யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால நூலகங்கள் பற்றிய இக்கட்டுரைத் தொடரில் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தின் வரலாற்றைப் பதிவுசெய்யும் வேளை ‘01.08.1934 முதல் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியிலுள்ள ஒரு சிறிய வாடகை வீட்டில் படிப்பகமும் நூலகமும் செயற்படத் தொடங்கின’ என்று அறிந்துகொண்டோம். ஆயின், இதுவே யாழ்ப்பாணத்தின் முதலாவது நூலகம் அல்லது முதலாவது பொதுசன நூலகம் என்ற பிம்பம் நீண்டகாலமாக வளர்த்தெடுக்கப்பட்டு வந்துள்ளது. இது தவறானதாகும். யாழ்ப்பாணப் பொது நூலகம் வேரூன்றிய காலத்திலும் அதற்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் நூலகப் பாரம்பரியமொன்று அறிஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு வந்துள்ளதை அறியமுடிகின்றது. அமரர் க.மு. செல்லப்பாவின் தனிப்பட்ட சேகரிப்புகள் எவ்வாறு கூட்டுச் சேகரமாகி யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் உருவாக்கத்திற்கு வழிகோலியிருந்தனவோ, அவ்வாறே யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேலும் சில நூலகங்கள் தனியாரால் அல்லது ஒரு சிறு குழுவினரால் தொடங்கப்பட்டு, பின்னாளில் அது ஒரு பாரிய நூலகமாகப் பரிமாணம் பெற்று, வாழ்ந்ததும், காலக்கிரமத்தில் பெயர்மாற்றம் பெற்று இன்றளவில் வாழ்வதும் கண்கூடு. இந்த வகையில் ‘விக்ரோரியா படிப்பகம்’ பற்றிய அறிமுகத்துடன் இன்றைய தொடருக்குள் நுழைவோம்.
விக்ரோரியா படிப்பகம் (The Victoria Reading Hall)
1887 ஜுன் 28 அன்று இலங்கை முழுவதும் விக்ரோரியா மகாராணியின் முடிசூட்டு விழாவின் (20.06.1837) ஐம்பதாவது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது.
பொன் விழா நினைவாக, 1888 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி விக்ரோரியா படிப்பகம் (The Victoria Reading Hall) யாழ்ப்பாணம், வண்ணார் பண்ணையில் தாபிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்து வழக்கறிஞராகவிருந்த அமரர் சின்னத்தம்பி நாகலிங்கம் அவர்களின் அயராத உழைப்பின் பெறுபேறாக உருவாக்கப்பட்ட இந்தப் படிப்பகத்தில் நூல்கள், பத்திரிகைகள் என்பன வாசிப்பதற்கான வசதியுடன், இயங்கிவந்துள்ளது. அவ்வப்போது அறிஞர் பெருமக்களின் விரிவுரைகளும் இடம்பெற்றிருந்தன. அவ்வகையில் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வாக 29.06.1888 அன்று திரு. நெவின்ஸ் செல்லத்துரைப்பிள்ளை அவர்களது ‘The Third National Congress’ என்ற தலைப்பிலான விரிவுரை இடம்பெற்றிருந்தது. 30.03.1892 அன்று மீண்டும் திரு. நெவின்ஸ் செல்லத்துரைப்பிள்ளை அவர்களின் விரிவுரையொன்று ‘Decision of Character’ என்ற தலைப்பில் விக்ரோரியா படிப்பகத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது. நெவின்ஸ் செல்லத்துரைப்பிள்ளை அக்கால கட்டத்தில் இந்து உயர் பாடசாலையின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகவல்கள் John H. Martyn’s Notes on Jaffna: Chronological, Historical, Biographical என்ற நூலில் ஆங்காங்கே காணப்படுகின்றன.

