வணிக வாழ்க்கையின் வெற்றியில் பெண்களின் பங்களிப்பு
Arts
10 நிமிட வாசிப்பு

வணிக வாழ்க்கையின் வெற்றியில் பெண்களின் பங்களிப்பு

March 18, 2025 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

பெண்கள் எமது சமூகத்தின் அடிக்கல்லாகவும் தூண்களாகவும் இருந்ததைப் பற்றிப் பேசுவது அவசியமாகும். இது, இன்றைய இளம்பெண்கள், ஆண்களை மட்டுமின்றி பெண்களையும் வாழ்க்கையின் முன்மாதிரிகளாகக் கொண்டு, தொழில்முனைவோராக முன்னேற உதவுமென நான் நம்புகிறேன். உலகுதழுவிய நிலையில் பெண்களின் பங்களிப்புகளையும் அவர்களது மனப்பான்மைகளையும் பற்றி ஆராயமுன்னர், பெண்களின் பங்களிப்பால் எனது சொந்தவாழ்வில், எனது ஆரம்பத் தொழில்முனைவு வாழ்க்கையில் எவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்தன எனக் கூறுவது முக்கியமாகும். 

எனது தாத்தா களுத்துறையில் வியாபாரம் செய்து வந்தார். பயணத்தில் இருந்த கடினத்தினால் அவர் யாழ்ப்பாணம் வருவது குறைவாக இருந்தது. அந்தச் சமயங்களில் எனது பாட்டியார், ஊரில் பிள்ளைகளுடன் இருந்து அவர்களது கல்வியில் கவனம் செலுத்தினார்; பேரப்பிள்ளைகளை வளர்க்கவும் உதவினார். அதுமட்டுமின்றி, வீட்டுச் செலவுகளைக் குறைப்பதற்காக சிறிய தோட்டங்களை அமைத்து உணவிற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்தார். கூடுதலாகக் கிடைத்த பயிர்களை விற்றுப் பணம் சம்பாதித்தார். எனது மூத்த அண்ணன், பாட்டியின் முன்மாதிரியான சிந்தனையால்தான், தான் பல்கலைக்கழகம் சென்று பொறியாளராக வரமுடிந்தது என்று கூறுவார். அவர் தொடங்கிய சுவட்டில், அவருக்குப் பின்வந்தோர் பல்கலைக்கழகம் செல்லப் பாதை அமைந்தது. உண்மையில், எமது பாட்டியார் தான் அதற்கு அடிக்கல் போட்டார்.

அதன்பின் எனது தாயாரின் பங்களிப்பும் அவரது தாக்கங்களும் எனது பிற்கால வாழ்க்கையை வடிவமைத்தது. எனக்குப் பன்னிரண்டு வயது நடக்கும்போது, எனது தந்தையார் இறந்து விட்டார். எனது தந்தையார் ஒரு மிகச்சிறந்த தொழில்முனைவர். பல தொழில்களை ஆரம்பித்து வெற்றிகரமாகச் செய்து கொண்டிருந்தவர். திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் இறக்கும்போது, அம்மாவுக்கு அப்போது 52 வயது. எனது தாயார் திடீரென்று குடும்பத்தின் தலைமையை ஏற்கவேண்டி ஏற்பட்டது. அவரது மனப்பான்மையும் எளிய அணுகுமுறையும் நான் உட்பட எனது ஏழு சகோதரர்களையும், மேல்நிலைக்குக் கொண்டுவர அடிக்கற்களாக இருந்தன. அவர் இன்றும் தனது 95 வயதில் எனது குடும்பத்திற்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

எனது பாட்டியாரும் தாயாரும் எனது தொடக்ககால வாழ்க்கைப் பயணத்திற்கு அடிக்கல் வைத்தது போல், எனது பிற்கால வாழ்க்கையைச் சரியாகக் கொண்டுபோவதற்கு எனது மனைவியின் அறிவுரையும் அனுபவங்களும் எனக்கு மிகவும் உதவின. எனது துணைவி ஈழத்தில் போர்க்காலத்திலும் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவராகினார். அவரது அவ் அனுபவங்கள் இன்றும் எனது ‘சிலிக்கன் வலி’ வணிகத்திற்கு உதவியாக இருக்கிறது. அதேபோல் என்னை மேலும் சிந்திக்க வைப்பது அடுத்த தலைமுறையான எனது மகள்மார்கள் ஆவர். அவர்கள் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பார்த்தால் எனது வாழ்க்கையின் பிரச்சினைகள் பெரிதல்ல எனத்தோன்றும்.

