இலங்கையின் இடுக்கண்
Arts
20 நிமிட வாசிப்பு

இலங்கையின் இடுக்கண்

February 4, 2025 | Ezhuna

ஈழத்தில் ஆயுதப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்த போர், அதன் இறுதி இனப்படுகொலையுடன் மட்டுமே முடிந்துவிடவில்லை; மாறாக, போரின் பின்னரான ஈழச் சூழலில், அதன் பின்னடைவுகளும் அடிப்படைச் சிக்கல்களும் இன்னும் பல கோணங்களில் மேற்கிளம்பவே செய்கின்றன. இந்தப் பின்னணியில், போரின் பின்னரான ஈழத்து நிலவரம் குறித்து அலசுவதற்கு புதிய வெளிகள் தேவைப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரைகள், கள ஆய்வுகள் ஊடான தரவுகளுடன் போருக்குப் பிந்தைய ஈழச் சூழல் குறித்த விவரங்களையும் அதன் நீண்டகால விளைவுகளையும் விவாதிக்க கூடிய சிறந்த தளமாக இருக்கின்றன. ஆனால், அவை துரதிஷ்டவசமாக வெகுஜனத் தளத்தில் அதிகமாகக் கவனம் பெறவில்லை. அந்த வகையில், ஈழத்தின் பின் – போர்க்காலச் சூழல் குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளிவருவதாக ‘பின் – போர்க்கால ஆய்வுகள்’ எனும் இத் தொடர் அமைகிறது.

ஆங்கில மூலம் : நீல் டி வோட்டா (Neil DeVotta)

Source : Sri Lanka’s Agony, Journal of Democracy, Vol.33, No.3, July 2022, pp. 92-99.

சர்வாதிகாரம் படைத்த ஓர் குழுவில் இருந்துகொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருப்பவர்கள் இந்தத் தீவை வறுமையிலும் பட்டினியிலும் தள்ளியிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் தவறான ஆட்சிமுறைக்குப் பின்னணியாக ஆழத்தில் அமைந்திருப்பது நீண்டகாலப் பிரச்சினையான பெரும்பான்மையினரின் தடையற்ற ஆட்சிதான்.

– Journal of Democracy –

ஏறக்குறைய முப்பதாண்டுகள் நடந்தேறிய ரத்தக்களரி ஏற்படுத்திய இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 மே மாதத்தில் முடிவுக்கு வந்தபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் படங்கள் உள்ள சுவரொட்டிகளுக்கு முன்னால் மக்கள் சரணாகதியாகி நின்று புகைப்படமெடுத்துக் கொண்டார்கள். நன்றியுணர்வு பெருக்கெடுக்க வழிபட்டார்கள். தமிழ்த் தனிநாட்டுக் கோரிக்கையாளர்களை வெற்றிகொள்ள வேண்டும் என்பதற்காகச் சிறுபான்மைத் தமிழர்களின் மீது நிகழ்த்தப்பட்டதாகச் சொல்லப்படும் போர்க்குற்றங்கள் அனைத்தையும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமலேயே அவர்கள் இதனைச் செய்தார்கள். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அதே மாதத்தில் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் மகிந்தவை பிரதமர் பதவியிலிருந்து விலகச்செய்தது. இது அவரது மற்ற இரண்டு உடன்பிறப்புகளும், மகிந்தவின் மகன் நாமலும் அமைச்சரவையில் இணைந்து தங்கள் அதிகாரங்களைக் கைப்பற்ற நினைத்த சில நாட்களில் நடந்தேறியது.

இழிவான கண்டனத்துக்குரியதென்பதாகப் பொருள்படும் வகையில், போராட்டக்காரர்களிடமிருந்து தப்பிக்கவென, பிரதமர் இல்லத்திலிருந்து 76 வயதான மகிந்த ராஜபக்ச இடம்பெயர்க்கப்பட்டார். அவரது வண்டிகளின் தொடர், கடற்படைத் தளத்தை நோக்கிப் போகும்போது மக்கள் திரளைக் கட்டுப்படுத்த வானத்தை நோக்கிய துப்பாக்கிப் பிரயோகமும் நடத்தப்பட்டது. இது பிரச்சினையின் முடிவு அல்ல. மகிந்தவும் அவரது சகபாடிகளும் ராஜபக்சவுக்கு எதிரான போராட்டக்காரர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். இந்த மேலெழுந்த நிகழ்வின் பின்னர் ராஜபக்சவுக்கு எதிரானவர்கள், ராஜபக்சவுக்கு ஆதரவான மேயர்கள், பராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், பணிமனைகள், வாகனங்கள் எனப் பலவற்றையும் தீ வைக்கத் தொடங்கினார்கள். இலங்கைத் தீவு முழுவதும் இப்படி நடந்ததில் 21.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டது எனக் கணக்கிடப்பட்டது.

