பூநகரிப் பிராந்தியத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட வேள், ஈழம் பற்றிய தமிழ்ப் பிராமிச் சாசனங்கள்
Arts
18 நிமிட வாசிப்பு

பூநகரிப் பிராந்தியத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட வேள், ஈழம் பற்றிய தமிழ்ப் பிராமிச் சாசனங்கள்

October 8, 2024 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

அறிமுகம்

இலங்கைத் தமிழரின் பாரம்பரியத் தாயகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பிரதேசத்தின் ஆதிக்குடிகள், அவர்களின் மொழி, பண்பாடு என்பன பொறுத்து வரலாற்று ஆசிரியர்களிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. இற்றைக்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் இங்கு தொன்மையான தமிழர் நாகரிகமும், சுதந்திர தமிழரசும் ஆதியில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உறுதியான தொல்லியல் ஆதாரங்கள் அற்ற நிலையில் இலக்கியச் சான்றுகளை மட்டும் வைத்து இக்கருத்து கூறப்பட்டதினால் பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் பலரும் இக்கருத்துகளுடன் உடன்பட்டு நிற்கவில்லை. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோரின் கருத்துகளை அப்படியே ஏற்க முடியாவிட்டாலும் அண்மையில் யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் உள்ள கந்தரோடை, ஆனைக்கோட்டை, களபூமி, வல்லிபுரம் போன்ற இடங்களில் கிடைத்த திராவிடருக்குரிய பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் இவர்களின் கருத்துகளை முற்றாக நிராகரிக்க முடியாதென்பதற்கு ஓரளவு இணை நிற்பதாகக் கொள்ளலாம். இருந்தும் இப்பண்பாட்டு மக்கள் தமிழ் மொழியைத்தான் பேசினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

கந்தரோடையிலும், வல்லிபுரத்திலும் இரு பிராமிச் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை பௌத்தமதம் சார்ந்த செய்திகளைக் கூறுபவையாக உள்ளன. இப்பிராந்தியங்களில் தமிழ்நாட்டையொத்த பௌத்தப் பண்பாடு இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டும் கூட, இலங்கையில் பௌத்த பண்பாடு ஒரு மதத்தின் பண்பாடாக நோக்கப்படாது குறிப்பிட்ட ஒரு இனத்தின் பண்பாடாகக் கருதப்பட்டது. இதனால் இப் பிராந்தியங்களில் ஆதிகாலத்தில் தமிழ்ப் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதை தென்னிலங்கை வரலாற்றாசிரியர்கள் பலரும் ஏற்க முன்வரவில்லை. இந்நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் தொடர்புடைய பூநகரிப் பிராந்தியத்தில் திராவிடருக்குரிய பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் கிடைத்திருப்பதோடு மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட தமிழ்ப் பிராமி வரி வடிவங்களும், ஒரு சில மட்பாண்டச் சாசனங்களும் கிடைத்துள்ளன. இதன் மூலம் பூநகரியிலும் அதையண்டிய தமிழ்ப் பிராந்தியங்களிலும் ஆதியில் தமிழர் நாகரிகம் நிலவியதென்பதை தொல்லியல் அடிப்படையில் நிச்சயப்படுத்த முடிகின்றது.

