செட்டிகுளம் : தமிழரின் பூர்வீக வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சில தொல்லியற் சான்றுகள்
Arts
24 நிமிட வாசிப்பு

செட்டிகுளம் : தமிழரின் பூர்வீக வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சில தொல்லியற் சான்றுகள்

July 28, 2024 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

சமகாலத்தில் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ள வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசம் பொதுவாக வன்னி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வன்னி உள்ளிட்ட வடஇலங்கை பாளி மொழியில் நாகதீபம், உத்தரதேசம் எனவும், தமிழில் நாகநாடு எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. கி.பி. 13 ஆம் நாற்றாண்டின் நடுப்பகுதியில் பொலநறுவை அரசு வீழ்ச்சியடைந்து சிங்கள இராசதானி தெற்கு நோக்கி தம்பதெனியாவிற்கு நகர்ந்த போது, வடக்கில் கலிங்கமாகன் சாகவன் தலைமையில் தோன்றிய அரசு காலத்தில், இப்பிராந்தியத்தின் குறிப்பிட்ட சில வட்டாரங்கள் வன்னி, வன்னிப்பற்று எனவும் அடங்காப்பற்று எனவும், அங்கு வாழ்ந்த மக்கள் வன்னியர் எனவும் அழைக்கப்பட்டனர். அவற்றுள் செட்டிகுளமும் வன்னிச் சிற்றரசர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. இன்று வன்னி பற்றிய ஆய்வில் அவ்வட்டாரத்திற்கு தனித்துவமான பண்பாட்டு அம்சங்கள் சில முதன்மை பெற்றுக் காணப்படுகின்றன. அவற்றை வெளிப்படுத்தியதில் அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கிய பங்குண்டு. 

நாகநாடும் செட்டிகுளமும்

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக பிரிவுகள் இன்று கிராமம், ஊர், குறிச்சி, வட்டாரம், பிரதேசம் என்ற அடிப்படையி வேறுபட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அதன் காரணமாக குறிப்பிட்ட இடத்தின் வரலாற்றையும், பண்பாட்டையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் எம் மக்களிடையே மேலோங்கிக் காணப்படுகிறது. ஆனால் ஆதிகால, இடைக்கால வரலாற்றில் இந்நிர்வாகப் பிரிவுகள் அனைத்தும் பெரும்பாலும் ஒரு பிராந்தியத்திற்கு பெயர் கொண்டே அழைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

வடஇலங்கையின் பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி கி.பி.13 ஆம் நூற்றாண்டிலிருந்து வன்னி என்ற பெயரால் அழைக்கப்படுவதற்கு முன்னர் அனுராதபுரத்திற்கு வடக்கில் உள்ள பிராந்தியத்தைப் பாளி இலக்கியங்கள் நாகதீப(ம்), உத்தரதேச(ம்) என்ற பெயர்களால் தனித்து அடையாளப்படுத்திக் கூறுகின்றன. இக்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் 1936 இல் வல்லிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 3 – 4 ஆம் நுாற்றாண்டுக்குரிய பொற்சாசனத்தில் இப்பெயர் ‘நகதிவ’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுராதபுரத்திற்கு வடக்கில் உள்ள கி.மு.1 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிராமிச் சாசனம் ஒன்று இங்கிருந்த நாக நகர் பற்றிக் கூறுகிறது. இது நாகர்கள் வாழ்ந்த நகரம் என்ற பொருளில் அமைந்துள்ளது. பிராகிருத மொழியில் ‘நஹநஹர’ (Naganara) என எழுதப்படும் இப்பெயர் இச்சாசனத்தில் தமிழில் நாகநகர் (Nakanakar) என எழுதப்பட்டுள்ளது. கலாநிதி இரகுபதி இந்த ‘நாகநகர்’ அக்காலத்தில் கந்தரோடையின் தலைநகராக இருந்திருக்கலாம் அல்லது கந்தரோடையைக் குறித்திருக்கலாம் எனக் கருதுகிறார். ஆனால் நிக்லஷ் என்ற அறிஞர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்குரிய சாசனமொன்றில் வரும் நாகநகரை ஆதாரம் காட்டி, பிராமிச் சாசனத்தில் வரும் நாகநகரை வவுனியாவுக்கு வடக்கில் இருந்த ஒரு நகரம் என அடையாளப்படுத்துகிறார். இந்நகரம் எங்கு அமைந்திருந்தாலும் இந்ந நகரில் வாழ்ந்த நாகர்கள் தமிழர்களாக இருந்தனர் என்பதை உறுதிப்படுத்துவதில் இச்சாசனம் முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கைக்கும் உரோம நாட்டிற்கும் இடையிலான வணிக உறவு பற்றிக் கூறும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொலமி என்ற யாத்திரிகரின் குறிப்பில் இலங்கையின் முக்கிய கரையோரப்பட்டினங்களில் ஒன்றாக ‘நாகடிப’ என்ற இடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், அவர் வரைந்த தேசப்படத்தில் அவ்விடம் வடஇலங்கையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே பாளி இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நாகதீபம் என்பது அறிஞர்களின் கருத்தாகும். பாளி மொழியில் நாகதீப(ம்) என அழைக்கப்பட்ட வடஇலங்கை, தமிழில் நாகநாடு என அழைக்கப்பட்டது. தமிழகத்தில் ஆறாம் நூற்றாண்டின் பின்னர் தோன்றிய இருபெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை தமிழகத்திற்கு அப்பால் கடல் கடந்து செல்லவேண்டிய இடங்களில் ஒன்றாக நாகநாட்டைக் குறிப்பிடுகின்றது. பல்லவர் கால வேலூர்ப்பாளைச் செப்பேடு ஒன்று பல்லவ மன்னன் ஒருவன் நாககுல மகளை மணந்ததாகக் கூறுகிறது. இதேபோல் சோழர் காலத்தில் தோன்றிய கலிங்கத்துப்பரணியில் சோழவம்சத்துக் கிள்ளிவளவன் நாகநாட்டு இளவரசியை மணந்த கதை கூறப்படுகிறது. மேற்கூறப்பட்ட மூலாதாரங்களில் கூறப்படும் நாகநாட்டையும், அதனோடு தொடர்புடைய வரலாற்றுச் சம்பவங்களையும் ஆய்வு செய்த பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் இவற்றில் சுட்டிக்காட்டப்படும் நாகநாடு ஈழத்துப் பாளி நூல்கள் கூறும் நாகதீபத்தையே குறிப்பதாக கருதுகிறார். ஆகவே பாளியில் நாகதீப(ம்) தமிழில் நாகநாடு என அழைக்கப்பட்டுள்ள பிராந்தியத்திற்குள் செட்டிகுள வட்டாரமும் அடங்கியிருந்ததென்பதில் ஐயமில்லை. இலங்கையின் முதன்மைச் சாசனவியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் பரணவிதான வன்னிப் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 40 பிராமிக் கல்வெட்டுகளை ஆய்வு செய்துள்ளார். வன்னிப்பிராந்தியத்தில் வாழ்ந்த தமிழர்கள் ஒரு குழுவாக வணிகத்தில் ஈடுபட்டிருந்தமையும் அக்காலத்தில் நாகச் சிற்றரசர்களின் ஆட்சி வன்னியில் இருந்தமையும், இங்கு வாழ்ந்த மக்கள் நாக பாம்பை தமது குலமரபுச் சின்னமாகக் கொண்டிருந்ததால், அப்பெயர் தனிநபர் பெயரிலும் முதன்மை பெற்றிருந்தமையும் அவரது ஆய்வுகளின் ஊடாகத் தெரியவந்துள்ளது. பேராசிரியர் இந்திரபாலா வவுனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் வணிகர் பற்றிய இரண்டு பிராமிக் கல்வெட்டுகளை ஆதாரமாகக் காட்டி இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மொழியால் ஒரு இனக்குழுவாக வாழத் தொடங்கிவிட்டனர் எனக் கூறுகிறார்.

