ஆங்கில மூலம் – கெல்லி பிறியன் –
அறிமுகம்
பெல்ஜியம் நாட்டின் சமஷ்டி ஆட்சி முறையை நெகிழ்ச்சியுடைய, வளைந்து கொடுக்கக்கூடிய சிறந்த முறையாக இன்று பலர் கருதுகின்றனர். அதன் ஆதரவாளர்கள் அதனை தனித்துவம் மிக்க ஒரு முறையாகக் கருதுகின்றனர். இலங்கையிலும் இதுபற்றிய ஆர்வம் வெளிப்பட்டுள்ளது. எல்லா இனக்குழுமங்களிற்கும் பிரதிநிதித்துவத்தை நன்முறையில் வழங்குவதோடு, உள்நாட்டில் தேசிய இனங்களின் முரண்பாடுகளைத் தணிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் பெல்ஜியம் வெற்றிகண்டுள்ளது. அது சமஷ்டியாக மாறுவதற்கான தீர்மானத்தை (1988இல்) எடுத்திராவிட்டால் இன்று ஒரு தனிநாடாக ஐக்கியமாக நிலைத்து நின்றிருக்க முடிந்திருக்குமா என்பது சந்தேகமே.
இக்கட்டுரை பெல்ஜியம் சமஷ்டி பற்றிய மேலோடு பார்வையை வழங்குகிறது. அதன் முக்கிய இயல்புகளை ஒப்பீட்டு முறையில் எடுத்துரைத்து மதிப்பிடுவதும், அதன் குறை நிறைகளை எடுத்துக் கூறுவதும், இலங்கையில் அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கு அது எங்ஙனம் உதவும் என்பதைப் பரிசீலிப்பதும், இக்கட்டுரையின் நோக்கங்களாகும்.
பெல்ஜியத்தின் சமஷ்டிமுறையும், அங்குள்ள அதிகாரப் பரவலாக்க செயல்முறைகளும் மிகுந்த சிக்கல் வாய்ந்தவை. அச்சிக்கலான முறை பற்றிய பகுப்பாய்வை ஆழமான முறையில் செய்தல் எனது நோக்கமன்று. ஓர் ஆரம்ப அறிமுகத்தையே இங்கு தருகிறேன். இலங்கையில் நடைபெற்றுவரும் உரையாடலுக்கு இது உதவும் என்றே நம்புகின்றேன்.
பெல்ஜியம் பற்றிய அடிப்படைத் தகவல்கள்
மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியம் ஒரு சிறிய தேசம். அதன் விஸ்தீரணம் ஏறக்குறைய இலங்கையின் அரைப்பங்கு ஆகும். அங்கு 10.25 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இலங்கையின் சனத்தொகையின் ஏறக்குறைய அரைப்பங்கே அங்கு உள்ளது. அங்கு இரு பிரதான மொழிக் குழுக்கள் உள்ளன. பிளமிஷ் அல்லது டச்சு மொழி பேசுவோர் 55 வீதத்தினராய் உள்ளனர். பிரஞ்சு மொழிபேசுவோர் 44 வீதத்தினர். மிகச் சிறிய சிறுபான்மையினரான ஜேர்மன் மொழிபேசுவோர் 1 வீதத்தினராக உள்ளனர். நாட்டின் பிரதேச எல்லைகள் மொழிப்பிரிவுடன் ஒத்தமைந்தவையாக உள்ளன. வடக்கே பிளாண்டேர்ஸ் (Flanders) பகுதி பெரும்பான்மை டச்சு மொழி பேசுவோர் வாழும் பகுதி. தெற்கேயுள்ள வலோனியா (Willonia) பிரெஞ்சு மொழி பேசுவோர் மிகுதியாக வாழும் இடம். நாட்டின் தலைநகரான பிரஸ்ஸெல்ஸ் டச்சு, பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளையும் பேசுவோர் வாழும் இடம். இது பிளாண்டர்ஸ் எல்லைக்குள் அதன் வலோனியா எல்லையில் இருந்து சிறிது உள்ளே அமைந்துள்ளது. இரு மொழியினரும் வாழும் இந்நகரத்தில் பிரெஞ்சு மொழி பேசுவோரே பெரும்பான்மையினர். நாட்டின் தென்கிழக்கு மூலையில் லக்ஸம்பேர்க் நாட்டு எல்லைக்கருகாக உள்ள சிறு பகுதியில் ஜேர்மன் மொழி பேசுவோர் செறிந்து வாழ்கின்றனர்.
