இலங்கையும் சர்வதேசத் தேயிலை வர்த்தகமும் - பகுதி 1
Arts
13 நிமிட வாசிப்பு

உலக வர்த்தகத்தாபனத்தின் (WTO) கீழ் இலங்கையும் சர்வதேசத் தேயிலை வர்த்தகமும் – பகுதி 1

March 11, 2023 | Ezhuna

மலையக சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமை பிரச்சினைகளையும், தோட்ட தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்தியதாக ‘மலையகம் : சமூக – பொருளாதார அரசியல் பரிமாணங்கள்’ இந்தத்தொடர் அமைகின்றது. அத்தோடு இந்தத்தொடர் மலையத்தில் தேயிலை கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கொள்கை முன்மொழிவுகள், தொழிலாளர்களின் வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும்  வளர்ச்சிப் போக்கு கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகள் எவ்வாறு அமையலாம் என்பதற்கான பொறிமுறைகளையும் முன்வைக்கின்றது.

உலக வர்த்தகத் தாபனம்

Bretton Woods Conference

சுமார் எட்டு வருடகாலமாக நடைபெற்றுவந்த உறுகுவேசுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் பல்வேறு வாதப்பிரதிவாதங்களின் பின்னர் 1994ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தன. உறுகுவேசுற்று பேச்சுவார்த்தைகளானவை பல்பக்கவர்த்தக அமைப்பினது வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகின்றன. உலகவங்கி, சர்வதேச நாணயநிதியம் போன்றதொரு தாபனத்தை உருவாக்குவதன் மூலம் வர்த்தகம், இறுப்புக்கள் என்பன தொடர்பான பொதுஒப்பந்தத்தின் (General Agreement  on Trade and Tariff – GATT) தாபனரீதியான அம்சங்களை பலப்படுத்துவதே மேற்படி பேச்சுவார்த்தைகளின் நோக்கமாகவிருந்தது. உலகவர்த்தகத்தை புனரமைப்பதற்கென இரண்டாம் உலகப்போருக்குப்பின் முன்வைக்கப்பட்ட பிரெட்டன்வுட்ஸ் Bretton Woods பிரேரணைகளில் உலகவங்கி, சர்வதேச நாணயநிதியம் என்பவற்றோடு சர்வதேச வர்த்தகத்தாபனமொன்றினை உருவாக்குவதற்கான ஒரு பிரேரணையும் காணப்பட்டது. ஆனால் அதனை உள்ளடக்கியிருந்த ஹவானா பிரகடனத்தை அமெரிக்க காங்கிரஸ் அங்கீகரிக்கத்தவறியதால், அது செயலாக்கம் பெறவில்லை. இறுதியாக 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கைச்சாத்தான மர்க்காஸ் உடன்படிக்கையினூடாகவே (Maracas Agreement)   உலகவர்த்தகத்தாபனமானது (World Trade Organization – WTO) உருவாக்கப்பட்டது. மரக்காஸ்  பல்பக்க உடன்படிக்கையில் சுமார் 100 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதோடு, உலகவர்த்தகத்தை தாராண்மைப்படுத்துவதனூடாக, ஒருங்கிணைக்கப்பட்டதும், நிலைத்து நிற்கக்கூடியதுமான ஒரு பல்பக்கவர்த்தகமுறையை  அபிவிருத்திசெய்து, அதனூடாக பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பங்களிக்கும் வகையில் அது அமைக்கப்பட்டுள்ளது(2002). உறுகுவேசுற்று உடன்படிக்கையானது பல்பக்கவர்த்தக அமைப்பின் விதிகளை மாற்றியமைத்ததோடு, தனிப்பட்ட அங்கத்துவநாடுகள் தமது வர்த்தகக்கொள்கைகளை தாராண்மைப்படுத்துவதற்கான வாக்குறுதிகளையும் கொண்டிருந்தது. வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது  மட்டுமன்றி, நிறைதொழில்மட்டத்தையும் தொடர்ச்சியாக அதிகரித்துச்செல்லும் மெய்வருமானத்தையும் உறுதிசெய்யும்வகையில் அங்கத்துவநாடுகள் தமது வர்த்தகத்தையும், பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்பதும் உலக வர்த்தகத்தாபனத்தின் நோக்கங்களாகும். இறுதியாக, அபிவிருத்தியடையும் நாடுகளும் அதிலுங்குறிப்பாக, குறை அபிவிருத்தியைக் கொண்ட நாடுகளும் தமது அபிவிருத்தித் தேவைகளுக்கேற்ப சர்வதேச வர்த்தகத்தில் தமது பங்கினைப் பெற்றுக்கொள்ள உறுதிசெய்ய வேண்டியதன் அவசியமும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலக வர்த்தகத்தாபனத்தின் கீழ் விவசாயம்