நாகதீபம் அல்லது நாகநாடு என்ற பெயருக்குள் அடங்கும் வன்னியின் தொன்மைக்குள் செட்டிகுளமும் உள்ளடங்குகிறது. அண்மையில் இக்கட்டுரை ஆசிரியர் செட்டிகுளத்தில் கப்பாச்சி என்ற இடத்தில் மேற்கொண்ட களவாய்வின் போது இவ்விடத்தின் தொன்மையை அடையாளப்படுத்தும் இரண்டு முக்கிய ஆதாரங்களைக் கண்டுபிடித்தார். அவற்றுள் ஒன்று பெருங்கற்கால பண்பாட்டு மக்கள் அல்லது ஆதியிரும்புகால மக்கள் அமைத்த நினைவுச் சின்னமாகும். கலாநிதி சிறான்தெரணியகல இப்பண்பாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர்கள், நாக இன மக்கள் எனக் கூறுகிறார். இரண்டாவதாக இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் ஆதாரங்களுள் நான்கு பிராமிக் கல்வெட்டுகள் சிறப்பாக குறிப்பிடத்தக்கன. இவை கி.மு. 3 இல் இருந்து கி.பி. 4 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால இவ்விடத்தின் வரலாற்றை அறிவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அக்கல்வெட்டுக்கள் நாக என முடியும் தனிநபர் பெயரும், நாக என முடியும் இடப்பெயரும் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாதாரங்கள் பண்டைய காலத்தில் செட்டிகுளம் நாகநாடு அல்லது நாகதீபம் என்ற பெயர் கொண்ட பிராந்தியத்திற்குள் அடங்கியிருந்ததை உறுதிசெய்கின்றன.

செட்டிகுளத்தின் பூர்வீக மக்கள்

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நம்பகரமான தொல்லியல் ஆதாரங்களில் இருந்து வன்னிப் பிராந்தியத்தின் பூர்வீக மக்கள் கற்காலப் பண்பாட்டிற்குரியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 1970 களில் வன்னியில் இரணைமடுப் பகுதியில் தொல்லியல் ஆய்வினை மேற்கொண்ட கலாநிதி சிறான்தெரணியகல இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வட்டாரத்தில் வாழ்ந்த கற்கால மக்கள் பயன்படுத்திய கற் கருவிகளைக் (Stone Tools) கண்டுபிடித்தார். நாடோடிகளாக காடுகளிலும், குகைகளிலும் தற்காலிகமாக வாழ்ந்த இம்மக்கள் இக் கல்லாயுதங்களை மிருகங்களை வேட்டையாடவும், இயற்கையாக கிடைக்கும் பழங்கள், தானியங்கள் கிழங்குவகைகளை சேகரிக்கவும் பயன்படுத்தியுள்ளனர். இக்கற்கருவிகளின் வடிவமைப்பு, தொழில்நுட்பம், அழகியல், அவை பயன்படுத்தப்பட்டதன் நோக்கம் என்பவற்றை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள் இங்கு வாழ்ந்த மக்களை மேலைப்பழங்கற்கால பண்பாட்டுக்கு (Upper Palaeolithic People) உரிய மக்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். அண்மையில் தென்னிலங்கையில் முந்தல் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்விலும் இக்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

செட்டிகுளத்தில் இப்பண்பாட்டு மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறு கண்டறியும் நோக்கிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் செட்டிகுளத்தில் கப்பாச்சி போன்ற இடங்களில் உள்ள மலைகளில் காணப்படும் குகைகள், பாறைகளில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களை நோக்கும் போது செட்டிகுளத்திலும் கற்கால மக்கள் வாழ்ந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இக்கருத்தை எதிர்கால ஆய்வுகள்தான் உறுதிசெய்ய வேண்டும்.

