் சமூக நிலவரத்தை அனுசரித்தாக வேண்டியிருந்தது. அதனைக் கண்காணித்து ஒழுங்கமைக்கும் பொறுப்பு அரசுக்கு உரியது. அதற்குமேல் ஆதிக்கச் சாதிச் சமயம் மட்டுமே தன்னுடன் இணைந்து இயங்குவதாக அதிகாரப் பங்கீட்டை மதத்துடன் அரசு இங்கே ஏற்படுத்திக் கொண்டிருக்கவில்லை. பல்வேறு சாதிச் சமயங்கள் இயங்குவதற்கு அவசியப்பட்ட இத்தகைய மதச்சார்பின்மையின் நீடிப்பாக புறச் சமயங்களோ, புறப்புறச் சமயங்களோ இங்கே இயங்குவதனையும் சாதியச் சமூகத்தின் அரசு அங்கீகரிப்பதில் தடை ஏதும் இருக்கவில்லை.

vallalar

அந்தவகையில், எமக்கான முதலாளித்துவ ஜனநாயக உணர்வெழுச்சி ஏற்படத்தக்க சமூக மாற்றக் காலகட்டத்தில் மதச் சார்பின்மை பற்றிப் பேசும் அவசியம் இங்கே எழவில்லை. சுரண்டும் சாதிய வர்க்க மேலாதிக்கத்துக்கு உரிய பரம்பொருளுக்கு அனைத்துத் தரப்பாரும் அடிபணிந்தாக வேண்டும் என்பதனை முறியடிப்பதன் வாயிலாக உழைக்கும் மக்களின் வழிபாட்டுக்குரிய கடவுளர்களையும் சமத்துவ ஊடாட்டத்துக்கும்உரிய மதிப்புணர்வுடன் போற்றும் சமூக நியதியைச் சாதிப்பதே எமக்கான ஜனநாயகப் புரட்சியில் மதத் தளத்துக்கான கடமையாக அமைய இயலும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதற்கான வழித்தடத்தை ஏற்படுத்தும் முதல் பணித் தொடக்கத்துக்குரிய வகிபாகத்தைக் கையேற்று முனைப்புடன் செயற்பட்ட பேராளுமையாக வள்ளலார் (இராமலிங்க அடிகளார் – 5.10.1823 – 30.1.1874) வெளிப்பட்டார்!

சிறை மீட்கப்பட்ட தேவாரப் படிகளும் தில்லை வாழ் அந்தணர்களும்

சமயங்களின் சமயமாக அனைத்துச் சாதிகளது ஐதீகங்களையும் உள்வாங்கி ஒரு முழு முதல் கடவுளை மேலாதிக்கத்துக்கு உரியவராக ஏற்க வழி செய்த வைதிக நெறி (சனாதன தர்மம், பின்னர் பொது வழக்காகிய இந்து மதம்) பத்தொன்பதாம் நூற்றாண்டில் பண்பு மாற்றத்தைப் பெற வேண்டியேற்பட்டது. கி பி 4 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே பிராமண மதமானது ஏனைய இனமரபுக் குழுக்களுக்குரிய மதங்களையும் உள்வாங்கி ‘ஒரு முழு முதல் கடவுளை’ முன்னிறுத்தும் நிலப் பிரபுத்துவ அமைப்புக்கான சமயமாக இந்து மதத்தை வடிவப்படுத்தியிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ அமைப்பின் மீது அதிர்வை ஏற்படுத்திக் காலனித்துவ ஆட்சியாளர்கள் வாயிலாக முதலாளித்துவ வாழ்முறையின் அறிமுகம் தலையெடுத்ததைத் தொடர்ந்து மேலாதிக்கப் பரம்பொருள் பெற்றிருந்த பீடமும் சலனப்பட வேண்டியதாயிற்று.

