இலங்கையில் 1970களுக்குப் பின்பாகத் தோற்றம்பெற்ற புதிய வர்க்கம் – பகுதி 2
Arts
10 நிமிட வாசிப்பு

இலங்கையில் 1970களுக்குப் பின்பாகத் தோற்றம்பெற்ற புதிய வர்க்கம் – பகுதி 2

March 19, 2025 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1981 – 1900: பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1981 முதல் 1900 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம்: நவரட்ண பண்டார

மூன்றாவது தலைமுறை

மூன்றாவது தலைமுறை அரசியல் வர்க்கம் 1977இல் ஜே.ஆர். ஜயவர்த்தன நிறைவேற்று ஜனாதிபதியாக ஆட்சியில் அமர்ந்த காலத்தில் இருந்து உருவானது. இந்த வர்க்கம் உருவான காலத்தில் புதியதொரு தேர்தல்முறை (New Electoral System) நடைமுறைக்கு வந்தது. அத்தோடு அதிகாரங்கள் குறைக்கப்பட்ட பலவீனமான பாராளுமன்றம் உருவானது. நீதித்துறையும் பலவீனமுடையதாக ஆக்கப்பட்டது. ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சிக்காலத்தில் புதிய பொருளாதாரக் கொள்கையும் (A New Economic Policy) நடைமுறைப்படுத்தப்பட்டது. தடையற்ற சுதந்திரமான சந்தைப் பொருளாதாரமுறையின் கீழ் வெளிநாட்டு முதலாளிகளும், உள்ளூர் முதலாளிகளும் நாட்டில் முதலிடுவதற்கு ஊக்குவிக்கப்பட்டனர். ஜே.ஆர். ஜயவர்த்தன நிறைவேற்று ஜனாதிபதிமுறையைக் கொண்டுவர வேண்டுமென்று கனவு கண்டவர். வாக்காளர்களதும், தேர்தல் அரசியலினதும் அழுத்தங்களில் இருந்து விடுபட்டு சுயாதீனமாக இயங்கக்கூடிய ஜனாதிபதியாக ஆட்சிபுரிய வேண்டும் என்ற அவரது கனவு நனவாகியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் முதல் தடவையாக யு.என்.பி அரசியல்வாதிகளை கோட், சூட், டை, அணிவதற்குப் பதிலாக ‘தேசிய உடையை’ அணிந்துகொண்டு பாராளுமன்றத்திற்கு வரச்செய்தார் ஜே.ஆர். ஜயவர்த்தன. பாராளுமன்றத்திற்கு வந்த இந்த அரசியல்வாதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜே.ஆர். ஜயவர்த்தன புதிய அரசியல் யாப்பைக் கொண்டுவந்தபோது பாராளுமன்றத்தின் அதிகாரங்களை அவருக்குக் கையளித்து அவரின் காலடியில் விழத் தயாராயினர்.

யு.என்.பி அரசாங்கத்தின் இறுதிப்பகுதியில் ஜே.ஆர். ஜயவர்த்தன ‘முதலாவது அபிவிருத்தி; அதற்குப் பிறகு ஜனநாயகம்’ (Development First; Democracy Later) என்ற மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தார். தனது கட்சி அரசியல்வாதிகளுக்குத் தாராளமாக உழைக்கக்கூடிய முயற்சிகள் சார்ந்த அரசியல் அதிகாரப் பதவிகளை வழங்கினார். இதன் பயனாக பாராளுமன்ற உறுப்பினர்களான அரசியல்வாதிகள் அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகளையும் (Development Budgets) தேர்தல் தொகுதிகள் மட்டத்தில் செயற்படுத்த வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களையும் தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்களாய் மாறினர். இந்த அரசியல்வாதிகள் தேர்தல்கள் நடைபெற்றபோது தேர்தல் மோசடிகளைச் செய்தனர். அரசியல் வன்முறை சர்வசாதாரணமாயிற்று. அரசியல் ஆளுமைகளை (Political Personalities) மையப்படுத்திய அரசியல் கூட்டணிகள் உருவாக்கப்பட்டன. அரச யந்திரத்தில் அரசியல்வாதிகளையும், அதிகாரிகள் வகுப்பையும் இணைத்த கூட்டைச் (Politico – Bureaucratic Alliance with in the Government Apparatus) சேர்ந்தவர்கள் அரச வளங்களை (State Resources) கையாளும் அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் போட்டியிட ஆரம்பித்தனர்.

