இனப்படுகொலையை அங்கீகரித்தலின் அரசியல் 
Arts
26 நிமிட வாசிப்பு

இனப்படுகொலையை அங்கீகரித்தலின் அரசியல் 

September 26, 2024 | Ezhuna

ஈழத்தமிழினம் இறுதிக்கட்டப் போரில் முன்னெப்போதும் இல்லாத, எதிர்பாராத பேரவலத்தைச் சந்தித்திருந்தது. பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து ஆரம்பித்த தமிழ் இன அழிப்பு பொறிமுறை 2009 இல் முள்ளிவாய்க்காலில் உச்ச நிலையடைந்தது; தமிழ் இன அழிப்பு ஒரு வரலாற்று அரசியல் நிகழ்முறைமையாக பரிணாமமடைந்தது (Politico – historical process). இதன் பின்னணியில், பின்-முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றுக் காலத்தில் இன அழிப்பு கற்கைநெறி தொடர்பில் தமிழில் படைப்புகள் கிடைப்பது தேவையாகின்றது. அந்த வகையில், இன அழிப்பு புலமையில் தமிழில் ஆய்வு விவாதப் பரப்பை ஏற்படுத்துவதன் மூலம், ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் ‘இன அழிப்புத் திறனாய்வுச் சொல்லாடல்: ஓர் பன்முக கற்கைநெறி அணுகுமுறை’ எனும் இத் தொடர் ஐ.நா வின் இன அழிப்பு குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சாசனத்தையும் அதனோடு தொடர்புடைய ஏனைய சொல்லாடல்களையும், மூன்றாம் உலக திறனாய்வு விளக்கவுரைக் கண்ணாடியூடாக அணுக முனைகின்றது. இது ஆதிக்க கதையாடல்களுக்கு சவால் விடும் அதே நேரத்தில், பேரரசுக் கட்டமைப்பு அரசியல், தனது ஆதிக்க நலன்களுக்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராய் இருக்கின்றது என்பதையும் வெளிக்காட்டும் என்பது திண்ணம்.

முன்னுரை

1990 களில் மேற்குலகச் சிந்தனைப் பரப்பில் அங்கீகரித்தலின் அரசியல் பற்றிய சிந்தனையின் மீள்வாசிப்பை அறிமுகப்படுத்துகின்ற செல்நெறியை ரெய்லர் (1992), ஹோனரத் (1992), (f) பிறசேர் (1995 – 1997) போன்றோர் முன்னெடுத்திருந்தனர். இவர்களின் கருத்தியல் கட்டமைப்பு ரீதியான பங்களிப்பு மறுக்கப்பட முடியாதது. பின் – காலனித்துவ அரசியல் வரலாற்று வெளியில் சிறு குழுமங்கள், இனங்கள் தாராளவாத சனநாயக பண்பாட்டு நாகரிக முறைமைக்குள் உள்ளீர்க்கப்பட்டு தமது தனித்துவ அடையாளங்களை இழந்து போயின. சனநாயக அரசியல் கட்டமைப்பு மக்களை ஒருமைக்குள் (homogenization) உள்ளீர்த்து, அகவயப்படுத்திக் கொள்ளவே செய்தது. ஒருமைக்குள் உள்வாங்கும் வேலைத்திட்டம் (நிகழ் முறைமையை) தேச – அரச அடையாளப்படுத்தலுக்குள்ளான பொறிமுறையினூடு அறிமுகப்படுத்தப்பட்டது. உதாரணமாக சிறிலங்கன் என்ற ஒரு நாட்டினுடைய அடையாளத்திற்குள் விரும்பியோ விரும்பாமலோ உள்வாங்கப்பட்டது என்பது வரலாறு.

