இந்தியக் குடியரசின் அரசியல் யாப்பு - பகுதி 2
Arts
16 நிமிட வாசிப்பு

இந்தியக் குடியரசின் அரசியல் யாப்பு – பகுதி 2

February 2, 2024 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம் : ஜோர்ஜ் மத்தியு

அண்மைக்கால அரசியல் இயங்கியலும் போக்குகளும்

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்மையும் பேணுதல் முதன்மையான பணியாக இருந்தது. இந்திய அரசியல் யாப்பு இந்திய ஐக்கியத்திற்கான ஒரு கருவியாக உபயோகிக்கப்பட்டது. இந்தியா முழுமைக்குமான ஒரே சீரான நிர்வாகத்தை செயற்படுத்த வேண்டிய தேவை இருந்தது. நிர்வாகம், தேர்தல் மூலம் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நிறுவனங்கள் ஊடாக நடத்தப்படுதல் வேண்டும். இந்நிறுவனங்கள் கிராமங்கள் அல்லது நகரங்கள் என்ற நிலையிலிருந்து மாவட்டங்கள், மாநில அரசாங்கம் என்ற நிலை வரை செயற்பட்டதோடு மத்திய அரசாங்க நிறுவனங்கள் வரை சங்கிலித் தொடர் போல் பரவியிருந்தது. இதனால் ஒரே சீரான நிர்வாகம் என்ற அறைகூவலை எதிர்கொண்டபோது, இந்திய அரசியல் யாப்புத் தோல்வி கண்டது எனலாம்.

அரசியல் யாப்பு விதிமுறைகள், இந்தியாவின் ஐக்கியம் என்ற நியாயத்தைக் காட்டி மீறப்பட்டன. அரசியல் யாப்பு ஏற்பாடுகள் தலைகீழாயின. இதன் விளைவாக 1980 களில் இந்தியா தீவிர நெருக்கடிகளை எதிர்கொண்டது. வன்முறைகள், பிரிவினைவாத அச்சுறுத்தல்கள், தன்னாட்சி, சுயநிர்ணயம், தீவிர அதிகாரப் பரவலாக்கம் ஆகிய பிரச்சினைகளை இந்தியா எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இப் பிரச்சினைகள் இந்தியாவின் ஐக்கியத்தைப் பேணுவதற்கும் அதனைப் பலமுள்ள தேசமாகக் கட்டி எழுப்புவதற்கும் சமஷ்டித் தத்துவம் (Federal Principle) மட்டும் உதவ முடியும் என்ற உண்மையை உணர்த்தின. சமஷ்டி அரசியல் முறை இந்திய நாட்டின் சமூக – பண்பாட்டுப் பன்மைத்துவத்தைப் பேணுவதோடு மாநிலங்களையும் இந்திய ஒன்றியத்தையும் ஐக்கியப்படுத்தவல்லது எனவும் கருதப்பட்டது. இதனால் இந்தியாவின் அறிவாளிகள், சட்டவாளர்கள் ஆகியோரும் சமஷ்டி முறையை மேம்படுத்தக்கூடிய நிறுவன அமைப்புகளை உருவாக்குவதில் தம் கவனத்தைச் செலுத்தினார்கள். அரசியல் கட்சிகளும் இதற்கு தமது ஆதரவைக் கொடுத்தன. 