பூநகரிப் பிராந்தியம் என்பது இலங்கையின் பெருநிலப்பகுதிக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் இடைப்பட்ட கல்முனை தொட்டு ஆலடி வரையிலான ஒடுங்கிய நிலப்பரப்பையும், அதன் தொடர்ச்சியாக மாந்தையில் வட எல்லை வரை அமைந்த மணல் நீட்சிப் பிரதேசத்தையும் குறிப்பதாகும். இதன் அமைவிடம் தமிழ்நாட்டிற்கு மிகக் கிட்டிய தூரத்தில் அமைந்து இருப்பதனால், அங்கு காலத்திற்குக் காலம் ஏற்பட்ட பண்பாட்டலை சமகாலத்தில் இப்பிராந்தியத்திலும் செல்வாக்குச் செலுத்தியதுடன், இலங்கையுடனான அரசியல், வர்த்தக, பண்பாட்டுத் தொடர்புகளுக்கும் இது முக்கிய போக்குவரத்து மையமாகவும் விளங்கியது. இருந்தும் நீண்டகாலமாக தொல்லியலாளரின் கவனத்தை ஈர்க்காத பிரதேசமாகவே இது விளங்கிற்று. 1982 இல் கலாநிதி பொ. இரகுபதி அவர்கள் ஒரு சில இடங்களில் மேற்கொண்ட தொல்லியல் மேலாய்வைத் தொடர்ந்து, அண்மையில் ஆசிரியர் பல இடங்களில் மேற்கொண்ட தொல்லியல் மேலாய்வின் விளைவாக அரிய பல சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இச்சான்றுகள், வடக்கே கல்முனை தொட்டு தென்மேற்கே சோழமண்டலம் வரையான இப்பிராந்தியத்தில் குறுணிக் கற்காலம் (Microlithic Period) தொட்டு ஐரோப்பியர் காலம் வரை தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டு நாகரிகத்தின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது என்பதை நிச்சயப்படுத்த உதவின. இங்கு கிடைத்தது போன்று ஒரு பிராந்தியத்தின் நீண்டகால வரலாற்றை தொடர்ச்சியாக அறிய உதவும் தொல்பொருட் சான்றுகள் இலங்கையில் தமிழ்ப் பிராந்தியத்தின் ஏனைய இடங்களில் கிடைக்கவில்லை எனக் கூறலாம். இவற்றுள் தமிழ் மொழியின் தொன்மையைக் கோடிட்டுக் காட்டும் தமிழ்ப் பிராமிச் சாசனங்கள் பற்றி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கையில் பிராமி வடிவங்கள்

தென்னாசியாவில் பயன்படுத்தப்பட்ட காலத்தால் முந்திய வரிவடிவங்கள் பிராமி என அழைக்கப்படும். இதன் தோற்ற காலம் சிந்துவெளி எழுத்துகளுடன் ஒருசில மட்பாண்டங்களிலும் பொற்தகடுகளிலும் எழுதப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை இதுவரை மூன்று பிராமிச் சாசனங்கள் மட்டுமே கந்தரோடை (மட்பாண்ட சாசனம்), வல்லிபுரம் (பொற்சாசனம்), ஆனைக்கோட்டை (செப்பு – சாசன முத்திரை) போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆனைக்கோட்டையில் கிடைத்த ஈரெழுத்துச் சாசன முத்திரை தமிழ்ப் பிராந்தியத்தில் கிடைத்த முக்கிய சான்றாதாரமாகும். ஆயினும் இதன் வரிவடிவம், வாசகம், மொழி என்பதையிட்டு சாசனவியலாளரிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில் யாழ். குடா நாட்டுடன் இணைந்த பூநகரிப் பிராந்தியத்தில் மண்ணித்தலை, வெட்டுக்காடு, பரமன்கிராய் போன்ற இடங்களில் ஓரிரு வரிவடிவங்களைக் கொண்ட மட்பாண்ட பிராமிச் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது தமிழரது வரலாற்றாய்வில் முக்கிய சம்பவமாகக் கருத இடமளிக்கின்றது. இம்மூன்று இடங்களும் வடக்கே யாழ்ப்பாணப் பரவைக் கடலுக்கும் தெற்கே தமிழ்நாட்டுடன் தொடர்பு கொள்ளக்கூடிய பெருங்கடலுக்கும் இடைப்பட்ட ஒடுங்கிய நிலப்பரப்பில் அமைந்துள்ளன. உயர்ந்த மணல் மேடுகளைக் கொண்ட இதன் பௌதீக அமைப்பு காலத்திற்கு காலம் பருவகால மாற்றத்திற்கும், நீரோட்டத்தின் தாக்கத்திற்கும் உட்பட்டதினால் புராதன கலாசாரப் படைகள் குழம்பிய நிலையில் காணப்படுகின்றன. இதனால் முற்பட்ட கால கலாசார சின்னங்களைக் கூட பிற்பட்ட கால சின்னங்களுடன் அடையாளம் காண வேண்டியுள்ளது. அவ்வாறு அடையாளம் காணப்பட்டவற்றுள் மட்பாண்ட பிராமி வரிவடிவங்கள் சிறப்பாக குறிப்பிடத்தக்கது.