sangakar

வட இந்தியாவில் இந்த மாற்றம் அங்கு மேலாதிக்கம் பெற்றிருந்த பிரமக் கோட்பாட்டில் ஜனநாயகப் பண்பை மேலோங்கச் செய்வதாக அமைந்திருந்தது. பக்திப் பேரியக்கம் தமிழகத்தில் வீறுகொள்ளத் தொடங்கிய காலத்தின் கருத்தியல் வீச்சை உள்வாங்கியபடி இங்கிருந்து (இன்று கேரளத்துக்கு உட்பட்டதாயுள்ள காலடி எனும் கிராமத்திலிருந்து) வட இந்தியா சென்று பிரமத்துக்கான நிலப்பிரபுத்துவக் காலகட்டக் கருதியலை வடிவப்படுத்திப் பரப்புரை செய்தவர் சங்கரர். இவரே ஒவ்வொரு பிராந்தியங்களுக்குமுரிய முழு முதல் கடவுளர்களான விஷ்ணு, சிவன், சக்தி, முருகன், கணபதி, சூரியன் ஆகியோருக்குரிய அறுவகைச் சமயங்களையும் இணைத்த ‘சண்மார்க்கம் – வைதிக சமயப் பொதுப்படுத்தலை மேற்கொண்டவர். அதன் வாயிலாக எந்தப் பகுதிக்குமுரிய வைதிக நெறியானது வேதத்தின் சனாதனப் புனிதத்தை மதித்தவாறே தனக்கான தனித்துவ வழித்தடத்தை உறுதிப்படுத்த வகை செய்யும் முறைமைக்கான கோட்பாட்டுத் தளத்தைத் தொடக்கி வைத்தார்.

பிரபஞ்சம் முழுமையும் பிரமத்தின் தோற்றம் எனக் கூறிய அதே வேளை நிலவுடைமையாளர்களது மேலாதிக்கத்தை வலியுறுத்தும் வகையில் பிராமணரே பிரமத்தைத் தம்முள் உணர்ந்து அதனுடன் அத்வைதக் கலப்படையும் பேறைப் பெறுவர் எனவும் வலியுறுத்தியிருந்தார் சங்கரர். முதலாளித்துவ ஜனநாயகச் சிந்தனைக்குரியதாக பிரமக் கோட்பாட்டை வடிவப்படுத்தும் தொடக்குனராக ராஜாராம் மோகன் ராய் (1772-1833) திகழ்ந்தார். அத்வைதக் கோட்பாட்டின் பிரகாரம் பிராமணர் மட்டுமன்றி அனைவரும் பிரமத்துடன் அத்வைதம் ஆகும் முழுமைப்பட்ட ஜனநாயக மயப்படலுக்குரிய செயல்முறை வேதாந்தத்தை விவேகானந்தர் (1863-1902) முன்வைத்தார். இயற்கை அம்சங்கள் அனைத்தும் கடவுளர்களென வழிபடப்பட்ட புராதன பொதுவுடமைச் சமூகச் சிந்தனை ஆரம்பகால ரிக் வேதப்பாடல்களில் வெளிப்பட்டிருந்தது. அதனை நிலை மறுத்து பிரபஞ்சத்துக்கு அப்பாலான பிரமம் பற்றி ஏற்றத்தாழ்வான வாழ்முறை தொடங்கிய போது வேதாந்தக் கோட்பாடு மேற்கிளம்பி வந்தது. உழைப்புடன் இணைந்த செயல்முறை வேதாந்தத்தை முன்வைத்த விவேகானந்தரும் இயற்கைக்கு அப்பாலான பிரமம் பற்றிய கருத்தைக் கொண்டிருந்தார். இயற்கையம்சங்கள் மட்டுமே பிரமம் எனப் ‘பச்சை வேதத்துக்கு’ மீளச் செல்ல வேண்டும் என வலியுறுத்துகிறவராக மகாகவி பாரதி நிலைமறுப்பின் நிலைமறுப்பை முழு நிறைவாக்கினார். அவை குறித்துப் பின்னால் தனியொரு இயலில் விரிவாகப் பேச அவசியமுள்ளது.