மகிந்த ராஜபக்சவின் வருகை, ராஜபக்சக்களின் பாரம்பரிய வீடும் அதற்கருகே இருந்த அவர்கள் பெற்றோர்களைப் பெருமைப்படுத்தும் வீடும் தீ வைக்கப்பட்ட சம்பவத்தோடு இணைந்தே நிறைவேறியது. இந்த அடிகள் மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது தம்பியான  கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் உறவுநிலை தளம்பி இருக்கும்போதே ஏற்பட்டது. அனைத்துத் தரப்பினரின் அழுத்தங்களுக்கு இடையில் மகிந்த ராஜபக்ச வெளியேறும் நிலையில், கோத்தபாயவும் அவரது சுற்றத்து முகாம்களும் மூத்த சகோதரர் மகிந்த வெளியேற வேண்டிய தருணம்தான் இது என்று நம்பிக்கை வெளியிட்டனர். 2005 இலிருந்து 2015 வரை மகிந்த ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய 2019 தேர்தலில் மகிந்தவின் உதவியற்று வெற்றிபெற முடியாது என்று விமர்சகர்கள் கருதியிருந்தனர். தனது இளைய சகோதரர் தன்னை இப்படித் துண்டித்துவிட்டது, அனைத்தையும்விடக் கருணையற்ற செயலாக மகிந்தவுக்குப்பட்டது.

கோத்தபாயவுக்கோ, அது அரசியல் காய் நகர்த்தலில் தனது அரசியல் இருப்பைப் பாதுகாக்கச் செய்த ஓர் எளிய அதிகாரச் செயலாகவே தோன்றியது. கோத்தபாயவை நோக்கியே மக்கள் கோபம் இருந்தது. அதைத் திசை திருப்பவேண்டிய நிலையிலும் அவர் இருந்தார். கோத்தாவை வீட்டுக்குப் போகச் சொல்லியே (Gota Go home) தொடக்கத்தில் ஆர்ப்பாட்டங்களின் முழக்கம் இருந்தது. பின்னர் அது கோத்தாவை ஊருக்கே போகச் சொல்லுவதாக மாறியது (Gota Go Gama). முதன்மையான போராட்டம் கொழும்பு நகரிலேயிருக்கும் காலி முகத்திடலில், ஜனாதிபதி வதிவிடம், அரசுப் பணிமனைகளுக்கு அருகே நடைபெற்றது. மகிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு வெளியேயும் மகிந்தவை ஊருக்குப் போகச்சொல்லிய (Myna Go Gama : மகிந்த ராஜபக்சவை முதிர்ந்த மைனாவுடன் ஆர்ப்பாட்டக்காரர் ஒப்புமைப்படுத்தினர்) முழக்கத்துடன் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் போராட்டக்காரர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.

இலங்கையில் ஏற்பட்ட இந்தக் கொந்தளிப்புக்குக் காரணமானவையென கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு முடியாமல் ஏற்பட்ட சிக்கல், தொடர்ந்தும் நீடித்துவரும் துண்டுவிழுகின்ற வரவுசெலவு முன்வைப்பு, ஊதிப்பெருத்த அரசு நிர்வாகக் கட்டமைப்பு, ஒன்றுக்குமே உதவாத ஒட்டுண்ணிகளாக அமைந்த தொழில் நிறுவனங்கள், மகிந்த காலத்தில் சிறந்து விரிந்து வளர்ந்த அனைத்தையும் சீரழித்த ஊழல் ஆகியவை இருந்தன. சந்தேகத்திற்கிடமான பணக் கையாளுகைகளுடன், திருப்பிச் செலலுத்தவேண்டிய கடன் தொகையில் பல தேவையற்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன. கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாத நிலையில் மக்கள் சீனக் குடியரசிடம் ஆழப்படுத்தப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகம் கொடுக்கப்பட்டுவிட்டது. விமானங்களுக்கும் பயணிகளுக்கும் பதிலாகப் பெரும்பாலும் உள்ளூர் வனவிலங்குகளால் ஆக்கிரமிக்கப்பட்ட விமான நிலையம், மிகப்பெரிய ஆனால் குறைந்தளவில் பயன்படுத்தப்படும் கிரிக்கெட் விளையாட்டு மைதானம், சீனாவினால் கட்டப்பட்ட கொழும்பு நகரில் உள்ள ஆடம்பர வானளாவிய அலங்காரக் கட்டடம், தங்கள் மகிந்த குடும்பத்தைச் சிறப்பித்துக் காட்டவென மக்கள் பணத்தில் கட்டப்பட்ட அருங்காட்சியகம் என்பவை இவர்களது ஊதாரித்தனத்தில் சில மட்டுமே. இவை அனைத்தும் மக்கள் சீன அரசின் கடன்களில் உருவானவை. கடன்கொடுத்துச் சிக்கவைக்கும் பொறியாக இது இருக்கலாம் என்ற எச்சரிக்கை எதுவுமின்றி இவை மேற்கொள்ளப்பட்டன. ‘பட்டுப் பெருவழி’ முனைப்பின் ஒருபகுதியாக கடனில் சிக்கும் நாடுகளை சீனா வளைக்கிறது என்ற எச்சரிக்கையை இது சுட்டுகிறது.