செட்டிகுளத்தில் சங்ககால நினைவுச் சின்னம்

அண்மையில் செட்டிகுளத்தில் கப்பாச்சி என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த தொல்லியற் சின்னங்களுள் ஒன்று இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும். இதுவே இப்பிரதேசத்தில் கிடைத்த நம்பகரமான தொன்மைச் சான்று எனக் கூறலாம். ஏறத்தாழ இற்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் இறந்தவர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்ற நம்பிக்கையில் தமது இருப்பிடங்களை விட பல வடிவங்களில், பல அளவுகளில் ஈமச்சின்னங்களை அமைத்து வழிபட்டனர். இவ் ஈமச்சின்னங்கள் அவ்வவ் பிரதேசங்களில் காணப்பட்ட மூலவளங்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் அவற்றின் தன்மைகொண்டு அவை கல்வட்டங்கள், கற்கிடை, தாழி, எனப் பலபெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. சில ஈமச்சின்னங்கள் பெரிய கற்களை கொண்டு அமைக்கப்பட்டதால் அது பெருங்கற்கால ஈமச்சின்னம் எனவும், அவற்றைப் பின்பற்றிய மக்களை பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இப் பண்பாட்டுடன் இரும்பின் பயன்பாடு இலங்கையிலும், தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டதால் இது ஆதியிரும்புக்காலப் பண்பாடு (Early Iron Age Culture) எனவும் அழைக்கப்படும். இவ் ஈமச் சின்னத்தில், இறந்தவர் உடலுடன் அவர் வாழ்நாளில் பயன்படுத்திய பலதரப்பட்ட பொருட்களையும் சேர்த்து அடக்கம் செய்யப்படுவதால் இவ் ஈமச் சின்னம் பற்றிய ஆய்வு அக்காலப் பண்பாட்டு ஆய்வாக அமைகிறது. இலங்கையிலும், தமிழகத்திலும் இப்பண்பாட்டு ஈமச்சின்னங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள், அவ்விடங்களில் குடியிருப்புகள், நீர்ப்பாசன விவசாயம், இரும்பின் உபயோகம், சக்கரத்தால் செய்யப்பட்ட மட்பாண்டங்கள், கறுப்பு – சிவப்பு நிற மட்பாண்ட உபயோகம், பண்டமாற்று, நகரமயமாக்கம், அரச உருவாக்கம் என்பன ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். கந்தரோடையில் இப்பண்பாடு பற்றி விரிவாக ஆய்வு நடாத்திய அமெரிக்க பென்சில்வேனியப் பல்கலைக்கழக அரும்பொருள் ஆய்வாளர் விமலாபேக்லே இப்பண்பாட்டு மக்கள் தமிழகத்தில் இருந்து கந்தரோடைக்கு புலம்பெயர்ந்திருக்கலாம் அல்லது இங்கு வாழ்ந்த மக்கள் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கலாம் எனக் கூறுகிறார். பெருங்கற்காலப் பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் தோன்றிய சங்க இலக்கியத்தில் இப்பண்பாட்டு மக்கள் அமைத்த ஈமச்சின்னங்கள் கற்பதுக்கை, நெடுநிலை நடுகல் எனப் பல பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. வடஇலங்கைச் சமூக வழக்கில் தற்காலத்தில் இறந்தவர்களுக்காக நடாத்தப்படும் சில கிரியைகள், சடங்கு முறைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள ஆதிஇரும்புக்கால சடங்கு முறைகளை நினைவுபடுத்துவதாக உள்ளன.

செட்டிகுளத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் சங்க இலக்கியத்தில் வரும் ‘பரல் உயர் பதுக்கை’ (கல்வட்டங்கள்) (stone circle) என்ற வகையைச் சார்ந்ததாகும். இவ்வகை ஈமச்சின்னங்கள் சில வவுனியா மாவட்டத்தில் மாமடு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இக் கல்வட்டங்கள் காணப்பட்ட இடத்திலிருந்து தாழியின் உடைந்த பாகங்களும், கறுப்பு – சிவப்பு நிற மட்பாணடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின முக்கியத்துவம் கருதி இக்கல்வட்டங்கள் இலங்கைத் தொல்லியற் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால் செட்டிக்குளத்தில் உள்ள இவ்வகை ஈமச்சின்னங்கள் சில, புதையல் தோண்டுவொரின் நடவடிக்கையால் சிதைவடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று முழுமையாகக் காணப்படுகிறது. இது சங்க இலக்கியத்தில் வரும் ‘பரல் உயர் பதுக்கை’ என்பதை இப்பண்பாடு பற்றிய ஆய்வில் புலமையுடைய பாண்டிச்சேரி பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் க. இராசன் உறுதி செய்துள்ளார். தமிழகப் பெருங்கற்காலப் பண்பாட்டில் பெரிதும் பின்பற்றப்பட்ட ஈமச் சின்னங்களில் இதுவும் ஒன்றாகும். நிலத்தின் தன்மைக்கு ஏற்ப ஆழமான குழியமைத்து அதற்குள் இறந்தவரது உடலின் பாகங்களையும், நிவேதனப் பொருட்களையும் தாழியில் அல்லது கல்லறையில் இட்டு அதைச் சுற்றி வட்டமான கற்களை நாட்டுவதன் மூலம் இவ்வகை ஈமச்சின்னம் உருவாக்கப்படுகிறது. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஈமச்சின்னமே செட்டிகுளத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இவ் ஈமச் சின்னத்தில் இறந்தவர் நினைவாக நடுகற்கள் நாட்டப்பட்டும் காணப்படுகின்றன. அகநாநூற்றில் ‘பரல் உயர் பதுக்கை’ என வரும் குறிப்பு (அகம் 91:10) புறநாநூற்றில் “பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி, மரல் வகுந்து தொடுத்து செம்பூங்கண்ணியொடு, அணி மயிற் பிலி சூட்டி, பெயர் பொறித்து இனி நட்டனரே கல்லும் கன்றொடு கறவை தந்து பகைவர் ஓட்டிய நெடுந்தை” எனக் கூறப்பட்டுள்ளது (புறம் 264:8-13). இதற்கு பரல் உயர் பதுக்கையுடன் நடுகல்லும் நாட்டப்பட்டிருந்ததே காரணமாகும். செட்டிகுளத்தில் உள்ள ‘பரல் உயர் பதுக்கை’ முழுமையான அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்படுமானால் இதுவரை வெளிச்சத்திற்கு வராத பல உண்மைகள் வெளிவர வாய்ப்புண்டு, எவ்வாறாயினும் செட்டிகுளத்தில் இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தை ஒத்த பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு கப்பாச்சி என்ற இடத்தில் கிடைத்த ‘பரல் உயர் பதுக்கை’ என்ற ஈமச்சின்னம் நம்பத்தகுந்த சான்றாகும்.