உறுகுவேசுற்று உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்வரை உலகவர்த்தகம் தொடர்பான விதிகளில் விவசாயப்பண்டங்களின் வர்த்தகம் பற்றிய எவ்வித விதிகளும் இருக்கவில்லை. அதாவது, விவசாயப்பண்டங்களுக்கான சந்தையை உருக்குலைக்கும் ஏற்றுமதி மானியங்கள், உள்நாட்டுஉதவிகள் என்பவற்றைக் கையாள்வது சம்பந்தமாக GATT ஒப்பந்தம் எவ்வித விதிகளையும் கொண்டிருக்கவில்லை. GATT கவனத்திலெடுக்காது விட்ட இந்த விவசாயப்பண்டங்களின் வர்த்தகம் தொடர்பான விடயங்களில் உலக வர்த்தகத்தாபனம் கவனம் செலுத்தியது. எனவேதான், விவசாயம் தொடர்பான உறுகுவேசுற்று உடன்படிக்கையானது பல்பக்க வர்த்தக அமைப்பினது விவசாயக் கொள்கைகளின் பரிணாம வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது. இந்த உடன்படிக்கையின் கீழ், பெருமளவிலான நாடுகள் தமது விவசாயப் கொள்கைகளினால் ஏற்படும் தீயவிளைவுகளைக் குறைத்துக்கொள்வதற்கான சில விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் ஏற்றுக்கொள்வதற்கு முன்வந்தன.

உறுகுவேசுற்று உடன்படிக்கைகளில் விவசாயம் தொடர்பான உடன்படிக்கை நான்கு அடிப்படைக் கூறுகளைக் கொண்டுள்ளது:

  1. அடிப்படையானதொரு உடன்படிக்கை
  2. சந்தைவாய்ப்பு (access), உள்நாட்டு உதவி, ஏற்றுமதிப்போட்டி என்பன தொடர்பான கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒரு துணை உடன்படிக்கை
  3. வர்த்தகத்திற்கு எதிரான தொழில்நுட்பத்தடைகள் தொடர்பான சில விதிகள்
  4. தேறிய இறக்குமதியைக் கொண்டிருக்கும் விருத்தியடையும் நாடுகளுக்கு உதவுவதற்கான  வழிமுறைகள் பற்றிய ஒரு பிரகடனம்
15-APRIL-1994-SIGNATURE-OF-THE-FINAL-ACT-OF-THE-URUGUAY-ROUND-AT-MARRAKESH

உலக வர்த்தகத்தாபனத்தின் அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான வர்த்தகவிதிகளின் கீழ் விவசாயம் எவ்வாறு கையாளப்படுமென்பதில் இந்த உடன்படிக்கையின் விதிகள் ஒரு அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தின. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படமுன்னர், வர்த்தகப்பண்டங்கள் தொடர்பான உடன்படிக்கைகளில் காணப்பட்ட விதிகள் பல்வேறு குறைபாடுகள், விதிவிலக்குகள் என்பன காரணமாக விவசாயத்தைப் பொறுத்தவரை செயற்றிறனற்றனவாகவிருந்தன. புதிய உடன்படிக்கையின்கீழ், உலகவர்த்தகதாபனத்தின் மூன்று தூண்கள் எனக்கூறப்படும் சந்தைவாய்ப்பு (Access), விவசாயத்திற்கான உள்நாட்டு உதவி, ஏற்றுமதி மானியங்கள் என்பவற்றைக் குறைப்பதற்கு நாடுகள் முன்வந்தன. சுருங்கக்கூறுவோமாயின், புதிய விவசாய உடன்படிக்கைகளின் கீழ் சந்தைசார்ந்த விவசாய வர்த்தக அமைப்பொன்றிற்கு நாடுகள் தமது ஒப்புதலை அளித்தன.

