மீன்பிடித் திறன் அதிகரிப்பும் கடல்வள அழிவும்
கடலில் உருவாகும் மீன்வளத்தின் அடிப்படையில் கிடைக்கவல்ல வருமானத்திற்கு மீறியதான மீன்பிடித் திறனை அதிகரிக்க, முதலீடு செய்வது பாதகமானதாகும். அதைக் கட்டுப்படுத்தி மீன் வளத்திற்கேற்ப முதலீடு செய்வதற்கு வகை செய்யாமல், மீன்பிடித்துறையில் தாராளமய முதலீட்டை ஒரு அரசு தனது கொள்கையாகக் கொண்டிருக்குமானால் அதனால் முதலில் பாதிப்படைவதும், அழிவுக்குள்ளாவதும் கடல்சார் வளங்களே.
உற்பத்தி உபகரணங்களில் முதலீடு செய்யும்போது, அதை இலாபத்துடன் திருப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை முதலீட்டாளருக்கு உண்டு. ஆனால் மீன்பிடித் தொழிலானது, ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்களையும், மனிதரின் உழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு மூலதனத்தை உயர்த்துவது போலல்ல. மீன் வளம் இயற்கை சார்ந்தது. ஒரு தொழிற்சாலையில் இயந்திரத்தை வைத்து உற்பத்தியைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும். சந்தை நிலைவரத்திற்கு ஏற்ப உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் மீன்வளம் அப்படி அல்ல. மீன்வளத்தின் உருவாக்கம் பல ஆண்டுகளைக் கொண்ட இயற்கைசார் உற்பத்திப் பொருளாகும். மீன்வளத்தின் உருவாக்கம் கடலின் ஆழம், அதன் அடித்தளத் தாவரவியல், கடலின் புவிசார் அமைப்பு, கடலின் நீரோட்டம், மற்றும் கடலின் தட்ப வெப்பநிலை எனப் பல காரணிகளில் தங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அளவு கடற்பரப்பில் மேற்கூறிய சூழலியல் காரணிகள் மீன்களின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு மீன்கள்தான் உருவாகும். மீன்களின் வளர்ச்சிக்கான சூழலியல் காரணிகள் சில வருடங்களில் மிக மிக சாதகமானதாக உள்ளபோது அடிப்படை உற்பத்தி அளவிலிருந்து 00.2 – 00.5 சதவீதத்துக்கு கூடுதலாக உருவாகலாம். ஆனால், இந்தக் காரணிகளில் ஏதாவது ஒன்று பாதகமானதாக அமையும்போது மீன்களின் வளர்ச்சியின் அளவு 10 சதவீதத்தில் இருந்து 90 சதவீத வீழ்ச்சியை அடையலாம்.
இதனடிப்படையில், இயற்கையுடன் இணைந்து அதற்கு பங்கமேற்படாது மீன்பிடித் தொழில் செய்வதானது, மீன் வளர்ச்சிக்கான மேற்கூறிய சூழலியல் காரணிகளை பாதிக்காமலும், மீன்வளத்தில் ஆகக் கூடியது மூன்றில் இரண்டு பங்கை மட்டும் பிடிப்பதுவாகும். அதேவேளை குறைந்தது மீன்வளத்தில் மூன்றில் ஒரு பங்காவது கடலில் மீதம் இருந்தால்தான் அதன் மறு உற்பத்திக்கு வசதியாகவிருக்கும். அத்துடன் அந்த மூன்றில் ஒரு பங்கு மீன்களில் குறைந்தது 75 சதவீத மீன்கள் மறு உற்பத்திக்கு தயாராகவுள்ள பெண் மீன்களாகவும் இருக்க வேண்டும். அதாவது இனப்பெருக்கத்தை செய்யக் கூடியனவாக, முட்டையிடக் கூடியனவாக இருக்க வேண்டுமென கடல்வள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் கொள்ளை இலாபத்தையே குறியாகக் கொண்டு இயங்கும்போது, இருக்கின்ற மீன்வளம் அனைத்தையும் தமதாக்கி கொள்ளும் போட்டி எழும்; மீன்களை கடலிலிருந்து அடியோடு பெயர்த்தெடுக்கும் பாரிய உற்பத்தி உபகரணங்களை பெரும் முதலீட்டில் வாங்கிக் குவித்து , மீன்பிடியின் அளவை அதிகரிக்கும் போட்டி வளர்ந்து கொண்டு போகும். ஆனால் அதே வேகத்தில் மீன் வகைளின் மறு உற்பத்தி நடைபெறுவதானது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத, கடற்சூழல் மற்றும் தட்ப வெட்பக் காரணிகள் பலவற்றில் தங்கியிருக்கின்றது. அதனால் மீன்களின் மறு உற்பத்திக்கு அதி அத்தியாவசியமான சினைப்படும் திறனுடைய மீன்கள் இவ்வகை கட்டுப்பாடற்ற நாசகார மீன்பிடியால் அருகிவிடும். இதனால் மீன் வகைகளின் மறு உற்பத்தி படுபாதாள வேகத்தில் குறையும். இறுதியில் கடல்கள் மீன்வளம் இல்லாதவையாக மாறிவிடும்.
மீன்களின் மறு உற்பத்தி வேகத்திலும் கூடுதலாக வேகத்தில், அவற்றை கடலிலிருந்து இழுத்து எடுத்து, கொள்ளை இலாபம் ஒன்றே குறி என்றியங்கும் இந்தப் பெரும் முதலைகள், தமது தேசத்தின் கடற்பரப்பில் உள்ள மீன்வளத்தை அழித்தொழித்த பின்னர், இன்னுமின்னும் வேறு நாட்டு கடல்வளங்களை கொள்ளையிட நகர்ந்துகொண்டே இருப்பார்கள். இதனை, மெதுமெதுவாக தண்ணீர் ஊறும் கிணற்றில், இராட்சத நீரிறைக்கும் இயந்திரம் வைத்து, அடியோடு தண்ணீரை உறுஞ்சுவதற்கு ஒப்பிடலாம்.
