1
1983 இல் சாவகச்சேரி சங்கத்தானையில், இலங்கை இராணுவத்தின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பியோடும் ஒருவர் இறுதியில் கனடாவை வந்து சேரும்வரை அலைந்துழலும் வாழ்க்கையை ‘The Sadness of Geography’ நூல் கூறுகின்றது. 80 களில், தனது பதின்மங்களில் யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி விடுதியில் கல்வி கற்கின்ற லோகதாசனின் சுயசரிதை நூல் இதுவாகும். அநேக ஈழத்தமிழரைப் போல, 81 இல் யாழ் நூலக எரிப்பும், 83 ஆடி இனக் கொலைகளும் லோகதாசனின் வாழ்வை வேறொரு திசையில் புரட்டிப் போடுகின்றது.
லோகதாசனின் தந்தையார் சாவகச்சேரியில் ஒரு நகைக்கடை வைத்திருக்கின்றார். மிக வசதியான குடும்பம் அவர்களுடையது. காரும், அதற்கான சாரதியும், வேலைக்காரரும் இருக்கின்ற சூழலில் லோகதாசன் வளர்கின்றார். சாவகச்சேரியில் இருந்து, சிறந்த கல்வியைப் பெறும் பொருட்டு யாழ் நகருக்குச் சென்று சென். ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்கவும் செய்கின்றார்.
இந்த நூலில் போர் ஒருவகை மனவடுக்களை லோகதாசனுக்குக் கொடுக்கின்றது என்றால், இன்னொருவகையில் அவரின் குடும்பத்துக்குள் நடக்கும் சிக்கலான விடயங்கள், வேறு வகையான மனவுளைச்சலைக் கொடுக்கின்றன. மிக வசதியான குடும்பத்தில் லோகதாசன் பிறந்தாலும், அவரின் இளமைக்காலம் அவ்வளவு சொல்லும்படியாக இல்லை.
லோகதாசன் ஆறு வயதாக இருக்கும்போது அவரின் தந்தையார் இன்னொரு பெண்ணை அழைத்து வந்து அதே வீட்டில் வைத்து வாழத் தொடங்குகின்றார். என்ன நடக்கின்றது என்று புரியாத வயதில், எவரும் இது குறித்துப் பேசத் தயங்குகின்ற வீட்டில், பல்வேறு குழப்பங்களோடு லோகதாசன் தனது குழந்தைப் பருவத்தையும், பதின்மக் காலத்தையும் கடக்க வேண்டியவராகின்றார்.
லோகதாசனின் தந்தையார் வீட்டில் தாயையும், லோகதாசனையும் கோபம் வரும்போதெல்லாம் அடித்து உதைக்கின்றார். ஒருமுறை வன்முறை உச்சமாகி, தந்தையார் லோகதாசனை இடுப்புப் பட்டியால் அடிக்க, அவரது கால் கெண்டைச் சதை கிழிந்து விடுகிறது. பின்னர், லோகதாசன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறார். லோகதாசனின் தந்தையிடம் இருக்கும் ஆண்களுக்கேயான தன்னகங்காரம், அவரது வியாபாரம் நொடித்துப் போனவுடன் மெல்ல மெல்லக் கரைந்து போகின்றது. யாழ்ப்பாணத்தில் அன்று இருந்த யுத்தச் சூழல் இந்த வீழ்ச்சியை மேலும் விரைவுபடுத்துகின்றது.
லோகதாசன் ஒருமுறை யாழ் நகரில் இருந்து சாவகச்சேரிக்கு ரெயினில் வரும்போது, இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறை செய்யப்படுகின்றார். ஒருபுறம் தந்தையின் குடும்ப வன்முறை, இன்னொருபுறம் இராணுவத்தின் பாலியல் அத்துமீறல் கொடுத்த உளவடு என யாரோடும் பகிர முடியாத சம்பவங்களை லோகதாசன் தனக்குள்ளேயே பூட்டி வைக்கின்றார்.
