இலங்கையில் 1970களுக்குப் பின்பாகத் தோற்றம் பெற்ற புதியவர்க்கம் - பகுதி 1
Arts
14 நிமிட வாசிப்பு

இலங்கையில் 1970களுக்குப் பின்பாகத் தோற்றம் பெற்ற புதியவர்க்கம் – பகுதி 1

March 8, 2025 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1981 – 1900: பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1981 முதல் 1900 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம்: நவரட்ண பண்டார

அரசியல் பேராசிரியர் நவரட்ண பண்டார 2014ஆம் ஆண்டில் The New Class in Sri Lanka (இலங்கையில் ஒரு புதிய வர்க்கம்) என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“அரசியல்வாதிகள் இன்று ஒரு புதிய வர்க்கமாக எழுச்சி பெற்றுள்ளார்கள். இந்தப் புதிய வர்க்கம் நான்கு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலமாக பலமான ஒரு சமூக வர்க்கமாக உருவாக்கம் பெற்று இலங்கைச் சமூகத்தின் பிற எல்லாச் சமூக வர்க்கங்களையும் விட முதன்மை இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. இந்த வர்க்கத்தின் முக்கியமான குண இயல்பு ஒன்றைக் கவனித்தல் வேண்டும். இவ்வகுப்பினர் தமது கூட்டு அரசியல் அதிகாரத்தை உபயோகித்து பெரும் சொத்துகளைத் தமது உடைமை ஆக்கிக் கொள்கின்றனர். தேசிய செல்வத்தின் (National Wealth) குறிப்பிட்டளவு பெரும்பகுதியை இவ்வகுப்பினர் தமதாக்கிக் கொண்டுள்ளனர்.

பேராசிரியரின் மேற்படி கூற்று இலங்கைச் சமூகத்தில் ஏற்பட்ட ஒரு முக்கியமான மாற்றத்தை, நாம் கவனிக்கத் தவறும் அல்லது மேலோட்டமாகப் புரிந்து கொண்டுள்ள ஒன்றைத் தெளிவாக எடுத்துக் கூறுவதாக இருக்கிறது. புதிதாகச் சுதந்திரம் பெற்ற இலங்கையில் சுதந்திரத்தின் பின் இரண்டு தசாப்தங்கள் கழிந்தபின், 1970க்குப் பிந்தைய நான்கு தசாப்தகாலத்தில், ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த ஆளும் வர்க்கம் (Ruling Class) புதியதொரு வர்க்கமாக (New Class) தோற்றம் பெற்றதை பேராசிரியர் எமது கவனத்திற்குக் கொண்டு வருகிறார். ‘The New class in Sri Lanka’ எனும் கட்டுரை 2014 டிசம்பர் 25 ஆம் திகதி ‘The Colombo Telegraph’ இணைய இதழில் வெளியாகியிருந்தது. இத்தமிழ்க் கட்டுரை பேராசிரியரின் ஆங்கிலக் கட்டுரையை அறிமுகம் செய்வதாகவும் மூலக்கட்டுரையின் கருத்துகளைத் தழுவியும், சுருக்கியும், தொகுத்தும் தருவதாகவும் அமைகிறது.

யூகோசிலாவியாவில் ஏற்பட்ட கம்யூனிஸ்ட் புரட்சியின் பின்னர் மார்ஷல் டிட்டோ தலைமையிலான ஆட்சியில் மிலோவன் டிலாஸ் (Milovan Djilas) செல்வாக்குமிக்க ஒருவராக விளங்கினார். இவர் பின்னர் கருத்து முரண்பாடு கொண்டு அவ் அரசிலிருந்து வெளியேறினார். அவ்வாறு வெளியேறிய மிலோவன் டிலாஸ் ‘The New Class’ (புதிய வர்க்கம்) என்ற ஒரு நூலை எழுதினார். இப்பிரபலமான நூல், அங்கே ஆளும் வர்க்கம் (Ruling Class) ஒரு புதிய வர்க்கமாக (New Class) உருவாகியுள்ளது என்ற வாதத்தை முன்வைத்தது. அதாவது ஆட்சியதிகாரத்தில் இருந்த வர்க்கங்கள் புரட்சியால் ஒழிக்கப்படுதல் (Extinction of Ruling Classes) என்ற கருத்தை மறுத்துரைக்கும் வாதங்களை மிலோவன் டிலாஸ் முன்வைத்தார். கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த டிலாஸ் அவர்களுக்கு புரட்சியின்பின் யூகோசிலாவியாவில் நடந்தவை என்ன என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. அவர் புதிய வர்க்கத்தை பின்வருமாறு வரையறை செய்தார்.

“கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், நாட்டின் அரசு முறையின் மீது கூட்டு அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டு அதிகாரத்தை உபயோகித்து உற்பத்திச் சாதனங்களுடன் ஒரு விசேடமான பிரத்தியேக உறவை வளர்த்துக் கொண்டனர். அதன்மூலமாக அவர்கள் நாட்டின் ஆளும் குழுவாக தம்மை ஆக்கிக் கொண்டனர்.” 

டிலாஸ் அவர்களின் வாதம், கட்சி உறுப்பினர்கள் தமது கூட்டு அரசியல் அதிகாரத்தை (Collective Political Power) உபயோகித்து நாட்டின் உற்பத்திச் செயல்முறையூடாகக் கிடைக்கும் செல்வத்தின் பெரும்பங்கை தமது சொத்தாக (Property) மாற்றிக் கொண்டனர் என்பதாக அமைந்தது. டிலாஸ், இந்த வர்க்கம் பிற்போக்கான ஒன்று என்பதையும் அதனை ஒரு புரட்சியின் மூலம்தான் தூக்கிவீசி அப்புறப்படுத்த முடியும் எனவும் கருதினார். டிலாஸ் கருதிய இந்தப் புரட்சி 1990களில் கிழக்கு ஐரோப்பாவின் கம்யூனிஸ்ட் அரசுகளைத் துடைத்தழிப்பதற்கு காரணமாயிற்று. 

இலங்கையில் புதிய வர்க்கத்தின் தோற்றம் 

தேர்தல்களில் போட்டியிட்டு பதவிகளைப் பெற்றுக் கொள்ளுதல், நியமனங்கள் மூலம் ஆட்சி அதிகாரமுடைய இடங்களில் அமர்ந்து கொள்ளல் அல்லது ஆளும் கட்சித் தலைவர்களுடன் தனிப்பட்ட உறவுகளை வளர்த்துக் கொண்டு அதன்மூலம் பதவிகளைப் பெறுதல் ஆகிய பலவழிகளில் அதிகாரப் பலத்தைத் தரும் ஆசனங்களில் (Seats of power) பலர் அமர்ந்து கொள்கிறார்கள். இவ்வாறு பதவிகளில் அமர்ந்து கொண்டதும் அவர்கள் பின்வரும் வழிகளில் சொத்துகளைச் சேர்த்துக் கொள்கிறார்கள். 

  1. ஒவ்வொரு பதவிக்கும் சம்பளத்திற்கு மேலான சிறப்புச் சலுகைகள் கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் ‘Institutional Perks’ என இதனைக் குறிப்பிடுவர்.
  2. அரசாங்க ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் ‘கொமிசன்’.
  3. வரவு செலவுத் திட்டம் மூலம் ஒதுக்கப்படும் பணத்தைத் தவறாகக் கையாளுதல்.
  4. பலவித நிதிக் கொடுப்பனவுகளையும் பேரங்களையும் உட்படுத்திய ஊழல் நடைமுறைகளில் ஈடுபடுதல்.
  5. ஒப்பந்தங்களுக்கான கேள்வி மனுக்கோரல் மூலம் ஒப்பந்த வேலைகளைப் பெறும் தொழில் முயற்சியாளர்களிடமிருந்து முகவர்கள் ஊடாக லஞ்சம் பெறுதல்.
  6. கட்சித் தாவல்கள் மூலம் புதிய கட்சிக் கூட்டுகளை அமைத்தல்.

