தொடக்கக் குறிப்புகள்
இலங்கையின் பொருளாதாரத்தில் ஆடைத்தொழிற்றுறையின் பங்களிப்பு முக்கியமானது. குறிப்பாக அந்நியச் செலாவணி நெருக்கடியை இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பிரதான தொழிற்றுறையாக ஆடைத்தொழிற்றுறை இருக்கின்றது. அதேவேளை கணிசமான இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கிய துறையாகவும் இது திகழ்கிறது. இத்துறையின் பொருளாதாரப் பரிமாணம் குறித்த அக்கறையும் கவனமும் மிகப் பெரியது. ஏற்றுமதிகள் குறைந்தாலோ, உற்பத்திகள் குறைந்தாலோ அக்கறை கொள்கிற அரசும், ஊடகங்களும் அங்கு பணிபுரிகின்ற ஊழியர்களின் நலன்கள் குறித்து அக்கறை கொள்வது குறைவு. நாட்டுக்கு வருமானம் கிடைக்கிறது, ஆதலால் அத்தொழிற்றுறை முக்கியமானது. அதன் செயற்பாடுகள் பாதிக்காவண்ணம் எல்லோரும் செயலாற்ற வேண்டும். இதுவே இலங்கையில் கட்டமைக்கப்பட்டுள்ள பொதுப்புத்தி மனநிலை.
சில ஆண்டுகளுக்கு முன்னர், பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள், தங்கள் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்திக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்களது போராட்டம் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் அவ்வீதியின் வழியே செல்வோரின் கவனத்தையும் அப்போராட்டம் பெற்றது. அப்போது எனது பேருந்தில் இருந்தோரிடையேயான உரையாடல் இவ்வாறு அமைந்தது:
“இப்ப ஏன் போராட்டம், இவையளுக்கு வேலை கொடுத்ததே பெரிய விசயம். அதை விளங்காமல் சும்மா போராட்டமென்று வீதியை மறிச்சுக் கொண்டு…..”
“உண்மைதான், இவையளின்ர முதலாளிமார் பாவம், இப்படி இவையள் ரோட்டில நிண்டா, அவயளுக்குத்தானே நட்டம்.”
“நாளைக்கு அவங்கள் பக்டறியைப் பூட்டிப்போட்டு போடுவாங்கள்.”
“இப்படி ஆக்களாலதான் வெளிநாட்டுக்காரன் இங்க முதலீடு செய்ய வாரேல்ல”
“நாட்டுக்கு அந்நியச் செலாவணியைக் கொண்டுவாற சிலதையும் இல்லாமல் பண்ண நிக்குதுகள்”.
இந்த உரையாடல் ஆச்சரியத்தைத் தரவில்லை. இலங்கையரின் பொதுப்புத்தி மனநிலையின் சாரம் இதுதான். அவர்கள் ஏன் போராடுகிறார்கள்? தங்கள் ஒருநாள் சம்பளத்தை விட்டுவிட்டு வீதியில் இறங்கி உச்சிவெய்யிலில் கோஷம் போடுவதற்கான தேவை என்ன? அதை ஏன் அவர்கள் செய்கிறார்கள்? தங்கள் வேலை பறிக்கப்படலாம் என்று தெரிந்தும் இந்தப் போராட்டத்தைச் செய்யத் தூண்டியது எது? போன்ற கேள்விகளை யாரும் கேட்பதுமில்லை, அது குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதுமில்லை. இது துயரம்.

இலங்கையில், உழைப்புச் சுரண்டலின் மிகவும் மோசமான வடிவம் ஆடைத்தொழிற்சாலைகளில் அரங்கேறுகிறது. ஆனால் அவை பெரும்பான்மை இலங்கையருக்கு முக்கியமானவையல்ல. அதில் பணிபுரிவோர் சமூகமட்டத்தில் கீழ்நிலையில் இருப்போர். அவர்களின் குரல்கள் யாருடைய காதுகளையும் எட்டுவதில்லை. ஏனெனில் இலங்கையின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த, முறிக்கப்பட வேண்டிய முதுகுகள் அவர்களுடையவை. முறிந்த முதுகுகளைவிட கிடைத்த அந்நியச் செலாவணியே முக்கியமானது.
