யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் - 14
Arts
21 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 14

July 2, 2024 | Ezhuna

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனம் 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பின்வீதியில், அமைதியான சூழலில் கம்பீரமாகக் காட்சிதந்த ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனம், கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களால் 1964 இல் மறைந்துவிட்ட அவரது அன்பு மனைவி அமரர். ஈவ்லின் விஜயரட்ன இரத்தினம் அம்மையார் அவர்களின் ஞாபகார்த்தமாக 1981 இல் கட்டப்பட்டது.  

கட்டடக் கலைஞர் வி.எஸ். துரைராஜா அவர்களின் ‘துரைராஜா அசோஷியேட்ஸ்’ நிறுவனத்தின் (கொழும்பு) வடிவமைப்பில் இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் 1979 ஒக்டோபர் 28 இல் இலங்கையிலிருந்த அமெரிக்கத் தூதுவர் பேராசிரியர் ஹாவர்ட் றிக்கின்ஸ் அவர்களால் நாட்டப்பட்டது. இக்கட்டிடம் ‘மனோகரன் ரூ வெற்றிவேல்’ கட்டிட ஒப்பந்தக்காரரினால் ஒன்றரை வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டு, 1981 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் நாள் ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் டொனால்ட் ஆர். ரூசென்ட் அவர்களால் யாழ்ப்பாணத்தில் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. 

இலாப நோக்கற்ற நிறுவனமாக, பல்லினங்களின் பண்பாட்டுத் தொடர்புகளை ஆராய்ந்து அதன் மூலம் மனித சகவாழ்வு உணர்வினையும் பரஸ்பர நல்லிணக்க உணர்வினையும் வளர்ப்பதே இந்நிறுவனத்தின் நோக்கமாக வரையறுக்கப்பட்டிருந்தது. பழைய பண்பாடுகளையும் இன்றைய பண்பாடுகளையும் ஆராய்தல், பண்பாடுகள் பற்றிய அறிவுப் பரிவர்த்தனையை வளர்த்தல் ஆகியவற்றில் இந்நிறுவனம் சிறப்பான ஆர்வத்தைக் கொண்டிருந்தது.  

இந்நிறுவனம் உருவான வேளையில் அதன் நிர்வாகக் கட்டமைப்பு நன்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிறுவனத்தை ஒரு இயக்குநர் நிர்வகிப்பதாகவும், அறங்காவல் குழுவொன்று அவ் இயக்குநருக்கு நெறிகாட்டியாக இயங்குவதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. இயக்குநர் பொறுப்பினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர்களே காலத்துக்குக் காலம் வகிப்பர் என்றும் வரையறை செய்யப்பட்டிருந்தது. அதன்படி முதலாவது இயக்குநராக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கலாநிதி கா. இந்திரபாலா அவர்கள் பொறுப்பேற்றார். அறங்காவலர் குழுவின் தலைவராக வி. மாணிக்கவாசகர் (வேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), துணைத் தலைவராக கே.எம்.டீ. சில்வா (பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அறங்காவல் குழுவின் பிற அங்கத்தவர்களாக, ஏ. ஜெயரத்தினம் வில்சன் (பேராசிரியர், நியூ பிறன்ஸ்விக் பல்கலைக்கழகம், கனடா), ரோலண்ட் சில்வா (தொல்பொருளியல் பிரதி ஆணையாளர், இலங்கை), வி.எஸ். துரைராஜா (பட்டயம் பெற்ற கட்டிடக் கலைஞர், கொழும்பு), கா. இந்திரபாலா (பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) ஆகியோருடன், தாபகர் ஜேம்ஸ் இரத்தினம் அவர்களின் குடும்பத்தவர்களான அமெரிக்காவின் லொஸ் அஞ்ஜெலிஸ் பகுதியில் வசிக்கும் சந்திரன் இரத்தினம், ஈஸ்வரி கமு, பத்மினி ஜோன்ஸ், டெனிஸ் இரத்தினம், ஜோர்ஜ் இரத்தினம் ஆகியோரும் நியமிக்கப்பட்டிருந்தனர். 

ஈவ்லின் இரத்தினம் நிறுவனம் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் நாள் திறந்து வைக்கப்படவிருந்ததை விளம்பரப்படுத்தும் நோக்கில் ‘ஈழநாடு’ பத்திரிகையின் 9.5.1981 இதழில் வெளியிடப்பட்ட அனுபந்தத்தில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. 

“இந்நிறுவனத்தின் நோக்கங்களில் ஈடுபாடுள்ள எந்த நாட்டினத்தையும் சேர்ந்த அறிஞர்களும் இந்நிறுவனத்தில் உறுப்பினராகச் சேரலாம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பீடாதிபதிகளும் இந்நிறுவனத்தின் கௌரவ உறுப்பினர்களாவர். 

