குயர் சமூகத்தின் பன்மைத்துவத்தையும் சமூக ஏற்பையும் நோக்கிய ஏராளமான செயற்பாடுகள் மற்றும் குயர் நிகழ்வுகள் உலகளாவிய ரீதியில் நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பல்வேறு தளங்களிலும் குயர் மக்கள் தமக்கான வெளிகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதை நோக்கியே நகரசெய்கின்றன. குயர் மக்கள் தமது காதல் வாழ்க்கையிலும் மற்றவர்களைப் போலவே வாழ விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் நிறையப் போராடவேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சமூக ஏற்பு நோக்கி இது போன்ற சுயமரியாதை நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.
குயர் சமூகங்களின் சுயமரியாதைக்கான போராட்டங்களில் சுயமரியாதைக் கொடியானது உலகெங்கிலும் உள்ள குயர் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இக் கொடியில் குயர் சமூகங்களின் பன்மைத்தன்மையைக் காட்டுவதற்காக வானவில்லில் உள்ள நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுயமரியாதை நிகழ்வுகள் (Pride Events), சுயமரியாதைப் போராட்டங்கள் மற்றும் ஏனைய குயர் சமூகம் சார்ந்த நிகழ்வுகளில் குயர்மக்கள் மட்டுமல்லாது ஏனைய மக்களும் பங்கெடுத்தல் என்பது சமத்துவத்துக்கான சமிக்ஞையாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் இலங்கையிலும் நடைபெற்றுவருகின்றன.

இலங்கையின் முதலாவது சுயமரியாதை நிகழ்வு (Pride Event) 2005 ஆம் ஆண்டு இடம்பெற்றது. தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஈகுவல் கிரவுண்ட் (Equal Ground) நிறுவனம் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த நிகழ்வை முன்னெடுத்தது. அந்தக் காலப்பகுதியில் ஈகுவல் கிரவுண்ட் (Equal Ground) நிறுவனத்தின் இயக்குநரான றோசன்னாவின் (Rosanna Flamer Caldera) செயற்பாடுகள் சவால் நிறைந்ததாக இருந்தது. அதேநேரம் குயர் சமூகத்தின் உரிமைகளை உரக்கச் சொன்ன சமூக ஏற்பை வலியுறுத்தும் ஆரம்பக் குரலாக றோசன்னாவின் செயற்பாடுகள் அமைந்தன. இதுவே குயர் உரிமைகள் கவனம்பெறாத காலகட்டத்தில் இலங்கையின் ஒட்டுமொத்த குயர் மக்களின் குரலாகவும் ஒலித்திருந்தது. அதன் பின்னரான காலப்பகுதியிலேயே குயர் உரிமைகள் குறித்த முன்னெடுப்புக்கள் இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெற்றன. இன்று இலங்கையில் குயர் மக்களுக்கான உரிமைகளைப் பேசும் ஏராளமான நிறுவனங்கள் உருவாகியிருக்கின்றன. அவர்களின் சமூக ஏற்பு நோக்கிய ஏராளமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் குயர் மக்கள் பற்றிய புரிதலுள்ள, பால்நிலை சமத்துவம் மிக்க சமூகம் ஒன்றும் உருவாகி வருகின்றமையை அவதானிக்கலாம்.
இந்த அடிப்படையில் கடந்த வருடம் (2021) நவம்பர் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் முதலாவது குயர் விழாவானது நேரடியாகவும் இணையவழியிலும் இடம்பெற்றது. இந்த விழாவானது உரைகள், கலந்துரையாடல்கள், கவிதை வாசிப்புகள், பயிற்சிப்பட்டறைகள், காண்பியக் கலைக்காட்சி, மற்றும் திரையிடல் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியிருந்தது.