இயற்கைக்கு முரணான நாசகார மீன்பிடி – ஒரு சர்வதேச உதாரணம்
மேற்கூறியது போன்று இயற்கைசார் மீன்பிடிக்கு முரணாக நாசகார மீன்பிடியை மேற்கொண்டு கடல்வளத்தை அழித்த நாடுகள் பலவுண்டு. இரண்டாம் உலகயுத்தத்தின் பின், அழிந்துபோன பொருளாதாரத்தை கட்டவேண்டிய பாரிய தேவை ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கியமானதாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியையே முக்கியமானதாக இந்த நாடுகள் கருதின. இயற்கை வளங்களை அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபிகளாக நினைத்து பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டனர். இதன் அடிப்படையில் பாரிய முதலீடுகளை மீன்பிடியில் இட்டனர். பொருளாதாரம் வளர்ந்தது. ஆனால் இந்தப்பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில் பாரிய அழிவை இந்நாடுகளின் கடல்வளங்கள் கண்டன. உதாரணமாக, இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், நோர்வே, ஜப்பான் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். இந்த நாடுகளில் கடல்சார் வளங்களுக்கு மிகப் பாரதூரமான அழிவை ஏற்படுத்திய நாடு ஸ்பெயின் ஆகும்.
பல பில்லியன்களை முதலிட்டு தனது மீன்பிடித் திறனை அதிகரித்த ஸ்பெயின், அதற்கு வசதியில்லாத அருகில் இருந்த நாடான போர்த்துக்கல்லின் கடல் பிராந்தியத்திலும் தனது இராட்சதப் படகுகள் மூலமும் ரோலர்கள் மூலமும் மீன்களைப் பிடித்தது. கண் மண் தெரியாத மீன்பிடி காரணமாக 1980 களின் நடுப்பகுதியில் மீன்வளம், 1960 களில் இருந்ததை விட 90 சதவீதத்தால் குறைந்து போயிருந்தது. பாரிய முதலீட்டுடன் உலகத்தில் இரண்டாவது பெரிய மீன்பிடித்திறனை கொண்டிருந்த ஸ்பெயின் நாட்டின் மீன்பிடி முற்றாக ஸ்தம்பித்தது. வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதார வறுமையும் ஸ்பானியக் கரையோர பிரதேசங்களை வாட்டின. ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் நடாத்திய கடல் ஆய்வின்படி பல்லாயிரக்கணக்கான கடல் மைல் கடலடித்தளம் முற்றுமுழுதாக அழிந்து போயிருப்பது அப்போது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆய்வாளர்கள், அறுபதாம் ஆண்டின் நிலையை மறுபடியும் இயற்கை தானாகவே உருவாக்க, குறைந்தது நூறு வருடங்களாவது எடுக்குமென கணக்கிட்டனர். அத்துடன் சிலவகைக் கடலடித் தாவரங்களும், மீன் இனங்களும் இனி அந்தக் கடற்பரப்பில் உருவாகச் சந்தர்ப்பம் இல்லை என்றும் முடிவு கூறினார். வறுமையில் இருந்து கரையோரப் பிரதேசத்தை விடுவிக்கவும், தனது பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளக சந்தை வைப்பைப் பெறவும், வேறும் பல முக்கியமான பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ஸ்பானிய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தது. வறுமையில் இருந்து கரையோரப் பிரதேசத்தை விடுவிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் இரு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
முதலாவது, இராஜதந்திர உறவுகளையும், கடற்படை அதிகாரத்தையும் பயன்படுத்தி மேற்காபிரிக்க கரையோரம் மீன்பிடித்தலாகும். அத்துடன் டென்மார்க், இங்கிலாந்து போன்ற நாடுகளின் வடகடல் பிரதேசத்தில் அந்நாடுகளின் நல்லெண்ண அனுமதியுடன் குறிப்பிட்ட அளவு தொன் மீன்களைப் பிடித்தல். இரண்டாவது, ஸ்பானிய கரையோரப் பிரதேசங்களில் உல்லாசப் பயண உட்கட்டுமானங்களை உருவாக்கி உல்லாசப் பயணிகள் மூலம் வரும் வருவாயில் வறுமையை ஒழித்தலாகும். இன்று இருபது வருடங்களில் பின் இந்த இரு திட்டங்களில் இரண்டாவது திட்டம் பல வழிகளில் வெற்றி அளித்துள்ளது.
ஆனால் மேற்காபிரிக்கக் கரையோரம் மீன்பிடிக்கும் திட்டமானது ஸ்பெயினின் அத்துமீறலால் பல்லாயிரம் ஆபிரிக்க மக்களை வறுமையில் தள்ளியுள்ளது. அவர்களின் கடல்வளம் பாரிய ரோலர்களின் மூலம் களவாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இதைப்பற்றிய விவாதம் வந்தபோதெல்லாம் தமது அதிகாரத்தைப் பாவித்து ஐரோப்பிய ஒன்றியம் ஸ்பெயினின் அத்துமீறலையும், மேற்காபிரிக்க கடல்வளங்களின் மீதான காட்டுமிராண்டித்தனமான வன்முறையையும் நியாயப்படுத்தியது. இன்றும் தொடர்ந்து அதையே செய்கின்றது.
