கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது இரண்டாவது பயணத்தின் போது, 1493 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி, தாம் புதிதாகக் கண்டறிந்த கரீபியன் தீவு ஒன்றுக்கு சாண்டா மரியா டி குவாடெலூப் என்று பெயரிட்டார். கப்பல்கள் கரையை நெருங்கியபோது, அத்தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடிகள் படகுகளில் நன்னீர் மற்றும் உணவை விற்பதற்காகக் கொண்டு வந்தனர். அவ்வாறு கொண்டுவரப்பட்டவற்றுள் கொலம்பஸை மிகவும் கவர்ந்த ஒன்று அன்னாசிப்பழமாகும்.
கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே அமெரிக்காவின் பூர்வீகக் குடிமக்களால் இன்றைய பிரேசில், கயானா, கொலம்பியா, மத்திய அமெரிக்காவின் சில பகுதிகள் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு அன்னாசிப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.
தனது இரண்டாவது பயணத்தை முடித்துக்கொண்டு கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பியபோது, அரசர் ஃபெர்டினாண்ட் (1452-1516), ராணி இஸபெல்லா (1451-1504) ஆகியோருக்கு கொண்டு வந்த காணிக்கைகளுள் தங்கக் கட்டிகள், பூர்வீகக் குடிகளால் செய்யப்பட்ட ஆபரணங்கள், முகமூடிகள் என்பவற்றுடன் அன்னாசி உட்பட்டவெளிநாட்டுப்பழங்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் அடங்கி இருந்தன. எனினும் இவற்றுள் அரசர் ஃபெர்டினாண்டை மிகவும் கவர்ந்தது அன்னாசிப்பழமேயாகும். இதை அவர் பகிரங்கமாகவே அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஐரோப்பாவுக்கு கொண்டு வரப்பட்ட அன்னாசிப்பழங்கள் மன்னர்கள் மற்றும் பிரபுக்களின் பெரும் ஆதரவைப் பெற்றன. அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட அனைத்து வகையான புதிய உணவுகளுள் அன்னாசிப்பழம் மட்டுமே ஐரோப்பாவில் பரந்துபட்ட அங்கீகாரத்தைப் பெற்றது.
அன்னாசியைத் தத்தமது நாடுகளில் உற்பத்தி செய்வதற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வாழ்ந்த செல்வந்தர்கள் பெரிதும் முயன்றபோதும் இவர்களது முயற்சிகள் அனைத்தும் வணிக ரீதியாக தோல்வியடைந்தன. ஐரோப்பாவின் காலநிலை அன்னாசிப் பழச்செய்கைக்குப் பொருத்தமற்றதாக அறியப்பட்டபின் கரீபியன் தீவுகளில் அன்னாசித் தோட்டங்களை நிறுவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கரீபியன் தீவுகளில் குடியேறியவர்களின் அன்னாசிப்பழச் செய்கை பற்றி ஆங்கிலேயரான ரிச்சர்ட் லிகோன் பின்வருமாறு விபரிக்கின்றார்.
“நாங்கள் அவற்றைச் சேகரிக்கும்போது, சில தண்டுகளை விட்டுவிடுகிறோம். அன்னாசிப்பழத்தைச் சாப்பிட வரும்போது, முதலில் அதன் முடிப்பகுதியை வெட்டி எடுத்து அதை நடுவதற்கு அனுப்புவோம். ஒரு திருடன் உள்ளே புதையலை எதிர்பார்த்து அழகிய அலமாரியை உடைப்பதைப் போல, மிகவும் அழகாக இருக்கும் அன்னாசிப்பழத்தின் தோலை உரித்து எறிந்துவிட்டு அதன் உள்ளே இருக்கும் சுவைமிகுந்த சதையை அனுபவித்து உண்கிறோம்.”
சர் வால்டர் ராலே (1605-1666) அமெரிக்காவுக்கான தனது பயணம் பற்றிய குறிப்பொன்றில், முதலாம் எலிசபெத்தின் நினைவாக அன்னாசிப்பழத்தை பழங்களின் இளவரசி என்று குறிப்பிட்டார். தனது ராணியைக் காட்டுமிராண்டிகள் கண்டெடுத்த ஒரு பழத்துடன் ஒப்பிடுவது நாகரிகம் அல்ல என்று கருதியதால் இப்பழத்தினைப் ‘பழங்களின் ராணி’ என்று அவர் குறிப்பிட விரும்பவில்லை. ஆங்கிலேயர்களால் ‘பைன் ஆப்பிள்’ (Pine apple) என்று அறியப்பட்ட அன்னாசிப்பழம்தான் ஆதாமை ஏவாள் மயக்கிய ஆப்பிள் பழம் என்று ஸ்பானியர்கள் சத்தியம் செய்கிறார்கள் என்று எழுதிவைத்த சர் வால்டர் ராலே, உண்மையில் இப்பழத்தின் சிறப்பை சாதாரண வார்த்தைகளில் விவரிக்க முடியாது என்கிறார்.