பெல்ஜியத்தின் சமஷ்டியின் வரலாறு
பெல்ஜியத்தின் இனக் குழுக்களுக்கிடையிலான மோதலுக்கு நீண்ட கால வரலாறு உள்ளது. 5ஆம் நூற்றாண்டு முதலாக இங்கு மோதல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெர்மனியர், பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர், ஆஸ்திரிய நாட்டவர், ஸ்பானிஷ்காரர் எனப் பலரும் இம்மோதல்களில் சம்பந்தப்பட்டவர்களாய் இருந்துள்ளனர். 1830ஆம் ஆண்டில் பெல்ஜியம் டச்சு தேசத்தில் (இன்றைய நெதர்லாந்து) இருந்து பிரிந்து தனி நாடாக ஆகியது. அது தனிநாடாகப் பிரிந்தபோது சமயம், வர்க்கம் ஆகிய இரண்டு விடயங்களுமே பிரிவினைக்குப் பிரதான காரணங்களாக இருந்தன. மொழி வேறுபாடுகள் அக்காலத்தில் முதன்மையான விடயமாக இருக்கவில்லை. பெல்ஜியம் நாடு கத்தோலிக்க திருச்சபைக்கும், நில உடைமையாளர்களான பிரபு வம்சத்தினருக்கும் இடையிலான கூட்டால் உருவானது எனலாம். அது முடியாட்சி அரசியல் வகைக்கு உட்பட்ட தேசமாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது.
பெல்ஜியம் பன்மைத் தேசியங்களைக் கொண்ட நாடு. அங்கு இனக்குழுமம் – மொழி அடிப்படையிலான பிரச்சினைகள் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரே அதிகரித்தன. பழைய காலத்தின் சமய, வர்க்க வேற்றுமைகள் இன்றும் ஓரளவு தொடர்கின்றன. இதனால் பெல்ஜியத்தின் அரசியல் மிகவும் சிக்கலான தோற்றத்தைக் கொண்டதாக உள்ளது.
1940களிலும் 1950களிலும் டச்சு, பிரஞ்சு மொழியினருக்கிடையே ஏற்பட்ட அரசியல் முறுகல் நிலை காரணமாக அடுத்தடுத்துப் பல அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அதிகாரப் பரவலாக்கல் பற்றிய முதல் முயற்சி 1970களில் தொடங்கியது. 1980 இல் மொழிப்பிரிவு அடிப்படையிலும் பிராந்திய அடிப்படையிலும் அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்பட்டது. 1988 இல் செய்யப்பட்ட அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் பெல்ஜியம் சமஷ்டி இயல்பை பெறக் காரணமாயிற்று. இறுதியில் 1993 இல் இயற்றப்பட்ட சட்டத்தின் படி இன்றைய சமஷ்டி அரசியல் கட்டமைப்பு உருவம்பெற்றது.
பிற உலக நாடுகளின் சமஷ்டிமுறைகள் போன்றே பெல்ஜியம் நாட்டிலும் மொழிக்குழுமங்களின் போட்டியும் சர்ச்சைகளும் சமஷ்டிக் கோரிக்கையை முள்வைப்பதற்குக் காரணமாயிற்று. பெல்ஜியம் நாடு மேற்குறிப்பிட்டது போல் இனக்குழுமப் பிரச்சினைகளின் காரணமாகப் படிப்படியாக சமஷ்டி முறையைத் தழுவியது. இருந்தபோதும் பெல்ஜியத்தில் இனக்குழுமப் பிரச்சினைகள் வன்முறை மோதல்களாக அமையவில்லை. வன்முறையற்ற சமாதான வழிகளிலேயே இம்மாற்றங்கள் ஏற்பட்டன.
பெல்ஜியம் சமஷ்டியின் முக்கிய இயல்பு அது பிரதேசங்கள் (Territories) சமுதாயங்கள் (Communities) என்ற இருவகை சமஷ்டி முறைத் தீர்வுகளின் கலப்பைக் கொண்டிருப்பதாகும். பெல்ஜியத்தில் டச்சு, பிரஞ்சு மொழியினர் வெவ்வேறு புவியியல் பிரதேசங்களில் செறிந்து வாழ்ந்து வருவதால் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டி பொருத்தமாயிற்று. அத்தோடு பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் இரு மொழியினரும் கலந்து வாழும் பகுதியாதலால் அங்கு பிரதேச அடிப்படையல்லாத சமஷ்டி (Non Territorial Federalism) மிகப் பொருத்தமானதாயிற்று. இதனால் இரண்டு முறைகளும் கலப்புற்ற வடிவம் அங்கு உள்ளது. பெல்ஜியத்தில் இன்றைய நிலையில் அங்குள்ள இனக்குழுக்களிற்கான பிரச்சினைகளின் மூலங்களாக மூன்று விடயங்கள் உள்ளன. அவையாவன:
1. பிளமிஷ் தேசியவாதம் : பெல்ஜியம் நாட்டின் டச்சு மொழிப் பிரிவினர் பிளமிஷ் தேசியவாதத்தை வெளிப்படுத்துகின்றனர். வரலாற்று ரீதியாக பிரஞ்சு மொழி பேசுவோர் ஆதிக்கம் செலுத்திவந்தமையால் பிரஞ்சு மொழியினரின் அரசியல், பண்பாட்டு மொழி ஆதிக்கத்தை பிளமிஷ் தேசியவாதிகள் எதிர்க்கிறார்கள். இருபகுதியினருக்கும் பண்பாட்டு அடையாளம் தொடர்பிலான பிரச்சினைகள் உள்ளன.
