பருத்தித்துறை சந்தைச் சதுக்கத்தின் நடுவில் ஒரு பெரிய புளிய மரம் இருந்தது. அதன் கீழ் 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், படுவெய்யிலில், யாழ்ப்பாணக் காலநிலைக்குப் பொருத்தமில்லாத உடைகள் அணிந்து ஓர் அந்நிய நாட்டு வெள்ளைப் பாதிரியார் தமிழர்களுக்குக் கிறிஸ்தவ மதத்தைப் போதிக்க, சலிப்பூட்டும் பிரசங்கங்களைச் செய்துகொண்டிருக்கிறார். அவர் யாருமல்லர், இந்தக் கட்டுரையின் முக்கிய நாயகர், ஒல்லாந்தரான பிலிப்பஸ் பல்டேயஸ் (Philippus Baldaeus). பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரில் படித்த எனக்கு இப்படி ஒரு புளிய மரம் இருந்ததாகத் தெரியவில்லை. 1963இல் ஏற்பட்ட புயலின் போது இந்த மரம் வேரோடு சாய்ந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன்.
இலங்கை பற்றி காலனியவாதிகளின் கருத்துக்கோணங்கள்
காலனியகாலத்தில் இலங்கை பற்றி வெளிவந்த முக்கியமான மூன்று நூல்களில் முதன்மையானது, பிலிப்பஸ் பல்டேயஸ் (1632-1671) எழுதிய நூலாகும். அந்தக் காலத்து இலக்கிய வழமைக்கு ஏற்ப, இதன் தலைப்பு ஒரே மூச்சில் வாசிக்கக்கூடியது அல்ல: ‘மலபார் மற்றும் கோரமண்டலின் மிகவும் கொண்டாடப்படும் கிழக்கிந்தியக் கடற்கரைகளின் உண்மையான மற்றும் துல்லியமான விளக்கம். அத்துடன் புகழ்பெற்ற இலங்கைத் தீவும் அந்த மக்களின் பிறமத நம்பிக்கைளும்’ (A True And Exact Description Of The Most Celebrated East India Coasts Of Malabar And Coromandel. As Also The Great Island Of Ceylon And The Religion Of The Heathens). இந்தநூல் வெளிவந்த ஆண்டு 1672; 829 பக்கங்களைக் கொண்ட இந்தப் படைப்பில் 162 பக்கங்கள், இலங்கைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தார்கள், அவர்களின் வாழ்க்கை, மத ஆச்சாரங்கள் பற்றிய பல்டேயஸின் தனிப்பட்ட அவதானிப்புகளைக்கொண்ட நூல் இது. இதில் தமிழ் இலக்கண அறிமுகம், பரமண்டல ஜெபம், விசுவாசப் பிரமாணம் ஆகியன தமிழில் தரப்பட்ட ஒரு பிற்சேர்ப்பும் உண்டு. யாழ்ப்பாணத்தார் தம் வரலாற்றை எழுத இன்னும் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. மயில்வாகனப்புலவர் யாழ்ப்பாண வைபவமாலையை 1736இல் எழுதினார். இதில் முரண்நகை என்னவென்றால், இவரை எழுதத்தூண்டியது ஒரு டச்சு ஆளுநரான ஜான் மக்காரா (Jan Maccara).

பல்டேயஸ் திராவிடத்தின் செழுமையையும் அதன் நெகிழ்வுத்தன்மையையும் பாராட்டியும், பழித்தும் பதிவு செய்தார். இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, திராவிட ஆராய்ச்சிக்குப் பெரிய அந்தஸ்தைக்கொடுத்த ஆங்கில ஆதரவாளர்களான ஆர். கால்டுவெல் (Robert Caldwell) மற்றும் ஜி.யு போப் (G.U. Pope) ஆகியோரின் வருகைக்கு முன்னேற்பாடாகவிருந்தவர் பல்டேயஸ். இவர் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு திறமையான நிலப்பட வரைவியலாளரும் கூட. இவர் வரைந்த வண்ணார்பண்னை, உடுவில், சாவகச்சேரி, மட்டக்களப்புத் தேவாலயங்கள், தமிழர்களின் உருவத் தோற்றம் ஆகியன இந்த நூலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
பல்டேயஸின் புத்தகத்தில், ஐரோப்பிய நாகரிகத்தின் தோற்றம், இந்தியாவில் இந்து மற்றும் பௌத்தத்தின் தொடக்கம் ஆகியன பற்றிய நீண்ட விவரிப்பைக் காணலாம். இந்திய இதிகாசங்களான கிருஷ்ண புராணங்கள், இராமாயணம், மகாபாரதம் மற்றும் ஈழத்தமிழர்களின் சாதி அமைப்புகள் பற்றி ஐரோப்பிய வாசகர்களுக்கு முதலில் சொன்னவர் இவரே. ஜேர்மன் தத்துவவாதிகளும் அனைத்துக் கீழைத்தேயவாதிகளும், கிழக்கு மதங்களையும் ஒரு தத்துவமாகப் பகுப்பாய்வு செய்யும் முறைமையை பல்டேயஸ் தான் தொடக்கிவைத்தார்.