ஆகஸ்ட் 10, 1668 அன்று, பிரான்சின் பதினான்காம் லூயி அனுப்பிய தூதரைக் கௌரவிக்கும் வகையில் மன்னர் இரண்டாம் சார்லஸ் (1660-1685) வழங்கிய ஆடம்பரமான விருந்தின்போதுதான் அன்னாசிப் பழத்தை முதன்முதலாகக் கண்டதாகக் கூறும் அரசவை அதிகாரியான ஜான் ஈவ்லின் (1620-1706) அந்த விருந்தின்போது மன்னர் சார்ள்ஸ், தட்டில் இருந்த பழத்தின் ஒரு துண்டை தமக்கு சுவைக்க கொடுத்ததாகவும் பதிவுசெய்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிக விலை உயர்ந்த அபூர்வமான பழமாக அன்னாசி கருதப்பட்ட காலப்பகுதியில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளில் மிக மலிவாகக் கிடைக்கக்கூடிய பழங்களுள் ஒன்றாகவே அது இருந்துள்ளது. போர்த்துக்கீசியர்கள் அன்னாசிப் பழத்தை பிரேசிலில் இருந்து 1505 ஆம் ஆண்டில் அட்லாண்டிக் தீவான செயின்ட் ஹெலினா மற்றும் பிற அட்லாண்டிக் தீவுகளுக்கும், 1548 இல் மடகாஸ்கருக்கும், 1550 இல் தென்னிந்தியாவுக்கும், போர்த்துகீசிய காலனியான மக்காவ் வழியாக சீனாவுக்கும் எடுத்துச் சென்றனர். 1602 ஆம் ஆண்டளவில் அடிமை வர்த்தகத்தின் மையமாக மேற்கு ஆபிரிக்க கடற்கரையில் இருந்த போர்த்துகீசிய கினியாவில் அன்னாசி பயிரிடப்பட்ட பின்னர் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் பரவியது.
சாதிக்காய், சாதிபத்திரி, கராம்பு போன்ற வாசனைத்திரவியங்களுக்குப் பெயர்போன ‘ஸ்பைஸ் தீவுகள்’ என்றழைக்கப்பெற்ற மொலுக்காஸ் தீவுகளில் தமது வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த ஸ்பானியரும் போர்த்துக்கீசியரும் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில் அன்னாசி மேற்கு பசிபிக் தீவுகளை அடைந்து, அங்கிருந்து தெற்கு பசிபிக் முழுவதும் பரவியது. கடற்பயணங்கள் மெதுவாகவும் மிகவும் கடினமாகவும் இருந்த காலமாயினும், அன்னாசிப்பழம் கொலம்பஸின் பார்வையில்பட்டு 200 ஆண்டுகளுக்குள், உலகளாவிய வெப்பமண்டல பழமாக மாறியது.
இனிப்பு, புளிப்பு, கசப்பு, உப்பு சுவைகளை நிறைவு செய்யக்கூடிய நிரப்பியான அன்னாசிப்பழம் சமைக்கவும், பழமாக உண்ணவும், சுவைமிக்க பானமாக அருந்தவும் ஏற்றது. அன்னாசிப் பழத்தின் வடிவம் பைன் மரத்தின் விதைகளைக்கொண்ட கூம்பினை ஒத்துக் காணப்பட்டதால் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் இதனைப் ‘பைன் ஆப்பிள்’ (Pineapple) என்று அழைத்தனர். பல நாடுகளில், இப்பழம் ‘அனனாஸ்’ என்னும் பெயராலேயே அறியப்படுகின்றது. அமேசான் பிரதேசத்து ‘துபி’ பழங்குடிகளின் மொழியில் ‘சிறந்த பழம்’ என்று பொருள்படும் வார்த்தையான ‘நானாஸ்’ என்பதிலிருந்து பெறப்பட்டதே ‘அனனாஸ்’ என்னும் பெயர். இப்பெயரை 1555 ஆம் ஆண்டில் பிரெஞ்சு பிரான்சிஸ்கன் பாதிரியாரும் ஆராய்ச்சியாளருமான ஆண்ட்ரே தெவெட்டால் முதன்முதலாகப் பதிவுசெய்துள்ளார். ‘அனனாஸ்’ (Ananas) என்பதுவே தமிழில் ‘அன்னாசி’ ஆகிற்று. Pineapple என்பது அன்னாசியின் ஆங்கிலப் பெயர். Ananas comosus என்பது இதன் தாவர விஞ்ஞானப்பெயர்.
அன்னாசிப் பழம் அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவை காரணமாக மற்ற பழங்களை விட அதிக வணிக முக்கியத்துவம் வாய்ந்த பயிராக கருதப்படுகிறது. இலங்கையின் அன்னாசி உற்பத்தியில் 70 வீதமானவை கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலிருந்து பெறப்படுகின்றன.