பல்மட்ட சமஷ்டி ஆட்சி

SArkaria

1980 களில் இந்தியா பல்மட்ட சமஷ்டி ஆட்சி (Multi – Level federalism) என்ற இலக்கை நோக்கி நகரத்தொடங்கியது. சமஷ்டி எண்ணக்கரு, அதிகாரப் பரவலாக்கம் (Decentralisation) மூலமாக அதிகாரத்தை கிராமம் அல்லது நகரம் என்ற கீழ்மட்டம் வரை எடுத்துச்செல்ல வேண்டும் என்பதை முக்கியத்துவப்படுத்தும் கருத்தாக்கமாகும். மாநில அரசுக்கு அடுத்த நிலைக்கு (Sub-state level) அரச அதிகாரத்தைப் பகிர்வதற்கான திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டன. 1983 ஆம் ஆண்டில் சர்க்காரியா ஆணைக்குழு (Sarkaria Commission) நியமிக்கப்பட்டது. அவ்வாணைக் குழு மத்திய அரசு – மாநில அரசுகள் என்ற இரு மட்டச் சமஷ்டிச் சட்டகத்திற்கு (Two Level Federal Frame) அப்பால் செல்லும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அது மத்திய அரசு – மாநில அரசுகள் இடையிலான அதிகார உறவுகள், கடமைகள், பொறுப்புகள் பற்றியே விசாரணை செய்தது. சர்க்காரியா ஆணைக்குழு மத்தியை நோக்கி அதிகாரங்கள் குவிக்கப்படும் போக்கைக் கண்டித்து விமர்சனம் செய்தது. மாநில அரசுகளுக்கு உரியதென ஒதுக்கப்பட்ட விடயங்களில் மத்திய அரசு என்ற நிலைக்கு அடுத்தான மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு (Local Elected Bodies) அதிகாரம் பரவலாக்கப்பட்ட வேண்டும் என்ற கருத்தை ஆதரித்துப் பயனுள்ள கருத்துக்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் (1988 அறிக்கை) கூறப்பட்டன. ஆயினும் சர்க்காரியா ஆணைக்குழு பல்மட்ட சமஷ்டி ஆட்சியை (Multilevel Federalism) ஒத்ததான கருத்துக்களை அறிக்கையில் கூறியிருப்பதாகக் கொள்ளமுடியாது.

1980 களில் இந்தியா பல்மட்ட சமஷ்டி ஆட்சி என்ற இலக்கை நோக்கி நகர்ந்து சென்றதை ஒரு முக்கியமான மாற்றம் என்றே கூறலாம். அண்மைக்காலத்தில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நிறுவன மாற்றங்கள் விரிவானவையாகவும், ஜனநாயகப் பண்புடையனவாகவும், நிலைத்து நிற்கும் தன்மையுடையனவாகவும் அமைந்தன.

Indian admin structure

பஞ்சாயத்துகளும், முனிசிப்பல் சபைகளும்

பஞ்சாயத்துக்களுக்கும் முனிசிப்பல் சபைகளுக்கும் இந்திய அரசியல் யாப்பின் அங்கீகாரம் இருக்கவில்லை. இவ்வாறு அங்கீகாரம் இல்லாத நிலை நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருந்தது. இந்தியாவின் அரசியல் யாப்பு மத்திய அரசு (யூனியன் அரசு), மாநில அரசுகள் என்ற இரு நிலைகளிற்கு மட்டுமே அங்கீகாரத்தை வழங்கியிருந்தது. 1980 களில் பஞ்சாயத்துகளுக்கும், முனிசிப்பல் சபைகளுக்கும் அரசியல் யாப்பு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. இது பற்றிய உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன. மேற்கு வங்காளம் (1978) கர்நாடகா (1987) ஆந்திரப்பிரதேசம் (1987) ஆகிய இடங்களில் உள்ளூராட்சி பற்றிய அளவு மீறிய ஆர்வம் கிளர்ந்தெழுந்தது.

1989 மே 15 ஆம் திகதி பிரதமர் ராஜீவ் காந்தி பஞ்சாயத்துகளுக்கு அரசியல் யாப்பு அங்கீகாரத்தை வழங்கும் நோக்குடன் 64 ஆவது திருத்தச் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார். இது வரவேற்கத்தக்க முன்மொழிவாகும். ஆயினும் இம் மசோதாவிற்கு, இதில் உள்ள இரு குறைபாடுகள் காரணமாகக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. 

Panchayat Election

அ. இம் மசோதா மாநில அரசுகளை அலட்சியம் செய்யும் முறையில் பஞ்சாயத்துகளுடன் மத்திய அரசு நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகளைக் கொண்டதாய் இருந்தது. மத்திய அரசு அதிகாரத்தை விரிவாக்குவதற்குப் பஞ்சாயத்துக்களைக் கருவியாக உபயோகிக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தியது. 

ஆ. இந்தியா முழுமைக்கும் ஒரே சீரான பஞ்சாயத்து ஆட்சி நடைமுறைகளைக் கொண்டு வருவதற்கு இம் மசோதா முயற்சித்தது. வெவ்வேறு பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்றபடி மாநில அரசுகள் பஞ்சாயத்துகள் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கு மசோதா இடமளிக்கவில்லை. 