இலங்கை பற்றிய காலனிய நூற்களில் பிரபலமான இரண்டாவது நூல் ராபர்ட் நாக்ஸின், An Historical Relation Of The Island Ceylon Together With Somewhat Concerning Several Remarkable Passages Of My Life That Hath Happened Since My Deliverance Out Of Captivity (1681) எனும் நூல். இவர் 1660ஆம் ஆண்டு கண்டி அரசனான இரண்டாம் இராஜசிங்கனால் கைதாகி 19 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சமூகம், குடும்பம், தொழில்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் மதம் போன்றவற்றைப் பற்றிய விரிவான விளக்கத்தை வழமைபோல் மேற்கத்தையப் பார்வையில் விசனமாகவும் வியந்தவண்ணமும் எழுதினார். அவர் வன்னியின் சில பகுதிகளில் சுற்றித் திரிந்தார். ஆனால் அவருக்கு யாழ்ப்பாணம் பற்றி அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. இந்தநூல் முக்கியமாக சிங்கள மக்களைப் பற்றி விவரிக்கிறது. டேனியல் டெஃபோவின் (Daniel Defoe) மிகவும் பாராட்டப்பட்ட நாவலான ராபின்சன் குரூஸோவுக்கு (Robinson Crusoe), நாக்ஸின் கடலோடி வாழ்வு முன்மாதிரியாக இருந்தது என்று கூறப்படுகிறது
மூன்றாவது புத்தகம் ‘Ceilao’ என்று அழைக்கப்படும் கேப்டன் ரிபெய்ரோவின், Historical Tragedy Of The Island Of Ceylon எனும் நூல். இது போர்த்துக்கீசியர்களின் கீழ் உள்ள கடல் பகுதிகளில் பணியாற்றிய ஒரு சிப்பாயைப் பற்றியது. அவர் இலங்கையில் போர்த்துக்கீசிய காவல் படையுடன் 18 ஆண்டுகளைக் கழித்தார். அவரது புத்தகம் கீழ்நாட்டுச் சிங்களவர்களை விவரிக்கிறது. இவரின் இலங்கை பற்றிய கருத்து ‘கடவுள் உலகில் படைத்தவைகளில் மிகச் சிறந்த பூமி இது’ என்பதாகவே இருந்தது.
இந்த மூன்று நூல்களில் ரிபெய்ரோவின் புத்தகம் சற்று வித்தியாசமானது. நூலில் மூன்றாம் பகுதியில் அவர் போர்த்துக்கீசிய ஏகாதிபத்தியத்தைக் கண்டித்தார். அவர்களின் மூர்க்கக் குணம், சுரண்டும் தன்மைகள், பேராசைகளைப் பகிரங்கமாக்கினார். காலனிய ஆட்சியாளர்களான போர்த்துக்கீசியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்களில் யார் மிகவும் கேவலமானவர்கள் என்று ஒப்பிடுவது அவ்வளவு இலகுவல்ல. சிங்களப் பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது: ‘இஞ்சிக்கும் மிளகிற்கும் என்ன வித்தியாசம்?’
கிறிஸ்தவ வேதமும் மொழிபெயர்ப்பும்
கிறிஸ்தவத்திருமறை ஒரு மொழிபெயர்ப்பு நூல். இதில் இரண்டு பாகங்கள் உண்டு. ஒன்று பழைய ஏற்பாடு. இதன் பெரும்பான்மையான பகுதிகள் எபிரேய மொழியில் எழுதப்பட்டவை. டானியேல் (2:4b–7:28) மற்றும் எஸ்ரா (4:8–6:18; 7:12–26) ஆகிய நூல்களின் சில பகுதிகள் அரமேயத்தில் (Aramaic) எழுதப்பட்டவை. இந்த மொழியில்தான் இயேசு பேசினார். மத்திய கிழக்கில் உள்ள சமூகங்கள், குறிப்பாக அசீரியர்கள், கால்தேயர்கள், சிரியர்கள் மற்றும் சில யூதக் குழுக்களால் புதிய கிளைமொழியாக இந்தப் பாஷை இன்றும் பேசப்பட்டு வருகிறது. பழைய ஏற்பாடு யூதர்களின் வரலாறு, அவர்களின் சமயச் சடங்குகள், அவர்களை ஆண்ட இராசாக்கள், அவர்கள் அண்டை நாடுகளுடன் போட்ட சண்டைகள், தீர்க்கதரிசிகளின் உரைகள், அவர்களுடைய ஞான இலக்கியங்கள், நீதிக் கதைகள், கடவுள் கொடுத்ததாகக் கருதும் கட்டளைகள் போன்றவற்றை உள்ளடக்கியது.
இரண்டாவது பாகம் புதிய ஏற்பாடு. ஆரம்பக் கிறிஸ்தவச் சமயத்தின் காலத்தில் கிழக்குப் பெருங்கடல் பகுதியின் பொதுவான மொழியாக இருந்த, மக்கள் சந்தையில் பேசிய ‘கோயினே’ கிரேக்கத்தில் இது எழுதப்பட்டது. இதில் இயேசுவின் பிறப்பு, போதனைகள், அவர் செய்த அற்புதங்கள், பாடுகள், உயிர்த்தெழுதல் மற்றும் இயேசுவின் திருத்தூதர்களான பவுல், யோவான், பேதுரு ஆகியோர் ஆதிக்கிறிஸ்தவர்களுக்கு பக்தியை வளர்க்க எழுதிய நிருபங்களும் அடங்கும். இலியட் (Iliad) மற்றும் ஒடிசி (Odyssey) போன்ற பெரும் காவியங்களைப் போல, மரபார்ந்த கிரேக்கத்தில் இவை எழுதப்படவில்லை. கத்தோலிக்க வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் 46 புத்தகங்கள் உள்ளன; புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன. இரண்டும் சேர்த்து மொத்தமாக 73 புத்தகங்கள் உள்ளன. எதிரியக்கச் சபையின் (Protestant Churches) வேதாகமத்தில் 66 புத்தகங்கள் உள்ளன. பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் உள்ளன.
