அறிமுகம்
இத்தொடரின் முந்தைய அத்தியாயத்தில், சமூக அமைப்பின் மேற்கட்டுமானம் மற்றும் கீழ்க்கட்டுமானம் பற்றிய சிறிய அறிமுகம் வழங்கப்பட்டிருந்தது. அதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள, கூத்தும் கூத்தின் கருத்தியலும், அவை நிலைத்திருப்பதற்கான காரணங்களும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இக்கட்டுரை அவற்றை விவரமாக வழங்குகிறது. முதலில், இரண்டு விடயங்களைக் குறிப்பிடப்பட வேண்டும்: ஒன்று கருத்தியல், இன்னொன்று அக்கருத்தியலை உருவாக்கும் சமூக அமைப்பு. கருத்தியல் என்பது சிந்தனை—அகம் சார்ந்தது. சமூக அமைப்பு என்பது பௌதிகம்—புறம் சார்ந்தது. இந்தப் புறமே அகத்தைத் தீர்மானிக்கிறது.
கருத்தியல்
“சமூகத்தின் மேலாதிக்கம் பெற்ற குழுக்கள் தம் மேலாதிக்கத்தை நியாயப்படுத்தவும், தம் நலன்களைப் பேணவும் சில கருத்துகளையும் நம்பிக்கைகளையும் உருவாக்கிக் கொள்கின்றன.” என்பதையே சமூகவியலாளர்கள் கருத்தியல் எனக் கூறுவர்; இதனை ஆங்கிலத்தில் Ideology என்பர்.
கருத்தியல் அதிகாரத்துடன் தொடர்புடையதாகும். அதிகாரம் அற்ற குழுக்களை வசப்படுத்தி வைக்கவும், சமூக சமத்துவமின்மையை நியாயப்படுத்தவும் அது பயன்படுகிறது. இக்கருத்தியல் பல நிறுவனங்கள் மூலம் மக்கள் மனதில் பதிக்கப்படுகிறது. அது பனிமூட்டம் போல மக்களின் மனதில் பதிந்து, அவர்களை அறியாமலேயே ஒடுக்குதலுக்கான சம்மதத்தையும் உருவாக்குகிறது. மேலும், ஒடுக்குதலின் வேதனையையும் துன்பத்தையும் தணித்து, ஆறுதலையும் தருகிறது.
கருத்தியல் என்ற சொல்லை அறிவியல் துறைக்கு முதன்முதலாகப் பயன்படுத்தியவர் டிறசி எனும் பிரான்ஸ் தேச அறிஞர். கருத்தியலை அவர் ‘கருத்துகளின் விஞ்ஞானம்’ என்று வரையறுத்தார். பின்னாளில், கருத்தியல் என்பது விஞ்ஞானம் அல்ல, அது மனிதர்கள் கட்டமைத்துக்கொள்ளும் பொய் உணர்வு என சிலர் தெரிவித்தனர். கார்ல் மார்க்சும் எங்கல்சும், கருத்தியல் என்பது வெறும் பொய் உணர்வு மாத்திரமல்ல, மேலாதிக்கம் பெற்ற குழுக்களின் போலி நியாயம் மற்றும் வாதாட்டம் எனக் கூறினர். பிற்கால மாக்சியர், கருத்தியலை ‘கருத்தியல் பற்றிய விமர்சன நோக்கு’ என்றனர். கருத்தியல் குறித்து விரிவாக ஆராய்ந்த அன்டோனியோ கிராம்சி, அதன் வலிமையையும், பண்பாட்டின் தாக்கத்தையும் வலியுறுத்தினார். மேலும், சமூகத்தின் அடிக்கட்டுமானத்துடனும் கருத்தியல் தொடர்புடையது என்று கண்டறிந்தார். கருத்தியலைப் புரிந்துகொண்டால்தான் கூத்துகளின் கருத்தியலையும், அது எந்தக் குழுவுக்குச் சாதகமாகச் செயற்படுகிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

கூத்தின் கருத்தியல் யாது, அது எவ்வாறு ஆளும் குழுவுக்குச் சாதகமாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துன்பம் போக்கும் போதைமருந்தாகவும் பயன்படுகிறது, எந்தக்குழு தம் கருத்தியலைப் பரப்ப முன்னிற்கிறது என்பவற்றை ஆராய்வதும் கூத்தாய்வின் ஒரு பகுதியே.
