இலங்கை : இனமேலாண்மைக்குத் திரும்புதல் - பகுதி 1
Arts
19 நிமிட வாசிப்பு

இலங்கை : இனத்துவ ஆட்சிக்குத் திரும்புதல் – பகுதி 1

January 4, 2025 | Ezhuna

ஈழத்தில் ஆயுதப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்த போர், அதன் இறுதி இனப்படுகொலையுடன் மட்டுமே முடிந்துவிடவில்லை; மாறாக, போரின் பின்னரான ஈழச் சூழலில், அதன் பின்னடைவுகளும் அடிப்படைச் சிக்கல்களும் இன்னும் பல கோணங்களில் மேற்கிளம்பவே செய்கின்றன. இந்தப் பின்னணியில், போரின் பின்னரான ஈழத்து நிலவரம் குறித்து அலசுவதற்கு புதிய வெளிகள் தேவைப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரைகள், கள ஆய்வுகள் ஊடான தரவுகளுடன் போருக்குப் பிந்தைய ஈழச் சூழல் குறித்த விவரங்களையும் அதன் நீண்டகால விளைவுகளையும் விவாதிக்க கூடிய சிறந்த தளமாக இருக்கின்றன. ஆனால், அவை துரதிஷ்டவசமாக வெகுஜனத் தளத்தில் அதிகமாகக் கவனம் பெறவில்லை. அந்த வகையில், ஈழத்தின் பின் – போர்க்காலச் சூழல் குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளிவருவதாக ‘பின் – போர்க்கால ஆய்வுகள்’ எனும் இத் தொடர் அமைகிறது.

ஆங்கில மூலம் : நீல் டி வோட்டா (Neil DeVotta)

Source – Sri Lanka : The Return to Ethnocracy, Journal of Democracy, Vol. 32, No. 1, January 2021, pp. 96–110.

இனம்சார் மதவாதப் பெருமெடுப்பும் இன முரண்பாடும் தலையெடுக்கும் நாட்களில் மக்களாட்சி அடிவாங்குகிறது. இலங்கையில் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பெரும்பான்மையினரால் முறையாகக் கையாளப்படாத நிலையில், 26 ஆண்டுகள், குருதி வழிந்த உள்நாட்டு யுத்தம் நிகழலாயிற்று. பெரும்பான்மையான பௌத்த – சிங்கள ஆட்சியாளர்களைக் கொண்ட அரசும், தனிநாட்டுக் கோரிக்கையாளர்களான தமிழீழ விடுதலைப் புலிகளும் மோதிக்கொண்டனர். இந்தச் யுத்த ஒப்புரவின்மை (Illiberalism) நிலையை அடுத்து, 2009 இல் போர் முடிந்த பின்னர், சர்வாதிகார ஆட்சியை நோக்கிய ஒரு நகர்வு முன்னெடுக்கப்பட்டது. ஆனால் 2015 இல் மக்கள், வாக்குகளின் வழியாக அதனைப் பின்தள்ளினர். பின்னர் மீண்டும், ஸ்ரீலங்காவின் ஒப்புரவற்ற மக்களாட்சியும் (இதை தாராளமற்ற மக்களாட்சி என்றும் சொல்லலாம் – Illiberal Democracy) சிதைக்கப்பட்ட மக்களாட்சியும் ஒருமுறை அதனை அந்தரக் கயிற்றில் தொங்க வைத்திருக்கிறது.  

22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில், 2019 இல் சிங்கள – பௌத்த தேசியவாதியான கோத்தபாய ராஜபக்சே 52% வாக்குகளால் வெற்றிபெற்றார். 2020 ஆகஸ்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் அதனுடைய துணைவர்களும் 150 ஆசனங்களைக் கொண்ட அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றார்கள். அந்தப் புதிய அரசு கோத்தபாயவின் மூத்தவரான மகிந்தவின் தலைமையில் அமைந்தது. அவரே 2005 – 2015 இல் ஜனாதிபதியாக இருந்தவர். இந்த ராஜபக்ச சகோதரர்களின் எழுச்சி மீண்டும் ஒருமுறை சர்வாதிகாரப் போக்கை நோக்கியே வழிகாட்டியது. அது சிங்கள பௌத்தர்களின் ஒருங்கிணைப்பின் ஊடாக இனவாத ஆட்சி நிலையை எட்டியது. பன்முகத்தன்மையும் ஒப்புரவுநிலையும், அந்தத் தீவில் கேள்விக்குறியானது. இலங்கை 1982 இல் இருந்து எட்டு தடவை ஜனாதிபதி தேர்தலைச் சந்தித்திருக்கிறது. 1947 இல் இருந்து 16 தடவை பாராளுமன்றத் தேர்தலையும் சந்தித்திருக்கிறது. 1931 இல் முன்பே திட்டமிட்டு சுதந்திரத்தை வழங்குவதற்கு முடிவெடுத்த பிரித்தானியாவினால், இலங்கையில் தேர்தல் முறைகள் பயிற்றப்பட்டதால், அது ஆசியாவின் மிகப் பழமையான மக்களாட்சி நாடு என்ற பெயரைப் பெற்றது. இலங்கை மக்கள் வாக்களிப்பதற்கு அதிக முனைப்பாக இருப்பார்கள். 2019 ஜனாதிபதி தேர்தலில் 84% வாக்களிப்பு நிகழ்ந்திருந்தது. கோவிட் காரணமாக இரண்டு தடவை பிற்போடப்பட்டும், அதன் பிறகு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 76% வாக்களிப்பு இருந்தது.

