இந்த நூல் இந்தியா மற்றும் இலங்கையில் தமிழ் தேசியவாதத்தின் பரிணாம வளர்ச்சியை பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் இறுதிப் பகுதியில் இருந்து சமகாலம் வரை விரிவாக ஒப்பிடுகிறது. தமிழ்த் தேசிய இனத்திற்கும் இலங்கை – இந்திய மைய அரசுகளுக்கும் இடையே நிலவிய முரண்பாட்டுச் சூழலில் இரண்டு நாடுகளிலும் தமிழர்கள் தன்னாட்சி உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைத்த வரலாறு உள்ளது. ஆனால், இந்தியா மற்றும் இலங்கையில் மேலாதிக்க அரசுகளின் தேசிய இனங்களுடனான உறவு சார்ந்து பாரிய வேறுபாடுகள் உள்ளன. இந்திய ஒன்றியத்தின் மாநிலங்களில் ஒன்றான தமிழகம் எப்படி முன்னேற்றமடைந்த மாநிலங்களில் ஒன்றாக மாறியது, மற்றொன்று எப்படி இரத்தக்களரிகளதும், பாரிய பலிகளதும் களமாக மாறியது என்பதற்கான ஒப்பீட்டினை இந்த ஆய்வுநூலில் வெளிக்கொணர்கின்றார் நூலாசிரியர் மாதுரிகா இராசரத்தினம் (Madurika Rasaratnam).
நூலாசிரியர் மாதுரிகா இராசரத்தினம்
இலண்டன் பல்கலைக்கழகத்தில் (University of London) சர்வதேச அரசியற் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்துவரும் இவர், அதற்குமுன் கென்ற் பல்கலைக்கழகத்திலும் (The University of Kent, Canterbury) விரிவுரையாற்றியிருப்பதோடு, LSE (London School of Economics and Political Science), SOAS (School of Oriental and African Studies) ஆகியவற்றிலும் கற்பித்திருக்கின்றார். அரசியற் கோட்பாட்டு அறிமுகம், உருவாகிவரும் சக்திகளும் பிரச்சினைகளும், ஆசிய ஒப்பீட்டு அரசியல், இனக்குழுக்களும் தேசியவாதமும்: உலகளாவிய ஒப்பீடுகள் ஆகியவை இவர் கற்பித்த பாடவிதானங்களாகும். இந்தப் புத்தகம் 2016 இல் பிரித்தானிய C.Hurst & Co (Publishers) Ltd. பதிப்பகத்தினால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

தலைப்புகளும் ஒப்பீட்டு ஆய்வுப் பேசுபொருள்களும்
தமிழர்களும் தேசமும் என்ற தலைப்பிலான இந்நூல் இரண்டு அலகுகளையும் (பகுதிகள்) எட்டு அத்தியாயங்களையும் கொண்டுள்ளது. முதற்பகுதி ஐந்து அத்தியாயங்களையும் இரண்டாவது பகுதி மூன்று அத்தியாயங்களையும் கொண்டுள்ளது. இரண்டு நாடுகளின் இனத்துவ மற்றும் தேசியவாத, தேச உருவாக்க (Nation building) அரசியல் முன்னெடுப்புகள், சூழமைவுகளின் தோற்றுவாய்கள் குறித்த வரலாற்றுப் பார்வை முதலாவது அத்தியாயத்திற் பதிவாகியுள்ளது. அதாவது இரண்டு நாடுகளின் தமிழ் இனத்துவ மற்றும் தேசிய அரசியலின் தோற்றுவாய் குறித்த வரலாற்றுப் பார்வையாக இது அமைந்துள்ளது. இந்தியாவில் தமிழர், முஸ்லீம்கள் மற்றும் இந்திய காங்கிரசின் தேசியமயமாதலை இரண்டாவது அத்தியாயமும், கொலனித்துவ இலங்கையிற் சிங்களவர், தமிழரின் தேசியமயமாதலை மூன்றாவது அத்தியாயமும் ஆய்வுசெய்கின்றன.
கொலனித்துவ இந்தியாவில் தேசிய காங்கிரஸின் பரந்த இனத்துவ தேசியவாதம் (Pan-Ethnic Nation) எவ்வாறு மேலாதிக்க நிலையை அடைந்தது என்பதையும் இரண்டாவது அத்தியாயம் எடுத்தியம்புகின்றது. ‘பின்-சுதந்திர இந்தியாவிற் தேசமாகத் தமிழர்கள்’, ‘தேசங்களுக்கு அப்பால் பின்-சுதந்திர இலங்கையிற் தமிழர்களும் சிங்களவர்களும்’ எனும் தலைப்பிலான ஆய்வுகள் முதற்பகுதியின் இறுதி அத்தியாயங்களாக உள்ளடக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியின் கட்டுரைகள் முறையே ‘இலங்கையின் உள்நாட்டுப் போரின் தொடக்கம், உள்நாட்டுப் போரின் முடிவு, சமகாலத் தமிழ்த் தேசியவாதம் ஆகிய மூன்று தனித்தனித் தலைப்புகளின் கீழ் விவாதிக்கப்படுகின்றன.
ஒப்பீட்டு ரீதியான ஆய்வுகள்

இந்நூல், கொலனித்துவ காலத்தின் இறுதியிலிருந்து சமகாலம் வரை நீளும் தேசிய அடையாள உருவாக்கத்தின் ஒப்பீட்டு ஆய்வாக அமைந்துள்ளது. ஒத்த சூழ்நிலைகளில் தோன்றிய தனித்துவமான அரசியற் செயற்பாட்டுமுறை வெவ்வேறு தேசிய அடையாளக் கருத்தியல்களை முன்னிலைப்படுத்தியமை ஒப்பீட்டு ரீதியான ஆய்வுகள் மூலம் முன்வைக்கப்படுகின்றது. இந்தியாவின் தேசிய அரசியல் அடையாள உருவாக்கம் என்பது அமைப்பு ரீதியாகவும் அரசியல் கருத்தியல் ரீதியாகவும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிற் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஒரு முக்கிய திருப்புமுனையை அடைந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress – INC) அரசியல் ஆதிக்கத்தை நிறுவியது. அதன் பரந்த இனத்துவ (Pan-ethnic) தேசிய அடையாளக் கருத்தியல் தமிழர்களை ஓரளவு உள்வாங்கியதான கருத்தியலோடும் நிறுவப்பட்டது. இலங்கையில், அதே காலகட்டத்தில், ஒத்த சூழ்நிலைகளின் மத்தியில், இதிலிருந்து மாறுபட்ட அரசியற் செயற்பாடுகள், தமிழர் நிலைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விரோதமான பௌத்த – சிங்கள தேசியவாதக் கருத்தியலை ஆதிக்கமாக நிறுவியது.