காலனித்துவம் தன்னுடைய மேற்குலக அறிவுக்கட்டமைப்பிற்கு உட்பட்டு உருவாக்கிய அரசியல் முறைமைக்குள் மக்கள் உள்வாங்கப்பட்டார்கள். காலனித்துவ அறிவுக் கட்டமைப்பு காலனித்துவ அரசியல் நலன்களுக்கும் புவிசார் நலன்களுக்கும் அப்பாற்பட்டு மக்கள் நலன்களை கொண்டது என்று சிந்திப்பது அபத்தம். தேச – அரச அடையாளத்திற்குள் / அடையாளத்தோடு தனிநபர்கள் தங்கள் அடையாளத்தை அடையாளப்படுத்த ஊக்குவிக்கப்பட்டார்கள்.[1] தேச – அரச உருவாக்கக் கட்டமைப்புகளுடன் அடையாள அரசியல் மிக உத்வேகம் பெற்று வளர்ந்தது என்று சொன்னால் மிகையாகாது. ஒரு நாட்டின் பிரசை எனக் கணிக்கப்படுபவர் அல்லது கணிக்கப்படும் தனிநபர் எப்போதுமே  தேச – அரசை  மையப்படுத்தியே தனது அடையாளத்தை கட்டமைப்பதை அவதானிக்கலாம். இந்த ஒப்பந்தம் பரஸ்பர நலனடிப்படையில் சனநாயக முறைமையில் தங்களை வளர்ந்த நாடுகள் என்று கருதிக் கொள்ளும் அரசியல் வெளியில் சாத்தியமானதா, இல்லையா என்பது விவாதத்திற்குரியது. இவ்வாறான கருத்தியல்கள் எல்லாமே ‘நவீனத்துவம்’ என்ற நாகரிகத்திற்குள், (மேற்குலக) பண்பாட்டில் மேம்பட்ட நிலையாக நோக்கப்பட்டது. அதற்கேற்ப கல்விமுறைக்கூடு வெவ்வேறு கருத்தியல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வாழ்வியல் முறைமைகள் மாற்றமடைய நிர்ப்பந்திக்கப்பட்டது. காலனித்துவம் அறிமுகப்படுத்தியவை மேம்பட்ட நிலையில் உள்ளவாறும், பூர்வீக மக்களின் அறிவியல் முறைமைகள் பின்தங்கிய அல்லது பிற்போக்கானதாகவும் கட்டமைக்கப்பட்டது.  பூர்வீக மக்களின் அறிவியல் முறைமைகள் தர்க்க ரீதியற்றது, விஞ்ஞான ஆய்வறிவு அற்றது, குருட்டு நம்பிக்கை கொண்டது என பூர்வீக / சுதேச அறிவியல் முறைகள் அகற்றப்பட்டது. காலனித்துவம் ஆங்கில மொழியை ஒரு அறிவாகவே அறிமுகப்படுத்தியது. ஆங்கில மொழிமுறைக் கூடாகக் கல்வி பயின்றோரும், காலனித்துவ நாடுகளில் பட்டம் பெற்றோரும் மேட்டுக் குடியினராக சமூகத்தில் கட்டமைக்கப்பட்டார்கள். காலனித்துவ வெளியில் செல்வாக்குள்ளவர்களாக அங்கீகரிக்கப்பட்டார்கள். காலனித்துவம் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரை அங்கீகரிப்பது என முடிவு செய்தது.