தமிழுக்குரிய தனிச் சிறப்பெழுத்துகள்

தொல்வரி வடிவவியலில் இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை சாசனவியலாளர் பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர். இவ்வொற்றுமை வரிவடிவ அமைப்பில் மட்டுமன்றி தமிழ்ப் பிராமிக்குரிய சில தனித்துவமான வரி வடிவங்களிலும் காணப்படுகின்றது. இதுவரை இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் தமிழ்ப் பிராமிக்குரிய ளகரம், மகரம், ஈகரம் போன்ற எழுத்துகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்ப் பிராமியில் பயன்படுத்தப்பட்ட தமிழ் மொழிக்கே உரிய தனித்துவமான எழுத்துகளான ழகரம், றகரம், லகரம் போன்ற எழுத்துகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆயினும் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இருந்தே இவை பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. இதிலும் அசோகன் ஆட்சியில் தமிழ்நாடு தவிர்ந்த இந்தியாவின் பெரும் பகுதியில் பிராகிருத மொழியை எழுதுவதற்கு இவை பயன்படுத்தப்பட்டன. இதனால் வட பிராமி எனவும், அசோக பிராமி எனவும் இவை அழைக்கப்பட்டன. இதை ஒத்த வரி வடிவங்கள் பல சமகாலத்தில் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டாலும், தமிழ் மொழிக்கே உரிய தனிச் சிறப்பெழுத்துகள் பயன்படுத்தப்பட்டதோடு சாசனங்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டன. இதனால் இச் சாசனங்கள் தமிழ்ப் பிராமிச் சாசனங்கள் என அழைக்கப்பட்டன.

இலங்கை பாரம்பரியமாக இந்தியப் பண்பாட்டின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்ததினால் அங்கு ஏற்பட்ட எழுத்துகளின் தோற்றம் சமகாலத்தில் இங்கும் அறிமுகமாயின. இவை பெரும்பாலும் பிராகிருத மொழியில் பௌத்தமதம் சார்ந்த செய்திகளைக் கூறுவதனால் இவற்றை வட இந்தியாவில் இருந்து பரவிய வரி வடிவங்கள் எனவும், சிங்கள மக்களின் மூதாதையினர் அங்கிருந்து வந்து குடியேறியதற்கு இவையொரு சான்று எனவும் பேராசிரியர் பரணவிதான, கைகர் போன்ற அறிஞர்கள் கூறினர். ஆனால் இங்கு வடபிராமி எழுத்துகள் பரவ முன்னரே தமிழ்ப் பிராமி எழுத்துகள் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரங்கள் உண்டு. அண்மையில் இலங்கையின் காலத்தால் முந்திய வெசகிரி, மிகிந்தலைப் பிராமிக் கல்வெட்டுகளை ஆராய்ந்த கலாநிதி ஆரிய அபயசிங்கா, இவற்றில் உள்ள பல எழுத்துகள், பௌத்த மதத்துடன் வடபிராமி எழுத்துகள் இங்கு பரவ முன்னர் தமிழ்நாட்டில் இருந்து சமண மதத்துடன் பரவிய திராவிட எழுத்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வெழுத்துகள் வடபிராமி எழுத்துகளின் செல்வாக்கால் படிப்படியாக மறைந்து போனாலும் அவை முற்றாக மறைந்து போகாது பிற்காலத்தில் தொடர்ந்து இருந்தன என்பதற்கு கி.பி. 2 ஆம் 3 ஆம் நூற்றாண்டுப் பிராமிக் கல்வெட்டுகள் சான்றாகும். பேராசிரியர் ரி.வி. மகாலிங்கம் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் வரும் தமிழ்ப் பிராமி வரிவடிவங்களைச் சுட்டிக்காட்டி இக் கல்வெட்டுக்களை நுணுக்கமாக ஆராய்ந்தால் அவற்றில் பல தமிழ்ப் பெயர்கள் இருப்பதை அவதானிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட தொல்லியல் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்துதான் ஓரிரு பிராமி எழுத்துகளைக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன. இவ்வளவு பெருந்தொகையான மட்பாண்ட வரிவடிவங்கள் ஒரேயிடத்தில் அதுவும் தொல்லியல் மேலாய்வின் போது இலங்கையின் ஏனைய பாகங்களில் கிடைத்ததாகக் கூறமுடியாது. இவை தமிழ்நாடு அரிக்கன் – மேட்டில் கண்டு பிடிக்கப்பட்டவையை நினைவுபடுத்துவதாக உள்ளன. இவ் வரி வடிவங்கள் மட்பாண்டத்தில் வெளிப்புறங்களில் மட்டுமன்றி உட்புறத்திலும், பானையின் உட்புற விளிம்புகளிலும் தெளிவாக எழுதப்பட்டிருப்பது, இதுவரை இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டச் சாசனங்களில் இருந்து சற்று வேறுபாடாகக் கொள்ள வைக்கின்றது. சாதாரண மக்களின் பாவனைப் பொருட்களான மட்பாண்டங்களில் இவ்வெழுத்துகள் காணப்படுவது ஆதியில் எழுத்து வாசனை உடைய தமிழ் மக்கள் இங்கு வாழ்ந்துள்ளனர் என்பதை உறுதி செய்வதாக உள்ளது. சிந்துவெளி நாகரிகத்தில் உள்ள தொல்லியல் சின்னங்களிலும், பொருட்களிலும் எழுத்துகள் காணப்படுவதால் அங்கு வாழ்ந்த சாதாரண மக்களும் எழுத்து வாசனை உடையவர்களாக விளங்கினர் எனப் பேராசிரியர் ஏ.எல். பசாம் கூறிய கருத்து இங்கு ஒப்பிட்டு நோக்கத்தக்கது.

