பஞ்சத்தில் உயிர்காத்த மரவள்ளி
Arts
10 நிமிட வாசிப்பு

பஞ்சத்தில் உயிர்காத்த மரவள்ளி

June 12, 2023 | Ezhuna

நாள்தோறும் நாம் உணவாகக் கொள்ளும் தானியங்கள், காய்கறிகள், சுவையூட்டிகள், பாலுணவுகள் என்பவற்றின் குணங்கள் மற்றும் பயன்பாடு பற்றிக் கூறும் நூல் பதார்த்தகுணம் என்று அறியப்படும். அகத்தியர், தேரையர் முதலானோரின் பெயர்களில் பதார்த்தகுணம், குணபாடம் போன்ற தலைப்புகளில் பலநூல்கள் கிடைக்கின்றன.  இவ்வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற நூல்களுள் ஒன்றே இருபாலைச்செட்டியார் என்று அறியப்படும் ஒரு மருத்துவரால் ஆக்கப்பெற்ற பதார்த்தசூடாமணியாகும். இற்றைக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் இலங்கை வருகைக்குப் பின்னர் ஆக்கம் பெற்ற இந் நூலில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு உணவு வகைகள் தொடர்பில் கூறப்பட்டுள்ளவற்றை ‘பதார்த்த சூடாமணி’ என்ற இத் தொடர் ஆராய்கின்றது.

தமிழ்மக்களின் உணவுப்பதார்த்தங்கள் தொடர்பான பழைய நூல்களுள் ஒன்றில்கூட மரவள்ளிக்கிழங்கு இடம்பெற்றிருக்க முடியாது. வள்ளி அல்லது வல்லி என்பது படரும் கொடியைக் குறிக்கும். வள்ளி என்றால் நிச்சயமாக அது நிலத்தின் மேலே கொடியும் கீழே கிழங்கும் உள்ள தாவரம் ஒன்றையே குறிக்கும். சங்ககாலத்தில் குறிஞ்சிநில மக்களின் பிரதான உணவுகளுள் ஒன்று வள்ளிக்கிழங்கு. பிற்காலத்தில் நிலத்தின் கீழே கிழங்கும் மேலே மரமும் கொண்டதாக ஒரு பயிர் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதற்கு ‘மரவள்ளி’ என்று பொருத்தமான ஒரு பெயரைச் சூட்டினார்கள் தமிழர்கள். ஆம். இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் ஈழத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் உணவுப்பயிர்தான் மரவள்ளிக் கிழங்கு. பதார்த்தசூடாமணி போன்ற பிற்காலத்து நூல்களில் கூட மரவள்ளி இடம் பெறாமைக்கு இதுதான் காரணம். எனினும் இன்று உலகின் ஆறாவது மிகமுக்கியமான உணவுப்பயிராக விளங்கும் மரவள்ளிக்கு சுவையான ஒரு வரலாறு உண்டு.

Manihot-esculenta-Crantz

மரவள்ளியின் பிறப்பிடம் தென் அமெரிக்கா. இற்றைக்கு எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே பிரேசிலின் தென்மேற்கு அமேசான் மற்றும் பொலீவியாவில் வாழ்ந்த மக்கள் மரவள்ளிப் பயிர்ச்செய்கையை ஆரம்பித்துவிட்டார்கள். காலந்தோறும் பயிர்ச்செய்கையாளர்கள் நல்ல இனங்களைத் தெரிவுசெய்து பேணி வந்ததன் காரணமாக நச்சுத்தன்மை குறைவான மரவள்ளி இனங்கள் எம்மை வந்தடைந்தன.

1558 ஆம் ஆண்டளவில் ஆபிரிக்காவின் கொங்கோ ஆற்றுப் பெருநிலத்துக்குப் போர்த்துக்கேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட தென்அமெரிக்கப் பயிரான மரவள்ளி இன்று 30 கோடி ஆபிரிக்கமக்களின் ஜீவாதாரமாக விளங்குகின்றது.

