மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை : தென்கிழக்கு ஆசியாவின் முதல் இலாப நோக்கற்ற கூட்டுறவு மருத்துவமனை
Arts
16 நிமிட வாசிப்பு

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை : தென்கிழக்கு ஆசியாவின் முதல் இலாப நோக்கற்ற கூட்டுறவு மருத்துவமனை

July 22, 2024 | Ezhuna

2009 இல், போரின் முடிவில், போர் தந்த சிதைவுளுக்கு நாம் முகம் கொடுத்தோம். இதில் மிக முக்கியமானது போர் சிதைத்த எமது நிறுவன நினைவு வளம் (Institutional Memory) ஆகும். மனித இழப்புகளுக்கு அடுத்ததாக, எம்மால் கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்வும், சிதைவும் பிடுங்கி எறியப்பட்ட பூசணிக் கொடிகள் போல எங்கும் பரவிக் கிடக்கிறது. நிறுவனங்களின் சிதைவுகளில் மிக முக்கியமானதும், மிகவும் பாதிக்கப்பட்டதுமாக அமைவது கூட்டுறவு இயக்கமாகும்; கூட்டுறவுத் துறையின் வெற்றிக்கு அச்சாணியாக இருந்த கடனுதவுக் கூட்டுறவுச் சங்கங்களும் அதனோடு இணைந்தே அழிவுக்குள்ளாகின. இச் சிதைவுகளைக் கண்டறிந்து மீள் உருவாக்கம் செய்ய வேண்டிய காலமிது. அதன் பொருட்டு, கூட்டுறவு இயக்கம் – கூட்டுறவின் கட்டமைப்புக்கள் மிக முக்கிய அசைவியக்கமாக மாற முடியுமா? போரின் பின்னரான மீள் கட்டுமானத் திட்டங்களுக்கும் நிலையான அபிவிருத்திக்கும் கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் யாது? எங்கிருந்து தொடங்குவது? போரின் பின்னரான சிதைவுகள், அதன் விளைவாக விளைந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு அதனால் உதவ முடியுமா? ஆகிய வினாக்களை இத் தொடர் முன்வைத்து ஆராய்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகம் உட்பட, இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள கூட்டுறவுத் துறையினால் ஒரு வலுவான மாற்றுப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு சிறப்பாக உதவ முடியும். கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி சார் விடயங்களை மையமிட்டு காத்திரமான விடயங்களை தர்க்கத்துடன் கலந்துரையாடி, சிந்தனைக்கான முன்மொழிவுகளை தரும் இத் தொடர் ‘கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : போரின் பின்னரான மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும்’ எனும் பெயரில் அமைகிறது.

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை எம் தேசத்திற்கே முன்னோடி. இதன் அனுபவங்கள், பல கூட்டுறவு வைத்தியசாலைகளை உருவாக்க உதவக்கூடியன. சமூக நலன் சார் அணுகுமுறை, சுகாதாரப் பாதுகாப்பின் தரத்தை மேம்படுத்தல், நோயாளிகளின் கவனிப்பு, மருத்துவத் தொழில்முறை மீதான அர்ப்பணிப்பு மற்றும் பரந்த சமூக அணுகுமுறை போன்றன தற்போதைய காலகட்டத்தில் அரிதாகவே காணப்படுகின்றன. தற்போதைய, மருத்துவச் சேவை பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. ஆனால் எமது முன்னோர்களின் மருத்துவச் சேவை, முழுச் சமூகத்திற்கும் பயன்படக்கூடிய வகையில் சிறப்புடன் இயங்கியது. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை இதற்கு சிறப்பான எடுத்துக்காட்டாகும்; எமது கூட்டுழைப்பின் சிறந்த பெறுபேறாகும்.   