இன்றைய நிலை

இன்று நிர்வாகிகள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள், கணக்காளர்கள் என்று பல்வேறு துறைசார் நிபுணர்கள் (Professionals) அரச பதவிகளில் இருந்துகொண்டு தத்தம் துறைசார்ந்த விடயங்களில் சுதந்திரமான முடிவுகளை எடுக்க முடியாதவர்களாய் உள்ளனர். அவர்கள் அரசியல் வர்க்கத்தின் முதன்மையை (Primacy of the Political Class) ஏற்றுக் கொண்டால் தான் பதவியில் தொடர முடியும் என்ற கட்டாய நிலை உருவாகியுள்ளது. 1978இல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஏற்படுத்தப்பட்டதனால், அரசியல் அதிகாரம் மத்தியில் குவிக்கப்படுதல் (Centralisation of Political Power) நிறைவேறியது. ஜனாதிபதிமுறையின் கீழ் அரசியல் அதிகாரம் மத்தியில் குவிக்கப்படும் போக்கு அதிகரித்துச் செல்கிறது.

இலங்கையின் அரசியல் வர்க்கத்தின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்குத் துணையாக இரண்டு கருத்துகள் துணை செய்கின்றன.

அ) ‘பயங்கரவாதத்தை ஒழிப்போம்’ என்ற கருத்து: இந்தக் கருத்தை மக்கள் முன்னால் முன்வைக்கும் அரசியல்வாதிகளான உயர்குழுவும், அதிகார வகுப்பு உயர்குழுவும் (Political and Bureaucratic Elites) மக்களிடம் வரிப்பணத்தைப் பெற்றுப் பயங்கரவாத ஒழிப்பிற்குச் செலவிட சம்மதத்தைப் பெறுகிறார்கள். மக்களின் இரத்தத்தையும் (உயிரையும்) விலையாகத் தரும்படியும், தமது செயற்பாடுகளுக்கு அமோக ஆதரவை வழங்கும்படியும் கேட்கிறார்கள். சாதாரண மக்களின் ஆதரவையும் இலகுவாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஆ) ஜனாதிபதிமுறைச் சர்வாதிகாரத்தை மேன்மைப்படுத்துதல்: ஜனாதிபதி என்ற தனிநபரின் சர்வாதிகாரத்தைப் புகழ்ந்து மேன்மைப்படுத்துவதன் மூலம் அரசியல் வர்க்கம் பலப்படுத்தப்படுகிறது. ஜனாதிபதி தாய்நாட்டின் பாதுகாவலர் (Protector of the Motherland) என்ற உயர் பீடத்தில் ஏற்றி வைக்கப்படுகிறார். அவரே சமூகநீதி (Social Justice), நாட்டின் உறுதிநிலை (Stability), இலங்கை என்ற புவிப்பரப்பின் ஒருமைப்பாடு (Territorial Integrity) என்பவற்றையும் காக்கக்கூடியவர் என்ற கருத்தும் பரப்பப்படுகிறது.

நாட்டின் ஆளுகையை (Governance), அரசியல் உயர்குழாம் உறுதியோடு கொண்டியக்குவதற்கு ஊடகங்களும், சிவில் சமூக அமைப்புகளும் துணைபுரிகின்றன. ஊடகங்களிலும், சிவில் அமைப்புகளிலும் முக்கிய பதவிப் பொறுப்புகளை வகிப்போரில் பலர் அரசியல் வர்க்கத்தின் முகவர்களாகச் செயற்படுகின்றனர். ஊடகங்களினதும், சிவில் அமைப்புகளினதும் பிரசாரங்களும் செயற்பாடுகளும் அரசியல் வர்க்கத்திற்குச் சார்பானவையாக அமைகின்றன.

பண்பாட்டு வேறுபாடு

முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளின் ‘புதிய அரசியல் வர்க்கம்’ போன்றதொரு புதிய அரசியல் வர்க்கம், இலங்கையில் உருவாகியுள்ளது என்பதைக் குறிப்பிட்டோம். ஆயினும் இவையிரண்டுக்கும் இடையே முக்கியமான வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாட்டை ‘பண்பாட்டு வேறுபாடு’ (Culture Difference) என நவரட்ண பண்டார குறிப்பிடுகிறார்.

மனப்பாங்கு (Attitudes), சிந்தனை (Thinking), தாம் சமூகத்தில் என்ன வகிபாகத்தை ஏற்றுள்ளோம் (The Role They Play in Society) என்னும் உணர்வு என்பனவற்றில் இலங்கையின் புதிய அரசியல் வர்க்கம், முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளின் அரசியல் வர்க்கங்களில் இருந்து தெளிவான வேறுபாட்டைக் கொண்டுள்ளது. இலங்கையின் அரசியல் வர்க்கம் ‘லும்பன் மாதிரி’ (Lumpen Model) என்னும் வகையைச் சேர்ந்த மனிதர்களை உறுப்பினராகக் கொண்டது. கார்ல் மார்க்ஸ் 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் லும்பன் வகுப்பினரின் குண இயல்பை விளக்கும் போது ‘சுயமரியாதை இல்லாதவர்கள், அவர்களுக்குச் சுயமரியாதை என்றால் என்ன என்றே தெரியாது’ (A kind of people who do not know what self respect is) என்று குறிப்பிட்டார். நாகரிகமுள்ள எந்த மனிதரும் தனது சுயமரியாதையை இழப்பதற்கு முன்வரமாட்டார். ஆனால் லும்பன்கள் என்ற வகைத் தனிநபர்கள் அரசியல் அதிகாரத்தின் மேல்நிலையில் இருப்பவர்களிடமிருந்து அற்பச் சலுகைகளைப் பெறுவதற்காகத் தமது சுயமரியாதையை இழந்து இழிவான எந்தச் செயலையும் செய்வதற்குத் தயாராக இருப்பார்கள். இலங்கையின் புதிய அரசியல் வர்க்கத்தின் பண்பாட்டை லும்பன் மாதிரியில் அமைந்த பண்பாடு என நவரட்ண பண்டார கூறுகிறார்.

