ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் முதல் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் (1994-1999) விடுதலைப் புலிகள் அமைப்புடன் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அந்த சமாதானப் பேச்சுக்களுக்கு மறைமுகமாக உதவிய நோர்வே மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு-கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கும் உடன்பட்டிருந்தன. அந்தப்பேச்சு வார்த்தைகள் முற்று முழுதாக முடிவடையாமல் இருந்தாலும், இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி விடுதலைப் புலிகளுக்கும் சந்திரிகா அரசுக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பான ஆலோசனைகள் நடந்தபடி இருந்தன. இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் எதிர்பார்த்தபடி எந்தவித உடன்பாடுகளையும் எட்ட முடியவில்லை. எனினும், தீர்வொன்று கிடைத்தால், தமது ஆட்சிக்கு உட்படப்போகும் பிரதேசங்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு உடன்பட்டார்கள்.
இதன் பின்னணியில் பல பொருளாதார நலன்களையும் மற்றும் சில தொடர்புச் சாதனங்களையும் அதற்கான கருவிகளையும் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். நோர்வேயின் மேற்பார்வையில் பல நாடுகள் வடக்கு- கிழக்கு பகுதிகளில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் அதற்காக முதலீடுகளைச் செய்யவும் தயாராக இருந்தார்கள். இந்த நிலையில், அந்த அபிவிருத்திகளின் உள்ளடக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளவும், அவை தொடர்பான துல்லியமான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் நோர்வே தயாரிப்புகளில் ஈடுபட்டது. இதன் அடிப்படையில் நோர்வேயைச் சேர்ந்த பொருளாதார ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் அபிவிருத்தி சம்பந்தமான வரைவுகளை மேற்கொண்டன. இந்த வகையில் இரு ஆய்வுகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அவையாவன,
- போர் நடக்கும் பிரதேசங்களில் தமிழ் இளையோரும் தற்கொலையும்,
- வடக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலின் இன்றைய நிலையும் அதன் சவால்களும்,
என்பவையாகும்.
இதில், முதலாவது தவிர இரண்டாவது ஆய்வு முற்றுமுழுதாக முடிக்கப்படவில்லை. ஆய்வின் தரவுகளை சேகரிப்பதற்கான களவேலைகள் மட்டுமே முடிந்து விட்ட நிலையில், பேச்சுவார்த்தைகளில் குழப்பங்கள் ஏற்பட்டதனால் அது நிறுத்தப்பட்டது. ஆனால் கிடைத்த தரவுகளை அடிப்படையாக் கொண்டு 2011 இல் தமிழில் இணையத்தளங்கள் மற்றும் சில பத்திரிகைகளில் அரைகுறை கட்டுரைத் தொடர்களை எழுதி வெளியிட்டேன். இதன் திருத்திய மறு வெளியீடு (17.05.2018) தமிழரங்கம்.com மற்றும் ndpfront.com இணையங்களில் வெளியிடப்பட்டன. அவை இன்றுவரை பலரால் அவரவர் அரசியலுக்கேற்ப பாவிக்கப்படுகிறன. அவ்வாறு எழுதிய கட்டுரையில் ஒன்றே இங்கு வெளியாகின்றது. இந்தக் கட்டுரை எழுதிய காலம் சில வருடங்களுக்கு முன்பு என்றாலும், இதன் பேசுபொருள், உள்ளடக்கம், மற்றும் தரவுகள் அனைத்தும் இப்போதும் எம் மீனவர் சமுதாயத்தின் தீர்க்கப்படாத, எரிந்து கொண்டிருக்கும் சமுதாயத் தீயின் வெளிப்பாடாகவே உள்ளன.
