வவுனியா நகரின் வடகிழக்கில் 13 கி.மீ தொலைவில் உள்ள பெரிய புளியங்குளம் எனும் இடத்தில் உள்ள குளத்தின் அருகில் ஒரு உயரமான கற்பாறைத் தொகுதி காணப்படுகிறது. சுமார் 100 அடி உயரமான ஒரு நீண்ட பாறையின் மீது மூன்று பெரிய கற்பாறைகளும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய கற்பாறைகளும் தூக்கி வைத்தாற்போல் இயற்கையாகவே அமைந்துள்ளன.
இவற்றிலே பெரிய பாறை ஒன்று முதலையின் வடிவில் காணப்படுகிறது. இதனால் இது முதலைப்பாறை (சிங்கள மொழியில் கிம்பு லாகல) என அழைக்கப்படுகிறது. இப்பாறைத் தொகுதியில் இயற்கையான பல கற்குகைகள் காணப்படுகின்றன. இவற்றின் மேற்பகுதியில் கற்புருவங்கள் வெட்டப்பட்டு அதன் கீழே கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தமாக 38 பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
மேற்குறிப்பிட்டுள்ள 38 கல்வெட்டுக்களில் 2 கல்வெட்டுக்கள் தமிழர் பற்றிக் கூறுகின்றன. இதில் தமிழர் எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் “தமெத வனிஜ கபதி விசகஹ லேன” என பொறிக்கப்பட்டுள்ளது. இதை பேராசிரியர் பரணவிதான “The cave of the householder Visakha, the Tamil Merchant” என மொழிபெயர்த்துள்ளார். இது தமிழ் வணிகனான குடும்பத் தலைவன் விசாகனின் குகை எனப் பொருள்படும். இக்கல்வெட்டு Inscriptions of Ceylon-Volum 1 எனும் நூலில் 356 ஆவது கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவன் விசாகன் பற்றிய இரண்டாவது கல்வெட்டு
பெரிய புளியங்குளத்தில் காணப்படும் இரண்டாவது கல்வெட்டில் “தமெத வனிஜ கபதி விசகஹ செனி கெமே” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இதை “The work of the flight of steps is of the householder Visakha, the Tamil Merchant” என பேராசிரியர் பரணவிதான மொழி பெயர்த்துள்ளார்.
இது “தமிழ் வணிகனான குடும்பத் தலைவன் விசாகனால் படிகளில் செய்யப்பட்ட வேலை” எனப் பொருள்படுகிறது. இக்கல் வெட்டு Inscriptions of Ceylon-Volum 1 எனும் நூலில் 357 ஆவது கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் மூலம் வவுனியா பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதுடன் வணிகர்களாகவும் விளங்கியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இங்குள்ள கல்வெட்டுக்களில் பெரும்பாலானவற்றில் கூறப்பட்டுள்ள செய்தியானது இங்கிருந்த பிரமுகர்கள் தமது கற்குகைகளை பெளத்த சங்கத்திற்கு தானமாக வழங்கியுள்ளனர் என்பதுதான். ஆனால் இந்த இரண்டு கல்வெட்டுக்களிலும் கூறப்பட்டுள்ள தமிழ் வணிகன் விசாகன் தனது குகைகளை பெளத்த சங்கத்திற்கு தானம் வழங்கவில்லை என்பதும் தெரிகிறது.
தொடரும்.