1948 ஆம் ஆண்டின் பிரஜாவுரிமைச் சட்டமானது ஒட்டுமொத்த இந்திய வம்சாவளித் தமிழர்களினதும் பிரஜாவுரிமையைப் பறித்ததுடன், இந்திய – பாகிஸ்தானிய முஸ்லிம்கள், போரா, மேமன், பார்சி போன்ற ஏனைய இனத்தவர்களின் பிரஜாவுரிமையைக்கூட விட்டு வைக்கவில்லை. இது இலங்கையின் ஜனநாயக அரசியலில் ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கியது. அத்துடன் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அவசர அவசரமாக 1949 ஆம் ஆண்டின் இந்திய – பாகிஸ்தானியர் வதிவிடப் பிரஜாவுரிமைச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட வேண்டிய தேவை ஒன்று அன்றைய டி. எஸ். சேனாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு நபரின் வதிவிடம், தொடர்ச்சியாக வாழ்ந்திருந்த காலம் என்பவற்றுக்கு மேலதிகமாக ஒருவர் பெறும் வருமானமும் பிரஜாவுரிமையைப் பெறுவதற்கான நிபந்தனைகளாக விதிக்கப்பட்டன. இந்த மேலதிக நிபந்தனையான வருமான தகுதியைப் பயன்படுத்தி கணிசமான இந்திய வம்சாவளி வர்த்தகர்களும் முன்சொன்ன இந்திய வம்சாவளித் தமிழர் அல்லாத ஏனைய வர்த்தக இனக் குழுவினரும் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. இந்தச் சட்டம் 1949 ஓகஸ்ட் 5 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடுத்து வந்த இரண்டு வருட காலத்துக்குள் நபரொருவர் இந்தச் சட்டத்தின்கீழ் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்து மேற்படி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டால் விசாரணை ஒன்றின் பின் பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்தச் சட்டத்தில் பின்வரும் நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன :-
- பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் நபர் ஒருவர் திருமணமானவராக இருந்தால் 1939 ஜனவரி மாதத்திலிருந்து தொடர்ந்து ஏழு வருடங்களுக்கு இந்த நாட்டில் தொடர்ச்சியான வதிவிடத்தைக் கொண்டிருந்தார் என்பதை நிரூபிக்க வேண்டும். குறித்த நபர் திருமணம் முடிக்கவில்லையாயின் அவர் தொடர்ந்து 10 வருடங்களுக்கு நாட்டில் வதிவிடத்தைக் கொண்டிருந்தார் என்பதை நிரூபிக்க வேண்டும்.
- இதற்கு மேலதிகமாக மாதாந்தம் உறுதியளிக்கப்பட்ட ஒரு தொகையை அல்லது நியாயமானது என்று கருதப்படும் ஒரு தொகையை வருமானமாகப் பெற்றிருக்க வேண்டும்.
- அவர்கள் இந்த நாட்டில் “நிரந்தரமாகக் குடியிருக்க வேண்டும்” என்ற நோக்கத்தையும்,
- ” நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர்கள்” என்றும் காட்ட வேண்டும். தொடர்ச்சியான வதிவிடத்தை கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் குறித்த நபர் ஒரு சிறு காலப்பகுதிக்காவது இந்தியா சென்று விட்டு திரும்பி வந்திருந்தால் கூட அத்தகையவர்களின் பிரஜாவுரிமை விண்ணப்பப்படிவங்கள் அவர்கள் “தொடர்ச்சியாக நாட்டில் வசித்திருக்கவில்லை” என்ற காரணத்தின் பேரில் நிராகரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனைத் தவிர இந்தப் பிரஜாவுரிமைச் சட்டத்தின் கீழ் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்து இரண்டு வருடங்களுக்குள் விசாரணை நடத்தப்பட்டு பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் விதிக்கப்பட்டிருந்தது.
