இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் கோழிப் பண்ணைத் துறையும்
Arts
13 நிமிட வாசிப்பு

இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் கோழிப் பண்ணைத் துறையும்

August 10, 2022 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதனை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

கால்நடை வளர்ப்பு கிராமியப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான கூறாகும். இலங்கையின் கால்நடை வளர்ப்பின் மிக முக்கியமான கூறுகளான மாடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பைப் பற்றிய தொடராக இது அமையப்போகிறது. கால்நடை வளர்ப்புப் பொருளாதாரத்தின் அடிப்படைகள், சவால்கள், தீர்வுகள் ஏனைய நாடுகளின் நிலைமைகளை ஒப்பீடு செய்தல் என இது அமையப்போகிறது. மக்களின் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் கோழி வளர்ப்பு இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் அதன் தாக்கம் எதிர்காலத்தில் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனையும் விளக்குவதாக முதலாவது கட்டுரைத் தொடர் அமையப்போகின்றது.

சந்தையில் கோழி முட்டை ஐம்பது ரூபா வரையிலும் கோழி இறைச்சி ஆயிரத்து ஐநூறைத் தாண்டியும் விற்பனையாகிறது. சில இடங்களில் இன்னும் அதிகமாக இருக்கலாம். இந்தக் கட்டுரை மனிதனுக்கு புரதம் முதலான ஊட்டச்சத்துக்களை வழங்கும் மிக முக்கியமான உணவுகளான கோழியிறைச்சி மற்றும் முட்டையை தரும் இலங்கையின் கோழிப் பண்ணைத் துறை நாட்டின் பொருளாதார பின்னடைவின் காரணமாக சந்திக்கும் சவால்களை ஆராய்கிறது. நான் ஒரு கால்நடை வைத்தியர் என்ற வகையில் குறிப்பாக அரச கால்நடை வைத்திய அலுவலகம் மற்றும் அரசாங்க கோழிப் பண்ணை ஒன்றின் அத்தியட்சகராக இருப்பதால்  அங்கெல்லாம் கோழிப் பண்ணையம் தொடர்பாக நான் சந்திக்கும் சவால்கள் மற்றும்  அனுபவங்கள் இந்த கட்டுரைக்கு வலுச்சேர்க்கும் என நம்புகிறேன்.

கேள்வி 1 –  ஏன் இறைச்சி , முட்டை போன்ற கோழி உற்பத்திகளின் விலை கூடுகிறது?

விடை 1 – கோழித் தீவனம், மருத்துகள் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு , போக்குவரத்து செலவு அதிகரிப்பு, மின்சார தடை காரணமாக ஏற்படும் உற்பத்தி செலவு கூடுவதால் விலை அதிகரிக்கிறது.  

கேள்வி 2 – ஏன் கோழித்  தீவனம் , மருந்துகளின்  விலை  கூடுகிறது?

விடை 2 – தீவன உற்பத்தி மூலப் பொருட்கள் நாட்டில் மிக மிகக் குறைவு அல்லது  இல்லை. மருந்துகள் இறக்குமதியாவது குறைவு அல்லது நிறுத்தப் பட்டுள்ளது.

கேள்வி 3 – ஏன் உற்பத்தி மூலப் பொருட்கள் இல்லை? ஏன் மருந்துகள் இறக்குமதியாவது இல்லை?

விடை 3 – மூலப் பொருட்களை டொலரிலேயே கொள்வனவு செய்ய வேண்டும், ஆனால் நாட்டில் இறக்குமதிக்கு டொலர் கையிருப்பில்  இல்லை./ குறைவு. பல மூலப் பொருட்கள் உள்நாட்டில்  உற்பத்தியாவதில்லை.

கேள்வி 4 – ஏன் உள்நாட்டு உற்பத்தி இல்லை/ குறைவு?

விடை 4 – அசேதன உரத் தட்டுப்பாட்டால் போதிய உள்நாட்டு சோளம் போன்றவற்றின்  உற்பத்தியும் போதியதாக இல்லை என்பதுடன் சோளத்தை பயிரிடும் விவசாயிகளும் குறைவடைந்துள்ளனர். அத்துடன்  சோயா போன்றவற்றை உள்நாட்டில் விளைவிப்பதில்லை. மேலும்  அரிசி போன்ற சில மாற்றுப்  பொருட்களை  மனித பாவனைக்கு பயன்படுத்துவதால் விலங்கு உணவாக பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. முக்கியமான கால்நடை  மருந்துகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இலங்கையில்  குறைவு/ இல்லை. அவற்றை கட்டாயம் இறக்குமதி செய்தே ஆகவேண்டும்.