அது மட்டுமல்லாமல் ஸ்பானிய அரசு, செனகல் போன்ற நாடுகளில் ஸ்பானிய காட்டுமிராண்டித் தனத்திற்கெதிராக போராட புறப்பட்ட உள்நாட்டு மீனவர்களையும், அவர்களின் அரசியல் வழிகாட்டிகளையும், இலஞ்சம் வாங்கும் உள்நாட்டு அரசியல் கைக்கூலிகளின் உதவியுடன் கொலை செய்தது. அதேவேளை ஐரோப்பிய ஒன்றியம், ஸ்பெயின் கொள்ளையடிக்கும் ஆபிரிக்க கரையோர நாடுகளில், தனது அரசு சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் கடல்வள அழிவுக்கு எதிரான மக்களின் போராட்ட உத்வேகத்தை தடுத்து நிறுத்திய வண்ணமுள்ளது.
எப்படித்தான் இருந்தாலும், எந்தவகைக் கடற்கொள்ளையில் ஈடுபட்டாலும், ஒரு காலத்தில் உலக அளவில் மீன்பிடியில் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இருந்த ஸ்பெயின் இன்றுவரை அந்த இடத்தை திரும்பவும் பிடிக்க முடியவில்லை. இன்று அயல் நாடுகளினதும் வேறு வலய நாடுகளினதும், கடல்வளங்களை கொள்ளையடிக்கப் புறப்பட்டிருக்கும் புதிய கடல் கொள்ளைக்காரர்களான சீனர்களும் இந்தியர்களும், 2003 ஆம் ஆண்டிலிருந்து, உலக அளவில் மீன்பிடியில் முதன்மை வகிக்கும் முதல் பத்து நாடுகளில் முறையே முதலாம் இடத்திலும் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றார்கள். மேற்கு ஆபிரிக்க கடல்வளம் ஸ்பெயின் நாட்டின் கடற்கொள்ளைக்கு ஆளாகியிருக்கும் நிலைபோல, இன்று இலங்கையின் தெற்கில் சீனாவானது ‘அரக்கத்தனமான’ கொள்ளையை ஆரம்பித்துள்ளது. வடக்கில் இந்தியப் பெரு முதலாளிகள் எமது கடல்வளங்களை பல வருடங்களாக கொள்ளையிடுகின்றனர்.
இலங்கையின் வடபிரதேசக் கடலில் இந்திய நாசகார மீன்பிடியானது, இயற்கை வளத்திலும் இலங்கை தமிழ் மீனவரின் வாழ்நிலையிலும் எவ்வகை அழிவை ஏற்படுத்துகிறதெனப் பார்ப்போம். அதற்கு முன், இதனால் பாதிக்கப்படும் பிரதேசங்களின் கடல்வளத்தைப் பற்றியும் அவற்றின் தன்மை பற்றியும் அறிந்து கொள்வது, அழிவு எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்பன பற்றி விளங்கிக் கொள்வதற்கும் இலகுவாக இருக்கும்.
வடபகுதியின் கடல் பகுதியில் மீன்வள உருவாக்கத்திற்கான இருவகைச் சூழல்கள் காணப்படுகின்றன.
- கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட பிரதேசம்.
- ஐந்து பாகத்துக்கு மேற்பட்ட ஆழம் கொண்ட கடற்பிரதேசம். (இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல் வலய எல்லை வரையான பிரதேசம்.)
1. கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட பிரதேசம்.
இப்பிரதேசம் கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட, மூன்றிலிருந்து ஐந்து பாகம் ஆழம் கொண்டதாகும். இதன் அடித்தளம் பெரும்பான்மையாக முருகைக் கல்லும், மணலும், சேறும் கலந்ததாகவிருக்கும். இப்பிரதேசத்தைக் கடலடித்தளத்தின் தன்மை, தாவரவியல், போன்றவற்றின் அடிப்படையில் இரண்டாக பிரிக்கலாம்.
1.1 கரையிலிருந்து ஒரு பாகம் ஆழத்தைக் கொண்ட சேற்று மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட பிரதேசம்.
1.2 ஒன்றிலிருந்து ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட முருகை மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட கடற்பிரதேசம்.
1.1. கரையிலிருந்து ஒரு பாகம் ஆழத்தைக் கொண்ட சேற்று மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட பிரதேசம்
இக்கடற்பரப்பை களக்கடல், களப்புக் கடல் என்றும் சில பிரதேசங்களில் பரவைக்கடல் என்றும் அழைப்பர். அநேகமான இடங்களில் இக்கடலின் கரைப்பகுதி ஆரம்ப காலத்தில் தரையாகவிருந்து, பின்பு மறுபடியும் இயற்கையின் மாற்றத்திற்கேற்ப மறுபடியும் கடலாக மாறிய இடங்களாகும். காலகாலமாக நடந்த இந்த மாற்றங்கள் இப்பரவைக் கடலின் மீன் வளர்ச்சிக்கான சூழலியல் காரணிகளில் முக்கியமானதாகும். தரையாகவிருக்கும் நிலம் கடலாக மாறும் போது கடலின் பௌதிகவியலில் மாற்றமேற்படுகிறது.