இங்கு இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். ஆடைத்தொழிற்றுறை அந்நியச் செலாவணியைக் கொண்டுவருவதாகச் சொல்லப்பட்டாலும், இத்துறையில் ஈட்டப்படும் அந்நியச் செலாவணியில் பெரும்பகுதி வெளிநாடுகளில், வங்கிகளில், ஏனைய தொழிற்றுறைகளில் தான் முதலிடப்படுகிறது. அவை முழுமையாக இலங்கைக்கு வருவதில்லை. இதற்கான சட்ட ஏற்பாடுகள் இருந்தும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. மத்திய வங்கியின் தரவுகளின்படி 2022ம் ஆண்டில் மாதமொன்றுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதியாயின. ஆனால் 80 வீதமான பணம் (800 மில்லியன் டொலர்கள்) நாட்டுக்குத் திரும்பி வருவதில்லை. சட்டங்களால் கூட எதையும் செய்ய இயலவில்லை என்பதுதான் உண்மை. இந்த யோக்கியர்கள்தான், தொழிலாளர்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் போது வியாபாரம் பாதிப்படைகிறது, ஏற்றுமதி குறைகிறது, இது நாட்டின் அந்நியச் செலாவணிக்கு நல்லதல்ல, அரசாங்கம் தொழிலாளர்களிடமிருந்து தொழிற்றுறையைக் காப்பாற்ற வேண்டும் என்று கதறுபவர்கள்.
போருக்குப் பிந்தைய இலங்கையின் வடக்கில் ஆடைத்தொழிற்சாலைகள் முளைத்தன. அவை முக்கியமான தொழில்வழங்கும் மையங்களாகப் பார்க்கப்பட்டன. இன்றும் வடக்கின் முக்கியமான தொழிற்றுறை நடவடிக்கையாக இந்த ஆடைத்தொழிற்சாலைகள் பார்க்கப்படுகின்றன. கடந்த ஒரு தசாப்தகாலமாக இந்தத் தொழிற்சாலைகளில் என்ன நடக்கிறது? இங்கு பணிபுரிகின்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை என்ன? இது அப்பகுதிச் சமூகத்தில் எவ்வகையான தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறது? இதனால் ஏற்படக்கூடிய நீண்டகால சமூக, பொருளாதாரப் பாதிப்புகள் எவை? என்பன பற்றிய விரிவான ஆழமான ஆய்வுகள் மிகக்குறைவு.
ஈழத்தமிழர் அரசியலிலும் மிகவும் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகமாகவே இத்தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் இருக்கிறார்கள். இவர்களின் நலன்கள் குறித்து பாராளுமன்றத்திலோ மாகாண சபையிலோ பேசப்பட்டது மிகக்குறைவு. முற்போக்கு இடதுசாரிக் கட்சிகள் என்று சொல்லப்படுபவையும் இவர்களது நலன்கள் குறித்து அக்கறை காட்டவில்லை. அவை அவர்களுக்கான தொழிற்சங்க உரிமைகளைக் கூடப் பெற்றுக்கொடுக்க முடியாதவையாக, அதற்காகப் போராடாதவையாகவே இருந்து வந்திருக்கின்றன. இதனால் அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாக இவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் கதைகள் முக்கியமானவை.
போரின் முடிவின் பின்னர், கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டது தொட்டு அண்மைக்காலம் வரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் பெறப்பட்ட தரவுகள் இக்கட்டுரையின் மையமாக அமைகின்றன. இது முக்கியமாக மூன்று பகுதிகளைக் கொண்டது. முதலாவது பகுதி இத்தொழிற்சாலைகளின் உருவாக்கத்தின் பின்னால் இருந்த சிந்தனைமுறைகள், எண்ணங்கள், மக்களின் நிலைப்பாடுகள் பற்றியது. இரண்டாவது, பொருளாதார நெருக்கடி வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் கருத்துகள் குறித்தது. மூன்றாவது, தற்போதைய நிலைமைகள் குறித்த குறுக்குவெட்டுப் பார்வை.
போரின் பின்னரான சமூகத்தில் ஆடைத்தொழிற்சாலைகள்
போரின் முடிவைத் தொடர்ந்து இலங்கையின் வடக்கில் ‘அபிவிருத்தி அரசியல்’ முன்னெடுக்கப்பட்டது. இது சித்தாந்த ரீதியில் இரண்டு அடிப்படைகளைக் கொண்டிருந்தது. முதலாவது இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்றது ‘அரசுக்கெதிரான பயங்கரவாதம்’; விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்ததனூடு பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற கதையாடல். இது 2006ஆம் ஆண்டுமுதல் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பிரசாரமாகும். இது பெரும்பான்மை இலங்கையர்களிடம் வெற்றிகரமாகக் கொண்டு சேர்க்கப்பட்டது. இலங்கையின் வடக்கு – கிழக்குக்கு வெளியே இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் இந்தக் கதையாடலுக்கு வலுச்சேர்த்தன. இரண்டாவது, இலங்கையில் தமிழர்களுக்கு இருப்பது அபிவிருத்திப் பிரச்சினையேயன்றி இனத்துவம்சார் பிரச்சினையல்ல என்ற புரிதல். இந்தச் சிந்தனைக்கான அடித்தளம், 2002ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்குவந்த போர்நிறுத்தம், அதைத் தொடர்ந்த சமாதானப் பேச்சுகளின் மையமாக இருந்தது. அக்காலப் பகுதியில் அபிவிருத்தியின் வழி சமாதானம் (Peace through Development) என்ற எண்ணக்கரு முன்னெடுக்கப்பட்டது. இது அக்காலப்பகுதியில் உலகெங்கும் முன்னெடுக்கப்பட்ட தாரண்மைவாத அமைதி (Liberal Peace) என்ற கோட்பாட்டின் பகுதியாக இருந்தது.