விக்ரோரியா படிப்பகத்தை உருவாக்கிய சமகாலத்திலேயே திரு சின்னத்தம்பி நாகலிங்கம் அவர்களிடம் புதியதொரு பொறுப்பும் சுமத்தப்பட்டிருந்தது. 1887 இல் வில்லியம் நெவின்ஸ் முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்டிருந்த ‘சுதேசிய பட்டண உயர்நிலைப் பள்ளி (Native Town High School)’ என்ற தனியார் பாடசாலை நிதிப் பற்றாக்குறையினால் இயங்கமுடியாத நிலையில் 1889 இல் அட்வகேட் நாகலிங்கத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது பாடசாலை ‘நாகலிங்கம் பட்டணப் பாடசாலை’ என வழங்கப்பட்டிருந்தது. The Victoria Reading Hall, Native Town High School ஆகிய இவ்விரு அறிவுசார் நிறுவனங்களையும் பின்னாளில் 1890 இல் ‘யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை’யினரிடம் திரு. நாகலிங்கம் கையளித்திருந்தார்.
யாழ்ப்பாணம் சைவ சமய பரிபாலன சபை இரண்டாண்டுகளுக்கு முன்னரே 1888 இல் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அப்பாடசாலை The Hindu High School என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்நிறுவனங்களைப் பொறுப்பேற்ற யாழ்ப்பாண சைவ சமய பரிபாலன சபையே பின்னாளில் இதனை சிறப்புற முகாமை செய்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியாக வளர்த்தெடுத்தது. அக்கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்தில் “In Memory of the Late Mr. Sinnathamby Nagalingam, Advocate, The Founder and The First Manager of this Institution” என்ற வாசகங்கள் பொறித்த நினைவுக் கல்வெட்டொன்றும் வைக்கப்பட்டது.

விக்ரோரியா படிப்பகத்தின் நூற்சேர்க்கைகள் பின்னாளில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் நூலகத்தின் ஆரம்பகாலச் சேர்க்கைகளாக உள்வாங்கப்பட்டன. இவை பாடசாலையின் வரையறுக்கப்பட்ட இடவசதியைக் கருத்திற்கொண்டு ஒரு வகுப்பறையிலேயே நீண்ட காலமாக வைத்துப் பராமரிக்கப்பட்டிருந்தது.
விக்ரோரியா படிப்பகத்திற்கும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிக்கும் இடையேயான தொடர்புக்கு அதன் தாபகர் திரு. சின்னத்தம்பி நாகலிங்கமே காரணகர்த்தாவாவார். இவர் பிரவுன் சின்னத்தம்பி என்று ஆங்கிலேயராலும் சக சுதேசிகளாலும் அழைக்கப்பட்ட அமரர் அம்பிகைபாகர் சின்னத்தம்பி (Brown Proctor) அவர்களின் மூன்றாவது மகனாவார். ‘யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நூற்றாண்டு (1890-1990) மலர்’ என்ற சிறப்பு மலரில் திரு. சமாதிலிங்கம் சத்தியசீலன் அவர்களினால் எழுதப்பட்ட யாழ். இந்துக்கல்லூரியின் வரலாறு பற்றிய கட்டுரையில் திரு. சின்னத்தம்பி நாகலிங்கம் பற்றிய விரிவான குறிப்புகள் காணப்படுகின்றன.
யாழ்ப்பாண இந்துக் கல்லூரி நூலகம்
“யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூலக வளர்ச்சிப்போக்கை அதன் ஆரம்பகாலம் தொட்டு அட்டவணைப்படுத்துவதற்கு பழைய ஆவணங்கள் கிடைக்கப்பெறாமை சில கஷ்டங்களை ஏற்படுத்துகின்றது. அதிலும் நூலகம் எப்பொழுது உருவாகியது, அது கொண்டிருந்த நூல்கள் எத்தகையன, நூலகர் இருந்தாரா, நூலகம் எப்படிச் செயற்பட்டது, எவ்வளவு நூல்கள் இருந்தன, மாணவர்களின் வாசிப்புப் பாவனை எப்படி இருந்தது? போன்ற விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை” என்கிறார் அக்கல்லூரியின் நூலகராகப் பணியாற்றிய பொ. இராசரத்தினம் அவர்கள். ‘யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நூற்றாண்டு (1890-1990) மலர்’ என்ற ஆவணத்தில் இவர் எழுதிய கட்டுரையொன்று ‘யாழ். இந்துக் கல்லூரி நூலகம் தோற்றமும்-வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. அக்கட்டுரை எமக்குப் பல வரலாற்று விடயங்களை தெளிவுபடுத்துகின்றன.