கிறிஸ்தவத் திருமறையை முதலில் தமிழ்ப்படுத்தியவர் யார் என்று கேட்டால், இந்தியக் கிறிஸ்தவர்களின் வழமையான பதில், தரங்கம்பாடியில் ஊழியம்செய்த டேனிஷ் நாட்டவரான லூதரன் திருச்சபையைச் சேர்ந்த பார்தோலொமியஸ் சீகன்பால்க் (Bartholomäus Ziegenbalg 1683 – 1719) என்பதாகவே அமையும். இவரின் மொழிபெயர்ப்புகளுக்கு முன்னர், இரண்டு தேர்ந்தெடுக்கப்பெற்ற வேதப்பகுதிகளின் தமிழில் மாற்றம் செய்யப்பட்ட பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. ஒன்று, போர்த்துக்கீசிய இயேசு சபைக் குருவான ஹென்றிக்கே ஹென்றிக்கேஸ் (1520–1600) அவர்களின் தமிழாக்கம். இது மேலெழுந்தவாறு மூல உள்ளடக்கத்தை தன் சொந்தச் சொற்களில் சுருக்கமாக எழுதிய ஒரு பொழிப்புரை.
மற்றையது யாழ்ப்பாணத்தில் ஊழியம் செய்த டச்சுக்காரரான பிலிப்பஸ் பல்டேயஸின் தமிழ் முயற்சிகள். இவர் முழுத் திருமறையையும் மொழிபெயர்க்கவில்லை; முதலாம் நற்செய்தியான மத்தேயுவை மட்டும்தான் தமிழ்ப்படுத்தினார். ஆனால் தரங்கம்பாடியில் அல்ல; யாழ்ப்பாணத்தில். வெளிநாட்டுக்காரர்கள் மட்டுமல்ல; ஓர் ஈழத் தமிழரும் கிறிஸ்தவ வேதாகமத்தை மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டுள்ளார். அவர் அனைவரும் பொதுவாக நினைப்பது போல ஆறுமுக நாவலர் அல்லர்; டச்சுப் பெயர் கொண்ட சுதேசித் தமிழர் பில்ப் டி மெல்ஹோ (Philip De Melhor 1723-1790). இவரைப் பற்றியும் இவரின் மொழியாக்கம் பற்றியும் இந்தத் தொடரில் பின்னர் கூறப்படும். இந்திய மொழிகளில் தமிழில்தான் முதன்முதலில் கிறிஸ்தவ வேதம் மொழிபெயர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்த அம்சம்.
யாழ்ப்பாணச் சமயநிலை
கொழும்பை ஒல்லாந்தர் கைப்பற்றிய பின்னர் 1656இல் இலங்கைக்கு வந்த மத பரப்பாளரில் ஒருவர் பிலிப்பஸ் பல்டேயஸ். இவர் டச்சு சீர்திருத்த சபையைச் சேர்ந்தவர். வெளிநாட்டு மத பரப்பாளர்கள் பெரும்பாலானோர் அவர்கள் சென்ற நாடுகளில், அனைத்தையும் புதியதாக ஆரம்பிக்கவேண்டிய நிலையில் இருந்தார்கள். அந்தநிலை பல்டேயஸுக்கு ஏற்படவில்லை. ஏற்கனவே கத்தோலிக்கர்களினால் நிறுவப்பட்ட கிறிஸ்தவச் சமூகங்களும் தேவாலய அமைப்புகளும் தயாராக இருந்தன. இவருக்கு இரண்டு வேலைகள் காத்திருந்தன. ஒன்று, ஏற்கனவே ரோமன் கத்தோலிக்கராக மாறியிருந்த யாழ்ப்பாணத்தவரை டச்சு சீர்திருத்த சபைக்கு மாற்றுவது. ஒருவிதத்தில் இது சுலபமான காரியமாகவிருந்தது. இந்தக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் பற்றிய இழிவான பார்வை இவரிடமிருந்தது. மனப்பூர்வமாக இவர்களை வெறுத்தார். அவர்களை இவர் பாபாண்ட சார்வாளர்கள் (Popepists) என்ற பட்டப்பெயர்கொண்டு அழைத்தார். இரண்டாவது, மூதாதையர்களின் வழிபாட்டில் ஊறிப்போயிருந்த இந்துக்களைக் கிறிஸ்தவர்கள் ஆக்குவது.
இவரது மதமாற்ற நடவடிக்கைகளால் தோல்வியடைந்த போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தில் 159 கிராமங்களில் முப்பத்தியிரண்டு ரோமன் கத்தோலிக்க ஆலயங்களையும் குருமார் குடியிருப்புகளையும் விட்டுச்சென்றனர். அவற்றில் ஒரு ஜேசுசபை மறைப்பள்ளியும், ஒரு டொமினிக்கன் மடாலயமும் உள்ளடங்கியிருந்தன; ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 20 அல்லது 25 மதகுருக்கள் தங்கியிருந்தனர். 1663ஆம் ஆண்டின் யாழ்ப்பாணத்தின் தேவாலயப்பதிவேடு ஒன்று, 62,558 கிறிஸ்தவர்கள் (ஆண்களும் பெண்களும்) இருந்ததாகக் குறிப்பிடுகின்றது. அடிமை நிலைக்கு உட்பட்டவர்களாகக் குறிப்பிடப்பட்டிருந்த சுமார் 2,587 பேர் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
பல்டேயஸ் யாழ்ப்பாணப்பட்டணத்தில் 35 கிறிஸ்தவ ஆலயங்கள் இருந்ததாகச் சொல்கிறார். இவரின் காலத்தில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என நான்கு மாகாணங்களாக யாழ்ப்பாணம் பிரிக்கப்பட்டிருந்தது.