வியாபாரத் தோல்வியுடன் லோகதாசனின் தந்தையார் குடிக்கு அடிமை ஆகின்றார். தந்தையோடு ஏற்படும் பிணக்கில் லோகதாசனின் தாயார் கோபமடைந்து கிணற்றில் குதிக்க நேருகிறது. தாயின் இச் செயல் லோகதாசனின் குடும்பத்திற்கு ஒரு பெரும் அவமானமாக அமைகின்றது. ஒருமுறை போதையில் இருக்கும் தகப்பனைத் தேடிப் போகும் லோகதாசனை அவரின் தந்தையார் அடிக்க, அவமானம் தாங்கமுடியாத லோகதாசன் பூச்சிநாசினியைக் குடித்து தற்கொலை செய்ய முயற்சிக்கின்றார். இவ்வாறு வெளிச்சூழலும், குடும்பச்சூழலும் தாங்கிக் கொள்ளமுடியாத சித்திரவதையாக இருக்கும்போது, அப்போதிருந்த அநேக இளைஞர்களைப் போல லோகதாசன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேரப் போகின்றார். 80 களின் தொடக்க காலத்தில் புலிகள் எவரையும் எளிதாகத் தங்கள் இயக்கத்தில் சேர்த்துக்கொள்வதில்லை. ஆயுதம் தனக்கு மிகப்பெரும் அதிகாரத்தையும் விடுதலையும் தரும் என லோகதாசன் நம்புகின்றார். அவர் மீது இலங்கை இராணுவம் செய்த பாலியல் வன்முறை இயக்கத்தில் சேர வேண்டுமென்ற உறுதிப்பாட்டை லோகதாசனுக்கு ஏற்படுத்துகின்றது.
லோகதாசன் யாழ் நகரில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரின் மூத்த சகோதரர் லதி பிரான்சுக்குப் போய்விட்டதை அறிகின்றார். கல்லூரியில் இருந்து சாவகச்சேரிக்கு வந்த லோகதாசனை புலிகளும் உடனே தங்களுடன் சேர்க்காமல் அவரிடம் அரசியல் வேலைகளை மட்டும் செய்யக் கொடுக்கின்றனர். ஒரு நாள் இரவு நேரத்தில் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கும்போது ரோந்து வந்த இராணுவத்திடம் இருந்து அதிஷ்டவசமாக லோகதாசனும், அவரின் நண்பரும் தப்புகின்றனர். லோகதாசன், இனியும் இலங்கையில் இருக்கமுடியாது என்று தனது சகோதரனைப் போல வெளிநாட்டுக்குத் தப்பியோட விரும்புகின்றார். அன்றைய காலங்களில் ஜேர்மனிக்குப் போவது எளிதாக இருந்தது எனச் சொல்லப்படுகின்றது. எனினும் வீடு இருக்கும் சூழலில் தனக்கு அவர்கள் உதவ முடியாது என்று லோகதாசன் அவரின் நண்பரின் தாயாரிடமிருந்து 20,000 ரூபாய் பணத்தைப் பெற்று ஜேர்மனிக்குப் போவதற்கு யாழிலிருந்து கொழும்புக்குப் போகின்றார். தந்தையோடு எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருக்கும் லோகதாசன், தாயிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கொழும்புக்குப் புறப்படுகின்றார். அதுதான் அவர் தனது தந்தையை இறுதியாய் பார்க்கும் சந்தர்ப்பம் என்பதை அறியாது லோகதாசன் தந்தையைப் பிரிந்து விடுகிறார்.
2
83 ஆம் ஆண்டு இனப் படுகொலைகளால் கொழும்பு சிதைவுற்றுக் கிடந்த காலம் அது. வழமையான பல தமிழ் ஏஜென்ஸிக்காரர்களை போலவே லோகதாசனின் ஏஜென்சிக்காரரும் லோகதாசனை ஏமாற்றுகின்றார். ஆனால் அதிசயமாக லோகதாசன் ரெயினில் சந்திக்கும் ஒரு பெண் அவரை இந்த இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றுகின்றார். அதையொரு அதிசயமாகவே லோகதாசன் நம்புகின்றார். அன்றைய நிலைமையில் அந்தப் பெண் குறித்த எந்தத் தகவலையும் பெற்றுக் கொள்ளாதது பற்றி, இத்தனை காலத்துக்குப் பிறகு நினைத்து வருந்தவும் செய்கின்றார். அதேபோல ஒரு முஸ்லிம் தாயும் அவரின் பிள்ளைகளும் லோகதாசன் ஜேர்மனி போகும்வரை குறைந்த வாடகையில் தங்க இடம் கொடுத்து அவரை கட்டுநாயக்க விமான நிலையம் வரை வந்து வழியனுப்பி வைக்கின்றனர்.