இந்தக் குறுக்குவெட்டு ஒப்பீடானது, இரு நாடுகளின் அரசியற் செயற்பாட்டு முறைமைகளின் சாத்தியத்தை விளக்குவதோடு, ஒத்த சூழ்நிலைகளைக் கொண்டிருந்தபோதும், அவை தேசியத்தின் வெவ்வேறு கருத்தியல்களைக் கொண்டியங்கின என்பதை விளக்க முற்படுகின்றது. மேலும் இது, தென் இந்தியா மற்றும் இலங்கையில் தமிழ் அரசியற் போக்கில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களையும் விளக்குகின்றது.
தேசியமயமாதல்
இலங்கையிற் தமிழர், சிங்களவர்களின் தேசியமயமாதல் பற்றிய மூன்றாவது அத்தியாயம், கொலனித்துவ இலங்கையில் ஏன் பரந்த இனத்துவ தேசியவாதம் (Pan-ethnic) கட்டமைக்கப்படாமல் போயிற்று என்பதையும் சாத்தியமான பின்னணியில் விவாதிக்கின்றது. அத்தோடு தமிழ்ச் சமூகத்தினதும் சிங்களச் சமூகத்தினதும் சாதிய, மத, அரசியல், பொருளாதார, கலாசார ரீதியான உள்ளக முரண்களின் அச்சுகளையும் விபரிக்கின்றது. தமிழ் மற்றும் சிங்களத் தரப்புகள் தமக்குள்ளேயான உள்ளக வேறுபாடுகள், முரண்களைக் கடந்து தனித்தனித் தேசியங்களாக எவ்வாறு உருவாகின என்பதையும் விவாதிக்கின்றது.
நான்காவது அத்தியாயம் மீண்டும் இந்தியாவை நோக்கித் திரும்புகின்றது. சுதந்திரத்திற்குப் பின்னரான திராவிட மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையிலான போட்டியை ஆராய்கின்றது. காங்கிரஸ் கட்சியானது தமிழ் அடையாளம் மற்றும் தமிழர் நலன்சார்ந்து பகிர்வு (Shared Interests) இலக்குகளைக் கொண்டிருந்தமையால் பகைமைநிலைப் போட்டியாக அது மேலெழவில்லை எனக் கூறப்படுகிறது. ஐந்தாவது அத்தியாயம் மீண்டும் இலங்கைக்குத் திரும்புகிறது. போரின் தீவிரப்படுத்தல் மீது கவனம் செலுத்துகின்றது. சிங்கள – பௌத்த இனத்துவ அதிகார மேலாதிக்கத்திற்கும் தமிழ்த் தேசியவாதிகளின் கூட்டுச்சமத்துவக் கோரிக்கைக்குமிடையிலான முரண்பாடாக அது தீவிரம் பெற்றமையை விபரிக்கின்றது. தமிழ்த் தேசியவாத இயக்கம் வெறுமனே வெளிநிறுத்தலுக்கு மட்டுமான எதிர்வினையாக இல்லாமல் தொடர் அரசியற் செயற்பாட்டினையும் இயங்குதலையும் வெளிப்படுத்தியது என்கிறது.
இலங்கை உள்நாட்டுப் போர்: தொடக்கம் – முடிவு – பின் போர்க்கால நிலைமைகள்
இரண்டாம் பகுதி இலங்கையின் உள்நாட்டுப் போரின் தீவிரம் மற்றும் முடிவை மையமாகக் கொண்டுள்ளதோடு, பின்-போர்க்கால நிலைமைகள் பற்றியும் கவனம் செலுத்துகிறது. மூன்று தசாப்தங்களாக நீடித்த இந்த மோதலின் சர்வதேசமயப்படலை ஆய்வுசெய்கிறது. அத்தோடு விடுதலைப் புலிகள் அமைப்பின் கடும்போக்குவாத, சமரசமற்ற மற்றும் இராணுவமயப்பட்ட நிலைப்பாடுகள் குறித்து குற்றம் சுமத்துவதோடு, முரண்பட்ட நலன்களைக் கொண்டு செயற்பட்ட – செயற்படும் சர்வதேசத்தின் அணுகுமுறை மீதும் பார்வையைச் செலுத்துகின்றது.
இந்திய தேசியக் கட்டமைப்பில் தமிழகத்தின் ஆட்சி நிர்வாக ரீதியான இணைப்பு பெரும்பாலும் மாறாமல் உள்ளது. அதன் தொடர்ச்சியான நிலைத்தன்மை மேம்பாட்டினையும் பொருளாதார வளர்ச்சியையும் உறுதிப்படுத்தி நிற்கின்றது. அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் சமூக – பொருளாதார மாற்றங்கள் அங்கு சாத்தியமாகின. தலித் அரசியல் கட்சிகளின் தோற்றம், இயக்கம் உட்பட்ட எழுச்சிகள் இடம்பெற்றபோதும், இவை இந்திய ஒன்றியத்திற் தமிழகத்தின் கூட்டியக்கத்தைப் பாதிக்கவில்லை. ஆனால் இலங்கையின் இனப்பிரச்சினை வன்முறையின் வழி தீவிரமடைந்ததோடு சர்வதேசமயப்பட்ட நிலையையும் அடைந்தது. முரண்பாட்டுத் தரப்புகளுக்கிடையிலான உறவிலும் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.