எனினும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மரவள்ளியை அறிமுகப்படுத்துவதில் போர்த்துக்கேயர் ஏனோ ஆர்வம் காட்டவில்லை. பொது ஆண்டு 1800க்குச் சமீபமாகவே மரவள்ளிக்கிழங்கு இலங்கை மக்களுக்கு அறிமுகமாயிற்று. மரவள்ளிப் பயிர்ச்செய்கை இந்தியாவுக்கு முன்னரேயே இலங்கையில் ஆரம்பமாகிவிட்டது. இலங்கையில் மரவள்ளிப் பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்தியவர்களென இருவேறு நபர்கள் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் ஒருவர் ஆங்கிலேயர் மற்றவர் டச்சுப் பின்புலத்தை கொண்டவர். ஆங்கிலேயரான ஜே. டபிள்யூ. பென்னெற் (J. W. Bennett) என்பவர் தாம் எழுதிய ‘இலங்கையும் அதன் திறன்களும்” (Ceylon and its capabilities) என்னும் நூலில் பொது ஆண்டு 1821இல் மொரீசியஸ் நாட்டில் இருந்து தாமே மரவள்ளித் துண்டங்களைக் கொண்டுவந்து இலங்கையின் தென்மாகாணத்து விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்ததாகவும் எனினும் வெகுசிலரே மரவள்ளிப் பயிர்ச்செய்கையில் ஆர்வம் காட்டியதாகவும் எழுதி வைத்துள்ளார். “மரவள்ளியின் அற்புதமான பயன்களை நம்மவர்கள் உணரத் தவறிவிட்டனர். இரண்டு தடவை நெற்பயிர்ச்செய்கை பிழைத்தால் மட்டுமே மரவள்ளியின் பெருமையை இவர்கள் அறிந்துகொள்ளமுடியும்” என்றும் பென்னெற் பதிவுசெய்துள்ளார்.

எனினும் இலங்கையில் முதன்முதலாக மரவள்ளி பயிரிடப்பட்டது ஒல்லாந்தரின் ஆட்சியின்போதுதான் என்று பதிவு  செய்துள்ளார் 1905இல் கண்டியில் அரசாங்க அதிபராக இருந்தவரும் வரலாற்றாசிரியருமான J. P. லூயிஸ் அவர்கள். முதன்முதலாக மரவள்ளிப் பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்தியவர் 1783க்கும் 1795க்கும் இடைப்பட்ட காலத்தில் வன்னிப்பிராந்தியத்தின் நிர்வாகியாக இருந்த தோமஸ் நகெல் (Thomas Nagel) என்னும் டச்சுக்காரரே என்கிறார் லூயிஸ்.

Manihot-esculenta-Crantz-2

இலங்கையின் வடபகுதியில் இருந்த வன்னிப்பிரதேசத்தின் இயற்கைவளங்களால் கவரப்பட்ட ஒல்லாந்தர்,  எப்பாடுபட்டேனும் அப்பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்பினர்.  எனினும் அது இலகுவான காரியமாக இருக்கவில்லை. போர்த்துக்கேயரைப் போல் பெயரளவில் மட்டும் வன்னியின் ஆட்சியாளராக இருக்க விரும்பாத ஒல்லாந்தர் வன்னியர்களைப் போரின்மூலம் அடக்கத் தீர்மானித்தனர்.

1782 ஆம் ஆண்டில் கடுமையானதொரு இராணுவ நடவடிக்கையின் மூலம் ஒல்லாந்தர் வன்னியைக் கைப்பற்றிக் கொண்டனர். வன்னியர்களுக்கும் ஒல்லாந்தருக்குமான போரில் ஒல்லாந்தரை எதிர்த்து இறுதிவரை போராடிய ‘வன்னிச்சி மரியை செம்பாத்தை’ சிறைபிடிக்கப்பட்டுக் கொழும்புக் கோட்டையில் தடுத்து வைக்கப்பட்டார். இந்தப் போராளி அரசி பற்றிய வரலாறு பரவலாக அறியப்படவேண்டிய ஒன்று. வன்னியைக் கைப்பற்றிய ஒல்லாந்தப் படையணியின் அதிகாரியாக இருந்தவரே தோமஸ் நகெல்.

தொடர்ச்சியான போர்கள் காரணமாக நெற்பயிர்ச்செய்கை கைவிடப்பட்டு பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிக் கஷ்ட நிலையில் வாழ்ந்த வன்னிமக்களை இயன்றவரை மேலும் கொடுமைப்படுத்தாது வன்னிப்பிரதேசத்தை ஒரு வளமான பண்ணையாக நிர்வகிக்க விரும்பினார் நகெல். இம்முயற்சியில் இவர் வெற்றிபெற்றதாகவே பதிவுகள் தெரிவிக்கின்றன. வன்னிப்பிரதேச மக்களுக்கு உணவில் தன்னிறைவை உருவாக்கும் தோமஸ் நகெலின் முயற்சிகளில் ஒன்றே அவரது மரவள்ளிப் பயிர்ச்செய்கையின் அறிமுகம் எனலாம்.

