இப்போது கடந்துகொண்டிருக்கும் வரலாற்று மாற்றம் பற்றித் தெளிவு பெறுவதில் சிரமம் இருக்க இயலும். ஏற்படவுள்ள மாற்றத்தின் பேறாக வெளிப்படும் புதிய வாழ்முறையின் தாற்பரியங்களை வைத்தே பலரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது எனக் கண்டறிய வாய்ப்புப் பெறக்கூடும். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்தேறிய மாற்றத்தைக் கணிப்பதில் கூடத் தெளிவீனம் உள்ள நிலை ஆய்வுலகில் பல இடங்களில் உள்ளன. பக்தி இயக்கம் பற்றிய கணிப்பு அவற்றுள் ஒன்று. பக்திப் பேரியக்கத்தின் ஊடாக மேற்கிளம்பி வந்தது பிராமண மதமே எனும் கருத்து பலரிடமும் நிலவக் காணலாம். இந்து சமயம் என்பதை வரையறை செய்யத் தவறுவதனால் நேர்ந்துள்ள இடர்ப்பாடு அது. அன்றைய மாற்றத்தின் ஆதார சுருதி நாவுக்கரசர் பிரதிநிதித்துவப்படுத்திய வெள்ளாளரா? ஞானசம்பந்தரை வெளிப்படுத்திய பிராமணரா? என்பதில் தெளிவேற்படும்போது தான் அன்றைய மாற்றத்தின் தாற்பரியங்களையும் விளங்கிக்கொள்ள இயலும். சென்ற அமர்வில் அது குறித்து உரையாடி இருக்கிறோம்.
இன்றைய உலகை ஏகாதிபத்தியத் திணை தலைமை ஏற்று நடத்தி வருகிறது. அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிக்கு சோவியத் யூனியன் தலைமையில் இயங்கிய சோசலிச முகாம் பாரிய சவாலாக அமைந்தபோது ஒடுக்கப்பட்ட தேசங்கள் ‘அணிசேரா நாடுகள்’ என ஒன்றிணைந்து ஏகாதிபத்தியத்தால் பரிபூரணமாகச் சுரண்டப்படுவதில் இருந்து பாதுகாப்புக் கவசம்பெற சோசலிச அணி உதவி புரிந்தது. சோவியத் யூனியன் தகர்ந்து ருஷ்யா தனிமைப்பட்ட போது சோசலிச முகாமும் வலுக்குன்றியது. சோவியத் அமைப்பில் அங்கம் வகித்த உக்ரேனை ருஷ்யாவுடன் யுத்தத்துக்குத் தூண்டி ருஷ்யாவை மேலும் பலவீனப்படுத்தும் தந்திரோபாயத்தை ஏகாதிபத்திய அணியால் (திணையால்) முன்னெடுக்க இயலுமாக உள்ளது.
ஏகாதிபத்தியத்துக்கு இன்று சவாலாக இருப்பது முன்னாள் சோசலிச நாட்டின் மிச்சமீதியல்ல; தொடர்ந்து மாற்று வழிமுறை வாயிலாக ஒடுக்கப்பட்ட தேசங்களை அரவணைத்தவாறு புதிய வடிவிலான சோசலிசப் பாணி ஒன்றைக் கட்டமைத்து வளரும் மக்கள் சீனமே ஏகாதிபத்தியத்தால் பெரும் அச்சுறுத்தல் எனக் கண்டுணரப்படுகின்றது. தைவான், ஜப்பான், இந்தியா போன்ற களங்களைப் பயன்படுத்தி யுத்தத்துக்குள் இழுத்துவிட முயன்றும் கூட சீனா மோதலைத் தவிர்த்து சிந்தனைத்தளத் தாக்கத்தால் ஏகாதிபத்தியத் தந்திரோபாயங்களை வீழ்த்தியபடி முன்னேறி வருகிறது.