அரசியல் கட்சிகள் இம் மசோதாவை எதிர்த்தன. அறிவாளிகளும், குடிமக்களும் இதற்கான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். லோக்சபாவில் இம் மசோதா மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டபோதும், 1989 ஒக்டோபர் 15 ஆம் திகதி ராஜ்ய சபாவில் இரு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

பஞ்சாயத்துக்களுக்கு அரசியல் யாப்பு அங்கீகாரம் வழங்கும் முயற்சி கைகூடாது போயிற்று ஆயினும் பல்மட்ட சமஷ்டி ஆட்சி (Multi Level Federalism) தொடர்பான பரிசோதனை முயற்சிகள் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இப் பரிசோதனைகள் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தின. டார்ஜீலிங் கோர்கா மலைநாட்டு கவுன்சில் (1988), போடாலான்ட் சுயாட்சிக் கவுன்சில் (1993) லடாக் சுயாட்சி மலைநாட்டு மாவட்ட கவுன்சில் (1995) ஆகிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டன. இவை அதிகாரப் பரவலாக்கல் அலகுகளாகும். இவ்வாறான பல்-அடுக்கு அமைப்புகள் உருவாக்கப்பட்டமை பல்மட்ட சமஷ்டி ஆட்சி என்ற கருத்துக்கு ஆதரவுப்பலம் சேர்ப்பனவாக அமைந்தது.

1990 களில் ஏற்பட்ட மாற்றங்கள்

1990 களில் வரலாற்றுத் திருப்பமாக அமைந்த மாற்றங்கள் ஏற்பட்ட. 1991 செப்டம்பர் மாதத்தில் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் இரு மசோதாக்களை முன்மொழிந்தது. அவற்றுள் ஒரு மசோதா கிராம மட்டத்தில் செயற்படவேண்டிய மக்களால் தெரிவுசெய்யப்படும் பஞ்சாயத்துகள் தொடர்பானது. மற்றது நகரங்களின் உள்ளூராட்சி மன்றங்களான முனிசிப்பல் சபைகள்  தொடர்பானது. இவையிரண்டும் பங்கேற்பு ஜனநாயத்தை (Participatory Democracy) கிராமங்களிற்கும் நகரப்பகுதிகளிற்கும் எடுத்துச்செல்லும் நோக்கமுடையவை. இம் மசோதாக்கள் 1992 டிசம்பர் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 1993 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தன. 73 ஆவது, 74 ஆவது திருத்தச் சட்டங்கள் என அழைக்கப்படும் இச்சட்டங்கள் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் நடைபெற்ற விவாதங்கள் உரையாடல்கள் என்பனவற்றின் பெறுபேறாக அமைந்தன. மாநில அரசுகளின் பொறுப்பில் இருந்த 47 விடயங்கள் பஞ்சாயத்துகளிற்கும் முனிசிப்பல் சபைகளுக்கும் மாற்றுவதற்கு இத் திருத்தச் சட்டங்கள் உதவின. இத் திருத்தச் சட்டங்கள் பழங்குடிகள் வாழும் பகுதிகளுக்கும் (Tribal Areas) 1996 ஆம் ஆண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டன.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத் திருத்தச் சட்டங்கள் மிக முக்கியமான மாற்றங்களுக்கு வழிகோலின:

  1. பஞ்சாயத்துகளும் முனிசிப்பல் சபைகளும் அபிவிருத்திக்கான கருவிகள் அல்லது முகவர்கள் (Agents) என்று கருதப்பட்ட நிலையிலிருந்து ‘தன்னாட்சி நிறுவனங்கள்’ (Institutions of self government) என்ற தகுதியுடையனவாக மாற்றம் பெற்றன.
  1. பஞ்சாயத்துகளிற்கு உட்பட்ட கிராமங்களும் முனிசிப்பல் சபைகளின் வட்டாரங்களும் (Wards) ஜனநாயக முறைமையின் அடிப்படை அலகுகளாகச் செயற்படும் நிலை ஏற்பட்டது.
  1. இவ்விரு அரசியல் யாப்புத் திருத்தச் சட்டங்களும் அரசியல் அதிகாரம் செயற்படும் புதிய அடுக்குகளை அல்லது மட்டங்களை (Tiers or Levels) உருவாக்கின. பஞ்சாயத்து முறையில் மூன்று அடுக்குகள் உருவாக்கப்பட்டன. கீழ் அடுக்கில் கிராமங்களும், அதற்கு அடுத்த இடைநிலையில் வட்டாரங்களும் (Blocks), மேல்நிலையில் மாவட்டங்களும் (Districts) அமைந்தன.
  1. திருத்தச் சட்டங்கள் நாட்டின் ஜனநாயக அடித்தளத்தை விரிவாக்கம் செய்துள்ளன. பஞ்சாயத்துகளிலும் முனிசிப்பல் சபைகளிலும் உள்ள மூன்று மட்டங்களின் உறுப்பினர் பதவிகளுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர். இவ்வாறு ஜனநாயகம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் பயனாக இதுவரை காலமும் பிரதிநிதித்துவம் வழங்கப்படாத அடிநிலைச் சாதிகளுக்கும், பழங்குடியினருக்கும், பெண்களுக்கும் ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் ஊடாகப் பிரதிநிதித்துவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
  1. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியான தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இவ் ஆணைக்குழுக்கள் தேர்தல் மேற்பார்வை, தேர்தல் செயல்முறையைக் கொண்டியங்குதல், வாக்காளர் அட்டவணைகளைத் தயாரித்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றன.
  1. இத் திருத்தச் சட்டங்கள் நிதி ஆணைக்குழுவினால் பஞ்சாயத்துகளுக்கும், முனிசிப்பல் சபைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான கொள்கைகளையும் தத்துவங்களையும் வகுத்துரைத்தன. அத்தோடு மாவட்டத் திட்டமிடல் குழுக்களும் (District Planning Committees) அமைக்கப்பட்டன. பஞ்சாயத்துகளுக்கும் முனிசிப்பல் சபைகளுக்கும் மாநில அரசு வழங்கும் நிதிக்கொடைகள் முக்கிய நிதி மூலமாகும். இதனைவிட சில வரிகளின் வருமானத்தை பங்கீடு செய்தல், சில வரிகளை நேரடியாகவே அறவிடுதல் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

நாம் மேலே குறிப்பிட்டது போன்று, அரசாட்சியின் ஜனநாயக அடித்தளம் விரிவாக்கப்பட்டு மூன்றாம் அடுக்கு அரசாங்கத்தின் ஆட்சி (Third Tier of Governance) செயல்முறைக்கு வந்தது. இதற்கு முன்னர் ஏறக்குறைய 4,963 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களாய் இருந்தனர். இப்போது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை முப்பது லட்சம் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றார்கள். இம் முப்பது லட்சத்தில் பத்து லட்சம் பேர் பெண்களாவார். முன்னர் விலக்கிவைக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோர் இப்போது நிர்வாக முடிவுகளை மேற்கொள்ளும் சபைகளில் உறுப்பினர்களாய் உள்ளனர். இந்தியா மத்திய அரசு, மாநில அரசுகள் என்ற இரு மட்டங்களிலான சமஷ்டி (Two Level Federalism) என்ற வகையிலிருந்து பல்மட்ட சமஷ்டி (Multi Level Federalism) என்ற வகைக்கு உயர்ந்துள்ளது. பஞ்சாயத்துகளும், முனிசிப்பல் சபைகளும் மூன்றாம் அடுக்கு அரசாங்கமாக விளங்குகின்றன.