kanakarajar

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை டொக்டர் கே. கனகராயர் அவர்களால் தொடக்கப்பட்டது. டொக்டர் கே. கனகராயர் 1889 இல் மூளாயில் பிறந்தார். கல்கத்தா (கொல்கத்தா) பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் (முதல் வகுப்பு) பெற்று சிங்கப்பூரில் பணிபுரிந்தார். பின்னர் அவர் தனது குடும்பத்துடன் மலேசியாவின் கோலாலம்பூரில் குடியேறினார். மலேசியாவில் சேவை செய்துவிட்டு ஊர் திரும்பிய அவர், உள்ளூர் சமூகத்திற்குத் தேவையான தரமான சுகாதார சேவையை இலவசமாக வழங்குவதற்காக 1935 இல் ஒரு குடும்ப மருத்துவ மையத்தை நிறுவினார். இது யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் 9 மைல் (14 கிமீ) தொலைவில் யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் அமைந்திருந்தது. முதல் கூட்டுறவு மருத்துவமனைக்கு இது ஒரு முன்னோடி முயற்சியாகும். இது இலாப நோக்கற்ற ஒரு அமைப்பாகச் செயற்பட்டு, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளிலும் இதே போன்ற நிறுவனங்களை நிறுவுவதற்குத் தூண்டுதலை வழங்கியது. 1953 இல் இலங்கையில் ஒரு தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தன்னார்வ உறுப்பினர்களைக் கொண்ட குழுவினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை சுகாதார சேவைகள் விஷயத்தில் மட்டுமல்ல, கூட்டுறவு வளர்ச்சித் துறையிலும் வளர்ச்சியின் அடையாளமாக உள்ளது. கூட்டுறவு வைத்தியசாலை நிறுவனம் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கூட்டுறவிற்கான கலங்கரை விளக்கமாக இருந்து, பொது மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு, சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளுக்கு ஆதாரமாகச் செயற்பட்டு வருகிறது. 

கூட்டுறவின் கொள்கை எளிமையானது. இது முறையாக வரையறுக்கப்பட்ட, நுகர்வோர் கூட்டுறவு அல்லது கடன் சங்கங்கள் போன்ற அதன் சேவைகளைப் பயன்படுத்தும் உறுப்பினர்களுக்குச் சொந்தமான ஒரு அமைப்பாகும். இதில் மக்கள் பங்குதாரர்களாக உள்ளனர். மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையும் அவ்வாறாகக் கருக்கொண்ட கூட்டுறவு அமைப்பாகும்.  

வைத்தியர்களான சம்பந்தன் (FRCS), சாக்கோ, செல்லத்துரை, கங்காதரன் மற்றும் செல்லையா போன்ற பல அர்ப்பணிப்புள்ள வல்லுநர்கள் வெவ்வேறு காலங்களில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் சேவை செய்துள்ளனர். அவர்கள் நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கான ஆரோக்கியமான கவனிப்பை வழங்குவதில் தங்கள் வாழ்நாளைக் கழித்தார்கள். பிரபல கண் அறுவை சிகிச்சை நிபுணரான வைத்தியர் ராமச்சந்திர பரராஜசேகரம் அவர்களது அர்ப்பணிப்பு, கண் பராமரிப்பு மற்றும் கண்புரை அறுவை சிகிச்சைக்கான சிறந்த மையமாக மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையை மாற்றியது. 

sampanthan

கூட்டுறவு வைத்தியசாலை மருத்துவமனையின் நிர்வாகக் குழு மற்றும் P.M. சங்கரப்பிள்ளை போன்றவர்கள் சமூக சேவையின் சிறந்த விழுமியங்களை வளர்ப்பதற்கு தங்களை தன்னார்வத்துடன் அர்ப்பணித்தவர்கள் எனலாம். டி.எஸ். சேனநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க போன்ற பிரதமர்களின் கவனத்தையும் கூட்டுறவு வைத்தியசாலை பெற்றிருந்தது. அவர்கள், சுகாதார சேவையை மானிய அடிப்படையில் (மலிவு விலையில்) வழங்கும் உயர்தர சுகாதாரச் சேவையைப் பாரட்டினர். 