போர்த்துக்கீசிய மத பரப்பாளர்கள் தீவிரமான மதமாற்றப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதம் மாறியவர்களில் பலர் பெயர் அளவில்தான் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் பத்துக் கட்டளைகளையும் ஏனைய கிறிஸ்தவக் கொள்கைகளையும் அறிந்திருந்தாலும் அவர்கள் தங்களது பாரம்பரியச் சடங்குகளை விடாமல் கடைப்பிடித்தது தனக்குக் கவலையையும் எரிச்சலையும் கொடுத்தது என்று பல்டேயஸ் எழுதியிருக்கிறார்.
சுமார் 12,387 உள்ளூர் முன்னாள் கத்தோலிக்கர்களை கல்வினிசத்திற்கு பல்டேயஸ் மதம் மாற்றினார். கல்வினிசம் என்பது ஜான் கால்வின் (John Calvin) (1509-1564) அவர்களின் போதனைகளை அடிப்படையாகக்கொண்ட எதிரியக்கச் சீர்திருத்தச்சபையின் இறையியலின் ஒரு முக்கிய கிளையாகும். இது கடவுளின் இறையாண்மை, மனிதரின் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதி மற்றும் மனிதகுலத்தின் முழுமையான உள்ளார்ந்த இழிவுநிலை ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
யாழ்ப்பாணத்தவரின் காத்திரமான கேள்விகள்
பல்டேயஸின் இந்தநூலில் இடம்பெறும் ஈழத்தமிழர்கள் அவரைவிடப் புத்திசாலிகளாகத் தெரிகின்றனர். உலகின் உருவாக்கம் மற்றும் முடிவு, ஆன்மாவின் அழியாத தன்மை, மோட்சம், நரகம் போன்றவை பற்றிப் பல பாரதூரமான இறையியல் கேள்விகளை அவர்கள் கேட்கின்றனர்.

இவர்கள் கேட்ட இரண்டு கேள்விகள் இவரைத் திணறவைத்தது. ஒன்று, இயேசுவின் திருமுழுக்குப் பற்றியது. ‘இயேசுவிற்கு யோவான் திருநீராட்டுச் செய்தபோது என்ன வார்த்தைகளை உபயோகித்தார்? தந்தை, குமாரன் (இயேசு), தூய ஆவியானவர் ஆகியோரின் பெயராலா? அப்படியானால் இயேசுவிற்கு எப்படி அவருடைய பெயரால் திருமுழுக்குக் கொடுக்கலாம்?’ இது உள்ளூர் கிறிஸ்தவரான மைக்கேல் பான்செக்காவை குழப்பியது. பல்டேயஸ் அதற்குச்சொன்ன பதில் பான்செக்காவை மேலும் சங்கடப்படுத்தியது. பல்டேயஸ் கொடுத்த விளக்கம் சிக்கலானது. தெய்வீகமும் மனிதமும் இணைந்த இயல்புகளைக் கொண்ட இயேசு, தனக்காக மட்டுமல்லாமல், கடவுள், குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் முழுமையான பெயரில் தூயநீராட்டம் செய்யப்பட்டார். இதன் மூலம் திரித்துவத்தின் ஒருமையான சாரத்தை வெளிப்படுத்தினார் என்று பல்டேயஸ் விளங்கவைக்க முயன்றார். பான்செக்காவுக்கு இந்த வறண்ட தெய்வீகக் கருத்துகள் மற்றும் அருவமான இறையியல் விளக்கங்கள் திருப்தி அளிக்கவில்லை. இந்த யாழ்ப்பாணத்துத் தமிழர் தன்னுடன் நீண்ட இறையியல் விவாதம் நடத்தியதாகப் பல்டேயஸ் அவரது நூலில் பதிவு செய்திருக்கிறார்.
இரண்டாவது, ஆன்மா இடம்பெயர்தல் (Transmigration Of Souls) பற்றித் தமிழ்க் கிறிஸ்தவர்கள் எழுப்பிய கேள்வி. ‘ஒரு குழந்தை கண்பார்வையற்று, வாய்பேசாது அல்லது ஏதேனும் ஒருவகையில் அங்கவீனமாகப் பிறக்காது; ஏனெனில் ஒரு குழந்தையால் எந்தப் பாவங்களையும் செய்யமுடியாது. ஆயினும், முற்பிறப்பில் ‘பெரிய பாவங்கள்’ செய்த ஒரு ஆத்மா, தற்போது அந்தக் குழந்தையின் உடலில் பிறந்திருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா? அதை நாம் ஏன் நம்பாதிருக்க வேண்டும்?’ என்று யாழ்ப்பாணத் தமிழர்கள் அவரிடம் கேட்டனர். தமிழர்களின் இந்தக் கேள்வி, பிறவியிலேயே பார்வையற்றிருந்த ஒருவரைப் பார்த்தபோது சீடர்கள் இயேசுவிடம் – இது அவரது சொந்தப் பாவத்தினாலா, அல்லது அவரது பெற்றோரின் பாவத்தினாலா? என்று கேட்டதை நினைவூட்டுகிறது. இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ள யோவான் நற்செய்தியை (9.1-3) அக்காலத்து யாழ்ப்பாணத்தார்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தச் சம்பவத்தைக் கொண்ட நற்செய்தி அக்காலத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவில்லை.