சந்தைவாய்ப்பு: விவசாய உடன்படிக்கையின் கீழ் அதில் கைச்சாத்திட்டுள்ள நாடுகள் கோட்டாக்கள், வரிகள் போன்ற ஏற்றுமதிகள் மீதான எல்லாத்தடைகளையும் (இறுப்புக்கள் அல்லாத தடைகளை) அவற்றிற்கு ஈடான இறுப்புக்களாக மாற்றியமைக்கவும், படிப்படியாக அவற்றைக் குறைக்கவும், ஏற்றுமதி மானியங்களின் மீதான செலவீடுகளையும், மானியத்துடன் கூடிய விவசாய ஏற்றுமதிகளையும் குறைப்பதற்கும் முன்வந்தன. விவசாயம் தொடர்பான மேற்படி சீர்திருத்தங்கள் ஏற்றுமதி மானியங்களை 30.0 வீதத்தாலும், உள்நாட்டு விலை ஆதார நடவடிக்கைகளை 18.0 வீதத்தாலும் குறைப்பனவாக இருந்தன (IPS,1996).

விவசாயத்தைத் தாராண்மைப்படுத்தும் இந்நடவடிக்கைகள் தேயிலை உட்பட விவசாயப்பண்டங்களின் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஓரளவு தாக்கத்தைக் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இறுப்புகளல்லாத தடைகளின் நீக்கமானது தேயிலை இறக்குமதி மீது இவ்வித தடைகளை நீக்கும் நாடுகளில் தேயிலையின் நுகர்வை உயர்த்துமென எதிர்பார்க்கலாம். அதேவேளையில் மேற்படி சலுகைகளினால் தமக்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளினின்று தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு இறக்குமதி செய்யும் நாடுகள் சில விசேடபாதுகாப்பு ஏற்பாடுகளையும் சில விசேட உடன்படிக்கைகளையும் ஏற்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பளிக்கப்பட்டது.

உலகத் தேயிலை வர்த்தகத்தின் மீது உறுகுவேசுற்று உடன்படிக்கையின் தாக்கம்

உலகத் தேயிலை வர்த்தகத்தில் உறுகுவேசுற்று உடன்படிக்கையின் தாக்கமானது இரு காரணங்களினால் குறைவானதாகவே இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.  முதலாவதாக, தேயிலையின் உலகவர்த்தகம் ஏற்கனவே குறைந்தளவு கட்டுப்பாடுகளையே கொண்டதாக உள்ளது. தேயிலையானது உலகலாவியரீதியில் சிறந்த ஒரு சௌக்கியபானமாக ஏற்கப்பட்டுள்ளதால், தேயிலை இறக்குமதியின் மீது நாடுகள் குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை. பிரதான தேயிலை இறக்குமதி நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் என்பனவற்றை இங்கு குறிப்பிடலாம். குறைந்தவருமான நாடுகளுக்கான வரிச்சலுகைத்திட்டமான பொதுப்படுத்திய சலுகைமுறையின் கீழ் (Generalized System of Preferences – (GSP) தேயிலைக்கு மேற்படி நாடுகளுக்குள் நிலையற்ற இறக்குமதி அனுமதிக்கப்படுகின்றது. இரண்டாவதாக, உறுகுவேசுற்று பல்பக்க உடன்படிக்கையின்படி, அபிவிருத்தியடைந்த நாடுகள் GSP திட்டத்தின்கீழ் விருத்தியடையும் நாடுகளுக்கு வழங்கும் வரிச்சலுகைகளின் முக்கியத்துவம் குறையும் என்றும், ஆனால் உலக வர்த்தகத்தாபனத்தினது விதிகளின் அமுலாக்கத்தின் மூலம் எழும் வர்த்தகத்தாராண்மைப்படுத்தல் மேற்படி இழப்புகளை ஈடுசெய்வதோடு, மேலதிகநன்மைகளையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில் GSP ஆனது நாடுகளின் ஒரு பக்கநடவடிக்கையே என்பதால் அது எந்தநேரத்திலும் பின்வாங்கப்படக்கூடும் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