அறிமுகம்
முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற தமிழ்பேசும் மக்கள் மீதான இனவாத ஒடுக்குமுறைப் போர் இராணுவ ரீதியில் முடிவுக்குவந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாகின்றது. ஆனாலும், தமிழ்பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் தன்மையிலோ, உக்கிரத்திலோ எந்தவித காத்திரமான மாற்றங்களும் நிகழ்ந்து விடவில்லை. இனவாத ஒடுக்குமுறையானது பல புதிய வடிவங்களில் இன்னும் தொடர்கிறது. அபிவிருத்தி என்ற பெயரில் பாரம்பரிய விவசாய நிலங்களும், காடுகளும், கரம்பைகளும் அபகரிக்கப்படுகின்றன. சர்வதேசப் பொருளாதார உதவி மற்றும் முதலீடு என்ற பெயரில் மேலாதிக்க நாடுகளுக்கு எமது தேசத்தின் (ஒட்டுமொத்த இலங்கையின்) வளங்களை, ஆளும் இனவாத சக்திகளும் அவர்களுக்குத் துணைபோகும் தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதிகளென தம்மைக் கூறிக்கொள்வோரும் போட்டி போட்டுக் கொண்டு மலிவு விலையில் விற்கின்றனர். இது ஒரு புறமிருக்க, நம் தேசத்தின் கடல் வளங்கள் கேட்க எவருமின்றி கொள்ளையடிக்கப்படுகிறன. இந்தக் கொள்ளைகள் பற்றி எவரும் பெரிதாக அலட்டிக் கொள்வதாயில்லை.
தமிழ் மொழிப் பாரம்பரியத்தில் நிலங்களையும் அல்லது பாரம்பரிய வாழ்நிலைப் பிரதேசத்தை – அதாவது தேசத்தின் நிலத்தை – அவற்றின் அமைப்புக்கு ஏற்பவும், உபயோகத்திற்கு ஏற்பவும், அதன் கலை – கலாசாரம், வாழும் பண்பாடு சார்ந்தும் முல்லை, மருதம், நெய்தல், பாலை, குறிஞ்சி என வகைப்படுத்தி உள்ளனர். ஆனாலும், பொதுப் புத்தியின் ஆதிக்கத்தால் மக்கள் தேசம் என்பதை நிலம் என்று மட்டுமே விளங்கிக் கொள்கின்றனர். இங்கு, கடலும்-கடல் சார்ந்த பிரதேசமாக வகைப்படுத்தப்படும் நெய்தல் நிலத்தின் அரைப்பகுதியான கடல் சார்ந்த நிலப் பகுதி (கரையோர நிலங்கள்) மட்டுமே தேசமென்ற வரையறைக்குள் மக்களால் விளங்கிக் கொள்ளப்படுகிறது. கடற்கரையை அடுத்துள்ள கடற் பிரதேசமும் அதன் வளங்களும் ஏதோ அந்நியமானதொன்றாக – எடுப்பார் கைப்பிள்ளையாகவே விளங்கிக் கொள்ளப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஒரு தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும், கொள்கை வகுப்பாளர்களும், சமூகப் போராளிகளும், தேசியவிடுதலைப் போராளிகளும் கூட “தேசம் என்பது நிலம் மட்டுமே” என்ற அரைகுறைப் புரிதலைக் கொண்டிருந்தால், அந்தத்தவறான புரிதல் பாரிய எதிர்மறைத் தாக்கத்தை அந்தத் தேசத்தின் வளர்ச்சியில் ஏற்படுத்தும்.
இலங்கையைத் தமது அதிகாரத்தின் கீழ் வைத்துள்ள சிங்களமொழி பேசும் மேலாதிக்க இனவாத சக்திகள் முதல், தமிழ்பேசும் மக்களுக்காக தொடர்ந்தும் போராடுபவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரை, “தேசம் என்பது நிலம் மட்டுமே” என்ற வரையறைக்குள் நின்று கொண்டே அரசியல் செய்கின்றனர். மேற்கூறிய சக்திகள் ஏதோ விளங்காத்தனமாக இப்புரிதலைக் கொண்டிருக்கவில்லை. இப்புரிதல் இவர்களின் அரசியற் கொள்கை மற்றும் பொருளாதாரச் சிந்தனையை சார்ந்ததாகும். சந்தர்ப்பவாத அரசியற் பாதைகளையும், ஆதிக்க நாடுகளுக்கு அடிபணிந்து, அவர்களின் அடிவருடி, அவற்றில் தங்கிவாழும் அரசியலை அடிப்படையாகக் கொண்ட கொள்கையின் வெளிப்பாடுகளேயாகும். மக்களின் வாழ்வாதாரத்தை கொள்ளையடித்து, அவர்களை நிரந்தரப் பொருளாதார அடிமைகளாக்கும், தமது சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி இயங்கும் சக்திகளான, விதேசியவாதிகளான இவர்களிடம் வேறு எந்த வகையான ‘தேசியப்’ புரிதலை எதிர்பார்க்க முடியும்?
பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்ததென்பது போல, இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியக் கடற்பிரதேசம் இன்று இந்தியாவினால் கொள்ளையிடப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கின் மீன்பிடிச் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயலும் எல்லாவகை செயற்பாடுகளும், முயற்சிகளும் இவ் இந்தியக் கடற்கொள்ளையால் மூர்க்கமான முறையில் கருவிலேயே சிதைக்கப்படுகிறன. இந்தியாவின் அரசியல்வாதிகளும், கொள்கை வகுப்பாளர்களும், ஏன் இடதுசாரிகள் எனத் தம்மைக் கூறிக் கொள்வோரும் கூட இந்தியக் கடற்கொள்ளையை எல்லா வகையிலும் ஆதரிக்கின்றனர். பொதுவாக இந்தியர்கள் தமது தேசநலன் சார்த்த விடயத்தில் மிகவும் தெளிவாகவே உள்ளனர்.
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் மீது பிரயோகிக்கப்படும் இனவாத அரசியலைத் தோற்கடித்து, தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெறப் போராடுவதாக ‘தமிழ்த் தேசியத் தலைவர்கள்’ கூறுகின்றனர். தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில அரசியற் சக்திகளான இவர்கள், மேலாதிக்க இந்திய அரசுக்கு வால்பிடிக்க முயல்வதுடன், தென்னிந்திய தமிழ் இனவாதிகளான சீமான், வை.கோ, நெடுமாறன் போன்ற சீரழிந்த மூன்றாந்தர அரசியல்வாதிகளை இலங்கைத் தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக தலையில் வைத்து கொண்டாடுகின்றனர்.
மறுபுறத்தில், இடதுசாரிகள் எனவும் மக்கள் சார்ந்த அரசியல் செய்பவர்கள் எனவும் தம்மைக் கூறும் இலங்கைத் தமிழர்களில் ஒரு பகுதியினர், இந்தியக் கடற் கொள்ளைக்குத் துணைபோகும் மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க) போன்ற ‘இடதுசாரித்துவம்’ பேசும் இந்திய அமைப்புக்களை, எதிர்காலத்தில் இலங்கையில் நடைபெறப்போகும் புரட்சியின் நட்புச் சக்திகளாகவும், பங்காளிகளாகவும் மதித்து, அவர்களுக்குச் சிரம் தாழ்த்தி அரசியல் செய்கின்றனர்.
மேற்படி காரணங்களினால் இலங்கைத் தமிழினவாதிகளும், புலம்பெயர் ‘புரட்சிக்காரர்களும்’ இலங்கையின் கரைகளில் நடைபெறும் இந்தியர்களின் நாசகார மீன்பிடியை மூடி மறைத்து, இந்திய மீன்பிடிசார் பெரும் மூலதனக்காரர்களுக்கு சார்பாக நடாத்தும் அரசியலைத் தட்டிக் கேட்க முடியாதவர்களாய் உள்ளனர். புலிகளின் பின், ஏகப்பிரதிநிதித்துவம் கதைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்தியக் கடற்கொள்ளைக்கு எதிராக இது வரை ஓர் அறிக்கை கூட விடவில்லை. இந்த நிலைமை ஏன்?