கட்டணம்: 

வாழ்நாள் உறுப்பினர் ரூபா : 1000

அனுமதிக்கட்டணம் ரூபா : 100. 

ஆண்டுக்கட்டணம் ரூபா : 50.

தற்காலிக உறுப்பினராக ஒருவர் மாதம் ரூபா 10.00 செலுத்திச் சேர்ந்து கொள்ளலாம்.”

இந்நிறுவனத்தின் நடவடிக்கைகளாக, ஆரம்ப காலத்தில் விரிவுரைகள், கருத்தரங்குகள், ஆராய்ச்சிகளை நடத்துதல், பிற மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்குப் பயன்மிகுந்த படைப்புகளை மொழிபெயர்த்தல் ஆகியன அடங்கியிருந்தன. இவற்றில் உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்களும் உயர்தர வகுப்பு மாணவர்களும் பங்குபற்றுவதற்கு ஊக்கமளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. வெளியிலிருந்து வரும் ஆய்வாளர்கள் நிறுவனத்திலேயே தங்கியிருந்து தமது ஆய்வுகளை முன்னெடுக்க வசதிசெய்து தரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ஈவ்லின் இரத்தினம் நிறுவனத்தின் நோக்கங்களில் ஒன்றாக வருடம் இரு முறையாவது வெளிவரும் வகையில் ஒரு ஆய்வுச் சஞ்சிகை வெளியிடப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும் அது இன்றளவில் சாத்தியப்படவேயில்லை என்பது கவலைக்குரியது. 

காலத்துக்குக் காலம் ஆராய்ச்சிப் படைப்புகளை தொகுத்து வெளியிடும் எண்ணமும் இந்நிறுவன வேலைத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தது. ஆயினும் ஜேம்ஸ் இரத்தினம் அவர்களின் கட்டுரைகளிற் சில மட்டுமே சிறு நூல்களாக வெளியிடப்பட்டிருந்தன. அவையாவன,

1. Sir Ponnambalam Arunachalam: 1853-1924. Colombo: Sir Ponnambalam Arunachalam Centenary Committee, 1953: 28p.

2. Ceylon and the German Democratic Republic. Colombo: Ceylon Printers, 1961: 8p.

3. An Unpublished French Book on Ceylon dated 1801. Colombo 7: Alliance francaise, 54, ward Place, 1968: 12p.

4. Mixed Grill: A collection of Writings. Colombo 7: James T.Rutnam, Baron’s Court, 35, Guildford  Crescent, 1969: 88 p.

5. The Polonnaruwa Colossus: A Critique of an ancient Statue. Chunnakam: Thirumagal Press, 1979: 50 p.

6. Some aspects of the history of Archaeology in Sri Lanka. Jaffna: Archaeological Society, 1975: 12p.

7. The Tomb of Elara at Anuradhapura. Jaffna: Archeological Society, 1981: 32p.

8. எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் (தமிழாக்கம்: ஏ.ஜே. கனகரத்தினா). யாழ்ப்பாணம் : யாழ். மறுமலர்ச்சிக் கழகம், 1981: 32 ப.

இவை அவரது தனிப்பட்ட வெளியீடுகளாகவே ஆரம்பகாலத்தில் அமைந்திருந்தன. 

காலத்துக்குக் காலம் ஆராய்ச்சிப் படைப்புகளை தொகுத்து வெளியிடும் ஈவ்லின் இரத்தினம் நிறுவனத்தின் நோக்கம் ஈடேறாத போதிலும், ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களின்பால் கொண்ட தனிப்பட்ட கௌரவம் காரணமாக சில ஆய்வுக் கட்டுரைத் தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இவரது சேவைகளை கௌரவிக்கும் வகையில் 13.06.1975 இல் கொண்டாடப்பட்ட அவரது எழுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜுன் 1975 இல் யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகத்தின் மூலம், James Thevathasan Rutnam Felicitation Volume  என்ற சேவை நயப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. இவ்வெளியீட்டின் பதிப்பாசிரியராக பேராசிரியர் கா. இந்திரபாலா செயற்பட்டிருந்தார். பதிப்பாசிரியர் குழுவில் ரோலண்ட் சில்வா, ஆ. சிவநேசச் செல்வன், வி. சிவசாமி, சி.க. சிற்றம்பலம் ஆகியோர் பணியாற்றியிருந்தனர். சேவை நயப்பு மலரில் கா. இந்திரபாலா, பசில் பெரேரா, கா. சிவத்தம்பி, பேற்றம் பஸ்தியாம்பிள்ளை, W.S. கருணாதிலக்க, எஸ். சுசீந்திரராஜா, ஏ. சுப்பிரமணியம் (சென்னை), சோபனா கோகலே (பூனா), மைக்கல் ரொபர்ட்ஸ், க. கைலாசபதி, கே.எம்.டீ. சில்வா, ஆஷ்லி ஹால்ப், அ. சண்முகதாஸ், சி.க. சிற்றம்பலம், வி. சிவசாமி, ரோலண்ட் சில்வா ஆகியோர் தமது ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருந்தனர். 