முதலாவது சட்டத்தின் வாயிலாக அப்பட்டமாக பிரஜாவுரிமை மறுக்கப்பட்டு நாடற்றவர்கள் ஆக்கப்பட்ட இந்திய வம்சாவளித்தமிழர்கள் இந்த இரண்டாவது சட்டத்தின் வாயிலாக பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொள்வதற்கு மிகக் கடுமையான நிர்வாக நடைமுறை, சட்ட திட்டங்களைப் பின்பற்றுவதற்கு உட்படுத்தப்பட்டனர். இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது பெடரல் கட்சியினதும் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் அனைத்தினதும் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் அரசாங்கத்தினதும், அதன் ஆதரவு கட்சிகளினதும் துணையுடன் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே அரசாங்கத்தில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவி வகித்த ஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் அவருடன் இணைந்திருந்த ஏனைய தமிழ் காங்கிரஸ் அங்கத்தினர்களும் இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
1949, ஏப்ரல் மாதம் இடம்பெற்ற சிலோன் இந்தியன் காங்கிரஸின் 9 ஆவது பேராளர் மாநாட்டில் “மேற்படி சட்டம் காட்டுமிராண்டித்தனமானது. அது சமூக விரோத கோட்பாடுகள், பாரபட்சம், மற்றும் சமூக அநீதியை உள்ளடக்கியது” என்று கண்டனம் தெரிவித்து கண்டித்து தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றினர். இந்தத் தீர்மானம் ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது. மேற்படி சட்டம் இலங்கையை வதிவிடமாகக் கொண்டுள்ள இந்தியர், பாகிஸ்தானியர் ஆகியவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு சட்டம் என்று கூறப்பட்ட போதும் அதில் காணப்பட்ட கடுமையான சட்டதிட்டங்கள், நிபந்தனைகள் காரணமாக அது ஒரு போதும் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொடுக்காது என்றும் பலரும் விமர்சித்தனர். பல்வேறு இந்திய, தமிழ்நாட்டு செய்தித்தாள்களிலும் இது தொடர்பில் விமர்சித்து செய்திகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாடு சட்டசபையிலும் இதுதொடர்பில் கண்டனம் தெரிவித்து பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது.
இவ்விதம் இந்த இரண்டாவது சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் மற்றும் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு கண்டன நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, இத்தகைய கெடுபிடிகளுக்கு மத்தியில் ஒரு நாட்டில் பிரஜையாக உரிமை இல்லாதவர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும் இருக்க முடியாது என்று மூன்றாவது சட்டமான 1949 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திருத்தச் சட்டம் என்ற ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு, ஒட்டுமொத்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் ஜனநாயக உரிமையான தேர்தல்களில் தமக்கென ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் வாக்களிக்கும் உரிமையும் இந்த மக்களிடம் இருந்து முற்றாகப் பறித்தெடுக்கப்பட்டது .
ஒரு ஜனநாயக நாட்டில், ஒரு ஜனநாயக அரசாங்கம் தம் நாட்டில் வாழுகின்ற ஒரு தொகுதி மக்கள் மீது எந்தவித தயவு தாட்சண்யமும் பார்க்காமல் அவர்களுக்கு இருந்த ஒட்டுமொத்த ஜனநாயக உரிமைகளையும் பறித்தெடுத்து அவர்களை இந்த நாட்டில் வாழத் தகுதி இல்லாதவர்கள் ஆக்கிய அந்தக் கொடுஞ்செயல் இன்றுவரை அவர்களை அரசியல் அநாதைகள் ஆக்கி, தங்கள் அரசியல் உரிமைகளை மீண்டும் கொடுங்கள் என்ற தொனியில் பிச்சை பாத்திரம் ஏந்துபவர்களாக, புகை படிந்த கரிய இருட்டு காம்புராக்கள் என்று அழைக்கப்படுகின்ற 8 அடிக்கு 8 அடி என்ற லயக் காம்பிராக்களுக்குள் கூனிக்குறுகி குந்தி அமரச் செய்து விட்டது. இத்தகைய நிலைமைக்கு இவர்களை ஆளாக்கியமைக்கு, அவர்களை ஆட்சி செய்த இனவாத ஞானசூனியங்களான தீர்க்கதரிசனமற்ற அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் இந்த மக்களின் தலைவர்கள் என்று தங்களைப் பறைசாற்றிக் கொண்டு போலியான வீரத்தனத்துடன் மார்தட்டிக்கொண்ட அரசியல் தலைவர்களையும் சேர்த்தே குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.