உலக வர்த்தகத்தாபனத்தின்கீழ், தேயிலைக்கான கேள்வி அதிகரிக்கும் அதேவேளையில், எல்லாத் தேயிலை உற்பத்தி நாடுகளிலுமே தேயிலையின் உற்பத்தியும் அதிகரிக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், இறுப்புகளின் குறைப்பால் நுகர்வில் ஏற்படும் அதிகரிப்பிற்கும் மேலதிகமாக தேயிலையின் நுகர்வு 29 வீதத்தால் அதிகரிக்குமென உலக உணவுத்தாபனம் எதிர்வு கூறியுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் தேயிலையின் நுகர்வு ஏற்கனவே தேக்கநிலை அடைந்துள்ள நிலையில்  பொருளாதார வளர்ச்சி, சனத்தொகை அதிகரிப்பு என்பன காரணமாக விருத்தியடையும் நாடுகளிலேயே இவ்வதிகரிப்பு ஏற்படும் எனவும் அது எதிர்வு கூறியுள்ளது (FAO, 1999). அதேவேளையில், வர்த்தகம்மீது விதிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக்கட்டுப்பாடு, சுகாதாரத்தேவைகள் என்பன தொடர்பான உடன்படிக்கைகள் உற்பத்திநாடுகள் பலவற்றிற்கு பெரும் சவாலாகவிருக்குமெனவும் கூறப்படுகின்றது.

உறுகுவேசுற்று உடன்படிக்கைகளும் இலங்கையின் தேயிலைத் தொழிலும்

இலங்கையின் பொருளாதாரத்தில் தேயிலையின் உற்பத்தியும் ஏற்றுமதியும் ஒரு கேந்திரஇடத்தினை வகிக்கின்றன. தேயிலைத்தொழிலின் தோற்றமும் அபிவிருத்தியும் நாட்டினது சமூக-பொருளாதார முன்னேற்றத்துடனும் ஒட்டுமொத்த அபிவிருத்தியுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டனவாகும். கடந்தகாலங்களில் அது மொத்த உள்நாட்டு உற்பத்தி, வெளிநாட்டுச் செலாவணி உழைப்பு, அரசாங்க வருவாய், தொழிலவாய்ப்புகள் என்பனவற்றிற்கு பெரும் பங்களித்து வந்துள்ளது.

அண்மைக்காலங்களில் இத்துறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7.0 வீதத்திற்கு பொறுப்பாகவிருப்பதோடு பெருமளவு அந்நியச் செலாவணியையும் உழைத்துத்தந்துள்ளது. 2005ஆம் ஆண்டில் ரூபா 81,402.5 மில்லியன் உழைத்துக் கொடுத்த இத்துறை 2006 ஆம் ஆண்டு ரூபா. 91,666 மில்லியனை உழைத்தது. மொத்த அடிப்படையில் உயர்வாகவிருந்த இது தைத்தஆடை ஏற்றுமதித்துறையின் தேறிய வெளிநாட்டுச் செலாவணி உழைப்பிற்கு சமமாகவிருந்தது. நாட்டினது மொத்த தொழில்வாய்ப்புகளில் 10.0 வீதம் இத்துறையிலேயே காணப்படுகின்றது. பெருந்தோட்டத்தொழிலுடன் தொடர்புபட்ட போக்குவரத்து, வர்த்தகம், சந்தைப்படுத்தல், நிதி, வேறு சேவைகள் போன்ற துறைகளில் மேலும் பலருக்கு தொழில்வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனவே, சுமார் ஒரு மில்லியன் குடும்பங்கள் முற்றாகவோ, பகுதியாகவோ பெருந்தோட்டத்துறை உற்பத்தி, வர்த்தகம் என்பவற்றில் தங்கியுள்ளன எனக்கூறின் அது மிகையாகாது.