சமூகம் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்துள்ளது. முற்காலத்தில் அரசர், சமயத் தலைவர்கள், வணிகர், கைவினையாளர், உழைப்போர், படைவீரர் எனப் பல சமூகக் குழுக்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டிருந்தது. தற்காலத்தில் பெரு வணிகர், சிறு வணிகர், புத்திஜீவிகள், உழைப்பாளர், மாணவர், விளிம்பு நிலைமாந்தர் எனச் சில சமூகக் குழுக்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது. வரலாற்றுப் போக்கில் இக்குழுக்களின் பெயர்களும் தன்மைகளும் மாறிக்கொண்டே செல்லும். தமிழ்ச் சமூகத்திலும் இது நடந்தது. சமூகத்தில் பல குழுக்கள் இருப்பினும், சில குழுக்கள் மேலாதிக்கம் பெற்றனவாக இருக்கும் என்பதை நாம் தமிழர் வரலாற்றில் காணலாம்.
சமூகத்தில் சில குழுக்கள் ஆழும் குழுக்களாகவும், சில குழுக்கள் ஆளப்படும் குழுக்களாகவும் இருக்கும். ஆளப்படும் குழுக்களில் சாதாரண மக்கள் அடங்குவர். உதாரணமாக, சோழர் காலத்தில் ஆளும் குழுக்களில் நிலவுடமையாளர்கள், அரசர்கள், பிராமணர்கள் ஆகியோர் இடம்பெற்றனர். இவர்களின் கருத்துகளான பெருந்தெய்வ வணக்கம், பேரிலக்கியங்கள், ‘அரசன் தெய்வத்தின் பிரதிநிதி’ என்பன கருத்தியலாகக் கட்டமைக்கப்பட்டன. அரசன் கட்டிய பெருங்கட்டடங்கள் அவனை மேலும் தெய்வ நிலைக்கு உயர்த்தின. இந்த மேலாதிக்கக் குழுவின் பண்பாடே முழுத்தமிழரின் பண்பாடாகக் கட்டமைக்கப்பட்டது.
மேலாதிக்கம் பெற்ற குழு தனது அரச அமைப்பினாலும், உருவாக்கிய சட்டங்களாலும், படையினாலும், தாம் வளர்த்த மதக் கருத்துகளாலும் பிறகுழுக்கள் மீது அதிகாரம் செலுத்தியது. படைகள் பௌதீகமாகச் செய்யும் இந்த அதிகாரச் செயல்களை, கருத்தியல் உளரீதியாகச் செயற்படுத்துகிறது. அரசு உருவாக்கும் சட்டங்கள், அதன் படைகள், அரசு சார்ந்த மதம் என்பனவான அதிகாரத்தை மக்கள்மீது சுமத்தும் பௌதீக அடக்குமுறைகளுக்கு மாற்றாக, அபௌதீகமான கருத்தியல் தனது வேலையைச் செய்கிறது. படை மற்றும் சட்டங்களை விட, இக்கருத்தியல் சக்தி வாய்ந்தது, ஏனெனில் அது ஊனோடும் உதிரத்தோடும் கலந்து நிற்கிறது.