தென்கிழக்கு ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் இலாப நோக்கற்ற கூட்டுறவு மருத்துவமனை மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது (தி சண்டே டைம்ஸ் கட்டுரை, இலங்கை : அக்டோபர் 15, 2017). 1939 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி, அரச சபையில் விவசாயம் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் அமைச்சர் டி.எஸ். சேனநாயக்க அவர்களின் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை தொடர்பாகக் கூறிய கூற்று மிக முக்கியமானது : 

“நான் இன்று மூளாய் மருத்துவமனைக்குச் சென்றேன். இது இலங்கைதீவில், இதுபோன்ற முதல் நிறுவனமாகும். கூட்டு முயற்சியின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கான சாத்தியக் கூறுகளை இது அமைக்கும் முறையினைக் கண்டு நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இது எதிர்காலத்தில் பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.”

இலங்கையின் முதல் கூட்டுறவு மருத்துவமனையாக உருவான மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை பல நெருக்கடிகளிலும் தளராத உறுதியோடு செயற்பட்டு வருகிறது. ஆரம்பம் முதலே மருத்துவ நிபுணர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதன் கூட்டுறவுச் செயற்பாடு அமைந்து வருகிறது; வடக்கின் ஏராளமான நோயாளிகளைப் பராமரித்து வருகிறது. கூட்டுறவின் பண்புகளுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. யாழ். கூட்டுறவுக் கலாசாரத்தில் இரண்டு விடயங்கள் மிக முக்கியமானவை; ஒன்று, வீரசிங்கம் மண்டபம்; இரண்டாவது, மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை.   

mch

திரு. சிவதாசன் அவர்களின் ‘மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை, யாழ்ப்பாணம் – புதிய காட்சி கொள்ளும் உன்னதம்’ (Moolai Hospital Jaffna – Reaching For New Vistas) எனும் கட்டுரை தரும் தகவல்கள் கவனிக்கத்தக்கவை. ஐம்பதுகளின் முற்பகுதியில், வி.வி. கிரி அவர்கள் இந்தியாவில் ஆற்றிய உரையிலிருந்தும் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் சிறப்பை நன்கு அறியலாம். யாழ்ப்பாணத்தில் நல்ல முறையில் இயங்கும் கூட்டுறவு வைத்தியசாலை ஒன்று இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்; அது மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை. கிரி அவர்கள் 1948 முதல் 1951 வரை இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகராகப் பணியாற்றினார்; 1969 முதல் 1974 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தார். அவர் இலங்கையில் கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சியை நன்கு அவதானித்து அதன் வளர்ச்சியை முன்மொழிந்தார். யாழ்ப்பாணம் பற்றிய அவரது நுண்ணறிவு கூர்மையானது. அந்த வகையில், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை அவரது கவனத்தை ஈர்த்தது.

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை (Moolai  Cooperative  Hospital – MCH)  இலங்கையின் சுகாதார சேவைத் துறையில் ஒரு உறுதியான உருவாக்கம் எனலாம். கூட்டுறவு முயற்சிகள் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திலிருந்து பிரிக்கமுடியாத ஒன்று. எமது தாயகத்தில், கூட்டுறவின் மூலம் பல அரிய முயற்சிகளை வெற்றிகரமாகச் செய்யலாம் என்பதற்கு மூளாய் வைத்தியசாலை ஒரு எடுத்துக்காட்டு. பிரித்தானியர் காலத்தில் சிவில் சேவைகளில் பணிபுரிய இடம்பெயர்ந்து 1930 களில் இலங்கைக்குத் திரும்பிய பல இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாணக் கூட்டுறவுச் சங்கத்தை நிறுவ முன்வந்தனர். ஆர்வமுள்ள இவ் இளைஞர்களுக்கு பலர் உதவித்தொகை மற்றும் நிதியுதவிகளை வழங்கினர். எங்கள் சமூகத்திற்கு மருத்துவச் சேவையை வழங்குவதற்கு, கூட்டுறவு முறையைப் பயன்படுத்தும் யோசனை அந்த நேரத்தில் ஒரு தனித்துவமான சிந்தனையாக இருந்தது. மாத்தறை, பண்டாரவளை, சந்தலங்காவ, தெல்லிப்பளை மற்றும் தீவின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான நிறுவனங்களை நிறுவுவதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகவும் இருந்தது. 