இதற்கு அடுத்ததாக மற்றுமொரு மாபெரும் வரலாற்றுத் தவறையும் அடுத்து வந்த குறுகிய காலத்தில் அவர்கள் செய்தார்கள். மேற்படி இந்தியா – பாகிஸ்தான் பதிவிட பிரஜாவுரிமைச் சட்டத்தின் வாயிலாக பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கு இந்திய வம்சாவளித் தமிழர்கள் யாரும் விண்ணப்பிக்கக்கூடாது என்றும், அதனைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இவர்களின் இவ்விதக் கோரிக்கையின் அனர்த்தத்தை ஊகித்து உணர முடியாத அந்த அப்பாவி மக்களும் கூட அதனை நன்றாகக் காதில் வாங்கிக்கொண்டு, தம்மைத் தம் தலைவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்பிக்கொண்டு, அவர்களின் கோரிக்கையினை தலைமேற்கொண்டு செயற்பட்டனர். இதன் காரணமாக இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்டிருந்த இரண்டு வருட காலத்தின் பெரும் பகுதி கழிந்து போய்க் கொண்டிருந்த நிலையில் இந்தச் சட்டத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தார்கள். ஆரம்பத்தில் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அந்தச்சட்டம் ஒரு நாட்டின் குறித்த சமூகத்திற்கு எதிராக பாரபட்சமானது என்றும், சட்டக் கோட்பாடுகளும் ஜனநாயகக் கோட்பாடுகளும் சட்டங்கள் வாயிலாக தகர்த்து இல்லாதொழிக்கப்பட்டுள்ளன என்றும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்றும் மேற்படி சட்டம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. அது மேன்முறையீட்டுக்கு உட்படுத்தப்பட்டு உயர் நீதிமன்றம் மற்றும் அப்போது உச்ச நீதிமன்றமாக இருந்த காலனித்துவ நாடுகளுக்கான ஆங்கில நீதிமன்றமான பிரிவு கவுன்ஸில் (Privy Council) என்ற நீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்து சென்றது.
நீதிமன்றங்கள் இவ் வழக்குகளின் சட்டபூர்வமான தன்மையை ஆராய்ந்ததுடன், நாடாளுமன்றம் எந்தவிதமான சட்டத்தையும் ஆக்குவதற்கு அதிகாரம் கொண்டதாக இருக்கின்றது என்றும் இவை இரண்டு தரப்புக்கும் இடையிலான பிரச்சினை என்பதால் அந்த இரண்டு தரப்பினருமே தமக்குள் இந்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியதுடன், முதலாவது தரப்பினரான எதிர்த்தரப்பினர் இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தனது மனதை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை என்பதனால் நீதிமன்றங்கள் மேற்படி வழக்குகளைத் தள்ளுபடி செய்தன. நீதிமன்றங்கள் இவ்விதமாகத் தீர்ப்பினை வழங்கியபடியால் சட்டரீதியாக இந்தப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு எல்லாக்கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டன. ஆனால் மேற்படி இந்தியர் – பாகிஸ்தானியர் வதிவிடப் பிரஜாவுரிமைச் சட்டம் என்ற கதவு இன்னும் மூடப்படவில்லை என்றும், அது இன்னும் சில காலத்துக்கு திறந்துதான் இருக்கும் என்பதும் சட்டென அவர்கள் மனதுக்குப்பட்டது. அவர்கள் உடனடியாகவும் அவசரமாகவும் செய்த காரியம் என்னவென்றால் மேற்படி சட்டத்தை பகிஷ்கரிப்பு செய்யத் தீர்மானித்திருந்த முடிவை மீள்பரிசீலனை செய்வதாகவும், உடனடியாக மேற்படி பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டு இந்திய வம்சாவளித் தமிழர்கள் அனைவரும் இந்தச்சட்டத்தின் கீழ் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், 1950, மே மாதம், இருபத்தி ஒன்றாம் திகதி சகலருக்கும் அழைப்பு விடுத்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கக் கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடு 1951, ஓகஸ்ட் 5 ஆம் திகதி என்பதை அடிக்கோடிட்டு மனதில் இருத்திக் கொண்டு பலரும் விண்ணப்பங்களைத் தேடி விரைந்து ஓடத் தொடங்கினர்.
தொடரும்.