முன்னர் பெரும் அச்சுறுத்தலாக இருந்த ருஷ்யாவை விடவும் புதிதாக வளர்ந்து வருகிற மக்கள் சீனமே , தாங்கள் பேண முயலும் ஏற்றத்தாழ்வுச் சமூகக் கட்டமைப்பைத் தகர்த்துவிடும் தலையாய அபாயமாகி உள்ளது என்பதனை ஏகாதிபத்தியத் திணை விளங்கிக்கொண்டுள்ளது. ஏற்றத்தாழ்வான வாழ்முறையை யுத்தங்கள் வாயிலாக வென்றெடுத்து வந்த வெள்ளாளர் தலைமையானது அரசியல் பலம் முற்றிலும் தம்மிடமே உள்ளது என்ற புரிதலுடன் பிராமணருக்கு அதீத புனிதக் கற்பிதங்களை வழங்கி வந்தனர். அன்றைய சூழலில் கருவறைக்குள் தொழிலாற்றி நிலவுடைமையிலும் வளர்ந்துவந்த பிராமணர்கள் தமக்கான பிராமண மதத்தை மேலோங்கச் செய்வதனைவிடவும் அனைத்துச் சமூக சக்திகளையும் அரவணைக்கும் வண்ணம் அவரவரது சமயங்களின் மேலாண்மைகளையும் உட்படுத்தி இயங்க வேண்டும் என்ற புரிதலுடனேயே செயற்படலாயினர். வேளாண்மைச் சமூகத் தலைமையை வெற்றிகொள்வதே தலையாய பணி என்ற வகையில் வெள்ளாளர் தமக்கான இறையென முன்னிறுத்திய சிவனை, ரிக் வேதம் இழிவாகக் கருதிய போதிலும் புதிய மதத்துக்கான தனிப்பெரும் கடவுளாகப் போற்றுவதற்குப் பிராமணர்கள் பின்னிற்கவில்லை.
வணிக – வேளாண்மைச் சமூகங்கள் இடையேயான முரணியக்கம்
சுடலைப்பொடி பூசி நர்த்தனமிடும் சிவனை முழு முதல் கடவுளாக்கும் கோட்பாட்டு எழுச்சிக்கான தொடக்கத்தை வணிகச் சாதியைச் சேர்ந்தவரான காரைக்காலம்மையார் ஏற்படுத்திச் சென்றார். வணிகச் சமூக நலன் பேணும் சமணப் பள்ளியில் கற்றுத் தேர்ந்து அதன் விருத்திக்கு உழைத்த நாவுக்கரசர் சிவ நடனத்தைக் காணப்பெறும் வாய்ப்புக் காரணமாக மனிதப் பிறப்பும் விருப்புக்கு உரியதென இலட்சியப்படுத்தியதன் ஊடாகப் பக்திப் பேரியக்கத்தை வழிப்படுத்தி இருந்தார். தமக்கான நட்பு சக்தியும் வேளாண்மைச் சமூக மேலாதிக்கத்துக்கான கருத்தியலை வடிவப்படுத்தியதுமான பிராமண வர்ணத்தாருக்கு ஆன்மிகத் தளத்தில் அதியுச்ச இடத்தையும் நாவுக்கரசர் வலியுறுத்தினார்.
‘பிந்தி வந்த கொம்பு செவியை மேவி வளர்ந்துவிட்டதைப்’ போல நவீன சமூகத்தில் ஏகாதிபத்தியத்துடன் கூட்டமைத்த பிராமண உயர் குழாத்தினரது அதிகாரத்துக்கு எதிராகப் போராட வேண்டிய தேவை வெள்ளாளருக்கு ஏற்பட்டது. பிராமணருக்கு வழங்கிய அதீத புனித மேலாண்மையைக் காலம் தாழ்த்திப் புரிந்துகொண்ட வெள்ளாளர்கள் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் தமக்கான ஆன்மிக மேலாதிக்கத் தத்துவமாக சைவசித்தாந்தத்தை உருவாக்கி இருந்தனர். மூன்று, நான்கு நூற்றாண்டுகள் கடப்பதற்குள் சமூக – பொருளாதார மேலாதிக்கத்தைத் தக்கவைக்கும் நோக்குடன் சமரச முரணில் ஏற்பட்ட இணக்கத்தின் பேறாக சமஸ்கிருதத்தின் வாயிலாகவே சைவசித்தாந்தம் தமிழுக்குக் கைவரப்பெற்றது என நம்பவும் தொடங்கி இருந்தனர். பிரித்தானிய ஆட்சி ஏற்பட்ட பின்னரே (குறிப்பாக ஏகாதிபத்திய சகாப்தத்துடன்) மீண்டும் பிராமண – வெள்ளாள மோதல் முன்னிலைக்கு வந்தது.
இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூறு அளவிலேயே தமிழின் சொந்த வெளிப்பாடாக மேற்கிளம்பிய சைவசித்தாந்தம் பின்னர் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்ட உண்மை தெளிவுபடுத்தப்பட்டது. இத்தகைய மோதல் – இணக்கம் – மீண்டும் முரண் என்ற வளர்ச்சிப் போக்கைக் கவனம் கொண்ட இன்றைய மெய்யியல் சிந்தனையாளர்கள், பிராமணர் – பிராமணரல்லாதார் மோதலின் ஊடாகவே எமக்கான சமூக மாற்றச் செல்நெறி இயக்கம் நடந்தேறி வருவதாகக் கருதலாயினர். வட இந்தியாவில் மேலாதிக்கச் சமூக நியதி தொடக்கம்பெற்ற போது உருவாகி இருந்த ஏற்றத்தாழ்வை நால்வர்ணக் கோட்பாடாகப் பிராமணியம் வடிவப்படுத்தி இருந்தது. அங்கே நிலவுடைமையை அதிகம் பெற்றிருந்த பிராமணர் ஆன்மிகப் புனிதத்தையும் முன்னிறுத்தித் தமது வர்ணமே முதல் நிலைக்குரியது எனக் கூறும் தர்ம சாத்திரங்களையும் வடித்தனர். வர்த்தகத்தின் வாயிலாக மேல்நிலை பெற்ற வைசியர்கள் தமக்கான கருத்தியலாக அவைதிக மதங்களைக் கண்டு அவற்றை ஆதரித்த போது பிராமண மதம் பின்னடைந்து பௌத்தமும் சமணமும் செல்வாக்குடையனவாக மாறியிருந்தன.
கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் பின்னர் அந்த அவைதிக மதங்கள் வீழ்ச்சி அடைந்து பிராமணர்களது ஆதிக்கம் மேலோங்கி வந்த காரணத்தால் வைதிக நெறிக்கும் அவைதிக நெறிக்கும் இடையேயான மோதலை முன்னிலைக்கு உரியதாகக் கருதுவோருளர். அம்பேத்கர் 1956 இல் பௌத்த மதத்தைத் தழுவியமையை முன்னுதாரணமாகக் கொண்டு வைதிக சமயம் வீழ்த்தப்பட்டால் சமூக விடுதலை சாத்தியப்படும் என நம்பிப் பரப்புரை செய்யப்படுவதனை அவதானிக்கலாம். எமக்கான சமூக மாற்றத்தில் கருத்தியல் மோதல் முதல் நிலை வகிப்பது மெய். ஆயினும் எத்தகைய சமூக – பொருளாதார அடித்தள மாற்றத்தின் பேறாக இந்தக் கருத்தியல் மோதல் வெளிப்பாடு அடைகிறது எனும் தெளிவற்ற சூழலில் முன்னெடுக்கப்படும் இத்தகைய மத மாற்றச் செயற்பாடுகள் உரிய பெறுபேற்றை எட்ட இயலாத நெருக்கடியையே ஏற்படுத்தும்.
