தமிழ்ச் சமூகத்தின் அடிக்கட்டுமானங்களும் கருத்தியலும்
slide-1
slide-2
slide-3
previous arrow
next arrow
Arts
21 நிமிட வாசிப்பு

தமிழ்ச் சமூகத்தின் அடிக்கட்டுமானங்களும் கருத்தியலும்

April 8, 2025 | Ezhuna

ஈழத்து மரபுவழி ஆற்றுகைக் கலைகளுக்கு ஒரு வரலாறும் வளர்ச்சியும் உண்டு. தென்மோடி, வடமோடி, சிந்துநடைக் கூத்துகள், வாசாப்பு, இசை நாடகம், பள்ளு, குறவஞ்சி, வசந்தன், மகுடி என அது பன்முகப்பட்டது. இவற்றுள் சில அருகிவிட்டன; சில கால ஓட்டத்துடன் நின்று போராடி நிலைக்கின்றன; சில மாறுகின்றன. காலந்தோறும் ஏற்பட்ட பண்பாட்டு கலப்புகளும், அதனை உருவாக்கிய அரசியல், பொருளாதார, சமூக காரணங்களும் இம்மாற்றங்களுக்கு அடித்தளமாக உள்ளன. இந்த பல்வேறு வகைப்பட்ட ஆற்றுகை வடிவங்கள் தத்தமக்கென அழகியலையும், அமைப்பையும், வெளிப்பாட்டுத் திறனையும் கொண்டுள்ளன; ஒன்றிலிருந்து ஒன்று பெற்றும் வளர்ந்துள்ளன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்வதும், அவை மாற்றம் பெற்றபோது அது சம்பந்தமாக நடந்த விவாதங்களை அறிவதும், இதன் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபடுபவருக்கும், அதனை மேலும் வளர்த்துச் செல்ல விரும்புவோருக்கும் உதவியாக இருக்கும். இப் பல்வேறு ஆற்றுகை வடிவங்கள் பற்றியும் அவை கல்வி உலகில் ஏற்கப்பட்ட பின்னணிகள் பற்றியும், அதனால் இந்த ஆற்றுகைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அறிமுகம் செய்வதாக ‘ஈழத்துத் தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமைந்திருக்கும்.

அறிமுகம்

உலகம் எங்கணும் பரந்துவாழும் தமிழ்ச்சமூகத்தை, தமிழ்ச்சமூகமாக இணைக்கின்ற இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன: ஒன்று, அவர்கள் பேசும் தமிழ்மொழி; மற்றது, அவர்களால் கட்டமைக்கப்பட்ட தமிழ்ப்பண்பாடு. இந்த இரண்டிற்கும் ஒரு வரலாற்றுப்பின்னணியும், வளர்ச்சிப்பின்னணியும் உள்ளது. மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே வளர்ச்சிபெற்ற தமிழ்மொழி காலத்திற்கேற்ப மாறிவந்துள்ளது. அதுபோலவே, 3000 வருடங்களுக்கு முன்னரே உருவான தமிழ்ப்பண்பாடும் காலந்தோறும் மாறிவந்துள்ளது. இந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டால்தான் தமிழ்ச்சமூகத்தின் அடிக்கட்டுமானத்தையும் கருத்தியலையும் நம்மால் உணரமுடியும்.

தமிழ் இனத்தின் மூல உற்பத்தி இந்தியாவின் தென்பகுதி என்றும், அது ஈழம்வரை பரந்திருந்ததென்றும் கூறுவதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, தமிழினத்தின் மூல உற்பத்தியை தமிழகத்திலும், ஈழத்திலும் காணலாம் என்பது சிலரது கருத்து. அத்தமிழினம் இன்று உலகம் எங்கும் பரந்துவாழ்கிறது, அதற்கான வரலாற்றுக்காரணமும் உள்ளது. ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகள், வடதுருவ நாடுகள் என இன்று தமிழினம் பரந்து வாழ்கிறது. இங்குவாழும் தமிழ்மக்கள் அனைவரும் தமிழ்மொழியையும் தமிழர்பண்பாட்டையும் பேணவேண்டும், அதன்தனித்துவத்தைக் காக்கவேண்டும் என்ற உணர்வோடு செயற்படவேண்டிய காலமாக இக்காலம் உள்ளது.

இந்தப் பின்னணியிலேயே நாம் தமிழரைப் பற்றிய அடிக்கட்டுமானத்தைக் காணவேண்டும். அயல்நாடுகளில் வாழும் தமிழர் சமூகத்தில் பழம் தலைமுறையினர் பழைய அடிக்கட்டுமான கருத்தியலில் வாழ்ந்துகொண்டு இருப்பதுபோலவும், அங்குவாழும் புதிய தலைமுறையினர் அக்கருத்தியலிலிருந்து விடுபட்டுவாழும் சூழ்நிலை அங்கு தோன்றியுள்ளது எனவும் அறிகிறோம். இங்கு நான் ஈழத்துக்கூத்துகள் பற்றிப் பேசுவதால், ஈழத்தமிழரின் அடிக்கட்டுமானம் பற்றியும் அவைதரும் கருத்தியல் பற்றியுமே பேசவுள்ளேன். இன்றைய உலகத் தமிழ்க்கூத்துகளையும் அதன் போக்குகளையும் அறிந்துகொள்ள இது உதவக்கூடும். ஏனையவை பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.