தேயிலை உற்பத்தியானது பெரிய தோட்டங்கள், தனியார்களுக்கு உரித்தான சிறிய தோட்டங்கள், 10 ஏக்கருக்கும் (4.11 ஹெக்டயர்கள்) குறைந்த பரப்பினைக்கொண்ட சிற்றுடமைகள் என்பவற்றில் உற்பத்தி செய்யப்படுகின்றது. பெரியதோட்டங்கள் பிராந்திய பெருந்தோட்டக் கம்பெனிகள், அரசபெருந்தோட்டக் கூட்டுத்தாபனங்கள் என்பவற்றுக்கும் ஒருசில தோட்டங்கள் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் உரித்தானவையாகும். தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர் அவற்றுள் பெரும்பாலானவற்றை முகாமை செய்ய உருவாக்கப்பட்டனவே அரசபெருந்தோட்டக் கூட்டுத்தாபனங்களாகும். தோட்டங்கள் மீளவும் தனியார்மயமாக்கப்பட்ட பின்னர் (1992) அவற்றை முகாமை செய்வதற்கு பிராந்திய பெருந்தோட்டக் கம்பெனிகள் (பி.பெ.கூ) உருவாக்கப்பட்டன. இலாபம் குறைந்தனவெனக் கருதப்பட்ட சுமார் 50 தோட்டங்கள் தொடர்ந்தும் அரசகூட்டுத்தாபனங்களின் பொறுப்பிலேயே விடப்பட்டன. இவற்றுள் பெரும்பாலானவை தொடர்ந்தும் நட்டத்திலேயே செயற்பட்டு வருகின்றன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அடுத்ததாக அதிக தேயிலையை உற்பத்தி செய்யும் நாடு இலங்கையே. மொத்த உலகஉற்பத்தியில் 9.0 வீதத்திற்கும் மொத்த உலகத்தேயிலை ஏற்றுமதியில் 19.0 வீதத்திற்கும் இலங்கை பொறுப்பாக உள்ளது. 1995 இற்கும் 2003இற்குமிடையே இலங்கையின் தேயிலை ஏற்றுமதியானது 11.0 வீதத்தால் அதிகரித்தது. 2001 ஆம் ஆண்டில் இதில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டபோதும் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அது மீட்சி பெற்றது (மத்திய வங்கி, 2005). தேயிலை ஏற்றுமதியின் மூலமே இலங்கை பெருமளவு தேறிய வெளிநாட்டு வருமானத்தை உழைக்கின்றது. உதாரணமாக, 2005 ஆம் ஆண்டில் அது நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 13.0 வீதத்தை உழைத்துக்கொடுத்தது.

இலங்கையின் தலைநகரான கொழும்பிலேயே உலகின் மிகப்பெரிய தேயிலை ஏலவிற்பனை மையம் அமைந்துள்ளது. மொத்தவடிவில் மட்டுமன்றி தேயிலைப்பைகள், பைக்கற்றில் அடைக்கப்பட்ட தேயிலை போன்ற சேர்க்கப்பட்ட பெறுமதி வடிவங்களிலும் இலங்கை தேயிலையை ஏற்றுமதி செய்கின்றது. மொத்த ஏற்றுமதியில் பின்னையவற்றின் பங்கு தொடர்ச்சியாக அதிகரித்து மொத்த தேயிலை ஏற்றுமதியில் இன்று அது அரைவாசியாக உள்ளது. இலங்கையின் ஏற்றுமதிக்குச் சமமான அளவு தேயிலையை கென்யாவும் ஏற்றுமதி செய்தபோதும், பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலையை கூடுதலாக ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை கென்யாவிலும் பார்க்கக் கூடிய ஏற்றுமதி வருமானத்தைப் பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது (Asopa, 2004).