வட இந்தியாவில் இடம்பெற்ற வைதிக – அவைதிக மதங்கள் இடையேயான மோதலுக்குரிய ஒழுங்குப் பிரகாரம் அதே வகைப்பட்ட முறையில் தமிழகத்தின் வரலாற்று இயக்கம் அமைந்திருக்கவில்லை. அங்கே பிராமண – சத்திரியர் இடையே நிலவிய உறவு போலத் தமிழக நிலை இல்லை. இங்கே சத்திரிய வர்ணமே கிடையாது என்ற கருத்து மனங்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. மருதத் திணை மேலாதிக்கத்தின் வாயிலாக ஆட்சியைப் பெற்ற அரசர்கள் ‘சத்திரியர்கள் போலப்’ பார்க்கப்பட்டாலும் அவர்களுக்கான சமூகத் தளமும் அவர்களைத் தலைமையாகக் கொண்டு நிலவுடைமையைப் பெற்ற வெள்ளாளச் சாதிக்குரியது தான். மேலாதிக்கம்பெற்ற வெள்ளாளர் ஆளுந்தகைமையைப் பெற்ற போதிலும் கையகப்படுத்திய நிலத்தில் உழைக்கும் சூத்திர வர்ணத்தவராகவே பிராமணக் கருத்தியலால் வரையறுக்கப்பட்டிருந்தனர். மேலான அரசியல் அதிகாரம் இருந்தபோது ‘சற்சூத்திரர்’ என்ற தரவேறுபாடே போதுமானதாக உணரப்பட்டு இருந்தது. அவர்களுக்கான அரசியல் ஆதிக்கம் விஜயநகரப் பேரரசால் தரவிறக்கம் அடைந்த பின்னரே வெள்ளாள – பிராமணக் கருத்தியல் மோதல் மேற்கிளம்பலாயிற்று; சைவசித்தாந்தம் வெளிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்விரு தரப்பாருக்கு இடையிலான மோதல், சமரச முரண் என்ற வகைப்பட்டது; அடிப்படையான பொருளுற்பத்தி முறையை மாற்றாமல், எவரது அதிகாரம் கூடுதல் வலுவுடையது எனும் திணை மோதல்!
முன்னதாக கி. மு. 6 – 3 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் சமத்துவ ஊடாட்டமிக்க திணைகள் இடையேயான வணிக எழுச்சியின் வெளிப்பாடாக தமிழ்ப் பண்பாட்டின் அடித்தளமாக ஆசீவக மதம் வெளிப்பட்டிருந்தது பற்றிப் பார்த்து வந்துள்ளோம். மருதத் திணை மேலாதிக்கம் ஏற்பட்டபோது (கிமு 3 ம் நூற்றாண்டு முதலாக) ஆசீவகம் முன்னிறுத்திய சமத்துவ நோக்கு ஏற்கவிலாததாக மாறவும் மேலாதிக்கம்பெற்ற வேளாண்மைச் சக்தி வடக்கிலிருந்து வந்த பிராமண மதத்தைக் கையேற்றுக்கொண்டது. அதனை அப்படியே உள்வாங்கி இருக்கவில்லை. பிராமண மதம் தமிழ் வேளாண் குடிகளது இயற்கை வழிபாட்டுடன் இணைந்த புதிய வளர்ச்சியை இங்கே எட்டியிருந்தது. அதனை வீழ்ச்சியுறச் செய்த வணிக மேலாதிக்கம் கி. பி. 2 ஆம் நூற்றாண்டின் பின்னர் சமத்துவ ஊடாட்டமுடைய வணிகக் கருத்தியலான ஆசீவகத்தைக் கைவிட்டவாறு மேலாதிக்கவாத வணிகக் கருத்தியலை வெளிப்படுத்தும் வட இந்திய அவைதிக மதங்களைக் கையேற்று வளர்த்தெடுத்தது பற்றியும் அறிவோம்!
ஆக, வணிக – வேளாண் சமூகங்கள் இடையே தமக்கமைவான பொருளுற்பத்தி உறவு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற வரலாற்று நிர்ப்பந்தம் ஏற்படும் நிலையில் தமது நலனைப் பேண ஏற்புடையதான சமூக அமைப்புக் கட்டமைக்கப்படுவதனைச் சாத்தியப்படுத்த வேண்டியிருந்தது. அந்தச் சூழலுக்கான கருத்தியல் தள மோதல்களே அவைதிக – வைதிக மதங்களின் வாயிலாக வெளிப்பட்ட இந்தக் கருத்தியல் போராட்டங்கள் என்பது தெளிவு. பண்பாட்டுப் புரட்சியூடாக வெற்றிகொள்ளப்பட்ட சமூக மாற்றம் இது. பக்தி இயக்கத்தின் வாயிலாக ஏற்பட்ட அரசியல் – சமூக – பொருளியல் எழுச்சியில் (கி. பி. 8 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்) நிலப்பிரபுத்துவக் கட்டமைப்புக்கான விருத்தி இங்கே சாத்தியப்பட்டிருந்தது என்பதனூடாக இதனைப் புரிந்துகொள்ள இயலும். அதேவேளை, பக்திக் கோட்பாட்டை முன்வைத்தவர் வணிகச் சாதியைச் சேர்ந்த காரைக்காலம்மையார் என்பதும் அதற்கான மெய்யியல் வடிவத்தையும் இயங்காற்றலையும் வழங்கிய நாவுக்கரசர் வணிகக் கருத்தியலுக்கு உரிய சமணப் பள்ளியில் இருந்து வந்தவர் என்பதையும் எவ்வகையில் புரிந்துகொள்வது?
