தமிழரும் சோனகரும் : ஒற்றுமைகளும் வேறுபாடுகளும்
தமிழர்களதும், சோனகரதும் குடியிருப்புப் பகுதிகள் பெரும்பாலும் ஒரே தன்மையானதாகவே இருக்கும். அவை மணல் பாதைகளில் ஒரு தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டுப் பகுதியும் சுற்றுச்சுவர்களால் அல்லது வலிமையான கம்பி வேலிகளால் பாதுகாக்கப்பட்டு, செம்பருத்திச் செடிகள், தென்னை, பாக்கு மற்றும் மா போன்ற மரங்கள் செழிப்பாக நடப்படுகிறது. சாதாரணத் தமிழ் வீடுகள், கிழக்கே கவனமாகப் பெருக்கப்பட்ட மணல் முற்றத்தை நோக்கிய பாரம்பரியத் தரைத் திட்டத்தைப் பின்பற்றுகின்றன. அத்தோடு, மேற்குச் சுவரின் நடுவில் ஜன்னல் இல்லாத உட்பக்கமாக பூசை-அறையை இணைக்கின்றன. சோனக வீடுகள் இந்த அடிப்படைத் தரைத் திட்டத்திலிருந்து அதிக மாறுபாட்டைக் காட்டுகின்றன.
எடுத்துக்காட்டாக, சோனகக் குடும்பங்கள், பொதுவாக கணவன் மற்றும் மனைவிக்கு ஜன்னல் இல்லாத மைய அறையை தங்கள் படுக்கையறையாக ஒதுக்குகின்றன. தவிர, அவர்கள் பொதுவாக பெண்களின் தனிமையான நடமாட்டத்துக்கு சில ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அதாவது வீட்டுக்கு வரும் ஆண் விருந்தாளிகளின் பார்வையிலிருந்து பெண்களை மறைக்கும் வகையிலான உட்சுவர்கள் அல்லது திரைச்சீலை மறைப்பு போன்றவற்றை கொண்டிருக்கின்றன (மேலும் விவரங்கள் மற்றும் தரைத் திட்ட வரைபடங்களுக்கு McGilvray 1989: 195-98 ஐப் பார்க்கவும்).
புதிய சோனக வீடுகள் தமிழரை விட அதிக வெளிப்புற அலங்காரத்தையும், வண்ணப் பயன்பாட்டையும் வெளிக் காட்டுகின்றன. மேலும் இந்தப் போக்கு, அவர்களின் மாட்டு வண்டிகளையும், மீன்பிடிப் படகுகளையும் கூட வண்ணமயமான வர்ணம் பூசப்பட்ட மலர் வடிவமைப்புகள் கொண்டதாக ஆக்கியுள்ளது. அத்துடன் ‘786’ எனும் இலக்கத்தையும் (பாதுகாப்பு என்று கருதி) பொறித்துள்ளனர். தமிழ் வண்டிகளும், படகுகளும் எந்தவிதமான வண்ண அலங்காரமும் அற்றிருந்ததற்கான காரணங்களை யாரும் எனக்குச் சொல்லவில்லை.
தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலான ‘மரபின’ வேறுபாடுகள் என்று சொல்லப்படுவதைப் போன்ற வேறுபாடுகளை, தமிழர்களுக்கும் சோனகருக்கும் இடையில் தோற்றரீதியாக அடையாளம் காண்பது கடினமானதாகும். உள்ளூர்ச் சோனகர்கள் அவர்களது வெள்ளையான தோல்நிற அடையாளத்துக்கு அவர்களது அரபு மூலமே காரணம் என்று அவ்வப்போது சுட்டிக்காட்டுகின்றனர். ஆயினும் தமிழர்களையும், சோனகர்களையும் வீதியில் அவர்களின் பண்பாட்டுரீதியான ஆடை, தொழில், பேச்சுப் பாணிகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்துத்தான் வேறுபடுத்தி அறிய முடியும். மேலைநாட்டுப் பாணியில் உள்ள சட்டைகள் உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும், சோனக ஆண்கள் எப்போதும் கீழ் ஆடையாக துப்புரவு செய்யப்பட்ட பருத்திச் சாரத்தை பொதுவாக கம்பளத்தில் அல்லது காச்சு வடிவத்தில் அணிவதற்கே விரும்புகின்றனர். சில நேரங்களில் அகலமான கருப்பு பெல்ட்டுடன் அணிகின்றனர். ஆனால், தமிழ் ஆண்கள் எப்போதும் வெண்மை பருத்தி வேட்டியை (கட்டம் இல்லாமல்) அணிகின்றனர். பெல்ட்டும் அவர்கள் அணிவதில்லை.
தமிழ்ப் பெண்கள், சோனகப் பெண்கள் இருசாராருமே சேலையும், சட்டையும் அணிகின்றனர். அத்துடன் இஸ்லாமியக் கோரிக்கைக்கிணங்க, சேலைத் தலைப்பால் முஸ்லிம் பெண்கள் தங்களின் தலையையும், முகத்தின் ஒரு பகுதியையும் பொதுவெளியில் மூடிக்கொள்கின்றனர். உள்ளூரில் இது முக்காடு என்று அழைக்கப்படுகிறது. இந்துக்களை சில வெளிப்படையான (திருனூறு, சந்தனக் கலவை, குங்குமத்தூள், ஆண்களின் கடுக்கன்) அடையாளங்களைக் கொண்டு அறியலாம். சாதாரண வெள்ளைக் கைக்குட்டை, தைத்த தொப்பி, மிக அரிதாக துருக்கித் தொப்பி போன்றன (குறிப்பாகத் தொழுகை நேரத்தில்) சோனக ஆண்களால் அணியப்படுகின்றன. சிங்களப் பெரும்பான்மைப் பகுதியில் நடந்த தமிழ் மக்கள் மீதான படுகொலைகளின் போது இந்த வெளி அடையாளங்களைக் காண்பித்து சோனகர்கள் தப்பித்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்பட்டன. சில சந்தர்ப்பங்களில் முஸ்லிம் ஆண்கள் தங்கள் விருத்தசேதன அடையாளத்தைக் காண்பித்து சிங்கள வன்முறையாளர்களிடமிருந்து தப்பியுள்ளனர்.
தத்தம் பகுதிகளில் தமிழர்களும், சோனகரும் தங்களது வழிபாட்டுத் தலங்களை பராமரிக்கின்றனர். அவை பொதுவாக தாய்வழி அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றன. கோவில்கள் மற்றும் மசூதிகள் இரண்டும் ஆண் நம்பிக்கையாளர் சபையால் (அறங்காவலர் குழு) நிர்வகிக்கப்படுகின்றன (தமிழர்களால் வண்ணக்கார்கள் என்றும் சோனகர்களால் மரைக்காயர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்). ஒவ்வொரு அறங்காவலரும் உள்ளூர்க் கோவில் அல்லது பள்ளிவாசல் கூட்டங்களில் காணப்படும் பெரிய தாய்வழிக் குலங்களில் (குடி) ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்துக் கோவில் திருவிழாக்கள் அல்லது முஸ்லிம் கந்தூரிகள் போன்ற வருடாந்திரச் சடங்குகளில் அவரது மரியாதையும், அந்தஸ்தும் வெளிப்படுகின்றன. களப்பணியின் போது, தமிழர்களுக்கும் சோனகர்களுக்கும் இடையே உள்ள சமயப் பாணி வேறுபாடுகள் என்னைக் கவர்ந்தன. எனக்குத் தெரிந்த பெரும்பாலான தமிழர்கள் சடங்குகளை இரசித்தார்கள். மேலும் கோவிலுக்குச் சென்று பூஜைகளில் கலந்துகொள்ளும்படி என்னை அடிக்கடி ஊக்குவித்தனர். மாறாக, சோனகர்கள் சில சமயங்களில் தங்கள் புனிதமான இடங்களைப் பாதுகாப்பதோடு, என்னுடைய தனிப்பட்ட மத நம்பிக்கைகள் தொடர்பான இறையியல் விவாதங்களில் ஈடுபட அதிக ஆர்வத்துடன் இருந்தனர்.
