இப்பகுதி ‘தமிழர்களும் தேசமும்’ எனும் மாதுரிகா இராசரத்தினம் அவர்களின் ஒப்பீட்டு ஆய்வுநூலின் நான்காவதும், ஐந்தாவதுமான அத்தியாயங்கள்மீது பார்வையைச் செலுத்துகின்றது. அவை முறையே ‘பின்-சுதந்திர இந்தியாவில் தேசத்திற்குள் தமிழர்கள்’, ‘தேசத்திற்கு அப்பால்: பின்-சுதந்திர இலங்கையில் சிங்களவரும் தமிழரும்’ எனும் தலைப்புகளைக் கொண்டுள்ளன.
நான்காவது அத்தியாயம் பின்-கொலனித்துவ யுகத்தில் தமிழக அரசியல் இயக்கங்களின் பரிணாமங்களுக்கும், இந்தியத் தேசிய அடையாளத்திற்குமிடையிலான தொடர்பு குறித்துப் பேசுகிறது. முதலில், இந்திய அரசியலமைப்பில் உள்ளீடாகவுள்ள இந்தியத் தேசிய அடையாளம் குறித்த அம்சங்களை விளக்குகிறது. இந்திய அரசியலமைப்பு என்பது காங்கிரஸ் கொள்கையின் வெளிப்பாட்டுவடிவம் என்பதோடு, பல இனங்களின் பன்மைத்துவத்தினை ஒருங்கிணைந்த தேசிய முழுமையாக மாற்றியமைக்கும் தன்மையோடும் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் திராவிட இயக்கம் மற்றும் காங்கிரஸ் இடையேயான தேர்தல் அரசியற் போட்டி; தமிழர் அடையாளம், நலன்கள் மற்றும் அரசியலமைப்பிற்கு ஊடான இந்தியத் தேசிய அடையாளம் பற்றிய புரிதலுடன் இணக்கமான கருத்தாக்கங்களின் அடிப்படையில் நடந்ததென வாதிடுகின்றது.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் (DMK) செயற்திறன்கொண்ட இயங்குநிலை, பொருளாதார நெருக்கடி மற்றும் காங்கிரசின் மீளெழுச்சிக்கு எதிரான தற்காலிக அரசியல் காரணிகள் ஆகியவற்றின் பின்னணியில் தமிழகத்தில் காங்கிரசின் தேர்தல் வீழ்ச்சி விளக்கப்படுகின்றது. இந்தியத் தேசியத்திற்குள் தமிழ் அடையாளத்தின் இணைவாக்கம் என்பது, இந்தியத் தேசியம் தொடர்பான ஓர் இனத்துவப் பன்மைத்துவப் புரிதலின் அரசியல் மேலாதிக்கமே என்று நிறுவுகிறார் நூலாசிரியர். மாறாக அந்த விளைவுக்கு அரசியலமைப்பின் கூட்டாட்சி விதிகளோ அன்றி திராவிட இயக்கங்களின் மிதவாதப்போக்கோ காரணமென்பதைவிட மேற்சொன்ன காரணமே முதன்மைப்பங்கு வகிக்கின்றது என்கிறார்.
சுதந்திரத்திற்குப் பிந்தையகாலத்தில், இந்திய அரசு தேசிய அடையாளம்சார் மறுபரிசீலனைக்கு உட்பட்டது. இந்த மறுபரிசீலனையின் முதன்மையமான இலக்கு அல்லது அடைவு புதிய இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதாகும். அரசியலமைப்பானது இந்தியத் தேசிய அடையாளம்சார் புரிதலை வெளிப்படுத்தியதோடு உறுதியும்படுத்தியது. இது இந்திய மக்களின் உள்ளக இனரீதியான பன்மைத்துவத்தினை அங்கீகரித்து, பொருளாதார மற்றும் சமூக மேம்பாடுசார்ந்து பகிர்வு அடிப்படையிலான தேசிய நலனை ஒருங்கிணைத்தது.
‘வேற்றுமையில் ஒற்றுமை’
இந்தியத் தேசிய அடையாளம் மற்றும் தேசிய நலன்கள்சார் புரிதல், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து காங்கிரஸின் கொள்கை மற்றும் அரசியல் வளர்ச்சியின் விளைவான ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் கருத்தியலின்வழி எட்டப்பட்டதாகும். சுதந்திரத்திற்குப் பிந்தைய தசாப்தங்களில், காங்கிரஸின் தேர்தல் மற்றும் அரசியல் மேலாண்மையானது இனத்துவப் பன்மைத்துவத்தினையும் ஒருங்கிணைந்த தேசிய அரசியலமைப்புக் கட்டமைப்பினையும்கொண்ட இரட்டைக் கொள்கைகளோடு, பொருளாதார மேம்பாட்டுக்கான உறுதியான கட்டமைப்புகளையும் இந்திய அரசியற் களத்தின் மையமாக நிறுவியது. 1977 இல் காங்கிரஸ் தேசிய மட்டத்தில் அதிகாரத்தை இழந்தபோதிலும், அது முதன்மைப்பாத்திரம் வகித்து உருவாக்கிய அரசியலமைப்பு, தென்-ஆசியாவில் பிரித்தானியக் கொலனித்துவ ஆட்சியைத்தொடர்ந்து உருவாக்கப்பட்ட அரசியலமைப்புகளில் நிலைத்தன்மையுடன் இருந்து வருகிறது.
அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தியத் தேசிய அடையாளம்சார் பிரதிபலிப்பும் புரிதலும், இந்திய அரசியல் இயக்கங்களின் முக்கிய உந்துசக்தியாக இருந்துவருகிறது. அதாவது சமூக மற்றும் அரசியல் இயக்கங்களைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும், அதேவேளை உரிமைகளை வலியுறுத்தும் ஆதாரமாகவும் செயற்படுகின்றது. அரசியலமைப்பின் இனத்துவப் பன்மைத்துவம் குறித்த உள்வாங்கல் அம்சங்கள் சாதகமாகவும், இந்தியத் தேசிய அடையாளம்சார் அம்சங்கள் சமூக – அரசியல் இயக்கங்களின் தனித்துவ உரிமை வலியுறுத்தல்களைப் பிரிவினைவாதமாகச் சித்தரித்துத் தடைகளை விதிப்பதற்கு ஆதாரமாகவும் அமைந்துள்ளன.
காங்கிரஸ் எதிர் திராவிட அரசியல்
ஒரு காலத்தில் பிரிவினையைக் (திராவிடநாடு, தமிழ்நாடு) கோரியதும், வெளிப்படையாக இந்திய எதிர்நிலை கொண்டுமிருந்த திராவிடர் கழகத்திலிருந்து (DK) உருவான திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) அரசியல் கட்சியாக வளர்ந்ததால், தமிழகத்தில் இந்தியத் தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி அரசியலை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சி சவாலுக்கு உள்ளானது. 1967 ஆம் ஆண்டில் தமிழத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது திராவிட முன்னேற்றக் கழகம். எனினும் இந்த மாற்றம் இந்தியத் தேசிய அடையாளத்தின் அடிப்படைகள் மீதான மறுவரையறை அன்றியும் திராவிடக்கொள்கையின் முழுமையான மறுசீராக்கம் இன்றியும் நடந்தேறியது. திராவிட மற்றும் இந்தியத் தமிழ் அடையாளம்சார் கருதுகோள்களுக்கு இடையே போதியளவு கொள்கை ஒத்திசைவு இருந்ததால் இந்தநிலை சாத்தியமானது. ஏனெனில் தமிழகத்தில் கொள்கைரீதியான ஒத்திசைவு என்பது காங்கிரஸ் இயக்கத்தின் அரசியற் செயற்பாடுகள்மூலம் உருவாக்கப்பட்டது.

அரசியலமைப்பு உருவாக்கத்தில் காங்கிரஸ் மேலாதிக்கம்
கொலனித்துவத்தின் இறுதிக்காலத்திலிருந்து 1977 வரை, இந்திய அரசியலமைப்பின் உருவாக்கம் மற்றும் அதன் நிலைத்தன்மையில், இந்திய அரசியற்களத்தில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு, கொள்கை மற்றும் தேர்தல் அரசியல் மேலாண்மைக்கு முதன்மை வகிபாகம் உண்டு. அரசியலமைப்பின் இறுதி வரையறையை உறுதிசெய்த அரசியற்பெறுமதிகள் காங்கிரஸ் கட்சியின் அரசியற்கொள்கையைப் பிரதிபலித்தன. அதன் தேர்தல் அரசியல் பலத்தினைப் பிரதிபலிக்கும்வகையில் அரசியலமைப்புச்சபையின் விவாதங்களில் மேலாண்மையையும், செல்வாக்குச்செலுத்தும் திறனையும் அது கொண்டிருந்தது. இந்திய அரசியலமைப்பின் உருவாக்கத்தை வழிநடத்திய ஜனநாயகம், சமூகநீதி, பன்மைத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகிய பெறுமானங்கள், காங்கிரஸ் கட்சியின் அரசியல் வளர்ச்சி, இந்தியத் தேசிய அடையாளம் மற்றும் நலன்களின் சட்டபூர்வப்பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தப் போராடியவற்றின் விளைவுகளாக இருந்தன. அரசியலமைப்புச்சபையில் வேறுபட்ட கருத்துகள் இருந்தபோதிலும், அரசியலமைப்பின் வரைவு, காங்கிரஸ் கட்சியில் உயர்மட்ட அதிகாரம்கொண்டிருந்த சில பிரதானநபர்களால் அதிகம் கட்டுப்படுத்தப்பட்டது. நில மறுசீரமைப்பு, பொருளாதாரக்கொள்கை மற்றும் சாதி போன்ற முதன்மைப்பிரச்சினைகளில் இந்தப் பிரதானநபர்களுக்கு இடையில் அடிப்படையான வேறுபாடுகள் நிலவின. ஆனால் அவர்களின் அரசியல் செயற்பாட்டியக்கம் மாநில மட்டத்தில் அல்லாமல், பரந்த இந்திய மட்டத்தில் இருந்தது. மேலும் அவர்கள் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டினை உறுதிப்படுத்தல், பொருளாதார மேம்பாடு, மற்றும் சமூக மாற்றத்தின் செயல்முறைகளை வழிநடத்தும் திறன்கொண்ட வலுவான மையப்படுத்தப்பட்ட மாநிலத்தின் தேவை ஆகியவற்றை ஒப்புக்கொண்டனர்.
இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு உருவாக்கச் செயல்முறை இந்தியச்சமூகத்தின் இனத்துவப் பன்மைத்துவத்தினை அங்கீகரிப்பதற்குரிய அதிகாரபூர்வ வரைபை உருவாக்கியது. அந்த வரைபு இந்திய ஒருமைப்பாட்டினைப் பாதுகாப்பதற்கும், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும், இந்தியத் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான பரந்த இலக்குகளுடன் இனப்பன்மைத்துவத்தினைப் பேணுவதற்கும் அவசியமானவற்றை முன்னெடுத்தது. அரசியலமைப்புச்சபை விவாதங்களின்போது, கொலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்களின்போது நிகழ்ந்ததுபோலவே, ஒருமைப்பாட்டின் அவசியம், இனத்துவ – சமூகப்பன்மைத்துத்தின் பிளவுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் எதிராக அதிகம் ஒப்பிடப்பட்டது.
தேசியமொழி விவாதங்களும் சர்ச்சைகளும்
இந்தியத் தேசிய முழுமையில், இனத்துவப் பன்மைத்துவத்தினை எவ்வாறு இணைவாக்கம் செய்யவேண்டுமென்பதில் இருவேறு எதிர்நிலைக் கருத்துகள் நிலவின. முதலில் தேசியமொழி குறித்த விவாதங்களின்போது, இந்துத் தேசியவாதிகளின் கருத்துகள் வலுவாக வெளிப்பட்டன. இந்துத் தேசியவாதிகள் சமஸ்கிருதமயப்பட்ட ஹிந்தியின் ஆதிக்கத்தினை நாடுமுழுவதும் உறுதிப்படுத்த முயன்றனர். உருது மற்றும் அரபு எழுத்துகளை நீக்கி, சமஸ்கிருதமயமான ஹிந்தியை வலியுறுத்தியதோடு, தென்இந்தியத் தேசிய இனங்கள் ஹிந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினர். இத்தகு இனத்துவக் கரைத்தல் திட்டத்திற்கு (Ethnically assimilation project) மாறாக, தென்இந்தியத் தேசிய இனங்கள், முஸ்லீம்கள் மற்றும் பிற இனத்துவச் சிறுபான்மையினர் உட்பட்ட தரப்புகளோடு, பன்மைத்துவ இனக்குழுக்களுக்கிடையிலான அரசியல் உறவினை எதிர்மறையற்ற அணுகுமுறையில் பேணும் நோக்குடன் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் எண்ணக்கருவினைக் காங்கிரஸ் தலைமை ஆதரித்தது. இந்தியத் தேசியத்தின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் கருத்தாக்கம், அரசியல் முழுமையாக இருப்பினும் இனப் பன்மைத்துவத்தால் அடையாளப்பட்டதாகும்.
சாதி, மதம்
சாதி மற்றும் மதக் குழுக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் சர்ச்சையான பிரச்சினைகளுள் ஒன்றாக இருந்தது. மதரீதியிலான குழுக்களுக்கு தனித்த தேர்தல்தொகுதி கொலனித்துவகாலத்தில் நடைமுறையில் இருந்தது. அந்நடைமுறை தேசிய ஒருமைப்பாட்டைப் பாதிக்கின்றது என்ற காரணம் முன்வைக்கப்பட்டு, அரசியலமைப்புச்சபை, கொலனித்துவ நடைமுறையைக் கைவிட்டது. இருப்பினும், தலித் மற்றும் பழங்குடிக் குழுக்களுக்கு (Scheduled Castes – SC, & Tribes – ST) சிறப்புப் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைத்தது. அவை பட்டியற் சமூகங்கள் மற்றும் பழங்குடிகள் என்று அழைக்கப்பட்டன. பல தொகுதிகள் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் தொகுதிகளாகக் குறிக்கப்பட்டன; இவற்றில் SC மற்றும் ST வேட்பாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட முடியும். மேலும், SC மற்றும் ST குழுக்களுக்கு பொதுத்துறை வேலைவாய்ப்புகள் மற்றும் உயர்கல்வியில் இடஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டன. இந்த இரு நடவடிக்கைகளும் இச்சமூகங்களின் பின்தங்கிய நிலையை மேம்படுத்தும் வழிமுறையாகக் குறுகிய காலத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன. மதக் குழுக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குந்தகமானது என்று நிராகரிக்கப்பட்டபோதிலும், இந்தியாவின் மதப்பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் அரசியலமைப்பு முயன்றது. மதச்சுதந்திரம் அடிப்படை உரிமை என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அத்தோடு கல்வி மற்றும் யாத்திரை போன்ற மத நடவடிக்கைகளுக்கு பொதுமானியங்கள் வழங்கப்பட்டன. உதாரணமாக ‘ஹஜ்’ மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன.
ஒரு தேசிய அல்லது அதிகாரப்பூர்வ மொழி வரையறை
மேலும் இந்த அத்தியாயத்தில், இந்தியாவின் மொழிசார் பன்முகத்தன்மை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டைச் சமரசம் செய்வதற்கான இரண்டு முக்கிய பிரச்சினைகள் விவரிக்கப்படுகின்றன. ஒரு தேசிய அல்லது அதிகாரபூர்வமொழியை வரையறுக்கவேண்டிய அவசியம் மற்றும் தேசியமற்றதும் அதிகாரபூர்வமற்றதுமான மொழிகளுக்கு (Non-national and non-official languages) வழங்கப்படும் அரசியல் அந்தஸ்து (Political Status) என்பன முதலாவது அம்சமாகும். இரண்டாவது பிரச்சினை, இந்தியாவின் மாகாண எல்லைகளின் மொழி மறுசீரமைப்புப் பற்றியது. மொழி தொடர்பான கேள்விகள், மீண்டும் இந்துத் தேசியவாதிகளுக்கும் மற்றும் இந்திய அடையாளத்தின் பன்முகத்தன்மையை ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் கருத்தியலாக வலியுறுத்திவந்த தரப்பினருக்கும் இடையிலான துருவமயப்பட்ட விவாதமாகியது.