போரின் முடிவில் இலங்கை அரசாங்கம் இரண்டையும் தமக்கேயுரிய வியாக்கியானங்களுடன் நடைமுறைப்படுத்தியது. அதன் பகுதியாக கிளிநொச்சியில் 2011ஆம் ஆண்டு ஆடைத்தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. இதற்கொரு பின்கதை உண்டு. போரின் முடிவில் வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் ‘வடக்கின் வசந்தம்’ என்ற நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின் படி வடக்கில் குறிப்பிட்ட திகதிக்குள், குறைந்தது 100 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தொழில்முயற்சிகளுக்கு தலா ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்தது. இது ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்களுக்கு கவர்ச்சிகரமானதாக இருந்தது. இதனால் வடக்கில் ஆடைத்தொழிற்சாலைகளை நிறுவ இந்நிறுவனங்கள் முன்வந்தன. அத்தோடு மேலதிக சலுகைகளும் வழங்கப்பட்டன. குறிப்பாக தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு முதல் 5 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு, தொழிலாளர்களுக்கான பயிற்சிகளுக்கும் ஏனைய சமூகநலன்சார் செயற்றிட்டங்களுக்கும் யுஎஸ்எயிட் நிதியுதவிகளை வழங்கியமை, விரைவுபடுத்தப்பட்ட கடனுதவி வசதிகள் என்பன இவற்றில் சில.

அதேவேளை குறித்த தொழிற்சாலைகளை அமைப்பதில் அரசாங்கம் ஏராளமான கட்டுமான உதவிகளை மேற்கொண்டது. குறிப்பாக இராணுவ ஆதரவில் உற்பத்தித் தளங்களை உருவாக்குதல், மின்சார இணைப்புகள், கைபேசி மற்றும் இணையத் தொழில்நுட்பங்களை நிறுவுதல், நெடுஞ்சாலைகளுடன் உற்பத்தி வசதிகளை இணைக்கும் சாலைகளை அமைத்தல் போன்றன. இவையனைத்தும் கட்டுமான ரீதியான வசதிகளை குறித்த நிறுவனங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தன. ஆனால் இந்தப் பொருளாதார நோக்குநிலை அரசியல் குறைகளை நிவர்த்தி செய்வதைப் புறக்கணித்தது. அதேவேளை அரசாங்கம் முன்னெடுத்த சிங்கள – பௌத்த பெருந்தேசியவாத நிகழ்ச்சிநிரலை யுஎஸ்எயிட் போன்ற நிதியுதவி அமைப்புகளும் ஆடைத்தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களும் முழுமையாக ஏற்று அதனை வலுப்படுத்தும் செயற்றிட்டங்களுக்கு ஆதரவளித்தன.
உலகளாவிய நிதி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்கள் – உதாரணமாக உலக வங்கி, ஐஎம்எவ், யுஎஸ்எயிட் – இலங்கையின் ஒவ்வொரு அரசாங்கமும் முன்னெடுத்த பெருந்தேசியவாத செயன்முறைக்கு ஆதரவாக ஒரே பாடலைப் பாடியுள்ளன. பொருளாதாரத் தூண்டுதலின் மூலம், தாராளவாத சமாதானத்தின் பலிப்பீடத்தில் அரசியல் தீர்வைத் தியாகம் செய்வது பல பிரச்சினைகளை கொண்டு வரலாம் என்று இந்த நிறுவனங்கள் ஒருபோதும் சிந்தித்தது கிடையாது. இவற்றில் மிகவும் வெளிப்படையானது என்னவென்றால், தாராளவாத சமாதானமானது, ஒவ்வொரு இலங்கை அரசாங்கத்தையும் வண்ணமயமாக்கும் மேலாதிக்க இன – தேசியவாத மற்றும் இராணுவமயமாக்கப்பட்ட பேச்சுகளுக்கு ஒருபோதும் சவால் விடவில்லை. இந்தச் செயன்முறையின் ஒரு பகுதியாகவே வடக்கில் அமைக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலைகள் இருந்தன.