ஈழத் தமிழ்மக்கள்

ஈழத்தில் அல்லது இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் இலங்கையின் வடபகுதி, வன்னிப் பகுதி, கிழக்குப் பகுதி, மத்திய பகுதி, மேற்குப் பகுதி மற்றும் வடமேற்குப் பகுதி என பல்வேறு பகுதிகளில் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களின் இன்றைய பொருளாதார அடிக்கட்டுமானமாக நிலமானியமும், முதலாளித்துவ நவீனப் பொருளியல்முறையும் அமைந்துள்ளன; இவை இணைந்தும் காணப்படுகின்றன. ஆரம்பகாலத்தில் நிலமானியமே அடிக்கட்டுமானமாக இருந்தது; அத்தகைய சிந்தனைகளே அவர்களின் கருத்துகளாக இருந்தன. பின்னர் வெவ்வேறு பொருளாதார அடிக்கட்டுமானங்கள் உருவானபோது, அவர்களின் சிந்தனையிலும் கருத்தியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. முதலில் நாம் ஒவ்வொரு பிரதேசத்தையும், அதன் பிரதான பொருளியல் அமைப்பையும், சமூக அமைப்பையும் புரிந்துகொள்ள வேண்டும்.

நிலமானியப் பொருளியல் அமைப்பின் குழந்தை: சாதி அமைப்பும் நிலமானியச் சமயமும்

யாழ்ப்பாணத்தின் அல்லது வடபகுதியின் சமூகக்கட்டமைப்பு வித்தியாசமானது. அதில் வேளாளர்கள் மேல்நிலையிலும், ‘விளிம்புநிலையினர்’ எனக் கூறப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் கீழ்நிலையிலும் உள்ள ஒரு சமூகக்கட்டமைப்புக் காணப்படுகிறது. ஆகம முறையிலமைந்த இந்துமதமே அங்கு சமூக மேல்நிலைச் சமயக் கருத்துநிலையாகும்.

மட்டக்களப்பில் முக்குவர்கள் மேல்நிலையிலும், விளிம்புநிலை மக்கள் கீழ்நிலையிலுமுள்ள ஒரு சமூகக்கட்டமைப்பு உள்ளது. இங்கு ஆகமம்சாரா, சடங்குமுறைசார்ந்த இந்துசமயக் கருத்துநிலையே மையநிலையாக இருக்கின்றது.

மன்னாரிலும் இந்தநிலையே காணப்படுகிறது. அங்கு ஆகமமுறையிலான சமயம் இருப்பினும், கத்தோலிக்கம் முக்கிய இடம் வகிக்கிறது. ஐரோப்பிய நிலமானிய அமைப்பின் முக்கிய மதம் கத்தோலிக்கம் என்பதே சில ஆய்வாளர்களின் முடிவாகும்.

மலையகத்தில் சமூகக்கட்டமைப்பின் உயர்நிலையில் உள்ளவர்கள் மற்றும் தாழ்நிலையில் உள்ளவர்கள் என்றவாறான ஒரு சமூகக்கட்டமைப்பு உள்ளது. இந்தக் கட்டமைப்புகளே அவர்களின் சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்றன, கருத்தியலை உருவாக்குகின்றன. அங்கும் சாதியமைப்பு உண்டு; சாதிரீதியாகவே அவர்கள் ஆரம்பத்தில் குடியிருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. அங்கு ஆகமம் சார்ந்த இந்துமத முறைகள் செல்வாக்குப் பெற்றிருப்பினும், ஆகமம் சாரா தெய்வவழிபாட்டுமுறையே பிரதானமாக இருக்கிறது என்பதை மறந்துவிடலாகாது.

சமூக அமைப்பும், கலை வடிவங்களும்

சமூக அமைப்பிற்கும் கலை வடிவங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் உள்ளன. குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் நிலவும் பொருளாதார உற்பத்தி, அச்சமுகத்தின் பிரதான கலைவடிவங்களை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு கொள்கிறது.

வளர்ச்சியடைந்த ஈழத்துக்கூத்துகள் தமிழர் மத்தியில் உள்ள நிலமானிய சமூகத்தைப் பிரதிபலிப்பதுடன் அதனைக் கட்டிக்காக்கும் உள்ளடக்கம், உருவங்களையும் பெற்றுள்ளன. அத்தோடு நிலமானிய சமூகத்தின் உளவியல் தேவைகளையும் அவை நிறைவேற்றுகின்றன.

தமிழர் சமூகம் சமச்சீரற்ற பொருளாதார அமைப்பைக் கொண்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட பொருளாதாரச்சூழல் அச்சமூகத்தில் பயில்நிலையிலுள்ள கூத்தாற்றுகையின் வன்மைப்பாட்டைத் தீர்மானிக்கிறது. இப்பொருளாதாரச் சூழல் மாற, அது தனது பழைய முக்கியத்துவத்தை இழக்கிறது. சூழல் மாற்றத்திற்கு பொருளாதார அகச்சிதைவே முக்கிய காரணம் ஆயினும், புதிய பண்பாட்டின் வருகை மற்றும் நம்பிக்கை என்பன இம்மாற்றத்தை துரிதப்படுத்துவதில் பங்கு வகிக்கின்றன. ஆனால், இவ்வண்ணம் சூழல் மாறினாலும், பாரிய பாரம்பரிய நம்பிக்கை காரணமாக கூத்துப் போற்றப்படுகிறது. பண்பாடு என்பது மிகச் சிறுவயதிலிருந்தே அகத்தில் ஊறிய ஒன்று; அது இலேசில் மாறிவிடும் தன்மையுடையது அல்ல; ஆனால், மாறுவதையும் தவிர்க்க முடியாது. 