இன்னும் கொஞ்ச நாளைக்கு ராஜபக்சர்கள் தமது தொடர்வண்டியை ஓடவிட்டுத்தான் இருந்திருப்பார்கள். எதிர்பாராதவிதமாக கோவிட் – 19 வந்ததனால் இலங்கையின் இருபெரும் வருமானங்கள் தடைப்பட்டன: சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒன்று, வெளிநாடுகளில் வேலைபார்க்கும் பத்துலட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் அந்நியச் செலாவணி இரண்டாவது. கொள்ளைநோயின் பாதிப்புக் குறைந்துவிட்ட வேளையில், தீவின் பொருளாதாரச் சிக்கலின் அடிப்படைமூலம் அதுவாக இருக்கவில்லை. தற்சார்பற்ற ஊழலில் ததும்பிய கடன்களே முக்கிய காரணம் எனப் புரியலாயின. கோவிட் முடியும் முன்னரே கடன்கள் வளர்ந்து மலைபோல நின்றன. கோவிட் வராவிட்டாலேயேகூட இந்தக் கடன்கள் வரவு-செலவை சீரழிவு நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கும்.

இலங்கையின் சாதாரணமான மொத்த உற்பத்தி 85 பில்லியன் டொலர்கள். வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன்கள். இன்னும் 31 பில்லியன்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடனாக அதிகரிக்கும். 2022 இல் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை 7 பில்லியன்களாக இருக்கும். இது, இந்த ஏப்பிரலில் 500 மில்லியன் திருப்பிச் செலுத்தவேண்டிய தொகையையும் சேர்த்தது. ஆனி மாதத்தில் மற்றொரு 500 மில்லியன் இதனுடன் சேரும். ஆனி மாதத்தில் பண முறிகளின் முதிர்வினால் வரும் திருப்பிச் செலுத்தவேண்டிய தொகை மற்றொரு பில்லியனாக இருக்கும். டொலர் கொடுக்கல் வாங்கல் தொடர்பான சிக்கல், எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது. எப்போதும் இல்லாத அளவில் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகள் ஏற்பட்டிருக்கின்றன. வானளாவிய பணவீக்கத்தோடு சேர்ந்தே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. உணவுப் பொருட்களின் விலையோ கோபத்தையும் இயலாமையையும் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. ஐந்தில் மூன்று மக்கள் தொகை ஊட்டச்சத்துக் குறைபாட்டில் சிக்கியிருக்கிறது. ஒருவேளை உணவைத் தவிர்க்கும் நிலையிலும் பெருவாரியானதொரு பட்டினியை எதிர்நோக்கிய நிலையிலுமே உண்மையில் இலங்கையர்கள் உள்ளனர். 

இதற்குமேலும் கடன்களைத் திருப்பிக் கட்ட இயலாது என்று அரசாங்கம் 2022 ஏப்பிரலில் அறிவித்தது. மே மாதத்தில் கடனைக் கட்ட முடியாமல் போன செய்தி அதிகாரபூர்வமாக வெளியானது. சில மாதங்களுக்கு முன்புதான் வெளிப்படையாக கோத்தபாயவையும் மகிந்தவையும் விமர்சிக்கப் பயந்த போராட்டக்காரர் ‘அரசாங்கம்’ என்று பொதுவாக அழைத்துக்கொண்டிருந்தனர். ராஜபக்சர்களை அவர்கள் விட்டுவிட்டிருந்தனர். கோத்தபாய பாதுகாப்பு அமைச்சில் இருந்தபோது அந்தப் பெயரைக் குறிப்பிடுவதையே பல பத்திரிகை ஆசிரியர்கள் தவிர்த்தனர். தற்போதோ, கோத்தபாய ஜனாதிபதியாக இருக்கும் நிலையில்கூட அவரையும் சகோதரர்களையும் அச்சில் வரக்கூடாத சொற்களால் குறிப்பிட்டனர். போராட்டக்காரர்களின் பிரபலமான முழக்கங்கள் வழியாக ராஜபக்சர்களின் வீழ்ச்சியை எளிதாகப் படம் பிடிக்கலாம்:

“கோத்தபாய ஓர் முட்டாள். அவனது அண்ணனும் முட்டாள். அவனது மகனும் முட்டாள்.”

நாட்டின் சொத்தைச் சூறையாடியதற்கும் போராட்டக்காரர்கள் மீது குண்டர்களை ஏவிவிட்டதற்காகவும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதனால்தான் மகிந்த ராஜபக்ச பொதுவெளியில் இருந்து இப்போது விலக்கப்பட்டிருக்கிறார். “நான்தான் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி” என்று வெளிநாட்டினருக்குத் தன்னை அறிமுகப்படுத்தியதனால் அறியப்பட்டவரான நாமல் ராஜபக்சவும் (1986 இல் பிறந்தவர்) தன்னைப் பொதுவெளியில் இருந்து விலக்குகிறார். அரசின் வளங்களைத்தின்று கொழுத்துச் சூறையாடிய இவர்களுடைய அனைத்து உறவினர்களும் இன்று இலங்கையில் ஒளிந்திருக்கின்றனர் அல்லது வெளிநாடுகளுக்குத் தப்பியோடிவிட்டனர். ஜனாதிபதியாக கோத்தபாயவின் நாட்களும் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. போராட்டத்தைச் சமாளித்து நின்றுபிடித்தாலும் 2024 நவம்பரில் வரும் தேர்தலில் வெல்லமுடியாது. நாடு மோசமான காலத்தை எதிர்நோக்கியிருக்கின்ற போதும் சிறிலங்கா ராஜபக்சர்களின் பிடியிலிருந்து விடுபட்டுக்கொண்டிருக்கிறது. உள்நாட்டுப் போர் முடிவுற்ற நேரம் இங்கு ஓர் புதிய அரசாட்சி உருவாகியிருக்கின்றது என்று ஒரு ராஜபக்ச சகோதரர் குறிப்பிட்டிருந்ததை நினைவுகூர வேண்டும். வஞ்சகர்களாகவும் மக்களைப் பட்டினிக்குத் தள்ளியவர்களாகவும்தான் ராஜபக்சர்களை இலங்கை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.

அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றத் காலதாமதமானாலும் சர்வதேச உதவிகள் கிடைக்கும். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, இந்தியா போன்றவை உதவிகளை வழங்க வாக்குறுதியளித்திருக்கின்றன. கடன்களைக் திருப்பிக் கட்டமுடியா நிலை ஒருவாறு சரியாக்கப்பட்டுவிடும். ஆனால், அரசியலின் அடித்தளத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடைய சிங்கள பௌத்தர்களின் ஏகப்பட்ட அபிலாசைகளை முன்வைத்து சிங்கள பௌத்த இனத்துவ ஆட்சியை நிறுவவேண்டும் என்ற நிலையை முதலில் மண்போட்டு மூடவேண்டும்.

இந்த நாட்டின் பிரச்சினைகளின் மூலகாரணமே சிங்கள பௌத்த பெரும்பான்மைவாதம்தான். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் 1950 களில் இருந்தே அதைத் தூண்டிவிட்டுச் சாதகமாகக் கையாண்டு வருகிறார்கள். இந்த வகையில் நயவஞ்சகமான, நச்சுக் குணமுடைய, வெட்கம் கெட்டவர்களாக ராஜபக்சர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய வெளியேற்றம் அரசியல் நிலைத்தன்மைக்கு எவ்வளவு தேவையோ அதைப் போன்றதே அரசியல் கட்டமைப்பை மாற்றியமைப்பதும். அடியோட்டமாக இருக்கும் இந்த நாட்டின் அரசியல் கலாசாரம் மாறாத வரைக்கும் இதைச் சாதிக்க முடியாது. இந்த மாற்றம் நடப்பது, குறைந்தளவே சாத்தியங்களுடையது. எப்படியிருப்பினும் இரண்டு மாதங்களாகத் தொடரும் ‘அரகலய’ ஆர்ப்பாட்டம் சிறிதளவு நல்விளைவைத் தரலாம்.

அரசியல் நெருக்குவாரம் 

மகிந்த ராஜபக்ச வெளியேறிய சில நாட்களில், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்டுவந்தார் அவரது சகோதரர். ரணில் யு.என்.பி கட்சியின் மிக மூத்த அரசியல்வாதி. இதற்கு முதலும் ஐந்து தடவை பிரதமராக இருந்திருந்தாலும், ஒரு தடவைகூட ஆட்சிக் காலத்தை முழுமையாகக் கடந்ததில்லை. 2015 தேர்தலில் 5 லட்சத்துக்கு கிட்ட வாக்குப் பெற்ற இவரால் அதற்கு அடுத்த தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள்கூடப் பெற இயலாமல் போனது. இவர் மட்டும் அந்த நிலையில் இருந்திருக்கவில்லை. அவருடைய மொத்தக் கட்சியுமே 105 இருக்கைகளிலிருந்து ஒரு இருக்கையும் அற்றுப்போனது. 225 உறுப்பினர் கொண்ட பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் வழியாக விக்கிரமசிங்க ஒரு இருக்கையைத் தனக்குப்  பெற்றிருந்தார். 

மே மாத நடுப்பகுதியில், மூத்த அரசியல்வாதியான புதிய பிரதமர் “ஒரு நாளைக்கு போதுமான பெற்றோல் மட்டுமே நாட்டின் கையிருப்பில் உள்ளது” என்று பாராளுமன்றத்தில் அறிவித்து நாட்டைப் பீதியில் ஆழ்த்தினார். தேவையான முக்கியமான பொருட்களுடன் துறைமுகத்துக்கு வெளியில் நின்ற கப்பல்கள் பொருட்களை இறக்குவதற்கு மறுத்தன. அமரிக்க டொலர்களில் அவற்றிற்கான பெறுமதியை முதலிலேயே செலுத்துமாறு கோரிக்கை வைத்தன. அந்த நேரத்தில் அரசின் கையில் மில்லியன் கணக்கில் டொலர்கள் இருந்தபோதிலும், இது நடந்தது. மக்கள் ஏற்கெனவே உணவின்றி இருக்கும் நிலையில், அது இன்னும் மோசமடையும் என்றும், மோசமான நாட்களை எதிர்கொள்ளப் போகிறோம் என்றும் எச்சரிக்கும் உரிமை விக்கிரமசிங்கவுக்கு உண்டுதான். 