இந்து சமய வடிவத்தில் சைவ நெறி
பண்பாட்டுப் புரட்சி வாயிலாக நிலப்பிரபுத்துவக் கட்டமைப்புச் சாத்தியப்பட்ட போதிலும் நிலவுடைமையின் பொருளுற்பத்தி உறவுக்கு ஏற்புடையதாக அமைந்த சாதி முறைமை என்பது அடுத்துள்ள வளர்ச்சியில் முதலாளித்துவ அமைப்பை வென்றெடுக்கத் தடையாக இருந்துள்ளது எனும் கருத்து நிலவுகிறது. முதலாளித்துவ மாற்றத்தை எட்டியிருந்த ஐரோப்பியரது இடையீட்டின் காரணமாகவே சாதியத்தை வலுவான அடித்தளமாகக் கொண்டிருந்த பொருளுற்பத்தி முறையைத் தகர்த்து மூலதன விருத்தியைச் சாத்தியமாக்க இயலுமாயிற்று என்ற வகையில், வர்க்க பேதங்களைத் தகர்த்து சமத்துவ சமூக அமைப்பை வென்றெடுக்கவும் ஐரோப்பியப் புரட்சி அனுபவங்களைக் கற்றுப் பிரயோகிக்க வேண்டி உள்ளது என்பர்.
சாதிகளைத் தகர்த்து வர்க்க அணிசேர்க்கைக்கான மாற்றத்தை எட்டும்போது மட்டுமே பாட்டாளி வர்க்கச் சிந்தனையைக் கையேற்றுப் பிரயோகித்துச் சமத்துவச் சமூகத்தைப் படைப்பதற்கான வாய்ப்புக் கிட்டும் என்ற நம்பிக்கை எமக்கான பிரத்தியேகச் சமூக முறைமையையும் அதற்கே உரித்தான வரலாற்று மாற்றப் போக்குகளையும் கண்டுணரதாததன் பேறு. இன்றைய வரலாற்றுக் கட்டமேகூட எமது சமூக முறைமையை நினைவூட்டுவதாகவே உள்ளது. ஏற்றத்தாழ்வுச் சமூக முறை வர்க்க அடிப்படையில் மட்டும் இயங்கி வந்திருக்கவில்லை. முழுச் சமூக சக்தியாக (திணையாக) ஆதிக்க சாதி சுரண்டலை மேற்கொண்டதைப் போன்றதே இன்றைய தேசங்கள் மீதான ஏகாதிபத்தியத்தின் சுண்டலும். மேலாதிக்கச் சாதிகள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சுரண்டி வந்ததைப்போல நவகாலனித்துவ முறைமையில் எமது தேசங்கள் ஏகாதிபத்தியத் திணையால் சுரண்டப்படுகிற நிலையைத் தகர்த்தால் அன்றி முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சக்கட்டத்தை எட்டி ஏகாதிபத்தியமாகப் பரிணமித்துவிட்ட மேலைத்தேசங்களில் வர்க்கப் புரட்சி ஏற்படப் போவதில்லை என்பதனைக் கண்டுகொள்ளாமல் இருக்க இயலாது. வர்க்கப் புரட்சியாக அன்றி, பல்வேறு வர்க்கங்களையும் ஐக்கியப்படுத்தியவாறு ஏகாதிபத்தியப் பிணைப்பைத் தகர்ப்பதனூடாக அனைத்துத் தேசங்கள் இடையே சமத்துவத்தை வென்றெடுப்பதே ஒடுக்கப்பட்ட தேசங்கள் கட்டியெழுப்புகிற சோசலிசக் கட்டமைப்பு என்பதாக இன்றைய வரலாற்றுத் திருப்பம் ஏற்பட்டுள்ளது!