தேயிலை உற்பத்தியில் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள்

இலங்கையின் தேயிலைத் தொழிலானது உலகசந்தையில் பெரும் ஆதிக்கத்தைக் கொண்டிருந்தபோதும் அது பல சவால்களையும் எதிர்நோக்குகின்றது. முதலாவதாக, இலங்கை தனது சந்தைப்பங்கினை அதிகரித்துக்கொள்வதிலும், புதிய உற்பத்தியாளர்களிடமிருந்து எழும் போட்டித்தன்மையினின்று தன்னைப் பாதுகாத்துக்கொள்வதிலும் இவ்வித சவால்களை எதிர்நோக்குகின்றது. உயர்தரத்தினைக்கொண்ட மரபுரீதியான தேயிலையை உற்பத்தி செய்வதில் இலங்கை அதிக கவனம் செலுத்துகின்றது. இலங்கைத் தேயிலையானது உயர்ந்ததரம் வாய்ந்தது என்பது சர்வதேசரீதியாக ஏற்கப்பட்டுள்ளது. எனவே, தேயிலையின் தரத்தைக் குறைக்காது உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பதென்பது இலங்கைக்கு பெரும் சவாலாக உள்ளது. இரண்டாவதாக, தேயிலை ஏற்றுமதியில் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே ஓரளவு இறுக்கநிலை காணப்படுகின்றது. 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய கட்டில்லா வர்த்தக உடன்படிக்கையினூடாக இந்த இறுக்கநிலை ஓரளவு தளர்ச்சியடைந்துள்ளது. ஏனெனில், இந்த உடன்படிக்கையின் கீழ், இலங்கையில் உற்பத்தி செய்யப்படாத தரத்தைக் கொண்ட இந்தியத் தேயிலையை இறக்குமதி செய்வதற்கு இலங்கையும், அதேபோன்று வருடத்திற்கு 15,000 தொன் இலங்கைத் தேயிலையை 7.5 வீதத்தீர்வையில் இறக்குமதி செய்வதற்கு இந்தியாவும் இணங்கியுள்ளன. இருப்பினுங்கூட, தேயிலை ஏற்றுமதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான இறுக்கநிலையை தளர்ச்சியடையச் செய்வதில் மேற்படி உடன்படிக்கை இறுதித் தீர்வாக அமையுமா என்பது பற்றி ஐயப்பாடுகள் தோன்றியுள்ளன. இந்த உடன்படிக்கையின்கீழ் பட்டியலிடப்பட்ட சில பொருட்களின் மீதான தீர்வைகளை படிப்படியாகக் குறைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளபோதும், இரு நாடுகளும் தமக்கிடையிலான வர்த்தகத்தில் எதிர்க்கணிய பட்டியல்களை கொண்டிருப்பதும், இதில் உள்ளடக்கப்பட்ட பண்டங்களுள் தேயிலையும் ஒன்றாகவிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கன (முதலீட்டுச்சபை, 2004). மேலும் மேற்படி கட்டில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கான தேயிலை ஏற்றுமதி இதுவரைகாலமும் வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறானதொரு நிலை காணப்பட்டுள்ளபோதும், வருங்காலத்தில் இந்தியாவிற்கான தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என கூறப்படுகின்றது. இந்தியாவினது 250 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட மத்தியதர வகுப்பானது தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, அதனது கொள்வனவு சக்தியும் உயர்ந்து வருகின்றது.  ஐரோப்பிய ஒன்றியத்தைப் போன்று சார்க் அமைப்பும் பொருட்கள், சேவைகளின் கட்டில்லாப்பாய்ச்சலைக் கொண்ட ஒரு தாபனமாக மாற்றமடையும் போது, இந்திய – இலங்கை நாடுகளிலும் தேயிலைக்கான கேள்வியில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு எனலாம் (USDA, 2002).

