தமிழர்களின் வாழ்க்கைமுறையும் காலநிலையும்
Arts
10 நிமிட வாசிப்பு

தமிழர்களின் வாழ்க்கைமுறையும் காலநிலையும்

December 12, 2023 | Ezhuna

ஒரு பிரதேசத்தின் பல்வேறு விடயங்களை கட்டமைப்பதில் அந்தப் பிரதேசத்தின் இயற்கை அம்சங்கள் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றன. குறிப்பாக ஒரு பிரதேசத்தின் காலநிலை சார்ந்த அம்சங்கள் அந்தப் பிரதேசத்தினுடைய இயற்கையையும் அந்த பிரதேசத்திற்குரிய பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களையும் கட்டமைப்பதில் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றது. அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தினுடைய பல்வேறு வகைப்பட்ட விடயங்களை தீர்மானித்ததில் வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை மிகப்பெரிய செல்வாக்கினை பெற்றிருக்கின்றது. வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை சார்ந்த பாரம்பரிய அறிவியல் விடயங்களையும் நவீன விஞ்ஞான ரீதியிலான ஆய்வு சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கியதாக வடக்கு மாகாணத்தினுடைய காலநிலைப் பண்புகளை முழுமைப்படுத்தி வெளியிடுவதாக ‘பிராந்திய காலநிலையியல் : வடக்குப் பிராந்தியம், இலங்கை‘ எனும் தொடர் அமைகின்றது.

வடக்கு மாகாண மக்கள், குறிப்பாக தமிழர்கள், காலநிலையுடன் இணைந்ததாகவே தங்களுடைய வாழ்க்கை முறைமைகளை கட்டமைத்துள்ளார்கள். மிக நீண்ட காலமாகவே காலநிலையினால் கட்டுப்படுத்தப்பட்டவர்களாக இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையைப் பேணி உள்ளார்கள். தங்களுடைய அன்றாட நடவடிக்கைகள், கொண்டாட்டங்கள், பண்டிகைகள், விவசாய மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், தொழில் சார்ந்த நடவடிக்கைகள் போன்ற செயற்பாடுகளை காலநிலையுடன் இணைந்ததாகவே மேற்கொண்டுள்ளார்கள். வானிலைச் செல்வாக்குகளுக்கு அதிகளவு உட்பட்ட மக்களாக இவர்கள் காணப்பட்டிருக்கின்றார்கள். இன்றும் நிலவுகின்ற பல்வேறு வகைப்பட்ட வாழ்க்கை முறைகள், பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், கொண்டாட்ட நடைமுறைகள் போன்ற விடயங்களில் வானிலைக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்து கொண்டவர்களாக வடக்கு மாகாண மக்கள் காணப்படுகின்றனர். முக்கியமாக உணவு, உடை, ஏனைய பழக்க வழக்கங்கள், கலாச்சாரக் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள் போன்ற விடயங்களில் வானிலை அதிகளவு முக்கியத்துவம் பெற்றிருப்பதை அறிய முடிகின்றது. மக்கள் தங்களுடைய பண்டிகைகளின் கொண்டாட்ட முறைமைகளை, நிலவுகின்ற வானிலைக்கு ஏற்ற வகையிலேயே ஏற்பாடு செய்து கொண்டாடியிருக்கின்றார்கள்.

கொண்டாட்ட முறைகள்

அந்த அடிப்படையில், ஒரு ஆண்டின் மிக முக்கியமான காலப்பகுதி என்று அழைக்கப்படுகின்ற தைப்பொங்கல், சித்திரை வருடப் பிறப்பு, ஆடிப்பிறப்பு போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதில் காலநிலையின் செல்வாக்கு இருப்பதைக் காணமுடிகின்றது. குறிப்பாக, தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கும் ஆடிப்பிறப்பு கொண்டாட்டத்திற்கும் இடையில் மிகப்பெரியளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த அடிப்படை வேறுபாடுகளை உணர்ந்து பெரும்பாலான தமிழர்கள், தைப்பொங்கலை ஆண்டின் முதல் நாளாக சில சிறப்பியல்புகளோடு கொண்டாடுகிறார்கள்.