கலாநிதி ஜேம்ஸ் இரத்தினம் அவர்களின் 80 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கையின் யூனெஸ்கோ தேசிய கொமிஷன் (Sri Lanka UNESCO National Commission) Festschrift 1985 – James Thevathasan Rutnam என்ற ஆய்வுக் கட்டுரைத் தொகுதியொன்றை வெளியிட்டிருந்தது. இச்சிறப்பு மலரை A.R.B. அமரசிங்க, எஸ்.ஜே. சுமணசேகர பண்டா ஆகிய இருவரும் பதிப்பாசிரியர்களாக இருந்து சிறப்புற வெளிக்கொணர்ந்திருந்தனர். இவ்வெளியீட்டுக்கென மேர்வின் காசிச்செட்டி, A.R.B. அமரசிங்க, எஸ்.யூ. தெரனியகல, ராஜா டீ அல்விஸ், பேட்ரம் பஸ்தியாம்பிள்ளை, பட்ரிக் ஏ. பீபிள்ஸ், சீ.ஆர்.டீ. சில்வா, சுதர்சன் செனவிரத்ன, ஜோன் கார்ஸ்வெல், லோர்னா எஸ். தேவராஜா,  எஸ்.ஜே. சுமணசேகர பண்டா, சின்னப்பா அரசரத்தினம் ஆகியோர் தமது கட்டுரைகளை வழங்கி கலாநிதி இரத்தினம் அவர்களைக் கௌரவப்படுத்தியிருந்தனர். 

ஆரம்பத்தில் ஈவ்லின் இரத்தினம் நூலகம் கொழும்பில் ஜேம்ஸ் இரத்தினம் அவர்களது இல்லத்தில் (Baron’s Court, 35, Guildford  Crescent, Colombo 7) இயங்கி வந்தது. தென்னிலங்கை அறிஞர்கள் மட்டுமல்லாது பல பிறநாட்டு நல்லறிஞர்களினதும் தேவைகளைப் பூர்த்திசெய்துவந்த இவ்வறிவுக் களஞ்சியம், பிற்காலத்தில் அறிஞர் இரத்தினத்தின் தமிழ்ப் பற்றினதும், தாயகப் பற்றினதும் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டது. 

1972 இல் இலங்கை சுதந்திரக் கட்சி தேர்தலில் வெற்றிபெற்று சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமரான பின்னர் 1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றை நிறுவினார். வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வெளிநிலைப் பட்டப்படிப்புகள் அலகினையும், (Undergraduate Section) 1921 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சேர். பொன்னம்பலம் இராமநாதனால் திருநெல்வேலியில் அமைக்கப்பட்டிருந்த பரமேசுவராக் கல்லூரியையும் இணைப்பதன் மூலம், 1.8.1974 அன்று இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் நிறுவப்பட்டது. இவ்வேளையில் ஜேம்ஸ் இரத்தினம் அவர்கள் இல. 35, Guildford  Crescent, கொழும்பு 7 இல் தனது துணைவியாரின் பெயரால் அமைக்கப்பட்டிருந்த உசாத்துணை நூலகத்தின் சேர்க்கைகளை யாழ்ப்பாண வளாகத்திற்கு அனுப்பிவைத்திருந்தார். ஆரம்பத்தில் ஆர்.எஸ். தம்பையா அவர்கள் பல்கலைக்கழக நூலகராகப் பணியாற்றிய வேளையில் இச்சேகரிப்பு ‘இவ்லின் ரட்ணம் சேகரிப்பு’ என்ற அடையாளத்துடன் யாழ்ப்பாண வளாக வரலாற்றுத்துறைப் பட்டதாரி மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் பயனளித்து வந்தது. 

1981 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் ஈவ்லின் இரத்தினம் பலலினப் பண்பாட்டியல் நிறுவனம் தனது சொந்தக் கட்டிடத்தில் திறந்துவைக்கப்பட்டதை அடுத்து ‘இவ்லின் ரட்ணம் சேகரிப்பு’ தனது சொந்தக் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. பல்கலைக்கழகச் சூழலில் தமிழ்ப் பிரதேசத்தின் அறிஞர்கள் ஒன்றுகூடி உரையாடும் களமாக இயங்கி வரும் வாய்ப்பினை வழங்க இந்நிறுவனம் என்றும் தயாராகவே இருந்தது. 

