இலங்கையின் வர்த்தகக்கொள்கைகளும் உறுகுவேசுற்று உடன்படிக்கைகளும்
இறுப்புகள்
GATT இல் கைச்சாத்திட்டுள்ள நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும். எனவே, அது வர்த்தக இறுப்புகள் தொடர்பான உலகவர்த்தக தாபனத்தின் விதிகளைப் பின்பற்றவேண்டியது அவசியமாகும். உறுகுவேசுற்று விவசாய உடன்படிக்கையின் கீழ் விவசாயப்பண்டங்களின் மீதான இறுப்புகளின் உச்சவரம்பை இலங்கை 50.0 வீதமாக நிர்ணயித்துள்ளது. ஆனால், இன்று நடைமுறையிலிருக்கும் இறுப்புகள் இதிலும் பார்க்க குறைவானவையேயாகும். எனவே, மேற்படி உச்சவரம்பு எதிர்காலத்தில் இறுப்புகளை உயர்த்துவதற்கான ஒரு உச்சவரம்பேயாகும். உலக வர்த்தகத்தாபனத்தின் ஏனைய தெற்காசிய அங்கத்துவ நாடுகளைப் போன்றே இலங்கையும் இறுப்புகள் அல்லாத ஏனைய கட்டுப்பாடுகளை அகற்றாமலே இறுப்புகளுக்கு உச்சவரம்பை விதித்துள்ளது. இந்தவகையில், உறுகுவேசுற்று விவசாய உடன்படிக்கையின் எல்லாத் தேவைகளையும் இலங்கை பூர்த்தி செய்யவில்லையென்றே கூறலாம்.
ஊக்குவிப்புக்களும் மானியங்களும்
தேயிலைத்துறையின் மீது சில வரிகளை விதிக்கும் இலங்கை அதற்கு பல ஊக்குவிப்புக்களையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. எனினும், பெருந்தோட்டப் பண்டங்களின் மீதான ஏற்றுமதி வரிகள் யாவும் 1992 இல் அகற்றப்பட்டன. இப்பொழுது மிகக் குறைந்தளவு வரிகளே அறவிடப்படுகின்றன. இதன் விளைவாக எண்பதுகளில் ஏற்றுமதி விலைகளின் 25.2 வீதமாகவிருந்த சராசரி ஏற்றுமதி வரிகள் 1993 இல் 0.05 வீதமாக வீழ்ச்சியுற்றன. வரிகளின் மூலம் திரட்டப்படும் வருமானங்களின் ஒரு பகுதி தேயிலை மறுநடுகை, புதியநடுகை என்பவற்றிற்கான மானியங்கள், புதிய ஏற்றுமதியாளருக்கு வழங்கப்படும் ஆரம்பகால மானியங்கள் என்பவற்றிற்காக செலவிடப்படுகின்றது. மேற்படி ஊக்குவிப்புக்கள், மானியங்கள் என்பன தேயிலைச்சிற்றுடமை அபிவிருத்தி அதிகாரசபை, தேயிலைச்சபை என்பவற்றால் வழங்கப்படுகின்றன.