இந்தச் சந்தர்ப்பவாத, மெளன அரசியலானது இந்திய ‘நாசகார மீன்பிடியால்’ பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்களில் பெரும் பகுதியினரின் நாளாந்த சீவியத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இந்திய நாசகார மீன்பிடியால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் புலிகளுடன் நின்று கடைசி வரை போரிட்ட பல போராளிகளும், அவர்கள் சார்ந்த சமூகங்களும் என்பதுதான். இலங்கை இனவாத அரசுக்கும், அதற்கு ஆதரவான அரசியல் சக்திகளுக்கும் எதிரான மனப்பான்மையுடன், ‘தமிழ் தேசிய உணர்வையும்’ கொண்டதாக இந்த சமூகங்களின் தொழிலாளிகளும் அவர்களின் பிள்ளைகளும் நின்றார்கள். ஆனால் இன்றுள்ள தமிழ்த் தரகுகளுக்கும் இனவாதிகளுக்கும் திடீர் அரசியல்வாதிகளுக்கும் இன்று இந்த சமூகங்களின் தொழிலாளிகளும் அவர்களின் பிள்ளைகளும் தேவையில்லாத பொருளாகப் போயுள்ளனரா?
சிறு மனிதாபிமான தளத்தில் நின்று கூடவா இவர்களால் இந்த மக்களுக்காக குரல் கொடுக்க முடியாதுள்ளது?
வடபகுதியின் மீன்பிடி அபிவிருத்தி பற்றிய சிறு வரலாற்றுப் பார்வை
இலங்கைக்கு பாரிய கடற்பிரதேசம் இருந்தும், இலங்கை இன்றுவரை மீன்பிடியில் எந்தவகையிலும் அபிவிருத்தியடைந்த ஒரு நாடல்ல. மீன்பிடித் தொழில் அபிவிருத்திக்கான முதல் அடித்தளம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் (1970 – 1977) பதவிக் காலத்தில் இடப்பட்டது. இக்காலப்பகுதியில் மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கங்களும், அகில இலங்கை மீன்பிடித் தொழிலாளர் சமாசமும் உருவாக்கப்பட்டன. ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு, அந்தத்திட்டத்தில் முதல் இரண்டாண்டுகள் கரையோர மற்றும் களப்புசார் மீன்பிடியை அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் இலகு கடன்கள் மீன்பிடி கூட்டுறவுச் சங்கங்களுக்கூடாக வழங்கப்பட்டன. இந்தக்கடன்கள் மூலம் வடக்கு-கிழக்கில் உபயோகிக்கும் மர வள்ளங்களும், தெற்கில் பாவிக்கும் கட்டுமரங்களும், வலைகளும் தொழிலாளர்களுக்காக வழங்கப்பட்டன.
அதன்பின் பதவிக்கு வந்த யூ.என்.பி. அரசு தனது திறந்த பொருளாதாரக் கொள்கைக்கேற்ப சிறிமாவோ பண்டாரநாயக்காவின் திட்டத்தை சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தியது. மீன்பிடித் தொழிலை ஜப்பான் நாட்டின் உதவியுடன் நவீனப்படுத்த, அந்நாட்டின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஜப்பான் நாடு தனது கடல்சார் தொழில் நுட்பத்தை இலங்கையில் சந்தைப்படுத்தும் தனியுரிமையை தனதாக்கிக் கொண்டது. அத்துடன் இலகு கடன் மூலம் ஜப்பானிய நிறுவனங்கள், சிறு வள்ளங்களுக்கும் கட்டுமரங்களுக்கும் பயன்படும் வெளியிணைப்பு இயந்திரங்களை மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கியது.
அத்துடன் உள்ளிணைப்பு இயந்திரங்களைக் கொண்ட கரைகடந்து தொழில் செய்வதற்கான நவீன படகுகளை தனியார் வங்கிகளின் உதவியுடன் கட்டுவதற்கான ஊக்குவிப்பும் அரசினால் வழங்கப்பட்டது. இதனைச் சரியாகப் பயன்படுத்தி பாரிய நலன்களை அனுபவித்தோர் மன்னாரில் இருந்து வடமராட்சி வரை தொழில் புரிந்த நடுத்தரவர்க்க மீனவர்கள் என்றால் மிகையாகாது. இதற்கான முக்கியமான காரணிகளாக பின்வருவனவற்றை கூறலாம் :
- தெற்குடன் ஒப்பிடுகையில் வடக்கின் பொருளாதாரம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் இருந்தே மிக நன்றாக இருந்தது. அத்துடன் சேமிப்பு பழக்கத்துடன் இணைந்த தனிநபர்களுக்கு இடையிலான வட்டிக்கு வழங்கும் முறை இலகுவாக கடன் பெற்று தொழில் நடத்த வகை செய்தமை.