சிறிலங்காவின் பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதை, உதவி வழங்கும் நாடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொடர்பாடியே சாதிக்கமுடியும் என்பதை விக்கிரமசிங்க அறிந்திருந்தார். ஆனால் பாராளுமன்றத்தில் எதற்கும் அனுமதி பெறுவதற்கு ராஜபக்சக்களின் கட்சியான இலங்கை மக்கள் முன்னணியில் (SLLP) தங்கியிருக்கும் நிலையே இருந்தது. போராட்டக்காரர்கள் வெளியேறுமாறு கோரும் நிலையிலும், கோத்தபாய பதவி நீங்கிவிடக்கூடிய நிலையிலும், ஜனாதிபதியுடன் ஒட்டிக்கொண்டிருப்பதைத் தவிர விக்கிரமசிங்கவுக்கு வேறு வழியில்லாமல் இருந்தது. 2015 இல் தனது சோடைபோன மூன்றாவது பிரதமர் பதவிக்காலத்தில், பல லட்சம் டொலர்கள் தொடர்புபட்ட பிணைமுறிகள் ஈடுபாட்டில், தனது நம்பகத்தன்மையை ரணில் களங்கப்படுத்தியிருந்தார். ராஜபக்சக்களினைச் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் தானும் அந்த முறையற்ற செயற்கூட்டில் இணைந்துகொண்டார். அதனால்தான் கோத்தபாய பிரதமருடன் ஊழல்மயப்படுத்தப்பட்ட கள்ள ஒப்பந்தங்களைச் செய்துகொண்டார் என்று பலரும் சந்தேகப்பட்டமை ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லாத விடயமானது. ‘Myna Go Gama’ என்ற ஆர்ப்பாட்ட முகாமின் முழக்கம் ‘No Deal Gama’ என்று மாறியது. 

ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்போதைய பாராளுமன்றத்தையும் கலைக்கச் சொன்னார்கள். ஆனால் 1978 இல் நிறைவேற்றப்பட்ட இருபதாவது திருத்தச் சட்டம் அதற்கு இடறலாக நின்றது. ஐந்து ஆண்டுகளில் பாதியை நிறைவு செய்யாமல் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியாது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியம் என்ற நிலை. ஆகவே 2020 ஓகஸ்டில் தேர்வு செய்யப்பட்ட இந்தப் பாராளுமன்றம் 2023 பெப்ரவரி மட்டும் கலைக்கப்பட முடியாதது. பல உறுப்பினர்களுக்கு தாங்கள் இனி வாக்குகளைப் பெறமாட்டோம் என்ற நிலை இருந்ததால் அவர்கள் பாராளுமன்றக் கலைப்பை ஆதரிக்கவில்லை. மகிந்த ராஜபக்ச ஓடிப்போன போது இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களோ, கூடிக் கூடி SLPP உறுப்பினர்களின் சொத்துகள் அழிக்கப்பட்டதைப் பற்றிக் கதைத்தார்கள். அதேவேளை மக்கள் நீண்ட வரிசைகளில் மணிக்கணக்கில் நின்று அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்குச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள். 

இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் உடனடியாகத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது என்பதைத் தேர்தல் ஆணையர் வெளிப்படுத்தினார். வேறு வழியில்லாமல் இலங்கையர் இந்தப் பாராளுமன்றத்தையே பொத்தி வைத்திருக்க வேண்டியதானது.

ஜனாதிபதியைப் பதவியிறக்குவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்மையால் தோல்வியுற்றது. ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கத்தை எதிர்த்து வாக்களித்த அணியில் இணைந்துகொண்டார். கோத்தபாயவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை இராணுவம் அடக்கியது. ஜனாதிபதி மெதுவாக புதிய அமைச்சரவையை உருவாக்கினார். முந்தைய அமைச்சரவையின் பழைய முகங்களே புதிய பொறுப்புகளில் வந்தார்கள். அரசு என்றவகையில் எதுவும் புதிதாக மாறிவிடவில்லை என்றே தோன்றியது. 

பிரித்தானியாவில் இருந்து 1948 இல் சுதந்திரம் பெற்றபோது வரலாற்றுத் தொடர்ச்சியான ஆட்சிமுறைமையின் ஊடாக வெற்றிகரமான நாடாக இருக்கும் நிலையை சிறிலங்கா கொண்டிருந்தது. அதனுடைய அரசியல் போக்கு அதன்பின்னர் துன்பியல் போக்கல்லாமல், வேறு வழியில் செல்லவில்லை. அண்மைக்கால அரசியல் மாற்றங்கள் பல முரண்பட்ட குறிப்புகளை உணர்த்துகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக, அரசியலமைப்பின் மீதான விவாதத்துக்குட்பட்ட திருத்தங்களைக் கருத்தில் கொள்ளலாம். ஓர் குறுக்குவெட்டான நம்பிக்கைத் தன்மையை ஏற்படுத்துவதற்கு உரிய வகையில், ஏழாவது திருத்தச் சட்டத்தின் மூலம், பாராளுமன்றத்தின் பெருவாரியான ஆதரவோடு, 2010 இல் ஓர் அரசியலமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது பதினெட்டாவது திருத்தத்தின் மூலம் பதினேழாவது திருத்தத்தைப் பின்னடையச் செய்தார். 2015 இல் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தபோது திரும்பவும் அதை மாற்றியமைத்தார். பத்தொன்பதாவது திருத்தத்தைப் புதிய அவை ஏற்றுக்கொண்டது. அது ஜனாதிபதியினைவிடப் பிரதமருக்கு அதிக அதிகாரங்களை வழங்கியது. பிறகு, 2020 இல் கோத்தபாய ராஜபக்ச ஆதரவாளர்கள் 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பை முன்வைத்து இருபதாவது திருத்தத்தைக் கொண்டுவந்தார்கள். சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றில்  யாருக்குமேயில்லாத நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதிக்கு இது வழங்கியது. இதன்பின்னான இருபத்தியொராவது திருத்தம் நிறைவேற்றப்பட்டாலும் அது ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு சிகை அலங்காரம் மட்டும் செய்திருந்தது.