பொது வழிபாட்டுத் துறையில், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் கூட்டுப் பங்கேற்பு மிகக் குறைவு. நான் குறிப்பிட்ட விதிவிலக்குகளில் சில தமிழ் இந்துக்கள், முஸ்லிம் புனிதர்களின் கல்லறைகளில் நேர்ச்சைகள் மற்றும் காணிக்கைகளைச் செய்தனர்.
சோனகர்கள் மற்றும் தமிழர்கள் பாலுறவு, உடலைச் சூடாக்கும் மற்றும் குளிர்விக்கும் உணவுகள் மற்றும் பொருட்கள், சித்த மற்றும் ஆயுர்வேத மரபுகளிலிருந்து பெறப்பட்ட நாட்டுப்புற மருத்துவம் (McGilvray 1998) ஆகியவற்றில் மிகவும் ஒத்த கலாசாரப் புரிதல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இரு சமூகங்களிலும் உள்ளூர்ச் சிகிச்சையாளர்கள் (parikari; colloq. paricari) காணப்படுகிறார்கள். அக்கரைப்பற்றில் உள்ள எவரும் ஹக்கீம் என்ற பட்டத்தை பயன்படுத்துவதில்லை அல்லது அரேபிய Ûnäni மருத்துவ முறையை அடையாளப்படுத்துவதில்லை. பேய்கள் மற்றும் தீய ஆவிகள் (pjy, பிசாசு, முஸ்லிம் ஜின்) மட்டத்தில், தமிழர்களும் சோனகர்களும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அதே கட்டுமானத்தைக் கொண்டுள்ளனர். அங்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் மந்திரவாதிகள் (பேய் போன்ற சக்திகளைக் கட்டுப்படுத்த மந்திரங்களைப் பயன்படுத்துவதில் வல்லுநர்கள்) வழிபாடுகளை நடாத்துவதோடு, சோனகப் பெண்களால் நடத்தப்படும் உள்ளூர்ப் பெண் ஆவிகளைச் (‘தாய்மார்’) சாந்தப்படுத்தும் வழிபாட்டு முறையும் உள்ளது.
ஈழப் பிரச்சினைகள் படிப்படியாக மோசமடைந்து, ஒருவரின் சொந்த இனத்தை விட்டு வெளியேறுவது ஆபத்தான செயலாக மாறும் வரை, சில சோனகர்கள் திருமணம், தொழில் மற்றும் பிற தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்து தமிழ் ஜோதிடர்களிடம் ஆலோசனை செய்தார்கள். இதே போன்ற வழிகாட்டுதல்கள் சோனக எண் கணிதவியலாளர்கள் மற்றும் மை-பார்ப்பவர்களிடமிருந்தும் கிடைக்கின்றன.