வேள் அல்லது வேளான்

பொதுவாக பூநகரிப் பிராந்திய மேலாய்வில் கிடைத்த பெரும்பாலான சாசனங்கள் உடைந்த நிலையில் காணப்பட்டாலும், அவற்றுள் பரமன்கிராய், மண்ணித்தலை ஆகிய இடங்களில் கிடைத்த மூன்று சாசனங்கள் தமிழ்ப் பிராந்திய வரலாற்றாய்வில் முக்கிய வரலாற்று ஆதாரங்களாகக் கொள்ளத்தக்கன. இவற்றுள் பரமன்கிராயில் கிடைத்த முதலாவது சாசனம் கி.மு. 3 ஆம் 2 ஆம் நூற்றாண்டுக்குரியவை என்பதை எழுத்தமைதியில் இருந்து நிச்சயித்துக் கொள்ளலாம். இதில் மூன்று எழுத்துகள் காணப்பட்டாலும் முதலிரு எழுத்துகளையும் தெளிவாக வாசிக்க முடிகின்றது. இதை வேள் அல்லது வேள என வாசிக்கலாம். இதில் உள்ள மூன்றாம் எழுத்தை ‘த்’ அல்லது ‘து’ என வாசிக்கலாம் போல் தெரிகின்றது. ஆனால் இச்சாசனத்தை அண்மையில் வாசித்த தமிழ்நாட்டின் முதன்மைச் சாசனவியலாளரான ஐராவதம் மகாதேவன் அவர்கள் மூன்றாவது எழுத்து தலைகீழாக இருப்பதனால் அதை தமிழ்மொழிக்குரிய ‘ன’வாகக் கொண்டு இச்சாசனத்தை ‘வேளான்’ என வாசித்துள்ளார். இச் சாசனத்தில் உள்ள இரண்டாவது பிராமிச் சாசனம் ஒன்றில் தமிழுக்குரிய ‘ழகரம்’ இருப்பதாகச் சுட்டிச் காட்டியுள்ளனர். இதை ழகரமாக கொள்வதே பொருத்தமாகத் தெரிகின்றது. இதை ழகரமாகக் கொண்டாலும் இதையொத்த வடிவ அமைப்பில் ‘ழகரம்’ தமிழ்நாட்டுப் பிராமிச் சாசனங்களில் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரமில்லை.