2. வலூன் தேசியவாதம் : வலூன் பகுதியின் பிரஞ்சுக்காரர்கள் பிளான்டர்ஸ் பகுதியும், பிரஸ்ஸல்ஸூம் தம்மீது செலுத்தி வரும் பொருளியல் ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள். இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட பொருளாதார அபிவிருத்திகளினால் பிளாண்டர்ஸ் பகுதியும் பிரஸ்ஸல்ஸ் நகரமும் பொருளாதார முன்னேற்றம் பெறவும், வலூன் பகுதி பின்தங்கிப் போகவும் காரணமாயின. சமத்துவமற்ற இந்த வளர்ச்சிப்போக்கு வலூன் பகுதியில் அதிருப்தியுணர்வு தோன்றக் காரணமாயிற்று.
3. பிரஸ்ஸல்ஸ் நகரின் ஆதிக்கம் : பிரஸ்ஸல்ஸ் நகரில் பிரஞ்சு மொழிபேசுவோர் பெரும்பான்மையினர். இப்பகுதி பெல்ஜியத்தின் ஏனைய பகுதிகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. பிரஸ்ஸல்ஸ் நகருக்கும் ஏனைய பகுதிகளுக்கும் இடையிலான உறவு மையம் – சார்பு மண்டலம் (Centre – Periphery) என்ற இயல்பை உடையது.
இவ்வாறு பல பிரச்சினைகள் இருந்தபோதும் கடந்த 30 – 40 வருடகாலத்தில் பெல்ஜியம் ஒற்றையாட்சி அமைப்பில் இருந்து சமஷ்டி ஆட்சி அமைப்பு முறைக்கு மாறியுள்ளது. இம்மாற்றம் தேசிய ஒருமைப்பாட்டையும் இறைமையையும் நன்கு பேணுவதோடு பிராந்தியங்களிற்கு பொருளாதார, பண்பாட்டுச் சுயாதீனத்தை வழங்குவதில் வெற்றியடைந்துள்ளது.
பெல்ஜியம் சமஷ்டி முறையின் முக்கிய இயல்புகள்
பெல்ஜியம் சமஷ்டி புதிரும், சிக்கலும் வாய்ந்த அம்சங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. இக்கட்டுரையின் இணைப்பாகத் தரப்பட்டுள்ள பின்வரும் இரண்டு அட்டவணைகள் அதன் சமஷ்டி இயல்புகளை விளக்குவனவாக உள்ளன.
இணைப்பு 1. பெல்ஜியத்தில் சட்டவாக்க அதிகாரம் ஒவ்வொரு நிலையிலும் வழங்கப்பட்டுள்ள முறை,
இணைப்பு 2. பெல்ஜியத்தில் அதிகாரப் பரவலாக்கமும், பல நிலைகளின் அமைப்பு அம்சங்களும்.
பெல்ஜியத்தின் சமஷ்டி முறையின் விசேட சிறப்பம்சம் அது பிரதேசம் (Regions) சமுதாயங்கள் (Communities) என்ற இருவகை அலகுகளைக் கொண்டிருத்தல் ஆகும். பெல்ஜியம் மூன்று புவியியல் பிரதேசங்களாக வகுக்கப்பட்டுள்ளது. அவை பிரதேசங்கள் (Territories) என்ற அலகுகளாகும்.
- வலூன்
- பிளான்டர்ஸ் (Flanders)
- பிரஸ்ஸல்ஸ் (Brussels)
என்பன மூன்றும் பிரதேச அலகுகளாகும். இந்தப் பிரதேச அலகுகளை மேவியதாக பிளமிஷ் (Flemish) பிரஞ்சு, ஜேர்மன் மொழி அலகுகள் உள்ளன. இதனைவிட அரசியல் யாப்பின் உறுப்புரை மொழிப் பிராந்தியங்களாக பின்வரும் நான்கை குறிப்பிடுகின்றது.