rajaram

கடவுள் சிந்தனையில் ஏற்பட்டு வந்த விருத்திகள் ஒவ்வொன்றும் சமூக அமைப்பு மாற்றங்களுடன் தொடர்புடையன. மக்களுடைய வாழ்வாதார விருத்திகளுக்கு வழக்கிலுள்ள பொருளுற்பத்தி முறைமை முட்டுக்கட்டை இடும் போது அதனைத் தகர்த்தவாறு புதிய பொருளுற்பத்தி உறவு மேலெழுவதன் ஊடாகவே மனித குல வரலாறு வளர்ச்சி பெற்று வந்தது. அவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்திய புதிய சமூக அமைப்பு ஆரம்பத்தில் வளப்பெருக்கங்களை விருத்தியுறச் செய்யும் வகையில் அதற்கு ஆதரவாக மக்கள் மனங்களை வடிவப்படுத்திய கருத்தியல்கள் முற்போக்குத் தன்மை உடையனவாகத் திகழும். கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதலாக வடிவமைப்பைப் பெற்று வளர்ந்த நிலப்பிரபுத்துவம் மூன்று நூற்றாண்டுகளில் உறுதி படைத்த கட்டமைப்பாக நிலையூன்றியது. அந்த வளர்ச்சி நிலையில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுக்குப் பொருத்தமாக பிரமக் கோட்பாட்டை வடிவமைத்த சங்கரரின் கருத்தியல் அன்றைய வரலாற்றுத் தேவையை நிறைவு செய்த முற்போக்குப் பாத்திரம் உடையது.

நிலத்துடன் கட்டுண்டு உழைப்பாளர்கள் பணி செய்தாக வேண்டிய பொருளுற்பத்தி முறையில் ஆதிக்கத் தரப்பினர் மட்டும் பிரமத்துடன் ஐக்கியமுற இயலும் என்பது பொருத்தமுடையதாக இருந்தது. உற்பத்தி சக்தியை சுதந்திரமாக விரும்பிய முதலாளிக்கு விலை பேசக் கூடிய வாழ் முறைக்குத் தடையேற்படுத்தும் சிந்தனை அது. பிற்போக்கான அந்தக் கருத்தியலைத் தகர்த்து இந்து விடுதலை நெறிக் கோட்பாட்டுக்கு உரிய செயல்முறை வேதாந்தமாக விவேகானந்தர் முன்வைத்த போது பண்ணையடிமைத் தனத்தையும் காலனிய ஒடுக்குமுறையையும் தகர்க்கும் கருத்தியிலாக மாற்றியமைத்தார்.

temple

உழைக்கும் மக்களின் நலனை முன்னிறுத்தித் தமிழகத்தில் கடவுள் கோட்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய வள்ளலார் வேறொரு தளத்துக்கு உரியதாக வளர்த்தெடுத்தார். அவர் தனக்கான கருத்தியலைப் பெறத் தொடங்கிய ஆரம்ப காலம் சிதம்பரத்தில் இயக்கம் கொண்டிருந்தது. சோழப் பேரரசர்கள் தமக்கான முடிசூடலைச் சிதம்பர நடராசர் ஆலயப் பூசகர்களான தில்லைவாழ் அந்தணர்கள் வாயிலாகவே மேற்கொண்டனர். எட்டாம் நூற்றாண்டு வரை தன்னை நிலை நிறுத்துவதற்காகப் போராடிய படி முன்னேறிய நிலப்பிரபுத்துவம் அடுத்த நூற்றாண்டிலிருந்து சமூகத்தின் மீது மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் ஒடுக்குமுறைச் சக்தியாக வெளிப்பட்டது. அத்தகைய அதியுச்ச மேலாதிக்கத்தின் கொடுமுடியாகத் திகழ்ந்த ராஜராஜ சோழன் தில்லைவாழ் அந்தணர்களின் அதி புனிதக் கற்பிதங்களுக்கு வழிசமைத்துக் கொடுப்பவராக இருந்தார். வேத – வேதாந்தத்தை முன்னுறுத்தி ‘தமிழ் வேதமான’ தேவார – திருவாசக ஓலைச் சுவடிகளை அறையொன்றில் பூட்டி வைத்து கறையானுக்கு இரையாக்கி அழித்துவிடும் நோக்கம் தில்லைவாழ் அந்தணர்களுக்கு இருந்தது. ஒரு அரசாணை மூலமாக அவற்றை மீட்டெடுக்கக் கூடிய அதிகாரத்தில் இருந்த பேரரசன், தில்லைவாழ் அந்தணர்களது கூற்றுப் பிரகாரம் தேவார – திருவாசக முதலிகள் நேரில் வந்தால் மட்டுமே ஓலைச் சுவடிகள் உள்ள அறையைத் திறக்க இயலும் என்ற நிபந்தனையை ஏற்கிறார். நாயன்மார்களது சிலைகளுடன் சென்ற ராஜராஜ சோழன், ‘இறைவனின் சொரூபங்களில் கடவுள் தரிசனம் கிட்டுமென்றால் இந்தச் சிலைகளும் அவர்கள் நேரில் வந்ததை குறிக்கத் தக்கதே’ என்ற தர்க்கத்தை முன்னிறுத்தியே தேவார – திருவாசகச் சுவடிகளைச் சிறை மீட்க இயலுமாயிற்று!