நூலின் இரண்டாம் பகுதி, 1970களின் இறுதியில் இருந்து சமகாலம் வரையான (2009) இலங்கையின் ஆயுத மோதலின் தொடக்கம், தீவிரம் மற்றும் அதன் முடிவின் மீது கவனம் செலுத்துகின்றது. 2009 போர் முடிவிற்குப் பின் பௌத்த – சிங்கள அரசுக்கும், இப்போது சர்வதேசமயப்பட்ட தமிழ்த்தேசியவாத அரசியலுக்கும் இடையிலான அடிப்படை முரண்பாட்டின் தீவிரப்போக்கினையும் விவாதிக்கின்றது. போர்க்காலம் மற்றும் பின்-போர்க்கால சூழல்களிற் சர்வதேச தரப்புகளின் நடவடிக்கைகள், வகிபாகம் குறித்தும் விவாதிக்கப்படுகின்றது. முரண்பாட்டின் விளைவான இராணுவமயமாக்கல், அதன் சர்வதேசமயமாக்கலுடன் இணைந்ததாகவும் நோக்கப்படுகின்றது. சர்வதேச நடவடிக்கைகளின் எதிர்பாராத விளைவுகள், பௌத்த – சிங்கள மற்றும் தமிழத்தேசியவாத சக்திகள் தமது திட்டங்களைத் தொடரும் போக்குகளை வடிவமைக்க எவ்வாறு வழிகோலின என்பதும் விவாதிக்கப்படுகின்றது.
தாராளவாத சமாதானக் கோட்பாடு
இந்த விவாதத்திற்கு அடிப்படையாக ‘தாராளவாத சமாதானம் (Liberal Peace)’ எனும் சொல்லாடல் பயன்படுத்தப்படுகின்றது. தாராளவாத ஜனநாயக மற்றும் சந்தைப் பொருளாதாரத்துடனான இனத்துவ ஒருமைப்பாடுடைய அரசாக (Ethnically Inclusive, Liberal – Democratic and Market-orientated State) இலங்கையை உருவாக்கும் நோக்குடனேயே இலங்கை மீதான சர்வதேச தலையீடுகள் இருந்துவருகின்றன.
இலங்கையில் சர்வதேச தலையீடுகள் என்பன, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய சர்வதேச செயல்முறைகள், நிறுவனங்களின் பரந்த தொகுப்பின் பகுதியாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. இவை தாராளவாத ஜனநாயகம் மற்றும் சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு உலகளாவிய சமாதான ஒழுங்கினை உறுதிப்படுத்துவதற்கான நோக்கத்தைக் கொண்டவை. இந்தப் பகுப்பாய்வானது தாராளவாத உலக ஒழுங்குசார் நிறுவப்பட்ட அறிவியல் மற்றும் அரசியல் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டதென நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். முரண்பாடுள்ள மற்றும் ஸ்திரத்தன்மை அற்ற பகுதிகளில், அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் சர்வதேச முயற்சிகளை வகைப்படுத்தவே ‘தாராளவாத சமாதானம்’ எனும் கோட்பாடு கையாளப்படுகின்றது.
இந்நூல், தாராளவாத அமைதி என்பதை மையமாகத் திட்டமிடப்பட்ட செயற்பாடுகளின் தொகுப்பாக இல்லாமல், அரசுகள், அரசு அல்லாத தரப்புகள் மற்றும் பன்முக அமைப்புகளால் வழிநடாத்தப்படும் பரந்த மற்றும் சீராக ஒருங்கிணைக்கப்பட்ட செயற்பாடுகளின் தொகுப்பாக முன்வைக்கின்றது. இவை முரண்பாட்டுக் கையாள்கை, சமாதான உருவாக்கம், பொருளாதாரச் சீர்திருத்தம், மேம்பாடு, பாதுகாப்புத்துறைச் சீர்திருத்தம், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக மேம்பாடு போன்ற நோக்கங்களின் பாலானவை.
ஒப்பீட்டு ஆய்வுக்கு வலுச்சேர்க்கும் அம்சங்கள்
இந்தியா மற்றும் இலங்கையில் தமிழ் அரசியல் மற்றும் தேசிய அடையாளம் சார்ந்த அம்சங்கள் ஒப்பீட்டு ஆய்வுக்கு உகந்ததும், சுவாரஸ்யமானதுமான நிலைமைகளைக் கொண்டுள்ளன. சமூக, வரலாறு மற்றும் பொருளாதார ஒற்றுமைகளின் காரணமாக மட்டுமல்லாது, இன்றுவரை தொடர்கின்ற முக்கியமான தொடர்புகளும் இந்த ஒப்பீட்டு ஆய்வுக்கு வலிமை சேர்க்கின்றன. அத்தோடு இரு நாடுகளும் பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் வரலாற்றைக் கொண்டிருந்திருக்கின்றன. பிரித்தானிய ஆட்சிக்கு முந்தைய அரசியல் மற்றும் வர்த்தக உறவுகள் இலங்கைத் தீவினை இந்தியாவுடனும் தென்கிழக்கு ஆசியாவுடனும் பரந்த அளவில் இணைத்தன. 19ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் அடையாளம் மற்றும் தேசிய அடையாளங்களை உருவாக்கிய சமூக மற்றும் அரசியல் இயக்கங்களும் தொடர்புகளைக் கொண்டிருந்தன.

இந்நூல் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு தேசிய அரசுகளையும் தனித்தனி ஒப்பீட்டு அலகுகளாக எடுத்துக்கொள்கிறது. தேசிய அடையாளத்தின் கருதுகோள்களும், அவை உருவாக்கும் இனத்துவ இணைவாக்கம், புறக்கணிப்பு நிலைமைகளின் பலம்மிகு மாற்றங்களும் பிராந்திய எல்லைகளுக்குள் அடக்கப்பட்டுள்ளன. சிங்கள – பௌத்த தேசியவாதமும் இந்தியத் தேசியவாதமும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றங்களின் எல்லை தாண்டிய செயல்முறைகளின் மத்தியில் உருவாக்கப்பட்டன. ஆனால் சிங்கள – பௌத்த தேசியவாதம் இலங்கையில் தமிழர்களை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் புறக்கணித்து வந்துள்ளது. இந்தியத் தேசியவாதம் ஒப்பீட்டளவில் தமிழகத்தை இணைத்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் தமிழகத் தமிழர்களிடம் ஆதரவு வேண்டிநிற்பதும், தமிழகத் தமிழர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவதில் ஆர்வம் கொண்டிருப்பதுமான தொடர்பு நிலவிவருகின்றது. இந்தக் கூட்டுமுயலுகை என்பது இரு நாட்டுத் தமிழர்களுக்குமான பொது அரசியல் திட்டமாக அல்லாமல், ஈழத்தமிழர்களின் நலனுக்கான அரசியலை வலியுறுத்தும் நோக்கம் சார்ந்தவை.