கேள்வி 5 – ஏன் போக்குவரத்துக்கு செலவு கூடுகிறது? மின்சார செலவு கூடுகிறது?

விடை 5 – எரிபொருள் தட்டுப் பாடு மற்றும் விலை அதிகரிப்பு. இலங்கையில் நிகழும் மின்சார தடையால் மின்பிறப்பாக்கியை இயக்க எரிபொருள் வேண்டும்.

இந்த கேள்வி பதில்களை பார்க்கும் போது ஏன் கோழி உற்பத்திகளின்  விலை அதிகரிக்கின்றன உங்களுக்கு ஓரளவுக்கு விளங்கியிருக்கும். வாருங்கள் ஒவ்வொன்றாக விரிவாக விளக்குகிறேன்.

கடந்த சில மாதங்களாக  நான் கடமை புரியும் அரச கோழிப் பண்ணைக்கு தேவையான தீவனத்தை பெறுவதற்காக வவுனியாவிலிருக்கும் பல கோழித் தீவனம் விற்கும் கடைகளுக்கு சென்று கேள்விப் பத்திரங்களை பெற செல்லும்  போது அவதானித்த விடயங்கள் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. கடந்த வருட இறுதிப் பகுதியில்  கொஞ்சம் கொஞ்சமாக பல கோழித் தீவன நிறுவனங்கள் தமது உற்பத்திகளை குறைக்க தொடங்கியிருந்தன. இந்த வருட மார்ச் அளவில் சில நிறுவனங்கள் தமது உற்பத்திகளை நிறுத்தியிருந்தன. சில தமது நிறுவனங்கள் தமது  கோழிக் குஞ்சுகளை வாங்கும் தமது வாடிக்கையாளருக்கு மாத்திரம் தீவனத்தை வழங்குவதையும் காண முடிந்தது. இன்று பெரும்பாலான நிறுவனங்கள் தமது தீவனத்தை நிறுத்தி விடும் நிலைக்கு வந்துள்ளன. இதனால் பல கோழித் தீவனக் கடைகள் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து தீவனம் பெறுவது குறைந்துள்ளது என்பதுடன் அதிக விலை கொடுத்தே சிறிதளவு தீவனத்தை பெற்றிருப்பதையும் காண முடிகிறது.

கோழி வளர்ப்பு

 [ஏனைய பொருட்களை போல கோழித் தீவனத்தை பதுக்க முடியாது. ஏனெனில் சேர்க்கப்படும் சில மூலப் பொருட்கள் ஒரு மாததுக்குள் பழுதாகி விடும் என்பதால் இந்த நிலை. இல்லாது  போனால் அங்கும்  பதுக்கல்கள் நிகழ்ந்திருக்கும்]