வர்க்கச் சமூக (ஐரோப்பிய) அமைப்பில் அதிகாரத்தில் இருந்த வர்க்கத்தை அழித்தொழித்துப் புதிய வர்க்கங்களை உடைய சமூக அமைப்பு எழுச்சி பெற்று வந்ததைப் போல முழுச் சமூக சக்திக்குரிய (திணை அரசியலுக்குரிய) எமக்கான செயலொழுங்கு அமைந்திருக்கவில்லை. இங்கே முன்னெடுக்கப்படுகிற விடுதலைத் தேசியச் சோசலிச நிர்மாணத்தில் பாட்டாளி வர்க்கச் சோசலிசக் கட்டமைப்புப் போன்று முதலாளித்துவம் அழித்தொழிக்கப்படுவதில்லை. தேசிய முதலாளித்துவத்தையும் ஐக்கியப்படுத்தியவாறு விடுதலைத் தேசியம் விருத்திபெறுகிற போதுதான் கொடுமுடியாகத் திகழும் ஏகாதிபத்திய உச்சத்தை வீழ்த்தித் தேசங்கள் இடையே சமத்துவத்தை வென்றெடுக்க இயலும்.
ஐரோப்பியச் சமூகத்தில் (அன்றைய கிரேக்கம், ரோம்) ஆண்டான் – அடிமை வர்க்கங்கள் இல்லாது ஒழிக்கப்பட்டு நிலப்பிரபுத்துவ அமைப்பு எழுச்சி பெற்றபோது அந்தப் புதிய சமூக முறைமைக்கான மதமாக கிறிஸ்தவம் வடிவம் பெற்றிருந்தது. கிறிஸ்தவத்தையே ஐரோப்பியச் சமூகம் முழுமையும் (நிலப்பிரபுக்கள், பண்ணையடிமைகள், கைவினைஞர்கள்) ஏற்றொழுகினர். அதிகாரம்பெற்ற கிறிஸ்தவ மதத்தால் விலக்கப்பட்ட வணிகத்தை அங்கே சிறுபான்மைச் சமூகமாகச் சிதறுண்டு வாழ்ந்த யூதர்கள் மேற்கொண்டனர். அரச – சமூக – பண்பாட்டு ஆதரவற்ற வணிகம் உள்ளூர் மட்டங்களில் ஒடுங்கியிருந்த போது அன்றைய உலக வர்த்தகத்தை இந்திய – சீன – அரபு வணிகர்களே மேற்கொண்டு வந்தனர். இந்தியாவில் தமிழக வணிகர்களே முதல் வரிசைக்குரிய மேலாண்மையை நீண்டகாலம் பெற்றிருந்தனர். குறிப்பாகச் சோழப் பேரரசர் இராசேந்திரனால் கடாரம் (மலேசியா, இந்தோனேசியா) மீது யுத்தம் மேற்கொள்ளப்பட்டு மேலாதிக்கத்தை மேற்கொள்ள நேர்ந்தது, தமிழ் வணிகர்களது பாதுகாப்பு, நலன் என்பவற்றைப் பேணும் பொருட்டாகவே.
எமக்கான நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பில் வணிகம் ஆதார சக்தியாகப் பயன்கொள்ளப்பட்டது. உள்ளூரிலும் வணிகர்களின் பொருட்டு வழக்காடச் சிவன் நேரில் வந்து திருவிளையாடல் புரிந்ததான புராண வழக்காறு இங்குள்ளது. இந்தப் பின்னணியுடன் வணிகத் தரப்பின் ஒரு பகுதியினர் அறநெறிக் காலத்தின் (கி. பி. 2 – 7 ஆம் நூற்றாண்டுகள்) வணிக மேலாண்மை தகர்க்கப்பட்டு பக்திப் பேரியக்கத்தின் ஊடாக நிலப்பிரபுத்துவ மேலாதிக்கம் ஏற்படுவதற்குப் பணியாற்றியமையை விளங்கிக்கொள்ள முயற்சிக்கலாம். அறநெறிக்கால அரசு விவசாய விருத்தியில் அக்கறையற்று வர்த்தக நலனுக்கே முன்னுரிமை வழங்கியபோது ஈழத்துணவு இறக்குமதியாக்கப்பட வேண்டி இருந்தது. இத்தகைய வெளிநாடுகளுடனான வர்த்தக ஈடுபாடுடையோர் அதீத செல்வச் செழிப்பில் திளைத்தனர். கடல்கடந்த வர்த்தகர்களுடன் உள்ளூர் வணிகர்களுக்கான வர்க்க முரண்பாடு காரணமாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர், சமூக மாற்ற சக்திகளுக்கு உதவிபுரிந்து, தமக்கானதாகச் சொல்லப்பட்ட வணிக மேலாதிக்கத்தை தகர்ப்பதற்கு வழிகோலியுள்ளனர் என்பது தெளிவு!