இந்தக் கருத்தை குறித்த ஆடைத்தொழிற்சாலைகளை நிறுவுவதில் பங்களித்தோர் தெளிவாகப் பிரதிபலித்தனர். இத்தொழிற்சாலைகள் வடக்குக்கும் மக்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும் என்று அவர்கள் மனதார நம்பினார்கள். தங்கள் நிறுவனத்தின் இம்முயற்சியானது வடக்குக்கும் வடபகுதி மக்களுக்கும் மிகப்பெரிய சேவை என்பதும், இதுவொரு நல்லெண்ண நடவடிக்கை என்பதுமே அவர்களது எண்ணப்போக்காக இருந்தது. நேர்காணல்களில் அவர்களது கவனம் ‘பொருளாதாரக் காரணி’ என்ற ஒற்றைப் பரிமாணமாகவே இருந்தது. குறித்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலர், தாம் வரவில்லை என்றால் இம்மக்களுக்கு வேலைவாய்ப்பு இருந்திருக்காது, பட்டினி தொடர்ந்திருக்கும், எனவே தமது நிறுவனம் தொழிற்சாலைகளை அமைத்தமையானது மிகப்பெரிய தர்ம காரியம் என்ற மனப்பாங்குடையவர்களாக இருந்தார்கள். இவை அரசாங்கத்தின் சிங்களப் பெருந்தேசியவாத சிந்தனையை அச்சொட்டாகப் பிரதிபலித்தன.
குறித்த தொழிற்சாலைக்கு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டோர் சில முக்கிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஒருவர் பின்வருமாறு அதை வெளிப்படுத்தினார்:
“இப்பகுதியில் மனிதவளம் அதிகம். குறிப்பாக பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் அதிகம். வேலைவாய்ப்புகள் இல்லை. சுயதொழில் வாய்ப்புக்கான வசதிகள் இல்லை. எனவே வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பது இலகுவாக இருக்கும் என்பதே நிறுவனத்தின் எடுகோளாக இருந்தது. ஆனால் அந்த எடுகோள் தவறானது என்பதை விரைவிலேயே நாம் உணர்ந்து கொண்டோம். இறுதியில் இராணுவத்தின் உதவியுடனேயே ஆட்களைச் சேர்க்க முடிந்தது.”
அதேவேளை போரினால் சிதைக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தை இராணுவத்தின் வழியே அணுகுவது சரியானதா என்ற கேள்வி கூட இந்த ஆட்சேர்ப்பில் ஈடுபட்டோரிடம் இருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை “வடக்கு மக்கள் வாய்ப்பைத் தவறவிடுகிறார்கள். நல்வாய்ப்பைப் புறக்கணிக்கிறார்கள்”. இது குறித்து மனிதவளத் துறையில் பணியாற்றிய அதிகாரியொருவர் வெளிப்படையாகச் சில விடயங்களை முன்வைத்தார்.
“குறித்த பகுதியில் தொழிற்சாலை அமைக்க முடிவுசெய்யப்பட்ட போது, அப்பகுதி சார்ந்த, அம்மக்கள் சார்ந்த மிகத்தவறான முன்முடிவுகளை நாம் கொண்டிருந்தோம். அது சிங்களத் தேசியவாதக் கதையாடலின் ஆழமான செல்வாக்கிற்கு உட்பட்டதாக இருந்தது. தமிழரின் போராட்டத்தை வெறுமனே பயங்கரவாதமாகவும், பொருளாதாரப் பிரச்சினையாகவும் பார்த்தோம். போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தோடு நாம் பணியாற்ற முனைகிறோம் என்ற உணர்வு எம்மிடம் இருக்கவில்லை. பொருளாதாரக் காரணிகளே எம்மை உந்தித் தள்ளின. தொழிற்சாலை இயங்கத் தொடங்கிய கொஞ்சக் காலத்திலேயே எஞ்சியிருந்த கழிவிரக்கமும் இல்லாமல் போய்விட்டது. உற்பத்தியை அதிகரித்தலும் வேலைக்கு மேலதிக ஆட்களைப் பிடித்தலுமே பிரதான பேசுபொருளாகின. இந்தத் தொழிற்சாலைகள் விரைவிலேயே நாட்டின் ஏனைய பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் போலாகிவிட்டன.”
இத்தொழிற்சாலைகள் இராணுவத்தின் உதவியோடு தொழிலாளர்களுக்கு “தீவிரவாத மனநிலையை அகற்றும்” (Deradicalisation) நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தின. இது பல வழிகளில் தொழிலாளர்களை அவமதிப்பதாக இருந்ததாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான எடுகோள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்தவர்கள் நிச்சயமாக அவர்களின் சித்தாந்தத்தை ஏற்றவர்கள், இன்னும் சரியாகச் சொல்வதானால் அவர்களும் விடுதலைப்புலிகளே. எனவே அவர்களிடமிருந்து தீவிரவாத எண்ணங்களைக் களைய வேண்டும். இந்த அனுபவங்கள் குறித்து ஒரு தொழிலாளர் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்:
“இராணுவத்திற்கும் எமக்கும் என்றுமே சீரான உறவு இருந்ததில்லை. போரின் முடிவு முதல், அகதிமுகாம் வாழ்வு, மீள்குடியேற்றம், தொடர் கண்காணிப்பு, அச்சுறுத்தல் எனக் கசப்பான நிகழ்வுகள் நிறைந்ததாகவே எமது வாழ்க்கை இருக்கிறது. நாம் ஓர் இராணுவக் கண்காணிப்பு வலயத்திற்குள்ளேயே வாழ்கிறோம். நாம் தொழிலுக்குச் செல்லும் போது பணியிடத்தில் ஒரு சிவில் வாழ்க்கையை எதிர்பார்க்கிறோம். ஆனால் அது சாத்தியமில்லை. நாமும் புலிகளா என்ற வினா தொழிற்சாலை நிர்வாகத்திடம் இருக்கிறது. தொழிற்சாலையிலும் இராணுவத்தின் பங்கு அச்சந்தருவதாக மட்டுமன்றி நிர்வாகத்தின் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துகிறது. தொடக்க காலத்தில் நிர்வாகச் சீர்கேடுகளைத் தட்டிக் கேட்டால் நீ புலியா என்பதே முதல் எதிர்வினையாக இருந்தது. இவ்வாறு நாம் சிறுமைப்படுத்தப்பட்டோம்.”