காங்கிரசிற்குள் இருந்த இந்துத் தேசியவாதிகள் ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளுக்கு மாறாக சமஸ்கிருதமயப்படுத்தப்பட்ட இந்தி (Sanskritised Hindi) மொழிக்கு அதிகாரப்பூர்வ – தேசிய அந்தஸ்தினைக் கோரினர். பன்முகத்தன்மை அணுகுமுறையை ஆதரித்த நேரு (Jawaharlal Nehru) உட்பட்ட தலைவர்கள் மற்றும் அரசியலமைப்பு உருவாக்கச் செயல்முறையில் முதன்மைப்பாத்திரம் வகித்த பெரும்பான்மையினர், ஆங்கிலத்திலிருந்து இந்துஸ்தானி மொழிக்கான (A long-term switch from English to Hindustani, understood very much as composite of its Persian and Sanskrit roots) நகர்வை ஒரு நீண்டகால அடிப்படையிலாக திட்டமாக முன்வைத்தனர். நேரு மற்றும் பெரும்பாலான தென்னிந்தியப் பிரதிநிதிகள் ஆங்கிலத்தை மாநிலமொழியாகத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஆதரவாக இருந்தனர். தென்னிந்தியர்கள் இந்துஸ்தானி/ இந்தி கற்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை. காங்கிரசின் பன்முகத்தன்மைக் கொள்கைக்கு ஏற்ப மொழி தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட்டமை இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்படுகின்றது. இந்திக்கு உணர்ச்சிமயமான தேசியமொழி என்ற நிலை இல்லாமல் அதிகாரபூர்வமொழி என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறித்த தகவல்களும் இடம்பெறுகின்றன.
சட்டமன்ற ஏற்பு மொழிகள்: தமிழ் உட்பட்ட 13 பிராந்திய மொழிகள்
1965 வரையான 15 ஆண்டுகளுக்கு, அதிகாரபூர்வ நோக்கங்களுக்காக, படிப்படியாக இந்திக்கு மாறும்வரை, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலம் தக்கவைக்கப்பட்டது. அரசியலமைப்பினால், தமிழ் உட்பட்ட 13 பிராந்திய மொழிகளும், மாநில மற்றும் சட்டமன்ற ஏற்புமொழிகளாகப் பட்டியலிடப்பட்டது. பிராந்திய மொழிகளுக்கு இத்தகு அந்தஸ்து வழங்கியமைக்கு உளவியல் காரணம் முதன்மையாக இருந்ததாக அரசியலமைப்பில் மொழிவிதிகளை உருவாக்க உதவிய துர்காபி தேஷ்முக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகின்றது. மொழிகளை அரசியலமைப்பில் முறையாகப் பட்டியலிடுவது, புதிய இந்தியாவில் அவற்றிற்கான உரிய இடத்தை உறுதிப்படுத்தும் என்று நேரு பரிந்துரைத்ததாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்திய மாநிலங்களின் மொழிமறுசீரமைப்பு வரலாறு இந்த அத்தியாயத்தில் விரிவாக முன்வைக்கப்படுகின்றது. மொழிசார் கொள்கையும், நடைமுறையும் ஜனநாயகச் சுயாட்சிக்கான அடிப்படைத்தேவையாகக் கருதப்பட்டது. 1928 இல், ‘நேரு அறிக்கை’, இந்தியாவை மொழிவாரி மாகாணங்களாகப் பிரிக்கப் பரிந்துரைத்தது. ஆனால் அந்தப் பரிந்துரை 1940 களின் இறுதியில் இந்தியத் தேசியக் காங்கிரசால் எதிர்க்கப்பட்டதோடு, உடனடி மறுசீரமைப்பைத் தவிர்க்க ஆணைக்குழுக்களும் அமைக்கப்பட்டன.
தெலுங்குபேசும் பகுதிகளில் நடைபெற்ற பெருமளவிலான போராட்டங்களைத் தொடர்ந்து மொழிமறுசீரமைப்புச் செயல்முறை 1953 இல் நேருவால் தொடங்கப்பட்டது. தெலுங்குபேசும் மக்களுக்கான ஆந்திரப்பிரதேச மாநிலத்தை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது (தெலுங்கானாப் போராட்டம்: 1946-1951). இந்த இயக்கமே இந்தியா முழுவதும் புதிய மாநிலங்களை உருவாக்கும் ஒரு பரந்த அளவிலான மொழிமறுசீரமைப்பின் செயல்முறைக்குரிய தூண்டுதலாக அமைந்தது. தொடர்ச்சியாக 1967 இல் மதராஸ் என்று வழங்கிவந்த தமிழ்பேசும் மாநிலம் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது.
