‘Tea Time With Terrorists’ என்கின்ற சுவாரசியமான தலைப்புடன் இருந்த ஈழம் பற்றிய நூலை அண்மையில் வாசித்தேன். 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஒரு அமெரிக்கருக்கு ‘தீவிரவாதிகள்’ பற்றி அறியும் ஆவல் வருகின்றது. தீவிரவாதிகளை நேரடியாக அறிவதன் மூலம் ஏதேனும் ஒருவகையில் தீவிரவாதத்தை அறியவும், கட்டுப்படுத்தவும் முடியும் என அவர் நினைக்கின்றார். இத்தனைக்கும் அவர் இயந்திரவியலில் பணியாற்றிவர். ஒருவகையில் இன்றைய AI (Artificial Intelligence) பற்றி 25 ஆண்டுகளுக்கு முன் பேசியவர். முன்பு நாஸாவில் பணியாற்றிய அவர், தற்போது தனக்கென Tech Company ஒன்றை வைத்திருக்கிறார்.
பயணங்களைச் செய்வதில் ஆர்வமுடைய இந்நூலாசிரியர், 2002 இல் பிரான்ஸில் வசித்துக் கொண்டிருந்தபோது, தனது பிரெஞ்சுக் காதலியிடம், நான் தீவிரவாதம் பற்றி ஆராயப்போகின்றேன் என்று சொல்கின்றார். காதலி பிரெஞ்சுக்காரி அல்லவா? உடனேயே ‘That’s so American of You’ என்கின்றார். அவர் அமெரிக்கர்களைச் சரியாகத்தான் கணித்திருக்கின்றார் என, வாசிக்கும் எமக்குச் சிறு எள்ளல் வரக்கூடும்.
தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அல்ல, அவர்களுக்குள் இயங்கும் உளவியலை அறிவதே முக்கியமானது என எண்ணும் அவர் முதலில் ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல விரும்புகின்றார். ஆனால் அங்கே ஏற்கனவே அமெரிக்க எதிர்ப்பு ஊறியிருந்ததால், ஒரு அமெரிக்கராக அங்கே செல்லமுடியாது என அவர் முடிவெடுக்கிறார். அதன்பொருட்டு வேறொரு களத்தைத் தேடுகிறார்; அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தீவிரவாத இயக்கமெனத் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மேல் அவரது கவனம் திரும்புகிறது. இலங்கையின் கலாசாரமும், இனங்களுக்கிடையே இருந்த பல நூற்றாண்டுகால முரண்களும் அவரை இலங்கைக்குப் போகச் செய்கின்றது.

மார்க் (Mark Stephen Meadows) எனும் அந்த எழுத்தாளர், இந்த நூலை 7 ஆண்டுகளாக எழுதி, இலங்கையில் இறுதி யுத்தம் முடிவடைந்த ஆண்டான 2010 இல் வெளியிட்டிருக்கின்றார். அதுவே ‘Tea Time With Terrorists’ எனும் நூலாகும். ஆனால் இந்த நூலின் தலைப்பில் சொல்லப்படும், அவர் சந்தித்த அந்த முக்கியமான தீவிரவாதி புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல; ஈரோஸ் இயக்கத் தலைவராக இருந்த சங்கர் ராஜியையே அவர் சந்திக்கிறார்.
சங்கர் ராஜி பங்குபற்றிய 1984 கொழும்புக் குண்டுவெடிப்புடன் இந்தநூல் தொடங்குகின்றது. இலங்கை அரசின் ஒடுக்குமுறைகள், இனக்கலவரம், படுகொலைகள் என்பவற்றை அவதானித்தபடி, புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருக்கும் சங்கர் ராஜி, பெய்ரூட்டில் பாலஸ்தீன இயக்கத்தோடு இணைந்து போராடிவிட்டு, அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு, 84 இல் கொழும்பில் பெரும் குண்டுவெடிப்பை நடத்துகிறார். இதுவே அவரது கடந்தகால வரலாறு.
கொழும்பில் சங்கர் ராஜியை மட்டுமல்லாது, புளொட்டின் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.டி.பி இன் டக்ளஸ் தேவானந்தா என்று பல முன்னாள் ‘தீவிரவாத’ இயக்கத்தவர்களை மார்க் சந்திக்கின்றார். இந்த ஆய்வுக்காக, தெற்கே சிங்களப் பிரதேசங்களுக்குச் சென்று, சிங்களவர்களின் மனோநிலையை அறிந்தபின், மோட்டார் சைக்கிளில் ஏ9 நெடுஞ்சாலையூடு யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கின்றார். புலிகளின் அன்றைய ஓமந்தை சுங்கப் பரிசோதனைகளை முடித்தபின் கிளிநொச்சி, ஆனையிறவு போன்ற இடங்களை விரிவாக ஆராய்கிறார். இறுதியில் யாழ்ப்பாணம் போய்ச் சேர்கின்றார்.