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபராகவும் பின்னர் 1952 – 1956 ஆம் ஆண்டு வரை வட்டுக்கோட்டைப் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த வீ. வீரசிங்கம் அவர்கள் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர். 27 மே 2016 அன்று தபால் திணைக்களம், கூட்டுறவு இயக்கத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் முத்திரையை வெளியிட்டது. அவர் மூளாய் வைத்தியசாலையை நிறுவுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றினார்.

moolai

கூட்டுறவு வைத்தியசாலை மருத்துவமனையின் அமைவிடமாக, மூளாய் பொருத்தமாகத் அமைந்தமைக்கு பல அம்சங்கள் காணப்பட்டன. 1823 இல் அமெரிக்க மிஷனரிகளால் நிறுவப்பட்ட வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இருந்து இது ஒரு மைல் தொலைவில் அமைந்திருந்தது. மூளாயில் இருந்து 5 மைல் தொலைவில் உள்ள மானிப்பாய் மற்றொரு சுகாதார மையமாக அப்போது இருந்தது; வைத்தியர் கிரீன் இந்த மருத்துவமனையை 1848 இல் நிறுவியதோடு இலங்கையில் முதல் மருத்துவப் பள்ளியையும் நிறுவியிருந்தார். மானிப்பாய் வைத்தியசாலையில் தாதியர் பாடசாலை ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. அமெரிக்க மிஷனரிகளின் ஆதரவின் கீழ், கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வேகமாக வளர இவை பங்களிப்பு நல்கின. எண்பதுகளில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை தனியார் மருத்துவக் கல்லூரி எனும் அங்கீகாரம் பெறும் நிலையை எட்டியது.

புகழ்பெற்ற மற்றும் அர்ப்பணிப்புள்ள மருத்துவர்கள் மருத்துவமனைக்கு உதவ முன்வந்தனர். கேரளாவைச் சேர்ந்த வைத்தியர் சாக்கோ, மானிப்பாயில் தனது ஆரம்பகால வாழ்வைக் கழித்தவர்; யாழ்ப்பாணத்தில் நன்கு அறியப்பட்டவர். அவர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் சேவை செய்ய இணைந்தார். 1946 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தொகுதியில் கௌரவப் பட்டதாரியான கலாநிதி என்.டி. சம்பந்தன் (FRCS) அவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையையும் மூளாய் வைத்தியசாலை பெற்றது. நாளடைவில் மருத்துவமனையானது சிறிய மற்றும் பெரிய கட்டிடங்களின் வளாகமாக விரிவடைந்தது. சேவைகள் பல பன்முகப்படுத்தப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து பல நிபுணர்கள் தமது சேவைகளை மூளாய் வைத்தியசாலைக்கு வழங்கினர். 1985 இல் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டு, சேவைகளின் தரம் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில், போரின் இடையூறுகள் ஒரு தேக்கநிலை உருவாக்கியது.

போர், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையை முடக்கியது. 1990 ஆம் ஆண்டு காரைநகர் தரைப்பாதை மூடப்பட்டதன் பின்னர் மூளாய் – பொன்னாலை பகுதியில் அடிக்கடி எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்று கட்டிடங்கள் கடுமையாகச் சேதமாக்கப்பட்டன. 22.8.1990 அன்று, குண்டுவெடிப்பில் கட்டிடங்கள், உபகரணங்கள், தளபாடங்கள், இயந்திரங்கள் என்பன சேதமடைந்தன. வலிகாமம் – மேற்கிலிருந்து மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்த பின்னர் ​​பல உபகரணங்கள், தளபாடங்கள் இழக்கப்பட்டன. அதன்பிறகு நிலவிய நிச்சயமற்ற பாதுகாப்புச் சூழ்நிலையால், அந்தக் கட்டிடங்கள் நீண்ட காலமாகப் பராமரிக்கப்படவில்லை. இதனால், கட்டடங்கள் மேலும் சீரழிந்தன.