கருத்தியலைப் புரிந்துகொள்ளல்
கருத்தியலைப் புரிந்து கொள்ள, அது எந்தக் குழுவுக்குச் சாதகமாக அமைந்துள்ளது என்பதை அறிவதும், அக்கருத்தியலை உருவாக்கும் சமூகத்தைப் புரிந்துகொள்வதும் மிக அவசியம். கலைக்கும் சமூகத்திற்குமான தொடர்பு என்ன, உறவு என்ன என்பது ஒரு பெரிய வினா. கலை பற்றிப் பேசுவோரில் மிக அதிகமானோர், கலையின் நுட்பங்கள், ஆக்கமுறைமை, அதன் அழகு போன்றவற்றைப் பற்றியே அதிகம் பேசுவர். ஆனால் இந்தக் கலைக்கும், அதனை உருவாக்கும் சமூகத்திற்குமான தொடர்பை, உறவைப் பேசுவோர் குறைவு. அத்தகைய ஆய்வுகளும் தமிழில் குறைவாகவே உள்ளன. ஓவியத்தின் சமூகவியல், சிற்பத்தின் சமூகவியல், கட்டிடத்தின் சமூகவியல், இசையின் சமூகவியல், நடனத்தின் சமூகவியல், நாடகத்தின் சமூகவியல் போன்ற நூல்கள் தமிழில் உள்ளனவா?
அண்மையில் நான் ஒரு பெரும் சங்கீதவித்துவானைச் சந்தித்தேன். அவர் கர்னாடக இசையில் பாடுவதில் மகாவிண்ணன். அவர் ஒரு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமாவார். அவரிடம் நான், “உங்கள் துறையில் நீங்கள் ஆராய்ந்து கண்டு பிடித்தவை என்ன?” என்று கேட்டேன். அவர் கூறிய பதில் என்னை வியப்பிலாழ்த்தியது: “கலைஞனாக இருந்தால் மட்டுமே போதும், ஆராய்ச்சி தேவையில்லை.”
அவர் சொன்னதில் ஒரு பக்கம் உண்மையுண்டு. கலைஞனாக இருப்பது என்பது முக்கியம்தான். ஆனால் அவர் தன் கலையை சமூகவியல், வரலாறு, கருத்தியல் நோக்கில் ஆராய்ந்தால், அதனை அவர் விமர்சன ரீதியில் அணுகுவார் அல்லவா? அக்கலையின் குறைநிறைகளைக் காண்பார், அல்லவா? மேலும் புதியவை படைக்க முனைவார், அல்லவா? இல்லையெனில், படித்ததைத்தானே மீளமீளச் செய்து கொண்டிருப்பார். மீளச்செய்தல், பிரதி பண்ணுதல் என்பன கலை ஆகாது. கலை என்பது படைப்புச் சார்ந்தது, அல்லவா? படைப்பின் சமூகவியல் தெரிந்தால், அவர் அது குறித்து ஒரு நூலும் எழுதுவார், அல்லவா? அவரது துறை பற்றி அவருக்குப் புதிய வெளிச்சங்கள் கிடைக்கும், அல்லவா? பல்கலைக்கழக மாணவர்கள் அவரிடம் பாட்டு மாத்திரம் கற்கவில்லையே, பல்கலைக்கழகக் கல்வியையும் ஆராய்ச்சித் திறனையும் அல்லவா கற்கிறார்கள்?
சமூகத்தோடு கலையை இணைத்து ஆய்வு நூல் எழுதுவோர்க்கு, கலை மாத்திரம் தெரிந்திருந்தால் போதாது. சமூக அமைப்புப் பற்றிய அறிவும் இருக்க வேண்டும். நாம் இங்கு, சமூக அமைப்பு என்றால் என்ன என்பதனை அறிவோம்.
சமூக அமைப்பு
கலையின் உருவாக்கத்திலும் அதன் கருத்தையும் வடிவையும் நிர்ணயிப்பதிலும் சமூக அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் சமூக அமைப்பு காலம்தோறும் மாறுகிறது. அதற்கான காரணங்களுக்குள் புகுவதற்கான சமயம் இதுவல்ல. ஆனால் அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டுமானம் என்ற வகையில் சமூகத்தைப் புரிந்து கொள்ளல், சமூக அமைப்பிற்கும் கலைக்குமான உறவைப் புரிந்து கொள்ள உதவும்.
இந்த அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டுமானத்தை முதலில் புரிந்துகொள்வோம். ஒரு கட்டடத்தை எடுத்துகொள்வோம். அடிக்கட்டுமானம் அதன் அடித்தளமாகும். மேற்கட்டுமானம் என்பது அந்த அடித்தளத்தின் மேல் எழுப்பப்படும் கட்டடம் ஆகும். மேல் எழுப்பப்படும் கட்டிடம் சிறிய மாற்றங்களைப் பெறலாம், ஆனால் அது அடித்தளத்தை மீறிப் போகமுடியாது.