பூநகரிப் பிராந்தியத்தில் உள்ள மண்ணித்தலை, வெட்டுக்காடு, பரமன்கிராய் போன்ற இடங்களில் கிடைத்த மட்பாண்ட பிராமி – வரிவடிவங்கள் வடிவ அமைப்பில் தமிழ்ப் பிராமி எழுத்துகளையும் தமிழ்ப் பிராமியில் பயன்படுத்தப்பட்ட ளகரம், மகரம், ஈகரம் போன்ற வரிவடிவங்களையும் கொண்டிருப்பதோடு தமிழ் மொழிக்கேயுரிய சிறப்பெழுத்தான ழகரம், றகரம், னகரம் எழுத்துகளையும் கொண்டிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இதில் தமிழ் மொழிக்குரிய மூன்று சிறப்பெழுத்துகளும் மண்ணித்தலையில் ஒரே இடத்தில் கிடைத்திருப்பது இங்கே சிறப்பாக நோக்கத்தக்கது.

இங்குதான் அண்மையில் எமது ஆய்வின் போது சோழர் காலத்திற்குரிய சிவாலயம் ஒன்றும் இடிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாலயத்திற்கு கிழக்கே சற்றுத் தூரத்தில் மழைக் காலத்தில் நீரோடும் பள்ளமான நிலத்தில் பல்வேறு காலப் பகுதிக்குரிய அரிய பல சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறுணிக் கற்காலப் பண்பாட்டிற்குரிய (Mesolithic Culture) குவாட்ஸ் (Quartz) கல்லாயுதங்களும், பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய (Megalithic Culture) கறுப்பு – சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகள் (Black and Red Pottery), தனிக் கறுப்பு – சிவப்பு நிறம் கொண்ட மட்பாண்டங்கள், தாழிகளின் உடைந்த பாகங்கள், சுடுமண் அகல் விளக்குகள் கெண்டியுடன் கூடிய முழுப்பானை (Spouted Pot), ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்ட ஓடுகள், மட்பாண்டக் குறியீடுகள், பல்வேறு வகையான இரும்பாயுதங்கள், இரும்பினாலான வேல் – சேவல் சின்னங்கள், பல்வேறு மணி வகைகள் என்பனவும் சற்றுப் பிற்பட்ட கால புராண – லக்க்ஷிமி ரோம நாணயங்களும், ரோம – அரேபிய மட்பாண்ட ஓடுகளும், மதுச்சாடி என்பனவும் இங்கே கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச் சான்றுகள் அனைத்தும் இங்கு தொன்மையான குடியிருப்புகள் இருந்ததை உறுதி செய்வதோடு அக்காலத்தில் இம்மக்கள் தமிழ்நாட்டுடனும் பிற அயல் நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்பதும் தெரிய வருகின்றது.

‘ள’ தமிழ்ப் பிராமியில் காணப்படும் தனிச் சிறப்பெழுத்தாகும். இதை அசோகப் பிராமியில் காண முடியாது. இற்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வவுனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டில் இவ்வெழுத்தை அவதானித்த பொறியியலாளரான பாக்கர் இது திராவிடர் இங்கு வாழ்ந்ததற்கு ஒரு சான்று என்றார். ஆனால் இதை ஏற்காத பேராசிரியர் பரணவிதான அதனை அசோக பிராமிக்குரிய ‘ல’ வாகக் கருதி இலங்கைப் பிராமிக் கல்வெட்டில் வரும் பெயர்களை ‘வேல’ அல்லது ‘வேலு’ என வாசித்துள்ளார். ஆனால் பிற்காலத்தில் கருணாரத்தின போன்றோர் பரணவிதானவின் வாசிப்பு பிழை எனச் சுட்டிக்காட்டி இது தமிழ்ப் பிராமிக்குரிய ‘ள’ என வாசித்துள்ளனர்.

தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டில் வேள் என வரும் பெயர்களை வாசித்த அறிஞர் பலரும் இவை சங்க காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த வேளீர் எனப்பட்ட குறுநில மன்னர்களைக் குறித்ததென்பர். இந்த வேள் பன்மையில் வேளீர் எனப்பட்டது. இவர்களைச் சங்க இலக்கியம் ‘தென்முடி வேளீர், முதுகுடி வேளீர், வேந்தரும் வேளீர்’ எனப் பலவாறு விபரிக்கின்றது. தமிழ் நாட்டில் பிற்காலத்தில் தோன்றிய வேள்நாடு கூட இவர்கள் வழியால் தோன்றிய ஒன்றாகும். பரமன்கிராயில் கிடைத்த மட்பாண்டச் சாசனத்தை வாசித்த அறிஞர் ஐராவதம் மகாதேவன் கூட கி.மு. 3 ஆம் 2 ஆம் நூற்றாண்டுகளில் சங்ககாலத்தைப் போல பண்டைய யாழ்ப்பாணத்தில் தமிழ் வேளீர் அல்லது வேளார் என்போர் குடியேறியிருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். இக்கூற்றானது சங்ககாலத்தைப் போல் இங்கும் வேளீர் என்ற பெயருடைய குறுநில மன்னரின் ஆட்சியிருந்திருக்கலாம் எனக் கருத இடமளிக்கின்றது. அத்துடன் சங்க இலக்கியத்தில் வரும் வேள் என்ற பெயர் முதன்முறையாக மட்பாண்டச் சாசனத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது தமிழ் வரி வடிவத்தினதும் சங்க இலக்கியத்தினதும் தொன்மையை ஆராய்வதற்கு முக்கிய சான்றாதாரமாகக் கொள்ளத்தக்கது.

ஈழம்

மண்ணித்தலையில் கிடைத்த இரண்டு மட்பாண்டச் சாசனங்கள் தமிழ்ப் பிராந்திய வரலாற்றாய்வில் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகின்றது. இவ்விரு சாசனங்களும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திற்குரியவை என்பதை இவற்றின் எழுத்தமைதியில் இருந்து  கணிப்பிட்டுக் கொள்ளலாம். இவற்றுள் இரண்டு எழுத்துகளை உடைய முதலாவது சாசன மட்பாண்டம் உடைந்த நிலையில் இருந்தாலும் இரு எழுத்துகளுக்கு இடையிலான இடைவெளியை நோக்கும்போது வேறு எழுத்து இச்சாசனத்திற்கு அருகே இருந்திருக்க முடியாது போல் தெரிகின்றது. இதனால் இதையோர் முழுச் சாசனமாக எடுத்துக் கொள்ளலாம். இதன் முதலாவது எழுத்திற்கு ‘ஈ’ என்ற ஒலிப் பெறுமானமும், இரண்டாம் எழுத்திற்கு ‘ல’ என்ற ஒலிப் பெறுமானமும் கொடுத்து ‘ஈல’ அல்லது ‘ஈலா’ என வாசிக்க முடிகின்றது.

மூன்று எழுத்துகளை உடைய இரண்டாவது சாசனம் உடைந்த நிலையில் இருப்பதால் இதையோர் முழுச் சாசனம் எனக் கொள்ள முடியாது. இதன் முதல் எழுத்திற்கு ‘ஈ’ என்ற ஒலிப் பெறுமானமும் இரண்டாவது எழுத்திற்கு ‘ழ’ என்ற ஒலிப் பெறுமானமும் கொடுத்து ‘ஈழ’ என வாசிக்கலாம். மூன்றாவது எழுத்து உடைந்த நிலையில் சிறுகோட்டை மட்டும் கொண்டிருப்பதால் அவ்வெழுத்து என்ன என்பதை நிச்சயப்படுத்திக் கூற முடியாதிருக்கிறது. இவ்விரு சாசனங்களிலும் வரும் ‘ஈலா, ஈழ’ என்ற பெயர்களை நோக்கும் போது இவை சங்க இலக்கியத்திலும், திருப்பரங்குன்றப் பிராமிக் கல்வெட்டிலும் வரும் ‘ஈழம்’ என்னும் இலங்கையின் புராதனப் பெயரையே குறிப்பதாகக் கருத இடமளிக்கின்றது. அக்கால உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத்தில் பொருட்களின் கொள்கலன்களாக மட்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டதால், அப் பொருட்களுக்குரிய நாடுகளின் பெயரைக் குறிக்க அக் கொள்கலன்களில் நாடுகளின் பெயர்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதையே மண்ணித்தலையில் கிடைத்த சாசனங்களும் உணர்த்துவதாகத் தெரிகின்றது.