வணிக மேலாதிக்க மதங்களாக பௌத்தமும் சமணமும் திகழ்ந்த நிலை மாற்றமடைந்து நிலப்பிரபுத்துவ மேலாதிக்கம் ஏற்பட்ட பின்னர் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வணிகத் தரப்பினர் தமக்கான பழைய மதங்களைப் பின்பற்றினராயினும் கணிசமானோர் முருக வழிபாட்டை முன்னிறுத்தி இந்து சமயத்தைத் தழுவினர் (பலர் இஸ்லாத்தைத் தழுவும் வகையில் வணிகக் கருத்தியல் சார்ந்த அந்தப் புதிய மதமும் தமிழகத்தில் அறிமுகப்பட்டு இருந்தது). சிவன், விஷ்ணு ஆகிய முழுமுதற் கடவுளரைப் பக்திப் பேரியக்கம் ஏற்புடையதாக ஆக்கிச் சைவமும் வைணவமும் ‘தமிழர் மதங்கள்’ எனப் பரப்புரை செய்யப்பட்ட போது இரண்டுடனும் உறவு பாராட்டிய முருக வழிபாட்டை வணிகச் சாதியினர் முன்னிறுத்தியமை தனி ஆய்வுக்கு உரியது. பின்னர் அருணகிரிநாதர், குமரகுருபரர் போன்றோர் ஊடாக முருக வழிபாடு முன்னிலை பெற்ற இரண்டாவது பக்தி இயக்கம் குறித்தும் நுண்ணாய்வு அவசியமானது!
ஆதிக்கச் சாதிக்குரிய ஒரு பரம்பொருளுக்கு உட்பட்ட பரிவாரத் தெய்வங்கள் சர்வ வல்லமையுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளமை கவனத்துக்குரியது. ஆதிக்கச் சாதியின் ‘மேன்மைகொள் சைவமும் வைணவமும்’ ஏனைய சாதிப் பிரிவினர்களது குலக் கடவுளர்களை ஆட்படுத்தி அரவணைத்த சமாதான சகவாழ்வு தொடர ஏற்ற வகையில், நிலப்பிரபுத்துவக் காலகட்டத் தேவையை நிறைவு செய்ய ஏற்றதாக, இங்கே இந்து சமயம் தோற்றம்பெற்றது. பரந்த ஐக்கியத்தைக் கட்டியெழுப்பிய இந்த இந்து சமயம், முந்திய பிராமண மதத்தினின்றும் பல வகைகளில் வேறுபட்டது. பிராமண மதம் வீரயுகத்தில் சிறு நிலவுடைமை பெற்ற சிறியதொரு குழுவான கிழார்களதும் அரசினதும் ஏற்பினைப் பெற்ற பிரத்தியேகமான ஒரு சமயப் பிரிவு. ஏனைய இன மரபுக் குழுக்களின் கடவுளருடன் ஊடாட்டம் கொள்ள அவசியமற்றது. இந்து மதத்தின் முழுமுதல் பரம்பொருள் நிலப்பிரபுக்களுக்கு முழுச் சமூகமும் கட்டுப்பட்டு இயங்குவதைப்போல நாட்டார் சமயங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தவல்லது.