pongal

தைப்பொங்கல் என்பது மகரக்கோட்டில் இருந்து கடக கோட்டிற்கு சூரியனுடைய நகர்வை குறிப்பதாகும். பூமி ஒரு தடவை சூரியனை சுற்றி வருவதற்கு 365 1/4 நாட்களை எடுத்துக் கொள்கின்றது. அதேபோன்று பூமி தன்னைத்தானே சுற்றுவதற்கு 23 மணித்தியாலங்களும் 54 நிமிடங்களையும் எடுத்துக் கொள்கின்றது. இந்த பூமியினுடைய சுழற்சி, சுற்றுகையை அடிப்படையாக வைத்து தமிழர்கள் தங்களுடைய பண்டிகைகளை உருவாக்கியிருக்கின்றார்கள். வானியல் ரீதியாக மகரக்கோட்டில் இருந்து கடகக் கோட்டுக்கு சூரியன் செல்லுகின்ற அந்த முதலாவது நாளை தைப்பொங்கல் ஆகவும் கடகக் கோட்டில் இருந்து, திரும்ப மகரக் கோட்டிற்கு சூரியன் செல்கின்ற அந்தக் காலப்பகுதியை ஆடிப்பிறப்பாகவும், எமது முன்னோர்கள் கொண்டாடி இருக்கின்றார்கள். இரண்டிற்குமான வானிலை வேறுபாடுகளை உணர்ந்து, அதற்கு ஏற்ற வகையில் தங்களுடைய வாழ்க்கை முறைமைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில், பண்டிகைகளை கொண்டாடும் நடைமுறைகளிலும் மாற்றங்களைச் செய்திருக்கின்றார்கள். தட்சணாயன காலத்தில் இருந்து உத்திராயண காலம் நோக்கிய சூரியனின் நகர்வையும், உத்திராயண காலத்திலிருந்து தட்சணாயன காலத்தை நோக்கிய சூரியனின் நகர்வையும் வேறுபடுத்தி, அவற்றினால் ஏற்படுகின்ற வானிலை நிலைமைகளையும் வேறாக உணர்ந்து, ஆடிப்பிறப்பை கொண்டாடுவதற்கான முறையையும் தைப்பொங்கலை கொண்டாடுவதற்கான முறையையும் வேறுவேறாக அமைத்திருக்கின்றார்கள். தைப்பொங்கல் என்பது அறுவடை செய்ய ஆரம்பிக்கின்ற காலமாக காணப்படுகின்றது. மிக நீண்ட நாட்களாக நிலவிய மழையுடன் கூடிய வானிலை மாற்றமடைந்து, படிப்படியாக மழை குறைவடைந்து, தெளிவான வானத்துடன் கூடிய வானிலை நிலவத் தொடங்கும். இக் காலம், அதிகளவிலான அறுவடைகள் கிடைக்கின்ற காலம் என்பதனால், அந்த அறுவடையை சிறப்பாக ஏற்பாடு செய்து தந்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காக தைப்பொங்கலை பொங்கல் வைத்துக் கொண்டாடுவார்கள். தங்களுடைய நிலங்களில் விளைந்த நெல்லைக் கொண்டு பொங்கலிட்டு, அந்தப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து, நன்றி செலுத்தி வழிபட்டு, அதற்குப் பின்னான ஆறு மாத காலங்களையும் அதற்கேற்ற வாழ்க்கை முறையோடு கொண்டாடுவார்கள். ஆனால் ஆடிப்பிறப்பு என்பதை அதற்கு நேர் எதிரான முறையில் கொண்டாடுவார்கள். ஆடிப்பிறப்பை மழையுடன் கூடிய வானிலை தொடங்கும் காலமாக வரையறுத்து அதனை எதிர்கொள்ள தங்களை தயார்ப்படுத்தும் செயற்பாடுகளைத் தொடங்குவார்கள். ஆடிப்பிறப்பு என்பது, வயல் நிலங்களை உழுது பண்படுத்தி விதைத்தல் செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டிய காலம். அதனை அரிசிமாவினால் செய்யப்பட்ட பலகாரங்களை வைத்துப் படைத்து வணங்கிக் கொண்டாடுவார்கள். அன்று பண்டிகையில் எதை பிரதான உணவாக உட்கொள்கிறார்களோ அதையே அதற்கு பிற்பட்ட ஆறு மாத காலப் பகுதிகளிலும் உட்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தைப்பொங்கலுக்கு பொங்கலையும் ஆடிப்பிறப்புக்கு கொழுக்கட்டை, மோதகம், ஆடிக்கூழ் போன்ற மாவினாலான பலகாரங்களையும் செய்து கொண்டாடுவார்கள். ஆடிப்பிறப்பில் மாவினாலான பலகாரங்களை செய்து வழிபடுவதற்கான பிரதானமான காரணி யாதெனில், அவர்கள் அதற்கு பிற்பட்ட ஆறு மாத காலமும் தங்களுடைய வயல் நிலங்களில் மிகக் கடுமையாக உழைத்து தங்களுடைய வயலை விளைவிக்க வேண்டிய தேவை ஏற்படும். இதனால் மூன்று நேரமும் உணவை உட்கொள்ள முடியாது. போதுமான உணவும் கையிருப்பில் இருக்காது. வயலில் இருந்து வீட்டுக்கான தூரம் கூடுதலாக இருக்குமானால் வயலில் இருந்து வீட்டுக்கு வர முடியாது. இதனால், காலையில் எடுத்துச் சென்ற மாப்பண்டத்தை மாலை வரைக்கும் உண்டு கழிப்பது வழக்கமாகும். இதனைச் சமாளிக்கவே ஆடிப்பிறப்பிற்கு கொழுக்கட்டை, மோதகம், ஆடிக்கூழ் போன்ற பலகாரங்களைச் செய்கிறார்கள்.