- பிரஞ்சு மொழி பேசுவோர் பிராந்தியம்
- டச்சு மொழி பேசுவோர் பிராந்தியம்
- ஜேர்மன் மொழி பேசுவோர் பிராந்தியம்
- பிரஸ்ஸல்ஸ் என்னும் இருமொழியியப் பிராந்தியம் மேற்கூறியவற்றில் இருந்து புலப்படுவது யாதெனில்
அ. பிரதேசம் என்ற இடப்பிரதேச நியாயாதிக்கம் (Territorial Jurisdiction)
ஆ. இடப்பிரதேசம் சாராத நியாயாதிக்கம் (Non – Territorial Jurisdiction)
என்ற இருவகை நியாயாதிக்கங்கள் உள்ளன. இரண்டாவது வகை இடப்பிரதேச நியாயாதிக்கம் சமுதாயங்கள் சார்ந்து உருவானது. இது அச்சமுதாயங்களின் ஆளுமையின் அடிப்படையிலான (Personality Based) வகையாகும்.
பெல்ஜியத்தில் சட்டவாக்க அதிகாரமும் மூன்று வகையானது, அவை ஒரே சமயத்தில் செயற்படும் தன்மையுடையவை.
அ. தேசிய மட்டத்தில் பாராளுமன்றம் சட்டவாக்க அதிகாரம் கொண்டதாய் உள்ளது (அரசன் இதன் தலைவராக உள்ளார்).
ஆ. சமுதாயச் சபைகள் (Community Councils).
இ. பிரதேச சபைகள் (Regional Councils),
இந்த மூன்று சட்டவாக்க நிறுவனங்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லை. மூன்றும் சமதையான நிலையில் கணிக்கப்படுகின்றன. 1933ஆம் ஆண்டின் யாப்புத் திருத்தம் சமஷ்டி அரசின் அதிகாரங்களை நிரலிட்ட பின்னர் எஞ்சிய அதிகாரங்கள் பிரதேசங்களுக்கு உரியவை (உறுப்புரை 35) எனக் கூறுகிறது. இந்த மூன்று சட்டவாக்க நிறுவனங்களும் அளவில் வேறுபட்டவை ஆயினும் கொள்கையளவில் சமத்துவமானவை.
பிரதேசங்களும், சமுதாயங்களும் விரிவான சட்ட ஆக்க அதிகாரங்களைக் கொண்டிருப்பதோடு தமது அலுவல்களை கொண்டியக்குவதற்கு ஏற்ற நிர்வாக அமைப்புக்களையும் கொண்டுள்ளன. சமஷ்டிச் சட்டம், பிரதேசச் சட்டம், சமுதாயச் சட்டம் என்பனவற்றை செயல்படுத்தத் தனித்தனியான நிர்வாக அதிகாரங்கள் உள்ளன. பிரதேச, முனிசிப்பல் நிர்வாகங்கள் விரிவான அதிகார அமைப்புக்களாகச் செயற்படுகின்றன.
அரசியல் யாப்பின் சமச்சீரின்மை
பெல்ஜியம் அரசியல் யாப்பு சமச்சீரின்மை (Constitutional Asymmetry) உடையதா? என்ற பிரச்சினை பற்றி அடுத்து நோக்குவோம். இலங்கையின் பத்திரிகையாளர் ஒருவர் இக்கருத்துப்பட அண்மையில் எழுதினார். இது சரியான கருத்தல்ல. பெல்ஜியம் சமஷ்டியின் பிரதேசங்களிற்கிடையே சமச்சீரின்மை இல்லை. அதாவது ஒன்று மற்றவற்றுடன் ஒப்பிடும்போது கூடிய அதிகாரங்கள் கொண்டதாய் இருக்கும் நிலை இல்லை. பெல்ஜியம் சமஷ்டியில் பிரதேசம், சமுதாயம் என்பவற்றில் அதிகார மேவுகை (Overlap) உள்ளது. இது மட்டுமே அங்கு காணப்படும் சமச்சீரின்மை ஆகும்.
பிரதேசங்களும், சமுதாயங்களும் சமதையான அதிகாரங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக பெல்ஜியத்தின் ஜேர்மன் சமுதாயம் பிளமிஷ் சமுதாயத்தைவிட நூறு மடங்கு சிறியது. ஆனால் இரண்டினதும் சமுதாயச் சபைகள் கல்வி, பண்பாட்டு விவகாரங்களில் ஒரேயளவு அதிகாரங்களை உடையவை. பிளமிஷ் சமுதாயச் சபை, ஜேர்மன் சமுதாயச் சபையைவிடக் கூடிய அதிகாரம் உடையது என்று கூறமுடியாது.