இது ஒப்பீட்டளவில் நிறையப் பேர் வாக்களித்த தேர்தல் எனலாம். எனினும் ஒரு நல்ல அரசுமுறையையும் ஒப்புரவுடனான மக்களாட்சி ஒன்றையும் தருவதற்குரிய உறுதிப்பாடு எதுவும் அங்கே இருக்கவில்லை. பெரும்பான்மைவாதத்தை அண்டி அரசமைக்கும் சமூகங்களில் பலவேளைகளில் இதுவே வாக்களிப்பின் ஊடாக நடக்கிறது. இதற்கு இலங்கை சிறந்த உதாரணம். 1956 தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைத்த இனமையவாத அரசையும் அதன் பின்னான உள்நாட்டுப் போரையுமே, மேற்படி இரு தேர்தல்களும் நினைவூட்டின.

1956 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தல் மக்களாட்சி வழிமுறைகள் ஊடாக நிகழ்ந்த புரட்சிகர நிலையைக் காட்டிநின்றது. அந்தத் தேர்தலில், SLFP இற்குப் பின்னால் சிங்களச் சக்திகள் அணிதிரண்டன. குறிப்பாக கிராமப் பகுதிகளைச் சேர்ந்த, சிங்களப் பண்பாட்டில் அதிகம் திளைத்த சிங்களம் பேசும் பெரும்பான்மையினரின் திரட்சி SLFP இற்குப் பின்னால் திரண்டது. தொடர்ந்து வந்த SLFP இனால் முன்னெடுக்கப்பட்ட அரசும், மேற்குலகுச் சார்புடைய UNP இனால் முன்னெடுக்கப்பட்ட அரசும் இனத்தேசியவாத உணர்வுப்போக்கை சிறுபான்மையினரை ஓரங்கட்டப் பயன்படுத்திக்கொண்டன. SLFP  அதற்கும் மேலாகச் சிங்கள – பௌத்த பெரும்பான்மையினரின் பொருளாதார மேம்பாட்டிற்கு அதைப் பயன்படுத்தியது. 

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் தமிழ்ச் சிறுபான்மையினர் அதிகாரத்திலும் இராணுவத்திலும் அதிக பங்களிப்பைப் பெற்றிருந்தனர். SLFP இது அனைத்தையும் மாற்றியமைத்தது. 1956 இல், ராணுவத்தில் ஐந்தில் மூன்று தமிழர்களாக இருந்தனர். 1975 அதிகார வட்டத்தில் 30 வீதத்தில் இருந்தவர்கள், 1956 – 1970 இற்கு இடையில் ஐந்து வீதமாகக் குறைந்தனர். சுதந்திரம் கிடைத்த அந்த நேரத்தில் இலங்கைத் தமிழர்கள் 11 விழுக்காடு மட்டுமே மொத்தக் குடித்தொகையை கொண்டிருந்தனர். இந்த வீதாசார ஆட்குறைப்பு அரசிலும் படையிலும் நிகழ்வது புரிந்து கொள்ளக்கூடியது தான். ஆனால் 1956 இற்குப் பிறகு என்ன நடந்தது என்றால், ஒரு இனமையவாத அரசு அதைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு, இனம் சார்ந்த நசுக்கல்களைத் செய்யத்தொடங்கியது. சிங்களம், ஆங்கிலத்தினை இடம்மாற்றி இதை இடம்பெயர்த்தது. அரசு மொழியாகச் சிங்களம் ஆனது. அது பல தமிழர்களை அதிகாரத்திலிருந்து வெளியேற்றிவிட்டது; ராணுவத்திலிருந்தும் வெளியேற்றிவிட்டது. பல்கலைக்கழகங்களிலும் அந்த இடங்களைச் சிங்களவர்கள் கைமாற்றி எடுத்துக் கொண்டார்கள். 

