ஒரு நாட்டில் ஒரு நல்ல தலைவன் ஆட்சியில் இருந்தால் மட்டுமே அந்த நாடு சீரும் சிறப்பும் பெற்று செழித்து வளரும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. ஒரு நல்ல தலைவனை இழந்து ஒரு கொடுங்கோலனின் ஆட்சியில் ஒரு நாடு விழுந்தால் அந்த நாட்டின் மக்கள் எத்தனை கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள் என்பதற்கும் வரலாற்றிலிருந்து ஆதாரங்களை எடுத்துக்காட்ட முடியும் . இந்த வரலாறுகள் எழுதப்படுவதற்கான முக்கியமான காரணமே அவற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் எனக்குத் தெரிய எந்த ஒரு கொடுங்கோன்மைத் தலைவனும் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு திருந்தி வாழ்ந்ததாக வரலாறு எங்கேயாவது ஒரு குறிப்பைப் பதிவு செய்து இருக்கிறதா என்பதை காணமுடியவில்லை.
நமது நாடு சுமார் 3 ஏகாதிபத்திய ஆட்சிகளின் கீழ் சுமார் நான்கு நூற்றாண்டு காலமாக அடிமைப்பட்டிருந்தது. நாம் சுதந்திரமான வாழ்க்கையாக சுமார் 75 ஆண்டுகளை மட்டுமே அனுபவித்திருக்கிறோம். ஆனால் ஒரு அர்த்தமுள்ள மகிழ்ச்சிகரமான இனிமையான ஒரு வாழ்க்கையை இந்த நாட்டு மக்கள் அனைவரும் அனுபவித்திருக்கிறார்களா என்று ஒரு கேள்வியை கேட்டால் எத்தனை பேரால் அதனை “ஆம்” என்று ஆமோதிக்க முடியும்? இப்போதும் கூட சிலர் “வெள்ளைக்காரன் ஆட்சி தொடர்ந்தும் இந்த நாட்டில் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்” என்று அங்கலாய்ப்பதைக் காணலாம். ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் என மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் நாட்டு மக்களை எந்த அளவுக்கு ஆட்டிப்படைக்க முடியுமோ அந்தளவுக்கு ஆட்டிப்படைத்து, அட்டூழியங்கள் பல செய்து, உதைத்து, மிதித்து, குரல்வளையை நசுக்கி, பந்தாடி, நைந்து நாராய்ப் போகுமளவுக்கு நாட்டைக் கொண்டுபோய் நடுத்தெருவில் விட்டுவிட்டுச் சென்று விடுகிறார்கள். இன்று நாம் நடுத்தெருவில் கூட இல்லை. நாற்றம் பிடித்த குப்பைக் குழிக்குலிருந்து எழுந்து வெளியே வரமுடியாத அளவுக்கு அமிழ்ந்து போய் வீசப்பட்டுக் கிடக்கின்றோம். எல்லோருக்குமே இந்த வாழ்க்கை மிகவும் சலித்துப் போய்விட்டது.
இந்த நாட்டில் உரிமை உள்ள மக்களுக்கே இப்படியானதொரு கதி வந்து வாய்த்தது என்றால், சுதந்திரம் அடைந்த அடுத்த கணத்திலேயே நாடற்றவர்களாகப் போய்விட்ட மலையக மக்களின் கதி என்னவாக இருந்திருக்கும்? 1948 ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட மலையக மக்களின் பிரஜாவுரிமையை மீண்டும் பெற்றுக்கொள்ள 40 ஆண்டுகள் சென்றன. ஒரு மனிதனின் வாழ்க்கையில் 40 ஆண்டுகள் இல்லாமல் போய்விட்டால் அவன் உயிர் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? ஆயுட்கால சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு 60 வயதில் விடுதலை பெறுபவரின் வாழ்க்கையில் என்ன மிச்சம் இருக்கப்போகிறது? அப்படிப்பட்ட வாழ்க்கையை நான்கு தசாப்த காலங்கள் அனுபவித்தவர்கள் மலையக மக்கள். 1948 ஆம் ஆண்டு பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட பின்னர் எத்தனை போராட்டங்கள் சத்தியாக்கிரகங்கள் நடத்தியும் ” நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் உனக்கு விதிக்கப்பட்ட விதி அதுதான் ” என்று வாளாவிருந்தார்கள் ஆட்சியில் இருந்தவர்கள்.
அதற்குப் பின்னர் 1954 ஆம் ஆண்டு இந்த நாட்டின் பிரதமராக இருந்த சேர் ஜோன் கொத்தலாவல இந்தியப் பிரதமரான ஜவஹர்லால் நேருவுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கையிலிருக்கும் நாடற்றவர்கள் அனைவரையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கொத்தலாவல நேருவிடம் கூறியபோதும், “காலனித்துவ காலத்தில் இந்தியாவிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அங்கேயே நிரந்தரமாகக் குடியேறும் எண்ணத்துடன் சென்றவர்களே அன்றி அவர்களுக்கு மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்பி வரும் எண்ணம் இருக்கவில்லை, ஆதலினால் அந்தந்த நாடுகளில் அவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டு அங்கேயே வசிப்பதற்கு வகை செய்யவேண்டும் ” என்று உறுதியாக மறுத்துவிட்டார். அவர்களுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அந்த அளவில் நின்று போய்விட்டது.