பொது ஆண்டு 1800க்குச் சமீபமாக மரவள்ளி இந்தியாவுக்கு அறிமுகப்பட்டிருத்தல்கூடும் என்று நம்பப்படுகின்றது. எனினும் இதற்குப் போதிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. மரவள்ளியை மலையாளத்தில் ‘மரச்சீனி’ என்று அழைப்பர். பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியிலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஏற்பட்ட பெரும்பஞ்சம் காரணமாக  பல்லாயிரக்கணக்கான இந்தியக் குடிமக்கள் பட்டினியால் இறக்க நேரிட்டது. எனினும் கேரளாவில் மட்டும் 1860இல் ஏற்பட்ட பஞ்சத்தின் பின்னர் 1943வரை மக்கள் பட்டினியால் இறக்கவில்லை. பஞ்சங்களின்போது கேரள மக்களைப் பாதுகாத்தது மரவள்ளியே ஆகும்.

கேரளாவில் எப்போதும் அரிசிப்பற்றாக்குறை இருந்து வந்துள்ளது. பொது ஆண்டு 1880இல் விசாகம் திருநாள் என்னும் பெயருடைய இளவரசர் திருவாங்கூர் சமஸ்தானத்தின் அரசனாக முடிசூடிக்கொண்டபோது தனது நாட்டுமக்கள் இனி ஒரு போதும் பஞ்சம் காரணமாகப் பட்டினிச்சாவு அடையக்கூடாது என்று  தீர்மானித்தார். பல்வேறு ஆய்வுகளின் பின்னர் மாச்சத்து நிரம்பிய மரவள்ளிக்கிழங்கு அரிசிக்குச் சிறந்ததொரு மாற்றுணவாக விளங்கும் என்பதை அறிந்து கொண்டார். எனினும் மக்கள் இந்தப் புதிய பயிரை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள்.

தனது நாட்டுமக்களின் மனப்பாங்கை நன்கு அறிந்துவைத்திருந்த அரசர் விசாகம் திருநாள் ஒரு  யுக்தியைக் கையாண்டார். ஐந்து ஏக்கர் நிலத்தில் மரவள்ளிக் கிழங்கைப் பயிரிட்டு அதன் அருகே அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தார். அந்தப் பலகையில், மரவள்ளி எனப்படும் கிழங்கின் மரத்துண்டங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கே நடப்பட்டிருப்பதாக எனது குடிமக்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. சாப்பிட மிகவும் ருசியாக இருப்பதால், பலருக்கு இவற்றில் ஆர்வம் இருப்பது எனக்குப் புரிகிறது. எனினும் இந்த மரவள்ளித் துண்டங்களைத் திருடுபவர்கள் சிறைத்தண்டனையுடன் கூடவே மற்றும் பிற தண்டனைகளையும் அனுபவிக்கநேரிடலாம் என்று எழுதப்பட்டிருந்தது. 

ஒரு வாரத்தில், ஐந்து ஏக்கர் நிலத்தில் இருந்து அனைத்து மரவள்ளித் துண்டங்களும் காணாமல் போய்விட்டன. ஒவ்வொரு வீட்டாரினதும் பின்வளவில் மரவள்ளி நடப்படுவதை இவ்வாறு உறுதிப்படுத்திக்கொண்ட அரசர், மரவள்ளிக் கிழங்கை சமைப்பதற்கு முன் அதனை எவ்வாறு பதப்படுத்தவேண்டும் எவ்வாறு சமைக்க வேண்டும் என்னும் செய்முறைகள் பற்றித்  தாமே முன்னின்று விளக்கம் அளித்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது. பர்மாவை ஜப்பான் ஆக்கிரமித்ததால் பர்மாவிலிருந்து அரிசி இறக்குமதி நிறுத்தப்பட்டது. எனவே, திருவிதாங்கூர் தனது தேவைகளை பூர்த்தி செய்ய அரிசியை இறக்குமதி செய்ய முடியவில்லை. மரவள்ளிக்கிழங்கு ஆடை தயாரிக்கும் தொழிலிலும் பயன்படுத்தப்பட்டது. போர்க்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, துணி ஆலைகள் அதிக அளவு ஆடைகளை உற்பத்தி செய்யவேண்டியிருந்தது. பெருமளவு மரவள்ளிக்கிழங்கு இந்தத் துணி ஆலைகளால் கொள்முதல் செய்யப்பட்டது. முந்தைய காலங்களில் செய்ததைப்போல் நெல்லுக்குப் பதிலாக உணவாகப் பயன்படுத்தப் போதிய அளவு மரவள்ளிக்கிழங்கு கிடைக்கவில்லை. இதன்காரணமாகவே 1943 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது.