மேற்கண்டவாறாக அரசியல் அதிகாரத்தின் ஊடாகச் சொத்துக் குவித்து, பலமும் செல்வாக்கும் மிக்கவர்களாக நாடு பூராகவும் ஒரு புதிய வர்க்கம் உருவாகியிருப்பதை நவரட்ண பண்டார சுட்டிக்காட்டுகிறார். பதவிக்கு வந்தவுடன் ஆளும் குழுவின் உறுப்பினர்களாகிவிடும் இத்தனிநபர்கள், தாம் சார்ந்த குழுவின் கூட்டு அரசியல் அதிகாரத்தை (Collective Political Power) தனிப்பட்ட நலன்களுக்கு உபயோகித்துக் கொள்கிறார்கள். 

அரசு அதிகாரம் இரண்டு இடங்களில் உறைகிறது. ஒன்று, அதிகாரிகளது அதிகாரக் கட்டமைப்பு (Bureaucracy), மற்றது இராணுவமும் பொலிசும். இவ்விரண்டையும் உள்ளடக்கிய அரசயந்திரத்தை (State Apparatus) அரசியல் அமைப்பும் தேர்தல் முறையும் என்ற சட்டபூர்வமான செயல்முறைமைகளின் ஊடாகவே தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் தந்திரத்தில் கைதேர்ந்தவர்களாக இப்புதிய வர்க்கத்தின் உறுப்பினர்கள் விளங்குகின்றனர். இதனைவிட சிவில் சமூக அமைப்புகளையும், ஊடகங்களையும் (Civil Society and Media) கூடத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் நவரட்ண பண்டார குறிப்பிடுகிறார். அரச அதிகாரக் கட்டமைப்பே இப்புதிய வர்க்கத்தை ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்திருப்பதற்கு உதவுவதையும் காணமுடிகிறது. இதனால் இலங்கையில் தேர்தல்கள், உயரடுக்குக் குழுமங்களிற்கிடையிலான (Between Elite Groups) வன்முறை சார்ந்த போட்டியாகவே அமைந்து விடுகிறது; ஜனநாயகம் என்பது இதனால் கேலிக் கூத்தாகிவிட்டது. இந்நிலையில் தெளிவான புரிதலை உடைய ஒரு மனிதர் தேர்தலை வெறுப்புடன் நோக்குவதில் ஆச்சிரியம் இல்லை. 

வரலாற்றுப் பின்புலம் 

இலங்கையில் இப்புதிய வர்க்கம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதை இலங்கைக்கு ‘நவீனத்துவத்தின் வரவு’ (Arrival of Modernity) என்ற வரலாற்றுப் பின்புலத்திலேயே புரிந்து கொள்ள முடியும் என நவரட்ண பண்டார குறிப்பிடுகிறார். இலங்கை மக்கள் ‘நவீனத்துவம்’ சார்ந்த சமூக சக்திகளை பிரித்தானிய ஆட்சியின்கீழ் முதன்முதலாக எதிர்கொண்டார்கள். அவ்வேளை இச்சிறிய தீவை உலகு தழுவிய முதலாளித்துவத்துடன் (Global Capitalism) இணைக்கும் வேலை, காலனிய ஆட்சியின்கீழ் தொடக்கிவைக்கப்பட்டது. நவீனத்துவத்தின் விழுமியங்களை இலங்கைச் சமூகம் உள்வாங்கித் தழுவிக் கொண்டது. அவ்வாறு தழுவிக்கொண்ட போது உயர் குழாம், வெகுஜனத்திரள் என்னும் இரு பிரிவுகளான சமூகப் பிளவு (Elite – Mass Dichotomy) தோன்றியது. 