1996 இன் தொடக்கத்தில், பாதுகாப்புப் படைகள் யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆக்கிரமித்தன. 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதப் பிற்பகுதியிலிருந்து வலிகாமம் – மேற்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பத் தொடங்கினர். மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை ஜூலை 1996 இல் மீண்டும் இயங்கத் தொடங்கியது. O.P.D, வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திறக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலையின் ஆலோசகர்கள், மகப்பேற்று மருத்துவர், கண் சத்திரசிகிச்சை நிபுணர், பற் சிகிச்சை நிபுணர் ஆகியோர் சேவைகளை நடத்தத் தொடங்கினர். இதனால் 14 கிலோமீட்டர் பயணம் செய்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டது.

2002 போர்நிறுத்தம் மீண்டும் ஒரு மலர்ச்சிக்கு வழிவிட்டது. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை ஒரு தேக்க நிலையை அடைந்தாலும் துவண்டுவிடவில்லை. போர் நிறுத்தம் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்வலர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கினர். தனி நபர்கள் தவிர, தனியார் துறை நிறுவனங்கள், பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம், யூஎஸ்எய்ட் மற்றும் சில ‘என்ஜிஓ’க்கள் போன்றவை உதவி புரிந்தன. யாழ்ப்பாணம் கச்சேரியில் இருந்து ஓய்வுபெற்ற பிரபல அரச உத்தியோகத்தர் எம். ரெட்ணசிங்கத்தின் சேவையை வைத்தியசாலை நிர்வாகம் பெற்றது. பல ஆண்டுகளாகப் பெற்ற நிதி மொத்தம் ரூ. 79 மில்லியன். இது வசதிகளைப் புதுப்பிக்க உதவியது. இதனால், இங்கே ஒரு வருடத்தில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை 44,000 ஆக உயர்ந்தது.

புலம்பெயர் மக்கள் உட்கட்டமைப்பின் பௌதீகத் தேவைகளைத் திட்டமிடுவதில் உதவினார்கள். புலம்பெயர் தேசங்களில் இருந்து நவீன வசதிகள் கொண்டுவரப்பட்டன. சுகாதாரப் பாதுகாப்பின் ஒரு அங்கமான ‘பாரா மெடிக்கல்’ இற்கு வீட்டிலேயே பயிற்சி அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. நம்பிக்கை மீண்டும் மறுமலர்ச்சிக்கு உரமூட்டியது. 

நவீன புத்தாக்க முன்னெடுப்புகளுக்கு கூட்டுறவுச் சட்டங்கள் போதுமானதாக இல்லாமை கவலைக்குரியது. பெரும் முதலீட்டாளர்கள், இலாப நோக்கிலான வாய்ப்புகளை கூட்டுறவுத் துறை மூலம் சமூகத்திற்கு வழங்க, புதிய நியதிச்சட்டங்களை மாகாண மட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கரைந்து அழிந்துவிடும். புலம்பெயர் முதலீட்டிற்கு கூட்டுறவுச் சட்டம் இடம் தரும் நிலையில் இருக்கவில்லை. அதனால், புதிய முன்னெடுப்புகளை மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை பயன்படுத்தியது. கருவுறுதல் மையம் அவற்றுள் ஒன்று. வெற்றிகரமாகக் கருவுற உதவும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ வசதிகளை அது கொண்டிருக்கிறது. கருவுறாமையின் சுமையை அகற்ற தற்போது வசதிகள் வழங்கப்படுகின்றன. 