அங்கீகரித்தல் செயற்பாட்டை அறிவுசார் தெரிவு என மட்டுமே எடுத்துக் கொள்ள முடியாது. அதனை அதிகாரத்தை நடைமுறை செய்யும் அல்லது வெளிப்படுத்தும் செயன்முறையாகவே பார்க்க வேண்டிய தேவையுள்ளது. இந்த அங்கீகரிக்கும் செயன்முறை ஒன்றுக்கொன்று எதிரான ஏற்றத்தாழ்வு இருமைகளை சமூகத்தில் கட்டமைத்துக் கொண்டிருக்கும். உதாரணமாக, ‘உயர்ந்தவர் –  தாழ்ந்தவர்’, ‘நாங்கள் – அவர்கள்’, ‘நண்பர்கள் – எதிரிகள்’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். அங்கீகரித்தலின் அரசியலை இங்கு அடையாள அரசியல் வில்லைக்கூடாக அணுகுவதைத் தவிர்த்து, உரிமை, நீதி, (இங்கு நீதி பற்றிக் குறிப்பிடும் போது அதை பங்கிடுகின்ற – distributive justice – தொனியில் குறிப்பிடவில்லை என்பதையும் பதிவிட விரும்புகின்றேன்), அறம் சார்ந்த கற்கை நெறிகளுக்கூடாக அணுகுவது ஈழத்தமிழர் விடுதலைப் போராட்ட அரசியற் செயற்பாட்டிற்கு வலுச் சேர்க்கும். அதே நேரத்தில் இவ் ஆய்வு அணுகுமுறை பன்மைப் பண்பாட்டை அகவயப்படுத்துவதன் மூலம் சனநாயகப் பொறிமுறையை வலுப்படுத்துதல் போன்ற நவதாராளவாத போக்கையும் முற்றாகத் தவிர்த்திருக்கிறது. அவ்வாறான அணுகுமுறை ஒற்றையாட்சி சனநாயகப் பொறிமுறையை வலுப்படுத்தும். அடிப்படையில் இக்கட்டுரை தமிழ்த்தேசிய அரசியல் வரையறைக்குட்பட்ட அணுகுமுறையைக் கையாள்கின்றது.

அங்கீகரிக்கும் அரசியலில் பின்காலனித்துவ அணுகுமுறை

திபேஷ் சக்கரவர்த்தி தன்னுடைய ‘வரலாறும் அங்கீகரித்தலின் அரசியலும்’[2] என்ற கட்டுரையில் ‘வரலாற்று வடு’ (Historical wound) எனும் பதத்தை அறிமுகப்படுத்துகிறார். சார்லஸ் ரெய்லரின் கோட்பாடான “அங்கீகரிக்க மறுப்பது அல்லது தவறுவது நன்மதிப்பைக் குறைப்பது மட்டுமல்ல; அது ஆழமான வடுக்களையும் ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக சுயம் சார்ந்த வெறுப்பைக் கொடுக்கலாம் (Misrecognition shows not just a lack of due respect. It can inflict a grievous wound saddling its victims with a crippling self-hatred).[3]” என்பதிலிருந்து தான் ‘வரலாற்று வடுவை’ கட்டமைத்ததாக திபேஷ் சக்கரவர்த்தி குறிப்பிடுகின்றார். வரலாற்று வடுவை பேச முயலுவதே அதிலிருந்து மீளுவதற்கான பாதையில் பயணிப்பதாகும் என்கின்றார்.[4] வரலாற்று வடு, வரலாற்று உண்மையிலிருந்து உருவாகின்றது. அவுஸ்திரேலியாவில் தொன்முது மக்களுடைய (aboriginals) பிள்ளைகள் அவர்களுடைய பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாக காலனித்துவ அரசாங்கத்தால் அல்லது கிறிஸ்தவ மறையாளர்களால் பிரிக்கப்பட்டதை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். அவர்கள் ‘களவாடப்பட்ட தலைமுறை’ (stolen generation) என அழைக்கப்படுகின்றனர். ‘களவாடப்பட்ட தலைமுறை’ என்பது வரலாற்று உண்மை.[5] தொடர்ந்து திபேஷ் கூறுகையில் இறுதியாக வரலாற்று வடுவின் அரசியலானது அனுபவத்தை முன்னிலைப்படுத்தி இறந்த காலத்தை அணுகும் வரலாற்று ஆய்வின் போதனா முறைமைக்கு சவாலாக அமைகின்றது என குறிப்பிடுகின்றார்[6] (Finally, the politics of ‘historical wounds’ often pose a challenge to the discipline of history by seemingly privileging experiential access to the past). வரலாற்று வடுவினை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு கவித்துவ ‘மொழிமூலம்’ மிகவும் துல்லியமானதாக உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். இதனை பேராசிரியர் காஞ்ச இளையா உடனான துணைமை நிலை கற்கைத் திறனாய்வு (subaltern studies) ஆய்வில் ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு விளக்குகின்றார். தலித் பேராசிரியரான காஞ்ச இளையா, வரலாற்றுப் பிரதிநிதித்துவத்தின் உள்ளீட்டை வரலாற்று ஆய்வு முறைமைகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டி மறுக்கக்கூடிய அபாயத்தைக் காரணமாகக் குறிப்பிட்டு, தலித்துகளின் நிகழ்கால சமூக விழிநிலையில் வினைத்திறன்மிக்க மாற்றம் ஏற்பட வேண்டுமாயின், தலித் பகுஜன்களின் வரலாற்றை மேற்குலக வரலாற்று முறைமைகளுக்கூடான ஆய்வுகள் மூலம் பிரதிநிதித்துவப்படுத்துவது நிராகரிக்கப்பட வேண்டும் என்கிறார். இதனால் அவர் தனது சுய அனுபவத்தைக் கொண்டே வரலாற்றை அணுகுவதைக் காண முடியும்.[7] சுய அனுபவங்களூடு வரலாற்றுக் கற்கை நெறியை ஆய்வு செய்தல் வரலாற்றுக் கற்கை நெறியில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. காரணம் வரலாற்று கற்கை நெறியில் இறந்த காலத்தை ஆய்வு செய்வதற்கு உணர்வுகளால் பாதிக்கப்படாத ‘வரலாற்றுப் புறமுறை’ (Historical Objectivity) பேணப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. சுய அனுபவங்களூடு வரலாற்றை அணுகும் போது சுய அனுபவத்திற்கும், வரலாற்று ஆய்வுப் பரப்பு விடயத்திற்குமான தொலைவு சிதைந்து போகின்றது. அண்மைய காலங்களில் இந்த ‘வரலாற்றுப் புறநிலை’ தொடர்பான விவாதங்கள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. இந்த வரலாற்றுப் புறநிலையைத் தக்க வைக்கின்ற நிகழ்தகவு வரலாற்றில் நினைவுத் திறத்தின் வகிபங்கை கேள்விக்குட்படுத்துகின்றது.[8]