இத்தொழிற்சாலையின் மேலாளர்கள் குறித்த பகுதியின், அரசியல் ரீதியான கொந்தளிப்பான நிலப்பரப்பு மற்றும் புதிய தொழிலாளர்களின் குடும்ப, சமூகச் சூழ்நிலைகள் பற்றி அறிந்திருந்தனர். ஆனால் அவர்களின் பதில் துரதிர்ஷ்டவசமாக, இக்கட்டான நிலையில் இருந்து தொழிலாளர்களை மீட்கும் ஒரு பெரும்பான்மைத் தேசியவாதத் திட்டத்தின் பகுதியாக மட்டுமே இருந்தது. அவர்கள் தம் தொழிலாளர்கள் “தவறான எண்ணங்களின் செல்வாக்குக்கு உட்பட்டிருக்கிறார்கள். அவர்களின் சிந்தனையை மாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் ஒழுங்காகக் கீழ்ப்படிந்து பணியாற்றுகிற ஒரு தொழிலாளர் படையே அவசியமானது. அதை உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய அனைத்து வழிகளையும் அவர்கள் பயன்படுத்தினர்.
இந்தத் தொழிற்சாலைகளுக்கான ஆட்சேர்ப்புக் குறித்து ‘Garments without Guilt? Global Labour Justice and Ethical Codes in Sri Lankan Apparels’ என்ற தனது நூலில் காஞ்சனா ருவன்புர பின்வருமாறு எழுதுகிறார்:
“வெளியாட்களாக, அருகிலுள்ள கிராமங்களைப் பற்றிய அறிவைப் பெற, தொழிற்சாலைகளின் மேலாளர்கள் இராணுவத்தின் அறிவை நம்பியிருக்க வேண்டியிருந்தது. அவர்கள் ஆட்சேர்ப்பிற்கு இராணுவத்தின் உளவுத்துறையைப் பயன்படுத்தினர். சிலர் கிராமசேவகர்கள் உதவியைப் பெற்றனர். சில மேலாளர்கள் இராணுவத்தின் உதவியைப் பயன்படுத்தி அருகிலுள்ள கிராமங்களில் இருந்து தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்தனர். அவர்களின் புலனாய்வுப் பட்டியலில் இருந்து திறமையான இளைஞர்களை அடையாளம் கண்டனர். தெற்கில் உள்ள சுதந்திர வர்த்தக வலயங்களுக்கு தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு முகவர்கள், தரகர்கள் மற்றும் மனிதவள ஏஜென்சிகளையே இத்தொழிற்சாலைகள் எப்போதும் நம்பியிருந்தன. ஆனால் வடக்கில், ஆட்சேர்ப்பு முயற்சிகளில் இராணுவத்தையோ அல்லது முகவர்களின் உதவியையோ தரகர்களாகப் பயன்படுத்தின.”
பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, பெருஞ்சவால்கள்
தொடர்ச்சியான தொழில்சார் சவால்களை வடக்கின் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் சந்தித்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் எதிர்நோக்கிய சிரமங்கள் முக்கியமானவை. முதலாவதாக கொரோனா பெருந்தொற்று காலம் மிகவும் சோதனையான காலமாக இருந்தது. இக்காலப்பகுதியில் இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்ட போதும் வடக்கின் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கின. இந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட ஒரு தொழிலாளர் அக்காலப்பகுதியில் தம்மிடையே இருந்த அச்சத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்:
“நாட்டின் பிறபகுதிகளில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் கொரோனா பரவுவது பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டோம். ஆனால் எமது தொழிற்சாலையில் பரவலைத் தடுப்பதற்குப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. சமூக இடைவெளி என்பது இல்லை. அதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானால் பணிக்கு வரவியலாது. அவ்வாறு வேலைக்கு வர இயலாத நாட்களுக்கு எமக்குச் சம்பளம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. எனவே எப்படியாவது வேலைக்கு வரவேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது. மிகுந்த அச்சத்துடனேயே வேலை செய்தோம். எம்மில் யாருக்காவது கொரோனா இருந்தால், தொற்றுக்குட்பட்டவர் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவார். அவரோடு இணைந்து வேலை செய்தோர் தொடர்ந்து வேலை செய்யவேண்டும் என்பதே எமக்கு வழங்கப்பட்ட அறிவுரையாகும்.”