ஈழம் என்னும் இப் பண்டையப் பெயர் பூநகரியில் தொடர்ந்தும் புழக்கத்தில் இருந்து வருகின்றது என்பதற்கு அங்குள்ள ‘ஈழ ஊர்’ என்னும் புராதனக் கிராமம் ஒரு சிறந்த சான்றாகும். இவ்விடம் பாண்டியரோடு தொடர்புடைய வீரபாண்டியன் முனைக்கும், சோழரோடு தொடர்புடைய பல்லவராயன் கட்டுக்கும் இடையில் அமைந்துள்ளது. போர்த்துக்கேயர் தமது ஆட்சியில் ஈழ ஊரிலும் ஒரு கத்தோலிக்கத் தேவாலயம் கட்டியதாக தமது ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். 1911 ஆம் ஆண்டில் எழுதி முடிக்கப்பட்ட கந்தபுராண ஏட்டில், தற்போது பொன்னாவெளியில் வசிக்கும் ஐந்து தலைமுறைக்கு முற்பட்டோர் ஈழ ஊரில் வசித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் ஈழ ஊரில் தான் திருவாலங்காட்டு சாசனத்தில் கூறப்பட்டுள்ள ஈழத்தில் உள்ள புலச்சேரி என்ற இடத்தை நாம் அடையாளம் கண்டுள்ளோம். இச் சான்றுகள் அனைத்தும் ஈழ ஊர் என்ற பெயர் இக் கிராமத்திற்குப் பாரம்பரியமாக இருந்து வந்ததை உறுதிப்படுத்துகின்றன.  பண்டைய காலத்தில் இலங்கை ஈழம், தம்பபன்னி, தாமரபர்னி, லங்கா எனப் பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள. இவற்றுள் ஈழம் தவிர்ந்த ஏனைய பெயர்களை இந்திய இலக்கியங்களும், வெளிநாட்டார் குறிப்புகளும், ஈழத்துப் பாளி – சிங்கள இலக்கியங்களும், கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன. ஆனால் தமிழ்நாட்டு  வரலாற்று மூலங்களில் மட்டும் வரும் ஈழம் பற்றி ஏனைய சான்றுகள் உறுதி செய்யவில்லை. உண்மையில் ஈழம் என்பது முழு இலங்கையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்குமாயின் இலங்கை வரலாற்று மூலங்களில் அவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதனால் இந்த ஈழம் இலங்கையின் ஒரு பாகத்தைக் குறித்ததா என்ற கேள்வி எழுகின்றது. சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் ஈழத்து உணவு பற்றியும் திருப்பரங்குன்ற பிராமிக் கல்வெட்டில் ஈழக் குடும்பிகன் பற்றியும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. பத்தாம் நூற்றாண்டு இராஜராஜசோழன் கல்வெட்டில் வரும் ‘முரட்டொழில் சிங்கள ஈழ மண்டலம்’ என்ற ஆதாரம் இதை மேலும் வலியுறுத்துகின்றது. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு வட இலங்கையை ஈழம் எனவும், விஜயநகரக் கல்வெட்டு யாழ்ப்பாணத்தை ஈழம் எனவும் கூறுகிறது. இவைகளுக்குச் சற்றுப் பிற்பட்டகால நன்னூல் மயிலநாதர் உரையில் தமிழ்நாட்டைச் சூழவுள்ள நாடுகளாக ஈழமும் சிங்கள தேசமும் தனித் தனியே கூறப்பட்டுள்ளன. சில சான்றுகளில் இந்த ஈழம் முழு இலங்கையையும், சிங்கள மக்கள் வாழ்ந்த பகுதியையும் குறித்தன. ஒரே வரலாற்று மூலத்தில் ஒரு இனத்தின் பெயரால் ஒரு நாட்டைக் கூறி, அதே வரலாற்று மூலத்தில் ஈழமும் கூறப்படுவதை நோக்கும் போது ஈழத்தை இலங்கையின் ஒரு பாகமாகக் கருத இடமளிக்கின்றது. இதற்குப் பூநகரியில் கிடைத்த ஈழம், ஈழ ஊர் பற்றிய சான்றுகள் துணையாக உள்ளன. இங்குள்ள ‘ஈழ வள நகருக்கும்’ தமிழ்நாட்டு கருங்காலக்குடி பிராமிக் கல்வெட்டில் வரும் ‘ஏழை வள நகருக்கும்’ தொடர்பு இருக்கலாம் போல் தெரிகிறது.