மார்க் இந்தப் பயணத்தின்போது இலங்கையில் சிங்களவர்கள் வாழும் தெற்குப் பகுதியையும், தமிழர்கள் வாழும் வறுமையான வடக்குப் பகுதியையும் ஒப்பிடுகின்றார்கள். காவல் சாவடிகளில் நிற்கும் புலிகள் கல்வியறிவற்றவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்கின்ற வழமையான அமெரிக்க வெள்ளையினப் பார்வையே அவருக்கும் இருக்கிறது. இவ்வாறு இயக்கத்தில் இணைபவர்களைப் பற்றி, இஸ்ரேலிய இராணுவத் தளபதியொருவர் சொன்ன ஒரு மேற்கோளையும் ஞாபகப்படுத்துகின்றார். ‘பதின்மங்களிலும், இருபதுகளிலும் இருப்பவர்கள்தான் இவ்வாறான இயக்கங்களில் அதிகம் சேர்வார்கள்; அவர்களிடம் யாரையேனும் கொன்றுவா என்று சொன்னால், கொல்ல மட்டுமல்ல, கொல்லும் நபர்களின் குடலைக் கூடக் கிழித்துக் கொண்டு வருவார்கள்’ என அந்த இராணுவ அதிகாரி சொன்னதாகச் சொல்கின்றார். மார்க்கின் இந்தப் பயணக்குறிப்பில் வெளிப்படையாக சில தகவல் பிழைகள் இருப்பதையும் நாம் கண்டுகொள்ள முடியும். புலிகளின் முதல் சுங்கப் பரிசோதனையில், நான்கு புலிகள் சூதாடிக் கொண்டிருந்ததாகவும், அவர்களின் அருகில் பியர் கான்கள் இருந்ததாகவும், யாரோ ஒரு நடிகையின் அரைநிர்வாணப் புகைப்படம் பின்னால் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் சொல்கின்றார். ஆனால், புலிகள் அமைப்பு மிகவும் கட்டுக்கோப்பானது என்பது அவ்வமைப்பை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. அதிலும், பெரும் எண்ணிக்கையில் சன நடமாட்டமிருந்த காவல் பகுதியில் அவர்கள் இப்படி ஒருபோதும் நடந்துகொண்டிருக்க மாட்டார்கள். மார்க் விபரிக்கும் இந்த இடம், இலங்கை இராணுவத்தினதோ அல்லது அன்று இலங்கை இராணுவத்தோடு இயங்கிய தமிழ்த் துணைக்குழுக்களினதோ சோதனை நிலையமாக இருந்திருக்கும் என்பதே யதார்த்தமாகும்.
மார்க், புலிகளின் எல்லைக்குள் நுழையும்போது, கிட்டத்தட்ட அங்கிருந்த மக்களை ‘தீண்டத்தகாதவர்களாகவே’ பார்த்ததை அவரின் எழுத்தினூடாக அறியமுடிகின்றது. கிளிநொச்சியை அவர் அடைந்து, அங்கு தெருக்களில்/கடைகளில் இருக்கும் மக்களைச் சந்தித்ததும்தான் இந்த ஒவ்வாமையைக் கொஞ்சம் கைவிடுகின்றார். எனினும் அங்கிருக்கும் மக்கள் ஒருவித இனவாதக் கண்ணோட்டத்துடன் தன்னைத் தொடர்ச்சியாக உற்றுப்பார்த்தனர் எனவும் சொல்ல எத்தனிக்கின்றார். உண்மையில் அமெரிக்கர்கள்தான் எல்லாவிதச் சுரண்டல்களையும்/ ஒடுக்குமுறைகளையும்/ அடிமைமுறைகளையும் கைக்கொள்ளுபவர்கள். ஒடுக்கப்பட்டவர்கள் எதிர்த்துப் பேசத் தொடங்கியவுடன், விளிம்புநிலையினர் பாவிக்கும் அனைத்துச் சொல்லாடல்களையும் தமக்குரியதாக மாற்றியமைக்கும் தந்திரசாலிகள் இவர்கள் என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
கிளிநொச்சியில் கணேஷ் என்கின்ற ஆசிரியர் இவரை வீட்டுக்கு அழைத்து தேநீர் கொடுக்கின்றார். கணேஷ் அப்போதுதான் தனது வீட்டைத் திருத்தியமைத்தபடி இருக்கின்றார். வீட்டின் பின்புறம் முழுவதும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என அவர் அஞ்சியதால், டிராக்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து உழுது கொஞ்சம் கொஞ்சமாக அதனை அப்புறப்படுத்தி வருகிறார். இலங்கை அரசும், புலிகளும் எம்மை நிம்மதியாக இருக்கவிடவில்லை என ஒரு சாதாரண பொதுமகனின் நிலையில் நின்று அவர் பேசுகின்றார். அவர் தனது வீட்டை எவ்வாறு திருத்தியமைத்துக் கொண்டிருக்கிறார் என்று ஒவ்வொரு பகுதியாக மார்க்கிற்குக் காட்டிக்காட்டி விளக்குகின்றார். இன்று காலம் வேறான அச்சில் சுழன்று கொண்டிருந்தாலும், அன்றைய போருக்குப் பின்பான சமாதான காலத்தில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கையை மார்க் எழுத்தாலும், புகைப்படங்களாலும் பதிவு செய்திருக்கின்றார் என்பது கவனிக்கத்தக்கது.