அரசியற் கருதுகோள்களாகத் ‘தேசம்’ மற்றும் ‘இனத்துவம்’
தேசியவாதமானது இனத்துவம்சார் புரிதல்களையும் அனுபவரீதியான பகுப்பாய்வை வெளிப்படுத்தும் பரந்த கோட்பாட்டுத்தளத்தையும் கொண்டுள்ளது. அவை நவீன தேச – அரச அமைப்பியல்சார் அரசியலில் எங்கும் காணக்கூடியவையும், தவிர்க்க முடியாதவையுமான தேசம் மற்றும் இனத்துவம் ஆகியவற்றின் அரசியற் கருதுகோள்களாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. இனத்துவத்தின் மையம், மக்களின் இறையாண்மைக் கோட்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு ஆகியவற்றிலிருந்து தேசம் உருப்பெறுகின்றது. அதுவே தேசிய அரச அமைப்பிற்கான, அரசியல் நியாயத்திற்கான ஒரேயொரு கோட்பாடு. மக்கள் சார்ந்த ஆட்சிமுறைக்கான கோரிக்கை என்பது தற்போது எங்கும் காணக்கூடிய நடைமுறைக் கோட்பாடு. இன்றைய ஆட்சியாளர்கள், எவ்வளவு கொடூரமான ஆட்சியாளர்களாக இருந்தாலும், இறையாண்மையை தங்கள் தேச விருப்பின் வெளிப்பாடாக நியாயப்படுத்துவதைக் காணலாம் என்கிறார் நூலாசிரியர்.
அதிகாரம் நேரடியாக மக்களிடமிருந்து உருவாகுவதை வெகுஜன இறையாண்மை (Popular Sovereignty) வலியுறுத்துகிறது. ஆனால் வெகுஜன இறையாண்மைக் கருத்தியலானது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பரவலாகவும் விரிவடைந்தும், மக்கள்திரளை ஒரு தேசமாக அடையாளப்படுத்தத் தொடங்கியது. கூட்டு வரலாற்றுப் பின்னணி, கூட்டுக் கலாசாரப் பண்புகள், கூட்டு நிலப்பரப்பின் இணைப்பு என்பவற்றைக் கொண்ட மக்கள் கூட்டத்தை தேசமாக அடையாளப்படுத்தலாம்.
இன மற்றும் தேசியவாதக் கோட்பாடு
பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மூலதனம், போர், கொலனித்துவ ஆட்சி மற்றும் தொழில்மயமாக்கம் ஆகியவற்றின் ஒன்றோடொன்று இணைந்த செயல்முறைகளின் ஊடாக நிகழ்ந்த மாற்றங்கள் உலகளாவிய ஆள்புல அரசுகளின் (Territorial States) அமைப்பை உருவாக்கின. அதே நேரத்தில் அவை தேசிய அரசுகளாகவும் புரிந்துகொள்ளப்பட்டன. அரசுகள் மற்றும் தேசங்கள் என்பன தத்தமது எல்லைகளுக்குள்ளமைந்த இனத்துவம் மற்றும் தேசியவாதம் ஆகிய செயல்முறைகளின் கூடுதல் அல்லது தற்செயலான பக்கவிளைவுகள் அல்ல; ஆண்ட்ரியாஸ் விம்மர் (Andreas Wimmer: A Swiss sociologist and Professor of Sociology and Political Philosophy) அவர்கள் கூறியது போல், ‘அவை (நவீன தேசங்கள்) தன்னியல்பாகவே இன மற்றும் தேசியவாதக் கோட்பாடுகளின் அடிப்படையில் தங்கியுள்ளன’. அதாவது, அரசியல் பங்கேற்பு, சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடாத்தப்படுதல் மற்றும் அரசின் சீரற்ற தன்மையிலிருந்து பாதுகாப்பு, பலவீனமானவர்கள் மற்றும் வறிய மக்களின் கண்ணியம் காப்பாற்றப்படுதல், சமூகநீதி மற்றும் பாதுகாப்பு ஆகியன நவீன தேசங்களின் முக்கிய வாக்குறுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
உட்சேர்க்கையும் வெளிநிறுத்தலும்
தேசியம் மற்றும் இனத்துவம் ஆகிய சொல்லாடல்கள் உட்சேர்க்கை மற்றும் வெளிநிறுத்தல் (Inclusion and Exclusion) ஆகிய வடிவங்களின் வரையறைகளோடு இணைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தேசிய அரசுகள் கலாசார ரீதியாக பல்வேறு மக்கள் குழுக்களை உள்ளடக்கியவை. இவ்வாறான சூழலில் இது சிக்கலானதும் சர்ச்சைக்குரியதுமான சில கேள்விகளையும் எழுப்பக்கூடியது. அதாவது அரசின் எல்லைகளுக்குட்பட்ட பல்வேறு மொழி, மத, சாதிய அல்லது பிராந்தியக் குழுக்களில் எவை தேசியத்தின் மையங்களாக உள்ளடக்கப்படக்கூடியவை, எவை வெளிநிறுத்தப்படக்கூடியவை என்பது அக்கேள்வியாகும். தேசிய உட்சேர்க்கை மற்றும் வெளிநிறுத்தற் புறச்சூழலில், இனத்துவம், சிறுபான்மைத்துவம், சமூகம் மற்றும் சமூகவாதம் போன்ற சொல்லாடல்கள் அரசியல் முக்கியத்துவமும் அர்த்தப்பெறுமதியும் உடையனவாகுகின்றன. தேசிய சமூகத்தின் எல்லைகளை வரையறுப்பதில் உள்ள பிரச்சினைகள், இனத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பன்முகத்தலைமுறை மக்களை அடையாளம் காணும் வகைகளின் அடிப்படையாக உள்ள வேறுபாடுகளை உள்ளடக்கியவை. மேலும் இந்த வகைகள், அரசியல் முக்கியத்துவம் பெறக்கூடியவை; தேசிய உட்சேர்க்கை, வெளிநிறுத்தல் அல்லது படிநிலை – அடுக்குசார் அடையாளங்களாகவும் மாறலாம்.