கிடைக்கப்பெற்ற இந்து சாதனம் பத்திரிகைத் தகவல்களின் (18.09.1912) அடிப்படையில் 1910 ஆம் ஆண்டு சென்னையில் இயங்கிய யாழ்ப்பாண மாணவர் சங்கம், மொத்தம் 200 நூல்களை இப்பாடசாலை நூலகத்திற்கு சேர்த்து அனுப்பியுள்ளது. பயிற்றப்பட்ட நூலகர்கள் அற்ற நிலையில் ஆரம்பகால நூலகர்களாக ஆசிரியர்களே இப்பாடசாலையில் பணியாற்றியுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த இக்கல்லூரி அதிபர் ஜி. சிவராவ் (1910-1913) இளைப்பாறி தாயகம் திரும்பிய கையோடு பெறுமதிமிக்க 100 நூல்களை இந்நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இவரைத் தொடர்ந்து அதிபராகப் பணியாற்றிய பீ. சஞ்சீவராவ் (1913-1914) அவர்களும் ஓய்வுபெற்று நாடுதிரும்பும் வேளை தனது சேகரிப்பில் இருந்த பெறுமதிமிக்க நூற்றொகுதியை பாடசாலை நூலகத்திற்கென வழங்கிச் சென்றுள்ளார்.
1926-27 காலகட்டத்தில் அதிபராகப் பணியாற்றிய W.A. Troupe அவர்கள் தனது பணிக் காலத்திலே, அதுவரை சிறு அறையொன்றில் இயங்கிவந்த பாடசாலை நூலகத்தை அந்நாளில் பிரார்த்தனைக் கூடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மண்டபத்திற்கு இடம்மாற்றியிருந்தார். விரிவான இடவசதி இருந்தபோதிலும் நூலகத்துக்குரிய தனிப்பட்ட வசதிகள் இருக்கவில்லை. அவ்வேளையில் அம்மண்டபம் ஒரு கேட்போர் கூடமாகவும் பிரார்த்தனை மண்டபமாகவும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தமை கவனத்திற்குரியது. இம்மண்டபத்திலேயே சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி போன்றோரது வரலாற்று முக்கியத்துவமான சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன.
திரு. நெவின்ஸ் செல்லத்துரை அவர்கள் அதிபராக இருந்த 1892-1909, 1914-1926 ஆகிய இரு காலகட்டங்களிலும் தென்னிந்தியாவிலிருந்து பல நூல்களைத் தருவித்து நூலகத்தை விரிவாக்கியிருந்தார்.
திரு.என். குமாரசுவாமி அவர்கள் அதிபராகப் பணியாற்றிய (1933-1952) காலகட்டத்தில், 1950 ஆம் ஆண்டில், அதுவரை பிரார்த்தனை மண்டபத்தில் இயங்கிவந்த நூலகத்தை இப்போதுள்ள (இது 1990 இல் எழுதப்பட்ட குறிப்பு) இடத்திற்கு மாற்றியமைத்தார். இதுவே யாழ்ப்பாண இந்துக் கல்லூரி வரலாற்றில் முறையானதொரு நூலக அபிவிருத்திக்கு நுழைவாயிலாக அமைந்தது. ஆசிரியராகப் பணியாற்றிய ஏ.கே. பொன்னம்பலம் அவர்களை முழுநேர நூலகராக நியமித்ததுமல்லாமல் அவருக்கென்றொரு உதவியாளரையும் நியமித்து நூலகத்தை சிறப்பாக இயக்குவிக்கும் வாய்ப்பினை அளித்தார். ஏ.கே. பொன்னம்பலம் அவர்கள் இளைப்பாறிய பின்னரும் அங்கு நூலகராகத் தொடர்ந்து பணியாற்றினார். சிரேஷ்ட தராதரப் பத்திர வகுப்பு மாணவர்களும், உயர்வகுப்பு மாணவர்களுமே அக்காலத்தில் நூலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அக்காலத்தில் தான் அங்கு உசாத்துணைப் பகுதியும், நூல் இரவல் வழங்கும் பகுதியும் வளர்த்தெடுக்கப்பட்டன.