உற்பத்தி மானியங்கள்
தேயிலையின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான புதுநடுகை, மறுநடுகை, தேயிலைத்தொழிற்சாலை அபிவிருத்தி, அதனை நவீனமயமாக்குதல் என்பவற்றிற்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுள் புதுநடுகை, மறுநடுகை என்பவற்றிற்கான மானியங்களே பெரும்பங்கை வகிக்கின்றன. அத்துடன், உள்ளீட்டு மானியத்திட்டம், பசளைக்கான கடன், உற்பத்தியாளருக்கு ஆலோசனை வழங்குதல் என்பவற்றிற்காக தேயிலைச் சிற்றுடமை அபிவிருத்தி அதிகாரசபையும் மானியங்களை வழங்குகின்றது. நடைமுறையிலிருக்கும் மேற்படி உற்பத்தி மானியங்கள் உலக வர்த்தகத் தாபனத்தின் உற்பத்திக்கான உள்நாட்டு உதவி தொடர்பான விதிகளுக்கு இசைவானவையாகும். எனவே, உறுகுவேசுற்று உடன்படிக்கையின் சந்தை வாய்ப்பு (Access) தொடர்பான இறுப்புகள் சாராத விதிகளை மட்டுமே இலங்கை தளர்த்த வேண்டியுள்ளது (SLAAS, 1995)
ஏற்றுமதி மானியங்கள்
பதனிடப்பட்ட தேயிலையின் சந்தைப்படுத்தலை ஊக்குவிப்பதற்காக தேயிலைச்சபையானது பல்வேறுபட்ட மானியங்களை வழங்குகின்றது. தேயிலையை பையிலடைப்பதற்குத் தேவையான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கு பெறப்படும் கடன்களின் மீதான வட்டியில் 50.0 வீதமும், தேயிலையை ஏற்றுமதிக்காகப் பதனிடுவதில் கையாளப்படும் மூலதனப்பொருட்களின் இறக்குமதி மீதான வரிவிலக்குகளும்;, முன்னைய ஆண்டிலும் பார்க்க தேயிலையின் ஏற்றுமதி அளவையும் விலையையும் அதிகரிப்போருக்கான பணக்கொடுப்பனவுகளும் இதிலடங்கும். மேற்படி மானியங்களை நீக்குவது தேயிலைத்தொழிலின் மீது பல்வேறு தாக்கங்களை கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
உறுகுவேசுற்று பேச்சுவார்த்தைகளின் கீழ் கைச்சாத்திடப்பட்ட ஏனைய உடன்படிக்கைகள்
விவசாயப்பண்டங்களின் வர்த்தகம் பற்றிய அடிப்படையான உடன்படிக்கைக்குப் புறம்பாக வர்த்தகத்தின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய ஏனைய சில உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன. மனித சுகாதாரம், பயிர் சுகாதாரம் என்பன சம்பந்தமான உடன்படிக்கை, வர்த்தகத்தின் மீது தொழில்நுட்பத்தடைகள் விதிப்பது தொடர்பான உடன்படிக்கை, விவசாய பாதுகாப்பு, குவித்தல், மானியங்கள் வழங்குதல் என்பவற்றிற்கெதிரான உடன்படிக்கை என்பனவே இவையாகும். விவசாயப்பண்டங்களின் வர்த்தகத்தின் மீது இவையும் சில தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியனவாகும்.
மனித சுகாதாரம், பயிர் சுகாதாரம் என்பன தொடர்பான உடன்படிக்கை (Agreement on Sanitary and phyto-Sanitary easures – SPS)
1995ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்த உடன்படிக்கை விவசாயப்பண்டங்களின் வர்த்தகம் தொடர்பான அடிப்படை உடன்படிக்கையுடன் தொடர்பு கொண்டதாகும். உணவுப்பாதுகாப்பு, பயிர்களின் சுகாதாரம் என்பன தொடர்பான சில விதிகளைக் கொண்ட இந்த உடன்படிக்கை, இறக்குமதிகள் தொடர்பாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு நாட்டுக்கு உள்ள இறைமை உரிமையை உறுதிப்படுத்துகின்றது. இந்த உடன்படிக்கை பின்வரும் விடயங்களை கவனத்தில் எடுத்துள்ளது:
- நோய்கள், பீடைகள் என்பவற்றைத் தோற்றுவிக்கும் உயிரினங்களின் உட்பிரவேசம், பரவல் என்பவற்றினின்று மிருகங்களையும் பயிர்களையும் பாதுகாத்தல்.
- விவசாயத்தில் கையாளப்படும் பல்வேறு இரசாயனத் திரவியங்களினின்றும் மனித உயிர்களுக்கும் பயிர்களுக்கும் பாதுகாப்பளித்தல்.
- மிருகங்கள், பயிர்கள் அல்லது உற்பத்திப்பண்டங்கள் என்பவற்றால் உட்கொண்டுவரப்படும் நோய்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளினின்றும் மனித உயிர்களையும் சுகாதாரத்தையும் பாதுகாத்தல்.