மரவள்ளிக்கிழங்கு பயிர்ச்செய்கைக்கு குறைந்த மூலதனமும் அற்பமான உழைப்புமே தேவைப்படுகிறது. இப்பயிர் வறட்சியைத் தாங்கக் கூடியது.  அமிலத்தன்மையுடைய மற்றும் வளம் குறைந்த மண்ணிலும் விளைச்சலைத் தரக்கூடியது.  பூச்சிகள் மற்றும் நோய்களால் ஏற்படும் சேதத்திலிருந்து விரைவாக மீள்கிறது; சூரியனின் ஒளிச்சக்தியை மாச்சத்து உணவாக அதாவது கார்போஹைட்ரேட்டுகளாக மாற்றுவதில் திறமையானது. இந்தக் காரணங்களாலேயே இன்று உலகில் எண்பது கோடி (800 மில்லியன்) மக்களின் பிரதான உணவாக மரவள்ளி விளங்குகின்றது. 

இலங்கையைப் பொறுத்தமட்டில் மரவள்ளிப் பயிர்ச்செய்கையில் விவசாயிகள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. வருங்காலத்தில் ஏற்படக்கூடிய நெல்லரிசித் தட்டுப்பாடு, நெற்பயிருக்குத் தேவையான நீர் குறைவடைதல், மண்வளம் குறைதல் போன்ற சந்தர்ப்பங்களில் பெரிதும் உதவக்கூடிய மரவள்ளிப் பயிர்ச்செய்கையில் இலங்கை மக்கள் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

மரவள்ளிக்கிழங்கு உடல் உழைப்புக்குத் தேவையான  சக்தியைத் தரக்கூடிய மாச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சீ, தியாமின், ஃபோலிக் அமிலம், மாங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் என்பவற்றைக் கொண்டுள்ளது. எனினும் புரதச்சத்து குறைவாக இருப்பதால் மரவள்ளிக்கிழங்கை மீன் போன்ற புரத உணவுகளுடன் சேர்த்துண்பது நல்லது.

ஜவ்வரிசி, சேமியா, மைதாமாவு,  என்பன மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. தென்அமெரிக்க இந்தியர்களின் காசிரி எனப்படும் மதுபானம் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கின் இலைகளும் உணவாகச் சமைக்கப்படுகின்றன. மத்திய ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் ‘சூப்’ மற்றும் அவியல்களில் ஒரு முக்கியமான மூலப்பொருளாக இலைகள் சேர்க்கப்படுகின்றன.

மரவள்ளியில் நச்சுத்தன்மை உடைய இரசாயனம் உண்டு. பயிரின் இனம், வாழிடம், வரட்சி போன்ற பலகாரணிகளைப் பொறுத்து இந்த இரசாயன நஞ்சின் செறிவு கூடியும் குறைந்தும் காணப்படும். மரவள்ளிக்கிழங்கின் தோலில்தான் நச்சு இரசாயனம் செறிந்து காணப்படும். எனவே உண்பதற்குமுன் மரவள்ளிக் கிழங்கின் தோலை உரித்து அகற்றுவதும், கிழங்கைச் சிறு துண்டுகளாக வெட்டித் தண்ணீரில் போட்டுக் கழுவுவதும், அவிப்பதும் அவசியம் ஆகின்றது. மரவள்ளி இனங்களுள் கயர்ப்புத் தன்மை குறைந்த இனங்களில் சயனைட் நச்சு இரசாயனம் குறைவாகக் காணப்படும். இவையே மக்களால் உணவாகப் பயன்படுத்தப் பெறுகின்றன.  