இந்த மாற்றங்கள் கடலடித்தள தாவரவியலில் பாரிய செல்வாக்குச் செலுத்துகிறது. கடலடித்தள தாவரவியலின் மாற்றமும், அதன் வளர்ச்சியுமே எந்த வகையான உயிரினங்கள் அந்தக்கடல் பகுதியில் உருவாகின்றன என்பதைத் தீர்மானிக்கின்றன. இந்தக்கடல் பகுதி சேறும் மணலும் கலந்த ஒரு பாக ஆழத்திற்கு உட்பட்டதாக இருக்குமானால், கடல் அறுகு – சாதாளை போன்ற தாவரங்களை கொண்டதாகவிருக்கும். சல்லி, திரளி, கிழக்கன், சுண்ணாம்புக் கெளுத்தி, மணலை, திருவன், கயல் போன்ற மீன்வகைகளும் வெள்ளை இறால், மட்ட இறால், வெள்ளை நண்டு, குழுவாய் நண்டு போன்ற நண்டு இனங்களும் ஆடாத்திருக்கை, புலியன் திருக்கை போன்ற திருக்கை இனங்களும் இங்கு உருவாகி, ஆழ்கடல் சென்று, மீண்டும் பருவகால இனப்பெருக்கத்திற்கென, உருவான இடத்தை தேடிவரும். சிறையா போன்ற மீன்கள் இக்களக்கடலில் உற்பத்தியாகின்றன. இந்தவகை கடல் பகுதி புங்குடுதீவு பெரியபிட்டியில் இருந்து, பருத்தியடைப்பு ஊருண்டி ஊடாக, தோப்புகாட்டு முனங்குக்கும், தம்பாட்டி கிழக்கு முனயூடாக, அராலி – நாவாந்துறை – பண்ணை – பாசையூர் ஈறாக, கொழும்புத்துறை வரையும் தொடர்கிறது.
1.2. ஒன்றிலிருந்து ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட முருகை மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட கடற்பிரதேசம்.
இந்த களக்கடல், ஒரு பாகத்திற்கும் ஐந்து பாகத்திற்கும் இடையில் ஆழமுடையதாக இருப்பதால், அதன் கடலடி நிலம், மணலையும் சிறு முருகைக் கற்தளத்தையும் கொண்டிருக்கும். இப்பகுதியின் கடலடித் தாவரங்களென சாட்டாமாறு காடுகளையும், கடற்தாளைப் பற்றைகளையும், பல்லினப் பாசிகளையும் கூறலாம். இப்பகுதியில் விளை, ஓரா, ஒட்டி, கலைவாய், கிளி, சுங்கன் கெளுறு, செம்பல்லி, மதணன், செங்கண்ணி, பூச்சை, கறுவா, மசறி, கீளி, போன்ற மீன் வகைகளும் சிங்கறால் என்ற நண்டு இனமும், கட்டித் திருக்கை, கருவால் திருக்கை போன்ற திருக்கை இனங்களும் உருவாகின்றன. இக்கடல் பிரதேசம் கணவாய், சிறையா போன்ற கூட்டமாக வாழும் மீனினங்களின் வாழ்விடமாகவும் உள்ளது. இப்பகுதியின் சாட்டமாறு, கடல் தாளைத் தண்டுகளில் கணவாய்கள் இடும் முட்டைகள் நீரோட்டத்தின் உதவியுடன் மேற்கூறிய ஒரு பாக ஆழத்திற்கும் குறைந்த களக் கடலின் கரைப் பகுதியை அடைகின்றன. அங்கிருக்கும் வெதுவெதுப்பான நீரினால், முட்டைகள் கணவாய் குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகள் பிற்பாடு நீரோட்டத்தின் உதவியுடன் வந்த இடத்தைச் சென்றடைகின்றன. இக்கணவாய்கள், ஒன்றிலிருந்து இரண்டு பாக ஆழத்தில், களம்கண்டி வலை பெரும் கூட்டம் வைத்திருக்கும் மீனவர்களால் பிடிக்கப்படுகிறது.
ஆனால் சிறையா மீன்கள் கரைசார் பகுதியில் முட்டையிடுகின்றன. அம்முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவரும். அக்குஞ்சுகளை மணலை என அழைப்பர். சில மாதங்களின் பின் மணலைகள் வளர்ந்து நடுநிலை அடைகின்றபோது, அவை களக்கடலில் இருந்து வெளியேறி, தாய் மீன்கள் (சிறையா) இருக்கும் ஒரு பாக ஆழத்திற்கு மேற்பட்ட பகுதிக்கு புலம்பெயர்ந்து விடும். இந்நிலையில் அவை காடன் என்று அழைக்கப்படுகின்றன. இக் காடன்கள் சினைக்கும் பருவம் அடையும் போது, கிட்டத்தட்ட முழு வளர்ச்சியையும் அடைந்து விடும். அப்போது அதை சிறையா என அழைப்பார்கள். இனப்பெருக்க காலத்தில் அவை மறுபடியும் தாம் பிறந்த களக்கடலுக்கு முட்டையிட கூட்டம் கூட்டமாக வரும். இவைகளை விடுவலையை உபயோகித்து தொழிலாளர்கள் பிடிப்பது வழக்கம். இந்தவகை ஒரு பாக ஆழத்திற்கும் ஐந்து பாக ஆழத்திற்கும் இடைப்பட்ட கடற்பகுதி மன்னாரின் விடத்தல்தீவு – இலுப்பைக் கடவை – வெள்ளாம்குளம் – நாச்சிக்குடா ஊடாக கவுதாரிமுனை வரைக்கும், பின்பு மண்டைதீவு கரை தொடக்கம் வேலணை – செட்டிபுலம் – புங்குடுதீவு – நயினாதீவு – அனலைதீவு – எழுவைதீவு போன்ற தீவுகளின் பின்பக்கமாக தொடர்ந்து, காரைதீவு கற்கோவளம் ஊடாக பருத்தித்துறை முனை வரையும் நீள்கிறது.
2. ஐந்து பாகத்திற்கு மேற்பட்ட ஆழம் கொண்ட கடற்பிரதேசம் (இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல்வலய எல்லை வரையான பிரதேசம்.)