இரு பாலினத்தைச் சேர்ந்த இளம் முஸ்லிம் குழந்தைகள் அரபு வேதத்தை மனப்பாடம் செய்வதற்காக பாரம்பரிய சுற்றுப்புற குர்ஆன் ‘ஓதுதல் பள்ளிகளுக்கு’ தொடர்ந்து செல்கிறார்கள், ஆனால் நவீன சம்பூர்ண-இஸ்லாமியத்தின் (Pan-Islamism) முகவர்கள் இப்போதெல்லாம், குறிப்பாக இளம் ஆலிம்கள் மற்றும் மௌலவிகள், கல்லூரி மற்றும் முஸ்லிம் செமி-அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற இஸ்லாமிய ஆசிரியர்களாக இருக்கின்றனர். ‘இஸ்லாமியமல்லாதது’ (non- Islamic) என உள்ளூர் மரபுகள் மற்றும் நடைமுறைகளை அடக்குவதற்கான அவர்களின் முயற்சிகள், ஒரு கலவையான வெற்றியைப் பெற்றன. மேலும் சில சமயங்களில் இத்தகைய செயல்களுக்குப் பின்னால் இருக்கும் தமிழர் விரோத நோக்கங்களிலிருந்து இஸ்லாமியச் சார்புகளை வேறுபடுத்துவது கடினம். உதாரணமாக, பர்தா கட்டுப்பாடுகளை விதிக்கும் முயற்சிகள் இருந்தபோதிலும், கல்முனைக்கு அருகிலுள்ள ‘கடற்கரைப் பள்ளிவாசலில்’ (கடற்கரைப் பள்ளி), நாகூரின் தென்னிந்திய துறவி ஷாகுல் ஹமீதைக் கொண்டாடும் பிராந்தியத் திருவிழாவில், பல சோனகப் பெண்கள் தொடர்ந்து பகிரங்கமாகக் கலந்துகொள்கிறார்கள்.
நடைமுறைக் காரணங்களுக்காக, ஏழைச் சோனகப் பெண்கள் இன்னும் வயல்களில் களையெடுப்பு மற்றும் கதிரடிக்கும் குழுக்களின் உறுப்பினர்களாக வேலை செய்கிறார்கள். தங்கள் குடும்பங்களுக்கு பணம் அல்லது நெல் அறுவடையில் ஒரு பங்கை வீட்டிற்குக் கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில், பல பகுதிகளில் உள்ள சோனகர்கள் உள்ளூர் விழாக்கள் மற்றும் விருத்தசேதனங்களில் இந்துச் சாதி இசைக் கலைஞர்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். ஏனெனில் இந்த இஸ்லாமிய ‘சுத்திகரிப்பு’, தமிழர்களுக்கு எதிரான பொருளாதாரப் புறக்கணிப்பையும் செயல்படுத்துகிறது. 1993 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் நான் அக்கரைப்பற்றுக்கு விஜயம் செய்த போது, பல சோனகர்கள் இன்னும் தமிழ்ச் சலவைத் தொழிலாளிகளை உள்நாட்டு சலவைச் சேவைகளுக்குப் பணியமர்த்தியுள்ளதைக் காணமுடிந்தது. மேலும் ஈழப்போர் உருவாகிவிட்ட சூழலிலும், விவசாயத்துக்குத் தேவையான கருவிகளையும், மாட்டு வண்டிகளையும் தமிழர்களிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர். பொதுவான வாழ்க்கை முறைகள் இருந்தபோதிலும், தமிழர்களுக்கும் சோனகர்களுக்கும் இடையிலான நேரடிச் சமூகத் தொடர்புகளுக்கு தடைகள் உள்ளன – அதாவது பிரிக்கப்பட்ட பள்ளி அமைப்பு போன்றவை. தமிழ் – சோனகத் திருமணங்கள் இன்று நடைமுறையில் இல்லை என்று தோன்றுகிறது. இருப்பினும் அவை கடந்த காலங்களில் பரவலாக நிகழ்ந்திருக்க வேண்டும்.
அதேபோன்று சமகாலத் தமிழர்களைப் பொறுத்தவரை, இஸ்லாத்தைத் தழுவியவர்கள் அரிது; எனது முழுக் களப்பணியிலும் நான் ஒன்று அல்லது இருவரை மட்டுமே சந்தித்தேன். எப்போதும் சோனக ஆண்களை மணக்கும் தமிழ்ப் பெண்களில் மிகச் சிலரைத்தான் அப்படி இப்போது என்னால் காண முடிந்தது.
தொடரும்.