கோடைகாலத்தில் குளிர்ச்சிதரும் வத்தகப்பழம்
Arts
9 நிமிட வாசிப்பு

கோடைகாலத்தில் குளிர்ச்சிதரும் வத்தகப்பழம்

October 14, 2023 | Ezhuna

நாள்தோறும் நாம் உணவாகக் கொள்ளும் தானியங்கள், காய்கறிகள், சுவையூட்டிகள், பாலுணவுகள் என்பவற்றின் குணங்கள் மற்றும் பயன்பாடு பற்றிக் கூறும் நூல் பதார்த்தகுணம் என்று அறியப்படும். அகத்தியர், தேரையர் முதலானோரின் பெயர்களில் பதார்த்தகுணம், குணபாடம் போன்ற தலைப்புகளில் பலநூல்கள் கிடைக்கின்றன.  இவ்வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற நூல்களுள் ஒன்றே இருபாலைச்செட்டியார் என்று அறியப்படும் ஒரு மருத்துவரால் ஆக்கப்பெற்ற பதார்த்தசூடாமணியாகும். இற்றைக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் இலங்கை வருகைக்குப் பின்னர் ஆக்கம் பெற்ற இந் நூலில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு உணவு வகைகள் தொடர்பில் கூறப்பட்டுள்ளவற்றை ‘பதார்த்த சூடாமணி’ என்ற இத் தொடர் ஆராய்கின்றது.

*இலங்கையில் வத்தகப்பழம் என்றும் இந்தியாவில் தர்ப்பூசணி என்றும் பரவலாக அறியப்படும் இப்பழம் கோடைகாலத்தில் அருந்துவதற்கு மிகவும் சிறந்த ஒரு பழம் என்பதைப் பலரும் அனுபவபூர்வமாக அறிந்துவைத்துள்ளார்கள். இக்கட்டுரையில் வெளிநாட்டில் வாழும் தமிழர் பலரும் அறிந்துவைத்திருக்கும் தர்ப்பூசணி என்னும் பெயரையே பெரிதும் பயன்படுத்தியுள்ளேன்.

“வத்தகப் பழம் குளிர்ச்சி மன்னிடும் பைத்தியம்போம்
சத்திபோம் பித்தம் தீரும் தவறிலாக் கொடி ஈதல்லால்
ஒத்த கக்கரியும் வெம்மை ஒழித்துச் சீதளம் உண்டாக்கும்”
-பதார்த்தசூடாமணி-

watermelon

“ஒரு தர்ப்பூசணியைச் சாப்பிட்டுப்பார்த்தால் தேவதைகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்” என்று சொன்னாராம் மார்க் ருவைன் (Mark Twain) என்னும் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். இனிமையான தர்ப்பூசணிப்பழத்தின் மூதாதையர் மிகுந்த கைப்புச் சுவையும் வெளிர் பச்சைநிறச் சதையும் உடைய பேய்க்கொம்மட்டியை ஒத்திருந்தார்கள் என்பதுதான் ஆச்சரியம். நாலாயிரம் ஆண்டுகளாகத் தெரிவு இனப்பெருக்கம் (selective breeding) மூலம் பேணப்பட்ட தர்ப்பூசணி இனங்கள் பல்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்களில் பரவி, இனிப்புச் சுவையும் சிவப்புச் சதையும் கொண்ட இன்றைய தர்ப்பூசணி பிறக்க வழிவகுத்தன.

மற்றைய பழங்களைப் போலல்லாமல் குளிர்ந்த, நிழலான இடத்தில் வைத்திருந்தால், தர்ப்பூசணி வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்துக்கூட உண்ணக்கூடியதாக இருக்கும். சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் வரண்ட காலங்களில் பயன்படுவதற்காகத் தர்ப்பூசணிப்பழங்கள் சேகரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்படுகின்றன. இதே காரணத்திற்காக எகிப்தியர்களும் இப்பழத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். பண்டைய எகிப்தியரின் நம்பிக்கையின்படி அவர்களது மன்னர்கள் இறந்தபோது அவர்களுக்கு நீண்ட பயணம் இருந்தது. மன்னர்களின் அந்தப்பயணத்தில் அவர்களுக்கு நீர் ஆதாரம் வழங்கக்கூடியது இந்தத் தர்ப்பூசணிப் பழம்தான் என்பது அவர்களது நம்பிக்கை. எகிப்திய அரசன் தூத்தன்காமனது (Tutankhamun) கல்லறை உட்பட 4,000 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட எகிப்திய பிரமிட்டுகளில் தர்ப்பூசணியின் விதைகள் மற்றும் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