அதிகாரப் பரவலாக்கல்
பெல்ஜியத்தில் அதிகாரப் பரவலாக்கம் விரிவான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சமஷ்டிச் சட்டமும், பிரதேசச் சட்டமும், சமுதாயச் சட்டமும் ஒன்றுக்கொன்று சமத்துவமானவை. அரசியல் யாப்புச் சட்டம் மட்டும் யாவற்றுக்கும் மேலானது. பிரதேசங்களும், சமுதாயங்களும் பலவிடயங்கள் தொடர்பாக சமஷ்டி அரசுடன் நியாயாதிக்கத்தில் பங்கு கொள்கின்றன (Shared Jurisdiction). உதாரணமாக பிரதேசங்களும், சமுதாயங்களும் தத்தம் பிரதேசங்கள் சார்ந்தளவான விடயங்களில் சர்வதேச உடன்பாடுகளைச் செய்துகொள்ளும் அதிகாரம் உடையன. உறுப்புரை 167 இதனை அனுமதிக்கிறது (சில மட்டுப்பாடுகளுடன்) கனடாவில் சமஷ்டி அரசுக்கே சர்வதேச உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளும் அதிகாரம் உள்ளது. ஒப்பீட்டு முறையில் இதனை நாம் புரிந்துகொள்ளலாம். உலகத்தின் சமஷ்டி முறைகளில் பெல்ஜியம் மாதிரியில் அதிகாரப் பரவலாக்கம் மிகவும் விரிவானதாக உள்ளது என்பது கவனிப்புக்குரியது.
பெல்ஜியத்தில் அரசியல் கட்சிகளின் ஆதிக்கம்
பெல்ஜியம் நாட்டின் அரசியல் முறையை அரசியல் கட்சிகள் கொண்டு இயக்குகின்றன. கனடா நாட்டுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கனடாவில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினைப் பெற்ற நிர்வாகத்துறை நாட்டை நிர்வகிக்கின்றது. பெல்ஜியத்தில் நிலைமை வேறானது. அங்கு மந்திரிசபை, சட்டசபை, நீதிமன்றங்கள் என்பனவற்றைவிட அரசியல் கட்சிகள் ஆட்சியும் (Partikorney) செயற்படுகிறது. பெல்ஜியத்தில் கட்சி ஆட்சி தோன்றியதற்கான காரணமாக ஒன்றைச் சுட்டிக்காட்டலாம். அங்கு சுயாதிக்கம் உடைய மையப்பகுதி ஒன்று அதிகாரத்தின் அடித்தளம் ஆகச் செயற்படவில்லை. பிரதேசங்களின் அரசியலைக் குவிமையப்படுத்திச் செயற்படும் அரசியல் தலைவர்கள் மத்தியின் அரசியல் அதிகாரத்தைப் பேரம்பேசி முடிவு செய்யும் நிலை அங்கு உள்ளதெனலாம்.
பெல்ஜியத்தில் நாடு முழுமையையும் தழுவியதான அரசியல் கட்சிகள் இல்லை. ஒவ்வொரு கட்சியும் பிரதேசம், மொழி என்பனவற்றைச் சார்ந்து செயற்படும். இதனால் கட்சிகள் பிரதேசம்சார்ந்த பிரச்சினைகளைச் சார்ந்து தம் அணிதிரட்டலை நடத்துவனவாய் உள்ளன. கட்சிகள் தமக்குள் ஐக்கியத்தைப் பேணுகின்றன. அதேசமயம் பிற இனக்குழுமங்களின் அரசியல் கட்சிகளுடன் கருத்தியல் அடிப்படையில் கூட்டணிகளை ஏற்படுத்துகின்றன. இதன் சிறப்பு யாதெனில் கட்சிகளுக்கிடையிலான பேரம்பேசுதலும் உடன்பாடும் பொதுவெளியில் பகிரங்கமாக நடைபெறும் விட்டுக்கொடுத்தல்கள், உடன்பாடுகளுடன் ஒப்பிடும்போது வித்தியாசமானது. ஏனெனில் இது பகிரங்கமான பேரம்பேசுதலாகும்.
‘கொன்சோசியேசனலிசம்’ அல்லது கூட்டாளி அதிகாரம்
‘கொன்சோசியேசனலிசம்’ (Consociationalism) என்ற எண்ணக்கரு ஐரோப்பாவிற்கு வெளியில் உள்ளோருக்கு பரிச்சயமான ஒன்றல்ல. சமஷ்டி முறையில் உள்ள அதிகாரப் பகிர்வுக்கு மாற்றான ஒரு முறையே கூட்டாளி அதிகாரம் என்ற இந்த முறை. இனக்குழும மொழி சார்ந்த மோதல்களையும், முரண்பாடுகளையும் தீர்வு செய்வதற்குச் சிறந்த முறையாக கூட்டாளி அதிகார முறை கருதப்படுகின்றது. சுயாதிக்கத்தையும், அதிகாரத்தில் பங்குபெறுதலையும் பல்வேறு வகையில் இணைப்பதாக கூட்டாளி அதிகாரமுறை அமைகின்றது.