கலாநிதி ஜேம்ஸ் இரத்தினம் மானிப்பாயைப் பிறப்பிடமாக கொண்டவர். துணைவியார் கொழும்பைச் சேர்ந்தவர். பண்பாடு, வரலாற்றாய்வு, வம்சாவழி பற்றிய ஆய்வுகளில் கலாநிதி இரத்தினம் காட்டிய ஆர்வம், அவரை இந்த நிறுவனத்தின் உயிர்நாடியாக விளங்கும் உசாத்துணை நூலகப் பிரிவைக் கட்டியெழுப்ப வகைசெய்தது. சுமார் 10,000 நூல்களுடனும், வரலாற்றாய்வாளர்களுக்கும் பயன்தரத்தக்க அரிய பல கையெழுத்துப் பிரதிகளுடனும், கடிதச் சேர்க்கைகளுடனும் தன் சேவையை வழங்கி வந்தது. 

கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களின் அரிய ஆவணச் சேகரிப்புகளையும், அவரது நட்பு வட்டத்திலிருந்து சேகரித்த வரலாற்று, சமூகவியல், தொல்லியல்துறைசார் நூல்களையும், விலை கொடுத்து வாங்கப்பட்ட செனரத் பரனவிதானவின் சேகரத்தினையும், காலனித்துவ அதிகாரிகளான வில்லியம் டிக்பி, அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் போன்றோரின் தனிப்பட்ட கடிதச் சுவடிகளையும் கொண்டு வந்து இரத்தினம் நிறுவன நூலகத்தில் சேர்த்திருந்தார். 

பின்னாளில் பேராசிரியர் இந்திரபாலாவின் பெறுமதியான சேகரிப்புகளும் அத்துடன் சேர்க்கப்பட்டு சிறந்ததொரு ஆய்வு நிறுவனமாக பல்கலைக்கழக வட்டாரத்தில் அது இயங்கிவந்தது. 1979 தொடக்கம், 1985 இல் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்று குடியேறும் வரை இவ்லின் இரத்தினம் நிறுவனத்தின் இயக்குநராக கலாநிதி கா. இந்திரபாலாவே இயங்கிவந்தார். 

1986 ஆம் ஆண்டு வரை கலாநிதி இரத்தினம் அவர்களுடைய பொறுப்பில் இயங்கிவந்த இந்நிறுவனம் பின்னர் அவரின் தொடர் சுகவீனம் காரணமாக 1986 இன் இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு கையளிக்கப்பட்டது. அதன் பின் யாழ்ப்பாணக் கல்லூரியினால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவொன்றினால் இந்நிறுவனம் நிர்வகிக்கப்படுகின்றது. இரத்தினம் நிறுவனத்தின் கௌரவ இயக்குநராக 1986 தொடக்கம் 1991 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கலாநிதி சி. பத்மநாதன் அவர்கள் சேவையாற்றினார். 

திரு.ஆ. சிவநேசச்செல்வன் அவர்கள் 1981 முதல் 1984 வரையிலும் நிறுவனத்தின் நூலகராகப் பொறுப்பேற்றிருந்தார். 1984 இல் வீரகேசரி நிறுவனத்தின் பிரதம ஆசிரியராக அவர் சென்ற பின்னர், என். செல்வராஜா அவர்கள் நூலகராக 1984 தொடக்கம் 1990 வரை ஆறு ஆண்டுகள் போர்க்காலச் சூழலில் பணியாற்றி வந்தார். 

நூலகர் என். செல்வராஜா அவர்களின் ‘1984 – 1990’ சேவைக் காலகட்டத்தில் உசாத்துணை நூலகச் சேவை தவிர இந்த நிறுவனம், மாதாந்தக் கருத்தரங்குகளையும், கலை நிகழ்ச்சிகளையும், மாணவர்களுக்காக ‘TOEFL, SAT’ ஆங்கில வகுப்புகளையும் ஒழுங்குசெய்து வந்திருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களினதும், பிற அறிஞர்களினதும் சொற்பொழிவுகளும், கருத்தரங்குகளும் இங்கு இடம்பெற்று வந்தன. 

1989 இலும் 1990 இலும் இத்தகைய கட்டுரைகள் சேர்த்துத் தொகுக்கப்பெற்று நூலுருவிலும் வெளியிடப்பட்டிருந்தன. 