காலனித்துவ முதலாளித்துவம் உருவாக்கிய முதலாவது சமூக வர்க்கமாக உள்ளூர் முயற்சியாளர் வர்க்கம் (Local Entrepreneur Class) அமைந்தது. இவ்வர்க்கம் படிப்படியாக வளர்ந்து எண்ணிக்கையில் பெருகியதோடு, நிலமானிய சமூகத்தில் உயரடுக்கில் இருந்த முதலியார் வகுப்பை ஒதுக்கிவிட்டு, அதன் இடத்தைப் பிடித்ததோடு காலனிய ஆட்சியாளரோடு ஒத்துழைக்கத் தொடங்கியது. குறிப்பாக இலங்கையின் கரையோரப் பகுதியை போத்துக்கீசர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த 1505-1656 காலத்தில் அப்பகுதியில் முதலியார்கள் வகுப்பு செல்வாக்குப் பெற்றிருந்தது. அம்முதலியார் வகுப்பின் இடத்தை தொழில்முயற்சியாளர் வகுப்பு கைப்பற்றியது. நிலமானிய முதலியார் வகுப்பின் இடத்தைப் பிடித்துக்கொண்ட தொழில்முயற்சியாளர்கள், சமூகத்தில் மத்தியதர வர்க்கம் (Middle Class) ஆக மேற்கிளம்பினர். இச்சுதேச மத்தியதர வர்க்கம் கல்வியின் ஊடாகவும், தாம் ஈடுபட்டிருந்த தொழில்முயற்சி நடவடிக்கைகள் ஊடாகவும் தாராண்மை விழுமியங்களை (Liberal Values) உள்வாங்கிக் கொண்டது. இம்மத்தியதர வர்க்கம் சில அடிப்படையான சுதந்திரங்கள் மூலம் தன் இருப்பை உறுதிசெய்தது. ஓரிடத்தில் இருந்து வெளியிடங்களுக்குச் சுதந்திரமாக போய்வரும் உரிமை (Freedom of Movement), ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் (Freedom of Association), பேச்சுச் சுதந்திரம் (Freedom of Speech), கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம் (Freedom of Expression) என்பன போன்ற சுதந்திரங்கள் இல்லாமல் தொழில்முயற்சியாளர்களான மத்தியதர வகுப்பு ஒரு வர்க்கமாக, சமூக இருப்பையும் இயக்கத்தையும் கொண்டிருத்தல் சாத்தியமில்லை. காலனிய முதலாளித்துவம் எழுச்சிபெற்ற போது அதன் உடன் நிகழ்வாக தோன்றியவையே மேற்குறித்த உரிமைகளும் விழுமியங்களும் ஆகும். ஐரோப்பாவில் கைத்தொழில் முதலாளித்துவம் (Industrial Capitalism) தோன்றியபோதும், மேற்குறித்த பண்புகளை உடைய மத்தியதர வகுப்பு தோற்றம் பெற்றதென்பதைக் குறிப்பிடலாம். தடையற்ற முதலாளித்துவம் (Laissez faire capitalism) இயங்குவதற்கு தனிநபர்களின் சாதனைகளை ஊக்குவிக்கும் தாராண்மை விழுமியங்கள் (Achievement oriented liberal values) ஆதாரமாக அமைகின்றன. மத்தியதர வர்க்கம் இத்தகையதொரு பின்புலத்திலேயே செயற்பட முடியும்.  

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சுதேசிய மத்தியதர வர்க்கம் முதலாவது தலைமுறை அரசியல் வர்க்கம் (First Generation of the Political Class) என்னும் புதிய சமூக வர்க்கத்தை தன் மத்தியில் இருந்து உருவாக்கியது. இவ்வர்க்கத்தை ‘அரசியல் வர்க்கம்’ (Political Class) என நாம் அடையாளப்படுத்தலாம். இந்த அரசியல் வர்க்கம் பற்றியே நாம் அடுத்து நோக்கவுள்ளோம். 