aadipirappu

தமிழர்களுடைய பாரம்பரியமான ஆடை முறைகளிலும், அணிகலன்களிலும் வானிலை செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றது. அவர்களுடைய ஆடைகளும் அணிகலன்களும் வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக, வெள்ளை நிறத்திலான ஆடைகளையும் பருத்திப்பஞ்சு போன்றவற்றினால் உருவாக்கப்பட்ட ஆடைகளையும் தமிழர்கள் விரும்பி அல்லது மிக நீண்ட காலமாக அணிவதற்கு தம்மை தயார்ப்படுத்திக் கொண்டமைக்கு, அவர்களுடைய பிரதேசத்தில் நிலவுகின்ற வரண்ட வானிலையை பிரதானமான காரணமாகக் குறிப்பிடலாம்.

நவராத்திரியின் முதல் நாள், கும்பம் வைப்புக் காலம் எனவும் இறுதி நாளான விஜயதசமி, கும்பம் சரிக்கும் காலம் எனவும் வகுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள், குறிப்பாக இந்துக்கள் மத்தியில் கும்பம் வைக்கும் நாள் அன்று அல்லது கும்பம் சரிக்கும் நாள் அன்று மழை கிடைக்கும் என்ற எண்ணம் காணப்படுகின்றது. இந்த நீண்ட கால நம்பிக்கையில், உண்மை தன்மை இருப்பதினையும் அறிந்து கொள்ள முடிகின்றது. கும்பம் வைக்கும் காலம் அல்லது கும்பம் சரிக்கும் காலம், இரண்டாவது இடைப்பருவத்தின் உச்ச மழைக்காலமாகவோ அல்லது வடகீழ் பருவக் காற்று ஆரம்பிக்கும் நாளாகவோ இருப்பது வழமையாகும். கும்பம் வைக்கும், கும்பம் சரிக்கும் காலப் பகுதிகளில் மழை கிடைப்பதை, கடந்த காலத்தில் அவதானிக்கப்பட்ட நிகழ்நேர மழை வீழ்ச்சித் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில் 6 ஆண்டுகள் தவிர ஏனைய 24 ஆண்டுகளிலும் கும்பச்சரிப்பு, கும்பம் வைக்கும் காலப்பகுதிகளில் வடக்கு மாகாணத்திற்கு மிதமானது முதல் கனமானது வரையான மழை கிடைத்திருப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. தமிழர்களின் நம்பிக்கை, விவசாயத்தினையும் அதனோடு இணைந்த விதைப்புச் செயற்பாட்டுக்கான ஆரம்பகால பண்படுத்தல் நடவடிக்கையினையும் திட்டமிடுவதற்கான அடிப்படையாக அமைகின்றது. இந்தக் காலப்பகுதியில் கிடைக்கும் மழையின் தொடர்ச்சியாக, பெரும்பாலான விவசாயிகள், குறிப்பாக வன்னிப் பிராந்தியத்தில் இருக்கின்ற விவசாயிகள் தங்களுடைய புழுதி விதைப்பு போன்ற விதைப்புச் செயற்பாட்டினை மேற்கொள்வது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். 