சமூகத் தளத்தில் சமரச சன்மார்க்கம்

அரசின் ஆணைக்கும் மேலாக தில்லைவாழ் அந்தணர்கள் முன்னிறுத்திய மத அதிகாரத்தை ராஜராஜ சோழன் மதித்ததன் வாயிலாக முழுச் சமூகமும் சிவனின் மேலாதிக்கத்துக்கும் பணிந்தாக வேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்திருந்தார். மேலாதிக்க அதியுச்சத்தில் ஒடுக்குமுறைக் கருவியாக இருந்தபோதிலும் கடல்கடந்த தூர தேசங்களில் தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டும் ஆளுமையுடன் செயற்பட்ட காலம் அது. மேன்மை கொள் சைவ நீதி அகிலமெங்கும் கோலோச்சும் என்ற கருத்து சோழப் பேரரசர்களது ஆக்கிரமிப்பு யுத்தங்களால் நிதர்சனமாக நிலை நாட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

தமிழ் நிலப்பிரபுத்துவ சக்தியானது ஆற்றல் அனைத்தையும் இழந்து பண்பாட்டுச் சிதைவுகளுக்கும் ஆளாகி வந்த சில நூற்றாண்டுகள் கடந்த நிலைக்குரிய பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிலைகளால் எதனையும் சிறை மீட்க இயலாது என்பது தெளிவு. அந்தக் கதைகள் ஊடாடிய போதிலும், கலிமுற்றி நாசம் பெருகிய காலத்தில் அத்தகைய அற்புதங்கள் சாத்தியமில்லை என்ற ‘நம்பிக்கை’ மேலோங்கி வந்தன. இத்தகைய அவ நம்பிக்கை பெருகும் சூழலில் மதத்தின் வகிபாகம் எவ்வாறு இயங்க இயலும்? நிலப்பிரபுத்துவத்தின் மூன்று கட்டங்கள் போலவே முதலாளித்துவமும் தனக்கான தொடக்க காலம் – அதியுச்ச அதிகார நிலை நிறுத்தல் – சிதைவுக் காலம் எனும் மூன்று கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்னர் (இருபதாம் நூற்றாண்டின் அறுபதாம், எழுபதாம் ஆண்டுகளில்) எமது தேசங்களின் முதலாளித்துவம் நம்பிக்கை தரத்தக்க உச்ச நிலை அதிகாரத்துடன் இருந்தது. இன்று மூன்றாம் கட்டத்தின் சிதைவுகள் மேலோங்கி உள்ளன. 

நேருவின் தலைமையில் சுதந்திர இந்தியா முன்னெடுத்த ‘முதலாளித்துவ (ஜனநாயக) சோசலிச’ பொருளாதார அடித்தளங்கள் பல நெருக்கடிகளை முகங்கொண்டவாறு சில நம்பிக்கைக் கீற்றுகளையும் எழுபதாம் ஆண்டுகளில் வெளிப்படுத்தியவாறு இருந்தது. அந்த எழுபதாம் ஆண்டுகளில் நவ காலனித்துவ நாடுகளுக்கு முன்னுதாரண நாடாக இலங்கை காட்டப்படுவதனை இன்னமும் இழந்து விடாத முதலாளித்துவச் சோசலிசச் சுயசார்பின் தன்னிறைவு நோக்கி முன்னேற்றம் நிலை பெற்றிருந்தது. முதலாளித்துவ ஜனநாயக எல்லைப்பாடுகள் சார்ந்த தவறுகளுடன் எண்பதாம் ஆண்டுகளில் இலங்கையின் உட் கட்டமைப்புகள் அனைத்தும் பலவீனமடைந்தன. இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் முன்னெடுப்பை இலங்கையர்களால் தொடர்ந்தும் நிர்வகிக்க இயலாது என்ற புரிதலை ஏற்படுத்தும் செயலொழுங்குகள் வளரும் வகையில் முதலாளித்துவ ஜனநாயகச் சீரழிவு உச்சத்தை எட்டியுள்ளது.

