ஆனைக்கோட்டை முத்திரை : உண்மையும் திரிபும்
Arts
11 நிமிட வாசிப்பு

ஆனைக்கோட்டை முத்திரை : உண்மையும் திரிபும்

April 2, 2024 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

ஆனைக்கோட்டை முத்திரை தொடர்பாகச் சமீபத்தில் வெளிவந்த ஆய்வுகள் சிலவற்றில் முத்திரையில் பொறிக்கப்பட்டிருந்த சில எழுத்துக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு அதற்குப் புதிய வாசிப்பும், புதிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டு வந்திருப்பதைக் காணமுடிகின்றது.

முத்திரையில் காணப்படும் எழுத்துக்களுக்கு அறிஞர்கள் வேறுபட்ட வாசிப்புக்களும், விளக்கங்களும் கொடுத்து வருவது அவர்களுக்குரிய சுதந்திரமாகவே நோக்கப்படும். ஆனால் அவற்றின் எழுத்துக்களை மாற்றிவிட்டு அதற்கு புதிய வாசிப்புகளும் விளக்கங்களும் கொடுப்பது திட்டமிட்ட வரலாற்றுத் திரிபாகவே பார்க்கப்படும்.

இத் தவறுகளை ஊடகங்கள் மூலம் அறிஞர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும், மக்களுக்குத் தெரியப்படுத்தவே இக் கட்டுரை எழுதப்படுகின்றது. கடந்த காலங்களில் ஆனைக்கோட்டை முத்திரையின் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஊடகங்கள் தமது சேமிப்பில் இருக்கும் ஆனைக்கோட்டை முத்திரையின் திரிவுபடுத்தப்பட்ட புகைப்படங்களை நீக்கவும், எதிர்காலத்தில் இவ்வாறான புகைப்படங்களைப் பிரசுரிப்பதைத் தவிர்க்கவும் முன்வந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.

யாழ்ப்பாண நகருக்கு வடமேற்கே ஏறத்தாள 5.5 கிலோ மீற்றர் தொலைவில் ஒரு குக்கிராமமாக இருந்த ஆனைக்கோட்டை 1980 களின் பின்னர் தொல்லியல், வரலாற்று அறிஞர்களாலும், வரலாற்று ஆர்வலர்களாலும் அதிகம் பேசப்படும் ஒரு வரலாற்று இடமாக மாறியுள்ளது.

இதற்கு அக்கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்களும், அவற்றுடன் கிடைத்த கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முற்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த முத்திரை மோதிரமும் முக்கிய காரணங்களாகும்.

1980 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையில் இளம் தொல்லியல் ஆசிரியராக இணைந்த பொன்னம்பலம் இரகுபதி (ஓய்வுநிலைப் பேராசிரியர், உத்கல் பல்கலைக்கழகம், ஒரிசா, இந்தியா) தனது முதல் தொல்லியல் ஆய்வுப் பணிகளில் ஒன்றாக தன் மாணவர்களுடன் இணைந்து ஆனைக்கோட்டையில் தொல்லியல் ஆய்வினை முன்னெடுத்திருந்தார்.

indhirabala

இந்த ஆய்வின் மூலம் அங்கு ஆதியிரும்புக்கால (பெருங்கற்கால) மக்கள் வாழ்ந்துள்ளனர் என்ற உண்மை முதன் முதலாகத் தெரியவந்தது. இவ்விடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்த பேராசிரியர் கா. இந்திரபாலா தலைமையிலான ஆய்வுக் குழுவினர் அங்கு 1980 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் விரிவான அகழ்வாய்வினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த ஆய்வில் வரலாற்றுத்துறையுடன் ஏனைய துறைசார்ந்த ஆசிரியர்களும் மாணவர்கள் சிலரும் பங்கெடுத்தனர். இவ்வகழ்வாய்வின் மூலம் ஏறத்தாழ 2200 ஆண்டுகளுக்கு முன்னரே ஆனைக்கோட்டையில் பெருங்கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்ற உண்மை உறுதிப்படுத்தப்பட்டது.