- பலநூறு வருடங்களாக வடபகுதியைச் சேர்ந்த சில கிராமத்தவர்கள் மரப்படகு கட்டும் தொழில் நுட்பமும், அனுபவமும் கொண்டவர்களாக இருந்தமை. (இவர்கள் தான் பிற்காலத்தில் ஜா-எல, மற்றும் நீர்கொழும்பு பகுதியில் மரப்படகு கட்டும் தொழிலை சிங்களத் தொழிலாளர்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள்.)
- நோர்வேயினால் அறுபதாம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சீ-நோர் நிறுவனமானது காரைநகரிலும், குருநகரிலும் வலையுற்பத்தி மற்றும் கண்ணாடி நார் இழைப்படகு உற்பத்திகளை மேற்கொண்டது. இதனால் மலிவு விலையில் தொழிலாளர்கள் மேற்கூறிய உபகரணங்களைப் பெற முடிந்தமை.
(இந்நிறுவனம் பிற்காலத்தில் அரசமயப்படுத்தப்பட்டு, அதன் தொழில்நுட்பம் தெற்கில் படகுகள் தயார் செய்ய உபயோகிக்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்திலும் காரைநகர் தொழில்நுட்பவியலாளர்களும், தொழிலாளர்களும் தென் இலங்கையருக்கு தொழில்நுட்பத்தை பழக்கினர். தென்பகுதியில், குறிப்பாக ஜா-எல பகுதியில் உருவாக்கப்பட்ட கண்ணாடி நார் இழைப் படகுகளை தமிழ்ப் போராட்ட இயக்கங்கள் பயன்படுத்தின. அந்தப்படகுகள் காரைநகர் படகுகளை விட ஆழ்கடல் அலை அடிப்பை தாங்கக் கூடியவை. காரைநகர் படகு உற்பத்தி, புளொட் இயக்கக் கொள்ளையினால் நிறுத்தப்பட்டது. குருநகர் வலை உற்பத்தி நிறுவனம், புளொட் இயக்கத்தாலும் புலிகளாலும் கொள்ளையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டு, வலையுற்பத்தி கொழும்புக்கு மாற்றப்பட்டது.)
மீனின் பிறப்பும் வளர்ச்சியும் கடலடித்தளமேடை என்று சொல்லப்படும் (Continental Shelf) ஆழ்கடலுக்கும் பரவைகடல் / களம் / களப்பு கடலுக்கும் இடையிலான பகுதிலேயே நடைபெறுகிறது. இலங்கையின் பெரும்பகுதி கடலடித்தளமேடை மன்னாருக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன் நீளம் 480 கிலோ மீற்றராகவும் அகலம் 22 கிலோ மீற்றரில் இருந்து 60 கிலோ மீற்றர் வரை உள்ளது. ஆகவே, இப்பகுதி உள்ளக அளவில் ஒப்பிடக்கூடிய மீன் உற்பத்தியாகும் பிரதேசமாகவுள்ளது. (இந்தியாவின் இரண்டாவது பெரிய கடலடித்தள மேடை கேரளக் கரையோரம் உள்ளது. அதனால் தான் கேரளம் மிக முக்கியமான மீன்பிடிப் பிரதேசமாகவுள்ளது.) இவ்வாறு இயற்கையாகவே மீன் உற்பத்தியாகும் பிரதேசத்தின் அருகில் வடபகுதி மீனவர்கள் வாழ்வதால், அவர்களால் அதை அனுபவிக்க முடிந்தது.
வடபகுதியில் பிடிபடும் மீன் தென்பகுதியில் மிகவும் விரும்பப்படுகிறது. இதனால் அங்கு நல்ல விலையுடன் சந்தை வாய்ப்பும் கிடைத்தது. அத்துடன் பதனிடப்பட்ட வடபகுதி மீனுக்கும் சந்தை வாய்ப்பும் வரவேற்பும் இருந்ததால், வடபகுதியில் பிடிக்கப்பட்ட மீன்கள் அனைத்தும் வீணாகாமல் பணமாக்கப்பட்டன.