வர்க்கம், பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலைகளும் (Sexual orientation) தேசிய வெளிநிறுத்தலினதும் ஒடுக்குதல்களினதும் முக்கியமான மற்றும் வன்முறைசார் வெளிப்பாடுகளாக அமையலாம். ஆனால் இனத்துவமாக வரையறுக்கப்பட்ட கூறுகள், தேசியக் கோரிக்கைகள் அரசியற் தன்னாட்சிக்கும் சுயாட்சிக்கும் அடிப்படைகளாக மாறலாம். அரசியல் முக்கியத்துவம் பெறும் இன அடையாளங்கள் வரலாற்று ரீதியாக குறிப்பிட்ட மத, மொழி, சாதி மற்றும் பிற வகைகளின் கலவையை உள்ளடக்கியவை.
பரந்த இனத்துவத் தேசிய இயக்கமாக ‘காங்கிரஸ்’
‘கொலனித்துவ இந்தியாவில் தமிழர், முஸ்லீம்கள் மற்றும் காங்கிரஸ் ஆகியனவற்றின் தேசியமயமாதல்’ எனும் தலைப்பிலான மூன்றாவது அத்தியாயம், காங்கிரஸ் ஒரு பரந்த இனத்துவ தேசிய இயக்கமாக உருவாகிய பின்னணியை விபரிக்கின்றது. அது காங்கிரஸின் நேர்மறையான தொடர்ச்சியான மூன்று முன்னெடுப்புகளின் விளைவு என்ற வாதத்தினை இந்நூல் முன்வைக்கின்றது. கருத்தியல் ஒருங்கிணைப்பு, நலன்களின் இணைப்பு மற்றும் மக்கள் மயப்படுத்தப்பட்ட நேரடி அரசியல் இயங்குநிலை என்பவையே அம்மூன்று முன்னெடுப்புகளாகும்.
காங்கிரஸ் இயக்கத்தின் தோற்றத்திலிருந்து, பிரித்தானியாவிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 வரையான அதன் அரசியல் வளர்ச்சி, இரண்டு நிலைகளில் நோக்கப்படுகின்றது. முதலாவது 1920 வரையானது; இரண்டாவது 1920 – 1947 வரையானது. 1920 வரையான முதற்கட்டம், அரசியற் கோரிக்கைகளை வெளிப்படுத்துவதற்கும் நிறுவப்பட்ட நோக்கங்களுக்கான ஆதரவைப் பெறும் அளவிலும் மட்டுப்படுத்தப்பட்டன. 1920 முதல் 1947 வரையான இரண்டாவது கட்டத்தில், காங்கிரஸ் தனக்கான மக்கள் ஆதரவை உருவாக்குவதற்காக ஒத்துழையாமை நடவடிக்கைகள் மூலம் மக்கள் போராட்டங்களை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டு முன்னெடுத்தது.
தமிழக அரசியலுக்கும் காங்கிரஸிற்குமிடையிலான உறவானது ஒன்றோடொன்று தொடர்புடைய இருகூறுகளால் வடிவமைக்கப்பட்டது என இந்நூல் சுட்டிக்காட்டுகின்றது. காங்கிரஸின் வெளிப்படையான பல்லின மற்றும் பன்மொழிக் கருத்தியல் – அமைப்புசார் கட்டமைப்பின் வளர்ச்சி, காங்கிரஸிற்கு எதிர்நிலையிலிருந்த திராவிட தமிழ் அரசியலின் முக்கிய கொள்கைகளை ஏற்கமுன்வந்தமை ஆகியன அக்கூறுகளாகும்.
தமிழகத்தில் காங்கிரஸ்
தமிழ்ப் பகுதிகளில் காங்கிரஸ் நேரடி அரசியற் பரப்புரைகளை மேற்கொண்டது. பரந்த இனத்துவ இந்தியத் தேசியவாதத்தை தமிழ்ச் சமூக மற்றும் அரசியற் பரப்பில் நிறுவுவதற்குரிய முக்கிய தளங்களை அமைத்தமை அதன் இரண்டாவது அம்சமாகும்; அதாவது தமிழர்களை உள்ளடக்கிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பரந்த இனத்துவ தேசிய அடையாளத்தை உருவாக்குவதில் காங்கிரஸ் முன்னெடுத்த செயற்பாடுகள். கட்டமைப்புசார் காரணங்களின் விளைவாக அல்லாமல், போட்டி மற்றும் எதிர்மறையான, அமைப்பு மற்றும் இயக்கத்தின் செயல்முறைகளின் விளைவாக இது அமைந்தது. மேலும், இந்தச் செயல்முறைகள் இன ரீதியான பிரிவுகள், தனித்துவங்களை மீறாமல், அதேவேளை அவற்றை விரிவான பரந்த இனத்துவ அரசியலுக்குள் இணைத்தன.
இந்த அத்தியாயம், கொலனித்துவ இந்தியாவில் தமிழ்த் தரப்பு, முஸ்லீம் தரப்பு ஆகியன காங்கிரஸ் இயக்கத்தினை மையப்படுத்திய வரலாற்று நிகழ்வுகளை ஆராய்கிறது. பரந்த இனத்துவக் கருத்தியலின் ஊற்றுக்கண்ணிலிருந்து அதன் வளர்ச்சி நிகழ்ந்த தளங்களையும், செயற்களங்களையும் பேசுகின்றது. தமிழ் அரசியல் தரப்புகளிடத்திற் செல்வாக்கினைப் பெறமுடிந்த காங்கிரஸினால் முஸ்லீம் அரசியற் தரப்புகளுடன் உறவை ஏற்படுத்த முடியாமற் போனமைக்கான காரணங்களையும் விபரிக்கின்றது. இறுதியாக இந்த அத்தியாயம் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் அரசியலின் உறவை விவரிக்கிறது. முஸ்லீம் மக்களின் ஆதரவை நேரடியாகப்பெறும் முயற்சிகளில் காங்கிரஸ் இறங்கவில்லை. தமிழர்களுடன் ஒப்பிடும்போது கருத்தியல் மற்றும் அமைப்புசார் முறையில் காங்கிரஸோடு முஸ்லீம்கள் இணைக்கப்படவில்லை.