சிங்கள – பௌத்த தேசியவாதம், மொழி, சமயம், புராண வரலாறு ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஸ்ரீலங்கா பௌத்தத்தின் காப்பகம் என்பதாகச் சித்திரித்தது. பௌத்த சமயத்தை பாதுகாக்கவேண்டியது தங்களுடைய கடமையென முன்வைத்தது. சிங்கள மொழி, பெரும்பான்மையினரின் மொழியாக இருந்தது. மொழிசார்ந்த பௌத்த மத பெரும்பான்மை வாதத்தை தூக்கிப் பிடிப்பதற்கு சிறப்பான வழியாக அது அவர்களுக்கு அமைந்தது. 70 விழுக்காடு மக்கள் தொகையைக் கொண்ட சிங்கள பௌத்தர்கள், அரசியல் யாப்பின் பாதுகாப்போடு ‘ஒருவருக்கு ஒரு ஓட்டு’ என்ற கோசத்தோடு, சிறுபான்மையினருக்கு மிகக்குறைந்த அளவிலானவற்றைத் தவிர வேறு எதையும் வழங்கத் துணியவில்லை. சிங்களத் தேசியவாதத்தை அவர்களுடைய தேவைகளுக்குப் பயன்படுத்தவும் முனைந்தனர்.

இராணுவ ரீதியான தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் முடிவு தேசியவாதிகளை இன்னும் திடமாக்கியது. அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசு சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தை கைக்கெள்வது என்பதையே முதன்மையாகக் கொண்டு செயற்பட்டது. இதன் சார்பாக எதேச்சதிகாரமிக்க அரசாங்கத்தை விரிவாக்குவதை தன்னுடைய தலையான நோக்காகக் கொண்டு, தன்னுடைய குடும்ப அரசியல் ஆட்சி வழிமுறையைப் பலப்படுத்த முனைந்தது. தமிழர்களை சிறுபான்மையாகக் கொண்ட வடக்கிலும் – கிழக்கிலும் ராணுவ மயப்படுத்தலும் சிங்கள காலனியாக்கமும் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. முஸ்லிம் சிறுபான்மையின் மீது தாக்குதல்களும் நடந்தன. அன்றைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்குவந்த ராஜபக்ச அரசு இந்த இன ஒடுக்குமுறை குறித்து சிறிதளவே கரிசனை கொண்டது. 

ராஜபக்ச ராஜ்ஜியம் 

தெற்காசியாவில், மன்னர் ஆட்சிமுறை பலகாலமாக இருந்து வருகிறது. SLFP இனதும் UNP இனதும் அவ்வப்போதைய தலைவர்கள் இதனை இலங்கையில் சோதித்துப் பார்த்தனர். 1970 இல், 24 வயதுடைய மகிந்த முதல் முறையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்போது, மகிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்ச உடைய தகப்பனாரும், மாமனாரும் தென்னிலங்கையில் பிரபலமான SLFP இன் அரசியல்வாதிகளாகத் இருந்தனர். 2005 இல் ராஜபக்ச, சந்திரிகா குமாரதுங்காவை அடுத்து, தலைவராக SLFP இற்குப் பொறுப்பேற்றார். அடுத்து வந்த தேர்தலில் UNP இனை மிகச் சிறியளவிலான வாக்குகளில் ராஜபக்ச வென்றார். இது LTTE இன் உதவியோடு நடந்தது. LTTE, ரணில் அரசுக்கு வந்தால் அரசியல் நிலைகள் மாறும்; அது தங்களுக்குச் சாதகமாக அமையாது என்பதால் தமிழ் மக்களைத் தேர்தல்  பகிஷ்கரிப்புச் செய்ய வைத்ததனால் வந்த விளைவே இது எனலாம். ஆனால் அது எதிர்விளைவையே கொடுத்தது. ராஜபக்ச அரசு, 2009 வரை, போரை விடாப்படியாக நடத்தியது. 

ராஜபக்ச ஒரு சாதாரண தேசியவாதிதான். ஆனால் LTTE உடனான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும், அது நடக்கமுடியாதது என்று பலரும் சொல்லியிருந்தும்கூட அது நடந்துவிட்டதனால், சிங்கள மக்கள் பழைய காலத்தில் இருந்த அரசர்களைப் போல ராஜபக்சவைப் பார்க்கத் தொடங்கினார்கள். ராஜபக்ச அதனைக் காசாக்கிக் கொண்டு, அந்தப் பிரபலத்தை மேலும் காசாக்குவதற்காக, கூறிய காலத்துக்கு முன்பாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். 2010 ஆம் ஆண்டு அவர் 58 விழுக்காடு வாக்குகளால் வெற்றி பெற்றார். இதை பொது மக்கள் தந்த வாய்ப்பாகக் கருதாமல் எதேச்சதிகாரம், ராணுவமயமாக்கல், பெரும்பான்மைவாதம் போன்ற பலவற்றைச் செயற்படுத்தத் தொடங்கினார். ராஜபக்ச குடும்பத்தினர் இலங்கை அரசின் அனைத்து உயரிய மட்டங்களையும் பிடித்து வைத்துக் கொண்டார்கள். 