அதன் தொடர்ச்சியாக 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த குயர் விழாவானது ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடந்து முடிந்திருக்கிறது. இந்த குயர் விழாவானது பல்வேறுபட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. வழமையான நிகழ்வுகள் குயர் சூழலியல் என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தன. சூழலியல் சார்ந்து செயற்படும் நிறுவனங்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்து விதைப்பந்து சிற்பங்களை உருவாக்கல், கவிதையின் சூழலியல்கள், களப்பயணங்கள் மற்றும் கட்டுருவாக்க முயற்சிகள் போன்ற பல நிகழ்வுகளின் மூலம் இயற்கை நேயச் செயற்பாடுகளை ஊக்குவித்திருந்தார்கள். சமகாலத்தில் சூழலியல் சார் விடயங்கள் அதிகம் கவனம்பெற ஆரம்பித்திருக்கின்ற வேளையிலான இதுபோன்ற முன்னெடுப்புக்கள் வரவேற்கத்தக்கவையாக இருக்கின்றன. இந்த நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்வதற்கான வெளியாக A9 வீதியில் அமைந்துள்ள ‘கலம்’ – பண்பாடுகளின் சந்திப்பு வெளி அமைந்திருந்தது.
யாழ்ப்பாணம் போன்ற பண்பாட்டுக் கட்டுப்பாடுகளும் தந்தையாதிக்கக் கருத்தியல்களும் ஆழமாக வேரூன்றிய ஒரு சமூகத்தில் குயர் விழாவை முன்னெடுக்கின்றமையானது, பால்நிலை சார்ந்த மாற்றுக் கருத்துக்களுக்கான வெளி ஒன்றிருப்பதை புலப்படுத்துகின்றது. இருந்தாலும் இக்குயர் விழாவில் மக்கள் பங்கேற்பு குறிப்பிட்ட ஒரு மட்டத்திலேயே உள்ளமையையே அவதானிக்க முடிந்தது.

யாழ் குயர் விழாவானது, செயற்பாட்டாளர் கஸ்ரோ பொன்னுத்துரையால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பில் கஸ்ரோ குறிப்பிடுகையில் “நான் யாழ்ப்பாணச் சங்கம் மற்றும் யாழ்ப்பாண திருநர் வலையமைப்பு இரண்டுடனும் இணைந்து செயற்பட்டுவருகிறேன், குயர் உரிமைகள் சார்ந்த சமூக ஏற்பு நோக்கிய பயணத்தில் செயல்வாதம் சார்ந்து நான் இயங்கி வருகிறேன். எனது தனிப்பட்ட ஆர்வமான கலை, கலாசார மற்றும் இலக்கிய வடிவங்கள் மீதான ஆர்வம், இக்குயர் விழாவின் கருப்பொருளிலும் கட்டமைப்பிலும் தாக்கம் செலுத்தியது. ஏற்கனவே இருக்கக்கூடிய வடிவங்களை பயன்படுத்தல் மற்றும் புதிய வடிவங்களுக்கான தளத்தை உருவாக்குவதும் எமது நோக்கமாக இருந்தது. சமூகத்தில் கலை வடிவங்களுக்கான சுழற்சியை உருவாக்குதல். கலாசாரப் பரிவர்த்தனையை ஏனைய பிரதேசம் சார்ந்தும் உலகளாவிய ரீதியிலும் உருவாக்குதலும் எமது நோக்கமாகும்” என தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “மிகவும் குறைந்தளவிலான நபர்களுடனான ஒழுங்கமைப்புக் குழு, அதையும் தாண்டி கடந்த வருடத்தை விட இந்த வருடம் இவ்விழாவானது ஏதோவொருவகையில் தரமானதாகவும் முன்னேற்றகரமாகவும் இருக்கவேண்டும் என்பது எங்களது விருப்பமாக இருந்தது. அது நிறைவேறியிருப்பதாகவே நான் கருதுகிறேன். இக் குயர் விழாவானது வருடாந்தம் இடம்பெறவேண்டும் என்பதும் இக் கலைவடிவங்களை அடுத்த அடுத்த வருடங்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதும் எங்களது விருப்பமாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் மற்றைய சமூகங்களிடமும் இவ்விழாவைக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டிய தேவையும் இவை சார்ந்த ஆர்வத்தை சமூகத்தில் உருவாக்கவேண்டிய தேவையும் உள்ளன. கலைகளையும் செயல்வாதத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கலைகள் என்று எவையும் இல்லை. இந்தக் கலை வடிவங்களுக்கூடாக குயர் மக்களுடைய ஏற்பு நோக்கிய பயணங்கள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.