பெருந்தொற்றுக் காலத்தில் ‘பொருளாதாரத்தை வழமைக்குக் கொண்டுவருதல்’ என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது. இதனால் பொருளாதார நலன்சார்ந்தே முடிவுகள் எட்டப்பட்டன. அவ்வகையில் கொரோனா பெருந்தொற்று தொடர்பிலான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டாலும் அவை சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதை அரசாங்கம் மேற்பார்வை செய்யவில்லை. கொரோனா தொடர்பில் இராணுவத்தை சிவில் பணிகளில் அமர்த்தி கொடுமைசெய்த அரசாங்கம் ஆடைத்தொழிற்சாலைகளில் நிகழ்ந்த மீறல்களைக் கண்டும்காணாமல் விட்டது.
கொரோனாவிற்குப் பின்னரான காலப்பகுதியில் பொருளாதாரம் வழமைக்குத் திரும்பியது. ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்கள் அதிகமாக இலாபம் பார்த்தன. 2021ஆம் ஆண்டு ஆடைத்தொழிற்றுறையால் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டது. இத்தொகை 2022ஆம் ஆண்டு 5.9 பில்லியனாக அதிகரித்தது. நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்தபோதும் ஆடைத்தொழிற்சாலைகள் அதிகரித்த இலாபத்தையே பார்த்தன. ஆனால் இந்தப் பலன்கள் தொழிலாளிகளைச் சென்று சேரவில்லை. பொருளாதார நெருக்கடி அதிகரித்தபோதும் தொழிலாளர்களின் சம்பளங்களில் அதிகரிப்பு நிகழவில்லை.
“பொருளாதார நெருக்கடி எமக்கு மிகுந்த அச்சத்தைக் கொடுத்தது. பெரிதாக ஓடர்கள் இல்லை என்று எமக்குச் சொல்லப்பட்டது. எனவே எமது வேலையைத் தக்கவைப்பதே சவாலானது என்ற தோற்றம் எமக்கிருந்தது. மேலதிக கொடுப்பனவுகள் ஏதும் வழங்கப்படவில்லை. வருமானம் போதுமானதாக இல்லை. வாழ்க்கைச் செலவு பலமடங்கு அதிகரித்தது. இருக்கிற வேலையும் போய்விடுமோ என்ற பயம்தான் பெரியதாக இருந்தது. நாம் எல்லோரும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டோம். ஆனால் எமது வேலைத்தலங்கள் அவை குறித்துக் கவனம் காட்டவில்லை. அது மிகவும் துயரமான காலம். எதிர்காலம் குறித்த எந்தவொரு நம்பிக்கையும் எமக்கிருக்கவில்லை.”
பொருளாதார நெருக்கடிக் காலத்தில் வடபகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களின் மனநிலையை மேலுள்ள கூற்று பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதேகாலப்பகுதியில் பல ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள் குறுங்கடன் நிறுவனங்களிடம் கடன் பெறத் தொடங்கினார்கள். இது அவர்களை நிரந்தரக் கடனாளிகளாக மாற்றியது. இது இன்னொரு வகைச் சவாலை இவர்களிடம் கொண்டு சேர்த்தது.
சமகாலக் குரல்கள் வரையும் சித்திரங்கள்
பொருளாதார நெருக்கடி சற்றுத் தணிந்த நிலையில் புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் பதவியேற்றமை புதிய நம்பிக்கையை நாட்டில் ஏற்படுத்தியது. ஆனால் வடபுலத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரிவோரின் வாழ்வில் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை என்பதை அவர்களுடனான அண்மைய உரையாடல்கள் தெளிவுபடுத்தின. இதை விளங்கிக் கொள்ளவும், அதன் வலியின் ஆழத்தை உணர்த்தவும் அவர்களின் மொழியிலேயே அவர்கள் தங்கள் வாழ்வு குறித்து வரைந்த சித்திரங்களை இப்பகுதியில் தரவிழைகிறேன்.
“இங்க இரண்டு சிப்டில ஆக்கள் வேலை செய்யினம். முதல் சிப்ட் காலம 5.30க்குத் தொடங்கி மத்தியானம் 1.30 மணிக்கு முடியும். இரண்டாவது சிப்ட் 1.30 மணிக்குத் தொடங்கி இரவு 9.30 மணிக்கு முடியும். நாங்கள் இருக்கிற இடத்துக்கு பஸ் இருக்கு. கம்பெனியால பஸ் விடுகிறவ. ஆனா பஸ் வந்து றோட்டுக்குத் தான் வரும். நாங்கள் உள்ளுக்க இருக்கிறதால, நாங்கள் தான் எப்படியாவது றோட்டுக்கு வரோனும். அல்லது இரவு றோட்டில இருந்து வீட்டுக்குப் போகோணும்.”