இது இப்படியிருக்க மறுபக்கமாக பல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான  கோழிப்பண்ணையாளர்கள்  கோழி வளர்ப்பைக் கைவிட்டுள்ளதைக் காணமுடிகிறது. ஓரளவு பெரிய பண்ணைகள் மாத்திரமே கோழி வளர்ப்பை செய்கின்றன. அதுவும் எவ்வளவு காலத்துக்கோ தெரியவில்லை. நான் பணி புரியும் வவுனியாவின் அரச கோழிப் பண்ணை இனப்பெருக்க பண்ணை [breeding farm]. அதாவது கோழிக் குஞ்சுகளை உற்பத்தி செய்து வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கு கால்நடை வைத்திய அலுவலகங்களூடாக குறைந்த விலைக்கு வழங்குவோம். நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்பட  ஒவ்வொன்றாக பிரச்சினைகள் தோன்றத் தொடங்கின. அதிகரித்த கோழித்தீவனம் காரணமாகவும் அதிகரித்த எரிபொருள் செலவு காரணமாகவும் உற்பத்திச் செலவு கூடியுள்ளது. மின்சாரம் தடைபடும் போது எமது குஞ்சு பொரிக்கும் இயந்திரங்களை தடையின்றி இயங்க  மின் பிறப்பாக்கிக்கு எரிபொருள் தேவைப்பட அதனாலும்  செலவு அதிகரித்துள்ளது. பண்ணைப் பணியாளர்கள் எரிபொருள் விலை அதிகரிக்க பண்ணைக்கு  வருவதில் சிரமங்கள் தோன்றியுள்ளன. அவர்களின் அன்றாட சம்பளத்தை விட சிலரின் பயணச் செலவு அதிகம். இப்போது எரிபொருள் இல்லாத நிலையில் இந்த விடயம் இன்னும் சிக்கலாகியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் எமது அரச வாகனங்கள் மூலம் அந்தந்த கால்நடைப் பிரிவுகளுக்கு  எமது உற்பத்தியான கோழிக் குஞ்சுகளை மக்களுக்கு விநியோகிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. அத்துடன்  தீவன  விலை அதிகரிப்பு மற்றும் தீவனத் தட்டுபாடு காரணமாக கோழிக் குஞ்சுகளை வாங்குவதில் மக்களின் ஆர்வமும்  குறைந்துள்ளது. இப்படியான கூட்டு நெருக்கடிகள் காரணமாக கோழிக் குஞ்சு உற்பத்தி செய்வதை விட முட்டையாக விற்க வேண்டிய நிலை எமக்கு தோன்றியுள்ளது. இனப் பெருக்கத்துக்காகவே கோழிகளை உயர் தரத்தில் வளர்க்கும் எமது பண்ணையின்  பெறுமதியான முட்டைகளை ஏனைய முட்டைகளை போல விற்பது தொழில்நுட்ப ரீதியாக பாதகமானது. எனினும் வேறு வழியின்றி செய்ய வேண்டி ஏற்படுகிறது. எமது விநியோக வாகனத்துக்கும் மின் பிறப்பாக்கிக்கும் தேவையான எரிபொருளைக் பெறுவது அரச பண்ணையாக இருக்கும் எமக்கே  சிரமமாக காணப்படுகிறது. அதாவது பல அதிகாரிகளின் அனுமதி இருந்தும் தகுந்த அளவில் சரியான நேரத்தில் எரிபொருளை பெற முடிவதில்லை. அரச பண்ணைக்கே இந்த நிலை என்றால் தனியாரை நினைத்து பாருங்கள். அவர்களுக்கும் இதே தேவை இருக்கும். சில வேளை இதை விட அதிகமாகவும் இருக்கும். பல பண்ணைகள் பிரமாண்டமானவை. மிகப் பெருமளவில்  தீவனம் தொடர்ச்சியாக தேவை. இயந்திரங்கள் மின் குமிழ்கள் இயங்க எரிபொருள்  தேவை. உற்பத்திகளை விநியோகிக்க வாகன எரிபொருள் தேவை. வேலையாள் பிரச்சினை வேறு. எனவே இவை சரியாக கிடைக்காத பட்சத்தில் உற்பத்திகள் குறையும். விலை அதிகரிப்பதையும் தவிர்க்க முடியாது.

கோழி இறைச்சி

கோழி வளர்ப்பை பொறுத்தவரை அவற்றின் செலவில் 6௦ –  7௦  சதவீதம் வரை தீவனத்துக்கே போகிறது. தீவன விலை மேலும் அதிகரிக்க மொத்த செலவும் கணிசமாக உயரும். கோழித் தீவனத்தை பொறுத்தவரை அதன் உள்ளடக்கமாக கோழிகளின் வளர்ச்சிக்கும் தொழிற்பாடுகளுக்கும்  தேவையான புரதம், மாப்பொருள், விட்டமின்கள் கனியுப்புகள், அமினோ அமிலங்கள்  என பல முக்கிய மூலப் பொருட்கள் அடங்கியிருக்கும். புரதம் முக்கியமாக வெளி நாடுகளில்   இருந்து இறக்குமதியாகும் சோயா அவரையிலிருந்தே [soya bean] பெறப்படுகிறது. டொலர் நெருக்கடியால்  அதனை இறக்குமதி செய்வதில் சிக்கல் தோன்றியுள்ளது. உக்ரைன் – ரஷ்ய மோதல்,  மற்றும் பிரேசில், ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளில் ஏற்படுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சோயா அவரை உற்பத்திக்  குறைந்ததால்,  உலக சந்தையில் சோயா அவரைத் தட்டுபாடு தோன்றி  விலையும் கூடியுள்ளது. உலகின் பிரதான உற்பத்தியாளரான ஐக்கிய அமெரிக்கா தனது  சோயா அவரையை ஏற்றுமதி செய்யாமல் தமது பண்ணைகளுக்கே பாவிக்க முடிவெடுத்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளின்  கோழிப் பண்ணைத் துறையே இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புரத மாற்று மூலங்களான எள்ளுப் புண்ணாக்கு, சூரிய காந்திப் புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு, மீன் உணவுகள் போன்றன கூட தற்போது கிடைப்பது அரிதாக உள்ளது. இவை கிடைத்தாலும் சோயா அவரையின் தரத்துக்கு ஈடாக மாட்டாதவை.