இது தலைமன்னாரிலிருந்து கச்சதீவை உள்ளடக்கிய பாக்கு நீரிணையின் நெடுந்தீவு வாய்க்கால் – மேற்கு வாய்க்கால் – காங்கேசன்துறைக்கு அடுத்துள்ள ஏழாம் வாய்க்கால் ஈறாக, பருத்தித்துறையை அடுத்துள்ள கிழக்கு வாய்க்கால் வரை தொடர்கிறது. இது இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் அடங்கும். இந்தப் பிரதேசத்தின் அகலம் 14 இற்கும் – 23 நோர்டிகல் மைலுக்கும் இடைப்பட்டதாகவுள்ளது. இந்தப் பிரதேசத்தின் ஆழம் பற்றி சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், 1979 – 1980 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசின் ஏற்பாட்டில் கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான ’பிரித்ஜோப் நான்சென்’ செய்த ஆய்வின்படி, இப்பகுதி ஐந்திலிருந்து இருபது பாகத்திற்கு இடைப்பட்ட ஆழப் பிரதேசம் என அறியப்பட்டது. இப்பகுதி, மீன்வளம் கொழிக்கும் பிரதேசம் எனவும் கணிக்கப்பட்டது. இப்பகுதியின் கடலடித்தளத்தில் பாரிய கடலடித்தள ‘Coral Reef’ எனப்படும் முருகைகள் (பவளப்பாறைகளைக்) காணப்படுவதால், இப்பகுதி அதற்கே உரித்தான தாவரவியலையும் கொண்டுள்ளது. பவளப்பாறைகளை உள்ளடக்கிய பிரதேசத்தின் தாவரவியலானது, மேற்கூறிய கற்கடல் பிரதேசத்தில் இருப்பதிலிருந்து வேறுபடுவதில்லை. இதன் தாவரங்களாக சாட்டமாறு, பல்லின பாசிவகை, கடற்தாளை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இக்கடல் பிரதேசத்தில் பாரை, கட்டா, சீலா, சூடை, வளை, மண்டைக் கெளுறு, சூவாபாரை, கும்பிளா, பருந்தி போன்ற இருபதிற்கும் மேலான மீன்வகைகளும் வெள்ளை இறால், சாக்குக் கணவாய், கல்லுத் திருக்கை போன்றனவும் பெருமளவில் உற்பத்தியாகின்றன.
இந்திய கடலாதிக்கத்தால் எம் கடல்வளங்கள் அழிக்கப்படும் விதமும் அதன் தாக்கமும்.
- இழுவைப் படகுகளின் பாதிப்புகள்
இழுவைப்படகு மீன்பிடி என்பது படத்தில் காண்பது போன்று இயந்திரப்படகின் கடையால் பகுதியில் பாரிய பை போன்ற வலையை இணைத்து இயந்திர உதவியுடன் கடல் அடித்தளத்தை வடிகட்டுவதாகும். இந்த வகை மீன்பிடி முறையானது பின்வரும் கடல்வள அழிவையும், இயற்கை மாசடைதலையும் ஏற்படுதுகிறது.
அவையாவன :
- மீனின் வகை, தொகை, நிறை, அளவு போன்ற எதையும் கணக்கில் கொள்ளாமல் மீன்பிடித்தல்
- கடலடித்தள தாவரங்களை அழிப்பதன் மூலம் தாவரவியலில் மாற்றத்தை ஏற்படுத்துதல்
- கடலடித்தள பவளப்பாறைகள் – முருகைகள் என்பவற்றை அழித்தல்
- மீன் இனத்தின் முட்டைகளையும் குஞ்சுகளையும் அழிப்பதன் மூலம் மீன் உற்பத்தியைத் தடைப்படுத்துதல்
- இயற்கையின் சமநிலையைக் காக்கும் கடலடித்தள சிறு நுண்ணுயிர்களையும் உணவுக்கு உதவாத மீன்வகைகளையும் அழிப்பதன் மூலம் இயற்கை அழிவை ஏற்படுத்தல்.
- பல மணி நேரம் தொடர்ச்சியாக இழுவைப்படகு இயங்குவதால் அதற்குப் பயன்படுத்தப்படும் பல நூறு லீற்றர் எரிபொருள் மூலம் சூழல் மாசடைதல்.
இதில் முதல் நான்குவகைப் பாதிப்புகளும் உடனடியாகவும் நேரடியாகவும் கரையோர மற்றும், இழுவைப்படகில் அல்லாமல் வலைப்படுப்பு மூலம் ஆழ்கடலில் தொழில் செய்வோரிடையே தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன. கடைசி இரு பாதிப்புகளும் நீண்டகால போக்கில் மீனவர்களையும், இயற்கையையும், மனித குலத்தையும் அழிவுக்கு இட்டுச் செல்கின்றன.
இழுவைப்படகு மூலம் மீன்பிடித்தல், இன்றுள்ள வேற்றுத் தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில் அதீத பிடிதிறன் கொண்ட தொழில் நுட்பமாகும். எண்பதுகளின் ஆரம்பத்தில் இழுவைப்படகு மீன்பிடியின் பாதிக்கும் தன்மை கடலாய்வு மூலம் கண்டறியப்பட்டு, மீன்பிடி ஆராய்ச்சி மையங்கள் பலவருடங்களாக முயன்றும் இன்றுவரை இதற்கு நிகராக மாற்றுத் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோன்று இந்தத் தொழில் நுட்பத்தின் பாதிக்கும் தன்மைகளை தவிர்த்து அதனை நவீனமயப்படுத்தும் முயற்சியும் இன்றுவரை தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதற்குக் காரணம் கடலின் இயற்கையான பௌதீகத் தன்மைக்கு முரணாக ஒரு தொழில் நுட்பத்தை உருவாக்க முடியாமையேயாகும்.