இப்படியான நாலு தலைமுறைகளின் பங்களிப்பால் எனது தொழில் வாழ்க்கையில் இன்று நான் ஒரு வெற்றிகரமான நிலையில் இருக்கிறேன். இவ்வாறு, அவர்களிடம் கற்ற சில விடயங்களை இங்கு பகிரலாமென்று இருக்கிறேன்.

  • முடிவெடுப்பவர்கள் (Decision Makers): வாணிபத்தில் மிக முக்கியமானது, பல்வேறு தகவல்களை மதிப்பீடு செய்து, அதன் நல்ல மற்றும் எதிர்மறை விளைவுகளைப் பகுத்தறிந்து, தகுந்த நேரத்தில் முடிவுகளை எடுப்பதாகும். எனது அனுபவத்தில், பெண்கள் இந்தத் திறனில் சிறந்து விளங்குகிறார்கள் என்பேன். நேரத்திற்கேற்ப முடிவுகளை எடுப்பதன் மூலம், அவற்றின் விளைவுகளைக் கவனித்து தேவையான மாற்றங்களைச் செய்ய முடிகிறது. இன்றும், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தால், நான் முதலில் எனது தாயாரிடமோ அல்லது மனைவியாரிடமோ தான் ஆலோசனை கேட்பேன்.
  • சூழ்நிலையை அறிந்தவர்கள்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாழ்க்கையின் அனுபவம் மாறுபட்டதாக இருக்கும். அதேபோல் அவர்களது சிந்தனைமுறைகளும் வித்தியாசமானவை. சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப முடிவுகளை எடுப்பது இதில் முக்கியமானதாகும். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டவர்கள். இது, அவர்களுக்கு சூழ்நிலையை உணர்ந்து, அதற்கேற்ப செயற்திட்டங்களை உருவாக்கும் திறனை வளர்த்துள்ளது.
  • பச்சாதாபம் கொண்டவர்கள் (Empathetic): உலகளாவிய ரீதியில், தலைவர்களிடம் மனிதாபிமானம், அதாவது பச்சாதாபம் இருந்தால், தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் எனக்கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்கள் தலைமையில் செயற்படும் நிறுவனங்கள், அதிகமான பச்சாதாபத்தைக் காட்டுவதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.
  • மூலோபாய சிந்தனையாளர் (Strategic Thinker): ஓர் ஆரம்பத் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்க, பல்வேறு தகவல்களையும் அனுபவங்களையும் ஒருங்கிணைத்து, மூலோபாய அடிப்படையில் சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும். பெண்களின் உலக அனுபவமும், அவர்களது தனித்துவமான சிந்தனை முறையும், முக்கியமான மூலோபாய முடிவுகளை எடுக்க பெரிதும் உதவக்கூடியவை.
  • கூடி யோசிப்போர் (Inclusive Thinkers): உலகில் பெரிய மாற்றங்களை உருவாக்க, அதை நோக்கி முன்னேறுபவர்கள் தங்கள் அணியினரை ஒருங்கிணைத்து, அவர்களது யோசனைகளை வரவேற்றுப் பயனாக்கக் கூடியவர்களாக இருக்கவேண்டும். பெண்கள், ஆண்களை விட அதிகமாகவே, மற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்டு, அணியினருடன் இணைந்து முடிவுகளை எடுப்பார்கள். இதைச் சிலர் பலவீனம் எனக் கருதினாலும், பிறரது கருத்துகளை இணைத்துக் கொள்வதால், தேவையற்ற பிழைகளைத் தவிர்க்கவும், செயற்திட்டங்களை விரைவாக நிறைவேற்றவும் முடியும்.