ஆன்மா இடப்பெயர்ச்சி பெறுதல் என்ற எண்ணம் பற்றி ஈழத்தமிழர்கள் பல்டேயஸிடம் கேட்ட கேள்வி, மூதாதையர் மதமான இந்துசமயத்தின் முன்வினைப்பயன் (கர்மா) என்ற கருத்தில் அவர்கள் கொண்ட நம்பிக்கையைக் காட்டுகிறது. முந்தைய வாழ்க்கைகளில் மேற்கொள்ளப்பட்ட செயல்கள், ஒருவரது தற்போதைய வாழ்க்கையைப் பாதிக்கும் என்ற கருத்தை எபிரேய வேதாகமத்தின் சில பகுதிகள் பிரதிபலிக்கின்றன. ஒரு குழந்தையின் தற்போதைய உடல் அங்கவீனம், அதன் சொந்தப் பாவங்களுக்கான தண்டனை அல்ல; மாறாக, அதே ஆன்மா முன்னொரு உடலில் செய்த பாவங்களுக்கான விளைவாக இருக்குமென, மறுபிறவி அல்லது ஆத்மாவின் பரிமாற்றம் பற்றிய நம்பிக்கைகள் குறிப்பிடுகின்றன.
யாழ்ப்பாணத்தாரின் இந்தக் கேள்விகளுக்கான பல்டேயஸின் பதில்களில் யூத, கிரேக்க ஞானிகளின் மேற்கோள்களும், கேள்விகளுக்குச் சம்மந்தமில்லாத வேத வசனங்களும் நிரம்பிருந்தன. ‘தமிழர்கள் பொதுவாக மிகவும் புத்திசாலித்தனமானவர்கள்’ மற்றும் ‘பல தீவிரமான கேள்விகளைக்’ கேட்கிறவர்கள் என அவரே கூறியிருக்கிறார்.
பல்டேயஸின் மங்கலான பதில்கள் தர்க்கரீதியானவையாக இருக்கவில்லை. விசித்திரமாக, யாழ்ப்பாணத் தமிழர்கள் கிறிஸ்தவத்தின் கோட்பாட்டு அம்சங்களை விட அதன் வரலாற்றுப் பகுதிகளிலேயே கவனம் செலுத்துவதாக அவர் வருந்தினார். ஆனால் உண்மையில், யாழ்ப்பாணத்தார் கேட்ட கேள்விகள், கோட்பாடுகள் இவரைக் குழப்பியது. படைப்பு, உலகத்தின் முடிவு, ஆத்மாவின் நிலைவாழ்வு, நரகம் பற்றிய அவர்களது கேள்விகள் அவரது இறையியல் அறிவைச் சோதித்தன.
ஒல்லாந்தரின் தமிழும், வேதநூல்களின் மொழிபெயர்ப்பும்
பல்டேயஸின் கிறிஸ்தவத்திருமறை மொழியாக்கம் இரண்டு முன்புரிதல்களால் தீர்மானிக்கப்பட்டவை. ஒன்று, இவர் எதிரியக்கச் சபையின் பிரசங்கி. கிறிஸ்தவ மதத்தைத் தவிர வேறு மதத்தின்மீது அவருக்கு அனுதாபமோ புரிதலோ இருக்கவில்லை. உள்இயல்பாக அவர் கத்தோலிக்க மதத்தை வெறுத்தார். இரண்டாவது, இவர் டச்சு தேசியவாதத்தின் வெளிப்பாடாக இருந்த டச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் வேலையாள். தன்னுடைய நூலின் முன்னுரையில் இவர் இலங்கைக்கு வந்தது பற்றி தெளிவாகவே எழுதியுள்ளார்: ‘புறஜாதிகளின் இரட்சிப்புக்காகவும், நமது ஸ்தாபனத்தின் முன்னேற்றத்திற்காகவும்…’
தமிழ் எழுத்துகளை ஐரோப்பாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்தியதும் வெளியிட்டதும் பல்டேயஸ் செய்த பெரிய பணி. தனது நினைவுக்குறிப்பில், பல்டேயஸ் தனது தமிழ் ஆய்வினை விரிவாக விளக்கினார். அவர் தமிழின் அடிப்படை இலக்கணத்தை நுணுக்கமாகக் கோடிட்டுக் காட்டினார். அதில் வாய்மொழி இணைப்புகள், பெயர்ச்சொற்கள், பெயர்ச்சொற்களின் வேற்றுமை வடிவங்களின் பயன்பாடு, ஒருமை மற்றும் பன்மை வடிவங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் மற்றும் ரோமானிய ஒலிபெயர்ப்புகளுடன் கூடிய முழுமையான தமிழ் எழுத்துகள் ஆகியவை அடங்கின. தமிழ் எப்படியான மொழி என்று காட்டுவதற்காக பரமண்டல ஜெபம், விசுவாசப் பிரமாணம் ஆகியவற்றைத் தமிழில் எழுதி, அதை ஆங்கில மொழிபெயர்ப்புச் செய்து, வரிகளின் நடுவே லத்தீனிலும் கருத்தைச் சொன்னார். உதாரணமாக:
‘வானஙகளிலருக எஙகள பிதவே உனனுடைய நாமம எலலாரும தூதி. உனனுடைய இராசசியம வா. வானததில செயயுமாபொல பூமிலும எலலாருஞ செயய.’
இது இயேசு கற்பித்த பரமண்டலப் பிரார்த்தனையிலிருந்து எடுக்கப்பட்டது.