திறந்த பொருளாதார ஊடுருவலுக்கு இடமளித்ததன் வாயிலாக எமக்கான அரசியல் பண்பாடு, பொருளாதாரக் கட்டமைப்பு என்பன யாவும் சீரழிவுக்கு உள்ளாயின. எண்பதாம் ஆண்டுகளுக்குப் பின்னர் அரசியல் ஜனநாயகச் சிதைவுகள் இந்தியாவிலும் வலுத்து வந்த போதிலும் இன்று பொருளாதார வளர்ச்சியில் உலகின் மூன்றாம் இடத்தை எட்டிப் பிடிப்பதை நோக்கி இந்தியா முன்னேற இயலுமாகி உள்ளதே அது எப்படி? அந்த விவாதங்களுக்குள் செல்ல இங்கு அவகாசம் இல்லை. ஒரேயொரு விடயம், ஏகாதிபத்திய சக்திகளால் இயக்கப்பட்டு எமக்குள் ஒவ்வொரு இனத் தேசியங்களின் மேலாதிக்க நலன் சார்ந்தவர்களே தலைமை கொள்ள இலங்கையில் இடமளித்தோம். விடுதலைக்காகப் போராடிப் பெற்ற இந்திய சுதந்திரம் அங்குள்ள இனத் தேசியங்கள் ஒவ்வொன்றும் தமக்கான சுய முன்னேற்றத்தை வளர்ப்பதற்கு இடமளித்த அதேவேளை முதலாளித்துவ நலனே முன்னிலை பெற்ற காரணத்தால் ஏகாதிபத்திய அணிக்குரிய நாடாக இந்தியாவினால் வளர்ச்சி பெற இயலுமாகி உள்ளது.

vivekanandar

உள்ளமைப்பில் மேலாதிக்கப் பண்புடன் ஏகாதிபத்தியத்திடம் அடிமை மனப்பாங்கை வளர்த்து வரும் இலங்கையின் தேர்தல் இந்த ஆண்டில் இடம் பெற உள்ளது. பிராந்திய மேலாதிக்க இந்தியாவிலும் உலக மேலாதிக்கத்தைக் தக்க வைப்பதற்கு முயற்சித்தபடி உள்ள ஐக்கிய அமெரிக்காவிலும் இந்த ஆண்டு தேர்தல் ஜனநாயகம் பிரயோகிக்கப்பட உள்ளது. இந்த ஜனநாயகம் எந்தவொரு நாடும் நாசகாரச் சிதைவுக்கு ஆட்படப் போவதைத் தடுக்கப்போவதில்லை!

இந்தப் பின்னணியை உதாரணமாக முன்னிறுத்தியவாறு நிலப்பிரபுத்துவச் சிதைவுடன் அதற்கான ஒட்டுறவில் இயங்கிய மதம் கொண்டிருந்த உறவுப் பிணைப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் எவ்வாறு அமைந்தது என்பதனை மறுவாசிப்புக்கு உட்படுத்த இயலும். ஆரம்பத்தில் இருந்தே சைவசித்தாந்த மேலாத்திக்கவாதத் தத்துவ நிலைப்பாடுகளுக்கு வள்ளலார் ஆட்படாது இருந்துள்ளார். அதேவேளை சிதம்பர நடராசரின் தெய்வீகக் கலா நுட்பத்துக்குப் பக்திச் சிரத்தையுடன் பாடல்கள் புனையும் நாட்டம் அவரை இயக்கிய காரணத்தால் தில்லைவாழ் அந்தணர்களின் கருத்து நிலைகளுக்குள் ஆட்படுகிறவராக அவரை வரம்பிட்டிருந்தது.