1942 இல் பிறந்த மகிந்தவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஆனார். 1949 இல் பிறந்த ராஜபக்சவின் இளைய சகோதரர் பாதுகாப்புத்துறையையும், 1951 இல் பிறந்த பசில் ராஜபக்ச பொருளாதாரத்துறையையும் கையில் வைத்துக் கொண்டனர். பல இளைய குடும்ப உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சிறிய சிறிய மூலை முடுக்குகளில் எல்லாம் இருந்து கொண்டனர். 2009 இல் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் பெரும் பங்கை வகித்தது கோத்தபாயா. இரண்டு தரப்புமே போர்க் குற்றங்களைப் புரிந்து இருந்தாலும், பல LTTE உயர் மட்டத் தலைவர்களைக் கொன்றது, சரணடைந்தவர்களைக் கொன்றது போன்றவற்றினால் போர்க் குற்றம் இழைத்த முக்கியமான அரசாங்க ஆளுமையாகவே கோத்தபாய இருக்கிறார். 

ராஜபக்ச அரசு தமிழ் மக்களோடு ஒப்புரவையோ அல்லது பொறுப்புக் கூறலையோ செய்வதைத் தவிர்த்தது. சிங்கள – பௌத்த பிக்குகளும் ரவுடிகளும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும்போது அவ் அரசு பார்த்துக் கொண்டிருந்தது. இலங்கை முஸ்லிம்கள் தமிழே பேசுகின்றனர். ஆனால் அவர்கள் தங்களுடைய இனத்துவ அடையாளமாக மதத்தை முன்வைக்கின்றனர். இது 1990 இல், LTTE இனருக்கும் முஸ்லிம்களுக்குமான முறுகலையும், வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றத்தையும் ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் கிழக்கிலும் தாக்கப்பட்டு வந்தனர். அவர்களுடைய பள்ளிவாசல்களிலும் அந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. LTTE இனருடன் பரிச்சயமான சில முஸ்லிம்கள், ராணுவத்துக்காக உளவு பார்த்திருந்தார்கள். அதன் வழியாக அவர்கள் அரசு, அரசியல் சார் லாபங்களையும் சலுகைகளையும் இலங்கை அரசிலிருந்து பெறுவதற்கு முனைந்தார்கள். ஆகவே தமிழர்களோடு ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் ‘நல்ல சிறுபான்மையினராக’ அடையாளப்படுத்தப்பட்டார்கள். உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த வேளையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் கதையாடல்களும் முன்னணிக்கு வரத்துவங்கின. 

போர் நின்றுவிட்டிருந்தது, ஆனால் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு நிற்கவில்லை. பாதுகாப்பு அமைச்சராக ராஜபக்சவும், பாதுகாப்புச் செயலாளராக கோத்தபாயாவும் இருந்தபோது, வடக்கிலும் கிழக்கிலும் பல படை முகாம்கள் அமைக்கப்பட்டன. ராணுவம் பல புதுத் தளங்களில், செயற்பாடுகளில் தலைகாட்டத் துவங்கியது. அந்தச் சமகாலத்தில் சீனா பல உட்கட்டுமான ஒப்பந்தங்களைக் கையகப்படுத்தியது. ராஜபக்ச குடும்பத்தினராலும் அவர்களுடைய தொண்டர் அடிப்பொடிகளாலும் இலாபமடைந்த இந்த முதலீடுகள், அறவிட முடியாக் கடன் வகையில் சேர்ந்து கொண்டன. 

இவை அனைத்தும் எதேச்சதிகாரத்தை பரப்புவதாகவே அமைந்தது. சட்டம், தரம் இழந்து போனது. அரசியல் எதிரிகள் நெருக்குவாரத்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள். குடிச் சமூக அமைப்புகள் நெருக்குவாரத்துக்கு உள்ளாக்கப்பட்டன. விமர்சகர்கள் காணாமல் போனார்கள், கொல்லப்பட்டார்கள். பெரும்பாலான ஊடகங்கள் தாங்களே தங்களைத் தணிக்கைசெய்து கொண்டன. பல பத்திரிகையாளர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். உள்நாட்டுப் போர் நடந்த மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது ஆட்சிக் காலத்தில், சட்டத்துக்குப் புறம்பான அரசியலமைப்புக்குப் புறம்பான செயல்களை அவர் நியாயப்படுத்தினார். ஆனால் ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் எதேச்சதிகாரம் செயற்படத்துவங்கியது. 1986 இல் பிறந்த ராஜபக்சவினுடைய மூத்த மகனான நாமல் ராஜபக்சவை அடுத்த வாரிசாக அடையாளப்படுத்திக் கொண்டு ஒரு மன்னர் ஆட்சிக் குடும்பம் போல ராஜபக்ச குடும்பம் செயற்பட்டது.