jaffna history

மேலும் கந்தரோடையை அடுத்து யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெருங்கற்கால மையம் என்ற பெருமையையும் இது பெற்றது. இருப்பினும் கந்தரோடையுடன் ஒப்பிடும் போது ஆனைக்கோட்டை அகழ்வாய்வு இரு அம்சங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது. ஒன்று, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பெருங்கற்கால மக்களது மனித எலும்புக்கூடுகள் இரண்டு முதன் முதலாக ஆனைக்கோட்டை அகழ்வாய்வின் போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டாவது, இந்த மனித எலும்புக்கூட்டுடன் பெயர் பொறித்த முத்திரை மோதிரம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற முத்திரை மோதிரம் ஆனைக்கோட்டையைத் தவிர தென்னாசியாவின் வேறு எந்தவொரு பெருங்கற்கால ஈமச்சின்ன மையங்களிலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இம்முத்திரை மோதிரத்தின் மேலைப்பகுதியில் சிந்துவெளி எழுத்தை நினைவுபடுத்தும் மூன்று குறியீடுகளும், அக்குறியீடுகளுக்குக் கீழே மூன்று பிராமி எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இம்முத்திரை தென்னாசிய வரலாற்று ஆய்விற்குப் புதிய சான்றாதாரமாகக் கிடைத்திருப்பதால் சாசனவியல் அறிஞர்கள் பலரும் தமது பிராமிச் சாசனங்கள் பற்றிய ஆய்வுகளில் ஆனைக்கோட்டை முத்திரை மோதிரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

அதிலும் தமிழ் எழுத்தின் தோற்றம், தமிழ் மொழியின் தொன்மை பற்றிய ஆய்வுகளிலும், கருத்தரங்குகளிலும் இம்முத்திரைக்கு முதன்மையிடம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அண்மைக்காலத்தில் வெளிவந்த சில ஆய்வுகளிலும், கருத்தரங்குகளிலும் இம்முத்திரை மோதிரத்தின் உண்மையான புகைப்படத்திலும், அதன் வரைபடங்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அதன் வாசகத்திற்கு புதிய வாசிப்பும், அதற்குப் புதிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இச் செயற்பாடுகள் ஆனைக்கோட்டை முத்திரையிலிருந்து அறியப்பட்ட வரலாற்று உண்மைகளைத் திரிவுபடுத்துவதாக உள்ளது. ஆனைக்கோட்டை அகழ்வாய்வை முன்னெடுத்த அறிஞர்களால் உத்தியோகப்பூர்வமாகப் பிரசுரிக்கப்பட்ட முத்திரையின் எழுத்துகளை மீள்வாசிப்பு செய்வதும், அதற்குப் புதிய விளக்கம் கொடுப்பதும் ஆரோக்கியமான ஆய்வு முறையாகும்.

அதற்கு பதிதலாக அதன் எழுத்துக்களில் மாற்றங்களைச் செய்துவிட்டு அதற்குப் புதிய வாசகமும், விளக்கமும் கொடுத்திருப்பது மோசடியான வரலாற்று அணுகுமுறையாகும். இது பற்றிய முறைப்பாடுகள் அண்மையில் எனக்கும் கிடைத்துள்ளன.

இதனால் ஆனைக்கோட்டை ஆய்வில் மாணவனாகப் பங்கெடுத்தவன் என்ற முறையிலும், வரலாற்றுத்துறை ஆசிரியனாகக் கடமையாற்றியவன் என்ற வகையிலும் ஆனைக்கோட்டை முத்திரையின் உண்மை நிலை பற்றி கூறுவதை எனது கடமையாகவும், பொறுப்பாகவும் கருதுகின்றேன். 