“காலமச் சாப்பாட்டுக்கு 20 நிமிடம், பிறகு இன்னொரு 15 நிமிட தேநீர் இடைவேளை. இதுதான் எங்களுக்குக் கிடைக்கிற இடைவேளை. நடுவில பாத்ரூம் போகோணுமெண்டா எங்கட வேலையை பலன்ஸ் பண்ணிற ஆள் இருக்கோணும். இதனால நாங்கள் பெரும்பாலும் போறதில்ல. ஏனென்டா ஒருத்தர் இல்லையண்டா வேலை குவிஞ்சிடும். நாங்கள் எங்கட டார்க்கெட்டைக் குடுக்க ஏலாது. அப்ப பேச்சு விழும். அதால நாங்கள் நடுவில பாத்ரூம் போறது கஷ்டம். நிறையப் பேர் இதாலே தண்ணியும் குடிக்கிறேல்ல, பாத்ரூமும் போறேல்ல. முந்தி நாங்கள் வேலை செய்யிற இடத்தில தண்ணியே வைக்க மாட்டினம். நாங்கள் தண்ணி குடிக்கிறண்டா வெளிய போகோணும். வேலை செய்துகொண்டிருக்கேக்க கனதூரம் தண்ணியத் தேடிப் போகேலாதுதானே.”
“எங்களுக்கு லீவு ஒரு பெரிய பிரச்சனை. தேவைக்கு லீவு எடுக்கேலாம இருக்கும். இரண்டு நாள் லீவு வேணும் எண்டு கேட்டா, ஏன் லீவு வேணும் எண்டு கேப்பினம். இப்ப லீவு தரேலா எண்டுதான் கதை சொல்லுவினம். காய்ச்சல் அல்லது சரியான வருத்தம் எண்டு லீவு எடுக்கிறண்டா முதல்நாள் கோல் பண்ணிச் சொல்லோனும். அப்படிச் சொன்னாலும் லீவு எடுத்த நாளுக்குரிய சம்பளத்தை வெட்டுவினம். அந்தப் பயத்தில வருத்தமெண்டாலும் வேலைக்கு எல்லாரும் போறவை. புள்ளைக்குச் சுகமில்லை எண்டாலும் வேலைக்குப் போறது, ஏனென்டா லீவெடுத்தா நாள் சம்பளத்தை விடக் கூட வெட்டுவினம். வேலைக்குப் போகாட்டி அடுத்த நாள் HR இல விடுவினம். ஏன் லீவு எடுத்தெண்டு பேசுவினம்.”
“இப்போது ஆண்கள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள். அது தடைசெய்யப்பட்ட பொருள். ஆனாலும் ஆண்கள் பாவிக்கினம். சிலர் பெண்பிள்ளைகளுடன் தவறாக நடக்க முயன்று இருக்கினம். அந்த ஆக்களைப் பிடிச்சு வேலையவிட்டு நிப்பாட்டியும் இருக்கினம். பலர் வேலை சரியான கஸ்டம் எண்டதால பாவிக்கிறவ.”
“நாங்கள் வேலை செய்யிற முழு நேரமும் நிண்டுதான் வேலை செய்யிற நாங்கள். பிரேக் நேரத்தில தான் இருக்க ஏலும். மிச்ச நேரம் முழுவதும் நிக்கிற வேலைதான். கிழமையில ஆறுநாளும் நிண்டு வேலைதான்.”
“நாங்கள் கட்டாயம் டார்கெட்டை முடிக்க வேணும். எங்களுக்கு ஒரு மணித்தியால டார்கெட் எண்டு இருக்கு. உதாரணத்துக்கு நாங்கள் 16 பேர் ஒரு டீம். இப்ப நாங்கள் நைட்டி தைக்கிறம். ஒரு மணித்தியாலத்துக்கு நாங்கள் 140 நைட்டி தைக்க வேணும். 15 நிமிடத்துக்கு 35 நைட்டி டார்கெட். துணியை வெட்டுறதில இருந்து முழுமையாகத் தைத்து பக் பண்ணும் வரைக்கும் எல்லாம் முடிக்கோணும்.”
“தூசு ஒரு பெரிய பிரச்சனை. மிசின எவ்வளவு துடைச்சாலும் தூசு வந்துகொண்டே இருக்குது. இதால நிறையப் பேருக்கு முட்டு வருத்தம் இருக்குது.”