மாறும் சமூகத்திற்கு ஏற்ப, கூத்தை மாற்றி, சமூகப் பயன்பாடு உடையதாக அதனை ஆக்கும் முயற்சியும் புத்திஜீவிகளால் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்தும் மாறக்கூடிய சமூகத்தில் கூத்து மட்டும் மாறாவிட்டால், அது காலப்போக்கில் ஒரு நூதனசாலைப்பொருள் ஆகிவிடும். இப்பொதுவிதியின் பின்னணியில் கூத்தை நோக்குவோம்; முக்கியமாக மட்டக்களப்பை அடிப்படையாகக்கொண்டு இதனைப் பார்ப்போம்.

மட்டக்களப்பு ஒரு சுருக்கமான சமூக ஆய்வு

கிழக்கிலங்கை; திருகோணமலைப் பிரிவு, மட்டக்களப்பு பிரிவு, அம்பாறைப் பிரிவு என நிர்வாக வசதிகருதி மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்புப் பிரிவில் சிறப்பாகவும், ஏனைய பிரிவுகளில் குறிப்பாகவும் கூத்துகள் ஆடப்பட்டு வருகின்றன. மட்டக்களப்புப் பகுதியே இங்கு ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மட்டக்களப்பின் சமூக அமைப்பு எத்தகையது? அங்கு நடைபெறும் கூத்துவகைகள் யாவை? இந்தக் கூத்துவகைகளுக்கும் இச்சமூக அமைப்புக்கும் உள்ள தொடர்புகள் என்ன? இதன் சமூக அத்தியாவசியம் என்ன? என்பனவே நம்முன்னே உள்ள கேள்விகள் ஆகும். சமூக அமைப்பை இங்கு முக்கியமாக நோக்கவேண்டும். சமூக அமைப்பின் அச்சாணியாக விளங்குவது அச்சமூக அமைப்பின் அடித்தளமாக இருக்கும் பொருளாதார வாழ்க்கைமுறைமை ஆகும். உற்பத்திக் கருவிகளையும், அதனால் ஏற்படும் உற்பத்தி உறவுகளையும் கொண்டு இச்சமூக அமைப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

மட்டக்களப்பின் சமூக அமைப்பு

இப்போதைய மட்டக்களப்பின் சமூக அமைப்பை நாம் நிலமானியச் சமூக அமைப்பு எனலாம். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணமுள்ள விளைநிலங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள மட்டக்களப்பில் விவசாயமே இன்று முக்கியத் தொழிலாக இருக்கின்றது. எனினும், பழைய புராதன குழுவாழ்வின் (தேன் எடுத்தல், மந்தை மேய்த்தல்) எச்சசொச்சங்களையும், அவை விட்டுச்சென்ற பழைய கலாசார அம்சங்களையும் இதன் சமூக வாழ்க்கைமுறையில் இன்றும் கண்டுகொள்ளக்கூடியதாக உள்ளது. ஆங்கிலேயர் வருகையின் காரணமாகவும், அவர்கள் கல்வியில் ஏற்படுத்திய சமூக வளர்ச்சி காரணமாகவும், இவ் அமைப்பின் இறுக்கம் சில இடங்களில் குறைந்துள்ளது.

நிலமானிய வேறுபாடுகள்

ஐரோப்பிய நிலப்பிரபுத்துவநிலையில் இருந்து இந்திய நில உடைமை அமைப்பு மாறுபட்டது என்பார் அறிஞர் கோஸாம்பி. இந்திய நிலப்பிரபுத்துவ அமைப்பில் சாதிமுறையும் சமயமுமே முக்கியமான அம்சங்களாகும். அதனோடு நாம் பெண்ணடிமையையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்தச் சாதிமுறைமை இந்திய சமூக அமைப்பின் அச்சாணியாகவும், சிறப்பம்சமாகவும் சமயநூல்களால் ஏற்கப்பட்டு இன்றுவரை இயங்கிவருகிறது. பெண்ணடிமை முறையை இலக்கியங்களும் அறநூல்களும் வலியுறுத்தியே வந்துள்ளன. சாதி அமைப்பின் வலிமை அவ்வவ் சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப தாக்கம் கூடியதாகவும், குறைந்ததாகவும் நிலவிவந்தாலும், சாதி என்ற அமைப்பும் கருத்தும் இன்றுவரை தமிழ்ச்சமூகத்திடம் மிகமிக வலிமை வாய்ந்த கருத்தியலாகவே இருந்துவருகிறது.