- பயிர்ப்பீடைகளினின்று ஏற்படக்கூடிய தாக்கத்தைத் தவிர்த்துக் கொள்ளுதல் அல்லது கட்டுப்படுத்தல்.
மேற்படி உடன்படிக்கையானது சுகாதாரத் தேவைகள், உணவுப்பாதுகாப்பு, பயிர்களின் சுகாதாரம் என்பன தொடர்பான விதிகள் சரிவர பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்தைக் கொண்டதாகும்.
வர்த்தகம் மீதான தொழில்நுட்பத்தடைகள் தொடர்பான உடன்படிக்கை Agreement on Technical Barriers in Trade (TBT)
பண்டங்களைப் பைகளில் அடைத்தல், சந்தைப்படுத்தல், பெயரிடல், பரீட்சித்தல் என்பன தொடர்பான விதிகளை இது உள்ளடக்குகின்றது. வர்த்தகத்தில் தராதரங்களைப் பின்பற்றுவதில் சரியான நடைமுறைகளை இது உறுதி செய்ய முயலுகின்றது. தேவையானவிடத்து நாடுகள் சர்வதேச ஏற்றுமதித் தராதரங்களை பின்பற்ற வேண்டுமென்பதையும் குறிப்பிட்ட ஏற்றுமதி சந்தைகளில் இறக்குமதி தொடர்பாக விதிக்கப்படும் தராதரங்களை ஏற்றுமதியாளர் அறிந்திருக்க வேண்டுமென்பதையும் இது வலியுறுத்துகின்றது.
வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமைகள் தொடர்பான உடன்படிக்கை – Trade-Related Intellectual Property Rights (TRIPS) Agreement
மேற்படி உடன்படிக்கை 2000 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இது உலக வர்த்தகத்தாபனத்தின் அங்கத்துவ நாடுகளின் மீது சில வரையறைகளை விதித்துள்ளது. முன்னரைப்போன்று இந்நாடுகள் Patent உரிமைகளினின்றும் உணவு, மருந்துவகைகள் அல்லது வேறு துறைகளை விலக்கிக்கொள்ளும் வகையில் நெகிழ்ச்சித்தன்மை கொண்ட கொள்கைகளைப் பின்பற்றமுடியாது என்பதே இந்த வரையறையாகும். முன்னரிலும் பார்க்க நீண்டகாலத்திற்கு Patent உரிமைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்த உடன்படிக்கையானது Patent உரிமைகளைக் கொண்ட நாடுகளுக்கும் அது இல்லாத நாடுகளின் நுகர்வோர், உற்பத்தியாளர் என்போருக்குமிடையிலான சமநிலையை முன்னைய சாராருக்கு சாதகமாக மாற்றியுள்ளது. இதன்விளைவாக, சில உணவுப்பண்டங்களின் உற்பத்திச்செலவுகளும் விலைகளும் அதிகரித்துள்ளன. தேயிலை வர்த்தகத்தைப் பொறுத்தவரை இந்த உடன்படிக்கையானது தேயிலைப்பயிர் இனங்கள் அறிவுசார் சொத்துரிமையின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டுமென விதிக்கின்றது.
அறிவுசார் சொத்துரிமை தொடர்பாக விருத்தியடையும் நாடுகள் சில பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. அறிவுசார் சொத்துரிமை விதிகளை அபிவிருத்திக்கான ஒரு கருவியாகக் கையாளுவதற்கு விஞ்ஞானரீதியான அறிவும், தாபனரீதியான அபிவிருத்தியும் இந்நாடுகளிடம் இல்லாதிருப்பதை இங்கு சுட்டிக்காட்டலாம். எனவே, வளர்ச்சியடைந்த நாடுகளுக்கே இவை சாதகமாக உள்ளன.