காலனித்துவ அடிமைத் தனத்துக்கு எதிராகப் பண்பாட்டுத் தேசியத்தை முன்னெடுத்து இயங்கிய ஆறுமுகநாவலர் சிதம்பரத்தில் தில்லைவாழ் அந்தணர்களுக்கு எதிராகவே வழக்காடினார். அவர்களுக்குச் சார்பாக வள்ளலார் சாட்சியாளரான காரணத்தால் பின்னர் மோதல் திசைதிரும்பி வள்ளலார் – நாவலர் பகையாக மாறி இன்று வரை பாரதூரமான தீங்குகளுக்கு இடமேற்பட்டுள்ளது. காலனித்துவத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் எதிரான போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டிய இரு தரப்புக்கள் தமக்குள் மோதுவது மக்கள் விடுதலையைப் பின்னடைவுக்கு உள்ளாக்கும்.

வள்ளலார் விரைவில் தில்லைவாழ் அந்தணர்களை விட்டொழித்தார். தில்லை நடராசரிடம் இருந்தும் விடுதலை பெற்றார். அருட்பெரும் சோதியே வழிபாட்டுக்குரியது எனத் தேர்ந்தார். வறுமையில் வாடிய மக்களுக்காக அணையாத அடுப்பேற்றி பசிப்பிணி நீக்க முயன்றார். தனது ஆன்மீக நாட்டத்தை மதத்தை விட்டொழித்து மக்கள் தளத்துக்கானதாக மாற்றினார். அனைத்து மேலாதிக்கங்களுக்கும் எதிரான அவரது சுத்த சமரச சன்மார்க்கம் பற்றி விரிவாக அலசும் அவசியம் உள்ளது!

மேலாதிக்கங்களால் இயக்கப்படும் சூத்திரக் கயிறுகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட வள்ளலார் – நாவலர் மோதல் இன்றுவரை தொடர்வதன் காரணம் என்ன? மிகப் பெரும்பாலானவர்கள் இவ்விரு ஆளுமைகளில் ஒருவரைப் போற்றித் துதிபாடி வழிபாட்டுக்கு உரியவராக ஆக்கியபடி மற்ற ஆளுமை குறித்த அவதூறுகள் பரப்பும் நிலை நிலவுகிறது. ஐந்தாம் குரவராக நாவலரை வழிபடும் தரப்பினர் அவரது சமூக, பண்பாட்டு, அரசியல் தாக்கங்கள் குறித்து அக்கறை கொள்வதில்லை. ஒருவகையில், இத்தகையோரிடம் உள்ளுறைந்து சாதியபிமானம் நாவலரை மேலும் தாக்குவதற்கு இடமளிப்பதாகவே அமைகிறது.

நாவலர் சாதியாசாரங்களைப் பின்பற்றுவதற்கு அழுத்தம் கொடுத்தபோது அதனைக் கைவிட்டு ஆங்கில ஆட்சியாளரின் எடுபிடிகளாகிப் பண்பாட்டுச் சிதைவுகளுக்கு உள்ளான வெள்ளாளர்களையே கண்டனத்துக்கு உள்ளாக்குகிறவராக இருந்தார். அவரிடம் இருந்த காலனித்துவ எதிர்ப்பு முதன்மைக்கு உரியது என்ற பக்கத்தை மூடி மறைத்து சாதிவாதியாக அவரைத் தாக்குவது என்பது தாக்குகிறவர்களிடம் மேலோங்கியுள்ள காலனித்துவ அடிமை மனப்பாங்கையே காட்டும். வள்ளலார் – நாவலர் விவாதங்களை வேறொரு தளத்தில் அலசுவோம்!

இங்கு எமக்கு முக்கியத்துவம் உடைய விவகாரம் நிலப்பிரபுத்துவ – மதவாத மேலாதிக்கங்களைத் தகர்ப்பதற்குப் போராடும் சம காலத்தில், காலனித்துவ – ஏகாதிபத்திய எதிர்ப்பும் வலுவுடன் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்பதன் மீது கவனக்குவிப்பை ஏற்படுத்துவதாகும். இருபதாம் நூற்றாண்டிலும் இந்த இரு தரப்புகளும் தனித்தனியாக இயக்கம் பெற்றிருந்தன. இன்று வரையில் பலரிடமும் இந்தப் பிளவு மனப்பாங்கு ஊடுருவி உள்ளது. தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டின் இயங்கு நிலைகளைப் பார்ப்போம்!

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4342 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (5)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)