முஸ்லீம் தேசியவாதம்
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய அரசியலில் முஸ்லீம்கள் தனித்துவமான சமூக அரசியற் குழுவாகவும், தேசியக் குழுவாகவும் இருந்தனர். 1892 இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இந்தியாவின் மக்கள் தொகையில் முஸ்லீம்கள் ஏறத்தாழ இருபது வீதமாக இருந்தனர். ஆனால் மாநிலங்களுக்கிடையில் அவர்களின் பரம்பல் சமநிலையில் இருக்கவில்லை. பெரும்பாலானவர்கள் வங்காளத்தில் வாழ்ந்தனர்; பஞ்சாபிலும் முஸ்லீம் பெரும்பான்மை இருந்தது. அத்தோடு பல்வேறு பிராந்தியங்களில் சமூக மற்றும் கலாசார ரீதியாக முஸ்லீம் மக்கள் முக்கியமான சிறுபான்மையினராக இருந்தனர்.
மொழி, சாதி, கலாசாரம் மற்றும் பொருளாதார நிலைகளின் அடிப்படையில் முஸ்லீம் மக்கள் மத்தியிற் பிளவுகள் நிலவியது. இந்துக்கள் – முஸ்லீம்களுக்கிடையிலும் பிளவுகள் நிலவின. இந்த மாறுபட்ட குழுக்களை ஒன்றிணைக்கும் தனித்துவ முஸ்லிம் அடையாளம்சார் கருத்தியலின் அடிப்படையில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் முன்னெடுக்கப்பட்ட நவீன அரசியல் செயற்பாட்டிற்கான தாக்கங்கள், மூன்று செயற்பாடுகளிலிருந்து தோன்றின: முஸ்லீம் மறுமலர்ச்சியும் சீர்திருத்த இயக்கங்களும் – பிரித்தானிய ஆட்சியின் கூட்டு அறிவிப்புகள் – பிராந்திய, வர்க்கப் பிரிவுகள், வேறுபாடுகளை மீறிய அரசியல் அடையாளத்தை உருவாக்க முஸ்லீம் தலைவர்கள், அறிவுஜீவிகள் மேற்கொண்ட முயற்சிகள். இவையே அம்மூன்று தளங்களிலான செயற்பாடுகளாகும்.
தனித்துவ அடையாளத்திற்கான மறுமலர்ச்சியும் சீர்திருத்தமும்
சையித் அகமது (Saiyid Ahmed: 1786-1831) மற்றும் அவரது ஆதரவாளர்களில் ஒருவரான வட இந்தியாவின் ஹாஜி ஷரியத்துல்லா (Haji Shariatullah:1781-1840) மற்றும் அவரது மகன் துடு மியான் (Dudu Miyan:1819-62) ஆகிய முஸ்லீம் கல்வியாளர்களும் சீர்திருத்தவாதிகளும் வங்காளத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள், இஸ்லாமியத்தை சீர்திருத்தத்தின் பாதையை நோக்கி, ஒரு தெளிவானதும் வேறுபட்ட மத அடையாளத்தில் ஒருங்கிணைக்க முயன்றதாக ஆய்வாளர் ‘Peter Hardy’ அவர்களின் ஆய்வு மேற்கோள்காட்டுகின்றது. இந்து சீர்திருத்த இயக்கங்களுக்கு மாறாக, முஸ்லீம் சீர்திருத்தவாதிகள் தங்கள் செய்திகளை (பரப்புரைகளை) உயரடுக்கு அல்லாத குழுக்களை நோக்கி முன்னெடுத்துச் சென்றனர். சையித் அகமதுக்கு, சிறு நில உரிமையாளர்கள், ஆசிரியர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் சிறிய அதிகாரிகள் ஆகியோர் ஆதரவளித்தனர் எனப்படுகின்றது.
இஸ்லாமிய சீர்திருத்தவாதிகள், ஓர் இஸ்லாமிய சமூக மற்றும் மதக் கூட்டுறவை ஒருங்கிணைக்க முயன்றபோது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பிரித்தானிய அதிகாரிகள், அகில இந்திய முஸ்லீம் மதக் கூட்டுறவையும் முஸ்லீம் அரசியல் ஆர்வத்தையும், நிர்வாக நடைமுறைகளிலும் அதிகாரபூர்வத் தொடர்புகளிலும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். இது முதலில், 1871இல், இந்திய அரசாங்கத்தின் ஒழுங்குமுறையில் கவனப்படுத்தப்பட்டு, முஸ்லீம் கல்விக்கு அதிகாரபூர்வ ஆதரவையும் வழங்கியது.