ஒன்று வெளிப்படையாக உள்ளது. பல்டேயஸ் தனது மொழிபெயர்ப்புகளில் புள்ளியைப் (Pulli) பயன்படுத்தவில்லை. உச்சரிப்பைத் தெளிவுபடுத்துவதற்காக இந்த எழுத்துப்பாணியை 18ஆம் நூற்றாண்டில் கையாண்டவர் வீரமாமுனிவர்.
இவரின் தமிழ்மொழிபெயர்ப்புகள் அவரால் மட்டுமே செய்யப்பட்டவை அல்ல. தமிழுக்கு கிறிஸ்தவப் போதனைகளை மொழிபெயர்க்கும் முயற்சியில், யாழ் வாசியான பிரான்சின் என்பவரது உதவி இவருக்குக் கிடைத்து. இவர் தமிழ் மற்றும் போர்த்துக்கீசிய மொழிகளில் தேர்ந்த புலமைபெற்றவர். பல்டேயஸ் இவரின் ஒத்துழைப்பில், கிறிஸ்தவப் போதனைகளின் அடிப்படைக் கருத்துகளைத் தமிழில் வெளியிட்டார். பிரான்சின் அவர்களது உதவியுடன் தான் பல்டேயஸ் மத்தேயு நற்செய்தியை தமிழில் மொழிபெயர்த்தார். இந்தத் தமிழ்ப்பதிப்பு போர்த்துக்கீசிய மொழியில் இருந்து உருவாக்கப்பட்டது. மூலமொழியான கிரேக்கத்திலிருந்து மொழிபெயர்க்கப்படவில்லை. இவை ஓலைச் சுவடிகளில் மட்டுமே பதியப்பட்டன. 1735ஆம் ஆண்டில்தான் இலங்கையில் அச்சுப்பொறி அறிமுகப்படுத்தப்பட்டது.
பல்டேயஸுக்கு இன்னுமொரு தமிழ்ப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ எழுத்து உதவியிருக்கலாம். இன்று கோபன்ஹேகன் ராயல் நூலகத்தில் இருக்கும் ஹென்றிக்கே ஹென்றிக்கேஸ் என்ற போர்த்துக்கீசிய இயேசு சபைக் குரு எழுதிய ‘அடியார் வரலாறின்’ (Flos Sanctorum) பிரதி பல்டேயஸ் வசம் இருந்ததாகத் தெரிகிறது. அப்படியானால் பல்டேயஸின் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு இந்தப் பிரதியும் உதவியிருக்கலாம். ‘அடியார் வரலாறு’ 1586 இல் கொச்சினில் வெளியானது. ஹென்றிக்கேஸ் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் புன்னக்காயலில் பரதவர்கள் சமூகத்தினர்களிடையே தேவ ஊழியம் செய்தவர்.
பல்டேயஸ் தனது நினைவுக் குறிப்புகளில், யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயங்களில் பத்துக்கட்டளைகள் பெரிய தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டு, ஒரு பலகையில் தொங்கவிடப்பட்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார். அதன் இருபுறமும் கர்த்தருடைய பிரார்த்தனைகளோடு விசுவாச அறிக்கைகளும் இடம்பெற்றிருந்தன. பல்டேயஸ் தாவீதின் சங்கீதங்களை தமிழில் மொழிபெயர்த்து, உள்ளூர் திருச்சபைகளில், சபையோர் எல்லோரும் சேர்ந்துபாடும் கூட்டுப்பாடலை அறிமுகப்படுத்த முனைந்தார். மேலும், அவர் பல பிரசங்கங்களையும் தமிழில் மொழிபெயர்த்தார். இது இலங்கையில் டச்சுக் காலனித்துவக் காலத்தில் தமிழில் கிறிஸ்தவப் போதனைகளைப் பரப்பிய ஆரம்ப முயற்சிகளை வெளிப்படுத்துகிறது.
பல்டேயஸின் நூலில் இவரின் பல தமிழ் மொழிபெயர்ப்புகள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. இந்தக் கட்டுரையின் நோக்கத்திற்காக, பொருத்தமானவை மட்டுமே இங்கே குறிப்பிடப்படுகின்றன. தமிழ்க் கவிதை மரபில் மொழிபெயர்க்கப்பட்ட தாவீதின் சில சங்கீதங்கள், கிறிஸ்துவின் பிறப்பு, இயேசுவின் விருத்தசேதனம், அவரது துன்பங்கள், மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் விண்ணேற்பு, இறுதித் தீர்ப்பின் நாள், லூக்கா 10ஆம் அதிகாரத்தில் பதியப்பட்ட அடுத்திருப்பவர்களுக்கு உதவுவதின் முக்கியத்துவம் குறித்த உரை, மத்தேயு 12:38இல் கூறப்பட்டுள்ளதன்படி – பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் ஓர் அடையாளத்தைக் காண்பிக்கும்படி இயேசுவிடம் கேட்ட கேள்விகள் போன்றவை தமிழில் தரப்பட்டுள்ளன. இவற்றுடன் கிழக்கில் உதித்த ஞானிகளின் வரலாறு போன்றவையும் அடங்கும்.