சமூகத்தின் அடிக்கட்டுமானம் என்றால் என்ன?
பிரதானமாக ஒரு சமூகத்தை இயக்குவது அக்காலத்தில் நிலவும் பொருளியலே. அக்காலப் பொருளியல் என்ன என்பதைக் கொண்டு அச்சமூகத்தை விளக்கிவிடலாம். இதனை வைத்தே அடிக்கட்டுமானம் நிர்ணயிக்கப்படும். உற்பத்தி, அந்த உற்பத்திக்கும் அடையப்படுவோருக்குமான உறவு, அந்த உற்பத்தியில் பாவிக்கப்படும் கருவிகள் என்பனவே அடிக்கட்டுமானம் ஆகும். இவைதாம் ஒரு சமூகத்தின் பிரதான பொருளியலை வரையறுக்கும். இந்தப் பொருளியலை அடிப்படையாகவைத்து சமூக அமைப்புப் பெயரிடப்படும். இதன் படி:
- புராதன பொதுவுடமை அமைப்பு
- ஆண்டான் – அடிமை அமைப்பு
- நிலமானிய அமைப்பு
- முதலாளித்துவ அமைப்பு
என பல சமூக அமைப்புகளை மனிதகுலம் கண்டுள்ளது என்பர் சமூக விஞ்ஞானிகள்.
வேட்டையாடி மந்தை மேய்த்த காலத்தை புராதன அமைப்புக்காலம் என்பர். வணிகம் தோன்றி வியாபாரம் வளர்ந்து எஜமானரும் அடிமைகளும், அதனை நிர்வகிக்க அரசர்களும் படைகளும் எழுந்த காலத்தை ஆண்டான் – அடிமை பொருளாதார அமைப்புக்காலம் என்று கூறுவர். நிலம் பிரதானமாகி, அதனை மையமாகக் கொண்டு நீர்ப்பாசனம் உருவாகி, நெல் உற்பத்தி முக்கியமாகி, உழுவோர் உழுவித்து உண்போர் உருவான காலத்தை நிலப்பிரபுத்துவப் பொருளாதார அமைப்புக்காலம் என்று கூறுவர். வணிக வளர்ச்சியும், விஞ்ஞான வளர்ச்சியும், அதனால் தொழில் உற்பத்தியும் ஏற்பட்டு, முதலீடு பெருகி பணப் புழக்கம் வந்து, வங்கிகள் பெருகி, முதலாளி-தொழிலாளி என்ற வர்க்கப்பிரிவு தோன்றிய காலத்தை முதலாளித்துவப் பொருளாதார அமைப்புக்காலம் என்று கூறுவர்.
வேறுவேறு தொழில்கள் காணப்படினும், அவ்வக் காலத்திற்குரிய பிரதான உற்பத்தி முறைதான் அக்கால அடிக்கட்டுமானம் எனக் கருதப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டே, சமூக விஞ்ஞானிகள் சமூகத்தை புராதன பொதுவுடமை அமைப்பு, ஆண்டான் – அடிமை அமைப்பு, நிலப்பிரபுத்துவ அமைப்பு, முதலாளித்துவ அமைப்பு என வகைப்படுத்தினர்.
நாம் இப்போது வாழும் காலம், நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும் முதலாளித்துவ உற்பத்தி முறையும் கலந்த ஒரு அமைப்பைக் கொண்டுள்ளது. இக்கருத்து இந்தியா மற்றும் இலங்கைக்குப் பொருந்தும். மேற்கு நாடுகள் முழுக்க முழுக்க முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் வந்துவிட்டன. ஆனால் நாம் இன்னும் முற்றாக அந்நிலைக்கு வரவில்லை.