இவ்வாறு மீன்பிடி அபிவிருத்தி, வடபகுதி மீனவர்களின் வாழ்நிலையை உயர்த்தியது.1983 இல் வடபகுதியின் அதிஉச்ச மீன்பிடி காரணமாக நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவுத் தேவையை வடபகுதி மீனவர்களே பூர்த்தி செய்திருந்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமான மீனவர்கள் இந்தச் சாதனையை செய்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை
வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 1983 ஆம் ஆண்டில் மொத்தமாக, உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் 680 உம், வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2,600 உம், மரவள்ளங்கள் 3,865 உம் இருந்தன. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப் படகுகளாலும், கரையோர தொழிலாளர் பயன்படுத்தும் மர வள்ளங்களாலேயுமே பிடிக்கப்பட்டன. ரோலர் பயன்பாடு இலங்கையில் 80 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டாலும், அது பின்வந்த காலத்தில் தடைசெய்யப்பட்டதுடன், யுத்தம் காரணமாக வடபகுதி ரோலர்கள் ஆழ்கடல் செல்வது தடுக்கப்பட்டது. வடபகுதியில் இருந்த ரோலர்களின் தொகை நூறுக்கும் குறைவானதே.
வடபகுதியின் ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம், ஆரம்பத்தில் கூறியது போல, வலைப்படுதலேயாகும். இவ்வலைகளின் கண்கள் கடலின் ஆழத்திற்கேற்பவும், எவ்வகையான மீன்களை மீனவர்கள் குறிவைக்கின்றனர், எந்தவகை காலநிலை நிலவுகிறது போன்ற காரணிகளின் அடிப்படையிலும் வேறுபடும். உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 இஞ்சி கண் விட்டத்திலிருந்து 8 இஞ்சி கண்விட்டமுள்ள, 7 இலிருந்து 10 மீற்றர் அகலமும் 1 இலிருந்து 2 கிலோமீற்றர் நீளமுள்ள வலைகளை உபயோகித்தன. கண்ணாடி இழைப் படகுகளில் தொழில் செய்தோர், 3 இஞ்சி கண்விட்டத்திலிருந்து 5 இஞ்சி கண்விட்டமுள்ள அறக்கொட்டியான் வலை, திருக்கை வலை போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். ஆனால் மரவள்ளம் உள்ளவர்கள் களங்கண்டி, சிறுவலை, கொட்டுவலை, விடுவலை, பறிக்கூடு, சூள், தூண்டில்வலைக் கயிறு, முரல் தூண்டி, சிங்க இறால் பிடித்தல் போன்ற களக்கடல் அல்லது பரவைக்கடல் சார் தொழிலை மேற்கொண்டனர். இதை விட மன்னார் பிரதேசத்தின் சில பகுதிகளில் கரைவலை இழுப்பும் தொழிலாகச் செய்யப்பட்டது.
இவ்வாறு ஒப்பீட்டளவில் இலங்கையிலே தெற்கை விட பல முறைகளில் வளர்ச்சியடைந்திருந்த வடக்கின் மீன்பிடித் துறை, 1983 ஆம் வருடத்தின் பின்வந்த யுத்த காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டது. குறிப்பாக, சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில், 1995 இறுதியில் போர் காரணமாக மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி வன்னிக்குச் சென்றபோது, யாழ். மாவட்டத்தின் மீன்பிடி உபகரணங்களும், மீன்பிடி முறைமைகளும், உட்கட்டுமானமும் முற்றாக அழிக்கப்பட்டன. மன்னாரின் நிலையும் அதேபோன்று, படகுகள் வலைகள் உட்பட மீன்பிடி உபகரணங்களை பழுதுபார்ப்பதற்கான வசதியின்மை, அரசபடைகளின் அட்டூழியம் போன்றவற்றால் அழிவுகண்டது.