முடிவுரை

மண்ணித்தலை, வெட்டுக்காடு, பரமன்கிராய் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பூநகரிப் பிராந்தியத்தில் கிடைத்த தமிழ்ப் பிராமிச் சாசனங்கள் புகை படர்ந்த நிலையில் உள்ள இலங்கைத் தமிழரின் புராதன வரலாற்றிற்கு ஓரளவு வெளிச்சமூட்டும் சான்றுகளாக கொள்ளத்தக்கன. புராதன இலங்கையில் அரசியலிலும் பண்பாட்டிலும் தமிழர்கள் செல்வாக்குப் பெற்றிருந்ததை பாளி இலக்கியங்களும் ஆதிப் பிராமிக் கல்வெட்டுகளும் ஓரளவு எடுத்துக் கூறுகின்றன.

இலங்கையில் தமிழ், சிங்கள மன்னர்களிற்கிடையிலான போராட்டத்தை இனப் போராட்டமாக சித்திரித்துக் கூறும் மகாவம்சமே கிறிஸ்துவுக்கு முன்னர் எண்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழர்கள் ஆட்சி புரிந்ததாகக் கூறுகின்றது. இக்கூற்றானது இக் காலப்பகுதியில் தமிழரின் மேலாதிக்கம் இங்கு நிலவியதென்பதை எடுத்துக் காட்டுகின்றது. இருந்தும் இச்சான்றுகள் தமிழரின் பாரம்பரிய வரலாற்றை தொடர்ச்சியாக எடுத்துக் கூற உதவவில்லை. மாறாகத் தமிழ்நாட்டுடன் கொண்ட அரசியல், வர்த்தகத் தொடர்பு அவ்வப்போது தமிழர்கள் இங்கு வந்து முக்கிய நகரங்களிலும் துறைமுகங்களிலும் குடியேற வழிவகுத்தது எனவும், உண்மையான தமிழ்க் குடிகளின் பெருக்கம் இங்கு சோழராட்சி ஏற்பட்டதன் பின்னரே நடந்ததெனவும் வாதிட வழி வகுத்தது. இதற்கு தமிழர்கள் பற்றிய சான்றுகள் இன்று சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களோடு தொடர்புடையதாக இருந்தமை காரணமாக இருக்கலாம்.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு கிட்டிய தூரத்தில் நேர் எதிரே அமைந்த பூநகரிப் பிராந்தியத்தில் தமிழ்ப் பிராமிச் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை இங்கு தொன்மையான தமிழர் நாகரிகம் இருந்ததென்பதற்குச் சான்றாகும். இது அநுராதபுர அரசின் மீது மேற்கொண்ட தமிழர் படையெடுப்புகளை, தமிழ்நாட்டுடன் மட்டும் தொடர்புபடுத்தாது இலங்கையில் உள்ள தமிழ்ப் பிராந்தியங்களுடனும் தொடர்புபடுத்தி ஆராய வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டுகின்றது எனலாம்.


ஒலிவடிவில் கேட்க

3523 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)