1989 இல் இடம்பெற்ற கருத்தரங்குகளாக, 30.1.1989 இல் கலாநிதி இ. பாலசுந்தரம் வழங்கிய ‘ கூரைமுடிப் பாரம்பரியம்’ என்ற ஆய்வுரையும், 24.2.1989 இல் திருமதி. மல்லிகா இராஜரட்ணம் வழங்கிய ‘Aesthetics of Rabindranath Tagore’ என்ற ஆய்வுரையும், 31.3.1989 இல் கலாநிதி ப. கோபாலகிருஷ்ணன் வழங்கிய ‘சிவாகமங்கள் – ஓர் ஆய்வு’ என்ற ஆய்வுரையும், 28.4.1989 இல் கலாநிதி சி.க. சிற்றம்பலம் வழங்கிய ‘Proto – historic Sri Lanka – A review’ என்ற ஆய்வுரையும், 26.5.1989 இல் கலாநிதி நா. சுப்பிரமணியன் வழங்கிய ‘கந்தபுராணம் – ஆய்வுக்கு ஆற்றுப்படுத்தி நிற்கும் ஓர் ஆய்வு நோக்கு’ என்ற ஆய்வுரையும், 30.6.1989 இல் பேராசிரியர் வி. சிவசாமி வழங்கிய ‘சுவாதித் திருநாள் மகாராஜாவின் சமஸ்கிருத இசை நடனப் பணிகள்’ என்ற ஆய்வுரையும், 28.7.1989 இல் கலாநிதி சி. மௌனகுரு வழங்கிய ‘இலங்கைவாழ் சிங்கள – தமிழ் மக்களிடையே பயில்நிலையிலுள்ள பாரம்பரிய நாடகங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்’ என்ற ஆய்வுரையும், 09.8.1989 இல் கலாநிதி S. ஜெபநேசன் வழங்கிய ‘தென்னிந்தியாவும் கிறிஸ்தவமும்’ என்ற ஆய்வுரையும், 29.9.1989 இல் கலாநிதி நா. ஞானகுமாரன் வழங்கிய ‘இந்தியத் தத்துவமும் அறிவும்’ என்ற ஆய்வுரையும், 29.12.1989 இல் வைத்தியக் கலாநிதி N. சிவராஜா வழங்கிய ‘Problem of Aging – How can we solve them?’ என்ற ஆய்வுரையும் இடம்பெற்றுள்ளன. 

1989 இனைப் போலல்லாது, 1990 இல் சுமுகமான நாட்டு நிலைமை காணப்படவில்லை. 1990 இல் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பிற்கு பேராசிரியர் சி. பத்மநாதன் வழங்கிய முன்னுரையில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். 

“தகைமைவாய்ந்த ஆராய்ச்சியாளரின் கட்டுரைகளை அரங்கிலே சமர்ப்பித்து, அவற்றை விளக்கி விமர்சிப்பது எமது நிறுவனம் மேற்கொண்டுள்ள பிரதான பணிகளுள் ஒன்றாகும். மாதம் ஒரு முறையாக கட்டுரைகளை இவ்வாறு சமர்ப்பித்து அவற்றை ஆராய்வது எமது நோக்கம். 1989 ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் இந்நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறியது. 1990 ஆம் ஆண்டில் அதனை நிறைவேற்ற முடியவிலலை. இவ்வருடத்தின் முற்பகுதியிலேயே சமர்ப்பிக்கப்பெற்ற ஐந்து கட்டுரைகளும் இத்தொகுதியிலே சேர்க்கப்பட்டுள்ளன. ஜுன் மாதத்தின் பின் கருத்தரங்குகளை நடத்திக்கொள்ள முடியவில்லை. கட்டுரைகளையும் எவரிடமிருந்தேனும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆய்வரங்குகளை மீண்டும் நடத்தக்கூடிய சூழ்நிலை விரைவில் உதயமாகுமென்று நம்புகின்றோம்.”

இவ்வாய்வுக் கட்டுரைத் தொகுதியில் திருமதி. மல்லிகா இராஜரட்ணம் 16.2.1990 இல் வழங்கிய ‘Ananda Coomaraswamy’s Views On Indian Art’, கலாநிதி ப. புஷ்பரட்ணம் 30.3.1990 அன்று வழங்கிய ‘சோழர்கால மன்னித்தலைச் சிவாலயம்’, பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை 20.04.1990 இல் வழங்கிய ‘ஜேர்மனியின் மீள் ஒற்றுமையும் அது எதிர்நோக்கும் பிரச்சினையும்’, கலாநிதி. எஸ். ஜெபநேசன் 11.05.1990 இல் வழங்கிய ‘வட்டுக்கோட்டைச் செமினரியும் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் மறுமலர்ச்சியும்’, பேராசிரியர் எஸ். பத்மநாதன் ஜுன் 1990 இல் வழங்கிய ‘Laws and Customs of the Tamils of Trincomalee’ ஆகிய ஆய்வுகள் இடம்பெற்றன. 