மார்க், கிளிநொச்சியில் ஒரு நாள் தங்கி நின்ற ஹோட்டல் அனுபவமும் அவருக்கு அவ்வளவு உவப்பானதாக அமையவில்லை. ‘தெற்கில் சிங்களப் பகுதியில் இருந்த வசதிகளில் அரைவாசிகூட இங்கே இல்லை. ஆனால் இரண்டு மடங்கு பணத்தைச் செலவு செய்திருக்கின்றேன்’ என்று கவலைப்படுகின்றார். பக்கத்து அறைகளில் இருந்தவர்களின் குறட்டைச் சத்தத்தாலும், சுவர்களின் ஊரும் பூச்சிகளாலும் நித்திரை இல்லாது, எப்போது விடியும், எப்போது இங்கிருந்து போகலாம் என்று அங்கலாய்த்தபடி இருக்கின்றார். போர் நடந்த நிலம் எப்படி இருக்கும், அது தன்னை மீளக்கட்டியெழுப்ப எத்தனை வருடங்கள் தேவை என்கின்ற அடிப்படைப்புரிதல் கூட இல்லாத ஒரு ‘வெள்ளையினத்தவராக’ நாம் மார்க்கை இங்கே அவதானிக்கின்றோம்.
இந்த நூலில் புலிகளின் தற்கொலைத் தாக்குதல்கள், அவர்கள் கட்டியமைத்த வான்படைகளின் தாக்குதல்கள் என்பவை விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற தாணுவின் பின்னணிகூட இந்நூலில் விவரிக்கப்படுகின்றது. சுப்பிரமணியசாமி எழுதியவைகளில் இருந்து இதற்கான விவரங்களை உசாத்துணையாகப் (Reference) பெற்றிருக்கிறார், மார்க். இலங்கையில் ஏன் தமிழர் பிரச்சினை தொடங்கியது, அதற்கு எதிர்ப்புக் காட்டத் தொடங்கிய தமிழ் இயக்கங்களுக்கு எவ்வாறு இந்திய அரசும், உளவுத்துறையும் ஆயுதங்கள் கொடுத்து வளர்த்தன என்பன பற்றியும் இந்நூல் ஓரளவு குறிப்பிடுகின்றது. எழுத்தாளர், புலிகள் – மகிந்த சமாதானக் காலத்தில் (2004 – 2005) இலங்கையில் பயணித்துவிட்டு, அவ் அனுபவங்களை இறுதிப்போர் முடிந்த 2009 ஆண்டுக்காலத்தோடு சேர்த்து எழுதியமை, இந்த நூலின் முக்கிய பலவீனம் எனலாம். இதனால் இந்நூல் அவரின் அனுபவங்களை மட்டும் முன்வைத்து எழுதப்பட்டது என்று கருதமுடியாதிருக்கின்றது.