பிரித்தானிய ஆட்சியில் முஸ்லீம்களின் நம்பகத்தன்மையை ஊக்குவிக்கும் ஒரு தீர்மானம் 1871 இல் நிறைவேற்றப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின் கீழ் முஸ்லீம்கள் அனைத்து வகையிலும் ஒடுக்கப்பட்ட ஒரு இனமாக வகைப்படுத்திய அறிக்கையும் அதே ஆண்டு வெளிவந்தது. இந்த மதிப்பீடு வெகுசில முஸ்லீம் குழுக்களுக்கு மட்டுமே பொருந்தியிருந்தாலும், இந்துக்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லீம்கள் ‘பின்னடைந்த’ நிலையில் உள்ளனர் என்ற பொதுவான மதிப்பீடாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பீடு முக்கியமானது, மேலும் 1871 தீர்மானத்திற்கு பிறகு, 1873 மற்றும் 1885 இல் இரண்டு கூடுதல் அரசாங்கத் தீர்மானங்கள் முஸ்லீம் கல்விக்கான அதிகாரபூர்வ ஆதரவை அங்கீகரித்தன. 1882 இல் முதல் உள்ளூர் அதிகாரிகளுக்கான தேர்தல்களின் அறிமுகம், முஸ்லீம் வாக்காளர்களுக்கான தனித்துவமான தேர்தல் தொகுதிகளையும் உருவாக்கியது. இதனால் முஸ்லீம்களுக்குத் தனித்துவமான அரசியல் வாக்காளர் தொகுதியும் அங்கீகரிக்கப்பட்டது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல்வேறு இயக்கங்களுக்கு ஊடாகவும், பிரித்தானிய ஆட்சிக்கு ஊடாகவும் முஸ்லீம் தேசியவாதம் வளர்ச்சியடைந்தமையையும் இந்த அத்தியாயம் விவரிக்கின்றது. சையித் அகமது மற்றும் ஹாஜி ஷரியத்துல்லா போன்ற தலைவர்களின் தலைமையில் முஸ்லீம் சீர்திருத்த இயக்கங்கள் உருவாகின. அவை இந்துக்களுடன் முஸ்லீம்கள் பகிர்ந்துவந்த பண்பாட்டுப் பழக்கவழக்கங்களை நிராகரித்து, ஒரு தனித்துவமான மத அடையாளத்தை ஒருங்கிணைக்க முயன்றன. அதேசமயத்தில், பிரித்தானிய ஆட்சியாளர்கள் ஒரு அகில இந்திய முஸ்லீம் அரசியல் அடையாளத்தை அங்கீகரிக்கத் தொடங்கினர் என்பதையும் இவ் அத்தியாயம் விளக்குகின்றது.
கொலனித்துவ இலங்கையில் சிங்களம், தமிழ் தேசியமயமாதல்
இலங்கையில், பரந்த இனத்துவ அரசியல் தளத்திற்குரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமையால் அத்தகு தளம் உருவாகவில்லை. இலங்கைத் தேசியக் காங்கிரஸ் (Ceylon National Congress – CNC) மற்றும் இலங்கை தேசிய சபை (Ceylon National Association – CNA) போன்ற அமைப்புகள் நாடு தழுவிய பரந்த இனத்துவ ஆதரவை உருவாக்குவதற்குரிய தொடர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இதன் விளைவாக, அவை எளிதில் புறக்கணிக்கப்பட்டு, புதிய அமைப்புகளால் மாற்றீடு செய்யப்பட்டன. 1947 ஏப்ரல் மாதத்தில், சோல்பரி அரசியலமைப்பின் (Soulbury Commission) கீழ் நடைபெறவிருந்த முதலாவது தேர்தலுக்கான முன்னாயத்தமாக, டி.எஸ். சேனநாயக்க இலங்கை தேசிய காங்கிரஸினைப் புறக்கணித்து ஐக்கிய தேசியக் கட்சியினை (UNP) உருவாக்கினார். CNC இன் பெரும்பாலான நாடாளுமன்ற வேட்பாளர்கள் தமது ஆதரவை UNP இற்கு வழங்கினர். 1947 தேர்தலில் 95 மொத்தப் பாராளுமன்ற ஆசனங்களில் 42 ஆசனங்களை UNP வெல்ல இது வழிகோலியது. UNP, தேசிய அடையாளம் மற்றும் தேசிய நலன்களில் மேம்பட்ட கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை. முக்கியமாக உள்ளூர் அரசியல்வாதிகளின் நலன்களை ஒருங்கிணைக்கும் கருவியாக அது செயற்பட்டது. சேனநாயக்கவைப் பிரதமராக ஆக்குவதே கட்சியின் முதன்மை இலக்காக இருந்தது.
பரந்த இனத்துவ அரசியல் தோல்வி
இந்தியாவை விடப் பல சாதகமான சூழல்களையும் வாய்ப்புகளையும் கொண்டிருந்த இலங்கைத் தீவில் பரந்த இனத்துவ அரசியல் தோல்வியடைந்தது. இந்தியக் காங்கிரஸ் தலைமைகளுக்கும் இந்தியாவின் முஸ்லீம் சமூகத்திற்குமிடையிலான கூட்டுறவு நல்லமுறையில் இல்லாதபோதும், பரந்த இனத்துவ அரசியல் வடிவத்தைக் கட்டமைப்பதற்கு தமிழக அரசியற் சக்திகள் மற்றும் தமிழ் இயக்கங்கள், அமைப்புகள் மையமாக இருந்தன. இலங்கைத் தமிழ்ச் சகோதரர்களான பொன். இராமநாதன், பொன். அருணாசலம் ஆகியோர் இலங்கை தேசிய காங்கிரஸ், இலங்கை தேசிய சபை ஆகிய கட்சிகளைத் தோற்றுவிப்பதில் முதன்மைப் பங்கினை வகித்திருந்தனர். இரண்டு அமைப்புகளும் பரந்த இனத்துவ அரசியலை முதன்மைப்படுத்த முயன்றன. பின்னர் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு, யாழ்ப்பாண அரசியல் இளைஞர் காங்கிரஸின் (Youth Congress) மேலாண்மைக்கு உட்பட்டிருந்தது. அது கொலனித்துவ எதிர்ப்புத் தேசியவாதத்தின் பரந்த இனத்துவ, வெகுஜன இயக்கத்தினை உருவாக்க முனைந்தது. இலங்கைத் தீவின் வரலாற்றில் இளைஞர் காங்கிரஸின் ஒரே கொலனித்துவ எதிர்ப்பு மக்கள் போராட்டம் 1931 இல் நிகழ்ந்தது. இது இந்தியக் காங்கிரஸ் தன்னை அமைப்பு ரீதியாகவும், மக்கள் ஆதரவு ரீதியாகவும் கட்டியெழுப்ப மேற்கொண்ட கொலனியாதிக்க எதிர்ப்பு மக்கள் போராட்டங்களுடன் ஒப்பிடக்கூடியது.