“ஆண்டான் – அடிமைமுறை மேற்கு நாடுகளுக்குப் பொருந்தும்; ஆசியாவுக்கு அது பொருந்தாது” என்ற வாதங்களும் உண்டு. முக்கியமாக “இந்தியா தனக்கென ஒரு ஆசிய உற்பத்திமுறை ஒன்றைக் கொண்டுள்ளது” என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அவ்வாறாக வாதிப்போரும் “சமூக அமைப்பின் அத்திவாரம், அவ்வக்காலப் பொருளியல் அமைப்பே” என்பதனை ஒப்புக்கொள்வர். மேற்சொன்ன கோட்பாட்டினடியாக கூத்தை விளங்கிக்கொள்ள முயல்வோம்.
அடிக்கட்டுமானமும் மேற்கட்டுமானமும்
அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் எனும் கருத்தியலையும் அதன் நுட்பமான உறவுகளையும் மேலும் புரிந்து கொள்வோம். அடிக்கட்டுமானம் பொருளியலாயின், மேற்கட்டுமானம் அரசு, சட்டம், மதம், இலக்கியம், கலைகள், பண்பாடு ஆகியன என சமூக விஞ்ஞானிகள் வரையறுத்தனர். இந்த அடிக்கட்டுமானத்தை மேற்கட்டுமானம் பிரதிபலிக்கும். அடிக்கட்டுமானம் நிலையானது அல்ல; அது மாறும் தன்மையுடையது. அப்படி மாறுகையில், மேற்கட்டுமானத்திலும் மாற்றங்கள் ஏற்படும் என்றனர். அடிக்கட்டுமானப் பிரதிபலிப்பு, மேற்கட்டுமானமான அரசு, சட்டம் போன்றவற்றில் நேரடியாகவும், கலை, இலக்கியம் போன்றவற்றில் மறைமுகமாகவும் வெளிப்படும் என்றனர். கலை, இலக்கியங்களில் மேற்கொள்ளப்படும் நுணுக்க ஆய்வுகள் இந்த அடிக்கட்டுமானங்களை காண உதவுவன.
அடிக்கட்டுமானம் மாறிய பின்னரும் சில மேற்கட்டுமானங்கள் மாறாதிருந்ததை சமூக விஞ்ஞானிகள் கண்டனர்; அது பண்பாட்டின் வலிமை என உணர்ந்தனர். அடிக்கட்டுமானம் பௌதிகமானது; மேற்கட்டுமானமான கலைகள், மனதையும் சிந்தனைகளையும் சார்ந்தவை. எனவே, அடிக்கட்டுமானம் மாறினாலும், மேற்கட்டுமானத்தின் சில கூறுகள் மாறாது. எனினும், அவை மெல்லமெல்ல மாற்றம் அடையும் என்ற முடிவுக்கு சமூக விஞ்ஞானிகள் வந்தனர்.
அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டுமானம் ஆகியவற்றிற்கிடையேயான உறவும், அவை ஒன்றை ஒன்று பாதித்தபடி இயங்குவதும் காணக்கூடியவை. இந்த உறவு இயங்கியல் ரீதியானது; ஒன்றை ஒன்று பாதிக்கும் இயல்பினையுடையது. கலைகள் சமூக அமைப்பின் உற்பத்தியாயினும், அவையே சமூகத்தை மாற்றும் இயல்பையும் கொண்டுள்ளன. சமூகத்திலிருந்து கலைகள் உருவாகின்றன; அவை சமூகத்தை உருவாக்குகின்றன என்று அறிஞர்கள் பலர் கூறியுள்ளனர். இதைப்பற்றிய பல ஆய்வுகளும் விவாதங்களும் இன்றும் எழுந்த வண்ணமுள்ளன.
இனி, கூத்து எழுந்த சமூக அமைப்பையும், அதன் பிரதான பொருளியல் அமைப்பு என்ன என்பதையும் பார்ப்போம்.