செட்டிகுளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகள்

செட்டிகுளத்தில் கப்பாச்சி என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் நான்கு பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 4 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகும். பொதுவாக தமிழகத்திலும், இலங்கையிலும் பெருங்கற்காலப் பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் பிராமி எழுத்துகள் தோன்றியதுடன், பெரும்பாலும் அம் மையங்களை அண்டியே இப்பிராமிக் கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கப்பாச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு முழுமையாக இதுவரை எம்மால் வாசிக்கப்படவில்லை. ஆயினும் அக் கல்வெட்டுகளில் தமிழகப் பிராமிக் கல்வெட்டுகளை ஒத்த வரிவடிவங்களை அடையாளம் காணமுடிந்துள்ளது. வன்னியில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பிராமிக் கல்வெட்டுகள் இங்கு கி.மு. 2 ஆம் நூற்றாண்டளவில் நான்கு நாகச் சிற்றரசர்கள் ஆட்சிபுரிந்ததை எடுத்துக் கூறுகின்றன. மேலும் இப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இதன் சமகாலத்திற்குரிய இரண்டு பிராமிக் கல்வெட்டுகள், வேள் என்ற பட்டத்திற்குரிய தலைவன் பற்றிக் கூறுகின்றன. அவற்றில் ஒன்று வேள் – பூதன் என்ற தலைவனைப் பற்றிக் கூறுகிறது. இதில் வரும் ‘வேள்’ என்ற பட்டம் தமிழகப் பிராமிக் கல்வெட்டுகள் மற்றும் சங்க இலக்கியத்தில் வரும் வேள், வேளீர் என்ற குறுநில மன்னர்களின் ஆட்சியை ஒத்த பொருளில் பயன்படுத்தப்பட்டதாகும். றோமிலாதபார் என்ற வரலாற்று அறிஞர் வடமொழியில் ‘ராஜா’ என்ற பட்டம் என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டதோ அதே பொருளில் தமிழில் வேள் என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார். இக்கூற்று வன்னியில் மேலும் சில சிற்றரசர்களின் ஆட்சி இருந்திருக்கலாம் என்பதற்குச் சான்றாகும். சங்க காலத்தில் தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதியில் வாழ்ந்த பரதவ சமூகம் பற்றிப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இதன் சமகாலத்தில் இலங்கையிலும் வாழ்ந்த பரதவ சமூகம் பற்றி இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 21 பிராமிக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அவற்றுள் 8 பிராமிக் கல்வெட்டுகள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டமை இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. சங்க இலக்கியத்தில் பரதவ சமூகத்தின் தொழில் சார்ந்த நடவடிக்கைகள் பற்றி என்ன கூறப்படுகிறதோ அதையொத்த தன்மையே பரதவ சமூகம் பற்றிய இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது. இந்நிலையில் செட்டிகுளத்தில் கப்பாச்சி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பிராமிக் கல்வெட்டுகள் எதிர்காலத்தில் விரிவாக ஆராயப்படும் இடத்தில் மேலும் பல வரலாற்று உண்மைகள் வெளிவர வாய்ப்புகள் உள்ளன. எவ்வாறாயினும் தற்போது காடுகளாகவும், சிறு மலைகளாகவும் காணப்படும் இப்பிரதேசத்தில் முன்பொரு காலத்தில் செறிவான மக்கள் குடியிருப்புகள் இருந்தமைக்கு இக்கல்வெட்டுகள் சான்றாகும். அதை உறுதிப்படுத்தும் வகையில் பரந்த அளவில் செறிவான கட்டிட அழிபாடுகள் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றன.

செட்டிகுளத்தில் வன்னியர் குடியேற்றம்

செட்டிகுளத்தின் வரலாற்றுச் சிறப்பு, வடஇலங்கையின் பெருநிலப்பரப்பின் சில வட்டாரங்களில் வன்னியர் என்ற சமூகம் குடியேறி அவை வன்னியர் என்ற சிற்றரசர்களின் ஆட்சிக்கு உட்பட்ட காலத்தில் இருந்து பெருமையடைவதைக் காணமுடிகிறது. இலங்கையில் வன்னி, வன்னியர் பற்றிய ஆதாரங்களை சோழர் ஆட்சிக்காலத்தில் இருந்து அறிய முடிகிறது. ஆனால் இப்பெயர் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் இருந்து வன்னி, வன்னிப்பற்று, வன்னிச் சிற்றரசர்கள் என்ற பெயரில் வடஇலங்கையிலும் தென்னிலங்கையிலும் செல்வாக்குப் பெற்றதை பாளி – சிங்கள இலக்கியங்களும், கோணேசர் கல்வெட்டு, மட்டக்களப்புமான்மியம், வையாபாடல் முதலான தமிழ் இலக்கியங்களும் எடுத்துக் கூறுகின்றன. இதற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் பல நோக்கங்களுடன் வன்னியர் என்ற சமூகம் இலங்கையில் வந்து குடியேறியதே காரணமாகும்.