மொழி அடையாளவெளி – பிராந்தியத் தேசிய அடையாள எழுச்சி
இருந்தபோதும் இங்கு புரிந்துகொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சம் யாதெனில் இந்திய அரசியலமைப்பு மாநில மொழி அடையாளங்களை முழுமையாக நிலைநிறுத்தும் பொருட்டு அதற்கான வெளிகளோடு வடிவமைக்கப்பட்ட ஒன்று அல்ல. அது வலுவான மைய அரசைப் பேணும்பொருட்டு வடிவமைக்கப்பட்டது. இதனால் மாநிலங்களின் எல்லைகளை மத்திய அரசு மாற்ற முடிந்தது. இனரீதியான பன்முகத்தன்மையின் அரசியல் அங்கீகாரம் முன்னேற்றத்தின் ஒரு வழியாகக் கருதப்பட்டது. ஆனால் மொழிரீதியான பன்முகத்தன்மை பாகுபடுத்தும் எனக் கருதப்பட்தால், அது எதிர்க்கப்பட்டது. இந்தியத் தேசியத்தின் இந்தப்போக்கும் கருத்தியலும், குறிப்பாக தமிழ்நாட்டில் பிராந்தியத் தேசிய அடையாளத்தின் எழுச்சிக்கு வழிவகுத்தது.
மேலும் இந்த அத்தியாயத்தில், தமிழ் அடையாளம், காங்கிரஸ் கட்சி மற்றும் திராவிடக் கொள்கை ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பு ஆகியனவும் ஆராயப்படுகின்றது. அந்த ஆய்வு, இந்த இரண்டு இயக்கங்களும் காலப்போக்கில் எவ்வாறு மேலெழுந்தன என்ற நோக்குநிலையிலிருந்து எழுதப்படுகின்றது. திராவிடர் கழகம் பிரதிநிதித்துவப்படுத்திய திராவிடக்கொள்கை என்பது, இந்துத்துவ சித்தாந்தங்கள், சடங்கு நிராகரிப்புகளை வலியுறுத்தியது; முற்போக்குமிக்கதும், மதச்சார்பற்றதுமான நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை மேம்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தியது. மேலும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடுகளையும் வலியுறுத்தியது.
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்ப்பண்பாடு, கலை, இலக்கிய மேம்பாடு மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் நலன்களை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியது. அத்தோடு தமிழ் – தமிழர் நலன்களை அடைவதற்கான ஒரு படிக்கல்லாக அது இந்தியச் சுதந்திரத்தினைக் கருதியது. 1960 களில், திராவிட முன்னேற்றக் கழகம், சமூக சீர்திருத்தத்திலிருந்து தமிழ் மக்களின் பொருளாதார நலனை வலியுறுத்தும்வகையில், தேர்தல் பிரசாரத்தின் முதன்மைப் பொருளை மாற்றியது. மேலும் தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்குப் பொதுத்துறையில் இடஒதுக்கீடுகளையும் விரிவுபடுத்தியது.
இந்த அத்தியாயம், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வீழ்ச்சி, திராவிடக் கட்சிகளின் எழுச்சி, அவற்றின் அரசியல் இயக்கம் மற்றும் தேர்தல் அரசியல் பங்கேற்பினால் ஏற்பட்ட மாற்றங்கள் தேர்தல் முடிவுகளை எவ்வாறு பாதித்துள்ளன என்பதையும் ஆராய்கிறது. 1967 இல் தமிழகத்தில் காங்கிரஸ் அதிகாரத்தை இழந்தது. சித்தாந்த, கருத்தியல் முரண்பாடுகள் மட்டுமின்றி, பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் உள்ளகப் பிளவுகளும் காங்கிரசின் பின்னடைவுக்குக் காரணங்களாயின. இது தேசிய அளவில் கட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய தசாப்தங்களில் திமுகவின் தேர்தல் வெற்றி என்பது அதிகரித்த தேர்தல் பங்கேற்பின் விரிவாக்கத்துடன் தொடர்புடையது; குறிப்பாக இடைநிலை அல்லது தாழ்த்தப்பட்ட சமூகக் குழுக்களின் (Intermediate/ backward class) தேர்தல் பங்கேற்புடன் தொடர்புடையது. அதிலும் குறிப்பாக காங்கிரஸின் ஆதரவுத்தளங்களுக்கு வெளியே இருந்த சமூகங்களை திமுக உள்வாங்கிக்கொண்டது. இடைநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகக்குழுக்கள் மத்தியிலான அரசியல் பங்கேற்பின் விரிவாக்கம் தமிழகத் தேர்தல் இயக்கவியல் முறைமையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிகோலியது. 1957 – 1967 காலப்பகுதியில் வாக்காளர் பங்கேற்பு, 49 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாக அதிகரித்தது. அதேநேரத்தில் தனிப்பட்ட நம்பகத்தன்மை மற்றும் செல்வாக்குகள் சார்ந்த வலையமைப்புகளை நம்பியிருந்த சுயாதீன வேட்பாளர்களால் பெறப்பட்ட வாக்குகளின் விகிதம் 25 வீதத்திலிருந்து 7 வீதமாகக் குறைவடைந்தது. இந்த மாற்றத்தின் விளைவாக அதேகாலப்பகுதியில் காங்கிரஸ் வாக்குகள் 45 வீதத்திலிருந்து 41 வீதமாகக் குறைவடைந்தது. திமுக ஆதரவு அதேகாலகட்டத்தில் 13 வீதத்திலிருந்து 41 சதவீதமாக உயர்ந்தது. உண்மையில், திமுகவின் வாக்கு விரிவாக்கம் என்பது, ஒருபுறம் காங்கிரஸ் வாக்காளர்களில் ஒரு பகுதியினரை ஈர்த்தமை, சுயாதீன வேட்பாளர்களின் வாக்குகளை வசப்படுத்தியமை மற்றும் வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்கவைத்தமை ஆகிய மூன்று விளைவுகளின் அறுவடை.