முந்தி வைக்கப்பட்ட தேர்தல் பின்னால் உதைத்தது 

1978 இல் அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் பதினேழாவது திருத்தத்தை, இதற்கு முந்திய அரசு செய்திருந்தது. அரசியலமைப்பின் கீழ் அதில் பல சுயாதீன அமைச்சுகள், பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை இல்லாமல் செய்து அதிகாரங்களை தனக்கு கீழ் கொண்டு வருவதற்காக 18ஆவது திருத்தத்தச் சட்டத்தை ராஜபக்ச கொண்டு வந்தார். இது அரசியல் அமைப்புச் சட்டக் குழுக்களின் அதிகாரத்தையும் அற்றுப் போகச்செய்தது. தேர்தல்கள், நீதிமன்றங்கள், காவல்துறை, சமூக சேவைகள், நிதித்துறை ஆகியவற்றோடு அதைப் போன்ற பல பிரிவுகளையும், ஊழல் – லஞ்சம் போன்றவற்றையும், மனித உரிமைகளையும் கண்காணிப்பதை இந்தச் சுயாதீனக் குழுக்கள் செய்து வந்தன. அவற்றின் அதிகாரம் அனைத்தையும் இல்லாமல் செய்தது புதிய சட்டப்பிரிவு. முக்கியமாக ஒரு ஜனாதிபதி இரண்டு தரம் தான் தேர்தலில் நின்று பதவிக்கு வரலாம் என்பதையும் இல்லாமல் செய்ததுதான் அந்தப் 18 ஆவது சட்டப்பிரிவின் மாற்றம். இன்னும் ஒரு முறை, தான் மூன்றாவதாகவும் பதவிக்கு வருவதற்கான சரத்தையும் ராஜபக்சே அதிலே சேர்த்தார். 2015 ஜனவரி அவர் இதைச் செய்தார். ஆனால் அந்தத் திட்டம் திசைமாறிப் போனது. அவர் மைத்திரிபால சிறிசேனாவிடம் தோற்றுப் போனார். அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த SLFP உடைய பொதுச் செயலாளராகவும் சிறிசேன இருந்திருந்தார். 

உச்ச அதிகாரம் அனைத்தையும் கைப்பற்றி வைத்திருந்தது, ஊழல், சட்டத்தின் ஆட்சியை இல்லாமல் செய்தது என்பவை ராஜபக்சவோடு ஒட்டிவிட்டவையாக இருந்த நேரத்தில், சிங்கள – பௌத்தர்கள் சிறுபான்மை மக்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அவரைத் தோல்வியடைய வைத்தார்கள். அவர் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் அதற்குப் பணிந்து போனார். தன்னுடைய பாவத்தை, அடையாளத்தை காட்டுவதற்காக பௌத்த கோயில்களுக்கு அவர் அடிக்கடி போகத் தொடங்கினர். ஒவ்வொரு தடவை அவர் கோயிலுக்குப் போவதும் ஒவ்வொரு பேரணியாக மாறி இருந்தது. அவருக்குச் சார்பான ஊடகங்களும் அதை ஊதிப்பெரிதுபடுத்திக் காட்டின. வெற்றியடைந்த மைத்திரியைவிட ராஜபக்சவைப் பெரிதாக காட்டினர். ‘Bring back Mahinda’ என்ற கோஷத்துடன் அவருடைய ஆதரவாளர்கள் பேரணியும் நடத்தினார்கள். 

ராஜபக்சவின் ஆதரவாளர்கள், SLFP-UNP இணைந்த அரசு தகுதி இல்லாதது என்று பரப்புரை செய்தனர். ஏனென்றால் பெரும்பாலான பௌத்தர்கள் ராஜபக்சவுக்கு வாக்களித்திருந்தனர். அதேநேரம் (TNA) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைவர் பாராளுமன்ற சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதனால், ராஜபக்ச சார்புடைய SLFP இனர், தம்மைவிடக் குறைந்த பாராளுமன்ற இருக்கைகளைக் கைப்பற்றிய TNA தரப்பிலிருந்து எப்படி சபாநாயகர் தெரிவுசெய்யப்படலாம் என்று கேள்வி எழுப்பினார்கள்.

சிங்கள – பௌத்த தேசியவாதிகள் இந்தச் சொல்லாடலை வைத்து அடைகாக்கத் தொடங்கினார்கள். ஏனென்றால் சிங்கள பௌத்தர்கள் மட்டும்தான் அரசின் உயர் அதிகாரங்களில் வரவேண்டும் என்பதே அவர்களுடைய கனவு. அந்த நேரத்தில்  SLFP ராஜபக்ச ஆதரவாளர்கள், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தார்கள். ஆனால் SLFP இன் இன்னொரு பிரிவினர் UNP உடன் சேர்ந்த ஆட்சி அமைப்புக்கு ஆதரவைச் செலுத்தினார்கள். பாராளுமன்ற வாக்களிப்புகளின் போது SLFP ஒரே நேரத்தில் எதிர்க்கட்சி ஆகவும் அரசுக் கட்சியாகவும் இருந்து கொண்டிருந்தது. 