பஞ்சாயத்துகளையும், முனிசிப்பல் பல்-சபைகளையும் இயங்க வைத்து அவற்றுக்கு நிர்வாக அதிகாரங்களையும் நிதி அதிகாரங்களையும் கையளித்தல் ‘நிர்வாக சமஷ்டியை’ (Administrative Federalism) பலப்படுத்தலே அன்றி அரசாங்கத்தை உள்ளூர் மட்டத்திற்கு கொண்டுவருதல் எனக்கூறமுடியாது எனச் சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஏனெனில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளிடமே உள்ளது. பஞ்சாயத்துகளுக்கும் முனிசிப்பல் சபைகளுக்கும் தெளிவான வரையறுக்கப்பட்ட நிர்வாக, சட்டவாக்க, நிதி அதிகாரங்களோ அல்லது நீதி அதிகாரமோ கிடையாது. அவை அரசியல் யாப்பு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. அவற்றின் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகிறார்கள். இக் காரணங்களால் அவை மூன்றாம் அடுக்கு அரசாட்சியை (Third of Governance) நிறுவியுள்ளன எனக் கூறமுடியாது என்றும் வாதிடப்பட்டுள்ளது. ஆயினும் இந்த வாதம் பஞ்சாயத்துகளும், முனிசிப்பல் சபைகளும் ஏற்படுத்திய ஜனநாயக அரசியல் மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.

மேற்குறித்த விமர்சனத்திற்கு மாறுபட்ட கருத்துடையவர்கள் பஞ்சாயத்துகளும் முனிசிப்பல் சபைகளும் இந்தியாவின் அரசியலமைப்பின் சமஷ்டி இயல்பை அதிகரிக்கச்செய்து பண்பு மாற்றத்தை (Qualitative Change) ஏற்படுத்தியுள்ளன எனக் கூறியுள்ளனர். ஒவ்வொரு மாநில அரசிலும் மாவட்டம், வட்டாரம் (Block) கிராமம் என்ற மூன்று அடுக்குகள் உருவாகியுள்ளன. இக் கட்டமைப்பையுடைய ஒவ்வொரு மாநிலமும் இந்திய ஒன்றியத்தின் சமஷ்டி முறையின் அங்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இது தனித்துவம் மிக்க சமஷ்டிப் பண்பாகும். இந்தியா ‘கிராமசபா’ (கிராமச் சபை) முதல் சமஷ்டிப் பாராளுமன்றமான லோக்சபா வரை ஜனநாயகச் செயல்முறையை வலுப்படுத்தக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பல்மட்ட சமஷ்டியை பயனுறுதி வாய்ந்ததாக ஆக்குவதற்கு மத்திய அரசாங்கம் மாநில அரசுகளுடன் அதிகாரங்களை சமத்துவ அடிப்படையில் பகிர்ந்து கொள்வதற்கு முன்வருதல் வேண்டும். சமஷ்டிச் சட்டகத்தைப் பலப்படுத்துவதற்கு புத்தாக்க முறையில் நிறுவனங்களை உருவாக்குதல் வேண்டும். இந்தியச் சமஷ்டி முறை பற்றிய ஆய்வாளரும் அரசியல் சட்ட நிபுணருமான ரஷ்சீட்டீன் கான் (Rashideen Khan) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 

“இந்தியா படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்றுவரும் சமஷ்டி அமைப்பை உடைய நாடு. அது ஒரு தேசம் (Nation) என்ற வகையில் அரை நூற்றாண்டு வாழ்வைக் கடந்துவந்துவிட்டது. இப்போது இந்தியா பல்மட்ட சமஷ்டி யுகம் என்ற கட்டத்தில் உள்ளது. அது வெறுமனே அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்ற நிலையில் இருந்து மாறிவிட்டது.”