சக்தியை வழங்கும் முக்கியமான மூலப் பொருள் மக்காச்சோளமாகும். [Maize/ Corn] இலங்கையை பொறுத்தவரை சோளத்தை கணிசமான அளவில்  வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருந்த  அதேவேளை குறித்த அளவு உள்நாட்டிலும் பயிரிடப்பட்டிருந்தது. உர இறக்குமதி தடை காரணமாக உள்நாட்டு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்ட அதேவேளை டொலர் பிரச்சினை காரணமாக இறக்குமதியும் நின்று போனது. இடையிடையே விசேட அனுமதியின் அடிப்படையில் குறித்த அளவில் இறக்குமதி செய்யப்பட்ட போதும் அது முழுத் தேவையையும் பூர்த்தி செய்திருக்கவில்லை.மேலும் அரிசி, அரிசி உற்பத்திகளான  தவிடு, உடைந்த அரிசிக்  குறுணலை சக்தி மூலமாக சில காலம் பயன்படுத்திய போதும் அரசாங்கம்  கால்நடை  உணவுக்கு அரிசியை பயன்படுத்துவதை  தடை செய்ததன் காரணமாக அதுவும் நின்று போயுள்ளது.பெரும்பாலான ஏனைய ஊட்டச் சத்துகள் இறக்குமதி செய்யப்படுவதால் அவை  இன்றியே அல்லது குறைத்தே உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

எனது அனுபவத்தின் அடிப்படையில் தற்போது கிடைக்கும் கோழி  உணவுகள் தரம் குறைந்தே வருகின்றன. சிலவற்றை வெளிப்படையாகவே உணர முடிகிறது. கோழிகள் வழமையாக உண்பதை விட குறைத்தே உண்கின்றன. அவற்றின் வளர்ச்சியில் பாதிப்பையும் ஏற்படுத்துவதாக உணர முடிகிறது. சில வேளை  கோழிகள் வளர்ச்சி குறைவதையும்  சில வேளை அதிக கொழுப்புடன் சமசீரற்று வளர்வதையும் முட்டை இடுவதில் குறைவையும்  முட்டையிடும் வயது அதிகரிப்பதையும் காண முடிகிறது. அண்மையில் கூட சமசீரற்று அதிகரித்த முட்டைகளின் அளவு காரணமாக  பண்ணைகளில் முட்டை இடச் சிரமப்பட்டு பல கோழிகள் இறந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. உடற்கூற்றியல் சோதனையில் அவற்றின் இனப்பெருக்க தொகுதி  முறையாக வளராத நிலையையும்  முட்டைகள்  சிறிது பெரிதாக இருந்ததையும் காண முடிந்தது. கோழி உணவுகள் குறித்த தரத்தில் இருந்தால் மட்டுமே எதிர்பார்த்த விளைவுகளை பெற முடியும். எனினும் தற்போது இருக்கும் நிலையில் கோழி  உணவின் தரத்தை அளவிட முடியாத நிலையில் இருக்கின்றோம். இலங்கையில் பேராதனை கால்நடை ஆராய்ச்சி மையத்தில் [VRI]  மாத்திரமே இதனை ஆய்வு செய்ய முடியும். தேவையான முக்கிய மூலப் பொருட்களின் தட்டுபாடு காரணமாகவும் அவற்றின் மாற்றாக தரம் குறைந்த உள்ளூர் உணவுகளை பாவிப்பதாலும் தேவையானவற்றை சேர்க்காததாலும் நிச்சயமாக அவற்றின் தரம் குறைந்துள்ளதை உணர முடிகிறது. சில பண்ணையாளர்கள் உள்ளூரில் கிடைக்கும் தரம் குறைந்த தீவனங்களைப் கோழிகளுக்கு வழங்கி உணவு நஞ்சாகி அவை கணிசமாக இறந்ததையும் அவதானிக்க முடிந்தது.