கூத்து ஒரு இலக்கிய வடிவம்
தமிழ் இலக்கிய வரலாற்றில், பேரிலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் எனும் இரண்டு முக்கிய பிரிவுகளைக் காணலாம். ஆரம்பத்தில் சிற்றிலக்கியங்கள் சிலவே இருந்தன; நாயக்கர் காலப்பகுதியில், குறிப்பாக 13ஆம் நூற்றாண்டில் இருந்து 18ஆம் நூற்றாண்டு வரையில், சிற்றிலக்கியங்கள் பெருகின. இதுவே சிற்றிலக்கியக்காலம் எனக் கூறப்படுகிறது. இக்காலத்தில் கலம்பகம், உலா, தூது, பிள்ளைத்தமிழ் போன்ற இலக்கியங்களுடன் பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் போன்ற சிற்றிலக்கியங்களும் தோன்றின. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆரம்ப காலத்திலிருந்தே கூத்து ஆடப்பட்டிருக்கின்றமைக்குச் சான்றுகள் பல கிடைக்கின்றன. காலம்தோறும் கூத்தின் தன்மை மாறிவந்திருக்கிறது.
கூத்துக்கான பிரதிகள் பிரமாணமாகப் பார்க்கப்படுவது நாயக்கர் காலத்தில்தான். பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் ஆகியவை தமிழ்க் கூத்துப் பிரதிகளுக்கான மூலங்களாக தோன்றுகின்றன.
பள்ளுக்கென ஒரு தனித்துவமான கதை அமைப்பு உள்ளது. இதில் ஒரு பள்ளனுக்கு இரண்டு மனைவிமார்—இளைய பள்ளி, மூத்த பள்ளி. பள்ளனுக்கு இளைய பள்ளி மீதுதான் அதிகமான காதல். இதை காணமுடியாமல், மூத்த பள்ளி பண்ணைக்காரனிடம் முறையிடுகிறாள். பண்ணைக்காரன் பள்ளனை தொழுவத்தில் மாட்டிவிடுகிறான். பின்னர் இரு பள்ளிமாரும் சமாதானமாகி ஆண்டையை வேண்ட, அவர் பள்ளனை விடுவிக்கிறான். பின்னர் பள்ளன் மீண்டும் வந்து பள்ளிமாருடன் இணைந்து வயல் செய்கின்றான். அதன் விளைச்சலை ஆண்டைக்கு அளிக்கின்றான்.
“இந்தப் பள்ளு நாடகத்தில், சாதாரண உழைப்பாளர்கள் பாத்திரமாக வருகிறார்களே, இது ஒரு மக்கள் இலக்கியம் அல்லவோ?” எனக் கருத்து முன்வைக்கப்பட்டாலும், இதன் முக்கிய அம்சம் ஆண்டைக்கு நெல் மூட்டைகளை வழங்குவதுதான். இது அந்தச் சமூக அமைப்பைப் பிரதிபலிக்கிறது. அங்கு பண்ணைக்காரன் அதிகாரம் கொண்ட பெரியவனாகவும், பள்ளன் கூலியாகவும் வருகிறான்.
நாயக்கர் காலச் சமூக அமைப்பு நிலமானிய அமைப்பாக இருந்தது. இதில் நிலமும், விவசாயமும் முக்கியமானவை; அத்தோடு, நிலப்பிரபுவும், நெல் விளைவிக்கும் விவசாயியும் முக்கியமானவர்கள். இவர்கள் இடையே உள்ள உற்பத்தி உறவின் முடிவு, விவசாயி கடவுளைப் பாடியபடி உழைத்து, இறுதியில் அரசனுக்கு நெல்லை வழங்குவதாக அமைகிறது.
இக்காலத்தில் எழுந்த குறவஞ்சியும் இதேபோன்றே அமைந்துள்ளது. இதிலே குறவன், குறத்தி எனும் விளிம்புநிலைப் பாத்திரங்கள் காணப்பட்டாலும், கதையின் பிரதான பாத்திரங்கள் ஊர்க் கடவுளும், அரச நாட்டியப் பெண்ணான வசந்தவல்லியும் தான்.
நொண்டி நாடகமும் இதேபோலவே அமைந்துள்ளது. அங்கு நொண்டி பாத்திரமாக இருந்தாலும், கதையின் முக்கிய இடத்தை கடவுள் மற்றும் நொண்டியைத் தண்டிக்கும் அரசன் ஆகியோரோ வகிக்கின்றனர்.