முழுநேர அரசியல்வாதிகள்

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையில் அரசியல் யாப்பு மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்களின்படி இலங்கைக்கு முழுநேரமும் அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தேவைப்பட்டனர். இலங்கையின் மத்தியதர வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாய், சட்டசபையில் தொழில்முயற்சியாளர்களதும் இலங்கையின் செல்வந்த வகுப்பினதும் (Wealthy Class) நலன்கள் குறித்து எடுத்துக்கூறி வாதாடவல்ல முழுநேர அரசியல்வாதிகள் தேவைப்பட்டனர். இவ்வரசியல்வாதிகள் சுதேச முயற்சியாளர்களுக்கும் சொத்துடமையாளர்களுக்கும் அரசாங்க அதிகாரத்தில் பங்கினைப் பெற்றுக்கொடுப்பதற்கான அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களை (Constitutional Reforms) காலனிய அரசிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு உழைத்தல் என்னும் வகிபாகத்தை ஏற்றனர். 1911க்கும் 1931க்கும் இடைப்பட்ட காலத்தில் காலனிய அரசினால் கொண்டுவரப்பட்ட யாப்புச் சீர்திருத்தங்கள் வாக்குரிமையைப் படிப்படியாக விஸ்தரித்தது. பிரதேச அடிப்படையிலான தேர்தல்தொகுதிகள் (Territorial Electorates) மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சட்டவாக்க சபையில் அதிகரிக்கப்பட்டது. இச்சட்ட சபைகளின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், அரசியல் என்ற விளையாட்டில் (The Game of Politics) கைதேர்ந்த, முதிர்ச்சிபெற்ற அரசியல்வாதிகளாக உருவாகினர். குறிப்பாக 1931இல் சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இவ்வாறான முழுநேர அரசியல்வாதிகள் தோன்றினர். 

1931 அரசியல் யாப்பு உருவாக்கிய அரசியல்வாதிகள் தமக்கென ஒரு வெகுஜனத்திரளின் ஆதரவுத்தளத்தை (Mass Support Base) உருவாக்கிக் கொண்டனர். அவர்களுக்கு 1931இன் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் அரசாங்க நிர்வாகத்தில் (Executive Government) பங்கேற்பதற்குரிய வாய்ப்பை வழங்கியது. 

முதலாவது தலைமுறை 

1912இன் பின்னர் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் சட்ட ஆக்கச் சபைகளிலும் (Legislative Councils) சட்ட நிருவாகச் சபைகளிலும் (Executive Councils) மத்தியதர வகுப்புப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தன. இதன்பயனாக முழுநேர அரசியல்வாதிகளான தலைவர்கள் இலங்கையில் தோற்றம் பெற்றனர். இவ்வரசியல்வாதிகளை நவரட்ண பண்டார அவர்கள் முதல்தலைமுறை அரசியல் வர்க்கத்தின் (First Generation Political Class) உறுப்பினர்கள் எனக் குறிப்பிடுகிறார். நாட்டின் பிற சமூகப்பிரிவினர்களின் நலன்களுக்காக வாதாடுவதும் அந்நலன்களைப் பாதுகாப்பதும் அவர்களின் கடமைப்பொறுப்பாகக் கருதப்பட்டது. அவ்வரசியல்வாதிகளுக்கு சட்டங்களை ஆக்குவதில் (Law Making) பங்களிப்புச் செய்ய முடிந்தது; அத்தோடு அரசாங்க நிர்வாக அலுவல்களில் (Executive Affairs) ஒரு பகுதியை தாமே கையாள்வதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும் வாய்ப்புக் கிட்டியது. சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டதால், நாம் முன்னரே குறிப்பிட்டபடி முழுநேர அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது; அரசியல் வர்க்கத்தின் (Political Class) வகிபாகமும் மாற்றமுற்றது. 1930களில் இவ்வரசியல்வாதிகள் இலங்கையின் பல்வேறுபட்ட சமூகப் பண்பாட்டு பிரிவினர்களின் (Different Social and Cultural Segments) பிரதிநிதிகளாகச் செயற்படும் தேவை ஏற்பட்டது. 1931 அரசியல் சீர்திருத்தம் இவ்வரசியல்வாதிகளுக்கு முன்னரைவிட வேறுபட்ட வகிபாகத்தை வழங்கியது. 

மத்தியதர வர்க்கத்தின் உயரடுக்கினரின் பொருளாதார, சமூக, அரசியல் நலன்கள் என்ற குறுகிய எல்லைக்குள் நின்று செயற்படமுடியாத கட்டாயம் இவ்வரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டது. அவர்கள் சாதாரண வெகுஜனங்களின் (Ordinary Masses) நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் இவ்வரசியல்வாதிகள் சாதாரண மக்களுடன் முழுமையாகத் தம்மை இணைத்துக் கொண்டவர்களாகவோ அம்மக்களுக்குச் சேவை செய்வதற்குத் தேவையான புதிய தாராண்மை விழுமியங்களில் (New Liberal Values) ஊறியவர்களாகவோ இருக்கவில்லை. இப்பின்னணியிலேயே அரசியல் வர்க்கத்தின் தேர்தல் அரசியலுக்கும் அரசியல் செயற்பாடுகளுக்கும் சாதனமாக அமையக்கூடிய அரசியல் கட்சிகள் (Political Parties) தோற்றம் பெற்றன. 