தமிழ்க் கலாசாரத் தேசியவாதம்
திராவிடக்கட்சிகள் நேரடி அரசியல் பரப்புரைகள்மூலம் ஆதரவை அதிகரிக்கும் வகையில் திறமையாக இயங்கின. புதிய வாக்காளர்களை உள்வாங்குவதிலும் வெற்றி கண்டது. காங்கிரசின் பாரம்பரிய ஆதரவு வலையமைப்புகளுக்கு மாறாக, புதிய மக்கள் குழுக்களை உள்வாங்கியமை திமுகவின் வெற்றிக்கும் வளர்ச்சிக்குமான காரணியாகும். தொடர்ச்சியாக இந்த அத்தியாயம், தமிழ்த் தேசியவாதத்தின் வகிபாகம் மற்றும் தமிழக அரசியல் மாற்றங்களை ஆராய்கிறது. குறிப்பாக திமுக மற்றும் திமுக சார்ந்த நிகழ்வுகளை முன்வைக்கின்றது. சமூகச் சீர்திருத்தத்திலிருந்து தமிழ்க் கலாசார தேசியவாதத்தின்மீது திமுக கவனத்தினைத் திருப்பியது. இம்மாற்றம் அரசியல் கூட்டணிகள் மற்றும் தேர்தல் முடிவுகளை எவ்வாறு பாதித்தது என்பதையும் இந்த அத்தியாயம் பேசுகின்றது.
சமூகச் சீர்திருத்தப்பாதையை விட்டுவிலகி தமிழ்க் கலாசார தேசியவாதத்தின்மீது கவனம் செலுத்தும் திமுகவின் முடிவு, இந்திய அரசியலமைப்பிற்குச் சாதகமான ஒரு மூலோபாயத்தழுவல் ஆகும். இது மத உரிமைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு முன்னுரிமை அளித்தது. 1963 இல் திமுக ‘திராவிடநாடு’ கோரிக்கையைக் கைவிட்டமையும் இக்கொள்கையின் பாற்பட்டது. அந்த அடிப்படையில் தமிழக அரசியல் வளர்ச்சி, பிரிவினைவாதக் கோரிக்கைகளிலிருந்து இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓர் ஏற்றுக்கொள்ளக்கூடிய வடிவமான கலாசாரத் தேசியவாதத்திற்கான மாற்றுப்பாதையாக வடிவம் பெற்றமை பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. இம்மாற்றம், தனிநாட்டுக் கோரிக்கையிலிருந்து விலகி, தமிழ்நாட்டிற்கு கூடுதல் மாநில தன்னாட்சியைக் கோரியது. தமிழ்மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது. அதேசமயம் இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டினைப் பேணும் அணுகுமுறையையும் கொள்கைரீதியாக வெளிப்படுத்தியது. 1972 இல் தொடங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 1976 இல், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர்மாற்றம் செய்துகொண்டது. இது இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளும் ஒரு சமிக்ஞை.
இந்தியத் தேசியத்திற்குள் தமிழர் நலன் – இலங்கைத் தேசியத்திற்கு அப்பால் ஈழத்தமிழ்த் தேசியம்
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அனைத்து இந்திய முன்னொட்டினை ஏற்றுக்கொண்டபோது, இலங்கையின் முதன்மைத் தமிழ்க் கட்சியான தமிழரசுக் கட்சி, கூட்டாட்சிக்கான முப்பதாண்டுகளுக்கு மேலான கோரிக்கையை விட்டுவிலகி, முழுமையான சுதந்திரம் அல்லது தனிநாட்டினை (பிரிவினையை) ஆதரித்தது. பிரிவினைகோரிய திராவிட இயக்கங்களின் இந்திய அரசியலமைப்புச்சார்ந்த மென்முறை அணுகுமுறை என்பது, தமிழ் அடையாளம் மற்றும் நலன்கள் சார்ந்த திராவிட மற்றும் இந்திய தேசியவாத கருத்துகளின் கூட்டுவிளைவாகும் என இந்த அத்தியாயம் வாதிடுகின்றது. இது, திராவிடக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் ஆகியன அரசியல் விரோதிகள் என்பதைவிட, அரசியல் போட்டியாளர்கள் என்பதைக் குறிக்கின்றது. தமிழ்மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சி, சமூகச் சீர்திருத்தம் மற்றும் நலன்கள் வழங்கல் ஆகியவற்றில் தமிழ் நலன்களைப் பாதுகாப்பது போன்றவை நெறிமுறைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பகிர்வுசார் அரசியல் பண்பாட்டுத்தளத்தில், திராவிடக் கட்சிகளும் தமிழ்நாடுக் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டன. மேலும், இந்தப் பகிர்வுசார் நெறிமுறைகள், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய பரந்த இனத்துவத்தளத்தை உருவாக்குவதற்கான காங்கிரஸின் அரசியல் போராட்டத்தின்மூலம் உருவான, இந்தியத் தேசிய அடையாளம் மற்றும் தேசிய நலன்களின் அரசியலமைப்பு வரையறைகளுக்கு இணக்கமானவை.