‘பிளவுண்ட அரசியல் பண்பாட்டை உடைய ஜனநாயக நாடு ஒன்றை உறுதிமிக்க ஜனநாயகமுடையதாக மாற்றுவதற்கு உயர் குழாத்தின் கூட்டிணைப்பாக உருவாகும் அரசாங்கமே கூட்டாளி அதிகாரமுறை அரசாங்கமாகும் என்று Arend Lijphart வரைவிலக்கணம் ஒன்றைக் கூறியுள்ளார். கூட்டாளி அதிகாரமுறை அரசாங்கச் செயற்பாடுகளை சனத்தொகை அடிப்படையில் வேறுபடுத்துவதோடு பன்மைச் சமூகங்களின் சமூகப் பிரிவினைகளை முகாமை செய்ய முயற்சிக்கின்றது. சுருங்கக்கூறின் கூட்டாளி அதிகாரமுறை கூட்டுறவாக முடிவுகளை மேற்கொள்வதை (Co-operative Decision Making) உள்ளடக்கியது; அது அதிகாரப்பரவலாக்கலை உள்ளடக்கவில்லை. கூட்டாளி அதிகார முறையை ஆதரிப்போர் ஒற்றையாட்சி முறை பன்மைத்துவத்திற்கு முழுமையான இடத்தை வழங்கமுடியும். வெவ்வேறு குழுக்களின் தலைவர்களிடையே ஏற்படும் இணக்கம் மூலம் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதற்கு இது வழிசமைக்கிறது என்று கூறுவர். இருப்பினும் பெரும்பான்மையான அரசியல் ஆய்வாளர்கள் கூட்டாளி அதிகார முறையினை தற்காலிகமானது; ஒரு வகை இடைக்கால ஒழுங்கு, அது நிலைத்து நிற்கக்கூடியதல்ல என்று கருதுகின்றனர். அது பல்வேறு வகையான பன்மைத்துவத்தையும் அரவணைத்து இணைக்கக்கூடியதேயாயினும் கூட்டாளி அதிகார முறை ‘மேலோர் குழு’வின் இணைப்பு என்ற மேட்டிமையை உடையது. ஏனெனில் இம்முறையில் முடிவுகள் யாவும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் தலைவர்களால் முடிவு செய்யப்படுகின்றன. பரந்த வெகுஜனங்கள் இம்முடிவுகளில் பங்குபெறுவது தடுக்கப்படுகிறது என்ற கருத்தை Lijphart கூறியுள்ளார். மேலும் கூட்டாளி அதிகார முறை அதிகாரங்களைப் பிரிப்பதில் அல்லது பங்கு போடுவதில் கவனம் செலுத்துகிறதே அன்றி வெவ்வேறு இனக் குழுமங்களின் சுயாதீனம் என்ற விடயத்தில் கவனம் செலுத்துவதில்லை.
பெல்ஜியத்தின் அரசியலை இணக்கத்தின் (Consensus) அடிப்படையில் நடத்திச் செல்லும் தேவை நீண்டகாலமாகவே இருந்து வந்துள்ளது. இதனால் கூட்டுறவு என்னும் உணர்வு அதன் அரசியல் யாப்பில் உள்ளார்ந்து அமைந்த விடயமாக இருந்து வருகிறது. அரசியல் யாப்பில் இந்த உணர்வு வெளிப்படையாக உறுப்புரை 143இல் கூறப்பட்டுள்ளது. ‘ஒவ்வொரு சமஷ்டி அலகும் தனது பொறுப்புகளை உணர்ந்து கொள்வதோடு, வேறுபட்ட நலன்களின் காரணமாக எழக்கூடிய நெருக்கடிகளைத் தவிர்த்துக் கொண்டு சமஷ்டிக்கான விசுவாசத்துடன் செயற்படவேண்டும்’ என்று இவ்வுறுப்புரை கூறுகிறது. (இவ்வுறுப்புரையை ‘Loyalty Clause’ (விசுவாசம் தெரிவிக்கும் பிரிவு) என்று கூறுவர்).