எனினும், இந்த நடவடிக்கைகள் சிங்களவர், தமிழர்களிடையே பரந்த அடிப்படையிலான இணைவாக்கங்களை ஏற்படுத்தவில்லை. மாறாக இரண்டு முரண்பாடான அரசியல், முற்றிலும் மாறுபட்ட தேசிய அடையாளம் மற்றும் தேசிய நலன்களின் கருத்துகளை மையப்படுத்திக் கட்டமைக்கப்பட்டது. டி.எஸ். சேனநாயக்கவின் தலைமையையும், UNP கட்சியினையும் ஆதரித்த முஸ்லீம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள், பரந்த இனத்துவ தேசிய அடையாளத்தை உருவாக்குவதை விரும்பாமல் பெரும்பான்மைச் சிங்கள ஆட்சியை ஏற்றுக்கொள்கின்ற நிலைப்பாட்டில் இருந்தனர். இலங்கைத் தீவின் தேசிய அடிப்படையாகச் சிங்கள – பௌத்தத்தை முன்வைத்தமை, தமிழர் மத்தியில் எதிர்ப்புகளைத் தோற்றுவித்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத் தமிழ் அரசியல், சமஸ்டிக் கட்சியின் (Federal Party) செல்வாக்கிற்குக் கீழ் இருந்தது. இது தமிழரும் சிங்களவரும் தீவின் சமமான பூர்வீக மக்கள் என்ற கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தியது. தமிழ் அரசியலின் இந்த நிலைப்பாட்டுக்கும் – இலங்கை அரச இயந்திரத்தில் திட்டமிட்ட வகையில் உள்ளிணைக்கப்பட்ட சிங்கள – பௌத்தக் கட்டமைப்புக்கும் இடையே முரண்பாடுகள் கூர்மையடைந்தன. இந்த முரண்பாட்டின் கூர்மையே சுதந்திரத்திற்குப் பிந்தைய தசாப்தங்களில் தீவின் அரசியலின் மையக்கூறாக மாறியது என நான்காவது அத்தியாயத்தில் விவரிக்கப்படுகின்றது.
இலங்கை: 1920 வரையான இனத்துவ மற்றும் தேசிய அரசியல்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோற்றம்பெற்ற பரந்த இந்தியத் தேசியவாதமானது மறுமலர்ச்சி மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் தனித்துவத் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களையும் நலன்களையும் ஏற்கின்ற வகையில் கட்டமைக்கப்பட்டமையை இந்நூலின் இரண்டாவது அத்தியாயம் விவரித்தது. இதற்கான அடிப்படைக் காரணி 1885 இலிருந்து 1920 வரையான காலத்தில் காங்கிரஸால் தோற்றுவிக்கப்பட்ட அதன் தொடர்ச்சியறாத செயற்பாடுகளாகும். காங்கிரஸின் செயற்பாடுகள் அதன் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அதனை இந்தியாவின் ஒரு தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியென நிறுவியது. ஆனால் இதே காலப்பகுதியில் இலங்கையில் பரந்த இனத்துவத் தேசிய அமைப்புகள் தோன்றத்தவறியதோடு, கருத்தியல் மற்றும் நலன்களின் அடிப்படையிலான கூட்டிணைவுகளும் நேரடிச் செயற்பாடுகளும் நிகழவில்லை.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிங்கள மற்றும் தமிழ் அரசியற் தரப்புகளின் ஆதரவோடு பரந்த இனத்துவ இலங்கைத் தேசிய அமைப்புகளை நிறுவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. சில தேசிய இயக்கங்கள் உருவாக்கப்பட்டன. 1888இல் இலங்கைத் தேசியச் சங்கம் (Ceylon National Association – CNA), 1918இல் இலங்கைத் தேசியக் காங்கிரஸ் (Ceylon National Congress – CNC), 1932 இல் சுதந்திர லீக் (Liberal League) ஆகியன உருவாக்கப்பட்டன. சுதந்திர லீக், 1920இற்கு முந்தைய இந்தியக் காங்கிரஸினை ஒத்ததாக, மனுக்கொடுத்தல், கூட்டங்களை நடாத்துதல் எனவாகத் தமது இயங்குதலை மட்டுப்படுத்திக்கொண்டது. நேரடியான கள அரசியல் அல்லது மக்கள் திரள் அரசியலை முன்னெடுப்பதைத் தவிர்த்தது. மறுபுறத்தில் 1905 காலப்பகுதியில் இலங்கை சீர்திருத்த சமூகம் (Ceylon Reform Society), 1924 இல் யாழ் இளைஞர் காங்கிரஸ் (Jaffna Youth Congress) ஆகியனவும் உருவாக்கம் பெற்றன. இளைஞர் காங்கிரஸானது, காங்கிரஸின் தீவிரப் பிரிவினை ஒத்ததாக, சமூகச் சீர்திருத்தம் மற்றும் பண்பாட்டு வடிவங்களின் மறுமலர்ச்சி ஆகியன அரசியல் விடுதலைக்கு அவசியமான கூறுகள் என்பதை வலியுறுத்தியது. இளைஞர் காங்கிரஸ் நேரடிக் கள அரசியலில் இறங்கியது. அது பரந்த இனத்துவத் தேசிய அமைப்பிற்குரிய கூறுகளைக் கொண்டிருந்தது. ஆனால் நிலைகொள்முறையில் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் அமைப்புசார் கட்டமைப்பினை அது கொண்டிருக்கவில்லை.
திக்குகள் எட்டும் தொடரின் அடுத்த பகுதியில் இந்நூலின் மிகுதி அத்தியாயங்களை நோக்குவோம். அவை பின்-கொலனித்துவ இந்தியாவில் ‘தேசத்திற்குள் தமிழர்கள்’, பின்-கொலனித்துவ இலங்கைக்குள் ‘தேசத்திற்கு அப்பால் சிங்களவர்களும் தமிழர்களும்’, ‘இலங்கையின் உள்நாட்டுப் போரின் தொடக்கம்’, ‘உள்நாட்டுப் போரின் முடிவு’, ‘சமகாலத் தமிழ்த் தேசியவாதம்’ ஆகிய தலைப்புகளைப் பற்றிப் பேசவுள்ளது.
தொடரும்.