யாழ்ப்பாணத்து நிலமானிய சமூக அமைப்புக்கும், மட்டக்களப்பு நிலமானிய சமூக அமைப்புக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இவ்வேறுபாடுகள் முக்கியமானவைகளாகும். இவ்வேறுபாடுகள் ஏற்பட்டமைக்கும், மட்டக்களப்புக்கு என தனித்தவொரு சாதி அமைப்பும் சமூகப் பண்பாடும் உருவாகியமைக்கும் உரிய காரணங்களை நாம் வரலாற்றில் இருந்துதான் பெறவேண்டும். மட்டக்களப்பு வரலாறு குறித்து இன்னும் தெளிவாக ஆராயப்படவில்லை. எனினும், கிடைக்கும் ஆதாரங்களைக்கொண்டு பார்க்குமிடத்து அதன் வரலாற்றை நாம் ஓரளவு ஊகிக்கலாம். இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும், தமிழ்நாட்டைத் தவிர ஏனைய பாகங்களில் இருந்தும், இலங்கையின் வடபால் இருந்தும் காலத்துக்குக்காலம், மட்டக்களப்பில் மக்கள் குடியேறியதை அறியமுடிகிறது.

ஏற்கனவே இங்கு பழங்குடிகள் வாழ்ந்திருந்தபோதிலும், பின்னர் குடியேறியோர், ஏற்கனவே இங்கு வாழ்ந்தோருடன் இணைந்தனர். குடிகளுக்கிடையே ஆரம்பத்தில் சண்டைகள் நிகழ்ந்தன. இறுதியில், சமூகத்தில் செல்வாக்குமிக்க குடிகள் மட்டக்களப்புக்கு என ஓர் அரசை நிறுவிக்கொண்டன. ஆரம்பகாலங்களில் இந்த அரசு தென்இலங்கையிலிருந்த பேரரசான உருகுணை அரசின் கீழும், இடைக்காலத்தில் தமிழகத்திலிருந்துவந்த தமிழ் மன்னர்களின் கீழும், பிற்காலத்தில் கண்டிய அரசின்கீழும் இருந்தது என வரலாறு கூறுகிறது.

குடியேறிய மக்களும் இங்கு வாழ்ந்த பழங்குடியினரும் விவசாயத்தையே தங்கள் முக்கிய தொழிலாகக்கொண்டனர். விவசாயத்தை அடியொட்டிய நிலமானியமுறை அமைப்பினைக் கட்டிக்காக்க, ஸ்திரமான அரசு அவசியமாக, மாகோன் என்னும் மன்னன் இந்த அரசை நிறுவி ஓர் இறுக்கமான சமூக அமைப்பை உருவாக்கினான் என்று கூறப்படுகிறது. நிலமானிய அமைப்புக்கு ஏற்ப சாதிமுறைகளும் வகுக்கப்பட்டன.

அடிக்கடி குடியேற்றங்கள் நடைபெற்றதனாலும், குடியேறியோர் காடுவெட்டிப் பயிர்செய்து குடியேறிய பகுதிகளில் ஸ்திரமாகியதனாலும், குறிப்பிட்ட சாதியினரைத்தவிர, தாழ்ந்த வகுப்பினராகக் கருதப்படும் ஏனைய சாதியினர், நில உடைமையாளர்களில் தங்கியிருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. இதனாலேயே மட்டக்களப்பில் சாதி அமைப்பு, இலங்கையின் வடபகுதிபோல அத்தனை இறுக்கமாக இல்லை என்பதும் மனங்கொள்ளத்தக்கது.

நிலமானிய அமைப்பின் தன்மையைப்பொறுத்து இந்தச் சாதிகளை 17 சாதிகளாக வகுத்தனர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இந்தச் சாதி அமைப்பைக்கொண்ட சமூக அமைப்பில் வெள்ளாளரும் முக்குவருமே உயர்குடியினராகக் கருதப்பட்டனர். அவர்கள் குடிகளாகவும் வகுக்கப்பட்டிருந்தனர். அதிகமான நிலங்களுக்கு இவர்கள் சொந்தக்காரர்களாக இருந்ததுவே இதற்கான காரணமாகும்.

இவர்களுக்கு அடுத்தபடியாராக சீர்பாதக்காரரும், கரையாரும் முக்கிய இடம் வகித்தனர். வேளாளரிடமும், முக்குவரிடமும், சீர்பாதக்காரரிடமும், கரையாரில் ஒரு பிரிவினரிடமும் இந்தக் குடிமுறைகள் உண்டு. இவர்களில் கரையார், கரையோரப்பகுதிகளில் மீன்பிடிச் சமூகத்தினராக ஒதுங்கிவிட, வெள்ளாளரும் முக்குவரும் சீர்பாதக்காரருமே கிராமிய அமைப்பில் தலைமை ஸ்தானம் பெற்றனர். இங்குள்ள கோயில்களிலே இந்தத் தன்மையைக் காணலாம்; திருவிழாக்களில் இந்தக்குடிமுறை பேணப்படுகிறது. குடிகளுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு.