அரசியல் கட்சி முறையில் மாற்றம்

இந்திய சமஷ்டியின் இன்னோர் குறிப்பிடத்தக்க மாற்றம் அதன் அரசியல் கட்சி முறையில் ஏற்பட்ட மாற்றமாகும். 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வரை இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் மேலாதிக்கம் ஓங்கியிருந்தது. அதற்குப் பின்னர் கூட்டாட்சி அரசாங்கங்கள் பதவியேற்றன. மத்தியிலும் மாநிலங்களிலும் பல்-கட்சிகளின் கூட்டணிகள் ஆட்சி அமைக்கும் போக்கு காணப்படுகிறது. இன்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவேண்டிய நிலை காணப்படுகிறது. அதனால் தனித்து ஆட்சியைக் கைப்பற்றவோ நீடித்து நிற்கவோ முடியாது (2004 ஆம் ஆண்டில் இந்தியாவின் அரசாங்கம் 24 கட்சிகளின் கூட்டு அரசாங்கமாக உள்ளது). இந்தியாவில் இன்று 550 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றுள் 6 கட்சிகள் மட்டும் தேசியக் கட்சிகள் என்ற தகுதியை உடையவை. 40 கட்சிகள் மாநிலக் கட்சிகளாகும். மீதமுள்ள 504 கட்சிகள் மாநிலத்தின் ஒரு பிராந்தியத்தில் அல்லது பகுதியில் ஆதரவுப் பலம் உடைய கட்சிகளாகும். இன்று மாநிலக் கட்சிகளும் பிராந்தியக் கட்சிகளும் மத்திய அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க அளவு செல்வாக்கைப் பிரயோகிக்கும் நிலையில் உள்ளன. இதனால் மத்திய அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் (Accountability) அதிகரித்துள்ளது. குறிப்பிடத்தக்க அளவு பலமுள்ள ஒரு கட்சி அல்லது சில கட்சிகள் கூட்டரசாங்கத்திலிருந்து விலகும்போது அரசாங்கம் கவிழ்க்கப்படும். கொள்கை, மாநில நலன்கள் என்ற அடிப்படையில் மாநிலங்களின் பேரம்பேசும் சக்தி அதிகரித்துள்ளது.

அரசியல் யாப்புத் திருத்தச் சட்டங்கள்

2000 – 2003 காலத்தில் நிறைவேற்றப்பட்ட சில அரசியல் யாப்புத்திருத்தச் சட்டங்கள் இந்திய அரசியலில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. எண்பதாவது திருத்தச்சட்டம் 2000 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. இச் சட்டம் மத்திய அரசின் வருமானத்தை முழுமையாக மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வழிசெய்துள்ளது. அரசியல் யாப்பின் எண்பத்தி நான்காவது திருத்தச்சட்டம் (2002) பாராளுமன்றத் தேர்தல் தொகுதிகளை மீள்வரையறை செய்வதை 2026 வரை பிற்போட்டுள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெரு முன்னேற்றத்தைச் சாதித்தவையான தென் மாநிலங்களின் சனத்தொகை, இதனைக் கட்டுப்படுத்த தவறிய வட மாநிலங்களோடு ஒப்பிடுகையில் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைந்தவையாக இருந்தன. இதனால் 2001 இல் பாராளுமன்றத் தேர்தல் தொகுதி மீள்வரையறை செய்யப்பட்டிருந்தால் தென் மாநிலங்கள் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் எதிர் மறையான பாதிப்புக்கு உட்பட்டிருக்கும். ஹிந்தி பேசும் வட மாநிலங்களின் பலம் கூடியிருக்கும். இக் காரணத்தினாலேயே 2026 வரை தேர்தல் தொகுதிகளின் மீள்வரையறை பிற்போடப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ (திருத்தச்) சட்டம் (Representation of the people (Amendment) Act, 2003) குறிப்பிடத்தக்க ஒரு திருத்தச் சட்டமாகும். இச்சட்டம் ராஜ்யசபா தேர்தலில் திறந்த வாக்களிப்பு முறையை அறிமுகம் செய்தது. அத்தோடு இச்சட்டம் ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கு வதிவிடத் தேவையை ஒழித்தது. முன்னர் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் ராஜ்யசபா பிரதிநிதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர் அம் மாநிலத்தில் வதிபவராக இருத்தல் வேண்டும் என்னும் வதிவிடத்தேவை இருந்தது. இத் திருத்தத்தின் பின் இந்தியாவின் எந்த மாநிலத்தில் வதிபவராக இருந்தாலும் வேறு ஒரு மாநிலத்திற்கான பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படலாம். இத் திருத்தம் சமஷ்டி ஆட்சி அமைப்பின் அத்திவாரத்தையே தாக்குவதாக அமைந்துள்ளது என விமர்சிக்கப்பட்டுள்ளது.