இம்முத்திரை மோதிரம் ஆனைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டின் தலைமாட்டுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மண்சட்டியொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இம் முத்திரை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் வைத்தே உரிய முறையில் துப்பரவு செய்யப்பட்டு, யாழ்ப்பாண வளாகத் தலைவராக இருந்த பேராசிரியர் க. கைலாசபதியின் கையில் வைத்துப் பல கோணங்களில் பொருளியல்துறை விரிவுரையாளர் வி.பி. சிவநாதன் (பொருளியல்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர்) அவர்களால் படமெடுக்கப்பட்டன. அப்போதைய சூழ்நிலையில் கறுப்பு – வெள்ளைப்படம் எடுக்கும் சூழ்நிலையே காணப்பட்டது.

அவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படத்திலிருந்தும், முத்திரையிலிருந்தும் படிக்கப்பட்ட “கோவேத” என்ற பெயரை வைத்தே பேராசிரியர் கா. இந்திபாலா மற்றும் பொ.இரகுபதி ஆகியோரால் இந்து பத்திரிகையில் விரிவான இரண்டு கட்டுரைகள் முதன் முதலாகப் பிரசுரிக்கப்பட்டன. இதன் சமகாலத்தில், உள்ளூர் ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் பத்திரிகைகளில் இப் படத்தை ஆதாரமாகக் கொண்டு பல கட்டுரைகளும், செய்திகளும் வெளிவந்தன.

அவற்றுள் தமிழில் வெளியிடப்பட்ட கவிஞர் சேரனின் (பேராசிரியர், சமூகவியல், கனடா) “சிந்துவெளியில் இருந்து வழுக்கியாறுவரை ஒரு எழுத்தின் பயணம்” என்ற கட்டுரையும், கவிஞர் ஜெயபாலனின் “கற்காலக் கிளவியும், குறுந்தாடி அழகனும்” என்ற தலைப்பிலான கவிதையும் முக்கியமானவை.

இவற்றின் தொடர்ச்சியாகப் பாடசாலை, பல்கலைக்கழக சஞ்சிகைகளினதும், ஆய்வு நூல்களினதும் அட்டைப்படங்களை அலங்கரிப்பதில் ஆனைக்கோட்டை முத்திரை முக்கிய இடம்பிடித்தது. இந்நிலையில் சிந்துவெளி நாகரிக கால எழுத்து பற்றி ஆய்வை மேற்கொண்ட தமிழகத்தின் முதன்மைச் சாசனவியலாளரில் ஒருவரான ஐராவதம் மகாதேவன் 1980 களில் எடுக்கப்பட்ட ஆனைக்கோட்டை முத்திரையின் புகைப்படத்தையே முக்கிய ஆதாரமாகக் கொண்டு தனது ஆய்வை முன்னெடுத்துள்ளார்.

அவ்வாறே தமிழகத்தில் தமிழ்ப் பிராமி பற்றி ஆய்வு செய்த பேராசிரியர்களான எஸ். ரமேஸ், வை. சுப்பராயலு, க. இராசன், எஸ். இராஜவேலு மற்றும் கலாநிதி சு. இராஜவேலுவும், தென்னிலங்கையில் பேராசிரியர் அனுராமனதுங்க, பேராசிரியர் ராஜ்சோமதே முதலியோரும் இப்புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு பலதரப்பட்ட அறிஞர்களால் ஆய்வுசெய்யப்பட்ட ஆனைக்கோட்டை முத்திரை தொடர்பான வேறுபட்ட வாசகங்களையும், பொருள் விளக்கங்களையும் கருத்தில் எடுத்த பேராசிரியர் இந்திரபாலா 25 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் இம்முத்திரையை விரிவாக ஆய்வு செய்து அதன் வரலாற்று முக்கியத்துவம் பற்றி எடுத்துக்காட்டியுள்ளார்.

aanaikoottai

அவற்றை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும். “கோவேத” என்ற சொற்றொடர் பிராகிருத மொழியைச் சேர்ந்தது அன்று. இதனைக் “கோ – வேத” எனப் பிரிக்கலாம். இது சமகாலத்துத் தமிழ்நாட்டுத் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் சொற்றொடர்களாகிய “கோ ஆதன்”, “கோபூதி விர” ஆகிய சொற்றொடர்களுடன் ஒப்பிடத்தக்கது.