இறக்குமதிகளின் மீது இவ்வித கட்டுப்பாடுகளை விதிக்கும்பொழுது, இறக்குமதி செய்யும் நாடுகள் குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்குத் தேவையான அளவு மட்டுமே அவற்றை விதிக்க வேண்டுமென்பதையும் இவ் உடன்படிக்கைகள் வலியுறுத்துகின்றன. எனவே, உறுகுவேசுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் விவசாய வர்த்தகம் தொடர்பாக கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள், இலங்கை போன்ற வளரும் நாடுகளுக்கு சில நன்மைகளைக் கொண்டுவரும் அதேநேரத்தில், இந்நாடுகளுக்கு சில சவால்களையும் ஏற்படுத்தியுள்ளன.
மேற்படி உடன்படிக்கைகளுள் SPS, SBT உடன்படிக்கைகள் இரண்டும் இறக்குமதியாளரின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு அதிலுங்குறிப்பாக, விருத்தியடையும் நாடுகளுக்கு பல சவால்களை ஏற்படுத்தியுள்ளன:
(i) இறக்குமதியாளரின் சுகாதார பயிர்சுகாதாரத்தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
(ii) தாம் செயற்படுத்தும் சுகாதார, தொழில்நுட்ப நடவடிக்கைகளை நியாயப்படுத்தல்;
(iii) சர்வதேச தராதரங்களை அபிவிருத்தி செய்வதிலும் அவற்றைக் கையாளுவதிலும் பங்கேற்றல். அவ்வித தராதரங்களை அபிவிருத்தி செய்வதில் அந்நாடுகளது தொழில்நுட்ப அறிவு, நிதி இயலுமை என்பன போதாதிருப்பதே இச்சவால்களை ஏற்படுத்துகின்றது (FAO, 2006).
புதிய தராதரங்கள் அறிமுகம் செய்யப்படும் சந்தர்ப்பங்களில் அவை முன்னரிலும் பார்க்க இறுக்கமானவையாக இருக்குமாயின் மேலதிக பிரச்சினைகளும் எழக்கூடும். ஏனெனில், அவற்றை எதிர்கொள்வதற்கு முக்கிய சட்டரீதியான மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கலாம். இதற்கான நிர்வாக நடைமுறைகள் செலவு கூடியனவாகவும் இருக்கக்கூடும். இச்சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கை அண்மைக்காலங்களில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேயிலை ஏற்றுமதியைப் பொறுத்தவரை, அதனை இறக்குமதி செய்யும் நாடுகள் விதித்துள்ள பல்வேறு உணவுப் பாதுகாப்பு தராதரங்களை அடைந்து கொள்வதற்கு நாட்டிலுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு உதவும் முகமாக இலங்கை வர்த்தகசபையானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏற்றுமதி செய்யும் நாடுகள் இத்தராதரங்களை அடைந்து கொள்வதற்கு ஐரோப்பிய யூனியன் ஜூன் 2006ஆம் ஆண்டுவரை காலஅவகாசம் அளித்தது. இலங்கையில் தேயிலையை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் சில கம்பெனிகள் ஏற்கனவே இவற்றை அடைந்துவிட்டன. ஏனைய கம்பெனிகளும் இவற்றை பூர்த்தி செய்வதற்கு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கென இலங்கை தேயிலைச் சபையானது தேயிலைக்கான தரம் பற்றிய சில விதிகளை அறிமுகம் செய்துள்ளது. இதன்கீழ் இலங்கை தேயிலைத்தரச்சான்றிதழ் திட்டம், தேயிலை ஏற்றுமதிக்கான இழிவுத்தராதரங்கள் என்பன அமுலாக்கப்படுகின்றன. ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் உற்பத்தியின் எல்லாக்கட்டங்களிலும் உற்பத்தித்தராதரத்தையும், உணவு சுகாதாரத்தையும் பாதுகாப்பதற்கு இந்த சான்றிதழ் வழங்கும் திட்டம் முயலுகின்றது. இதுவரை 25 தொழிற்சாலைகள் மட்டுமே மேற்படி சான்றிதழ்களைப் பெற்றுள்ளன. பெருந்தோட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல், புனருத்தாணம் செய்தல் என்பவற்றிற்கென 250 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது (CB, 2005).