கிராமப்புறங்களில் சாதி அமைப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சாதிக்குமுரிய ஊழியங்கள் வகுக்கப்பட்டிருந்தன. இவை சமூக ஊழியம், கோவில் ஊழியம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தன. உயர் வகுப்பினராகக் கருதப்பட்ட முக்குவர், வேளாளர் இடையே உழுவோர், உழுவித்து உண்போர் என இரண்டு பிரிவுகள் இருந்தன. உழுபவர்கள் பொருளாதார அமைப்பில் சமூகத்தின் கீழ்நிலையிலும், உழுவிப்போர் பொருளாதார அமைப்பின் மேல்நிலையிலும் இருந்தனர். சமூகத்தின் தலைமை ஸ்தானத்திலிருந்தோர், சிறைக்குடிகள் எனும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தனி இடமும், தனிநிலமும் கொடுத்து அவர்களைத் தமக்கு ஊழியம்செய்யவென வைத்துக்கொண்டனர். உயர்நிலையில் இருந்தோரின் வாழ்வியலில் (மணநாள், பிணநாள், சாமத்திய வீடு, கோயில் நிகழ்வுகள், இன்னோரன்ன சடங்காசார வாழ்வியல்) இந்தத் தாழ்நிலையில் இருந்தோரின் வாழ்வு பிணைக்கப்பட்டிருந்தது.

உயர்நிலையிலிருந்தோர் எனக் கருதப்பட்டோருக்கும், தாழ்நிலையில் இருந்தோர் எனக் கருதப்பட்டோருக்குமிடையே ஓர் உறவு நிலவினாலும், சாதிமுறைகளைமீறாத நேசபூர்வமான உறவாகவே அது திகழ்ந்தது. ஒரு சங்கிலிப் பிணைப்புபோல் அது இருந்தது எனலாம். சாதிகளுக்கிடையே திருமண உறவுகள் ஏற்பட சமூகம் ஒருபோதும் அனுமதிக்கவேயில்லை. காரணம் அது சொத்துரிமை சார்ந்ததாக இருந்தது.

இத்தகைய நிலமானிய அமைப்பு மட்டக்களப்பில் நீண்டகாலமாக இருந்துவந்தது. எனினும் ஆங்கிலேயர் வருகையும், பொருளாதார அகச்சிதைவுகளும், இந்த அமைப்பைப் பலவீனப்படுத்திவிட்டன. கிறிஸ்தவமதத்தின் வருகையும், மத்தியதரவர்க்கத்தின் தோற்றமும் நகரப்பகுதிகளில் இந்த அமைப்புத் தகரக் காரணமாக இருந்தன. இந்தச் சமூக அமைப்பின் பின்னணியில்தான் மட்டக்களப்பில் நடந்துவரும் கூத்துகளை நாங்கள் பொருத்திப்பார்க்க வேண்டும்.

மட்டக்களப்புக்கூத்தும் சமூக அமைப்பும்

மட்டக்களப்புக் கூத்துகளைப்பற்றி எழுதிய அனைவரும் தென்மோடி, வடமோடி கூத்துகளைப்பற்றிச் சிறப்பாகச் சொல்வர். மிக அலங்காரமான ஆடல் வடிவங்களையும், இனிமையான இசைப்பாடல்களையும், கண்கவர் ஆஹார்ய அபிநயங்களையும், அதற்கான வட்டக்களரியையும் கொண்ட இந்தச் செழுமையான கலைவடிவங்கள் முன்னிலையாக ஆக்கப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

மட்டக்களப்புப்பகுதியில் வழங்கும் ‘கூத்து’ என அழைக்கப்படும் இக்கிராமிய நாடகத்தை தென்மோடிக்கூத்து, வடமோடிக்கூத்து, விலாசக்கூத்து என்று மூவகையாக வகுக்கலாம் என பண்டைய அறிஞர்கள் கூறியுள்ளனர். அவர்கள் வடமோடி, தென்மோடி என அதனை வகைப்படுத்திக்காட்டினர்; அதன்சிறப்புகளையும் கூறினர்; தாளக்கட்டுகளையும், ஆட்டக்கோலங்களையும் விளக்கினர்.

வடமோடி, தென்மோடி தவிர்ந்த கூத்துகள்

ஆனால் அந்தப் பெரும் அறிஞர்கள் கூறிய இந்த வடமோடி, தென்மோடிக் கூத்துகளுக்கும் அப்பால், இன்னும் பல வகையான கூத்துகளும் மட்டக்களப்பில் இருந்திருக்கின்றன.

1. மகிடிக்கூத்து

மந்திர, தந்திர விளையாட்டுகளைக்கொண்ட இது ஒரு கேளிக்கை அரங்காகும். இந்தக் கூத்தினைச் சிறப்பாக ஆடியோர், மட்டக்களப்பின் பறையடிக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இன்னும் சிலர் ஆடியிருப்பினும், அச்சமூகத்தினிடையேதான் மகிடிக்கூத்துக்கான ஏட்டுப்பிரதி இருந்துள்ளது. அப்பிரதி அச்சமூகத்திற்கே உரிமையானது; அதனை வேறு யாரும் ஆடியிருக்கவில்லை. 

இவ்வாறே, சமூகத்தில் இடைநிலையில் வாழ்ந்த சமூகக்குழுக்களிடையே வித்தியாசம் வித்தியாசமான மகிடி ஆற்றுகைகள் இருந்தன. ஆனால் அவை தமக்கென எழுத்துப்பிரதிகள் இல்லாதவை. இம்மகிடிக் கூத்துகளிலே மட்டக்களப்புக்குரிய மந்திரச்சடங்குகளும், வழிபாட்டுமுறைகளும் இடம்பெறும். அத்தோடு அங்கு வாழ்ந்த வேடர், வந்து சேர்ந்த குறவர் போன்ற விளிம்புநிலை மக்களும், சாதாரண மக்களும் பாத்திரங்களாக இடம்பெறுவர். இந்தக்கூத்து அதிகாரத்தில் உள்ள சிலரை விமர்சனம் செய்வதால், இதனை ஓர் எதிர்ப்பரங்காகவும் சிலர் கட்டமைப்பர்.