மார்க், யாழ் பற்றிய ஒரு மேலோட்டமான வரைபடத்தைத் தந்துவிட்டு, இலங்கை வந்த இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களை விரிவாகப் பேசுகின்றார். இந்திய இராணுவம் பாராசூட் மூலம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் தரையிறங்கியபோது ஏற்பட்ட பேரிழப்புகளையும், அது யாழ் வைத்தியசாலையில் செய்த படுகொலைகளையும் பேசுகின்றார். கிளிநொச்சி உள்ளிட்ட பல பிரதேசங்களில் புலிகளையும், புலிகளின் தலைவரையும் ஆதரிப்பவர்களாக 70-80% மக்கள் இருக்கின்றனர் எனவும் எழுதிச் செல்கின்றார். இறுதியுத்தத்தின் பின் இலட்சக்கணக்கான மக்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்ததையும் மார்க் பதிவு செய்திருக்கின்றார். ‘புலிகள் ஆயுதப்போராட்டத்தில் இருந்து அரசியல் களநிலைக்குச் செல்வதற்கான எத்தனையோ சாத்தியங்கள் இருந்தும், அதைத் தவிர்த்ததால் அவர்கள் இவ்வாறான அழிவைச் சந்தித்தார்கள்’ எனும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் உரையாடல்களையும் மார்க் நமக்கு நினைவுபடுத்துகின்றார். போரின் பின்னர் செய்யப்படும் அரசியல் செயற்பாடுகளே (கர்மா), அடுத்து வரும் தசாப்தங்களில், இலங்கை என்கின்ற நாடு எப்படியான நிலையில் இருக்கப்போகிறதென்பதைக் கட்டியம் கூறப்போகின்றவையாகும். மகிந்த ராஜபக்ச (அன்றைய ஜனாதிபதி), யுத்தவெற்றியைப் பாவித்து, இச்செயற்பாடுகளை அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யாமல், தமிழர்களையும் அரசியல் களங்களில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் இனங்களுக்கிடையிலான சுமுகமான சூழலைக் கொண்டுவர முயலவேண்டும் என இந்நூலில் குறிப்பிடுகின்றார், மார்க். ஆனால் அந்த நம்பிக்கை நம்பிக்கையீனமாகப் போனது. மகிந்த மட்டுமல்ல, அவரது முழுக்குடும்பமுமே நாட்டு மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, துரத்தப்பட்டது என்பதையே இந்த வரலாறு சோகமாக எழுதி முடித்திருக்கின்றது.
இந்த நூலில் மார்க் குறிப்பிடுகின்ற ஒரு அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் 2008 ஆம் ஆண்டின் ஆய்வு முடிவொன்றுதான் முக்கியமானது. இந்த ஆய்வு நிறுவனமானது (RAND), 1968 தொடக்கம் 2006 வரை, கிட்டத்தட்ட உலகிலிருக்கும் 648 தீவிரவாத இயக்கங்கள் எப்படி ஒழிக்கப்பட்டன என்கின்ற ஓர் ஆய்வைச் செய்திருக்கின்றது. அதில், பெரும்பான்மையான இயக்கங்கள் அரசியல் நீரோட்டத்தில் கலந்ததன் மூலம் இல்லாமற் செய்யப்பட்டன எனச் சொல்லப்படுகின்றது. சமாதானப் பேச்சுவார்த்தைகள், எச்சரிக்கையான பொலிஸ்/ இராணுவ உளவுகள், பொருளாதாரத்தடை போன்றவை ஒரு தீவிரவாத இயக்கத்தை இல்லாமல் செய்துவிடும் என்றும் அதில் சொல்லப்படுகின்றது.
7 சதவீதமான இயக்கங்களே மிக மூர்க்கமான இராணுவ நகர்வுகளால் அழிக்கப்பட்டவை என்ற அதிர்ச்சிகரமான முடிவை இந்த ஆய்வு சொல்கின்றது. அவ்வாறாக முற்றுமுழுதாக யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்ட இயக்கங்களுள் விடுதலைப் புலிகளும் அடங்குவர் என மார்க் எழுதிச் செல்கின்றார். ஈழத்தில் இருந்த ஏனைய இயக்கங்களான ஈரோஸ், ஈ.பி.டி.பி, புளொட் போன்றவை அரசியல் நீரோட்டத்தை நோக்கி நகர்ந்தது போல செயற்படாமல், புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கடைசிவரை கைவிடாது மூர்க்கமாக ஆயுதப்போராட்டத்தை நடத்தியதாலேயே அவர்களது இயக்கம் முற்றாகத் துடைத்தழிக்கப்பட்டது என மார்க் குறிப்பிடுகின்றார்.
இந்நூலை ஒரு முக்கிய நூலாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 300 பக்கங்களுக்கு மேலாக எழுதப்பட்ட இந்நூல், புலிகளின் முக்கிய தளபதிகளின் உரையாடலை மட்டுமல்ல, சாதாரண உறுப்பினரின் குரலைக்கூடப் பதிவு செய்யவில்லை என்பது மிகப்பெரும் குறையாகும். இந்த நூலை வாசிப்பதன் மூலம் அன்றைய இலங்கையை (2003-2004) ஓரளவு அறியமுடியும். அந்த அடிப்படையில் மட்டுமே இதுவொரு வாசிக்கவேண்டிய நூல்.