கூட்டாளி அதிகார முறையின் சிறந்த உதாரணங்களில் ஒன்று இரட்டைப் பெரும்பான்மை வாக்கெடுப்பு முறையாகும். சமுதாயம் தொடர்பான பிரச்சினை ஒன்று பற்றிய சட்டவாக்கம் நிறைவேற்றப்படுவதற்கு கீழ்சபையிலும், செனற்றிலும் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் அது நிறைவேற்றப்படவேண்டும். அத்தோடு பாராளுமன்றத்தில் உள்ள ஒவ்வொரு மொழிக் குழுவும் (பிளமிஸ், பிரெஞ்சு, ஜேர்மன்) சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் குறித்த சட்டவாக்கத்திற்கு ஆதரவு தருதல் வேண்டும்.
அரசாங்க அலகுகளிற்கு இடையிலான தொடர்புகளும் மோதல்களைத் தடுத்தலும்
பெல்ஜியத்தின் நடுத்தீர்ப்பு நீதிமன்று 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நீதிமன்றம் பெல்ஜியத்தின் சமஷ்டி அரசாங்கம், பிரதேசம், சமுதாயம் ஆகிய மூன்றினதும் அதிகாரங்கள் பற்றிய பிணக்குகளைத் தீர்வு செய்யும் அதிகாரம் உடையதாய் விளங்குகிறது. அத்தோடு இந்நீதிமன்றுக்குக் கல்வித்துறையில் சமத்துவம் என்ற தத்துவம், பாகுபாடுகாட்டாதிருத்தல், சுதந்திரம் ஆகிய விடயங்கள் பற்றியும் ஓரளவு நியாயாதிக்கம் உள்ளது.
பெல்ஜியம் சமஷ்டி முறையில் நீதிமுறை சாராத செயன்முறைகள் பலவும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான வழிகளாகச் செயற்படுகின்றன. இவற்றுள் Concertation Committee என்ற அமைப்பைக் குறிப்பிடலாம். அரசாங்கத்தின் ஒரு அங்கத்தின் செயற்பாட்டினால் அதன் இன்னோர் அங்கம் பாதிக்கப்படும் பொழுது ஏற்படும் ‘நலன்கள் சார் மோதல்களை’ தீர்வு செய்வதற்கு ‘Concertation Committee’ உதவுகிறது.
பெல்ஜியம் சமஷ்டியில் நிதிக் கொள்கை
சமஷ்டி அலகுகளுக்கு தேவையான நிதிகளைப் பங்கிடுதல் பற்றிய நிதிக்கொள்கை விடயங்களை “Fiscal Federalism’ என்ற கலைச்சொல் குறிப்பிடுகிறது. நிதி விடயங்களில் சுயாதீனம் என்ற கொள்கைப்படி சமஷ்டி அலகுகள் ‘ஒவ்வொன்றும் தமது நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட விடயங்களைக் கையாள்வதற்குத் தேவையான நிதிகளை’ பெறுகின்றன. இக்காரணத்தினால் ‘சமஷ்டி அலகுகளின் சுயாதீனம், சமஷ்டி அரசின் அரசியல், நாணய ஒருமைத்தன்மை என்ற இரண்டு விடயங்களுக்கிடையிலான சமநிலை’ பேணப்படுகின்றது. பிரதேசங்களுக்கும், சமுதாயங்களுக்கும் நிதிவழங்கலுக்கு விசேட நிதியிடல் சட்டம் 1989 (Special Financing Act) என்ற சட்டம் ஆதாரமாக உள்ளது. ஜனவரி 16, 1989 இல் இயற்றப்பட்ட இச்சட்டம் இடைக்கால சட்டத்தின் (1980-1999) நிதியிடல், அதற்குப் பின்னரான 2000 ஆண்டில் தொடக்கத்தின் சட்டத்தின் நிதியிடல் பற்றிய ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.
