அமெரிக்காவிலிருந்து வந்த அன்புவெள்ளம்
Arts
7 நிமிட வாசிப்பு

அமெரிக்காவிலிருந்து வந்த அன்புவெள்ளம்

March 13, 2023 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

பிரபல்யமான அமெரிக்க மிசனரிகள் சிலர் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய தொண்டுகளைப் பற்றி தென்னிந்தியத் திருச்சபையின் ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன் அவர்கள் ஆற்றிய விரிவுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக ஆங்கிலத்திலும் தமிழிலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. அந்நூலுக்கு “அமெரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குள் ஆறாகப் பாய்ந்து வந்த அன்பு வெள்ளம்” என்று பெயரிட்டிருந்தார் பேராயர். அந்த அன்பு வெள்ளத்தில் மருத்துவர் கிறீனும் ஒருவர்.

1858 இல் அமெரிக்கா திரும்பிய கிறீன் தமிழிலே மொழிபெயர்க்கத் திட்டமிட்டிருந்த ஆங்கில மருத்துவ நூல்களின் ஆசிரியர்களுக்குக் கடிதம் எழுதி அந்நூல்களை மொழிபெயர்ப்பதற்கான அனுமதியைப் பெற்றதுடன் மொழிபெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டார். அதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து தமது மாணவர்கள் மொழிபெயர்த்து அனுப்பும் பகுதிகளைச் செவ்வைப்படுத்தியும் வந்தார். யாழ்ப்பாணத்திலிருந்த கிறீனது நண்பர்களும் கிறீனுடன் கடிதத் தொடர்பில் இருந்தனர். கிறீனது உடல்நிலையைக் குறித்தும், மீள் வருகையை எதிர்பார்த்தும் கடிதம் எழுதினர். அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கடிதம் அமெரிக்காவைச் சென்றடைய ஏறத்தாழ 8 மாதம் எடுத்தது.  

மருத்துவர் கிறீனது இரண்டாவது யாழ்ப்பாண வருகை!

மருத்துவர் கிறீன்

இக்காலப் பகுதியில் மதுரையிலிருந்த அமெரிக்க மிசனரிகள் மதுரைக்கு மருத்துவர் ஒருவரது தேவையைக் குறித்து பிறதேசங்களுக்கு மிசனரிகளை அனுப்பும் அமெரிக்க மிசன் சங்கத்துக்கு (ABCFM)   விண்ணப்பித்திருந்தனர். மருத்துவர் கிறீன் யாழ்ப்பாணம் வருதற்கு முன்னர் 1833 – 1846 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய மருத்துவர் நேத்தன் உவோட் அமெரிக்கா திரும்பி 13 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் ஆரோக்கியமாகவும் இருந்தார். இந்நிலையில் ABCFM  மருத்துவர் உவோட் அவர்களை யாழ்ப்பாணத்துக்கும் மருத்துவர் கிறீனை மதுரைக்கும் அனுப்புவதற்குத் தீர்மானித்தது. யாழ்ப்பாணம் திரும்பி மிசன் பணியைத் தொடரும் விருப்போடிருந்த கிறீனுக்கு இவ்விடயம் அதிகம் மகிழ்ச்சியளிக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் கிறீன் ஆற்றிய தன்னலமற்ற மருத்துவப் பணியினால் யாழ்ப்பாணம் பெற்ற பெரும்பேறும், விளைந்த நன்மையும், கிறீன் தமிழில் மருத்துவ நூல்களை மொழிபெயர்த்துத் தமிழில் மேலைத்தேச மருத்துவத்தைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற பெருநோக்கோடு எடுத்த முயற்சிகளும் அளவிடற்கரியன. இவ்வாறு பணியாற்றிய கிறீன் என்ற தனிமனித ஆளுமைக்கு இடைநடுவில் நின்றுபோன தனது முயற்சியை யாழ்ப்பாணத்துக்கு மீள வந்து நிறைவேற்றி பூரணப்படுத்த வேண்டும் என்ற தார்மீகமான அறம் சார்ந்த விருப்பு இருப்பது நியாயமானது மட்டுமன்றி அது இறைவனது சித்தமுமாகும்.  