இதற்கு மாற்றுவழியாக தனித்த, கூட்டு அனுபவங்களூடாக இறந்த காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற செல்நெறி உருவானதை அவதானிக்கலாம். இவ்வாறான செல்நெறி, இனக்குழுக்கள் தங்களுக்கென தனித்த அருங்காட்சியகங்களை உருவாக்கி தனித்த – கூட்டு அனுபவங்களுக்கூடாக வரலாற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மரபு, ஆவணப்படங்களிலும் புதினங்களிலும் ஏனையவற்றிலும் செல்வாக்குச் செலுத்துவதை அவதானிக்கலாம். ஓவியர் ஆசை இராசையா ‘ஜாம் போத்தல் விளக்கு’ பற்றிய ஓவியத்தில் இதை துல்லியமாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். தன்னுடைய மகள் ஜாம் போத்தல் விளக்கில் கல்வி கற்பதனை வரலாற்றுக் கற்பிதமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் ஓவியம் வரலாற்று முறைமைகளைத் தாண்டி மிகத் துல்லியமாக ஓவிய நுகர்வோரை சுய அனுபவத்திற்கூடாக தனிப்பட்ட உணர்வுகளுடன் ஊடாட்டத்தை ஆரம்பிக்கக் கூடிய திறமையைத் தன்னகத்தே கொண்டுள்ளதை மறுக்க முடியாது.