SLFP, UNP கூட்டு ஆட்சி 2015 ஆகஸ்ட் பாராளுமன்றத்தில் நன்றாகவே நடந்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் UNP இனைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இலங்கை மத்திய வங்கியின் பணமுறிகள் தொடர்பான சில செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். பின்னர், அவை ஊழலாக அடையாளம் காணப்பட்டது. அது தொடர்பான பிரச்சினைகள் தலைதூக்கின. அந்த அரசு ஊழலை மறுசீரமைப்பதாகச் சவால் விட்டுக் கொண்டது. ஆனால், கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட முறையற்ற அரசுச் செயற்பாடுகள் இதனால் மூடிமறைக்கப்பட்டன. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவும் அவருடைய நம்பிக்கையாளர்களும் ஜனாதிபதி சிறிசேனாவுடன் ஒன்றிப்போக முடியாமல் இருந்தார்கள். சமூக, பண்பாட்டு வேறுபாடுகளும் இதற்கு ஓரளவு காரணம் எனலாம். சிறிசேனா கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்தவர். இவர்களோ – ரணில் தரப்பினர் – நகர்ப்புறத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களுடைய பேச்சுவார்த்தைகள் முறிந்து போக, தான்தோன்றித்தனமாக, ஒரு திசையில் விக்ரமசிங்க செல்ல ஆரம்பித்தார். தன்னுடைய UNP கட்சி சிறிசேனாவுடன் சேர்ந்தபடியால்தான் ராஜபக்சவை சிறிசேனா வென்றார் என்பதாக அவர் நம்பிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சிறிசேனா ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ராஜபக்சவை 2018 இல் பிரதமர் ஆக்கினார். இரண்டு மாத காலம் இழுபறியிலிருந்த யார் பிரதமர் என்ற போட்டி, உச்சநீதிமன்றத்தில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரும்வரை தொடர்ந்து கொண்டிருந்தது. 

ராஜபக்சவின் எதேச்சதிகார அரசியலிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காக வாக்களித்தவர்களுக்கும் செயற்பட்டவர்களுக்கும் சிறிசேனாவின் அரசு திருப்தி அளிக்கவில்லை. அதன் ஒரே ஒரு சாதனையாகச் சொல்லக்கூடியது என்னவென்றால், தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தையும், 19 ஆவது சரத்தையும் அறிமுகப்படுத்தியது தான். அந்த 19 ஆவது திருத்தம் செய்த வேலை, ராஜபக்ச பதினெட்டாவது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவர முனைந்ததை, வெளியே தூக்கிப் போட்டதுதான். 17 ஆவது திருத்தச் சட்டத்துக்குள் கொண்டுவரப்பட்ட சுயாதீன அமைப்புகள் மீண்டும் நிறுவப்பட்டன. குடிச் சமூகங்களுடைய பிரதிநிதித்துவம், அரசியலமைப்புக் குழுமத்தில் மீளவும் அமைத்துக் கொள்ளப்பட்டது. இரண்டு தடவை மட்டுமே ஒருவர் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கலாம் என்பதையும் 19 ஆவது திருத்தச் சட்டம் மீளநிறுவியது. அத்தோடு ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாகக் குறைத்தது. ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு உரிய அதிகாரத்தையும் அது தடுத்தது. 

இந்தச் திருத்தச் சட்டம் முழுவெற்றியை அடையாமல், அது சில அரசியலமைப்பின் உப பிரிவுகளினால் சிக்கல்களையும் எதிர்கொண்டது. அதேபோல இந்தத் திருத்தச் சட்டம் ராஜபக்ச மீண்டும் வருவார் என்று எதிர்பார்த்த அவருடைய ஆதரவாளர்களுடைய வயிற்றில் நெருப்பைப் பற்றவைத்தது. அதேபோல இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் நாட்டின் உயர் பதவியை வகிக்க முடியாது என்ற சரத்தும், ராஜபக்சவின் இரண்டு இளைய சகோதரர்களையும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தது. அதேபோல ‘ஜனாதிபதியாவதற்கான வயதெல்லை 35’ என்ற சரத்தும் ராஜபக்சவின் மகன் நாமல், ஜனாதிபதியாகுவதற்கான தகுதியை 2021 வரை தடுத்துவிட்டது. 