கிறீன் அமெரிக்க மிசன் சங்கத்துக்கு அனுப்பிய கடிதத்திலே தான் யாழ்ப்பாணத்துக்கு மீளச்சென்று மருத்துவ மிசன் பணியைத் தொடரும் தனது ஆத்மார்த்தமான, விருப்பத்தைக் காரணங்களுடன் வெளிப்படுத்தி இருந்தார். அதிலே தனது தமிழ்ப் புலமை குறித்தும் தான் ஒரு பிரசங்கியாக உவோட் மருத்துவரைவிடச் சிறந்த முறையில் யாழ்ப்பாணத்தில் செயற்பட முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை மீளவும் யாழ்ப்பாணம் திரும்பி, தொண்டு செய்வதில்  கொண்டிருக்கும் மகிழ்ச்சியை மதுரைக்குச் சென்று பணியாற்றுவதிலும் தான் பெறவேண்டும் என்று அவரது மனம் விரும்பியதையும் (சமநோக்கு) ABCFM இற்கு அனுப்பிய கடிதத்திலே குறிப்பிட்டிருந்தார்.

1859.11.17 அன்று அமெரிக்க மிசன் சங்கம் (ABCFM) மருத்துவர் கிறீனை மதுரைக்கும் மருத்துவர் நேத்தன் உவோட் மற்றும் அவரது பாரியாரை யாழ்ப்பாணத்திலிருந்த அமெரிக்க இலங்கை மிசனுக்கும் அனுப்புவது என்று தீர்மானித்தது.  

மருத்துவர் கிறீனுக்கு தனது மருத்துவ மிசனரிப் பணியை மீளவும் ஆரம்பிப்பதே ஒரே நோக்காக இருந்தது. எனினும் 1860 இல் கிறீனது உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர் ஜெவ்ரீஸ், கிறீன் உடனே மிசனரிப் பணிக்குத் திரும்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணத்தின் அன்பின் வெளிப்படுத்தல்

கிறீன் யாழ்ப்பாணத்துக்கு மீளவும் வர விரும்பியமைக்கு யாழ்.வாசிகள் மருத்துவர் கிறீன் மீது காண்பித்த அன்பின் பிரதிபலிப்பும் ஒரு காரணம். யாழ்ப்பாணத்திலிருந்து கிறீனுக்கு அன்பர்கள் சிலர் தொடர்ச்சியாகக் கடிதம் எழுதித் தமது அன்பை வெளிப்படுத்தி வந்தனர்.  

தமிழாசிரியர் ஒருவர் அமெரிக்கா திரும்பிய கிறீனுக்கு  1860 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் ஒன்றில் பின்வருமாறு தனது அன்பை வெளிப்படுத்தியிருந்தார்.

“தாங்கள் மிகவும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். மதுரைக்குச் செல்லாது இங்கு வந்து எமது மக்களோடு இருந்து நன்மை செய்ய வேண்டும் என்பதே எமது விருப்பம். தாங்கள் யாழ்ப்பாணத்தில் இல்லாமையால் யாழ்ப்பாணம் எங்கும் அழுகுரல் கேட்கின்றது; இதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகின்றேன்.  சேர் (ஐயா), தங்களது பெயர் எங்கள் இதயங்களில் பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கின்றது என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன்; இலகுவில் அதனை அழிக்க முடியாது (I assure you, Sir, that your name is printed in our minds in capital letters and cannot be easily obliterated).  அதிகமான இளம்பையன்கள் இங்கு மருத்துவம் பயில ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குக் கற்பிக்க யார் இருக்கின்றார்கள்? இந்தப் பையன்கள் தங்களது யாழ்ப்பாண வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றார்கள். சேர், தயவுசெய்து உங்கள் மனதை மாற்றி யாழ்ப்பாணத்துக்கு வரல் வேண்டும்.”

யாழ்ப்பாணத்திலே கொலரா என்னும் பெரும் நோய்த்தொற்று ஏற்பட்டபோது பல்லாயிரக்கணக்கானவர்களைக் காப்பாற்றியும், சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு உயிர்காத்தும் வந்த மருத்துவர்   கிறீன்  ஆற்றிய உன்னத மருத்துவப் பணிக்கான  யாழ்ப்பாணத்தின் அன்பின் பிரதிபலிப்பை மேற்படி கடிதத்திற் காணலாம்.