2. வசந்தன் கூத்து

இது விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட கூத்தாகும். வேளாண்மை செய்தல், உப்பட்டி கட்டல், கதிரறுத்தல், கதிரடித்தல், வயலுழுதல் என விவசாயம்சார்ந்த விடயங்களை இது அதிகம் கூறும். சில வேடிக்கையான, பொழுதுபோக்கு இதிகாச, புராணப்பாத்திரங்களும் இதில் இடம்பெறும். இக்கூத்தை விவசாயச் சமூகத்தைச்சேர்ந்தோர் ஆடுவர். விளிம்புநிலை மக்களிடம் இக்கூத்தை ஆடும் மரபு இல்லை.

ஒரு சமூகத்தில், செல்வாக்குமிக்கோரின் கருத்தும் கலையுமே அந்தச் முழுச்சமூக மக்களின் கலையாகவும் கொள்ளப்படுவது வழமை. அது அதிகாரத்தின் பாற்பட்டது. இந்தவகையில் அதிகாரத்தின் மேல்நிலையில் இருந்த முக்குவர், வெள்ளாளர் மத்தியிலே இருந்த கூத்துகளே மட்டக்களப்பின் கூத்துகளாக, ஏனைய கூத்துகளையும் மிஞ்சி மேலெழுந்தன.

வடமோடி, தென்மோடிக் கூத்துகள்

நிலமானிய அமைப்பிலே சாதியும், மதமுமே பிரதான சக்திகளாக விளங்கின. கிராமங்கள் தன்னிறைவு பெற்றெனவாக இருந்தன. சாதி அமைப்பு முறைகளும், மரபு பேணப்படும் வழமைகளும் இவ்வமைப்பைக் கட்டிக்காத்தன. சாதி அமைப்பும் சமூகச் சமயமும் நிலைநிறுத்திய நிலமானியச் சமூக அமைப்பின் பின்னணியில் தோன்றிய இத்தகைய கலைவடிவங்கள் அச்சமூகத்தையே பிரதிபலிக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை.

ஆரம்பத்தில் கூத்துநூல்களை இயற்றிய கணபதி ஐயர், இணுவைச் சின்னத்தம்பி ஆகியோர் உயர் சாதியினராக, முறையே பிராமணராக, வேளாளராக இருந்தமை இங்கு மனங்கொள்ளத்தக்கது. நிலமானியச் சமூக அமைப்பில் தலைவர்களாகக் கருதப்பட்டோரும், அச்சமூக அமைப்பைப்பேணிய புராண, இதிகாசக் கதைகளின் தலைவர்களும், அவர்களின் வாழ்க்கையுமே கூத்துகளின் கருப்பொருட்கள் ஆகின.

சுடலைமாடன், மாரி அம்மன், பெரியதம்பிரான், பேச்சியம்மன் போன்ற சிறுதெய்வங்கள் பற்றிய தெய்வக்கதைகளே சமூகத்தில் தாழ்த்தப்பட்டவரிடம் இருந்தன. புராண, இதிகாசக் கதைகள் பெருமளவில் செல்வாக்குற்றபோது, இப்புராண, இதிகாசக் கடவுளர்கள் மெல்லமெல்ல சிறுதெய்வங்கள் பெற்ற இடத்தினைப் பெற்றன அல்லது அவற்றோடு இணைக்கப்பட்டன. இந்த வரலாற்று உண்மைகள் நிறுவப்பட்டும் உள்ளன. காத்தவராயன் கூத்து இதற்குச் சிறந்த உதாரணமாகும். மாரி அம்மனும், சிவனும் இணையும் கதையாக இது காணப்படுகிறது. இது இரண்டு பண்பாடுகளது இணைப்பின் குறியீடு ஆகும்.

மட்டக்களப்பு வடமோடி, தென்மோடிக் கூத்துகளில் சிறுதெய்வங்கள் முக்கியத்துவம் பெறவே இல்லை. கண்ணன், சிவன், முருகன் போன்ற பெருந்தெய்வங்களே முக்கியத்துவம் பெற்றன. அரசர்களும், தலைவர்களும் முக்கிய பாத்திரங்களாக வர, சாதாரண மக்கள் இக்கூத்துகளின் உபபாத்திரங்கள் ஆனார்கள். இந்தப் பெருந்தலைவர்களின் விசேட செய்திகளை அறிவிக்க வரும் ‘பறையன்’ பாத்திரமும், அவர்களுக்கு ஊழியம் செய்யவரும் ‘வண்ணான், குறவன், வேலையாள், வேடன்’ போன்ற பாத்திரங்களும், நகைச்சுவைப் பாத்திரங்களாகவே கூத்துகளில் சித்திரிக்கப்படுகின்றன. கள்ளைக் குடித்துவிட்டு ஏனையவருடன் உளறும் அறிவிலிகளாகவே இப்பாத்திரங்கள் சித்திரிக்கப்பட்டன. தாளம், பாடல், ஆடல் போன்றவற்றிலும்கூட இவ்வேறுபாடுகள் காணப்பட்டன. அரசன், மந்திரி, ராஜகுமாரர்களுக்கு அலங்காரமான தாளக்கட்டுகளும் பாடல்களும் இசைக்கப்பட, பறையறைவோனுக்கோ அலங்காரமற்ற வேறு தாளக்கட்டுகளும் பாடல்களும் இசைக்கப்படும். பறையறைவோன் ஆடும் தாளக்கட்டுக்கு உயர்நிலைப் பாத்திரங்கள் ஆடுவதில்லை. தாளத்திலும் சாதி வேறுபாடு, உயர்வு – தாழ்வு காணப்பட்டது. 