முதல்தலைமுறை அரசியல்வாதிகளைக் ‘கனவான்கள்’ (Gentlemen) என்று குறிப்பிடலாம். அவர்கள் தம்மைத் தெரிவுசெய்த மக்களிற்கு (தொகுதியின் வாக்காளர்களுக்கு) விசுவாசமாக இருந்தார்கள்; சட்டம், ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டு ஒழுகினார்கள்; அரசியல் அதிகாரம் தொடர்பாக அவர்களிடம் தாராண்மைவாத நோக்கு இருந்தது. மக்களிற்கு உரிமையான பொதுச் சொத்துகளின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக தாம் இருக்கிறோம் என்ற உணர்வு அவர்களிடம் இருந்தது. எந்தநேரமும் அதிகாரத்தைத் துறந்து விலகிச்செல்லவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்த நற்குணங்கள் அவர்களிடம் இருந்தபோதும் அவர்கள் அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது சாதி, இனக்குழுமம், சமயம் (Caste, Ethnicity and Religion) போன்ற குறுகிய சார்புகளைக் கொண்டவர்களாகச் செயற்பட்டனர். இரண்டாவது ‘ஸ்டேட் கவுன்சில்’ காலத்தின் (1936-1947) அரசியல்வாதிகள் சிலரின் ஊழல் நடவடிக்கைகளை ஸ்டேட் கவுன்சிலால் நியமிக்கப்பட்ட முதலாவது ‘லஞ்ச விசாரணை ஆணைக்குழு’ வெளிக்கொணர்ந்தது. 

இரண்டாவது தலைமுறை 

இலங்கை 1948இல் சுதந்திரம் பெற்றதன் பின்னரான காலத்தில் (Post-Independence Period) இலங்கையின் அரசியல் வர்க்கம் அடிப்படையான மாற்றங்களுக்கு உட்பட்டது. 1950களில் படிப்படியாக இலங்கையின் வாழ்வியலில் அரசியல் (Politics) முதன்மையான இடத்தைப் பெறலாயிற்று. பொருளாதாரச் செயல்முறைகளை (Economic Process) விட அரசியல் முக்கியத்துவம் பெற்றது. இதனைவிட பண்பாடு, சமயம் என்பனவும் முக்கியம் பெற்றன. 