இலங்கை இராணுவத்திடமிருந்தும், தந்தையின் வன்முறையிலிருந்தும் தப்பிவிட்டேன் என்கின்ற நிம்மதியை காலம் அவ்வளவு விரைவில் லோகதாசனுக்குக் கொடுத்துவிடவில்லை. ஜேர்மனியில் அவர் அகதி என்ற அடையாளத்துடன் சிறை வாழ்க்கைக்குத் தள்ளிவிடப்படுகின்றார். அந்தச் சிறை ஒரு காலத்தில் நாஸிகள் யூதர்களை அடைத்துவைத்த நூர்கம்பேக் சிறையாக இருக்கின்றது. சிறையில் இருந்து ஒருமாதிரியாக லோகதாசன் பிரான்சில் வாழும் அவரது சகோதரர் லதியைத் தொடர்பு கொள்கின்றார். லதி ஒரு ஏஜென்ஸி மூலமாக லோகதாசனை சிறையில் இருந்து தப்ப வைத்து, பிரான்சிற்குக் கொண்டுவரச் செய்கின்றார். அந்தப் பயணமும் மிக ஆபத்தான வகையில் நிகழ்த்தப்படுகின்றது. பிரான்சிற்கு வந்த லோகதாசனுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. பிரெஞ்சைக் கொஞ்சம் படித்தாலும், உரிய ஆவணங்கள் இல்லாமையால் மேற்படிப்பு படிக்க முடியாத நிலை தொடருகின்றது. லோகதாசனைச் சூழ இருக்கும் சில இளைஞர்கள் போதைப் பொருட்களை விற்பவர்களாக இருக்கின்றார்கள். படிப்போ, வேலையோ செய்யமுடியாத நிலையில் லோகதாசனும் போதைப் பொருட்களை விநியோகிக்கும் ஒருவராக மாறுகின்றார்.
இப்படியே இருந்தால் லோகதாசன் வாழ்க்கை சீரழிந்துவிடும் என்று நினைக்கும் சகோதரர், அவரைக் கனடாவுக்கு அனுப்பி வைக்க முயல்கின்றார். பிரான்சிலிருந்து கனடாவுக்கு பிரெஞ்சுக்காரரின் கடவுச் சீட்டில் புறப்படும் லோகதாசன், இன்னொரு இலங்கைக்காரருக்கு உதவப்போய் விமான நிலையத்தில் மாட்டிக் கொள்கின்றார். இப்போது கடவுச் சீட்டு மோசடியால் பிரெஞ்சு ஜெயிலில் அடைக்கப்படுகின்றார். அங்கே சில வாரங்கள் அடைக்கப்பட்டு இருக்கும் லோகதாசன் அவரின் சகோதர் இலஞ்சமாய்க் கொடுக்கும் பெரும் பணத்தால் சிறையிலிருந்து ஒரு நாள் இரவில் விடுவிக்கப்படுகின்றார்.
கனடாவுக்குச் செல்லும் வழியும் அடைக்கப்பட்டு விட, இங்கிலாந்தில் மேற்படிப்பு படிக்கலாம் என்று நினைத்து இலண்டனுக்குச் செல்ல லோகதாசன் நினைக்கின்றார். ஆனால் கள்ளமாக பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்குப் போக முடியாது. எனவே லோகதாசனை அவரின் சகோதரரும் நண்பர்களும் ஹொலண்டுக்குக் கூட்டிச் சென்று, அங்கிருந்து விமானத்தில் அயர்லாந்துக்குப் போகச் செய்கின்றனர். கப்பலில் அயர்லாந்திலிருந்து இங்கிலாந்து செல்கிறார். இங்கிலாந்திலும் உபரி வேலைகளைச் செய்தும், பெரிதாக படிக்க முடியவில்லை. ஆங்கில வகுப்புகளுக்குப் போய் ஆங்கிலத்தை மெருகூட்டினாலும், உரிய ஆவணம் இன்றி, படிக்க முடியாது லோகதாசன் தவிக்கிறார். இறுதி முயற்சியாக மீண்டும் இங்கிலாந்தில் இருந்து கனடாவுக்கு பிரெஞ்சுக்காரரின் கடவுச் சீட்டில் போக முயல்கின்றார்.