தமிழர் வரலாற்றில் நாயக்கர் காலம் தெலுங்கு மன்னர்கள் ஆட்சி செய்த காலம் என்பதால், தெலுங்கு நாட்டுக் கலைகளின் தாக்கம் தமிழ்நாட்டிலும் ஏற்பட்டது. குறவஞ்சி, பாகவத மேளம், கர்நாடக யக்சகான, கேரள கதகளி போன்றவை தெலுங்கு நாட்டில் இருந்து தமிழ்நாட்டின் அரசவைகளில் அறிமுகமாகி, பின்னர் மக்கள் முன்சென்றன. இவை அரசரால் போசிக்கப்பட்டன. காரணம் அது கூறும் கருத்தியல் ஆகும்; அதாவது புராண, இதிகாசக் கருத்தியல். இதில் அரசரும் கடவுளும் பிரபுக்களுமே இலக்கியத்தின் நாயகர்களாக மாறியுள்ளனர். அவர்களின் செயல்களே இவற்றின் கருப்பொருள்களாகவும் அமைகின்றன.
இவ்வண்ணம் எழுந்த ஒரு இலக்கிய வடிவமே கூத்து வடிவம் எனலாம். பள்ளு, குறவஞ்சி என்பன தத்தமெக்கென ஒரு நாடக அமைப்பைக் கொண்டிருந்தது போல், இக்காலத்தில் எழுந்த கூத்து இலக்கியமும் தனக்கென ஒரு நாடக அமைப்பை, எடுத்துரைப்பு முறையைக் கொண்டிருந்தது. ஆனால் பள்ளு, குறவஞ்சியோடு ஒப்பிடும்போது கூத்துகள் அமைப்பில் ஒன்றாயினும், எடுத்துரைப்பு முறையில் ஒன்றாயினும், கதைகளில் வேறுபட்டன.

தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த கூத்து மரபு, மேற்சொன்ன கூத்து வடிவங்களுடன் இணைந்து, இன்னொரு கூத்து வடிவத்தைப் பெற்றது. இந்தக் கலப்பில் உருவானது தெருக்கூத்து. அந்தத் தெருக்கூத்துகளுக்கெல்லாம் கருப்பொருளாக அமைந்தவை புராண, இதிகாசக் கதைகளே; அதன் நாயகர்கள் நிலமானிய அமைப்பின் பெரும் பிரதிநிதிகளான அரசரும் பிரபுக்களும் வணிகருமே. கூத்து மரபு தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் ‘தெற்கத்தி மரபு’ எனவும், வடக்குப் பகுதியில் ‘வடக்கத்தி மரபு’ எனவும் இரு வகையாக அழைக்கப்படுகிறது. அதே உருவோடும் கருவோடும் ஈழம் வந்த அம்மரபு, ஏற்கனவே இங்கிருந்த கூத்து மரபுகளுடன் கலந்து, ஈழத்தின் வடமோடி, தென்மோடிக் கூத்துகளாக மாறியது.

இவை ஒருகாலத்தில் யாழ்ப்பாணம் – வடமராட்சி, தென்மராட்சி, தீவகப்பகுதிகள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், சிலாபம் கிழக்குமாகாணம் – திருகோணமலை, மூதூர், மட்டக்களப்பு, மட்டக்களப்பின் மேற்குப் பிரதேசமான படுவான்கரை, தென் பிரதேசமான பாண்டிருப்பு, அக்கரைப்பற்று, திருக்கோவில், கோளாவில், பாணமை ஆகிய இடங்களில் பரவிச் செல்வாக்கோடு இருந்தன. இதுமட்டுமல்ல, தமிழர் வாழ்ந்த மலையகத்திலும் இதன் தாக்கம் இருந்தது.
ஈழம் வந்து நிலைத்த, அக்கூத்துகளின் அடிக்கட்டுமானத்தையும், கருத்தியலையும் அடுத்துப்பார்ப்போம்.