நெருக்கடிகளும் ஆர்ப்பாட்டங்களும் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியைவிட்டு விலகச் செய்தது. ஆட்சி மறுசீரமைப்புத் தேவை என்ற நிலையைக் கருத்தில் இருத்தியது. கோத்தபாய பதவி விலகவேண்டும் என்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் முதன்மையான கோரிக்கை. நாட்டின் பொருளாதார நிலை அதைத் தாமதப்படுத்தியது. கோத்தபாய பதவி விலகினாலும்கூட சிறிலங்காவை ஓர் வெற்றிப் பாதைக்கு நகர்த்தும் நிலை எதுவும் இல்லை என்பதும் ஒரு காரணம். சிங்கள பௌத்த பேரினவாதம் தனது பாணியைத்  தொடர்ந்து கொண்டிருந்த அதேவேளை, இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆட்சியின் மீது நம்பிக்கையின்மை நிலை ஒன்றைத் தோற்றுவித்திருந்தார்கள். நல்லதொரு ஆட்சி உருவாகுவதென்பது பெரும்பான்மைவாதம் கட்டிக்காக்கப்படும் வரை சாத்தியமில்லை என்பதை முழுமையாக உள்வாங்க ‘அரகலய’ இயக்கத்தினர் தவறியிருந்தார்கள். 

தேசியவாத நீராளி 

இங்கிலாந்தின் கீழ் இருந்த நிலையிலிருந்து 1972 இல் இலங்கை முழுமையாக விடுதலையானபோது குடியரசு எனத் தன்னை அறிவித்தது. ஓர் அரசியலமைப்பையும் உருவாக்கி பௌத்தம் முதன்மை மதம் எனவும், சிங்களம் மட்டுமே அரசு கரும மொழி எனவும் பறைசாற்றியது. 1978 இல் அரசியலமைப்பைத் திருத்தியபோது தமிழும் அரசு மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டபோதும் பௌத்தம் முதன்மை மதமாகவே தக்கவைக்கப்பட்டது. இரண்டு அரசியலமைப்புகளும் 1950 இலிருந்தே வேர்விட்டுக்கொண்டு வரும் பெரும்பான்மைவாதச் சூழலைக் கோடிட்டுக்காட்டின. ஏதாவது மாறியதா? இந்தக் காலத்தில் கோத்தபாய பெயரிட்ட 23 அமைச்சர்களின் செயலாளர்களும் சிங்களவர்களே.  கால்வாசிப் பங்கு மக்கள் பல்வேறுபட்ட சிறுபான்மையினராக இருந்தபோதிலும் இது நடந்தது. இந்தவகையான செயற்பாட்டுப் போக்கு ஜனாதிபதியின் போக்குடன் சிங்களப் பெரும்பான்மையே அதிகாரத்தைப் பிடிக்கத் தேவை என்பதுடன் ஒத்துப் போனது. 

1956 இன் தனிச்சிங்களச் சட்டத்திலிருந்து தொடங்கி இந்தத் தீவில் சிறுபான்மையினர் திட்டமிடப்பட்டு ஓரங்கட்டப்பட்டுப் பெரும்பான்மையினருக்கு அதிகாரங்கள் குவிக்கப்பட்டன. நாட்டின் 15 வீதத்தைக் கொண்டிருந்த வடக்கிலும் கிழக்கிலும் அதிகமாக இருந்த தமிழ்ச் சிறுபான்மையினருக்கு இது ஓரவஞ்சனையாகத் தெரிந்தது. இது அவர்களைத் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கத் தூண்டியது. நீண்டகாலப் போரின் போது சிங்கள அரசியல்வாதிகள் இதனை ‘பயங்கரவாதிகளின் பிரச்சினை’ என்று மிக வசதியாகச் சொல்லிக்கொண்டார்கள். இந்த இனப் பிரச்சினைக்கு இனத்துவ ஆட்சி அணுகுமுறைகளே வழிகோலின என்பதை வசதியாகத் தவிர்த்துவிட்டு அப்படிச் சொல்லிக் கொண்டார்கள். இப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் இன, மத ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறார்கள். இனத்துவ ஆட்சிமுறைமையே இரைகொல்லி ராஜபக்சர்களினைக் கொண்டு வந்தது என்பைதையும் இந்தக் கொடுந்தவறான ஆட்சிவரை அது நீண்டுவிட்டது என்பதையும் முழுதாகப் புரிந்துகொள்வதை ஆர்ப்பாட்டக்காரர்கள் தவிர்க்கிறார்கள்.   