கனடாவுக்கான விமானப் பயணத்தில் மீண்டும் இங்கிலாந்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படுகின்றார். தான் பாண்டிச்சேரியில் இருந்து வரும் ஒரு பிரெஞ்சுக்காரர் என லோகதாசன் அதிகாரிகளுக்குக் கூறுகிறார். அவர்கள் அதனை நம்பினார்களோ அல்லது கனடாவுக்குப் போய் தப்பிப் பிழைக்கட்டும் என்று நினைத்தார்களோ, ஒரு மாதிரியாக அவரை விமானத்தில் ஏற அனுமதிக்கின்றனர். அதன் பின்னரும், இந்தியாவுக்குத் திரும்பிப் போகும் ரிக்கெட் இல்லாமல் கனடாவுக்குப் போக முடியாதென, கடைசி நுழைவாயிலில் தடுக்கப்படுகின்றார். இறுதியில் கையில் வைத்திருக்கும் அவ்வளவு பணத்தையும் கொடுத்து ஒரு ரிக்கெட்டை (Return Ticket) வாங்கி ஒருவாறாக விமானத்தில் ஏறுகின்றார்.
இப்படி ஒவ்வொரு பயணத்திலும், ‘கரணம் தப்பினால் சிறை’ என்கின்ற அச்சத்தோடும், மீண்டும் தன்னை இலங்கைக்கு அனுப்பிவிடுவார்களோ என்கின்ற அச்சத்தோடுந்தான் லோகதாசன் அலைந்துழல்கிறார். ஒருமாதிரியாக இறுதியில் கனடாவுக்குள் லோகதாசன் நுழைந்துவிடுகின்றார். கனடாவின் குடிவரவு அலுவலகத்தில், தான் போலிக் கடவுச்சீட்டில் வந்ததை ஒப்புக்கொள்கின்றார். அப்போதுதான் ஒரு விமான நிலையத்தில் இயல்பாக இருக்க முடிந்ததென்று, கனடாவிற்குள் நுழைந்த அனுபவம் பற்றி லோகதாசன் எழுதுகின்றார்.
3
இதன் பின்னர் அநேக புலம்பெயர்ந்த அகதிகளைப் போல படித்தபடி, இரண்டு வேலைகளைச் செய்து ஊரில் இருக்கும் தனது குடும்பத்தை கனடாவுக்கு அழைக்கின்றார். இது நடைபெறுவதற்கிடையில் லோகதாசனின் குடும்பம் ஒரு பெரும் இழப்பைச் சந்திக்கின்றது. லோகதாசனின் மூத்த சகோதரர் மீண்டும் இலங்கைக்குப் போகும் முயற்சியில் இந்தியாவிற்குள் நுழையும்போது அவரின் சேமிப்புப் பணத்தை இந்திய விமான நிலையத்தில் அதிகாரிகள் கையகப்படுத்துகின்றனர். அதை மீண்டும் பெற முயற்சிக்கும் லோகதாசனின் சகோதரர், அவரின் தந்தையாரை இந்தியாவுக்கு வரச் சொல்கிறார். அதற்காக, இயக்கத்தின் படகில் இராமேஸ்வரம் செல்லும் லோகதாசனின் தந்தையார் இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் காயப்படுகின்றார். படகில் மீண்டும் மன்னாருக்கு திரும்பும் காயப்பட்ட லோகதாசனின் தந்தையை ஒரு பாதிரியார் காப்பாற்றுகின்றார். ஆனால் அவருக்கு உரிய சிகிச்சை கொடுக்க எந்த வைத்தியசாலைக்கும் போக முடியாதபடி யுத்த சூழல் இருக்கின்றது. லோகதாசனின் தந்தை காயப்பட்டுவிட்டார் என்ற செய்தி மன்னாரிலிருந்து சாவகச்சேரிக்கு அனுப்பப்படுகின்றது. லோகதாசனின் பதினேழு வயது இளைய சகோதரன் தந்தையைப் பார்க்க வருகின்றார். தந்தையாரோ காயத்துடன் எப்படியேனும் தமிழகத்துக்குப் போக வேண்டுமென அடம்பிடிக்கின்றார். வேறு வழியின்றி தந்தையோடு அந்தப் பதினேழு வயது பையன் இராமேஸ்வரம் போகின்றான். ஆனால், காயத்துடன் இருந்த தந்தையார் ‘கோமா’ நிலைக்குச் சென்று, தமிழகத்திலேயே மரணமடைகின்றார். வேறுவழியின்றி, வைத்தியசாலைக்கு அருகில் இருக்கும் பொது மயானத்தில் லோகதாசனின் தந்தையார் எரியூட்டப்படுவதற்குப் பதில் புதைக்கப்படுகின்றார்.