தமிழகத்தில் வன்னியர் பற்றிய குறிப்பு சங்ககாலம் தொட்டுக் காணப்படுகிறது. பதிற்றுப்பத்தில் ‘வன்னிப்பொதில்’ என்ற குறிப்பு வருகிறது. இது வன்னி மரத்தின் கீழ் மக்கள் ஒன்று கூடியதைக் குறிக்கலாம். அல்லது வன்னியர் ஒன்று கூடிய இடத்தைக் குறிக்கலாம். காஞ்சியில் தொண்டை மண்டலத்தை தலைநகராகக் கொண்டு பல்லவர் ஆட்சி செய்த காலத்தில் வன்னியர் சமூகம் பற்றிய பல குறிப்புக்கள்  காணப்படுகின்றன. ஆட்சியில் படைவீர்களுக்கு நிவேதனமாக வழங்கப்பட்ட நிலங்கள் வன்னிப் பற்று என அழைக்கப்பட்டது. மலையமான் ஆட்சியில் வன்னியருக்கு நாயக்கர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. ஆயினும் வன்னியரின் படைப்பிரிவு வீழ்ச்சியடைந்ததால் அவர்கள் படைப்பிரிவில் இருந்து விலகி விவசாயத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை பண்டு தொட்டு தமிழகத்துடன் நெருங்கிய அரசியற் தொடர்புகளைக் கொண்டிருந்ததால் தமிழகத்தில் போர் நடவடிக்கையில் முக்கிய பங்கெடுத்த வன்னியர் சமகாலத்தில் இலங்கையிலும் குடியேறியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. பேராசிரியர் பத்மநாதன், “சோழர் ஆட்சியில் இலங்கையில் இருந்த படைப்பிரிவில் வன்னியர் பணியாற்றியதால் சோழர் ஆட்சியின் முடிவில் இலங்கையில் நிரந்தரமாகத் தங்கிய படைவீரர்களுள் வன்னியரும் அடங்கியிருக்கலாம்; அதனால் அவர்கள் வாழ்ந்த இடங்கள் வன்னிப் பற்று என்ற பெயரைப் பெற்றிருக்கலாம்” எனக் கருதுகிறார். பதின்மூன்றாம் நூற்றாண்டில் கலிங்கமாகன் ஆட்சியைத் தொடர்ந்து பொலநறுவை அரசு தெற்கு நோக்கி நகர்ந்த போது வடஇலங்கையில் கலிங்கமாகன் – சாவகன் தலைமையில் தமிழர்களுக்குச் சார்பான புதிய அரசுகள் தோற்றம் பெற்றன. இக்காலத்தில் இருந்துதான் வன்னி பற்றிய குறிப்புகள் தமிழ் – சிங்கள இலக்கியங்களில் காணப்படுவதுடன், சில வன்னிச் சிற்றரசுகள் சுதந்திரமாகவும், ஏனைய வன்னிச் சிற்றரசுகள் பிற அரசுகளுக்குத் திறை செலுத்தும் அரசுகளாகவும் இருந்த வரலாறும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வடஇலங்கையின் வரலாற்றைக் கூறும் சூளவம்சம், இராஜவலிய, பூஜாவலிய முதலான பாளி, சிங்கள இலக்கியங்களில் வரும் குறிப்புகள் யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்ட அரசு தோன்ற முன்னர் வடஇலங்கையில் கலிங்கமாகன் – சாவகன் அரசுகள் ஆட்சிபுரிந்ததாகக் கூறுகின்றன. அதில் வன்னிப் பெருநிலப்பரப்பே அவர்களின் அதிக செல்வாக்கிற்கு உட்பட்டிருந்ததைக் காணமுடிகிறது. பொலநறுவையின் வீழ்ச்சியைத் தொடர்ந்தே இலங்கையில் வன்னிச் சிற்றரசுகள் பல தோற்றம் பெற்றன. வடஇலங்கையில் இவ்வரசுகள் தோற்றம் பெற கலிங்கமாகன் – சாவகன் ஆட்சி முக்கிய காரணமாக இருந்துள்ளது. அக்காலத்திலேயே செட்டிகுளமும் வன்னிச் சிற்றரசர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பிரதேசமாக மாறியதெனக் கூறலாம்.

வன்னியர் வரலாறு பற்றி விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் பத்மநாதன் வடஇலங்கையில் குறிப்பாக செட்டிகுளத்தில் வன்னியர் குடியேற்றம், வன்னிச் சிற்றரசின் தோற்றம் தொடர்பான வரலாற்றை வையாபாடலில் இருந்து பின்வருமாறு எடுத்துக்காட்டுகிறார்:

“செயதுங்க வீரவரராஜசிங்கன் தன் மாமனது மகளைத் தான் மணம் முடிக்க விரும்புவதாக மதுரை மன்னனிடம் அறிவிக்குமாறு தூதுவரை அனுப்பினான். தூதுவர்கள் சொன்னவற்றைக் கேட்ட மதுரை மன்னன் அறுபது வாட்படை வன்னியரை அழைத்துத் தன் மகள் சமதூதியை அவர்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். செயதுங்க வீரவரராஜசிங்கனும் இளவரசியை மணம் முடித்து விட்டு, அவளோடு இந்த வன்னியர்களை அடங்காப்பற்றுக்குச் சென்று அதைக் கைப்பற்றி ஆளுமாறும், ஆண்டு தோறும் யாழ்ப்பாண அரசனுக்குத் திறை செலுத்துமாறும் பணித்தான்.