அவர், இந்த வேதாகமப் பகுதிகள் மட்டுமல்லாமல், பல்வேறு தேவாலய நிகழ்வுகள், பிரார்த்தனைகளில் பயன்படுத்துவதற்காகவும் தமிழ்ப் படைப்புகளை உருவாக்கினார். அவற்றில் காலை மற்றும் மாலை வழிபாடுகள், உணவுக்கு முன்னும் பின்னும் செய்யும் ஜெபங்கள், மழைக்கான அல்லது ஒரு வளமான பருவத்திற்கான மன்றாட்டுகள், எதிரிகளுக்கு எதிரான வெற்றிகளை நினைவுகூரும் நன்றி செலுத்தல்கள், இராணுவத்தின் பாதுகாப்பிற்கான பிரார்த்தனைகள் மற்றும் தண்டனைக்கு முன் குற்றவாளிகளுக்கான மன்றாட்டுகள் ஆகியவை அடங்கும். திருப்பலியில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள், நோயாளிகளுக்கான ஆறுதல்கள், குழந்தைகள், பெரியவர்களுக்கான ஞானஸ்நான சூத்திரங்கள் மற்றும் திருமணத்திற்கான பிரார்த்தனைகள் போன்றன இவரால் தமிழ்ப்படுத்தப்பட்டன என்று இவரது நூல் வழியாக அறிகிறோம். ஆனால் இவற்றில் ஒன்றுகூட தற்போதுவரை கிடைக்கவில்லை.
பல்டேயஸின் தமிழ் மொழிபெயர்ப்புகளின் தரத்தை மதிப்பிடுவது எளிதான பணியல்ல. அவரது, மத்தேயு நற்செய்தியின் தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதி நம்மிடத்தில் இல்லை. நாம் வாசிக்கக்கூடியவை அவர் டச்சு வாசகர்களுக்கு தமிழை அறிமுகப்படுத்துவதற்காக அவரது நூலில் சேர்த்துள்ள மொழிபெயர்ப்புகளான ‘கர்த்தருடைய ஜெபம்’ மற்றும் ‘அப்போஸ்தலருடைய விசுவாச அறிக்கை’ போன்றவையே. அவரது சமகாலத்தில் தமிழ்த்திருமறை மொழிபெயர்ப்புகளின் வசனநடை எடுத்துக்காட்டுகள் அதிகளவில் உருவாகாமை இவரது மொழிபெயர்ப்புகளை ஒப்பிடுவதற்கான மற்றொரு தடையாகும். ஆயினும், பல்டேயஸின் தமிழ் மொழிபெயர்ப்புகளுடன் நேரடியாக ஒப்பிடக்கூடிய அவரது சமகால உரைநடை எழுத்துகள் சில இருந்தன. நான் ஏற்கனவே அறிமுகப்படுத்திய ஹென்றிக்கேஸின் பிரதியான அடிகளார் வரலாறு, மற்றும் அவரின் தம்பிரான் வணக்கம் (1578), கிறிஸ்தியானி வணக்கம் (1579) போன்றவையே அவை. இவை பல்டேயஸின் மொழியாக்கம் போலவே ஆரம்பநிலை, குறைபாடான, பதனிடப்படாத பதிப்புக்களாக இருந்தன. தற்கால மொழிபெயர்ப்புகளுடன், முற்கால வசன அமைப்புகள், சொற்றொடர் இலக்கணங்களை ஒப்பிட்டு, மேல்நோக்காக மதிப்பீடு செய்து, அதன் காலத்துக்குப் புறம்பான பிற்காலப்பண்புகளால் எடை போடுவது, காலக்குழறுபடியாகவே அமையும்.
பல்டேயஸ் இலங்கையைவிட்டுப் புறப்படும் நேரத்தில் தனது மொழிபெயர்ப்பு முற்றிலும் பூர்த்தியாகவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். அவரது தமிழ் முழுமையாகத் துலக்கப்படாவிட்டாலும், தொடக்ககாலத்தில் தமிழில் உரைநடை எழுதப்பட்டதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்பதுதான் தனிக்கவனிப்பிற்குரியது. அது மொழியை பொதுமக்களுடன் இணைத்ததற்கான ஆரம்ப முயற்சிகளில் ஒன்று. அதற்கு முன்பு, தமிழ் இலக்கியம் பெரும்பாலும் கவிதை நடையிலேயே இருந்தது. மேலும் அது தமிழ் உயர்வர்க்கத்திற்கே பிரதானமாகப் பயனளித்தது.
பல்டேயஸின் தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கு நேரடி ஒப்பீட்டாகக் கொள்ளக்கூடிய உரைநடை எழுத்துகள் சமகாலத்தில் இல்லை எனலாம். பிற மொழிபெயர்ப்பாளர்கள் பெற்றிருந்த சில சலுகைகள், அனுகூலங்கள்கூட இவருக்கு இருக்கவில்லை. ஆங்கிலத் திருமறையான ‘கிங் ஜேம்ஸ்’ பதிப்பில் பணியாற்றியவர்கள் அல்லது பிலிப் டி மெலோ, சீகன்பால்க் போன்ற தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள், பல மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டு ஆலோசிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.