2000 ஆண்டு பிப்ரவரி மாதம் அரசியல் யாப்பின் செயற்பாடு குறித்து மீளாய்வு செய்வதற்கான தேசிய ஆணைக்குழு (The National Commission to Review The working of the constitution) நியமிக்கப்பட்டது (நீதியரசர் வெங்கட செல்லையா ஆணைக்குழு – NCRWC). இவ்வாணைக்குழுவின் அறிக்கை 2002 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாயிற்று. இவ்வறிக்கை மத்திய – மாநில அரசு உறவுகள் பற்றியும், அரசாங்கங்களுக்கு இடையிலான உறவுகள் பற்றியும், மிக முக்கியமான கட்டமைப்பு மாற்றங்களைச் சிபாரிசு செய்தது. பாராளுமன்றத்திலும், மாநிலச் சட்ட சபைகளிலும் செயல்திறன் வீழ்ச்சியைத் தடுப்பதற்காக குழு முறையில் (Committee System) பெருமாற்றங்களை இவ்வாணைக்குழு சிபாரிசு செய்துள்ளது. முன்னர் இருந்துவந்த குழுக்கள் முறையை ஒழித்துவிட்டு மூன்று குழுக்களை அமைப்பதற்குச் சிபாரிசு செய்யப்பட்டது. அவையாவன:

  • அரசியல் யாப்புக்குழு (திருத்தங்கள் பற்றியது) (A constitution committee dealing with amendments)
  • தேசிய பொருளாதாரக் குழு (A Committee on legislation)

வெங்கட செல்லையா ஆணைக்குழு ‘I.S.C எனப்படும் மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் (Inter – State Council) மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்; அதனூடாக ‘பொது நலன்கள் சார்ந்து மாநிலங்களுக்கிடையே புரிந்துணர்வும் ஐக்கியமும் வளர்க்கப்பட வேண்டும்’ என்றும் சிபார்சு செய்தது. மாநிலங்களுக்கிடையே வியாபார வர்த்தக கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதற்கு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் சிபாரிசு செய்யப்பட்டது.

சர்வதேச உடன்படிக்கைகள்

மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பாக மாநில அரசுகளின் அடிப்படை நலன்களை பாதிக்கின்ற (Vitally Affects The Interest of the states) சர்வதேச உடன்படிக்கைகளை மத்திய அரசு கைச்சாத்திடும் சந்தர்ப்பம் எழும்போது மாநிலங்களுக்கிடையிலான கவுன்சிலுடன் (ISC) உடன்படிக்கைகள் பற்றி முன்னரே கலந்துரையாட வேண்டும் என்ற வரவேற்கத்தக்க பிரேரணையை வெங்கட செல்லையா ஆணைக்குழு முன்மொழிந்தது. 1995 இல் மத்திய அரசாங்கம் உலக வர்த்தக தாபனத்துடன் (WTO) செய்துகொண்ட உடன்படிக்கை மாநிலங்களோடு கலந்தாலோசிக்காது செய்யப்பட்டது. இதனை எதிர்த்து பஞ்சாப் மாநிலமும், தமிழ்நாடு மாநிலமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இவ் வழக்குகளின் விசாரணை இன்னும் முடிவுறாத நிலையில் இருப்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

அண்மைக் காலத்தில் மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் (ISC) சில முற்போக்கான முடிவுகளை எடுத்துள்ளது:

அ. மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற விதப்புரை செய்யப்பட்டது. இதற்கிசைவாக அரசியல் யாப்பைத் திருத்தப்போவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.

ஆ. ஸ்ரீநகரில் நடந்த மாநில அரசுகளிற்கிடையிலான கவுன்சில் கூட்டத்தில் உறுப்புரை 356 இன் ‘அவசரகால ஏற்பாடுகள்’ பற்றிக் கலந்துரையாடப்பட்டது. அவசரகால நிலை பற்றிய வரையறைகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டு, மத்திய அரசு தன்னிச்சையான முறையில் அவசரகால ஏற்பாடு அதிகாரங்களை பிரயோகிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இ. அவசரகால நிலையின் போது, மத்திய அரசாங்கப் படைகளை ஒரு மாநிலத்திற்குள் அனுப்புவது மத்திய அரசாங்கத்தின் சிறப்புரிமை என்பது ஏற்கப்பட்டது. ஆனால் அவசரகால நிலையில்லாத வேறு சந்தர்ப்பங்களில் மாநிலங்களுடன் முன்கூட்டியே கலந்துரையாடுதல் வரவேற்கத்தக்கது என முடிவுசெய்யப்பட்டது.