ஹரி இராஜலட்சுமி அவர்கள் யாழ்ப்பாணக் குயர் விழாவுக்கான எடுத்தாளுனராக இருக்கிறார். குயர் விழா தொடர்பில் அவர் குறிப்பிடுகையில் “இந்த வருடம் குயர் சூழலியல் என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணக் குயர் விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. எங்களுடைய சமூகத்தைப் பொறுத்தவரை சூழலைப் பாதுகாப்பதற்கான தேவை ஒருபுறம் இருக்கின்ற அதேவேளை, “நீங்கள் இயற்கைக்கு மாறானவர்கள், இயற்கைக்கு விரோதமானவர்கள், இயற்கைக்கு முரணான வாழ்க்கை முறைமை, ஆசைகள், விருப்பங்களைக் கொண்டிருக்கிறீர்கள்” என்று சொல்லப்படுகின்ற மக்கள் எப்படி இயற்கையை நேசிக்க முடியும் மற்றும் அவர்கள் எப்படித் தம்மை இயற்கையுடன் மீளிணைத்துக்கொள்ள முடியும் என்பதையும் இயற்கையில் தங்களுக்கான இடத்தைக் கண்டடைதலையும் இவ்விழா வலியுறுத்துகிறது” எனவும் குறிப்பிட்டார் .
ஹரி இராஜலட்சுமி அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் “இயற்கையில் மக்களுடைய ஊடாட்டம் எவ்வாறான முறைகளில் அமைந்திருந்தது அல்லது அமைந்திருக்கிறது என்பது மீண்டும் மீண்டும் இவ் விழாவில் நாங்கள் வலியுறுத்திய விடயமாகவுள்ளது. மக்களுடைய ஊடாட்டம் சில நிலப்பகுதியில் சாதிய ரீதியில் மட்டுப்படுத்தப்படுகிறது. அது தவிர இராணுவ ஆக்கிரமிப்பும் இயற்கையில் மக்களுடைய ஊடாட்டத்தைக் கட்டுப்படுத்தும் மற்றுமொரு காரணியாக இருக்கிறது. இதைப் போலவே இயற்கைச் சூழலுடன் குயர் மக்களுடைய ஊடாட்டமும் மட்டுப்படுத்தப்படுகிறது. குயர் மக்களும் இந்த இயற்கையின் ஓர் அம்சம் என்பதையும் இயற்கையை அனுபவித்தல், நேசித்தல், மற்றும் அதில் மக்களுக்கு உள்ள மட்டுப்பாடுகள் போன்ற பல விடயங்களையும் சிந்திப்பதற்கும் நிகழ்த்திப் பார்ப்பதற்குமான களமாக இவ் விழா அமைந்தது” என்றார்.
இக்குயர் விழாவின் மற்றுமொரு முக்கிய அம்சமாக விரிவுரையாளர், செயற்பாட்டாளர் எனப் பல்பரிமாணங்களைக் கொண்ட றியாஸ் அஹமெட்(அம்ரிதா ஏயெம்) அவர்கள் சுற்றுச்சூழல் நடைமுறையில் பல்வேறுபட்ட சமூகங்களை ஈடுபடுத்தல் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துச் சென்றிருந்தார். பால்நிலை சார் பல்பரிமாணங்களின் சூழலியல் சார் செல்வாக்கினைப் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் விதைப்பந்து சிற்பங்களை உருவாக்குதலும் இவ் விழாவின் மற்றுமொரு அம்சமாக அமைந்தது.