சுருங்கச்சொன்னால், மட்டக்களப்பில் வளர்ச்சிபெற்ற தென்மோடி, வடமோடி கூத்துகளின் உள்ளடக்கங்கள் நிலமானிய சமுதாயத்தை நியாயப்படுத்தின. கூத்துகளில் வரும் பெண், மரபுவழிப் பெண்ணாகவே சித்திரிக்கப்பட்டாள். கணவனுக்குக் கீழ்ப்படிந்தவளாக, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் குணம் கொண்டவளாக, அழுதுபுலம்புபவளாகவே சித்திரிக்கப்பட்டாள். இவ்விடத்திலே பேராசிரியர் ஆனால்கெட்டில் காவியம்பற்றிக் கூறிய கூற்று ஞாபகம் வருகிறது:

“காவியம் என்பது நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைப் பிரதிபலித்து, அவர்களைச் சிறப்பிக்கும் சாதனம் என்பதினால் அவ்வர்க்கத்தினர் மாத்திரம் அவற்றைக்கேட்டு இன்புற்றனர் என்பது தவறாகும். மாறாக, ஓய்வுநேரம் குறைந்த, தாழ்நிலையில் உள்ளவர்களுக்கும் காவியம்காட்டும் இன்ப உலகமானது ஒருவகையான பதில் வாழ்க்கையாக, உண்மையான வாழ்க்கைக்கு மாற்றீடாக அமைந்துவிடுகிறது. வறண்ட, துன்பம்மிகுந்த நிஜவாழ்க்கையில் இருந்து விட்டுவிடுதலையாகி, இன்பம் அனுபவிக்க காவியம் உதவுகிறது.”

காவியம் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட சமூகம் முழுவதற்கும் அமைந்த பொதுவடிவமாக மாறியதுபோல, கூத்தும் வெவ்வேறு சமூகநிலைகளிலும் உள்ள மக்கள் அனைவருக்குமான பொதுவடிவமாக மாறியது. சமூகத்தின் மேட்டுக்குடியினரையும், அவர்களின்கீழ் வாழ்ந்த ஏழை மக்களையும் கூத்து ஒருங்குசேர்த்து மகிழ்வித்தது. ஆனால், மக்கள்மனதில், கலைமூலம் மிக நாசூக்காக, பிற்போக்கான கருத்துகள் விதைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மக்கள் அனைவருக்கும் பொதுவான கலையாக அமைந்த கூத்து, கிராமிய மக்களின் முழு அம்சங்களையும் பிரதிபலித்தது. அவர்கள் மத்தியில் உள்ள நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், சடங்குகள் யாவற்றையும் அது பிரதிபலித்தது. 

ஆரம்பத்தில், கூத்துகளை சமூக அமைப்பில் உயர்சாதியினரே ஆடினர் என்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. தாழ்ந்தநிலையில் வைத்துக் கணிக்கப்பட்ட சமூக வகுப்பினர் ஆரம்பத்தில் தென்மோடி, வடமோடிக் கூத்துகளை ஆடியமைக்குச் சான்றுகள் இல்லை. கிராமங்களில் வண்ணார், அம்பட்டர் போன்ற குடிமக்களுக்கு திட்டவட்டமான ஊழியங்கள் வரையறுக்கப்பட்டன. கூத்து ஆடுதலைப் பறையறைவோர் பறையறிந்து தெரிவித்தனர். கூத்துக்களரியில் அலங்காரம்செய்ய வண்ணச்சேலை கொடுப்பது தொடக்கம், நடிகர் வரவின்போது திரைபிடிப்பது வரை, சேவைசம்பந்தமான ஊழியங்களை வண்ணார் செய்தனர். கோவில் சடங்குபோல, இதுவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலப்போக்கில் இக்கூத்துகளைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் ஆட ஆரம்பித்தனர்.

சமூக அமைப்பில் தாழ்த்தப்பட்டோரால், ஒன்றோ இரண்டோ, அதுவும் ஒரேவிதமான கூத்துகள்தான் மீண்டும் மீண்டும் ஆடப்பட்டிருந்தன. இன்றைய சமூக அமைப்பில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கூத்தாடக்கூடாது என்ற கட்டிறக்கம் குறைந்துவிட்டது. சாதி அமைப்பின் இறுக்கமின்மையே இதற்குக் காரணமாகும். இன்று சகல சமூகங்களிலும் கூத்தாடப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்துவந்த மிகத்திறமையான அண்ணாவிமார், தம்மிலும் ‘உயர்வான’ வகுப்பினருக்குக் கூத்துப்பழக்கும் முறையும் பின்னாளில் மட்டக்களப்பில் ஏற்பட்டது என்றும் தகவல்கள் கிடைக்கின்றன. இவ்வண்ணம், மட்டக்களப்புக் கூத்துகள் இன்று மட்டக்களப்புச் சமூகம் முழுமைக்கும் பொதுவான ஒரு கலைவடிவம் ஆகிவிட்டது. எனினும், மகுடிக்கூத்து, வசந்தன்கூத்து, பறைமேளக்கூத்து ஆகியன குறிப்பிட்ட சமூகநிலையில் உள்ளவர்களால் மாத்திரமே ஆடப்படுகின்றன.