1963 இல் இலங்கைக்கான முன்னாள் இந்தியப் பிரதித் தூதுவர் ஆர்.எஸ். மணி அவர்கள் இந் நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
திரு.என். சபாரத்தினம் அவர்கள் அதிபராகவிருந்த 1964-1971 காலகட்டத்தில் கல்வி நிறுவன நூலகரின் பணியின் முக்கியத்துவம் மேலும் உணரப்பட்டது எனலாம். அவரது காலகட்டத்தில் நூலகருக்கான இரண்டு நாட் பயிற்சியினை பிரித்தானியக் கழகத்தினரின் (British Council) உதவியுடன் பெற்றுத்தந்திருந்தார். 1970 ஆம் ஆண்டில் நூலகத்தின் நூற்சேர்க்கை 5543 ஆகவிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1973 இல் அவை 7902 ஆக உயர்ந்தன. இத்தொகை 1994 இல் 13,293 ஆக உயர்ந்திருந்தது.
யுத்த காலத்தில் குண்டுவீச்சுகளுக்கு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியும் இலக்கான வேளைகளில் சுமார் 3000 நூல்கள் அழிந்துபோனமை கவலைக்குரிய விடயமாகும்.
திரு.இ. சபாலிங்கம் அவர்கள் கல்லூரி அதிபராகவிருந்த 1971-1975 காலகட்டத்தில் 1972 ஆம் ஆண்டில் ஒரு நிரந்தர நூலகர் பதவியை இக்கல்லூரிக்குப் பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிரந்தர நூலகரைக் கொண்ட பாடசாலை நூலகங்கள் இக்காலகட்டத்தில் மிகச் சொற்பமாகவே காணப்பட்டிருந்தது.
திரு.அ. பஞ்சலிங்கம் அவர்கள் 1991 இல் அதிபராகப் பொறுப்பெற்ற பின்னர் நூலகப் புனரமைப்பில் அதிக அக்கறை செலுத்தினார் என்று நூலகர் பொ. இராசரத்தினம் அவர்கள் தனது கட்டுரையில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். “1992 ஆம் ஆண்டு வரை நூலகம் பாடசாலையின் மத்தியில் இருந்தாலும் நுழைவாயிலைப் பல வகுப்பறைகளினூடாகக் கடந்து தான் செல்லவேண்டியிருந்தது. அதனாற்றான் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதனால் நூலகத்தின் கிழக்குப் பக்கமாக ஒரு வாயில் அமைத்து மேல் மாடிக்கு ஏறி இறங்கப் பலகையினாலான படிகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டது.” என்று அவர் குறிப்பிடுகிறார். திரு.அ. பஞ்சலிங்கம் அவர்களது காலத்திலேயே கீழ்வகுப்பு மாணவர்களுக்கென ‘இளநிலை நூலகம்’ ஒன்றினை (Junior Library) அமைத்துக் கொடுத்திருந்தார்.
தொண்ணூறுகளின் பின்னரான யாழ். இந்துக் கல்லூரியின் வளர்ச்சி இக்கட்டுரையில் இடம்பெறவில்லை. கடந்த முப்பதாண்டு வளர்ச்சி பற்றிய தகவல்களை இக்கல்லூரியின் நூலகரிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அது கிடைக்கப்பெறின் மற்றொரு இயலில் இதனைத் தொடரலாம்.
தொடரும்.