உணவுப் பாதுகாப்புத்தரங்கள் பற்றி இலங்கைத்தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் சில வழிகாட்டிகளை வெளியிட்டுள்ளது. சில இரசாயனங்கள் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளதோடு, விவசாய இரசாயனக் கம்பெனிகள் இப்பொழுது தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தினால் சிபாரிசு செய்யப்படும இரசாயனங்களை மட்டுமே விநியோகிக்கின்றன. உயிருக்கும் சுகாதாரத்திற்கும் பங்கம் விளைவிக்கக்கூடிய 16 பீடைநாசினிகள் விற்பனையிலிருந்து அகற்றப்பட்டுவிட்டன. பாரிய தேயிலை உற்பத்திக் கம்பெனிகள் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவுரைகளை இறுக்கமாக பின்பற்றும் அதேவேளையில், தேயிலை சிற்றுடமையாளர்கள் ஒரு சில இரசாயனங்களை மட்டுமே கையாளுகின்றனர் (Sunday Observer, September 17, 2006).
மனித சுகாதாரம், பயிர் சுகாதாரம் என்பன பற்றிய உடன்படிக்கையின் விதிகளை பூரணமாக பின்பற்றுவதற்கு இலங்கை முயன்றுவரும் அதேவேளையில், இது தொடர்பான சர்வதேச – தேசிய நியாயத்தன்மையை மதிப்பிடுவதில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இது தொடர்பாக நடைமுறையிலிருக்கும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதிலும், இது தொடர்பான உடன்படிக்கையோடு மேற்படி நடவடிக்கைகள் எந்தளவிற்கு ஒத்துப்போகின்றன என்பதை விளங்கிக் கொள்வதிலும் உள்ள பிரச்சினைகளை இங்கு குறிப்பிடலாம். இதன் விளைவாக, இவ்விதிகளின் தாக்கம் பற்றிய மதிப்பீடுகள் நம்பகத்தன்மை கொண்டனவாக இல்லை. மேலும், இவற்றை மதிப்பீடு செய்வதற்கு தரம் வாய்ந்த ஆய்வுகூடவசதிகளும், மனிதவளமும், நிதிவசதிகளும் இலங்கையிடம் இல்லை. இது ஏற்றுமதியாளருக்கு மட்டுமன்றி இறக்குமதியாளருக்கும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்விதிகளை நடைமுறைபடுத்துவதில் இலங்கை போன்ற விருத்தியடையும் நாடுகளுக்கு விசேடமானதும் வேறுபட்டதுமான பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இவ்விதிகளை அமுலாக்குவதில் விருத்தியடையும் நாடுகளுக்கு நீண்ட காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இறுப்புகளையும் மானியங்களையும் குறைப்பதிலுங்கூட இதேவித சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. விருத்தியடைந்த நாடுகள் வர்த்தகப்பண்டங்களின் மீதான இறுப்புகளை 2000ஆம் ஆண்டளவில் 36.0 வீதத்தால் குறைக்குமாறு விதிக்கப்பட்ட அதேவேளையில் விருத்தியடையும்நாடுகள் அவற்றை 2004ஆம் ஆண்டளவில் 15.0 வீதத்தால் குறைக்கவேண்டுமென விதிக்கப்பட்டது. இதுதவிர, வேறுபல சலுகைகளும் இந்நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளபோதும் நடைமுறையில் இச்சலுகைகள் செயற்படுத்தப்படுகின்றனவா என்பது பற்றி ஐயப்பாடுகள் தோன்றியுள்ளன. எனவே, உறுகுவேசுற்று பேச்சுவார்த்தைகளும் அவற்றின் விளைவாக ஏற்பட்ட மரக்கு உடன்படிக்கையும் விவசாயப்பண்டங்களின் வர்த்தகத்தில் பொதுவாகவும் தேயிலைவர்த்தகத்தில் குறிப்பாகவும் பல தாக்கங்களைக் கொண்டிருக்கும். மேலும், இலங்கை போன்ற விருத்தியடையும் நாடுகளுக்கு இவற்றால் பல சவால்களும் உருவாகியுள்ளன. இவற்றை எதிர்கொள்வதற்கு இலங்கை ஏற்கனவே சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.