இந்த இழுவைப்படகு தொழில் நுட்பத்தை கவனித்தால், ஏன் இதன் பாதிப்பைக் குறைத்து நவீனமயப்படுத்த முடியாதென்பதை விளங்கிக் கொள்ளலாம். இழுவைப் படகின் கடையாலில் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் வலையானது இரு பகுதிகளைக் கொண்டது. அதன் அகன்ற முதற்பகுதி மடி என அழைக்கப்படும். அதன் ஒடுங்கிய அடிப்பக்கம் தூர் எனப்படும். மடியின் வாயின் கீழ்ப்பகுதியில் ஈயம் அல்லது இரும்பினாலான உருளைகளும், அதன் மேற்பகுதியில் மிதவைகளும் பிணைக்கப்பட்டிருக்கும். மடியின் வாயை அகட்டி வைத்திருப்பதற்காகவும், மடியை இழுக்கும் போது ஒலி எழுப்பியும், நிலத்தில் உள்ள அடித்தள மீன்களை விரட்டி மடி வாயில் அனுப்புவதற்காகவும், மடியானது படகு இழுக்கும் போது நிலமட்டத்திலிருந்து மேல் கிளம்பாமல் இருப்பதற்காகவும் மடியின் வாயின் இரு பகுதிலும் பல நூறு கிலோ எடை கொண்ட இரும்பினாலான கதவுகள் இணைக்கப்பட்டிருக்கும். கடலடித்தளத்திலுள்ள தாவரங்களையும், முருகைகளையும் அழித்தொழிக்கும் இழுவை மடியுடன் இணைக்கப்படும் இரும்புச் சங்கிலிகளும், இருபக்க இரும்புக் கதவுகளும், மடியின் அடியில் பிணைக்கப்படும் உலோக உருளைகளும் இல்லாமல் இழுவைத் தொழில் நுட்பத்தை உருவாக்க முடியாது. குறிப்பாக கடல் அடித்தளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மடியின் இருபக்கமும் இணைக்கப்படும் இரும்புக் கதவுகள் இல்லாமல் பாவிக்கக்கூடிய இழுவை மடியை உருவாக்க முடியாது. கடலில் பெளதிகவியலுக்கு ஏற்ப மடியை கடலடித்தளத்திற்கு கொண்டு செல்லவும், படகு இழுக்கும் போது அதை ஒரே நிலையில் வைத்திருக்கவும் பாரமான ஏதாவது ஒரு பொருள் மடியுடன் இணைக்கப்பட்டே ஆகவேண்டும். இல்லையேல் மடி கடல் மேற்தளத்தில் தான் மிதந்தபடி இருக்கும், இதனால் மீன்பிடிக்க முடியாது. இவ்வாறு இந்தத் தொழில் நுட்பம் ஏற்படுத்தும் பாதிப்பை நிவர்த்தி செய்ய முடியாமையினாலேயே, இதனைக் கண்டுபிடித்த மேற்கு ஐரோப்பிய நாடுகள் இழுவைப் படகுப் பாவனையை தமது கடல் வலயத்தில் தடைசெய்துள்ளனர், அல்லது கடுமையாக மட்டுப்படுத்தியுள்ளனர்.
இதனடிப்படையில் மேற்கூறியபடி கடலடித்தளத்தின் ஜீவராசிகளையும், தாவரங்களையும், நில அடித்தள பவளப்பாறைகளையும் அழிக்கும் தொழில் நுட்பத்தை பாவித்து இந்திய இழுவைப் படகுகள் நம் தேசத்தின் வடகடலில் ஒரு பாக ஆழத்திற்குட்பட்ட களக்கடல் தவிர்ந்த அனைத்து கடல் பிரதேசத்திலும் மீன்களைப் பிடிக்கின்றன. இதனால் களக்கடலில் களங்கண்டி, மற்றும் விடுவலை இழுக்கும் தொழிலாளர்களில் இருந்து, கண்ணாடியிழைப் படகுகளில் அறக்கொட்டியான் வலைத்தொழில் செய்பவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.
இந்திய நாசகார மீன்பிடியால் இலங்கை வடகடல்சார் தொழிலாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் –சில உதாரணங்கள்
உதாரணம் 1 :
இந்திய இழுவைப்படகுகள், எழுவைதீவுக்கும் காரைதீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் மீன்களைப் பிடிப்பதனால், ஊர்காவற்துறை – பருத்தியடைப்பு – மெலிஞ்சிமுனை – கெட்டில் போன்ற பிரதேசங்களில் கார்த்திகை மாதத்திலிருந்து சித்திரை மாதம் வரை களங்கண்டி மூலம் கணவாய் பிடிக்கும் தொழில், கடந்த ஆறு வருடங்களாக பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேற்கூறிய கிராமங்களில், 2003 ஆம் வருட கணக்கெடுப்பின்படி, மொத்தமாக நூற்றி இருபது கடல்தொழிலாளர்கள் களங்கண்டியைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்கள் கார்த்திகை மாதத்திலிருந்து சித்திரை 2003 வரையான காலத்தில் மாதாந்தம் சராசரியாக ஒவ்வொருவரும் 45 கிலோ கணவாய்களைப் பிடித்துள்ளனர்.