இற்றைவரை தனது இளையசகோதரன் தங்களுடன் இந்தச் சம்பவம் குறித்து எதுவும் பேசவில்லை என்று லோகதாசன் இந்நூலில் குறிப்பிடுகின்றார். அதுபோலவே அவரது தாயும், தனது தந்தை இரண்டாவது மனைவியாகக் கூட்டிவந்த தாயின் சகோதரி பற்றி ஒருபோதும் பேச விரும்பவில்லை என்று லோகதாசன் இந் நூலில் குறிப்பிடுகின்றார். இத்தனைக்கும் லோகதாசனின் தாயார் அவரோடுதான் இன்றுவரை கனடாவில் வசித்து வருகின்றார். இவ்வாறு பல இரகசியங்கள் பரம இரகசியங்களாகவே, எவரும் மனந்திறந்து பேசாதபடி, அவரவர் மனங்களுக்குள் புதைக்கப்பட்டிருக்கின்றன.
லோகதாசன் அவரது தந்தையை மன்னிக்க முடியாதவராகவே இருக்கின்றார். ஆனால் தந்தையின் மரணம் அவரை ஒருவகையில் புரிந்துகொள்ளவும் வைக்கின்றது. தந்தை உயிரோடு இருந்த காலங்களில் எழுதிய கடிதங்களை, வெறுப்பால் திறந்து வாசிக்காத லோகதாசன், தந்தையின் மரணத்தின் பின் அவற்றை வாசிக்கின்றார். தனது தாய் எப்படி தனது தந்தையை அவரின் அத்தனை பலவீனங்களுடன் ஏற்று வாழ்ந்தாரோ, அப்படி ஏதோ ஒருவகையில், காலமாகிவிட்ட தனது தந்தையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றார் லோகதாசன்.
லோகதாசன் தனக்கு இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையை, தனது 50 ஆவது வயதில்தான் அவரது மனைவியிடம் பகிர்ந்து கொண்டதாக இந்த நூலின் பின்னிணைப்பில் எழுதுகின்றார். அதுவரைக்கும் இந்தச் சம்பவத்தை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை என்று சொல்கின்றார்.
லோகதாசனின் இந்தச் சுயசரிதை நூல், போருக்குள் வாழ்கின்றபோது போரால் மட்டுமல்ல, இன்னும் பல விடயங்களாலும் உளவடுக்களுக்கு ஆகின்றோம் என்பதைச் சொல்கின்றது. நமது தமிழ் இயக்கங்கள் சகோதரப் படுகொலைகளைச் செய்தபோது, பலருக்கு ‘துரோகி’ என கழுத்தில் அட்டைகளை மாட்டி, பொதுவெளிகளில் வைத்துச் சுட்டுக் கொன்றனர். அவ்வாறாகக் கொல்லப்பட்ட உயிரற்ற உடல்களைப் பார்த்த அனுபவங்களும் இங்கே பகிரப்படுகின்றன.
யுத்த காலத்தில் உயிர் தப்புவதே முக்கிய நோக்காக இருப்பதால், ஏனைய விடயங்களால் ஏற்படும் மனவடுக்களை நிதானமாகப் பார்க்கவோ, அதற்குரிய சிகிச்சைகளை/ ஆலோசனைகளைப் பெறவோ முடிவதில்லை. இது பாதிக்கப்படுபவரின் வாழ்க்கையை மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவரோடு வாழ்க்கையைப் பகிர்பவர்கள், அவர்களின் பிள்ளைகள் வரை பலரைப் பாதிக்கின்றது. போர் என்பது அது நடந்து கொண்டிருக்கும்போது மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. போரின் போது நடந்த உளவடுக்களை ஆற்ற, சிலவேளைகளில் முழு வாழ்நாட் காலமும் தேவையாக இருக்கின்றது. ஆகவேதான் போரை நாம் அவ்வளவு வெறுக்கவும் எதிர்க்கவும் வேண்டியிருக்கின்றது. போரை நடத்தும் எந்த அதிகாரத் தரப்பும், மனிதர்களாக இருக்கச் சாத்தியமற்றவர்கள் என்று மீண்டும் மீண்டும் உரத்த குரலில் சொல்ல வேண்டியிருக்கின்றது.