அடங்காப்பற்றை அடைந்ததும் வன்னியர் அதைக் கைப்பற்றுவதற்குத் தம்மிடம் போதிய படையில்லை என்பதை உணர்ந்தார்கள். எனவே, இளஞ்சிங்க மாப்பாணன், நல்லவாருதேவன், அத்திமாப்பாணன் என்போரிடம் தூதுவர்களை அனுப்பி மதுரை, மருங்கூர், காரைக்கால், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, துளுவைநாடு, தொண்டைமண்டலம், வடகிரிநாடு எனுமிடங்களிலிருந்து கூட்டிவரக் கூடியவர்கள் அனைவரையும் கொண்டுவருமாறு சொல்லி அனுப்பினார்கள். இதனை அறிந்ததும் நில்லைமூவாயிரவர், திடவீரசிங்கன், குடைகாத்தான், முடிகாத்தான், நல்லவாகு, மலைநாடன், சிங்கவாகு, சோதயன், அங்கசிங்கன், கட்டைக்காலிங்கன், சொக்கநாதன், கங்கைமகள், கலைக்கோட்டுமுடியோன், வீரகச்சமணிமுடியரசன், காபாலிவீரன், சேது எனும் பதியை ஆளுகின்ற வீரம் செறிந்த தலைவன், இளஞ்சிங்க மாப்பாணன் என்போரும் பெருமைமிக்க ஆரிய வம்சத்தவரும் படகுகளிலே ஏறி யாழ்ப்பாணம் வந்தார்கள். இவர்களிலே திடவீரசிங்கன், கரிக்கட்டு மூலைப்பற்றுக்கு அதிபதியானான். இளஞ்சிங்க மாப்பாணன், இராஜசிங்க மாப்பாணன், நல்லவாகு மெய்த்தேவன், கறுத்தவாகு, சிங்கமாப்பாணன் என்போர் சான்றாரையும் வலையரையும் துரத்திவிட்டு முள்ளியவளையைக் கைப்பற்றினார்கள். நீலையினர் திசையாண்டாரும் படையும் மேல்பற்றுக்கு வந்து சகரன், மகரன் என்ற வேட்டுவத் தலைவர்களைக் கொன்றுவிட்டு நாட்டையாண்டனர்.

மேற்குமூலை, கிழக்குமூலை என்பவற்றைக் கைப்பற்றிய சிங்கவாகுபொக்கா வன்னியிலிருந்தான். சுபதிட்டா என்னும் அந்தணனும் படையும், திரியாய் என்னுமிடத்திற்குச் சென்று நீலப்பணிக்கனைக் கொன்று விட்டு அந்நிலத்தை ஆண்டனர். காலிங்கன், மலையகத்தார், கன்னார், முதலியோர் கச்சாயிலே குடியிருந்தார்கள். அங்கசன் கட்டுக்குளத்திற்குச் சென்று வாழ்ந்தான். புகழ்மிக்க சிங்கவாகு திருகோணமலைக்குச் சென்றான். மாமுகன் வெருகல், தம்பலகாமம் என்பவற்றைக் கையாளச் சென்றான். மைடன் என்போன் கொட்டியாரத்திற்கு அதிபதியானான். ஓடுக்கன், நீலன், மைலன் என்போர் முறையே துணுக்காய், இத்திமடு, நெடுங்கேணி என்னுமிடங்களுக்குச் சென்றனர். ஆற்றல் பொருந்திய சன்மன், நொச்சிமுனையை ஆண்டான். நாகன் புல்வெளிக்குச் செல்ல, நீலையினான் வாகுதேவன் தனிக்கல்லில் இருந்தான்.

வன்னியர்கள் வந்த பின்னர் அவர்களை அடுத்து அவர்களின் மனைவிமாரும் பரிவாரங்களும் அடங்காப்பற்றை வந்தடைந்தனர். இவ்வாறு வந்தவர்களுள் மதவீர மழவராயனும் நாட்டையாண்ட மழவராயனும், மன்னனோடு யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். பூபாலவன்னிமையும் கோபாலரும் கட்டுக்குளத்திலும் திரியாயிலும் இனிது வாழ்ந்தனர். வில்வராயன் நல்லூரிலிருந்தான். குடைகாத்தான், கொடித்தேவன், தேவராயன், கந்தவனத்தான் என்போர் செட்டிகுளத்தின் அதிபதிகளாயினர். டத்துங்கராயன் பனங்காமத்தில் வாழ்ந்தான்.“