இதில் வரும் “கோ” மன்னனைக் குறிக்கும் ஆதித் தமிழ் திராவிடச் சொல்லாகும். முத்திரைகளிலும், நாணயங்களிலும் வரும் பெயர்கள் பொதுவாக ஆறாம் வேற்றுமை உருபுடன் (அதாவது உடைய என்ற பொருள்படும் சொல் இறுதியுடன்) காணப்படும்.

இதே போன்று, ஆனைக்கோட்டை முத்திரையிலும் பெயர் ஒன்று ஆறாம் வேற்றுமை உருபுடன் காணப்படுகின்றது. அந்த உருபு பழந் தமிழில் காணப்படும் “அ” உருபு ஆகும். அண்மையில் ஆனைக்கோட்டை முத்திரையை நேரில் பார்த்துப் படமெடுக்கவும், அது பற்றிய மேலதிக விபரங்களைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது.

இம்முத்திரை மோதிரம் எவ்வகையான மூலப்பொருள் கொண்டு செய்யப்பட்டதென்பதில் அறிஞர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் நீண்டகாலமாக இருந்து வந்தன. இந்நிலையில் தமிழக அறிஞர்கள் இது “ஸ்டிட்டைட்” எனப்படும் ஒரு வகைக் கல்லில் செய்யப்பட்டதென்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இம்முத்திரைக்கல் 10.2. மி.மீ நீளமும், 10.6 மி.மீ. அகலமும், 5.05 மி.மீ, தடிப்பும், 1.9 கிராம் நிறையும் கொண்டது. இக்கல்லை முத்திரை மோதிரமாகப் பயன்படுத்தும் நோக்கில் கல்லின் பின்பக்கத்தில் சற்சதுரமன சிறிய பீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் இரண்டு பக்க விளிம்பில் காணப்படும் சிறிய அடையாளங்கள் மோதிரத்திற்குரிய வளையம் பொருந்தியிருந்ததை உறுதிப்படுத்துவதாக உள்ளன.

Image 4

ஆயினும் அந்த மோதிர வளையம் என்ன மூலப்பொருள் கொண்டு செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆயினும் அது ஸ்டிட்டைக் கல்லினால் செய்யப்பட்டிருக்க முடியாதென்பது தெரிகின்றது. இக் கல்லின் முன்பக்கத்தில் முத்திரையாகப் பயன்படுத்தப்பட்ட குறியீடுகளையும், பிராமி எழுத்துக்களையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

அவற்றைப் பல கோணங்களில் வண்ணப் படமாக எடுத்துப் பார்த்த போது அவை 1980 களில் பேராசிரியர் சிவநாதனால் எடுக்கப்பட்ட கறுப்பு – வெள்ளைப்படங்களில் இருந்து சிறிதும் மாறுபடவில்லை. உண்மைகள் இவ்வாறு இருக்கும் போது அண்மைக்கால ஆய்வுகள் சிலவற்றில் இம்முத்திரையின் குறியீடுகளிலும், பிராமி எழுத்துக்களிலும் ஏன் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது என்பது தெரியவில்லை.

இதன் மூலம் ஆனைக்கோட்டை முத்திரையில் இருந்து புதிய வரலாறு படைத்துவிட்டதாகப் பெருமை கொள்வது இதன் நோக்கமாக இருந்திருக்கலாம். இதனால் ஆனைக்கோட்டை முத்திரையின் வரலாற்றுப் பெறுமதியும், அதனால் அறியப்பட்ட வரலாற்று உண்மைகளும் திரிவுபடுத்தப்படுகின்றது என்ற உண்மைகளை ஏன் அவர்கள் மறந்துவிடுகின்றனர்?

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க


About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்