விடுதலைப் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்ட 1980 களின் காலகட்டத்திலும், தமிழீழ விடுதலைப் புலிகள் வடபகுதியிலிருந்த தனியார் அறிவுசார் நிறுவனங்களை கையகப்படுத்திய இக்கட்டான சூழ்நிலையிலும், பின்னர் 1987 இல் இந்திய அமைதிகாக்கும் படையின் ஆக்கிரமிப்பு  நடவடிக்கைகளின் போதும் ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் பெறுமதியான சேகரங்களை அழிவில் இருந்து பேணிப் பாதுகாக்கவேண்டிய சூழ்நிலை நூலகர் என். செல்வராஜாவுக்கும், இயக்குநராக இருந்த பேராசிரியர் சி. பத்மநாதனுக்கும் ஏற்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளினால் அயலில் இருந்த ‘ஊற்று நிறுவனம்’ கையகப்படுத்தப்பட்ட வேளை, அவர்களுக்கு இரத்தினம் நிறுவனக் கட்டிடமும் தேவையாக இருந்தது. அவ்வேளையில் அப்பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் இடைநிலைப் பொறுப்பாளர்களால் துப்பாக்கிமுனையில் நான் எனது குடும்பத்தினர் முன்னிலையில் திறப்புகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு மிரட்டப்பட்ட சம்பவங்களும் அடிக்கடி ஏற்பட்டிருந்தன. இறுதியில் அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் இருந்த தளபதி கிட்டுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் நூலகக் கட்டிடத்தின் பொறுப்பு அவர்களிடமே மீள ஒப்படைக்கப்பட்டது. 

இது பற்றிய தனது கருத்தினை அண்மையில் என். செல்வராஜாவின் ‘நினைவுகளே எங்கள் கேடயம்’ என்ற நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 

“இந்நூலாசிரியர் 1986 ஆம் ஆண்டு முதலாக எமக்கு அறிமுகமாகிப் பழகியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே வரலாற்றுத்துறைப் பேராசிரியராக நியமனம் பெற்ற பின்பு எம்மை ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளராக நியமித்தனர். இளைஞராகவிருந்த செல்வராஜா அங்கு நூலகப் பொறுப்பாளராக இருந்தார். அங்குள்ள கட்டிடத்தின் கீழ் மாடியில் ஓரமாகவிருந்த வதிவிடத்தில் குடும்பத்தோடு தங்கியிருந்தார். கட்டிடத்தைக் கைப்பற்றுவதில் விடுதலைப் புலிகள் கவனஞ் செலுத்தத் தொடங்கினார்கள். திலீபன் அதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஆயினும் நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. எங்கள் முயற்சிகளின் பயனாக குடாநாட்டுப் படைக்குப் பொறுப்பாகவிருந்த கிட்டு அம்மான் எங்கள் நிலையத்தில் வந்து எங்கள் இருவரையும் சந்தித்தார். அவர் மரியாதையாக மனம் விட்டு எம்மிடம் பேசினார். 

முன்பு அறிமுகமாகி இருக்காத பொழுதிலும் தங்கள் பலவீனங்கள் பற்றியும் யதார்த்த நிலைகள் பற்றியும் அவர் சொன்னவற்றைக் கேட்டபொழுது எமக்கு வியப்பாக இருந்தது. ஏதோ காரணமாக மதிப்பு வைத்திருந்ததனாலே அவற்றைப் பற்றி அவர் எம்முடன் மனம் விட்டுப் பேசினார். அப்பொழுது செல்வராஜா என் பக்கத்தில் இருந்தார். 

நாம் சொன்னவற்றைக் கேட்டபின் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் எதுவிதமான தலையீடுகளும் செய்யக்கூடாதென்று தனது பரிவாரத்தவருக்குக் கிட்டு அம்மான் கட்டளையிட்டார். எங்களால் நிறுவனத்தைக் காப்பாற்றிக் கொள்ளமுடிந்தது. கடமை உணர்வின் காரணமாகத்தான் நாமிருவரும் பயப்படாது வாதம் புரிந்து செயற்பட்டோம். ஆனால் அதன் பெறுமானத்தை நிறுவனத்தின் உடைமையாளர்களாகிவிட்ட யாழ்ப்பாணக் கல்லூரி நிர்வாகத்தினர் உரிய வகையில் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. செல்வராஜாவின் மேற்பார்வையில் அந்த நிறுவனம் மிகச் சிறப்பாக இயங்கியது. ஆனால், அவர் தனது பதவியைத் துறந்து வெளிநாடு சென்றதும் அந்த நிறுவனம் சீரழிந்து போய்விட்டது. அங்குள்ள உன்னதமான நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த அரிய நூல்களும் ஆவணச் சுவடிகளும் கவனிப்பாரற்று அழிந்து போனமை ஒரு சோகமான கதை. 

செல்வராஜாவை ஆர்வமும் கடமை உணர்ச்சியும் ஆற்றலும் மிக்க இளைஞராக எம்மால் அடையாளம் காணமுடிந்தது. அவர் இங்கிலாந்து சென்ற பின் தனது திறமைகளை அபரிமிதமாக முன்னேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஒட்டுமொத்தமான தமிழர் சமுதாயத்திலுள்ள ஊடகவியலாளர்களிடையேயும், எழுத்தாளர்களிடையேயும்  ஒரு முதனிலையாளராக அவரால் வளர்ச்சிபெற முடிந்தது. அவரது சாதனைகளும் பணிகளும் சமூக நிலைப்படுத்தப்பட்டவை, தமிழர் சமுதாயம் பற்றியவை”.

பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிட்ட மேற்படி சந்திப்பின் போது, நூலகருக்கு விடுதலைப் புலிகளின் தொடர்பினை ஏற்படுத்தித் தருவதில் இணைப்பாளராகவிருந்து முக்கிய பங்காற்றியவர், நூலகத்தில் தீவிர வாசகராகவும் வரலாற்றுத்துறை ஆய்வாளராகவும் இருந்த மு. திருநாவுக்கரசு அவர்களாவார். நூலகத்தை புலிகளின் வாயிலிருந்து மீட்டெடுப்பதில் யாழ்ப்பாணக் கல்லூரி காட்ட முன்வராத கரிசனையை பேராசிரியர் பத்மநாதனும், மு. திருநாவுக்கரசுவுமே தனிப்பட்ட முறையில் காட்டினார்கள். இன்று யாழ் மண்ணில் புலிகளின் ஆக்கிரமிப்புக்கு உட்படாமல் மீண்டும் சுதந்திரமாகச் செயற்பட்ட ஒரேயொரு தனியார் நிறுவனமாக ஈவ்லின் இரத்தினம் பல்லினப்பண்பாட்டு நிறுவனமே வரலாற்றில் பதிவுபெற்றுள்ளது. இதே காலகட்டத்தில் தான் திருநெல்வேலியில் அமைந்திருந்த மற்றுமொரு ஆய்வு நிறுவனமான ‘ஊற்று நிறுவனம்’ விடுதலைப் புலிகளால் கையகப்படுத்தப்பட்டு, பின்னர் இந்திய இராணுவத்தால் விடுதலைப் புலிகளின் அலுவலகமாக அடையாளப்படுத்தப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டது. அங்கிருந்த பெறுமதிமிக்க ஆய்வுச் சுவடிகள் நிர்மூலமாக்கப்பட்டன. ஈவ்லின் இரத்தினம் நிறுவனம், தனிப்பட்ட துணிச்சல்மிக்க மூவரின் நடவடிக்கையின் பயனாக இன்றும் அழியாமல் கட்டிடமாகவாவது எஞ்சியிருக்கின்றது. 

இந்திய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது தாக்குதலை 11.10.1987 அன்று நள்ளிரவில் இரத்தினம் நிறுவனத்தின் பின்னாலிருந்த (இரத்தினம் நிறுவனத்துக்கும் மருத்துவ பீடத்திற்கும் இடையில்) பொன்னம்மான் கிராமத்திலேயே தொடக்கினார்கள். போராளிகளின் எதிர்த்தாக்குதல் ஈவ்லின் இரத்தினம் நிறுவனத்தின் வளவுவரை நீண்டிருந்தது. அவ் ஊரவர்களை முதல்நாள் நடுநிசியிலேயே எச்சரித்து அப்புறப்படுத்திய விடுதலைப்புலிப் போராளிகள், நூலகரின் குடும்பம் இரத்தினம் நிறுவனத்தின் நூலகக் கட்டிடத்திலேயே தங்கியிருந்ததை அறிந்திருக்கவில்லை. அன்றைய எதிர்த் தாக்குதலில் தரையிறங்கிய பெரும்பான்மையான இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டதாலும், சிலர் தப்பிப்பிழைத்து அருகிலிருந்த பிரம்படி கிராமத்துக்குள் ஓடி ஒளிந்துகொண்டதாலும், நூலகரின் குடும்பத்தினர் உயிருடன் தப்பிக்க முடிந்தது. அன்றைய இரவில் இந்திய இராணுவத்தின் தரையிறக்கத்தை பொன்னம்மான் கிராமத்து வெளியில் தடுக்கமுடியாது போயிருந்தால், பிரம்படிப் படுகொலையுடன் அல்லது அதற்குப் பதிலாக இரத்தினம் நிறுவனம் வரலாற்றில் பேசப்பட்டிருக்கலாம். 

இக்கட்டான உயிராபத்துமிக்க  சூழ்நிலைகள் ஏற்படும் வேளையில் யாழ்ப்பாணக் கல்லூரி நிர்வாகத்தினர் கைகொடுக்கத் துணியவில்லை. அதையிட்டு கரிசனை கொண்டதாகவும் தெரியவில்லை. இத்தகைய பின்புலத்திலேயே விரக்தியின் காரணமாக, நூலகர் என். செல்வராஜாவின் கொழும்பை நோக்கிய புலப்பெயர்வு நிகழ்ந்தது.