SLFP கட்சியை சிறிசேனா தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருக்கையில் ராஜபக்ச ஆதரவாளர்கள் SLFF என்ற கட்சியை 2016 இல் துவங்கினார்கள். 2018 இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பல இடங்களில் இந்தக் கட்சி மிகப் பெரும்பான்மை வெற்றியை ஈட்டியது. இது UNP இனையும் SLFP இனையும் வீழ்த்தி அந்த வெற்றியைக் கண்டது. அந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் மஹிந்த ராஜபக்ச SLFF கட்சியோடு இணைந்து கொண்டார். ‘மஹிந்த ராஜபக்சவை திருப்பி அழைத்து வருவோம்’ என்ற அமைப்பினரும் SLFF கட்சியினரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டார்கள். 

2019 இல் ஈஸ்டர் ஞாயிறுக் குண்டு வெடிப்பு நடந்தது. அதில் 267 மக்கள் இறந்தார்கள். இது சிறிசேனா – விக்ரமசிங்க அரசாங்கத்தினிடையே மிகப் பலத்த முரண்பாடுகளை உருவாக்கியது. LTTE உடனான போரில் ராஜபக்ச பலமாகச் செயற்பட்டார்; ஆனால் இதைக் (ஈஸ்டர் ஞாயிறுக் குண்டு வெடிப்பைக்) கூடக் கட்டுப்படுத்த முடியாத அளவில் அரசாங்கம் இருக்கிறது என விமர்சனங்கள் எழுப்பப்பட்டது. முஸ்லிம் தலைவர்கள் பலரும், இந்திய உளவு நிறுவனங்களும், புலனாய்வு நிறுவனங்கள் பலவும் எச்சரித்த நிலையில், இந்தக் குண்டு வெடிப்பு நடந்திருந்தது. அது மிகப்பெரிய குற்றமாக முன்வைக்கப்பட்டது. முஸ்லிம்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. சிறிசேனா – விக்கிரமசிங்க இடையிலான முறுகல் நிலை தொடர்ந்தது. அதேபோல முஸ்லிம்களின் மீது பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவது தவறு என ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் கேட்டுக் கொண்டார்கள். 

தேசியவாதச் சக்திகள் கோத்தபாய ராஜபக்ச, அமெரிக்க இரட்டைக் குடியுரிமையைத் துறந்துவிட்டு ஜனாதிபதி தேர்தலில் நிற்க வேண்டும் எனறு வலியுறுத்தத் தொடங்கினார்கள். இந்தக் குண்டு வெடிப்புக்கு ஒரு வாரம் முன்னதாகத்தான் கோத்தபாய ராஜபக்ச இரட்டைக் குடியுரிமையைத் துறந்துவிட்டு, தேர்தலில் நிற்கப் போவதாகச் சொல்லி இருந்தார். அதன் இரண்டு வாரங்களின் பின்பாக கோத்தபாய ராஜபக்ச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் தன்னை அறிவித்துக் கொண்டார். 

விக்கிரமசிங்க 20 ஆண்டுகளாக ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இந்தக் குண்டு வெடிப்பு அதற்குச் சிக்கலை ஏற்படுத்தியது. அவர் அதிகமாக மேற்கு நாடுகளைச் சார்ந்திருக்கிறார் என்றும், தேரவாத பௌத்தர்களுக்கு அவர் போதுமானவைகளைச் செய்யவில்லையென்றும் விமர்சனம் வைக்கப்பட்டது. அதனால் UNP கட்சி, அந்தக் கட்சியினுடைய தலைவராகவும் ஜனாதிபதி வேட்பாளராகவும் சஜித் பிரேமதாசாவை அறிவித்தது. 

கோத்தபாயவின் பிரச்சாரம் தேசிய பாதுகாப்பு என்பதை முன்னிறுத்தியது. அது சாதாரண பௌத்தர்களுக்கும், தொழில்முறைக் குழுக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் அவரை ஒரு சிறந்த திறமையாளராக அடையாளம் காட்டிய பரப்புரையாக அமைந்தது. பெரும்பான்மையான பௌத்தர்கள் அவருக்கே வாக்களித்தனர். ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலும் சிறுபான்மையினர் UNP இற்கே வாக்களிப்பர். இந்தத் தடவை தமிழர்களும் முஸ்லிம்களும் அப்படியேதான் வாக்களித்திருந்தனர். ஆறு விழுக்காடுகொண்ட கத்தோலிக்கர்கள் பெரும்பாலும் UNP இற்கே வாக்களிப்பர். ஆனால் இந்தத் தேர்தலில் பெரும்பாலான பலதரப்பும் கோத்தபாயவையே ஆதரித்தனர். இதற்கு, சிறிசேன – விக்கிரமசிங்க கூட்டு நடத்திய ஆட்சி, நாட்டை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வரைக்கும் கொண்டுவந்துவிட்டது என்று மக்கள் நினைத்தமையே காரணமாகும். தேர்தலில் ஓர் இழுபறி நிலைதான் வரும் என்று எண்ணப்பட்ட போதும் கோத்தபாய 52 விழுக்காட்டினால் வெற்றிபெற்றார். 