கிறீன் அமெரிக்காவிலிருந்த காலத்தில்  சிலகாலம் வெளியே வெயிலில் நடமாட முடியாத நிலையில் இருந்தார். இருப்பினும் அவரால் யாழ்ப்பாணம் திரும்பும் எண்ணத்தைக் கைவிட முடியவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்கள் நலன் விசாரித்து எப்போது திரும்புவீர்கள் என்று  கேட்டு எழுதும் கடிதங்கள் கிறீனது ஆன்மாவை ஆட்கொண்டன. மருத்துவர் கிறீன் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் அழைப்பின் குரலை இறைவனது அன்பின் அழைப்பாகக் கண்டார்.

மருத்துவர் உவோட்டும் அவரது பாரியாரும் யாழ்ப்பாணம் 2 ஆவது தடவை வருவதற்காக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திலிருந்து கடலரசன் என்ற கப்பலில் 1860 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்தனர். பயணம் ஆரம்பித்த சில வாரங்களுக்குப் பின்னர் நேத்தன் உவோட் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

அமெரிக்க மிசன் சங்கம் மருத்துவர் நேத்தன் உவோட் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு நியமித்திருந்தமையால் 1861.08.23 அன்று கிறீன் அமெரிக்க மிசன் சங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் மதுரைக்குச் சென்று பணியாற்றும் தனது சம்மதத்தைத் தெரிவித்திருந்தார்.  

எனினும் உடல்நிலை தேறியிருந்தமையாலும்  உவோட்டின் மறைவையடுத்து யாழ்ப்பாணத்தில் மருத்துவ மிசனரி ஒருவர் இல்லாமையால் நிலவிய வெற்றிடத்துக்கு கிறீன் விண்ணப்பித்தார். கிறீனது விண்ணப்பத்தை ABCFM  ஏற்றுக் கொண்டது. ABCFM வழங்கிய 300 அமெரிக்க டொலர் நன்கொடையில் தேவையான மருத்துவ உபகரணங்களையும் மருத்துவ நூல்களையும் மருந்துகளையும் வாங்கி யாழ்ப்பாணம் நோக்கிய தனது 2ஆவது பயணத்துக்கான ஆயத்தங்களை கிறீன் மேற்கொண்டார்.   ABCFM வழங்கிய இந்த  300 அமெரிக்க டொலர்  என்பது கிறீன் 1859 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்காக 1000 அமெரிக்க டொலரைத்  திரட்டுவதற்கு விரும்பி, துண்டுப் பிரசுரம் மூலம் அமெரிக்காவிலிருந்த தாராள மனம் படைத்த தனவந்தர்களிடம் விண்ணப்பித்துப் பெற்ற நன்கொடையாக இருக்கலாம்.  

மருத்துவர் கிறீன் அமெரிக்காவிலிருந்த காலப்பகுதியில் (1858-1862) மானிப்பாய் மருத்துவக் கல்லூரியில் கிறீனிடம் கற்று மருத்துவரான சாள்ஸ் மக்கின்ரையர் 11 பேரைக் கொண்ட 5 ஆவது மருத்துவ அணியை ஆரம்பித்து பயிற்றுவித்தார்.

கிறீனது 5 ஆவது மாணவர் அணி (1861-1864):

  • காரத்திகேசர் (எம். கிற்சோக்)
  • எதிர்நாயகம் (சி.ரி. மில்ஸ்)
  • சுவாமிநாதர் (எஸ். டபிள்யு. நத்தானியேல்)
  • கனகரத்தினம் (எல். எஸ். ஸ்ரோங்)
  • வைத்திலிங்கம் (டி. டபிள்யு. சப்மான்)
  • எஸ். நவரத்தினம்
  • எ. அப்பாப்பிள்ளை
  • ஜே. பி. சௌ
  • சிவப்பிரகாசம்
  • உவில்லியம் போல்
  • எல். ஸ்பௌல்டிங்

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்