இனத்துவ ஆட்சிமுறையின் இலாபங்களைப் பெற்றவர்களின் சந்ததிகளே இந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் என்பது உண்மையில் ஓர் நகைமுரண்தான். 22 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் 1.5 மில்லியன் அரச பணியாளர்கள் இருக்கிறார்கள். நிர்வாகத்தில் இருப்பவர்களோ இதில் பாதியளவு இருந்தாலே போதும் என்று சொன்னாலும்கூட இந்த நிலை தொடர்கிறது. அரசாங்கத்தின் சம்பளம் என்பது தங்களுக்குத் தரப்படவேண்டிய உரிமைக் கொடுப்பனவு என்று சிங்கள பௌத்தர்கள் யோசிப்பதனால் இப்படி ஏற்படுகிறது. சிங்கள பௌத்தர்களால் நிரப்பப்பட்டிருக்கும் பாதுகாப்புப் படைப் பிரிவுகள் எதிலும் போரின் பின்னர் ஆட்குறைப்புச் செய்யப்படவில்லை. மேற்படி ‘அரசாங்க வேலை’ என்ற திட்டம் பாதிக்கப்படும் என்பதே அதற்குக் காரணம். அதிகம் பணத்தை இழுக்கின்ற ஒட்டுண்ணி நிறுவனங்களாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை விமானப் போக்குவரத்துச் சபை, இலங்கை மின்சார சபை என்பன இருக்கின்றன. இவையனைத்திலும் முன்னர் சொன்னது போலவே அரசாங்கச் சம்பளம் கிடைக்கும் என்பதற்காகவே அலங்காரக் கொண்டையுடைய சிங்களப் பெரும்பான்மையினர் எந்தவிதப் பயனுமற்று வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இவையனைத்தும் “ஊழல், லஞ்சம், வீண்விரயம், திறனின்மை, மரியாதைக் குறைவானவை என்பதற்கு முன்னுதாரணமாய் இருக்கின்ற நிறுவனங்களாகும்” என அண்மையில் ஓர் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. பொருளாதார மீட்டெடுப்பைச் செய்யவேண்டுமாயின் இந்த ஊதிப்பெருத்த அனைத்தையும் கத்தரித்துக் குறைத்து, தனியார்மயமாக்க வேண்டியே எற்படும். ஆனால் பௌத்த பெரும்பான்மையினரின் அரசியலில் குளிர்காயும் இப்படியான தன்மை இதற்குத் தடையாகவே இருக்கும். 

தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியில் ஏன் ஒரு போராட்டமும் பாரிய அளவில் நடக்கவில்லை என்று சிலர் உற்றுநோக்கலை வெளியிட்டிருக்கிறார்கள். அப்படி ஏதும் வடக்குக் கிழக்கில் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ நடந்தால், அவை அத்தியாவசியப் பொருட்களின் விலை பற்றியோ நிர்வாகக் குறைகள் பற்றியோதான் இருக்கும். அதைமீறி அரசைப் பற்றிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால், அவை தமிழ்ப் புலிகளின் தொடர்ச்சியான தனிநாட்டுக் கோரிக்கைப் போராட்டங்கள் என்று அரசினாலும் படையினராலும் முத்திரை குத்தப்படும் என்பது தமிழ் மக்களுக்குத் தெரிந்தே இருந்தது. பெரும்பாலான சிங்கள பௌத்தர்கள் ஒன்றல்ல இரண்டுமுறை அதே களவாணித்தனமான ராஜபக்சர்கள் அரசுக்கு வாக்களித்திருந்தனர். ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் இந்த அரசுகளால் உடனடியாக ஏற்படுத்தப்பட்டவற்றின் விளைவினால் உருவாகியவை. இவை உள்ளார்ந்த சிக்கலைப் பார்க்கவில்லை. நாளை இந்தப் பொருளாதாரச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டால் உள்ளார்ந்த அடிப்படைத் தேவை புறந்தள்ளிக் கைவிடப்பட்டுவிடும். 