அதற்குப் பின்னர் சுமார் பத்து ஆண்டுகள் வரையில் நாடற்றவர்கள் என்று நாமகரணம் சூட்டப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை இந்தியாவிற்கு அனுப்பிவிட வேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் எண்ணம் நிறைவேறவில்லை. அவர்கள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மரணிக்கும் வரை மௌனமாக இருந்தனர். அவர்கள் எதிர் பார்த்தபடியே 1964 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மறைந்து, லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக பதவியேற்ற கையுடன் அவசர அவசரமாக மற்றுமொரு பேச்சுவார்த்தையை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் ஏற்பாடு செய்தார். ஜவஹர்லால் நேரு அளவுக்கு வலிமையான ராஜதந்திரக் கொள்கைகளைக் கொண்டிராத லால் பகதூர் சாஸ்திரி, மிக விரைவிலேயே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் வலைவீச்சில் சிக்கிக்கொண்டார். அதன் பிரகாரம் இரண்டு மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அதன் பின்னர் 1964 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, அத்தருணத்தில் இலங்கையில் நாடற்றவர்கள் என்ற பரிதாபகரமான நிலையின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த சுமார் 9 லட்சத்து 75 ஆயிரம் பேரின் தலைவிதி இலங்கையில் வசிப்பதா, அல்லது இந்தியாவுக்குப் போவதா என்ற கேள்வியில் ஊசலாடத் தொடங்கியது.
ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் பின்வருமாறு அமைந்தன :
- இந்த ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் நாடற்ற நிலையில் வசிக்கின்ற இந்திய வம்சாவளித் தமிழர்கள் 9 லட்சத்து 75 ஆயிரம் பேரின் பிரஜா உரிமைப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் .
- அதன் பிரகாரம் ஐந்து லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு இந்தியா பிரஜாவுரிமையை வழங்குவது என்றும் 3 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்குவது என்றும் , எஞ்சியிருக்கும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தொடர்பில் எதிர்காலத்தில் இரு நாடுகளும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பாடு ஒன்றைச் செய்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஒப்பந்தம் இரண்டு நாடுகளும் கையெழுத்திடப்பட்டு பதினைந்து வருட காலத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.
- மற்றும் 7 பேருக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்கும் பட்சத்தில், நான்கு பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கபட வேண்டும் என்ற விகிதாசாரம் பின்பற்றப்படும்.
- இந்திய நாட்டுக் குடியுரிமை பெற்றுச் செல்லும் ஒவ்வொருவருக்கும் அவரது பயண நடவடிக்கையின் முடிவில் 40 ஆயிரம் ரூபாய் இலங்கைப் பணம் வழங்கப்படும்.
இந்த ஒப்பந்தம் எல்லாவிதங்களிலும் மனிதாபிமானம் அற்றது என்று பல கோணங்களில் பல தரப்பினராலும் கண்டனம் செய்யப்பட்டது. மற்றும் இந்த ஒப்பந்தமானது மலையக மக்களுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத மக்கள் மீது சற்றும் அக்கறை கொள்ளாத இரண்டு மூன்றாம் தரப்பு மனிதர்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதேசமயம் மலையக மக்களிடமோ அல்லது மலையக மக்களின் தலைவர்களிடமோ ” உங்களுக்கு இதில் உடன்பாடு உண்டா? ” என்று ஒரு வார்த்தைகூட கேட்காமல் தன்னிச்சையாக தங்களுக்குள் செய்யப்பட்டதாகும். இந்த உடன்படிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் என். சண்முகதாசன் தன் கருத்தை பின்வருமாறு பதிவு செய்துள்ளார் :
” சிறிதும் மனிதாபிமானமற்ற இரண்டு அரசாங்கங்களால் திரைமறைவில் இரகசியமாக செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் ஒரு கேவலமான பண்டமாற்று ஒப்பந்தமாகவே கருதப்படவேண்டும். மனித உயிர்களை மனித உயிர்களாக மதிக்காமல் உயிரற்ற ஜடப் பொருளாகக் கருதி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் வருவதற்கு சற்று முன்னர் அவசர அவசரமாக செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் தேர்தல் வெற்றியை மனதில் கொண்டதாகவும் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைக் கிளறிவிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு கபட நாடகமாகும். “
உண்மையும் அதுதான். அடுத்து வந்த 15 ஆண்டுகளுக்கு எதற்காக தம்மைப் பிடித்து இவ்வாறு கண்காணாத ஒரு தேசத்துக்கு அனுப்புகிறார்கள் என்று தெரியாமலேயே விலங்குகளைப் போல் ரயில் பெட்டிகளில் அடைக்கப்பட்டு இந்தியாவின் ஒரு அந்நியத் தேசத்தில் கொண்டுபோய் விடப்பட்டார்கள். அந்தத் துயரமிகுந்த 15 வருட காலமாக பண்டாரவளையில் இருந்து தலைமன்னார் வரை ” ஒப்பாரிக் கோச்சி ” என்ற ஒரு கோச்சி கண்ணீரும் கம்பலையுமாக இம் மக்களின் துன்ப துயரங்களைச் சுமந்துகொண்டு தள்ளாடித் தள்ளாடி ஓடிக்கொண்டிருந்தது.
தொடரும்.