சகல சாதிக்குமான பொதுநாடக வடிவமாகக் கூத்து மாறினாலும், சாதிகலந்து கூத்தாடும் மரபு இன்னும் மட்டக்களப்பில் ஏற்படவே இல்லை. இது சமூக அமைப்பின் தாக்கத்தையே காட்டுகின்றது. எனினும் பாடசாலைகள், மன்றங்கள் போன்ற பொது ஸ்தாபனங்கள் (ஆங்கில ஆட்சியின் வருகையினால் ஏற்பட்டவை) நடத்துகின்ற கூத்துகளில், இம்முறையானது மீறப்பட்டு, சகலசாதியினரும் கலந்து கூத்தாடும்முறை தோன்றியுள்ளது. சமூக, பொருளாதாரச்சூழல் மட்டக்களப்புக் கூத்தின் வன்மைப்பாட்டினைத் தீர்மானித்து வந்துள்ளது. ஆனால் அச்சூழல் இப்போது மாறிவருகிறது.

கூத்தின் தன்மையும் அதன் நிலைபேறும்

புதிய பண்பாட்டின் வருகை, இச்சூழலில் மாற்றத்தைத் துரிதப்படுத்தியுள்ளது. இம்மாற்றத்தினால் கூத்துக்கலை நலிவடையும்நிலையில் இருப்பினும், பண்பாட்டு உணர்வு காரணமாக இன்றும் மட்டக்களப்பில் புதுவருட நாட்களிலும், கோயில் விழாக்களிலும், கலை விழாக்களிலும் கூத்துகள் அரங்கேறுகின்றன. தமிழர்களின் பாரம்பரியக்கலையாக அவை இருப்பதனாலேயே பல்கலைக்கழக அறிஞர்களும், கலைஞர்களும் அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதற்கான ஓர் அரசியல் தேவையும் இருந்துள்ளது. சமுதாய மாற்றத்திற்காகவும் பலர் கூத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் கூத்தின் அமைப்பு முறையே மாறுபட்டு வந்திருப்பதை அண்மைக்கால வரலாறுகள் கூறுகின்றன.

இவ்வளவு சமூகச்சிக்கல்களுக்கு மத்தியிலும் கூத்து ஏன் ஒரு வலிமையான கலைவடிவமாக ஆனது? சாதியைப் பேணி, அதனைத் தனது ஆற்றுகையிலும் பாடல்களிலும் வலியுறுத்திய கூத்து, பெண்ணடிமை பேசி அவர்களைப் பேதைகளாகக் கட்டமைத்த கூத்து, பிற்போக்குப் புராண, இதிகாசக் கதைகளையே தொடர்ந்து பேசிய பகுத்தறிவுக்கு முரணான பழங்கதைகளைக்கூறிய கூத்து, ஏன் இன்றும் சில கிராமங்களிலேனும் உயிர்வாழ்கிறது? அந்த வலிமையை அது எங்கிருந்து பெற்றிருக்கக்கூடும்? ஆகிய வினாக்கள் முக்கியமானவையாகும். இவற்றிற்கான விடைகளை அடுத்த கட்டுரையில் அலசுவோம்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

சின்னையா மௌனகுரு

சின்னையா மௌனகுரு அவர்கள் இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த பேராசிரியர்; அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குநர், நடிகர், கூத்துக் கலைஞர் என்று பல தளங்களில் இன்றும் இயங்கிவருபவர்.ஈழத்து அரங்கத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிலரில் மௌனகுரு குறிப்பிடத்தக்கவர். ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய புகழ்பெற்ற கூத்து நாடகங்கள் மௌனகுருவுக்கு தனியான அடையாளத்தை வழங்கின.

இவர், 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் – 1984, சடங்கில் இருந்து நாடகம் வரை – 1985, மௌனகுருவின் மூன்று நாடகங்கள் – 1985, தப்பி வந்த தாடி ஆடு – 1987, பழையதும் புதியதும் நாடகம் அரங்கியல் – 1992, சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும் – 1992, சங்காரம் – ஆற்றுகையும் தாக்கமும் (நாடகம்) – 1993, ஈழத்து தமிழ் நாடக அரங்கு – 1993, கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் – நீலாவணன் – 1994, கலை இலக்கிய கட்டுரைகள் – 1997, சக்தி பிறக்குது – நாடகம் – 1997, பேராசிரியர் எதிர்வீர சரத்சந்திராவும் ஈழத்து நாடக மரபும் – 1997, ஈழத்து நாடக அரங்கு – 2 ஆம் திருத்திய பதிப்பு – 2004, தமிழ்க் கூத்துக்கலை – வடமோடி ஆட்டப் பயிற்சிக்கான கைந்நூல் – 2010, கூத்து யாத்திரை – 2021, கூத்தே உன் பன்மை அழகு – 2021 போன்ற பலநூல்களை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்