வையாபாடலில் வரும் வரலாற்றுச் செய்திகளில் பல மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் காணப்படுகின்றன. ஆயினும் வன்னியர், வன்னிச் சிற்றரசுகள் பற்றிக் கூறிய செய்திகள் உண்மையென்பதை ஐரோப்பியர் கால ஆவணங்கள் உறுதிசெய்கின்றன. யாழ்ப்பாண அரசு காலத்தில் சில வன்னிச் சிற்றரசுகள் சுதந்திரமாக ஆட்சிபுரிந்தாலும், சில அரசுகள் யாழ்ப்பாண அரசிற்கு திறை செலுத்தியதாக இவ்வரசு தொடர்பாக எழுந்த தமிழ் இலக்கியங்கள் கூறுவதை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால ஆவணங்களும் உறுதி செய்கின்றன. போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இவ்வரசுகளை வெற்றி கொள்ள முயற்சிகள் எடுத்த போதும் அவை பூரணமாக வெற்றி பெறவில்லை. சில வன்னிச் சிற்றரசுகள் அவர்களுக்குத் திறைசெலுத்திய போது, சில அரசுகள் சுதந்திரமாகச் செயற்பட்டன. பிரித்தானியர் முழு இலங்கையையும் தமது மேலாதிக்கத்திற்குள் கொண்டு வந்த போதும், 1811 இல் வன்னி வெற்றி கொள்ளப்படும் வரை பண்டாரவன்னியன் வன்னியின் சுதந்திர மன்னனாகவே ஆட்சி புரிந்துள்ளான். அக்காலத்திலும் அவன் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு அரச மையமாக செட்டிகுளம் விளங்கியமை அப்பிரதேசத்திற்குரிய தனிச் சிறப்பாகும்.

வன்னிப் பிராந்தியத்தின் வரலாற்றுப் பழமைவாய்ந்த ஆலயங்கள்

தமிழரின் தொன்மையான பண்பாட்டுச் சின்னங்கள் காணப்படும் இடங்களில் ஒன்றாக வன்னிப் பிராந்தியம் காணப்படுகிறது. இங்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இந்து மதம் சார்ந்த வழிபாட்டு மரபு இருந்ததை சாஸ்திரி கூழாங்குளம், உருத்திரபுரம் ஆகிய இடங்களில் கிடைத்த ஆண், பெண் சுடுமண் சிற்பங்கள் உறுதி செய்கின்றன. இவற்றை சிவன், சக்தி வழிபாட்டுச் சின்னங்கள் என அறிஞர்கள் கூறுகின்றனர். கி.மு.3 ஆம் நுாற்றாண்டு பௌத்தமதம் இலங்கைக்குப் பரவியபோது அம்மதம் வன்னியிலும் பரவியதை இங்கு கிடைத்த 40 இற்கும் மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் உறுதிசெய்கின்றன. அம்மதத்தை தமிழர்களும் பின்பற்றியதை பெரியபுளியங்குளத்தில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுகள் உறுதிசெய்கின்றன. யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் வரலாற்றுப் பழமை வாய்ந்த இந்து ஆலயங்கள் தோன்றுவதற்கும், அவை அழியாது பாதுகாக்கப்படுவதற்குமான சாதகமான சூழ்நிலைகள் வன்னியில் காணப்பட்டன. அங்கு பிரித்தானியரால் பண்டாரவன்னியன் வெற்றி கொள்ளப்படும் வரை இப்பிராந்தியத்தின் பெரும் பகுதி வன்னிச் சிற்றரசர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இவர்களின் ஆதரவில் பல இந்துக் கோவில்கள் கட்டப்பட்டிருக்கலாம். மேலும் ஆலயங்களை அமைப்பதற்குரிய கருங்கற்களை இங்கு இலகுவாகப் பெறக் கூடியதாகவும் இருந்துள்ளது. இங்கிருந்து கொண்டுவரப்பட்ட கருங்கற்களைக் கொண்டே யாழ்ப்பாணத்தில் பல இந்துக் கோவில்கள் அமைக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் இருந்த ஆலயங்களை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் அழித்தது போல் வன்னிப்பிராந்தியத்தின் உட்பகுதிகளில் இருந்த ஆலயங்கள் அழிக்கப்பட வாய்ப்பிருக்கவில்லை. ஆயினும் தற்காலத்தில் அங்கு பழமை வாய்ந்ததெனக் கருதக் கூடிய ஆலயங்களை அரிதாகவே காணமுடிகிறது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையின் நிர்வாக அதிகாரிகளாகக் கடமையாற்றிய H.Parke, J.P Lewis, H.Nevid, Nevil, Fowler, Sir William Twynam ஆகியோர் வன்னிப் பிராந்தியம் பற்றி எழுதிய குறிப்புகளும், நூல்களும் இப்பிராந்தியத்தில் பழமையான பௌத்த, இந்து ஆலயங்கள் இருந்ததைக் கோடிட்டுக் காட்டுகின்றன. Nevil என்ற பிரித்தானியர் வன்னியில் உள்ள பனங்காமம் பற்றிக் குறிப்பிடுகையில், தான் வாழ்ந்த காலத்திலும் வன்னி இளவரசர்களது வாசற்தலங்களும், வீடுகளும், கோவில்களும் இருந்ததாகவும், அவை சிதைவடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். ‘Dutch East India Company Officer, J. Haffner’ யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குக் கால்நடையாகச் சென்ற போது மறிச்சுக்கட்டி என்ற இடத்தில் இருந்து 75 மைல் தொலைவில் கல்லாறு என்ற இடத்தில் சைவ ஆலயம் ஒன்றைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார். இவ்வாலயத்தை சி.எஸ். நவரட்ணம், தக்க்ஷண கைலாச புராணத்தில் குறிப்பிடப்படும் குதிரை மலையில் இருந்த ஐயர் கோவில் எனக் குறிப்பிடுகிறார். Hugh Neville என்பவர் ‘tyrobanian’ என்ற நூலில் இவ்வாலயத்தை அண்மைக்காலம் வரை இந்தியாவில் இருந்து வரும் யாத்திரிகர்கள் தரிசித்தாகக் குறிப்பிடுகிறார். J.P Lewis தனது ‘Manual of Vanni’ என்ற நூலில் தான் கண்டவற்றையும் பிறரது நூல்களில் இருந்து அறியப்பட்டவற்றையும் ஆதாரம் காட்டி ஓமந்தை, பெரியமாறா இலுப்பை, கனகராயன்குளம், இராசேந்திரன்குளம், மதகுவைத்தகுளம், ஒட்டுசுட்டான் ஆகிய இடங்களில் இந்து, பௌத்த ஆலயங்களின் அழிபாடுகள், குறுநில மன்னர்களின் இருக்கைகள் போன்றவற்றை அடையாளம் கண்டதாகக் குறிப்பிடுகிறார். மாதோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 10 – 11 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய இரு சோழச் சாசனங்கள் இப்பிராந்தியத்தில் இராஜராஜேஸ்வரம், திருவிராமேஸ்வரம் என்ற பெயரில் இரு ஆலயங்கள் இருந்ததாகக் கூறுகின்றன. இவ்வாதாரங்கள் ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் பல இந்து ஆலயங்கள் வன்னியில் இருந்ததை உறுதி செய்கின்றன. ஆயினும் அக்காலத்திற்குரிய கலைமரபுடன் கூடிய ஒரு ஆலயம்தானும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் பழைய வரலாற்று நினைவுகளுடன் உள்ள ஒரு சில ஆலயங்களையே தற்போது அடையாளம் காணமுடிகிறது. அவற்றுள் செட்டிகுளத்தில் உள்ள சந்திரசேகரர் ஆலயம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