பண்பாட்டு அடிப்படையில் மூன்றாவது தலைமுறை அரசியல் வர்க்கம் முதலாவது தலைமுறையின் கனவான்கள் பண்பாட்டில் (Gentlemen Culture) இருந்து வேறுபட்ட பண்பாட்டை உடையது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் 1956 வரை செல்வாக்குப் பெற்றிருந்த அரசியல் வர்க்கம் ‘கனவான்கள் பண்பாட்டைப்’ பேணியது என்பதை முன்னர் விளக்கிக் கூறினோம். 1956இல் ‘தேசிய உடைப் புரட்சியை’ (National Dress Revolution) நிகழ்த்திய இரண்டாம் தலைமுறை அரசியல் வர்க்கமும் 1970ஆம் ஆண்டுவரை ஏறக்குறைய முன்னைய தலைமுறையின் ‘கனவான்கள் பண்பாட்டைக்’ கடைப்பிடித்து வந்தது. ஆனால் 1970இன் பின்னர் அரசியல் வர்க்கத்தின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு வந்தது. 1978 அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்ததன் பின்னர், அரசியல் வர்க்கத்தின் பண்பாட்டில் சடுதியான மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக 1978 அரசியல் யாப்பு நடைமுறைக்குக் கொண்டுவந்த தேர்தல்முறை (Electoral System), மூன்றாம் தலைமுறை அரசியல் வர்க்கத்தை உள்ளே நுழையவிட்டது. அரசியல் வர்க்கத்தின் பண்பாட்டில் ‘லும்பன்’ பண்பாடு மேலோங்கியது. இதன்விளைவாக பண்பட்ட மனிதர்களும், சுயமரியாதையை இழக்க விரும்பாத தன்மானம் உடையோருமான பலர் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டனர். புதிய அரசியல் வர்க்கத்தின் நடத்தையினால் விரக்தியடைந்தோர் பொதுவெளியில் (Public Sphere) இருந்து ஒதுங்கிக்கொண்டதோடு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து வாய் திறக்காமல் மௌனம் காத்தனர்.

மிலோவன் டிலாஸ் ‘புதிய வர்க்கம் கோட்பாட்டை’ (New Class Theory) விளக்கியபோது அவ்வர்க்கத்தின் அரசியல் பண்பாட்டைப் (Political Culture) பற்றி விளக்கம் எதனையும் கூறவில்லை. இதற்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒருபோதும் ‘லும்பன் மாதிரி’ (Lumpen Model) பண்பாட்டின் இயல்புகளைக் கொண்டவர்களாய் இருந்ததில்லை. இலங்கையில் தோற்றம் பெற்ற புதிய வர்க்கத்தின் பண்பாட்டை தீர்க்கதரிசனத்தோடு சேர்.ஜோன். கொத்தலாவல கூறினார். 1956 பொதுத் தேர்தலில் பண்டாரநாயக்கவின் தேசிய உடையணிந்த படையணியால் அவர் தோற்கடிக்கப்பட்ட போது, அவர் ”BANDO!!! You let loose the dogs” (பண்டோ! உம்ப பல்லோ லி ஹுவா) என்றார்.

முடிவுரை

“மிலோவன் டிலாஸ் கம்யூனிஸ்ட் புதிய வர்க்கத்தை ஒழிப்பதற்கு ஒரு புரட்சி வேண்டும் என்று குறிப்பிட்டார். இலங்கையின் புதிய வர்க்கத்தை ஒழிப்பதற்கும் ஒரு புரட்சி தேவை என்பது எனது கருத்தாகும். ஆனால் இந்தப் புரட்சி வன்முறையானதாக அமையக்கூடாது. 1990களில் செக்கோசிலாவாக்கியாவில் இடம்பெற்றது போன்ற அமைதி வழியிலான மாற்றத்தை இலங்கையில் ஏற்படுத்த வேண்டும்.”

நவரட்ண பண்டார அவர்களின் இக்கூற்று ஆங்கிலத்தில் பின்வருமாறு அமைந்துள்ளது.

“Our country needs a revolution against this new class – not a violent one; but using velvet glove instead; one like what happened in the former Czechoslovakia in the 1990s”


ஒலிவடிவில் கேட்க


About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்