இந்தவகையில், ‘கோத்தாகோகம’ போராட்டக்காரர்கள் தொடக்கத்தில் தேசிய கீதத்தைச் சிங்களத்தில் மட்டும் பாடிவந்தார்கள். தமிழிலும் பாடப்படவேண்டும் என்ற இடித்துரைப்பு நடக்கும் வரை அது அப்படியேதான் தொடர்ந்திருந்தது. 2015 இல், முந்தைய ஆட்சி இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தியிருந்த இடத்தில், கோத்தபாயவின் ஆட்சி வந்தவுடன் அது நிறுத்தப்பட்டது. தமிழில் தேசியகீதம் பாடப்படவில்லை. எவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய பொறுப்புக்கூறல் குறித்து, போராட்டக்காரர்கள் விலகியே நின்று கொண்டார்கள்? அல்லது முசுலிம்களுக்கு எதிராக 2012 இல் நடந்த இசுலாமிய வெறுப்புச்சார் குற்றச் செயல்கள் பற்றியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை? ஓர் பொருளாதார நெருக்கடி நிலை தோன்றும்போது இப்படிப்பட்ட விலக்கல்கள் புரிந்துகொள்ளக் கூடியவைதான். ஆனால் பிராதான போரட்டத்தின் குறிக்கோளாக கோத்தபாய ராஜபக்சவை பதவியிறக்குவது என்பது முன்னிலையில் வைக்கப்படும்போது, அது அடையப்பட்டால் இனத்துவ, சமயம்சார் சமநிலையும் ஒன்றிவாழும் நிலையும் அடையப்படுவதற்கு, இப்படிப்பட்ட வழிமுறையால் எந்தப் பயனும் இல்லை.

சிறிலங்கா அறுதியாக இரண்டு பிரதான மறுகட்டமைப்புகளைச் செய்தேயாக வேண்டும். முதலாவது அரசியல் வகையிலானது. போராட்டக்காரர்களின் முன்வைப்புகளில் இதற்கான முகாந்திரம் தெளிவாக உள்ளது. இரண்டாவது மறுகட்டமைப்புச் செயற்பாடு. இது பன்முகத்தன்மை என்பதிலும் சட்டத்தின் ஆட்சி என்பதிலும் வேரூன்றியிருக்கிறது. தொடர்ந்தும் பலகாலமாக இனத்துவ ஆட்சிமுறையில் செயற்பட்டுவரும் ஒரு நாட்டில், இதை எதிர்பார்ப்பது மிக அதீதமானதாக இருக்கலாம். இப்படியான நிலை தொடர்கையில், சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டு நடக்காத ஓர் இனமையவாத ஆட்சியைத்தான் ஒருவர் எதிர்பார்க்க முடியும். எவ்வாறு பெரும்பான்மைவாதத்தை வாகனமாக மாற்றிப் பாரிய ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் சாதகமாக வண்டி ஓட்டி, ராஜபக்சர்கள் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதாளத்துக்குத் தள்ளினார்கள்? இந்த ஆர்ப்பாட்டங்களால் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே நிகழ்த்தப்பட இயலும். ஆர்ப்பாட்டக்காரர்களினால் எதுவும் செய்ய முடியும் என்பதே, அதிகம் எதிர்பார்ப்பதாகத்தான் இருக்கும். எந்தவொரு சமூக, அரசியல் மாற்றங்களும் பொருளுள்ளதாக நடைமுறைக்குக் கொண்டுவரப்படாது. இன மையவாத நிலைப்பாடுதான் இந்தத் தீவின் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற எதிர்காலமாக இருக்கும். 

நீல் டி வோட்டா

நீல் டி வோட்டா, வேக் ஃபோரஸ்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறையின் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தென் ஆசியாவின் பாதுகாப்பும் அரசியலும், இனமும் தேசியவாதமும், இன மோதல் தீர்வுகள் மற்றும் ஜனநாயக மாற்றமும் உறுதிப்படுத்தலும் போன்ற விடயங்களில் தனது ஆய்வுக் கவனத்தைச் செலுத்தி வருகிறார். இவர் ‘Blowback: Linguistic Nationalism, Institutional Decay, and Ethnic Conflict in Sri Lanka (Stanford: Stanford University Press, 2004)’ என்ற நூலின் ஆசிரியராவார். பல சர்வதேச ஆய்விதழ்களில் தனது பங்களிப்பைச் செலுத்தி வரும் இவர், தென் ஆசியாவில் தேசியவாதக் கருத்தியல்களுக்கும் சமூக வன்முறைகளுக்கும் உள்ள தொடர்புகளை ஆய்வு செய்து வருகிறார்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

வின்சென்ட் போல் சந்தியாப்பிள்ளை

வின்சென்ட் போல் சந்தியாப்பிள்ளை (B.Sc., M.A, M.Phil) அவர்கள், 1966 இல், யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் உள்ள ஊறணி எனும் இடத்தில் பிறந்தார். ஆரம்பக்கல்வியை இளவாலை என்றியரசர் கல்லூரியில் பயின்றார். உயர்கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கற்றார். கனடாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்திய தமிழியல் பட்டப்படிப்பில், 5 - 6 ஆண்டுகள் தமிழர் மெய்யியல், நாட்டார் வழக்காற்றியல், இலக்கியத் திறனாய்வு போன்ற பாடங்களைக் கற்பித்திருக்கிறார். கல்லூரிக் காலத்தில் நாத்திகம், மார்க்ஸிசம் போன்ற கருத்தியல்களில் ஈடுபாடு காட்டிவந்தார். பின்னர் கற்கைப் புலத்தினூடாக மெய்யியல், தத்துவம் என்பவற்றில் ஆர்வம் செலுத்தினார். தற்போது சோதிடம், ஹோமியோபதி, தமிழ்மொழி போன்றன தொடர்பாகக் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்