அப்பாலான தேசங்கள்: பின்-சுதந்திர இலங்கையில் சிங்களவரும் தமிழரும்
தேசத்திற்கு அப்பால் எனும் தலைப்பிலமைந்த இந்த நூலின் 5 ஆவது அத்தியாயம் பின்-சுதந்திர இலங்கைத்தீவில், தமிழர் – சிங்களவர்களுக்கிடையேயான இனமுரண்பாட்டினை ஆராய்கின்றது. முரண்நிலைத் தேசிய அடையாளங்கள் மற்றும் நலன்கள் எவ்வாறு இனமோதலுக்கு வழிவகுத்துள்ளன என்பதைக் கவனப்படுத்துகின்றது. சிங்கள – பௌத்த அடையாளத்திற்கும் தமிழ்த் தேசிய அடையாளத்திற்குமிடையில் தெளிவான முரண்பாடுகள் உள்ளன. இம்முரண்பாடுகள் சமத்துவமும் தன்னாட்சியும் கோரிய போராட்டத்திற்குத் தமிழர்களை உந்தித்தள்ளியது. அதேவேளை சிங்களக் கட்சிகள், ஒன்றுபட்ட இலங்கையை வலியுறுத்திவந்துள்ளன.

1977 இற்குப் பின் இலங்கையின் அரசியல் களமும் கட்டமைப்பும் பௌத்த – சிங்கள மேலாதிக்கத்தின் செல்லாக்கிற்கு உட்பட்டதாக ஆக்கப்பட்டது. இது தமிழர்களின் நலன்கள் மற்றும் தன்னாட்சிக் கோரிக்கைகளைக் கட்டமைப்பியல்ரீதியாக ஒடுக்கவும் வழிகோலியது. பௌத்த – சிங்கள அடையாளங்களும், தமிழ்த் தேசிய அடையாளங்களும் இனரீதியாக இரண்டு தரப்பின் அரசியல் நடவடிக்கைகளை எவ்வாறு வடிவமைத்தன, மோதல்களுக்கு எவ்வாறு வழிகோலின என்பதையும் இந்த அத்தியாயம் பேசுகின்றது.
இரு தரப்பு அடையாளங்களும் இருதரப்பு அரசியல் நடவடிக்கைகளுக்கான வலுவானதும் மேலாண்மைமிக்கதுமான வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றன. அவை இருதரப்பிலும் சாதிய, பிராந்திய மற்றும் மதம் போன்ற உட்பிரிவுகள்சார் செல்வாக்கினையும் கொண்டிருந்தன. UNP மற்றும் SLFP இடையேயான அரசியல் போட்டியானது பௌத்த – சிங்களத் தேசியவாதத்தை ஒருங்கிணைப்பதிலும் முக்கியபங்கு வகித்திருக்கின்றது.
சிங்கள – பௌத்தவாதத்தின் மேலாண்மை இரண்டு கட்டங்களாக ஒருங்கிணைக்கப்பட்டன: 1947 முதல் 1956 வரை UNP ஆட்சிக்காலம், மற்றும் 1956 முதல் 1977 வரை மாறிமாறி UNP மற்றும் SLFP ஆட்சிசெய்த காலம். முதற்கட்டம் பௌத்த – சிங்கள தேசிய அடையாளம் மற்றும் பல்லினக்கட்டமைப்பின் இடையே ஒரு நிச்சயமற்ற இணக்கத்துடன் இருந்தது. இரண்டாவது கட்டத்தில் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் வலுவடைந்ததை அடுத்து, பௌத்த – சிங்களத் தேசியவாதம் அரசினது முக்கிய அம்சமாக மாறியது. இரண்டாவது கட்டம், தமிழ் – சிங்கள மோதலின் கூர்மையடைந்த சமகாலத்தில், தமிழ் அரசியல் கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்பட்ட புறச்சூழலில் நிகழ்ந்தது.
இலங்கைத்தீவின் அரசியல் போக்கினை வடிவமைத்த கொள்கை
1977 வாக்கில் தேசிய நலன் மற்றும் தேசிய அடையாளம் ஆகிய இரண்டு ஒன்றோடொன்று பொருந்தாத கருத்துநிலைகள், இலங்கைத்தீவின் அரசியல் போக்கினை வடிவமைத்த கொள்கையாக உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது; சிங்கள – பௌத்த நிலைப்பாடு அரசியல் கட்சிகள் மற்றும் அரசின் நடவடிக்கைகளின் வாயிலாக ஆதரிக்கப்பட்டது. தமிழர்நிலைப்பட்ட பார்வை, அரசின் நிகழ்ச்சிநிரலுக்கு எதிரானவகையில், தமிழ் அரசியல் கட்சிகளாலும், பிற்பட்டகாலத்தில் ஆயுத இயக்கங்களின் மூலமாகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு மாறுபட்ட பார்வைகளின் அரசியல் கூர்மையடைந்தமையை இனரீதியான மக்கள்தொகை, குறுகியகால நலன்கள், உந்துதல்கள் போன்ற நிலையான காரணிகளால் மட்டுமே விளக்கமுடியாது. மாறாக, இந்த முரண்பாடுகள் கூர்மையடைந்ததற்கு, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு பரந்த இனத்துவக் கருத்தியலை உருவாக்குவதற்கான பேண்தகு அரசியல் முன்னெடுப்புகள் பற்றாக்குறையாக இருந்தமையே அல்லது முழுமையாக இல்லாமையே அடிப்படைக்காரணி என்கிறார் நூலாசிரியர். இதனால், தீவின் இனத்துவப் பன்முகத்தன்மை, ஒருங்கிணைந்த தேசிய அடையாளம் மற்றும் நலன்களுடன் எவ்வாறு பொருந்தும் என்பதற்கான புரிதலின்றி முரண்பாடுகள் தோன்றின என்கிறார்.