hospital moolai

போரின் விளைவுகளில் இடப்பெயர்வு, மரணம் மற்றும் காணாமற் போதல் ஆகியவை அடங்கும். சித்திரவதை, காயம் மற்றும் மரணத்தை நேரில் பார்த்தல் அல்லது அனுபவித்தல் போன்ற தீவிர யுத்தம் தொடர்பான அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு பலர் முகம் கொடுத்துள்ளார்கள். குடும்ப மற்றும் சமூக உறவுகளின் சிதைவு, சமூக விழுமியங்கள் மாறுதல்களுக்கு உள்ளாகுதல், வாழ்வாதார இழப்பு, கல்வி இழப்பு என்பனவும் போரின் விளைவுகளாகும். பாரம்பரியமான தொழில்களை இழந்த பிறகு பல குடும்பங்கள், தினசரிக் கூலித் தொழிலை தங்கள் முதன்மை வாழ்வாதாரமாக மாற்றியுள்ளன. இதன் விளைவாக குறைந்த ஊதியம் மற்றும் வறுமையின் அளவு அதிகரித்தது. பொருளாதார நெருக்கடி, நிர்வாகச் சீர்கேடு, சமூக – பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் மனநலம் பற்றிய சமூக அக்கறை பொதுவெளியில் இல்லாமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். 

பலர் சில வகையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிகிச்சையளிக்கப்படாத மனநோய்கள் ஆபத்தானவை. அவை உணர்ச்சி, நடத்தை மற்றும் உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மனநோய்களுடன் தொடர்புடைய சிக்கல்களாக நம்பிக்கையின்மை, மகிழ்ச்சியின்மை மற்றும் வாழ்க்கையின் மீதான ஈர்ப்புக் குறைதல் என்பன காணப்படுகின்றன.

மனநலம் பாதிக்கப்படுதலும் அந்நியமாதலும் எமது இன்றைய மிகப் பெரிய சவால்கள். மன ஆரோக்கியத்துக்கு உதவ, கைவிடப்பட்டவர்களின் குரல்களைச் செவிமடுக்க ஒரு மனநல கூட்டுறவு வைத்தியசாலை மிக அவசியமாகிறது. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் வரலாற்றை முன்னுதாரணமாகக் கொண்டு, நாமொரு மனநல கூட்டுறவு வைத்தியசாலையை அமைக்க முன்வர வேண்டும்.   

உசாத்துணை

  1. Moolai Cooperative Hospital, The first non-profit co-operative hospital in all of Southeast Asia https://www.moolaihospital.com/-
  2. S. Sivathasan Moolai Hospital Jaffna – Reaching For New Vistas- https://www.colombotelegraph.com/index.php/moolai-hospital-jaffna-reaching-for-new-vistas/
  3. Moolai Cooperative Hospital, https://www.imhocanada.org/moolai-hospital
  4. Author JEKHAN ARULIAH, Birth, Death and Rebirth of Jaffna’s Moolai Cooperative Hospital
  5. Matara C.A. Harishchandra, who raised the Matara Cooperative Society, https://blurt.blog/blurt/@praneeth123/46kvkc-matara-c-a-harishchandra-who-raised-the-matara-cooperative-society-and
  6. ஒரு காலத்தில் கூட்டுறவு இயக்கத்தை ஒரு வலிமையான இயக்கமாக மக்கள் கருதினர் (நேர்காணல்) – செல்வின், https://www.ilakku.org/cooperative-society/.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

12753 பார்வைகள்

About the Author

வை. ஜெயமுருகன்

சமூக அபிவிருத்தி ஆய்வாளரான இவரது எழுத்துக்கள் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கவனம் கொள்வதுடன் போரின் பின்னரான நினைவுகொள் காலத்தின் மீள் கட்டமைப்புக்கள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. இவர், அபிவிருத்திக் கல்விக்கான கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக 'இலங்கையின் போரின் பின்னரான அபிவிருத்தி முரண்நிலை' என்னும் கருப்பொருள் மீதான ஆய்வை முன்னெடுத்தவர். இவ் ஆய்வு நூலாக வெளிவரவுள்ளது. சர்வதேச கிறிஸ்டின் பல்கலைக்கழகத்தில் 'M.A in Peace Study' ஆய்வுப் பட்டம் செய்ய ரோட்டரி (Rotary Peace Fellow) புலமைப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • September 2024 (11)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)