‘சயனோஜெனிக் குளுக்கோசைட்டுகள்’ எனப்படும் சயனைட்டைத் தோற்றுவிக்கும் இரண்டு சர்க்கரைகள் வெவ்வேறு அளவுகளில் மரவள்ளி இனங்களில் காணப்படுகின்றன. மரவள்ளிக்கிழங்கில் உள்ள பிரதான சயனோஜெனிக் குளுக்கோசைட் ‘லினாமரின்’ (Linamarin) ஆகும். கைப்புத்தன்மை குறைவான மரவள்ளிக்கிழங்கில் கிலோவுக்கு 50 மில்லிகிராம் அல்லது அதிலும் குறைந்த அளவில் சயனைட் காணப்படலாம். கைப்புத்தன்மை கூடிய மரவள்ளி இனங்களில்  ஒரு கிலோ கிழங்கில் 500மில்லிகிராம் முதல் 1000 மில்லிகிராம் (1 கிராம்) வரையிலான சயனைட் காணப்படலாம்.

முறையாகப் பதப்படுத்தப்படாத மரவள்ளிக்கிழங்குத் தயாரிப்புக்களில் சயனோஜென்கள் இருக்கக்கூடுமாதலால் அவற்றை உண்பவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படவாய்ப்புண்டு.

மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட ஒருவர் இஞ்சி அல்லது இஞ்சிப் பொருட்களான ஜிஞ்சபியர் மற்றும் இஞ்சி பிஸ்கட் போன்றவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்படுவதுண்டு. இஞ்சியில் உள்ள லினாமரேஸ் என்னும் நொதியம், மரவள்ளியில் உள்ள சயனைட் உள்ளடங்கிய இரசாயனங்களை ஹைட்ரஜன் சயனைட்டாக (HCN) மாற்றுவதற்கு ஊக்கமளிக்கிறது. எனவேதான் மரவள்ளியுடன் இஞ்சி சேர்த்து உண்பது ஆபத்தானது.

உலகின் பல பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு வெவ்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. உதாரணமாக, பிரேசிலில் மரவள்ளிக்கிழங்கு Mandioca என்று அழைக்கப்படுகிறது. இது பிரஞ்சு மொழி பேசும் மக்களிடையே Manioc ஆகும். ஸ்பானிஷ் அமெரிக்கர்களால் Yucca என்று குறிப்பிடப்படுகிறது. ஆப்பிரிக்காவின் ஆங்கிலம் பேசும் பகுதிகளில் இது Cassava அல்லது Cassata என்று அழைக்கப்படுகிறது. மலேசியா, இலங்கை மற்றும் இந்தியாவில் மரவள்ளியைக் குறிக்க Tapioca என்னும் ஆங்கிலப் பெயர் பயன்டுகிறது. மரவள்ளியின் சிங்களப் பெயரான மஞ்யொக்கா என்பது மனியொக் (manioc) என்னும் பெயரின் திரிபாகும். மரவள்ளியின் தாவரவியற்பெயர் Manihot esculenta Crantz ஆகும்.

Reference

  1. E.H.V. Nagel of the Vanni, The Journal of the Dutch Burgher Union Vol 23 No 3, Colombo,1934, p 144 145
  2. Achaya, K. T. Indian Food A Historical Companion, Oxford University Press, Delhi, 1998, P.226

ஒலிவடிவில் கேட்க

8476 பார்வைகள்

About the Author

பால. சிவகடாட்சம்

பால. சிவகடாட்சம் அவர்கள் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியலை பிரதான பாடமாகக் கொண்டு உயிரியல் விஞ்ஞானத்துறையில் (B.Sc. Hons) சிறப்புப் பட்டம் பெற்றவர். இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் (London Imperial College) டிப்ளோமா சான்றிதழும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளதுடன் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் B.Ed பட்டமும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியற் பீடத்தில் மூத்த விரிவுரையாளராகவும் அதன் தலைவராகவும் பதவி வகித்த இவர் பின்னர் கனடாவில் உள்ள ரொறொன்ரோ கல்விச்சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள மார்க் கார்னோ கல்லூரியில் விஞ்ஞான மற்றும் உயிரியற் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கையிலிருந்து 1971 - 1973 காலப் பகுதியில் விஞ்ஞானக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த 'ஊற்று' என்ற மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், 1970-1971 காலப்பகுதியில் வெளிவந்த தமிழமுது இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய சிவகடாட்சம் (அவர்கள்) தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளையும் இலக்கிய கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்