இன்று வடக்கின் மீன்பிடித் துறையானது வெளியிணைப்பு இயந்திரம் கொண்ட 2200 கண்ணாடி இழையப் படகுகளையும்,1800 மர வள்ளங்களையும்,120 உள்ளிணைப்பு இயந்திரம் கொண்ட மீன்பிடிக் கலங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் மன்னாரிலும், குருநகரிலும் மொத்தமாக 23 குறைந்த இழுதிறன் கொண்ட இறால் பிடிக்கவெனப் பாவிக்கும் ரோலர்கள் சட்டத்திற்கு முரணாக இயங்குவதாகவும் தகவல்கள் சொல்கின்றன.
தமிழ்நாட்டின் மீன்பிடி : சிறு வரலாற்றுப் பார்வையும் சில தரவுகளும்
தமிழ்நாட்டின் மீன்பிடி, உள்நாட்டு உணவுக்காகப் பயன்தரும் வளமாகவே பல காலமாக இருந்து வந்தது. ஆனால் 1972 இல் இந்திய மத்திய அரசால் முன்வைக்கப்பட்ட மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தின்படி அது சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கேரளத்தில், நோர்வே சர்வதேச அரச அபிவிருத்தி நிதியுடன், அறுபதுகளின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இயந்திர இழுவைப் படகுகள் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டன. வள்ளம், கட்டுமரம் மூலம் சிறுவலைகளைப் பயன்படுத்தி தொழில் செய்ததற்கு பதிலாக இந்தவகையான நவீன பொறிமுறையைப் பாவிப்பதன் மூலம், உற்பத்தித் திறன் கூடுவதால் மீனவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என இந்திய அரசினால் நம்பப்பட்டது.
1972 ஆம் ஆண்டளவில் தமிழ்நாட்டில் 200 ஆகவிருந்த இயந்திரப் படகுகளின் தொகை 2008 ஆம் ஆண்டளவில் 5595 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டின் மீன்பிடி உற்பத்தித் திறன் இன்று கேரளா, குஜராத்திற்கு அடுத்ததாக இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 2008 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மீன் உற்பத்தி 3,93,266.30 தொன்களாகும். இதில் 72,644 தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 18.3 பில்லியன் (அல்லது 18,131.4 மில்லியன்) இந்திய ரூபாய்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளன. இது சர்வதேச நாடுகளுக்கான ஏற்றுமதியால் பெறப்பட்ட வருமானம் மட்டுமே. உள்நாட்டு சந்தைப்படுத்தலால் பெறப்படும் வருமானம் இதைவிட அதிகமானது. இதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டின் மீன்பிடித் துறையானது செல்வம் கொழிக்கும் தொழிலாக இருக்கிறது.
ஆனால், மீன்பிடியால் பெறப்படும் செல்வம் முக்கியமாக யாருக்குப் போய் சேரவேண்டுமென 1972 ஆம் ஆண்டின் இந்திய அரச திட்டத்தில் கூறப்பட்டதோ, அவர்களுக்கு அது சென்றடையவில்லை. காரணம் மீன்பிடித் துறை மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்டபோது, அரச நலன்களை பாவித்து அதில் முதலீடு செய்தவர்கள், இந்திய அரசியற் கட்சிகளில் செல்வாக்குப் பெற்ற பெரும் பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் மீன்பிடிக்கே சம்பந்தமில்லாத வேற்றுச் சமூகத்தை சேர்ந்த கோடீஸ்வரர்களுமே. அரச மீன்பிடித் திட்டம் 1972 இல் நடைமுறைக்கு வந்தபோது பரம்பரை பரம்பரையாக மீன் பிடித்தோருக்கு அதில் முதலீடு செய்வதற்கான வளங்கள் இல்லாதிருந்ததும், அரச இயந்திரத்தின் இலஞ்சக் கொடுமையும், அடித்தட்டு மீனவர்கள் மீன்பிடி அபிவிருத்தியின் நலனை அனுபவிக்க தடையானது எனலாம்.