திருவிழா நடைமுறைகள் 

வடக்குத் தமிழ் மக்கள் தங்களுடைய கோவில் திருவிழாக்களை காலநிலையோடு இணைந்ததாகவே கொண்டாடி வந்திருக்கின்றார்கள். ஒரு ஆண்டின் ஆறு மாதத்தை தெளிவான கோடை மாதங்களாகவும் அடுத்து வருகின்ற ஆறு மாதங்களை தெளிவான மாரி மாதங்களாகவும் வரையறுத்துள்ளனர். இதனால் தான் தைப்பொங்கல் பண்டிகைக்கும் ஆடிப்பிறப்பு பண்டிகைக்குமான கொண்டாட்டச் செயற்பாடுகள் வேறுபடுத்தப்பட்டிருக்கின்றன என்பதை ஏலவே கண்டோம். கோவில் திருவிழாக்களை கோடை காலங்களில் அதாவது தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் அல்லது முதலாவது இடைப்பருவ காலங்களிலேயே கொண்டாடி இருக்கின்றார்கள். இதற்கான மிகப் பிரதானமான காரணம், இக்காலப் பகுதியில் வடக்கு மாகாணத்தில் மழைவீழ்ச்சி குறைவாக இருப்பதால் காலநிலையால் எந்தவிதமான இடையூறும் ஏற்படாது என்ற நம்பிக்கையே ஆகும். தமிழர்கள் தங்களுடைய திருவிழாக்களின் இறுதி நாளில் தீர்த்தம் என்று ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். தீர்த்தோற்சவம் என்ற பெயரில் ஆலயத்தில் உள்ள கேணிகள் மற்றும் கிணறுகள் யாவும் துப்புரவாக்கப்பட்டு, சேறும் சகதியும் அள்ளப்பட்டு, ஆலயத்தினுடைய தீர்த்தக்கேணி சுத்தமான நிலையில் வைக்கப்பட்டிருக்கும். இதற்குப் பின்னர் கிடைக்கின்ற இரண்டாவது இடைப்பருவகால மழையும் வடகீழ்ப் பருவக்காற்று மழையும் கேணிகள் முழுவதும் நிரம்பி அந்தப் பிரதேசத்தினுடைய தரைக்கீழ் நீர் வளத்தை மேம்படுத்துவதாக அமைகின்றது. வடக்கு மாகாணத்தில் உள்ள ஆலயங்களில் பெரும்பாலான கேணிகளின் புறக்கட்டு நில மட்டத்தோடு இணைந்ததாகவே காணப்படும். கேணியைச் சுற்றி இருக்கின்ற பகுதிகளுக்கு கிடைக்கின்ற மழைநீர், எந்த விதமான தடைகளுமற்று கேணிக்குள் வந்து விழவேண்டும் என்ற எண்ணமே இதற்கான பிரதான காரணம். இதனால் தான் பெரும்பாலான கோவில் கிணறுகள் அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்திற்கு குடிநீரை வழங்குகின்ற கிணறுகளாகவும் இருக்கின்றன. தமிழர்கள் தங்களுடைய பண்டிகைகளில், காலநிலையோடு இணைந்த செயற்பாடுகளை வாழ்க்கை முறைமைகளாகப் பேணியிருந்தார்கள் என்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான உதாரணம்.

karumpaavali

வடக்கு மாகாணத் தமிழர்கள் வடகிழக்கு திசையினை ‘மாரிகுடா’ என்ற பெயரினால் அழைப்பார்கள். மழை ஏனைய திசைகளில் இருந்து வருவதாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் ஓய்ந்துவிடும் எனவும் மாரிகுடா என்று அழைக்கப்படுகின்ற வடகிழக்கு திசையிலிருந்து மழை தொடங்கினால் அந்த மழை நீடிக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடையே காணப்படுகின்றது. நடைமுறையில் வடகீழ் பிரதேசங்களில் இருந்தே பருவக்காற்று வீசலோடு மழை தொடங்குவதனால், அப்பகுதியில் மழை ஆரம்பிப்பதை அல்லது அப்பகுதியின் மேகக் குவியல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு ‘மாரிகுடா’விலிருந்து வருகின்ற மழை தொடர்ச்சியாக கிடைக்கும் என்ற நம்பிக்கையை தமிழர்கள்  வைத்திருக்கின்றார்கள். இன்றும் கூட சில வயதானவர்கள் முகிலின் தோற்றம் எங்கே உருவாகின்றது அல்லது எந்த திசையில் உருவாகின்றது என்பதை வைத்துக்கொண்டு மழையின் செறிவை, அதன் தீவிரத்தை கணிப்பிடுவது வழக்கமாகும். 

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

10426 பார்வைகள்

About the Author

நாகமுத்து பிரதீபராஜா

கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார். காலநிலையியலில் தனது கலாநிதி பட்டத்தினை பூர்த்தி செய்த பிரதீபராஜா காலநிலையியல் தொடர்பான பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை பற்றியும் பொதுவான காலநிலை அம்சங்கள் தொடர்பாகவும் 07 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 40 இற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரித்துள்ளார். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, வடக்கு மாகாணத்தினுடைய வானிலை தொடர்பான இவரது எதிர்வு கூறல்களை பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)