செட்டிகுளம் சந்திரசேகரர் ஆலயம்

இவ்வாலயம் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் கப்பாச்சி என்ற காட்டுப் பிரதேசத்தில் அழகான ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் தோன்றிய வரலாறு, அதன் காலம், ஆலயத்தின் சிறப்பு பற்றிய பல ஐதீகங்களும், வாய்மொழிச் செய்திகளும் அப்பிரதேச மக்களிடையே காணப்படுகின்றன. இவ்வாலயம் தோன்றி வளர்ந்த வரலாறு பற்றி வன்னியில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆய்வு நடாத்திய ஜே.பி லூயிஸ் பின்வருமாறு கூறுகிறார் : 

“செட்டிக்குளத்தில் கலியுக காலம் 1848 இல் மதுரையில் இருந்து வந்த ஒரு செட்டியும், அவர்களுடன் வந்த முத்துக் குளிக்கும் பரதவரும் குடியமர்ந்தனர். இவர்கள் இலங்கைக் கடற்கரையில் கப்பல் உடைந்து கரை ஒதுங்கியவர்களாவர். வீரநாராயணச் செட்டி என்பவன் அடங்காப்பற்றுக்கு வந்து செட்டிகுளத்தில் குடியேறி வௌவாலை எனும் கேணியை வெட்டி, சந்திரசேகர சுவாமிக்கு திருக்கோயில் ஒன்றைக் கட்டினான். கோவிலுக்கு அண்மையில் உள்ள ஒரு கிணற்றில் கோவில் செல்வத்தைப் புதைத்தார். இச் செல்வம் அனைத்தையும் காவுவதற்கு அறுபது யானைகள் தேவைப்பட்டன. இப் புதையலைக் காக்க சடாமுனி எனும் பிசாசையும் விட்டுச் சென்றார். இச் சம்பவத்தை தொடர்ந்து வீரநாராயணச் செட்டி இறந்தார்.”

இக் கூற்றில் நம்பமுடியாத மிகையான செய்திகள் காணப்பட்டாலும், இவ்வாலயத்தின் பழமை பற்றி 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த லூயிஸ் என்ற அறிஞர் கூறியிருப்பதன் மூலம் இது ஒரு பழமை வாய்ந்த ஆலயம் என்பது தெரிகிறது. மேலும் இவ்வாலயம் பற்றி யாழ்ப்பாண அரசு தொடர்பாகத் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் காலத்தால் முந்திய வையா பாடலிலும் கூறப்பட்டிருப்பது இதன் பழமைக்கு மேலும் ஒரு சான்றாகும்.

இவ்வாலயம் தற்போதைய குடியிருப்புக்களுக்கு பல மைல் தொலைவில் மக்கள் நடமாட்டமற்ற காட்டுப்பகுதியில் காணப்படுகிறது. ஆலயம் முழுமையாக அழிவடைந்த நிலையில், ஆலயத்தின் ஒரு சில எச்சங்களே காணப்படுகின்றன. அவற்றில் ஆவுடையும், லிங்கமும் இருப்பதைக் கொண்டு இது ஒரு சிவன் ஆலயம் என்பது தெரிகிறது. ஆயினும் குடியிருப்புகள் அற்ற காட்டுப்பகுதியில் உள்ள இவ்வாலய அழிபாடுகளில் இருந்து இவ்வாலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மக்களால் கைவிடப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இவ்வாலயம் கருங்கற்களையும் செங்கட்டிகளையும் கொண்டு அமைக்கப்பட்டதிலிருந்து, இது இடைக்காலத்தில் தோன்றிய ஆலயமாகக் கருத இடமுண்டு. அழகான ஆற்றங்கரையோரமாக ஒரு உயர்ந்த மேட்டில் இவ்வாலயம் அமைந்திருப்பது முன்பொரு காலத்தில் செட்டிகுளத்தின் வரலாற்றுப் பழமையின் குறியீடாக இவ்வாலயம் இருந்துள்ளதென்பதை கோடிட்டுக் காட்டுகின்றது.

குறிப்பு : செட்டிகுளத்தில் கப்பாச்சி என்ற இடத்தில் தொல்லியல் ஆய்வினை மேற்கொள்ளும் போது என்னுடன் இணைந்து செயற்பட்ட எமது தொல்லியல் பிரிவு ஆசிரியர்களான திருமதி ச. சரிதா, செல்வி தி. சிந்துஜா, திரு பா. கபிலன் மற்றும் கப்பாச்சி மக்களுக்கும் என் நன்றிகள்.

தொடரும். 


9789 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்