ஆனால் யுத்தம் முடிந்த பிற்பாடு இன்று மொத்தமாக 32 தொழிலாளர்களே கணவாய்ப் பிடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் மீன்பிடிச் சங்கங்களின் தகவலின்படி, 2010 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 15 கிலோ கணவாயை மட்டுமே மாதாந்தம் பிடித்துள்ளனர். கணவாய் அதிகமாகப் பிடிபடும் மார்கழி மற்றும் தை மாதத்திலேயே இவ்வாறு பிடித்துள்ளனர். பிடிபாடு குறைந்ததால், பெரும்பான்மையானோர் தை மாதத்தின் பின் களங்கண்டித் தொழிலையே நிறுத்திவிட்டனர். இவ்வாறு கணவாய்த் தொழில் மந்தமானதற்கு இந்திய இழுவைப்படகுகளே நேரடிக் காரணமென தொழிலாளர்கள் குற்றம் கூறுகின்றனர்.
எழுவைதீவுக்கும் காரைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் உள்ள கடற்தாளைக் காடுகளிலும் சாட்டாமாறுப் புதர்களிலுமே கணவாய்கள் முட்டையிடுகின்றன. ஐப்பசி மாதத்தில் தொடங்கும் வாடைக்காற்று காலத்தில் ஏற்படும் நீரோட்டத்தால், முட்டைகள் தீவுகளுக்கும் ஊர்காவற்றுறைத் தீவுக்கும் இடைப்பட்ட குடாவுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன. அவை மேற்கூறிய கிராமங்களில் களப்பிரதேசத்தை அடைந்து அங்கு குஞ்சு பொரிக்கின்றன. அவை வளர்ந்து சில மாதங்களில் மீனவர்களால் பிடிக்கப்படுகிறன. இழுவைப்படகுகள், முட்டையிடும் கணவாய்களை வகைதொகையின்றிப் பிடிப்பதுடன், அவைகளின் வாழ்வாதாரமான கடற்தாளைகளையும் சாட்டாமாறுகளையும் அழிப்பதனால், கணவாய்களின் உற்பத்தி குறைகின்றது. இது அப்பகுதி மீனவர்களின் கருத்து மட்டுமல்ல; செனகல் நாட்டின் கரையோரம் நடாத்தப்பட்ட ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட உண்மையுமாகும்.
உதாரணம் 2 :
ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல சிறையா இன மீன்கள் கரையோரம் பிறந்து, கடற் தாளைகளைக் கொண்ட ஒரு பாக ஆழத்திற்கு மேற்பட்ட பிரதேசத்தில் சீவிக்கும். இழுவைப் படகுகள் இதன் வாழ்விடமான கடற்தாளைகளை அழித்து அவற்றிடையே மீன் பிடிக்கின்ற போது, நீரின் மேல்தளத்தில் நீந்தக் கூடிய தன்மை கொண்ட சிறையாக்கள் இழுவை மடியில் இருந்து தப்பித்து விடும். ஆனால் அவற்றின் வாழ்விடம் அழிக்கப்படுவதால், அவை வேறு பகுதிக்கு புலம் பெயர்ந்துவிடும் அல்லது கரையோரமாக ஒதுங்கி இறந்துவிடும்.
செட்டிபுலம், துறையூர், கெட்டில், நாவாந்துறை, சாவற்கட்டு போன்ற கிராமத்து தொழிலாளர்கள் பலர், வேலணைக்கும் புங்குடுதீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் (வேலணையையும் புங்குடுதீவையும் இணைக்கும் பாலத்திற்கு கிழக்கே உள்ள கடற்பரப்பில்) விடுவலை, மற்றும் சிறையாவலையைப் பாவித்து, சிறையா மீன் பிடிப்பது வழக்கம். இந்திய இழுவைப்படகுகள், சிறையாக்களின் வாழ்விடமான வேலணைக்கும் புங்குடுதீவுக்கும் இடையிலுள்ள கடற்பரப்பில் நாசகார மீன் பிடியில் ஈடுபடுவதனால், தற்போது விடுவலைத் தொழில் முற்றாக அழிந்துவிட்டது. சிறையாவலை சிலரால் பாவிக்கப்பட்டாலும் முன்னைய காலம் போல் பெரிய அளவில் உழைக்க முடியாதுள்ளது என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர் .
உதாரணம் 3 :
காரைதீவு, கற்கோவளம் தொடக்கம் பருத்தித்துறை வரையான பகுதியின் கடலடித்தளம் சிங்கறால் வளர்ச்சிக்கான சாதகமான தன்மை கொண்ட பகுதி. இப்பகுதியில் சாட்டாமாறும் முருகைகளும் அதிகமாகவுள்ளன. முருகைகள், பதுங்கி இருக்கும் பொந்துகளைக் கொண்டதனால் சிங்கறால்கள் உற்பத்தியாகும் இடமாக இப்பிரதேசம் அமைந்துள்ளது. அதேபோல் மன்னாரின் விடத்தல்தீவு, இலுப்பைக் கடவை, வெள்ளாம்குளம், நாச்சிக்குடா ஊடாக கவுதாரிமுனை வரைக்குமான கடற்பிரதேசமும் சிங்கறால் உற்பத்தியாகும் இடங்களாகும். சிங்கறால் ஏற்றுமதி இலங்கையில் எண்பதுகளிலேயே ஆரம்பித்தது. மீன்பிடி குறைந்த சோழகக் காற்று வீசும் காலத்தில் தொழிலாளிகள் வள்ளங்களில் சென்று நீரில் குழிபுகுந்து கைகளாலேயே இந்த சிங்கறால்களைப் பிடிப்பர். ‘ஒரு இறால் பிடித்தால் ஒரு நாள் சீவியத்திற்கு காணும்’ என்பார்கள் இப்பிரதேசத்தில் தொழில் செய்யும் தொழிலாளிகள். இன்று சிங்கறால் இந்தியாவில் இருந்து சிங்கபூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் பல கோடி அந்நியச் செலவாணியை இந்தியர்கள் சம்பாதிக்கின்றனர். சிங்கறால் உற்பத்தியாகும் கடல் பிரதேசம் பெருமளவில் இலங்கையின் வடபகுதியிலேயே அமைந்துள்ளது.