“எங்களுக்கு மொழிப்பிரச்சனை ஒரு பிரச்சனை. எங்களுக்கு மேல இருக்கிறாக்கள் எல்லாரும் சிங்கள ஆக்கள். அவையள் என்ன கதைக்கினம் எண்டு தெரியாது. சில நேரம் நல்லா பேச்சு விழும். அவையள் தூசணத்தால தான் பேசுவினம். நாங்கள் சிரிச்சுக் கொண்டு நிப்பம். ஏங்களுக்கு ஏதும் விளங்காது தானே. சிங்களம் தெரிஞ்ச ஆக்கள் என்ன பேசினவை எண்டு சொன்னாத்தான் தெரியும்.”
மேலே உள்ள குரல்கள் இலங்கையின் வடபகுதியில் உள்ள வெவ்வேறுபட்ட ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களினுடையவை. இவை சமகாலத்தில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களின் ஒரு குறுக்குவெட்டுப் பார்வையைத் தருகின்றன. இவை எழுப்புகின்ற கேள்விகள் பல. ஒரு சமூகமாகவும் இலங்கையராகவும் நாம் மீள்சிந்திப்பதற்கான வாய்ப்பை இந்தக் குரல்கள் தந்துள்ளன.
நிறைவுக் குறிப்புகள்
இலங்கையின் வடபகுதியில் இவ்வாறான தொழிற்றுறையில் பணியாற்றும் மக்கள் குறித்தோ அவர்தம் குடும்பங்கள் குறித்தோ ஈழத் தமிழ்ச்சமூகம் அக்கறை காட்டியுள்ளதா என்பது முதன்மையான வினா. அவர்களது பிரச்சினைகள் எவ்வளவு தூரம் எம்மத்தியில் அறியப்பட்டுள்ளன, பேசுபொருளாகியுள்ளன என்ற வினாவை எழுப்புவது தவிர்க்கவியலாதது.
பொருளாதார அபிவிருத்தியின் பெயரால் உழைப்புச் சுரண்டலை நாம் அனுமதித்திருக்கிறோம். அவர்களுக்கு மாற்றுத் தொழில்களுக்கான வாய்ப்புகள் இல்லாதவரை, இவ்வகையான உழைப்புச் சுரண்டலுக்குப் பலியாவது தவிர்க்கவியலாதது.
இவ்விடத்தில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். வடபுலத்தில் புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்படும் முதலீட்டு முயற்சிகள் குறித்துக் கருத்துரைத்த மூத்த அரச நிர்வாகி ஒருவர் பின்வருமாறு சொன்னார்:
“அவையள் உழைப்பைச் சுரண்டினாலும் சம்பளத்தை ஒழுங்கா குடுக்கிறாங்கள், சாப்பாடு போடுறாங்கள், 8 மணித்தியாலம் தான் வேலை வாங்கிறாங்கள். காசோட வெளிநாட்டில இருந்து வாற எங்கட ஆக்கள் கல்லில நார் உரிக்கத்தான் பாக்கினம். புலம்பெயர்காரரை நம்பி இந்த வேலையை அதுகள் விட்டா, அது அடுப்புக்குள்ளயிருந்து நெருப்புக்குள்ள விழுந்த கதைதான்”
இந்த நிலைப்பாட்டைப் பலர் ஆதரிக்கிறார்கள். புலம்பெயர் வியாபாரிகள் அதிக இலாபம் ஈட்டுவதை மட்டுமே நோக்காகக் கொண்டு முதலீடு செய்ய வருகிறார்களே ஒழிய அதில் சமூக அக்கறையோ, மனிதாபிமானமோ துளியும் இருப்பதில்லை. அந்நிலையில் ஆடைத்தொழிற்சாலைகளைக் குற்றம் சொல்லவியலுமா என்பது ஒரு வாதம்.
இன்னொருபுறம் இலங்கைக்கு ஐரோப்பா வழங்கியிருந்த ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையானது பிரதானமாக ஆடைத் தொழிற்றுறையுடன் தொடர்புடையது. அரசியற் காரணங்களுக்காக, நாட்டின் மனிதவுரிமைக் குற்றங்களோடு அச்சலுகையை இணைக்கத் தெரிந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆடைத்தொழிற்சாலைகளில் நிகழும் அடிப்படை உரிமை மீறல்கள் பொருட்டல்ல.
இந்த ஆடைத்தொழிலாளர்களின் குரல்கள் வலிமையான கேள்விகளை எழுப்புகின்றன. அவற்றில் தோய்ந்துள்ள துயரத்தையும் வலியையும் உணரும்படி கோருகின்றன. ஆனால் நாடோ பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் அந்நியச் செலாவணி முக்கியமானது. எனவே எல்லோரும் அமைதி காக்கிறார்கள். அத்தொழிலாளர்கள் தினந்தினம் வதைபடுகிறார்கள். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் நாமணியும் ஆடைகளில் அவர்களின் கண்ணீரின் ஈரமுண்டு. நியாயமான மனங்களால் மட்டுமே அதை உணரமுடியும்.