அன்னாசியின் பயன்கள்
அமெரிக்கர்களுக்கான உணவு வழிகாட்டுதலில் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 21 முதல் 25 கிராம் வரையிலும் ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 30 முதல் 38 கிராம் வரையிலுமான நார்ச்சத்து தேவைப்படுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நடுத்தர அன்னாசிப்பழம் சுமார் 13 கிராம் நார்ச்சத்தை வழங்குகிறது. 166 கிராம் நிறையுடைய அளவிலான ஓர் அன்னாசிப்பழத் துண்டு 83 கலோரி சக்தி தரக்கூடியது. இதில் கார்போஹைட்ரேற்று 21.7 கிராம், நார்ச்சத்து 2.32 கிராம், பொட்டாசியம் 181 மில்லிகிராம், விட்டமின் C 79.3 மில்லிகிராம், கல்சியம் 21.6 மில்லிகிராம் மற்றும் மங்கனீஸ் 1.54 மில்லிகிராம் உள்ளது.
அன்னாசிப்பழத்தில் கிளைசெமிக் குறியீட்டெண் 51 முதல் 73 வரை உள்ளது. இது மிதமானது. எனவே நீரிழிவு நோயாளர் உண்ணக்கூடிய பழங்களுள் அன்னாசியும் ஒன்று. எனினும் இவர்கள் அன்னாசிப்பழத்தை ஒரு நாளைக்கு 100 கிராமுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது. கூடுதலாக உண்டால் இரத்தசர்க்கரை அளவு மேலும் அதிகரிக்கும். அன்னாசிப்பழத்தின் வெளிப்புறம் பச்சையாக இருந்தால் அது காய் என்று நினைத்துவிடக்கூடாது. அன்னாசியைச் செடியில் இருந்து பிரித்தெடுத்த பின்னர் ஏனைய பழங்களைப்போல் தொடர்ந்து பழுப்பதில்லை.
அன்னாசிப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் C மற்றும் பீட்டா கரோட்டின் மற்றும் தாமிரம் (copper), துத்தநாகம் (zinc) மற்றும் ஃபோலேட் (Folate) ஆகியவை ஆண் மற்றும் பெண் கருவுறுதலை ஊக்குவிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. கர்ப்பிணிப்பெண்கள் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்பது ஆதாரமற்ற செய்தி.
அன்னாசிப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் C அனைத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அதே நேரத்தில் அதிக பொட்டாசியத்தை உட்கொள்வது சிறுநீரகங்கள் முழுமையாக செயல்படாதவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து அதிகப்படியான பொட்டாசியத்தை அகற்ற முடியாவிட்டால், அது ஆபத்தானது. அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் (Bromelain) என்ற நொதியக் கலவை உள்ளது. இது புரதங்கள் சமிபாடு அடைய உதவுகிறது. புரோமெலைன் வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சாத்தியமான சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது. உணவாகக் கொள்ளமுடியாத அன்னாசியின் தண்டுப்பகுதியில் செறிந்து காணப்படும் ப்ரோமெலைனைப் பிரித்தெடுத்து சில்லறை விற்பனையாளர்கள் ஒரு சுகாதார உணவுக் குறைநிரப்பி (dietary supplement) அல்லது தோல் கிரீம் ஆக விற்க முனைகிறார்கள்.
முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு ப்ரோமெலைன் நன்மை பயக்கும் என்று கூறப்படுகின்றது. எனினும் இதன் செயல்திறன் மற்றும் பொருத்தமான அளவுகள் குறித்து மேலும் ஆராய்ச்சி தேவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ப்ரோமெலைன் குறைநிரப்பியை முயற்சிக்க விரும்புவோர் அதனை மருந்துக்கடைகள், சில மளிகைக்கடைகள் மற்றும் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளமுடியும். ப்ரோமெலைன் ஒரு இயற்கைப் பொருள் என்றாலும், இது வயிற்று வலி, அதிகரித்த இதயத்துடிப்பு மற்றும் மாதவிடாய்ப்பிரச்சினைகள் போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
அன்னாசிப்பழங்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் ப்ரோமெலைன் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இது லேசானது முதல் கடுமையானது வரை ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். மேலும் தீவிர சந்தர்ப்பங்களில், இது அனாபிலாக்ஸிஸ் என்னும் வலிப்பை ஏற்படுத்தும். ப்ரோமெலைனை எடுத்துக் கொண்ட பிறகு அல்லது பயன்படுத்திய பிறகு ஒருவர் சுவாசிப்பதில் சிரமம், குமட்டல், கடுமையாக சிவப்பு அல்லது வீங்கிய தோல், வாந்தி, பலவீனமான அல்லது விரைவான நாடித்துடிப்பு என்பவற்றுள் ஏதேனும் ஒன்றை அனுபவித்தால் அவர் உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரம்பரிய உடையான பரொங் (Barong), அன்னாசி இலைநாரும் பட்டும் சேர்த்து நெய்யப்படும் துணியைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது என்பது ஒரு மேலதிக தகவலாகும்.
உசாத்துணை
Kaori O’Connor, Pineapple A Global History, The Edible Series, Reaktion Books Ltd, London, UK 2013.
தொடரும்.