தற்போது யாழ்ப்பாணத்தில் இயங்கும் நூலக நிறுவனத்தினர் (Noolaham Foundation) இரத்தினம் நிறுவனத்தில் அழிந்தும் தொலைந்தும் போகாமல் தப்பிய சுவடிகளை மின்வருடல் செய்து ‘ஈவ்வின் இரத்தினம் பல்லினப்பண்பாட்டுச் சேகரம்’ ஒன்றினை உருவாக்கி வருகின்றனர். நூலகர் என். செல்வராஜா அவர்களைத் தாபகராகக் கொண்ட அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் ஒருங்கிணைப்புடனும், கிளிநொச்சி ‘லிற்றில் எய்ட்’ தொண்டர் அமைப்பின் நிதி அனுசரணையுடனும் எண்ணிமப்படுத்தல் (Digitization) செயற்றிட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

கலாநிதி ஜேம்ஸ் இரத்தினம் அவர்கள் 1988 நவம்பரில் அமரரானதைத் தொடர்ந்து, நவம்பர் 4 ஆம் திகதி நிறுவுநர் தினமாக நினைவுகூறப்படுகின்றது. அன்றைய தினம் ஞாபகார்த்தச் சொற்பொழிவுகளை ஏற்பாடுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. முதலாவது சொற்பொழிவு கடந்த ஆண்டு நவம்பர் 1989 இல் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப்  பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் ‘திருவாசகரும் இலங்கைப் பௌத்தமும்’ என்ற தலைப்பில் முதலாவது ‘கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் நினைவுப் பேருரையை’ ஆற்றியிருந்தார். அதன் பின்னர் இத்தகைய நினைவுச் சொற்பொழிவுகள் ஏதும் இடம்பெற்றதாகத் தகவல் இல்லை.

நூலகர் என். செல்வராஜா அவர்கள் 1990 மே மாத வெசாக் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட போர் ஓய்வு யுத்த நிறுத்தத்தைப் பயன்படுத்தி இரத்தினம் நிறுவனத்திலிருந்து நீண்டகால விடுப்புப் பெற்று கொழும்புக்குச் சென்ற பின்னர், யாழ்ப்பாணக் கல்லூரி நிர்வாகத்தினரால் புதிதாக தகுதிவாய்ந்த நூலகர்கள் எவரும் இன்றுவரை (34 வருட காலமாக) நியமிக்கப்படவில்லை. 

கட்டடத்தை பராமரிப்பதற்கென யாழ்ப்பாணக் கல்லூரியுடன் தொடர்பான சில பல்கலைக்கழக மாணவியர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இப்பாரம்பரியம் இன்றுவரை தொடர்வதாகவே அறியமுடிகின்றது. நுலகத்தின் முன்னைய சேவைகள், 1990 இன் பின்னர் தொடர எவரும் முயற்சியெடுக்கவில்லை. 

ஈவ்லின் இரத்தினம் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பின்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர்களே நிறுவனத்தின் இயக்குநர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற விதிக்கமைய, பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து 1991 இல் வெளியேறிய பின்னர், வரலாற்றுத்துறையின் கலாநிதிகளான சி.க. சிற்றம்பலம், பரமு. புஷ்பரட்ணம், சமாதிலிங்கம் சத்தியசீலன் ஆகியோர் அவ்வப்போது இயக்குநர்களாக சிலகாலங்களுக்கு நியமிக்கப்பெற்றனர். சம்பளத்தைத் தவிர வேறெந்த நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படாத ஒரு நிறுவனத்தை வழிநடத்துவதில் நூலகர் செல்வராஜாவைப் போலவே, இவர்கள் அனைவரும் சிக்கல்களை எதிர்கொண்டனர். 

போதாக்குறையாக, மதச்சார்பற்ற ஒரு நிறுவனமாக பேராசிரியர் கா. இந்திரபாலா, மற்றும் தாபகர் ஜேம்ஸ் இரத்தினம் ஆகியோரால் நிர்மாணிக்கப்பட்ட அந்த நிறுவனம் 1990 களின் பின்னர் படிப்படியாக கிறிஸ்தவமதச் சின்னங்களை உள்வாங்கி மதச்சார்புநிலையை வெளிப்படையாகக் காட்டமுனைந்தது. 

தனது துணைவியாரின் மரணத்தையொட்டி, ‘Tribune’ இதழில் ஜேம்ஸ் இரத்தினம் அவர்கள் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். 

“Black flags were flying in my father’s house when I married outside my community. My wife who mothered eight children, eventually won my father’s heart as well. She is now dead. her children arise and call her blessed, as do I. The Library in the Evelyn Rutnam Institute now at the Jaffna campus is her Taj Mahal ”.

தனது காதல் மனையாளின் நினைவாக யாழ். மண்ணில் ஒரு சாஜஹான் எழுப்பிய கம்பீரமான தூய வெண்நிற மண்டபம், தான் இறுதியில் நம்பி ஒப்படைத்தவர்களாலேயே பழுப்பு நிறமாக்கப்பட்டு, வாழ்நாள் சேகரிப்புகளால் நிறைந்திருந்த வரலாற்று முக்கியத்துவமான நூலகச் சுவடிகளை இழந்து, கோதாகக் கிடக்கின்றது. 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

2275 பார்வைகள்

About the Author

நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (2)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)