மாநிலங்களிற்கிடையிலான கவுன்சில் சர்க்காரிய ஆணைக்குழுவின் சிபாரிசுகளில் 247 சிபாரிசுகளை ஏற்றுக்கொண்டுள்ளது. அவற்றுள் 170 சிபாரிசுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சமஷ்டி ஆட்சிக் கட்டமைப்பில் மாநிலங்கள் இப்போது கூடியளவு முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன என்பது மாநிலங்களுக்கிடையிலான கவுன்சிலின் (ISC) அண்மைக்காலப் பணிகள் எடுத்துக்காட்டுகின்றன.

இந்தியாவில் சமஷ்டிச் செயன்முறை (Federalisation Process) மிக வேகமாக இடம்பெறுகிறது. பின்வரும் நிறுவனங்களும் பதவி நிலையினரும் இச் செயல்முறையில் பிரதான வகிபாகத்தை ஏற்றுச் செயற்படுவதைக் காணலாம்.

  1. இந்திய ஜனாதிபதி
  2. இந்திய உச்சநீதிமன்றம்
  3. மத்திய தேர்தல் ஆணைக்குழு
  4. தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு
  5. இந்தியாவின் செயல் துடிப்புடைய சிவில் சமூக அமைப்புகள் (Civil Society Organizations)
  6. ஊடகங்கள்

இந்திய சமூகம் செயல் துடிப்புடையதாக உள்ளது. இங்கு இடம்பெறும் அரசியல் மோதல்கள், மாநிலங்களின் பலத்தை அதிகரித்து மாநிலங்கள் மீது மத்திய அரசு கொண்டுள்ள பிடியைப் பலவீனப்படுத்த உதவி வருகின்றது.

ஜோர்ஜ் மத்தியு (George Mathew)

இந்தியாவின் சமஷ்டி பற்றிய நிபுணத்துவ ஆலோசகர். இவர் 2004 ஆம் ஆண்டு எழுதிய ‘India’ (Republic of India) என்ற தலைப்பிலான கட்டுரை ‘The Federal Idea’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இத் தொகுப்பு இலங்கை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் (CPA), கனடா ஒட்டாவா நகரில் தலைமையகத்தைக் கொண்ட சமஷ்டி ஆட்சி நாடுகளின் மன்றமும் (The Forum of Federations) இணைந்து தயாரித்து வழங்கப்பட்டது.

உசாத்துணை

  1. Arora, Balveer, “Adapting Federalism to India: Multi-level and Asymmetrical Innovations” in Balveer Arora and Douglas V. Verney (eds), Multiple Identities in a Single State: Indian Federalism in Comparative Perspective, New Delhi: Konark Publishers, 1995.
  2. Dua B.D and M.P. Singh (eds), Indian Federalism in the New Millennium, New Delhi: Manohar 2003.
  3. Government of India, Review of the Constitution: Report of the National Commission to Review the Working of the Constitution (Website: http://lawmin.nic.in/ncrwc/finalreport.htm).
  4. Khan, Rasheeduddin, Rethinking Indian Federalism, Shimla: Indian Institute of Advanced Studies, 1997.
  5. Federal India: A Design for Change, Delhi: Vikas Publishing House Pvt Ltd., 1992.
  6. Mathew, George, “Federalism, Local Government, and Economic Policy” in C. Steven LaRue (ed.), The India Handbook, Chicago: Fitzroy Dearborn Publishers, 1997.
  7. “Institutions of Self-Government in India: Towards Multi-level Federalism,” in Review of Development and Change, Vol. II. No. 2 (July-December 1997). Chennai: Madras Institute of Development Studies.
  8. Mukarji, Nirmal and Balveer Arora (eds), Federalism in India: Origins and Development, New Delhi: Centre for Policy Research and Vikas Publishing House Pvt. Ltd., 1972.
  9. Mukarji, Nirmal, “The Third Stratum,” Bombay: Economic and Political Weekly, 1 May 1993.
  10. Santhanam, K., Union-State Relations in India, New Delhi: Indian Institute of Public Administration and Asia Publishing House, 1960.
  11. http://www.parliamentofindia.nic.in/
  12. http://www.presidentofindia.nic.in/

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7202 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்