கோத்தபாய ஜனாதிபதியாக வந்தவுடனேயே தனது அண்ணன் மஹிந்தவை பிரதமராக அறிவித்தார். மார்ச் மாதம் 2020 ஆம் ஆண்டு தன்னுடைய ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே அவர் பாராளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலை அறிவித்தார். அந்த நேரத்தில் கோவிட் காரணமாக தேர்தல் தள்ளிப்போடப்பட்டது. அதன் பிறகும் 60% வாக்குகளோடு SLPP கட்சி 154 இருக்கைகளுடன் பாரிய வெற்றியைப் பெற்றது. SJB கட்சி 54 இருக்கைகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது; சஜித் பிரேமதாச அதனுடைய தலைவராக இருந்தார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்நிலை எடுத்த UNP உறுப்பினர்களுடைய கட்சியாக அது இருந்தது. 

கோத்தபாயவின் SLPP கட்சி உள்ளூராட்சித் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பிரதமர் – பாராளுமன்றத் தேர்தல் போன்றவை அனைத்திலும் பெரும்பான்மை வெற்றிகளைப் பெற்றது. இலங்கை வரலாற்றில் இவ்வாறு நிகழ்ந்ததில்லை. இதற்கு நாலு காரணங்கள் சொல்லப்படுகிறது. முதலாவது சிறிசேனா  – விக்கிரமசிங்க ஆட்சி நோக்கம் ஏதுமற்றுச் செயற்பட்டது; இரண்டாவது ஈஸ்டர் குண்டு வெடிப்பு; மூன்றாவது UNP கட்சியினுள்ளிருந்த உட்புறச் சிக்கல்; நான்காவது கோத்தபாய அரசு கோவிட் நிலைமையைச் சிறப்பாகக் கையாண்டது என மக்கள் நினைத்தார்கள். அரசு ஆதரவு ஊடகங்கள் இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டு, கோவிட் நிலை மிகச் சிறப்பானதாகக் கையாளப்பட்டதாகப் புகழ்பாடின. அதனால் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்த வாக்காளர் ஆதரவு கோத்தபாய தரப்பிற்குத் தாரளமாகக் கிடைத்தது. 

UNP கட்சியும் அதல பாதாளத்துக்குச் சென்றிருந்தது. 106 இருக்கைகள் கொண்டிருந்த கட்சி, தேசியப் பட்டியல் ஊடாக மட்டுமே ஒரே ஒரு இருக்கையை வைத்துக்கொண்டு பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்தது. 2015 இல் UNP கட்சி 46 விழுக்காடு வாக்குகள் பெற்றிருந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அது 2 விழுக்காட்டிற்குச் சற்று அதிகமாக இருந்தது.

சிறிசேனா உட்படப் பதின்மூன்றுபேர் SLFP கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் SLPP இன் கீழ் நின்றுதான் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இது மகிந்தவின் செல்வாக்கை வெளிப்படையாகக் காட்டியது. SLFP ஆதரவாளர்கள் எளிதாக மகிந்த குடும்பத்தின் SLPP கட்சியின் பக்கம் சாய்ந்திருந்தார்கள். கோத்தபாய உட்பட ராஜபக்ச குடும்பம், உச்சநிலை அதிகாரத்தையும் சிங்கள – பௌத்த தேசியவாதிகளிடையே மிகப்பெரிய நற்பெயரையும் பெற்றது. 

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

3276 பார்வைகள்

About the Author

வின்சென்ட் போல் சந்தியாப்பிள்ளை

வின்சென்ட் போல் சந்தியாப்பிள்ளை (B.Sc., M.A, M.Phil) அவர்கள், 1966 இல், யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் உள்ள ஊறணி எனும் இடத்தில் பிறந்தார். ஆரம்பக்கல்வியை இளவாலை என்றியரசர் கல்லூரியில் பயின்றார். உயர்கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கற்றார். கனடாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்திய தமிழியல் பட்டப்படிப்பில், 5 - 6 ஆண்டுகள் தமிழர் மெய்யியல், நாட்டார் வழக்காற்றியல், இலக்கியத் திறனாய்வு போன்ற பாடங்களைக் கற்பித்திருக்கிறார். கல்லூரிக் காலத்தில் நாத்திகம், மார்க்ஸிசம் போன்ற கருத்தியல்களில் ஈடுபாடு காட்டிவந்தார். பின்னர் கற்கைப் புலத்தினூடாக மெய்யியல், தத்துவம் என்பவற்றில் ஆர்வம் செலுத்தினார். தற்போது சோதிடம், ஹோமியோபதி, தமிழ்மொழி போன்றன தொடர்பாகக் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்