உறுகுவேசுற்று உடன்படிக்கைகளின் காரணமாக இலங்கைத் தேயிலையின் ஏற்றுமதி மீது பல்வேறு தாக்கங்கள் ஏற்படக்கூடும். GATT செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி உறுகுவேசுற்று உடன்படிக்கைகளினால் தேயிலை இறக்குமதிமீதான தீர்வைகள் 32.0 வீதத்தால் வீழ்ச்சியடையும். எனினும், இலங்கையைப் பொறுத்தவரை பின்வரும் காரணிகளால் இது அதிக நன்மையை ஏற்படுத்தமாட்டாது:

அண்மைக்கால புள்ளிவிபரங்களின்படி, இலங்கைத் தேயிலையானது பெருமளவிற்கு ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, ஜப்பான், ரஷ்யா, பொதுநலவாய சுதந்திரநாடுகள் (Commonwealth of Independent Countries – CIS நாடுகள்), ஐக்கிய அரபுஎமிரேட்ஸ், சிரியா, துருக்கி போன்ற நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதில் பெருமளவு தேயிலை மத்தியகிழக்கு நாடுகளுக்கும் CIS நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது. இவற்றுட் சில நாடுகள் தேயிலை இறக்குமதியின் மீது உயர்ந்த தீர்வைகளை விதிக்கின்றன. உதாரணமாக, எகிப்து சுமார் 45 வீதத்தீர்வையையும், ஈரான், சிரியா போன்ற நாடுகள் உயர்ந்த தீர்வைகளோடு, தீர்வையல்லாத வேறு கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றன. மேற்படி நாடுகள் உலக வர்த்தகத்தாபனத்தில் அங்கத்துவம் பெறாததால், தேயிலை இறக்குமதியின் மீதான தமது கட்டுப்பாடுகளை அகற்றப்போவதில்லை. எனவே, உறுகுவேசுற்று உடன்படிக்கைகளின்கீழ், இந்நாடுகளில் அதிகரித்த சந்தை வாய்ப்புகளை இலங்கை எதிர்ப்பார்க்க முடியாது.

அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி ஏற்கனவே தீர்வையற்றதாகவிருப்பதால், அவற்றிற்கான ஏற்றுமதியிலும் அதிக அதிகரிப்பு ஏற்படமாட்டாது. ஏற்றுமதிகளில் அதிகரிப்பு ஏற்படுவதற்குப் பதிலாக இலங்கையைப் பொறுத்தமட்டில் சந்தையானது போட்டிநிறைந்த ஒன்றாக மாறக்கூடும் (Central Bank, 1994). உறுகுவேசுற்று உடன்படிக்கையின் விளைவாக ஏற்றுமதி மானியங்கள், வர்த்தகத்தை உருக்குலைக்கும் இறுப்புகள் என்பவற்றிலேற்படும் குறைப்பினால் சர்வதேச சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் போட்டித்தன்மை கொண்டனவாக மாற்றமடையும் சாத்தியமுண்டு. வர்த்தகசூழலில் ஏற்படும் இவ்வித நன்மைகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டுமாயின், உற்பத்தித்திறனை உயர்த்துவதன் மூலம் தேயிலையின் உற்பத்திச்செலவைக் குறைத்துக்கொள்வதோடு, இலங்கை தான் ஏற்றுமதி செய்யும் தேயிலையின் தரத்தையும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.

தொடரும்.

குறிப்பு : 2015 இற்கு முன் எடுக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்ட ஆய்வு.


ஒலிவடிவில் கேட்க

9490 பார்வைகள்

About the Author

முத்துவடிவு சின்னத்தம்பி

முத்துவடிவு சின்னத்தம்பி அவர்கள் 1965ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்று அதே பீடத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகினார். 1969இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணிப் பட்டத்தைப்பெற்றார்.

1993ஆம் ஆண்டு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற முத்துவடிவு சின்னத்தம்பி 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை அலங்கரித்த மலையகத்தின் முதலாவது பேராசிரியர் என்ற சிறப்புக்குரியவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்