பிரதேசங்கள் நிதிவிடயத்தில் பூரண சுயாதீனம் உடையவை. அவை தமக்குத் தேவையான நிதிகளை இருவழிகளில் பெறுகின்றன. தனியாள் வருமான வரியின் ஒரு பகுதி பிரதேசங்களுக்கு மாற்றல் செய்யப்படுகிறது. இது நிதியை பெறும் ஒரு வழி. இரண்டாவதாகப் பிரதேசங்கள் தமக்கேயுரிய வருமான மூலங்களில் இருந்து நிதியைப் பெறுகின்றன. (வேட்டையாடல், மீன்பிடி வரிகள், வன தொழிற்பாடுகளின் வரிகள், முன்னர் சமஷ்டி வரிகளாக இருந்து பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டவை, தனியாள் வருமான வரியில் மேலதிக விதிப்புகள்.) வரியல்லாத பிற வருமானங்களும் உள்ளன. பிரஸ்ஸல்ஸிற்கு ஒரு விசேட நிதி கிடைக்கிறது ‘Mortmain’ என அழைக்கப்படும் அந்நிதி சமஷ்டியின் தலைநகராகவும் ஒரு சர்வதேசத் தலைநகராகவும் விளங்கும் அந்நகரத்தின் விசேட செலவுகளுக்காக வழங்கப்படுகிறது. வலூன் பிரதேசத்துடன், பிரஞ்சு சமுதாய அலகு இணைக்கப்பட்டுள்ளதால் வலூன் பிரதேசம் பிரஞ்சு சமுதாயத்திடம் இருந்து நிதியை மாற்றலாகப் பெறுகிறது. பிரதேசங்களுக்கிடையிலான சமப்படுத்தல் கொடுப்பனவுகள் (Equalisation Payments) என்ற வகையிலும் நிதி பெறப்படுகிறது. பிரஸ்ஸல்ஸ், வலூனியா என்பன சமப்படுத்தல் கொடுப்பனவுகளால் நிதிகளைப் பெறுகின்றன.
பிரஞ்சு சமுதாயமும், டச்சு சமுதாயமும் சமஷ்டியின் மாற்றல்களைப் (Federal Transfers) பெறுகின்றன. இவை, வானொலி – தொலைக்காட்சி கட்டணம், தனியாள் வருமானவரி, கூட்டிய பெறுமதிவரி (VAT) என்ற மூன்று வரிகள் மூலம் பெறப்படுகின்றன. ஜேர்மன் சமுதாயம் உதவி (AID) என்ற முறையில் நிதியை பெறுகின்றது. இந்த உதவி, வரியோடு சம்பந்தமில்லாதது, ஆகையால் அதன் நிதிச் சுயாதீனத்துவம் மட்டுப்பாடுடையது.
இடப்பிரதேசம் சாராத சமஷ்டி (Non-Territorial Federalism)
பெல்ஜியத்தில் சமுதாயங்கள் என்ற அலகு இடப்பிரதேசம் சாராதது. இவ்வாறு புவியியல் பரப்பொன்றைச் சாராத நியாயாதிக்கம் உடைய அலகுகள் பெல்ஜியத்தில் இருப்பதால் அந்நாட்டை இடப்பிரதேசம் சாராத சமஷ்டி முறைக்குச் சிறந்த உதாரணமாகக் கூறுவர். இருந்தபோதும் பெல்ஜியம் சமஷ்டியில் இடப்பிரதேசம் சாராத இயல்பு பூரணமானதொன்றல்ல. உதாரணமாக பிளமிஷ் சமுதாயத்தை எடுத்துக்கொண்டால் அதில் பிளான்டர்ஸ் பகுதியில் வாழும் டச்சுமொழி பேசுவோரும், பிரஸ்ஸல்ஸ் பகுதியில் வாழும் டச்சுமொழி பேசுவோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். ஆனால் வலூன் பகுதியில் வாழும் டச்சுமொழி பேசுவோர் இச் சமுதாயம் என்ற அலகுக்குள் உட்படுத்தப்படவில்லை. இதே போன்று பிரஞ்சு சமுதாயத்தில் வலூனியாவிலும், பிரஸ்ஸல்ஸிலும் வதியும் பிரஞ்சு மொழி பேசுவோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் பிளான்டர்ஸ்ஸில் வதியும் பிரஞ்சு மொழி பேசுவோர் பிரஞ்சு சமுதாயத்தில் சேர்க்கப்படவில்லை.
ஜேர்மன் மொழி பேசுவோருக்கென சிறிய ஒரு பகுதி நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ளது. ஒரு வகையில் பார்த்தால் பெல்ஜியத்தின் மொழிச் சமுதாயங்கள் ஓரளவிற்கு இடப்பரப்புச் சார்ந்தும் வரையறை செய்யப்பட்டுள்ளன. ஆகையால் முழுமையாக இடப்பிரதேசம் சாராதவை ‘Fully Non – ‘Territorial’ என்று கூறுவதை விடுத்து இடப்பிரதேசங்களை ஊடுருவி நிற்கும் (Cross – Territorial) சமஷ்டி என்றும் அதனை விளக்கலாம்.
தொடரும்.
Rohan Edirisinhe & Asanga Welikala ஆகியோரின் “Essays on Federalism in Sri Lanka” கட்டுரைத் தொகுப்பு நூலில் இருந்து, Kelley Bryan எழுதிய “Federalism in Belgium: Its Elements Advantages and drawbacks” என்ற கட்டுரையின் மொழிப்பெயர்ப்பே இக்கட்டுரையாகும்.