அரசினை மையமயமாக்கலும் சிங்களத் தேசியமயமாக்கலும்
இந்த மோதலின் அதிகரிப்பு அரசியல் தலைவர்களின் தீவிர அல்லது மிதவாதப்போக்கின் விளைவு மட்டுமல்ல, மாறாக அவர்களின் தேசிய நிலைப்பாட்டு வரையறையின் தர்க்கம் மற்றும் வெற்றியுமாகும். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, சிங்களத் தேசியவாத முதலீட்டுத்தளத்தில் தனது கட்சியை (SLFP) அதிகாரத்திற்குக் கொண்டுவந்ததை அடுத்து, தமிழர் கட்சிகளுடன் ஓர் உடன்பாட்டினை எட்டுவதற்கு முயன்றார். ஆனால், சிங்கள பௌத்தவாதத்தால் உருவாக்கப்பட்ட எதிர்ப்பிற்கு முகம்கொடுக்கவும் நேர்ந்தது. 1965 இல், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் தமிழரசுக் கட்சி முன்வைத்த பிராந்தியத் தன்னாட்சி மற்றும் மொழி உரிமைகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற முயன்றனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியி (எதிர்க்கட்சி) இதனைக் கடுமையாக எதிர்த்தது. இலங்கை அரசு மையமயமாக்கலுக்கும் (துருவமயமாக்கல்), சிங்களத் தேசியமயமாக்கலுக்கும் (Centralization and Sinhala nationalization of the Sri Lankan state) உட்படுவதைத் தடுக்கத் தவறியமை, இலங்கைத்தீவின் இனமுரண்பாட்டினை மேலும் கூர்மையடையச் செய்தது.
இறுதியாக, 1977 தேர்தல் அறிக்கையில் தமிழீழத் தனிநாட்டினை தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) கோரியபோதிலும், தமிழ்ப்பிரதேசங்களுக்கு வரையறுக்கப்பட்ட தன்னாட்சியுடனான (District Development Councils) மாவட்ட மேம்பாட்டுக் கவுன்சில்கள் தொடர்பான முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஐ.தே.க தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுடன் அந்த உடன்படிக்கை எட்டப்பட்டது. இந்த முயற்சி, அமைச்சரவையில் கிளம்பிய எதிர்ப்பு, ஜெயவர்த்தனவின் இரட்டைநிலை, தமிழ்ப் போராட்ட இயக்கங்களுக்கும் இராணுவத்திற்குமிடையேயான மோதல்கள், 1983 ஆம் ஆண்டின் தமிழர் எதிர்ப்பு வன்முறைகள் ஆகிய பல்வேறு காரணிகளின் பின்னணியில் தடுக்கப்பட்டது. சிங்கள – பௌத்த அடுக்குநிலை ஒழுங்கு (Hierarchical order) மற்றும் சம உரிமை தொடர்பான தமிழர்களின் கோரிக்கை ஆகியவற்றுக்கு இடையிலான பாரிய இடைவெளி முரண்பாட்டின் தீர்க்கமுடியாத அம்சமாக இருந்து வந்துள்ளது.
இந்நூலின் அடுத்த பகுதியின் மூன்று அத்தியாயங்கள், 1980 களின் ஆரம்பத்தில் இலங்கைத்தீவின் இனமுரண்பாடு வேகமாகக் கூர்மையடைந்த புறச்சூழல்களிலிருந்து, முழுமையான உள்நாட்டுப் போராக அது உருவெடுத்தமை, அதன் சர்வதேசமயமாக்கல் ஆகியன குறித்து ஆராய்கின்றது. ஜெயவர்த்தன அரசாங்கத்தின் மேற்கு ஆதரவு, நவதாராளவாத மறுசீரமைப்புகளை ஏற்றுக்கொண்டது. கொம்யூனிச எதிர்ப்புடன் தமிழ் ஆயுத இயக்கங்களுக்குப் பயங்கரவாத முத்திரை குத்தும் இலங்கை அரசின் பிரசாரங்களுக்கான வலுவான சர்வதேச ஆதரவும் எட்டப்பட்டது. இலங்கையுடனான மேற்கின் செல்வாக்கும் உறவுகளும் டெல்லிக்கு உவப்பானதாக இருக்கவில்லை. இலங்கைக்குள் மேற்கின் உள்நுழைவு, இந்தியாவின் செல்வாக்கிற்கும் வகிபாகத்திற்குமான அச்சுறுத்தலாக இந்தியாவினால் பார்க்கப்பட்டது. இது 1980 களின் நடுப்பகுதியில் இந்தியத்தலையீட்டுக்கு வழிகோலியது. நூலின் இரண்டாம் பகுதி இந்நிகழ்வுகளை விவரிக்கிறது. அத்தோடு சர்வதேசத் தலையீடுகள் அவற்றின் இலக்குகளை அடையத் தவறியதற்கான காரணங்களையும் விளக்குகிறது. மேற்கத்திய நவதாராளவாதக் கொள்கை இலக்குகளுடனான உள்நுழைவும், செல்வாக்கும், இந்தியாவின் பிராந்திய வகிபாக முதன்மை, இவற்றுக்கு நடுவில் உள்நாட்டுப்போரின் தீவிரமடைவு, சிறிலங்கா அரசு அதன் சிங்கள – பௌத்தவாதக் குணாம்சங்களை வலுப்படுத்தியமை, தமிழர் தேசிய இயங்குதளம் ஆயுதப் போராட்டமயப்பட்டதாகக் கூர்மையடைந்தமை எனவான பேசுபொருட்களை அலசுகின்றது அடுத்த பகுதி.