இஸ்ரேலில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் தோட்டக்கலை நிபுணரான ஹாரி பாரிஸ் (Harry Paris), தர்ப்பூசணியின் தோற்றம் மற்றும் பரவல் பற்றிய தடயங்களை பல ஆண்டுகளாக சேகரித்து வருகிறார். சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர்கள் தர்ப்பூசணிப் பயிர்களை வளர்க்கத் தொடங்கினர் என்பதற்கான ஆதாரங்களை அவர் கண்டறிந்துள்ளார். எகிப்தியர்கள் தர்ப்பூசணி இனங்களைப் பயிரிடத் தொடங்கியவுடன், அப்பயிரில்  அவர்கள் மாற்ற முயன்ற முதல் பண்பு அவற்றின் சுவை என்று சந்தேகிக்கிறார் பாரிஸ். பண்டைய தர்ப்பூசணியின் கைப்புச்சுவைக்குக் காரணமாக இருந்தது ஒரு மரபணு (gene) மட்டுமே. இதனால் தர்ப்பூசணிக் கூட்டத்தில் இருந்து இனிப்புச் சுவை கூடிய இனங்களைத் தேர்வு செய்து கலப்பினங்களைத் தோற்றுவிப்பது அவ்வளவு கடினமாக இருந்திருக்காது என்கிறார் பாரிஸ்.  

தர்ப்பூசணியின் சர்க்கரை உள்ளடக்கத்தை தீர்மானிக்கும் மரபணுவுடன் சிவப்பு நிறத்திற்கான மரபணுவும் இணைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தெரிவுக் கலப்பினப் பயிர்ச்செய்கை வழியாக இனிப்புச்சுவையுடன் கூடவே தர்ப்பூசணியின் சதையின் நிறமும் செந்நிறமாக மாறத்தொடங்கியது.  இவ்வாறு மிக நீண்டகாலமாக சுவையின் பொருட்டும் வடிவத்தின் பொருட்டும் தெரிவு செய்யப்பட்டு வந்துசேர்ந்ததுதான் இனிப்புச்சுவையும் மென்மையான சிவப்பு நிறச் சதையும் கொண்ட இன்றைய தர்ப்பூசணி.

பொது ஆண்டுக்கு முந்திய 400 தொடக்கம் பொது ஆண்டு 500 வரையிலான காலப்பகுதிக்குரிய பதிவுகள் வாயிலாக தர்ப்பூசணி வடகிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து மத்திய தரைக்கடல் நாடுகளுக்குப் பரவியிருப்பதை அறியமுடிகின்றது. வர்த்தகம் மற்றும் பண்டமாற்றம் பொருட்டு இடம்பெற்ற நீண்ட பயணங்களுக்குத் தேவைப்படும் குடி தண்ணீருக்கான ஓர் இயற்கைவளமாகத் தர்ப்பூசணி அறியப்பட்டது. தர்ப்பூசணியின் இந்தத் தனித்துவமான பங்களிப்பு அதன் பிராந்தியப் பரவலுக்குப் பெரிதும் கரணமாயிருக்கலாம். தர்பூசணி இந்தியாவில் 7 ஆம் நூற்றாண்டிலும், சீனாவில் 10 ஆம் நூற்றாண்டில் பயிரிடப்பட்டது.

தர்ப்பூசணியின் பண்டைய ஹீப்ரு மொழிப் பெயர் ‘அவட்டிஹிம்’ (avattihim) என்பதாக ஆய்வாளர் பாரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் பெயருக்கும் தர்ப்பூசணியின் பிற தமிழ்ப்பெயர்களான வத்தகம், வத்தகை,  என்பவற்றுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை அவதானிக்க முடிகிறது.

கோடைகாலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் வியர்வையால் ஏற்படக்கூடிய நீரிழப்பைச் சரிசெய்யவும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். அதேசமயம் இக்காலப்பகுதியில் நீர் நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் ஒரு சிறந்த வழியாகும். தர்ப்பூசணி பழத்தில் 91% தண்ணீர் உள்ளது, 6% சர்க்கரை உள்ளது.  கொழுப்பு குறைவாக உள்ளது. உள்ளடக்கத்தில் 91 % தண்ணீரைக் கொண்டுள்ள தர்ப்பூசணி உடலுக்கு நீரேற்றத்தை வழங்குகிறது. தர்ப்பூசணியின் சாற்றை மற்ற பழச்சாறுகளுடன் கலந்தும் குடிக்கலாம். அரை அங்குலம் தடிப்பாக வெட்டப்பட்ட நான்கு தர்ப்பூசணித் துண்டங்கள் ஒருவருக்கு ஒரு நாளைக்குப் போதுமானது. தர்ப்பூசணியில் கூடிய இனிப்புள்ள பிரக்டோஸ் (Fructose) என்னும் இயற்கை சர்க்கரை உள்ளது. கூடிய கிளைசெமிக் குறியீடு உள்ள தர்ப்பூசணியை அதிக அளவில் உட்கொண்டால் அது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம்.

தர்ப்பூசணி இருதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது. தினசரி இப்பழத்தை உட்கொள்வது உடல் எடை, உடல் பருமன், இரத்த அழுத்தம் என்பவற்றைக் குறைக்க உதவும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்ப்பூசணிக்கு ஒட்சியெதிரிக் குணங்கள் உண்டு. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இப்பழத்தில் லைகோபீன், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி என்பவை நிறைந்து காணப்படுகின்றன.  தர்ப்பூசணிப்பழத்தை ஒரு பானமாக அருந்துவது உடலின் முக்கியமான உயிரியல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.

லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற கரோட்டினொய்ட் இரசாயனங்கள் நிறைந்து இருப்பதே தர்ப்பூசணிப் பழத்தின் கடும் சிவப்பு நிறத்துக்குக் காரணம். தர்ப்பூசணியில் உள்ள லைகோபீன்  இரசாயனம்  டிஎன்ஏ பிறழ்வைத் தடுப்பதன் மூலம் புற்றுநோய் வளர்ச்சியைக் குறைக்க உதவுகின்றது.

தர்ப்பூசணியில் உள்ள நொதிக்கக்கூடிய ஒலிகோசக்கரைட்டுகள், டைசக்கரைட்டுகள், மோனோசக்கரைட்டுகள் என்னும் சர்க்கரை வகைகள் குறுகிய சங்கிலி கார்போஹைட்ரேட்டுகள் (short chain carbohydrates) என அறியப்படுபவை. இவை சிறுகுடலில் உறிஞ்சப்படுவது கடினம் இதன்காரணமாக அதிக அளவு தர்ப்பூசணி சாப்பிடுவது வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் வலி போன்ற குடல் அசௌகரியங்களுக்கு வழிவகுக்கும்.

தற்போது உள்ள தர்ப்பூசணி இனங்கள், நட்டு 100 நாட்களுக்குள் முதிர்ச்சியடைந்த பழங்களைத் தருகின்றன. குறுகிய காலத்தில் இலாபம் பெற்றுத் தரக்கூடிய பழப்பயிர்களுள் தர்ப்பூசணி ஒன்றாகும். இப்பயிருக்கு அதிக நீர் தேவைப்படாது.

vellari

உலகின் மொத்த தர்ப்பூசணிகளில் மூன்றில் இரண்டு பங்கை சீனா உற்பத்தி செய்கிறது. 2020 ஆம் ஆண்டில், தர்ப்பூசணிகளின் உலகளாவிய உற்பத்தி 101.6 மில்லியன் டன்களாக இருந்தது. மொத்தத்தில் 60% (60.1 மில்லியன் டன்கள்) சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டது. இரண்டாம் நிலை உற்பத்தியாளர்களில் துருக்கி, இந்தியா, ஈரான், அல்ஜீரியா மற்றும் பிரேசில் ஆகியவை அடங்குகின்றன.  இவை வருடாவருடம் 2 தொடக்கம் 3 மில்லியன் டன் தர்ப்பூசணியை உற்பத்திசெய்கின்றன.

Citrullus lanatus (THUNB.) MATSUMURA & NAKAI என்பது தர்ப்பூசணி அல்லது வத்தகப்பழத்தின் தாவர விஞ்ஞானப் பெயர்.

cucumber

பின்குறிப்பு: வத்தகப்பழம் அல்லது தர்ப்பூசணி (water melon) என்று அறியப்படும் பழம் வேறு, வெள்ளரிப்பழம் (snap melon) வேறு. பழுத்ததும் வெடித்துவிடும் மஞ்சள் நிறமுடைய வெள்ளரிப்பழமும் கோடைகாலத்தில் குளிர்ச்சியைத் தரும் ஒரு பழமாகும். ஆனால் இனிப்புச்சுவை குறைந்தது. கியூகம்பர் (Cucumber) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் காய் தமிழில் கக்கரிக்காய் என்று அறியப்படுகின்றது. பேய்க்கொம்மட்டி என்பது ஒரு மருந்து மூலிகையாகும். இது மிகவும் கைப்புச்சுவையுடையது. நச்சுத்தன்மை உடைய இதனைக் காய்கறிகளுள் ஒன்றாகக் கருதுவதில்லை.

peikomatti

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11752 பார்வைகள்

About the Author

பால. சிவகடாட்சம்

பால. சிவகடாட்சம் அவர்கள் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியலை பிரதான பாடமாகக் கொண்டு உயிரியல் விஞ்ஞானத்துறையில் (B.Sc. Hons) சிறப்புப் பட்டம் பெற்றவர். இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் (London Imperial College) டிப்ளோமா சான்றிதழும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளதுடன் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் B.Ed பட்டமும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியற் பீடத்தில் மூத்த விரிவுரையாளராகவும் அதன் தலைவராகவும் பதவி வகித்த இவர் பின்னர் கனடாவில் உள்ள ரொறொன்ரோ கல்விச்சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள மார்க் கார்னோ கல்லூரியில் விஞ்ஞான மற்றும் உயிரியற் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கையிலிருந்து 1971 - 1973 காலப் பகுதியில் விஞ்ஞானக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த 'ஊற்று' என்ற மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், 1970-1971 காலப்பகுதியில் வெளிவந்த தமிழமுது இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய சிவகடாட்சம் (அவர்கள்) தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளையும் இலக்கிய கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்