இதனாலேயே, மீனைவிட பெறுமதி வாய்ந்த சிங்கறாலைக் குறிவைத்து, பல நூற்றுக்கணக்கான இந்திய நாசகார இழுவைப்படகுகள், மேற்கூறியபிரதேசங்களில் இழுவைமடியை உபயோகித்து சிங்கறால்களைப் பிடிக்கின்றன .
ஏற்றுமதிக்கு தகுதியான சிங்கறால்கள் உயிருடன் பிடிக்கப்படல் வேண்டும். ஆகவே கையால் பிடிப்பது அல்லது இழுவைமடி மூலம் பிடிப்பது போன்ற இரண்டு முறைகளே உண்டு. வலை மூலம் முயன்றால் கால்கள் உடைந்து அவை இறந்து விடும். இலங்கையில் இழுவைப்படகு தடைசெய்யப்பட்டுள்ளதனால் தொழிலாளிகள் கைகளாலேயே சிங்கறால் பிடிப்பது வழக்கம். இது இயற்கை சார்ந்து, கடல்வளத்திற்கு பங்கமேற்படாமல் செய்யப்படும் தொழிலாகும். இந்தியர்கள் எல்லை கடந்து இழுவைமடி மூலம் பல இலட்சம் பெறுமதியான இறால்களை பிடிக்கின்றனர். தான் அமர்ந்திருக்கும் மரக்கொப்பை தானே வெட்டுவதைப் போன்ற இக் கண்மூடித் தனமான செயல், சிங்கறாலது எதிர்கால உற்பத்தியையும் அதற்கு ஆதாரமான கடலடித்தள தாவரவியலையும், முருகைகளையும் அழிக்கின்றது. பருத்தித்துறை முனைப் பிரதேசத்தில், இழுவைமடி மூலம் சிங்கறால் பிடித்த இந்திய இழுவைப்படகுகளையே அந்தப்பகுதி தொழிலாளிகள் சிறைப்பிடித்தனர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியதொன்று.
உதாரணம் 4 :
இந்திய இழுவைப்படகுகள் இலங்கையின் வடகடலின் கரையோரத்தில் மடியிழுப்பதால் பாதிப்படைவது சிங்கறால் வளர்ச்சியும், கடலடித்தள தாவரவியலும் மட்டுமல்ல; ஐப்பசி மாதத்திலிருந்து சித்திரை வரையான, மாரிக்கும் வசந்த காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், கரையோரம் வரும் கட்டா – பாரை – சூவாப் பாரை – கருங்கண்ணிப் பாரை – காலை – அறுக்குளா போன்ற பதினைந்து வகை இன மீன்களை நம்பி, அறக்கொட்டியான் வலை பாவித்து தொழிலில் ஈடுபடும் 6000 தொழிலாளிகளுமே.
இழுவைப்படகுகள் மேற்படி தொழிலாளர்களை இரண்டு வகையில் நேரடியாகப் பாதிக்கின்றன. முதலாவது, மேற்கூறிய மீன்கள் பருவகாலத்தில் கரைப்பகுதிக்கு வரமுன்பே, ஆயிரக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள் தமது பாரிய பிடிதிறன் மூலம் மீன்களைப் பிடித்தல். இதனால் கரையோரப் பகுதிக்கு வரும் மீன்களின் தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்படுகிறது. அதிலிருந்தும் தப்பிவரும் மீன்களையும் இவர்கள் கரையோரமாக சிங்கறால்களுக்காக மடி இழுக்கும் போது அள்ளிவிடுகின்றனர்.
இரண்டாவது, மீதமாக இருக்கும் மீன்களைப் பிடிக்க தொழிலாளர்களால் படுக்கப்படும் வலைகளையும் இந்திய இழுவைப்படகுகள் வெட்டி அழித்துவிடுதல். இவ்வாறு, இலங்கை மக்களுக்குச் சொந்தமான கடல்வளங்களைக் களவாடுதல் மட்டுமல்லாமல், அவர்களின் பல இலட்சங்கள் பெறுமதியான படுப்புவலைகளை வெட்டுவதன் மூலம் பொருளாதார நஷ்டத்தையும், வறுமைச் சுமையையும் எம் தொழிலாளிகள் மீது இந்தியர்கள் சுமத்துகின்றனர்.
உதாரணம் 5 :
இதே அடிப்படையில் தான், மன்னார்ப் பகுதியில் கரைவலைத் தொழில் செய்யும் சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் இந்திய இழுவைப்படகுகளால் பாதிக்கப்படுகின்றனர். கரைவலைத் தொழிலானது, வெள்ளம் நுகைக்கும் போது கரைக்கு கூட்டமாக வரும் மீன்களை வலையால் வளைத்து, பின்பு அவ்வலையை கரைக்கு இழுக்கும் தொழில்முறையாகும். இந்திய இழுவைப்படகுகள் அம்மீன்கள் கரைக்கு வருமுன்பே கரையிலிருந்து ஒரு கடல் மைல் தூரத்தில் பிடித்து விடுவதனால், கரைவலைத் தொழிலும் அது சார்ந்து வயிற்றைக் கழுவும் தொழிலாளிகளின் குடும்பங்களும் பாதிப்படைக்கின்றன. வடபகுதியில் கரைவலைத் தொழில் செய்வோர் மிகவும் வறிய நிலையிலுள்ள தொழிலாளர்கள் என்பதை இங்கு நாம் நினைவிற் கொள்வது நன்று.
தொடரும்.