சாதி பேதங்களும் சமூக ஒருங்கமைவும்
‘சாதிச் சமயங்களை ஒன்றிணைத்து சமயங்களின் சமயமாக இயக்கம் கொண்ட இந்து மதம்’ என்பதனை விளங்கிக் கொள்வதற்கு அமைவாக அடுத்த அத்தியாயம் “நாட்டார் சமயங்களும் இந்து மதமும்” என்பதாகத் தொடர உள்ளது. செமிட்டிக் மதங்களான யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் போன்றவை ஒரு கடவுள் – இறைதூதர் – பைபிள் (பழைய/புதிய ஏற்பாடுகள்), குர் ஆன் என வடிவமைக்கப்பட்ட ஒரு புனித நூல் – தலைமைத்துவமான ஒரு அமைப்பு என இயங்கும்போது இந்து சமயம் அவ்வாறு எத்தகைய கட்டமைப்பையும் கொண்டிராது முரண்படுகிற பல கடவுளர்களை வழிபட்டுப் போற்றுகிற காரணத்தால் இதனை ஒரு மதமாகக் கருத இயலாதெனக் கூறுகிறவர்கள் உள்ளனர். வர்க்கச் சமூக முறைக்குப் பொருத்தமுடையதாக இயங்கிய ’செமிட்டிக்’ மதங்களினின்றும் வேறுபட்டதான வாழ்முறையின் வெளிப்பாடு இந்து சமயம். வர்க்கப் பிளவுறாமல் இன மரபுக் குழுக்கள் சாதிகளாக மாற்றம்பெற்று நீடிக்கும் எமக்கான திணை மேலாதிக்க வாழ்வியலில் இன மரபுக் குழுக்களின் வழிபாட்டு அம்சங்களது நீடிப்புத் தொடர்வதற்கு இங்கே அனுமதிக்கப்பட்டது!
வளமான பரந்த நிலப்பரப்பு இங்கே காணப்பட்டதன் காரணமாக வென்றடக்கப்பட்ட திணைகளுக்கு உரிய இன மரபுக் குழுக்கள் தத்தமது பண்பாட்டுக் கோலங்களுடன் சாதிகளாக இயங்க அனுமதிக்கப்பட்டன. அங்கே இன மரபுக் குழுக்கள் தகர்க்கப்பட்டு சுரண்டப்படும் வர்க்கங்கள் என ஆக்கப்பட்ட போது இத்தகைய பண்பாட்டு நீடிப்புக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆதிக்க வர்க்கத்தின் ஒரு கடவுள், ஒரு திருச்சபை, அதிகாரம்பெற்ற புனித நூல் என்பவற்றுக்கு சுரண்டப்படும் வர்க்கங்கள் கட்டுப்பட வேண்டி இருந்தது!
இங்கே மேலாதிக்கம்பெற்ற ஆதிக்கச் சாதிக்கான சிவன், சாதிய மேலாதிக்கத்தின் அடையாளம். வெள்ளாளர் அனைவரும் சம உரிமையுடன் அவருக்கு ஆலயம் அமைக்க இயலும். ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கான காத்தவராயன், மதுரை வீரன் போன்றோர் அந்த மக்கள் மத்தியில் இருந்து வந்தபோதிலும் ‘மேன்மைகொள் சைவ நீதிக்கு’ ஆட்படுத்தும் வகையிலான புராணக் கதைகள் வாயிலாக சிவனுடன் பிணைக்கப்பட்டு உள்ளனர்.
ஆதிக்கச் சாதியினர் அனைவரும் நிலவுடைமையாளராக இருந்ததில்லை. சாதி மேட்டிமைக்காக வெள்ளாளர்கள் அனைவரும் சிவனைப் பிரதிஷ்டை செய்ய அனுமதிக்கப்படாலும் கூட, அவர்களுக்கு உள்ளேயும் நிலவுடைமை பெற்ற வர்க்கமாக உள்ள பிரிவினரே ‘தூய சைவர்களாக’ சிவனே கதி என இயங்குவர். வெள்ளாளர்களில் சொத்துரிமை அற்ற வர்க்கப் பிரிவினர் தமக்கான நாட்டார் வழிபாட்டில் கூடுதல் கரிசனங்கொள்வர். வேற்றுமைகளுக்குள் ஒற்றுமை பேணும் இத்தகைய சாதிய வாழ்வியல் குறித்துத் தொடர்ந்தும் அலசும் அவசியம் உள்ளது.
தொடரும்.