1956ஆம் ஆண்டில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது தேர்தல் வெற்றியின் பயனாக இலங்கையின் அரசியல் வர்க்கத்திற்குள் கீழ்மட்டங்களைச் சேர்ந்தவர்களும், உயர்குழுமப் பின்னணி இல்லாதவர்களும் இணைந்து கொண்டனர். பண்டாரநாயக்க 1956இல் ‘தேசிய உடையை உடுத்தி சோஷலிசத்தைப் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்தார்’ (Brought Socialism dressed with national clothes). ‘சங்க, வெத, குரு, கொவி, கம்கறு பலவேகய’ (பௌத்த சங்கத்தினரான பிக்குகள், ஆயுர்வேத வைத்தியர்கள், விவசாயிகள், நகரத்தொழிலாளிகள்) ஆகிய ஐந்து பிரிவினர்கள் பண்டாரநாயக்க அவர்களால் அரசியலில் முன்னரங்குக்குக் கொண்டுவரப்பட்டனர். இச்சமூகக் குழுக்கள் ஆங்கிலமயப்பட்ட உயர்குழாத்தை அரசியலில் இருந்து ஓரங்கட்டின. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் இலங்கை அரசியலில் செல்வாக்கு பெற்றிருந்த ஆங்கிலமயப்பட்ட உயர்குழாத்தின் (Anglicized Elites) இடத்தை பஞ்சமகா பலவேகய கைப்பற்றிக் கொண்டது. எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் வெற்றி புதிய வகையினரான அரசியல்வாதிகளைப் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்தது. அப்புதிய வகைப் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற விவாதங்களின்போது சுதேச மொழிகளை உபயோகிக்க வேண்டும் என விரும்பினர். 1956 இன் பின்னர் சர்வதேச உறவுகள், பொருளாதார வளர்ச்சி, கல்வி, உத்தியோக மொழி, பண்பாடும் சமயமும் என்பன தொடர்பாக கொள்கை மாற்றங்கள் ஏற்பட்டதால், வாக்காளர்கள் அடுத்துவந்த பாராளுமன்றத் தேர்தல்களில் சுதேசமொழிகளில் மட்டும் வாதங்களை நடத்தக்கூடியவர்களை கூடிய எண்ணிக்கையில் பாராளுமன்றத்திற்குத் தெரிந்து அனுப்பினர். முன்னர் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் வர்க்க அடிப்படையில் வலதுசாரி, இடதுசாரி என்று பிரிந்து நின்றமைக்கு மாறாக இனத்துவக்குழுமம், சமயம் (Ethnic and Religion) என்ற அடிப்படையில் புதிய பிரிவுகளைத் தமக்குள் உருவாக்கினர்.

1972இன் குடியரசு அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தபோது அரசு முறையில் பல மாற்றங்கள் வெளிப்படையாகத் தென்பட்டன. இவ்வரசியல் யாப்பு அரசு அதிகாரங்களை ஓரிடத்தில் குவித்தல் (Concentration of Power) என்பதைச் செயற்படுத்தியது. இது அதிகாரப் பகுப்பு (Separation of Powers) என்பதற்கு எதிரான கொள்கையாகும். மத்தியில் ஓரிடத்தில் அதிகாரங்களைக் குவித்தல் என்னும் இக்கொள்கை ‘பிரதமர் சர்வாதிகார ஆட்சிக்கு’ (Prime ministerial Autocracy) வழிவகுத்தது. ‘இலங்கையைக் குடியரசு ஆக்குவோம்; சோஷலிசத்தை நாட்டில் மலரச் செய்வோம்’ என்ற கனவு சமூகத்தில் பரவலாகப் பரவியிருந்ததும், சிங்களப் பெரும்பான்மையினம் இனத்துவ தேசியவாதக் கருத்தியலுக்கு (Ethno Nationalist Ideology) ஆட்பட்டிருந்தமையும், அரசியல் யாப்பின் ஊடாக அரசு அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப்படுதல் என்னும் செயற்பாட்டை இலகுவாக்கின. 

அதிகாரக் குவிப்பின் பயனாக நாட்டின் நீதித்துறை, பொதுத்துறை நிர்வாகக் கட்டமைப்பு என்ற இரண்டு நிறுவனங்களும் பலவீனமாக்கப்பட்டன. 1972 அரசியல் யாப்பு நீதித்துறையைப் பலவீனமாக்கியது; அதன் சுதந்திரத்தை மட்டுப்படுத்தியது. இலங்கையின் பழமையான அலுவலர் ஆட்சிக் கட்டமைப்பு (Old Bureaucracy), உருக்குச் சட்டகம் போன்று உறுதியுடையதாய் இருந்தது. அந்தக் கட்டமைப்புச் சிதைக்கப்பட்டு அதனிடத்தில் புதிய அலுவலர்களைக்கொண்ட பொதுச்சேவை அலுவலர் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதனால் ஆட்சி அதிகாரத்தை உடையவர்களான அரசியல்வாதிகளுக்குக் கீழ்ப்படிந்து பணியாற்றும் அதிகாரிகள் குழு உருவாக்கம் பெற்றது. அரசியல் – நிர்வாகம் என்ற இரண்டின் கலப்பு (Political Administrative Inter-mix) 1972க்குப் பிற்பட்ட காலத்தின் அரசியல் முறையின் (Political System) விசேட இயல்பாகக் காணப்பட்டது. 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்