இவ் விழாவில் கவிஞர், எழுத்தாளர் கிரிஷ் அவர்கள் மொழிபெயர்த்த ‘காதலெனும் பெருங்கடல்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் ஆரோக்கியமான கலந்துரையாடல்களையும் கருத்துப் பகிர்வுகளையும் கொண்டு நடந்தேறியது. அது போலவே கலைஞர்களின் ஒருங்கிணைப்புடன் கூட்டிணைந்த கலையுருவாக்கம் என்ற நிகழ்வும் இடம்பெற்றது. இதில் பாவனை முடிந்த ஒப்பனைப் பொருட்கள், அழகுசாதனங்கள் போன்றவற்றைக் கொண்டு புத்தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வினை நிலானி ஜோசேப் மற்றும் கிருஷ்ணப்பிரியா தபேந்திரன் ஆகிய கலைஞர்கள் வழிகாட்டியிருந்தனர்.
அதுமட்டுமல்லாது திரையிடல்கள் இவ்விழாவின் மற்றுமொரு முக்கிய அம்சங்களாக அமைந்தன. ஏ.எம்.அஸ்பாக் திரையிடல் நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அஸ்பாக் குயர் விழா பற்றிக் குறிப்பிடுகையில் “சூழலியல், திரையிடல்கள், சமூகம் என்பவற்றுக்கிடையில் நெருக்கமான மற்றும் சிக்கலான தொடர்புகள் இருக்கின்றன. குயர் விழாவில் திரையிடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்விழாவுக்கு திரைப்படங்களைத் தெரிவு செய்வது கடினமாக இருந்தது” என்றும் குறிப்பிட்டார். அத்துடன் குயர் பார்வையுடன் திரைப்படங்களை அணுகுதல் மற்றும் திரைப்படங்களுக்கும் குயர் மக்களுக்குமான தொடர்புகள் பற்றிப் பல விடயங்களை அறிந்துகொண்டேன் எனவும் இக் குயர் விழா நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்வதற்கான தளமாக அமைந்தது எனவும் காடு, நிலம் மற்றும் சூழலியல் சார் காத்திரமான கலந்துரையாடல்கள் இங்கு முக்கியம் பெற்றதாகவும் அஸ்பாக் குறிப்பிட்டார்.

குயர் மக்கள் சார்ந்தும் சூழலியல் மற்றும் நிலம் சார்ந்தும் திரையிடல்கள் இடம்பெற்றன. அதுமட்டுமல்லாமல் சாதி, மத, பால்நிலை மற்றும் ஏனைய பல விடயங்களும் திரையிடல்களில் உள்வாங்கப்பட்டிருந்தன. இவ்விழாவில் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. ‘பற’ என்ற குறும்திரைப்படம் சார்ந்து காத்திரமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் திரையிடப்பட்ட ‘சாராவின் படம்’ குயர் சமூகம் சார்ந்து எடுக்கப்பட்ட ஒரு படம். இது மாற்றுத்திரைப்பட உத்திகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருந்ததுடன் சமூகம் குயர் மக்கள் மீது திணிக்கின்ற சமூகக் கருத்தியலையும் குயர் மக்கள் எதிர்கொள்கின்ற வேறுபட்ட பிரச்சினைகளையும் பேசுகின்றது. மேலும் ‘குயர் மக்களின் சுயமரியாதை நிகழ்வுகள்’, ‘இதுவொன்றும் புதிதில்லை’, ‘LGBTIQA+ தொடர்பான குறும்படங்கள்’, ‘கே இந்தியா மெற்றிமோனி’, ‘இதயத்திற்கொரு இல்லம்’ எனப் பல திரையிடல்கள் இடம்பெற்றிருந்தன.
குயர் சூழலியல் என்ற தொனிப்பொருளில் யாழ் குயர் விழா பல்வேறுபட்ட அம்சங்களுடன் நடாத்தப்பட்டமை சிறப்பான முன்னெடுப்பாகும். இந் நிகழ்வில் மக்களை நிலம் சார்ந்து தொடர்புபடுத்தியிருந்தமை, கலை, பண்பாடு மற்றும் சூழலியல்சார் விடயங்களை உள்ளடக்கியிருந்தமை என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. இயற்கைக்கு விரோதமானவர்களாகச் சமூகம் பார்க்கின்ற குயர் மக்களின் இயற்கையுடனான இணைப்பை யாழ் குயர் விழா வலியுறுத்தியது.
தொடரும்.