  • பல்பணியாளர்கள் (Multi-Taskers): ஆரம்பத் தொழில்நிறுவனங்களை உருவாக்கும் போதும், அதை விரிவுபடுத்தும்போதும், பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆரம்பத்தில், பொருட்களை உருவாக்குவது, வாடிக்கையாளர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்வது, திறமையான அணியினரைச் சேர்ப்பது, சந்தைப்படுத்தலை மேற்கொள்வது, முதலீட்டாளர்களை ஈர்ப்பது போன்ற பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பெண்கள் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும்போது, நேரம் எடுத்துச் சிந்தித்த பின்னரே தொடங்குவதால், தேவைக்கேற்ப திட்டமிட்டுச் செயற்படுகின்றனர். இதன் காரணமாக, பல பணிகளை ஒரே நேரத்தில் செவ்வனே நிர்வகிக்கக்கூடிய திறனை அவர்கள் பெறுகிறார்கள்.
  • வலுவான தொடர்பாளர்கள் (Strong Communicators): மேலே கூறிய பச்சாதாபமும், ஏனைய குணங்களும் பெண்களில் உள்ளதால், அவர்கள் அதைப் பயன்படுத்தி தமது அணியினருடனும் வாடிக்கையாளர்களுடனும் பயனுள்ள முறையில் தொடர்புகொள்கின்றனர். இதன்மூலம், அணியினரை ஊக்குவிப்பதுடன், சிக்கல்கள் எழும்பும்போது தெளிவாகச் செயற்பட்டு நிறுவனங்களை முன்னேற்றவும் செய்கின்றனர்.
  • சவால்களால் தூண்டப்பட்டவர்கள் (Motivated by Challenges): பெண்கள், சிறு வயதிலிருந்தே வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்து வந்தவர்களாக இருக்கிறார்கள். எனது இரண்டு பெண்பிள்ளைகள் கூட, அவர்களது பள்ளிப் பருவத்திலும், பல்கலைக்கழகக் கல்வியிலும், அதன்பின்னர் வேலை வாழ்க்கையிலும், ஆண்களைவிட மாறுபட்ட அனுபவங்களைச் சந்தித்திருக்கின்றனர். அவர்கள் இந்தச் சவால்களையெல்லாம் தாண்டி வெற்றிகரமாக முன்னேறியும் இருக்கின்றனர். இந்த அனுபவங்களின் மூலம், அவர்கள் தமது திறமைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். பல்வேறு தடைகளை எதிர்கொள்ளும் சூழலில், பெண்கள் மேலும் உறுதி பெறுகின்றனர். சவால்களே அவர்களது முன்னேற்றத்தைத் தூண்டுகிறது.

எல்லோரது முன்னேற்றத்திற்கும், வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்கும், பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இருப்பினும், அவர்கள் இதை அடைவதற்கு எதிரான சிக்கல்கள், எமது சமூகத்தில் நீண்ட காலமாக நிலவுகின்றன. முன்னேறிய நாடுகளில் கூட, உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவில், இன்றுவரை ஒரு பெண் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை. பெண்களது இரக்ககுணம், குடும்ப – வேலை வாழ்க்கையின் சமநிலை, பிள்ளைபெறும் காலங்களில் விடுமுறை போன்ற காரணங்களைக்கூறி பல நிறுவனங்கள் பெண்களின் தலைமைத்துவத்தை நிராகரிக்கின்றன. ஆனால், எனது நம்பிக்கை, பெண்களின் பங்களிப்பு, வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி, சமுதாயத்திற்கு பெரிதும் உதவும் என்பதுதான். பெண்களின் பங்களிப்புகளை மனதில் கொண்டு, எனது இரண்டு மகள்களுக்கும், எதிர்காலத்தில் ஆண்களுக்குச் சமமான வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்