கோழிகளின் வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின்- கனியுப்புகள் மற்றும் கோழி மருந்துகளின் தட்டுபாடும் நிலவுவதோடு அவற்றின் விலை கூட கணிசமாக அதிகரித்துள்ளது. இவை அதிகளவில் இறக்குமதி செய்யப்படுபவை. பல கோழிப் பண்ணையாளர்கள் தமது கோழிகளுக்கு நோய் ஏற்படும் போது முறையான சிகிச்சை அளிக்க முடியாது பாதிக்கப்படுவதை காண முடிகிறது. கோழிகளும் கணிசமாக இறக்கின்றன. கால்நடை உற்பத்தி சுகாதார சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்படாததால் பல விடயங்களை அந்த துறையால் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. நெல் மரக்கறி விவசாயிகளுக்கு எரிபொருள் பெறுவதற்கு கொடுக்கப்படும் முன்னுரிமை உணவு உற்பத்தியின் இன்னொரு பங்காளரான கால்நடை பண்ணையாளருக்கு வழங்கப்படாமை ஒரு முரணாகும் .  இன்றைய நாளில் ஏற்படுள்ள எரிபொருள் தட்டுப்பாடு  பல கால்நடை வைத்தியர்கள் கூட பண்ணைகளுக்கு கள விஜயம் செய்ய முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளதுடன்  நோய் உள்ள கோழிகளை பண்ணையாளர்கள் கால்நடை வைத்திய அலுவலகங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் தோன்றியுள்ளது. இன்றைய இந்த கோழிப் பண்ணை துறைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தவல்ல பாதிப்புகளை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம், கோழிப் பண்ணையாளர் சங்கங்கள் மற்றும் ஏனைய  துறை சார் வல்லுனர்கள் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்கின்ற போதும் அரசின் உயர்மட்டம் இதுவரை செவி சாய்க்க வில்லை.

கோழி வளர்ப்பு

இன்று பல கோழி உணவு உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இயங்கும் நிறுவனங்களின் தீவனம் கூட  தரம் குறைந்துள்ளது. தமது கோழிக் குஞ்சுகளை வாங்கும் வாடிக்கையாளருக்கு மாத்திரம் கோழித் தீவனத்தை வழங்கத் தொடங்கியுள்ளன. சில நிறுவனங்கள் உள்ளூரில் விளையும் மக்காச்சோளம் போன்ற மூலப் பொருட்களை வாங்கிச் சேமிக்கின்றன. இதனால் சிறிய விலங்குணவு உற்பத்தி நிறுவனங்கள் மூலப் பொருள் இன்றி மூடப் படுகின்றன. நட்டம் மற்றும் ஒழுங்கற்ற விநியோகம் காரணமாக பல விலங்குணவு கடைகள் மூடப்படுகின்றன. இறக்குமதிக்கும் வாய்ப்பில்லை. எரிபொருள் விலையேற்றம், எரிபொருளை பெறுவதிலுள்ள சிரமம் காரணமாக கோழித் தீவனம், முட்டை இறைச்சியை நாடு முழுதும் விநியோகம் செய்வது அதிக செலவு மிக்கதாக மாறியுள்ளது. இறுதி விளைவாக பல்லாயிரக் கணக்கான கோழிப் பண்ணை சார்ந்த தொழிலாளிகள் பாதிக்கப்படுவதோடு பல மில்லியன் முதலிட்டுள்ள கோழிப் பண்ணை உரிமையாளர்கள் மீளமுடியாத பொருளாதார சுமைக்கும் ஆளாகியுள்ளனர். அத்துடன்  குறைந்த விலையில் குழந்தைகள் வயோதிபர்கள் நோயாளிகள் என மனிதனின் புரதத் தேவையை பூர்த்தி செய்யும் முக்கியமான உணவு மூலங்களான கோழி இறைச்சியும் முட்டையும்  கிடைக்காமல் போசணைக் குறைபாடுகள் ஏற்பட்டு இலங்கை மக்கள் மென்மேலும்  துன்பத்துக்கு  ஆளாகப்போகின்றனர்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்