நேரடி உரை எழுதுவதற்கு முக்கியத்துவம் அளித்த வீரமாமுனிவர் (Costanzo Giuseppe Beschi – 1680–1747) கூட பல்டேயஸின் காலகட்டத்தின் பின்னரே அவரது பணியை ஆரம்பித்தார். இந்தச் சூழ்நிலையில்தான் பல்டேயஸின் பங்கையும் மதிக்க வேண்டும். அது ‘ஓர் இந்திய மொழியில் ஐரோப்பியரால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட முதல் படைப்பு எனப் போற்றப்படுவதற்குப் பதிலாக, பிற்காலத்தில் தமிழில் உரைநடை எழுதப்படுவதற்கு முன்னோடியாக அமைந்த முதல் முயற்சியாகக்’ கொள்ளப்பட வேண்டும். ஆறுமுக நாவலரின் தமிழ் உரைநடை உருவாக இன்னும் இருநூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
சில அவதானிப்புகள்
ஒல்லாந்தர்கள் 1637ஆம் ஆண்டில்தான் முதல்முதலாக முழுமையான வேதாகமத்தைத் தங்கள் மொழியில் பெற்றனர். ச்டேடன்வெர்டாலிங் (Statenvertaling) என்ற இந்த டச்சு அரசின் மொழியாக்கம் இன்று ஆங்கில ‘ஜேம்ஸ் இராசாவின் பதிப்பு’ (King James Version) மற்றும் கிறிஸ்தவத் தமிழர்கள் பாவிக்கும் ‘பவர் பதிப்பு’ (Bower Version) ஆகியவற்றிற்கு ஒப்ப தெய்வீக ஸ்தானத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
பல்டேயஸிற்கும் டச்சுக் கம்பெனி அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவரது மொழிபெயர்ப்பு வேலைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டியாயிற்று. மதக் கல்வி மற்றும் உள்ளூரவர்களை மதமாற்றம் செய்யும் பணிக்காக கூடுதல் நிதி தேவை என அவர் கேட்டுக்கொண்டார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி இதற்குத் தயங்கியது. பதிலாக, பள்ளி விதிகளை அமலாக்கம் செய்யும்போது விதிக்கப்படும் அபராதங்களிலிருந்து இந்தச் செலவுகள் வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தது. பள்ளிகளின் கண்காணிப்பை மதபோதகர்களுக்கு மாற்றாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கே வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆட்சியாளர்களுக்கும் இவருக்கும் இடையிலான உறவு மேலும் விரிசலடையத் தொடங்கியது.
ஆளுநர், அவரை நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்ட முயல்வதாக அவர் உணர்ந்தார். அரசாணைகளை தேவாலயங்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்பதால், தனது மொழிபெயர்ப்புப் பணிகளைத் தொடர்வதை பயனற்றதாகக் கருதி, 1666ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
அரசியல்வாதிகளின் வாழ்க்கை தோல்வியில்தான் முடியும் எனக் கூறப்படுவது, காலனியகால கிறிஸ்தவ மத பரப்பாளர்களுக்கும் பொருந்தும். இந்து அல்லது பெளத்தம் போன்று ஆழமாகக் கால்பதித்த மதங்களும், கன்பூசியசம் போன்ற தத்துவங்களும் நிலைத்திருந்த நாடுகளில், கிறிஸ்தவ மதப்பரப்பல் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தன. கூலியாட்கள் அதிகமாக இருந்தாலும், அறுவடை குறைந்ததாய் இருந்தது. இவரால் மதம் மாறியவர்கள் இறுதியில் அவர்களது பாரம்பரியச் சமயத்திற்கோ அல்லது இடையில் சேர்ந்த கத்தோலிக்கத்திற்கோ திரும்பிச் சென்றனர்.
பல்டேயஸ் இரண்டு காரணங்களுக்காக நினைவில் வைக்கப்பட வேண்டியவர். முதன்முதலில், கிறிஸ்தவத் திருமறையை, குறிப்பாக மத்தேயு நற்செய்தியை, தமிழ் மொழியில் மொழிபெயர்த்த நபராக அவர் கருதப்படுகிறார். அதன்மூலம், கத்தோலிக்கர்களை எதிரியக்கத் திருச்சபைக்கு மாற்றியதில் அவர் எடுத்துக்கொண்ட பங்கும் குறிப்பிடத்தக்கது. அச்சுவேலியில் வாழ்ந்த 46 வயதுடைய பெயரிடப்படாத தமிழ்ப் பிராமணர், பல்டேயஸ் மதம் மாற்றியவர்களில் ஒருவர். இவர் ‘நமது இரட்சகரின் வாழ்க்கையும் பாடுகளும்’ என்ற ஒரு நூலை எழுதியதாகக் கூறப்படுகிறது. பல்டேயஸ் இதைப் பெருமையுடன் நினைவுகூர்ந்ததோடு, அந்தநூல் உன்னதக் கவிதை முறையில் எழுதப்பட்டுள்ளதாகவும் பாராட்டினார். இந்த 17ஆம் நூற்றாண்டு நூல், ‘வரலாற்று இயேசுவைப்’ பற்றிய முதல் நூல்களில் ஒன்றாக இருக்கக்கூடும். மேற்கில் ‘வரலாற்று இயேசுவைப்’ பற்றிய தீவிரமான தேடல், 1770களில் சாமுவேல் ரைமாரஸ் (Samuel Reimarus) எழுதிய ‘Apology Or Defense For The Rational Worshippers Of God, On The Intention Of Jesus And His Disciples’ என்ற நூலின் வெளியீட்டுடன் தொடங்கியது. ஆனால், யாழ்ப்பாணத் தமிழர் எழுதிய அந்த வரலாற்றுச் சுவடிகள் தற்போதுவரை கிடைக்கவில்லை.
பல்டேயஸின் இப்புத்தகம், ‘இந்தப் பாவித் தமிழ் மக்கள் முற்றிலும் இருளில் சிக்கியுள்ள பிற சமயவாசிகள்; ஆனால் இந்தப் பரிதாபகர்கள் கடவுளின் கருணையினால் உரிய நேரத்தில் நற்செய்தியின் உண்மையான அறிவுக்குக் கொண்டுவரப்படுவார்கள்’ என்ற, எல்லாக் காலனிய மத பரப்பாளர்களுக்குமுரிய பொதுவான பரவச நம்பிக்கையுடன் முடிகிறது. ஆனால், இந்த மதத்தில் ஈழத்தமிழர்களில் பெரும்பங்கினர் நாட்டம் காட்டவில்லை.