நோர்வே அரசினால் ரோலர் இழுவைப் படகுகள் கேரள மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் இதேநிலை தான் அங்கும் நடந்தது. அங்கும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்க்கை, பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டு, அவர்கள் நாளாந்த கூலிகளாக்கப்பட்டார்கள். மீன்பிடியைத் தளமாகக் கொண்டு பெரும் பணக்காரர்கள் தமது மூலதனத்தை உயர்த்திக் கொண்டார்கள். இதற்குத் துணைபோன நோர்வே அரசு, தனது கேரள அபிவிருத்திச் செயற்திட்டத்தை ஆய்வுசெய்தது. அது பல ஏழைகளை உருவாக்கியதுடன், இயற்கை வள அழிவுக்கும் வழிவகுத்ததென, ஐக்கிய நாடுகள் சபையின் உலக அபிவிருத்தி சம்பந்தமான கூட்டத் தொடரின் போது சுயவிமர்சனம் செய்துகொண்டது. இன்றுவரை கேரளாவில் நோர்வேயின் மீன்பிடி அபிவிருத்தி எவ்வாறு ‘ஒரு நாட்டில் அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளக்கூடாது’ என்பதற்கு சிறந்த உதாரணமாகவுள்ளது.
ஆனால், இவை எவற்றையும் கணக்கில் எடுக்காது, இந்திய மத்திய அரசும் தமிழ்நாடு மாநில அரசும், கேரளாவில் சமூகப் பாதிப்பையும் இயற்கைவள அழிவையும் ஏற்படுத்தி, ஒரு சில பணமுதலைகளை மேலும் பொருளாதாரத்தில் உயர்த்திய மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தின. அதன் விளைவு, பஞ்சத்திலும்கூட அடுத்தவருக்கு அடிபணியாது, கடலை நம்பியே வாழ்ந்த பெருமை மிகு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டு மீனவச் சமூகம் பெருமுதலாளிகளின் இயந்திரப் படகுகளில் நாட்கூலிகளாக ஆக்கப்பட்டனர்.
மேற்கூறப்பட்ட தகவல்கள் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீன்பிடி சார்ந்ததாகும்.
மன்னார் வளைகுடாவுக்கு வடக்கிலும் வங்காள விரிகுடாவுக்கும் இடைப்பட்ட புவியடித் தளமேடையில், நாகப்பட்டினம் வடக்கில் இருந்து இராமேஸ்வரம் தெற்கு வரையாக, சுமார் 480 கிலோமீற்றர் கரையோர பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்களே இன்று இலங்கை கடல்வலயத்தில் அத்துமீறல் செய்து, நம் தேசத்தின் கடல்வளத்தை சூறையாடி, இயற்கை அழிவிற்கு வழிவகுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கரையோரப் பிரதேசத்தில் சுமார் 43 சதவீதமாகும்.
அத்துடன் 2002 ஆம் ஆண்டு இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி நாகப்பட்டினத்தில் 1,465 ரோலர்களும், தஞ்சாவூரில் 469 ரோலர்களும், புதுக்கோட்டையில் 866 ரோலர்களும், இராமநாதபுரத்தை சேர்ந்த 1,865 ரோலர்களில் 980 ரோலர்களும் (மீதமானவை மன்னார் வளைகுடாவில் தொழில் செய்கின்றன.) – அதாவது மொத்தமாக 3780 இந்திய ரோலர்கள் – பாக்கு நீரிணைப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. இந்தத்தகவல் 2002 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. இன்றுவரை இந்தத் தொகை அதிகரித்தே வந்துள்ளது. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இவற்றில் பெரும்பாலானவை கோடீஸ்வர முதலாளிகளுக்கும், பாரிய மீன் ஏற்றுமதிக் கொம்பனிகளுக்கும் சொந்தமானவையாகும்.
இதைவிடவும் இந்தப்பிரதேசத்தில் இலங்கையின் வடபிரதேசத்தைப் போல கரைசார் மீன்பிடியில் ஈடுபடும் 12,500 மரவள்ளங்களும், 19,500 கட்டுமரங்களும் கடற்றொழிலில் ஈடுபடுத்தப்படுகிறன. இவர்களும் பெரும்பாலும் சிறு வலைகளைப் பாவித்தே மீன்பிடிக்கின்றனர்.
தொடரும்.