சிங்கள தேசம் சிங்கள – பௌத்த இன அடையாளத்தினூடு அங்கீகரிக்கப்படுவதை பிரித்தானிய காலனித்துவம் கையில் எடுத்துக் கொண்ட கருவியாக ‘வரலாற்று புறநிலை’ அமைந்திருந்தது. அது அநுராதபுரத்தை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட நவீன இனத்துவ சிறிலங்காவின், வரலாற்றியலிலும், தொல்லியல் அகழ்வு ஆராய்ச்சியிலும், இன வகைமைப்படுத்தலிலும், சனநாயக தேர்தல் பிரதிநிதித்துவப்படுத்தலிலும் பிரதிபலித்தது. சிறிலங்கா அனுபவத்தைக் கொண்டு நோக்குகின்ற போது தேசிய – அரசு பிரதிநிதித்துவப்படுத்தலிலும் வரலாற்று புறநிலையை தக்க வைத்தலிலும் அறத்திற்கும் நீதிக்கும் இடமே இல்லாது போனது தெரிய வருகிறது. 2009 இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட சூழலில் இறுதிப் போரையும், இறுதிப் போரின் சாட்சியங்களையும் ஆய்வு செய்ய வந்தவர்கள் இந்த வரலாற்றுப் புறநிலையை தக்கவைப்பதற்காக, சாட்சியங்களின் அனுபவ விபரிப்பில், காலக் கணிப்பு முறையில், இடங்களை விபரிப்பதில், வழுக்கள் இருப்பதைக் குறிப்பிட்டு, அக்கதையாடல்களின் உள்ளீட்டு உண்மைத் தன்மையை கேள்விக்கு உட்படுத்தியிருந்தார்கள்.

(f)பிறேசர் குறிப்பிடுகின்ற “தவறான அங்கீகரிப்பினால் அல்லது தவற விடப்படுகின்ற அங்கீகரிப்பினால் (misrecognition) ஏற்படுகின்ற பண்பாட்டுக் குறியீட்டு அநீதிகள்; சமூக பிரதிநிதித்துவ விளக்கவுரை, கருத்துப் பரிமாற்றத்தில் வேரூன்றியவை.”[9] அவர் தவறான அங்கீகாரத்திற்கு உதாரணமாக பண்பாட்டு ஆதிக்கத்தைக் குறிப்பிடுகின்றார். ஐரிஸ் மேரியன் யங் விளக்கும் போது, அடிப்படையில் இரண்டு விதமான அநீதியை குறிப்பிடுகின்றார்; அவை, அடக்கு முறை (oppression), ஆதிக்கம் (domination) என்பனவாகும். ஐரிஸ் ஐந்து விதமான அடக்கு முறைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவையாவன: சுரண்டல் (exploitation), ஓரங்கட்டப்படுதல் (marginalisation), அதிகாரமின்மை (powerlessness), பண்பாட்டு ஏகாதிபத்தியம் (cultural imperialism), வன்முறை (violence). ஐரிஸ் அடக்குமுறையை கட்டமைப்புக் கருத்தமைவாகக் (oppression as structural) குறிப்பிடுகின்றார்.[10] இவ்விரு கோட்பாட்டாளர்களுக்குமிடையில் ‘தவறான அங்கீகாரம்’ தொடர்பில் உருவாகின்ற விவாதப் பரப்பை குறிப்பிடுவது இக்கட்டுரையின் நோக்கன்று. ஆனால் இருவரும் அங்கீகரித்தலின் அரசியலின் காரணத்தில் ஒன்றுபடுகிறார்கள். “வேறுபாட்டிற்கான கோரிக்கை அநீதியான சமூக ஏற்றத் தாழ்வுகள் பற்றிய அக்கறையிலிருந்து எழுகின்றது.”[11]

யார்? யாரை? அங்கீகரிப்பது என்கின்ற கேள்வி எழுகின்றது. ‘அங்கீகாரம், அதிகாரம், காலனித்துவம்’ என்கின்ற கட்டுரையில் கட்டுரையாளர் ஒரு சம்பவம் ஊடாக அங்கீகரித்தலை அறிமுகம் செய்கின்றார். 2016 ஐக்கிய அமெரிக்கத் (வட அமெரிக்கா) தேர்தலில் பூர்வீக (இந்திய) அமெரிக்கர்கள் வாக்களிப்பதற்கு மறுப்புத் தெரிவித்தார்கள். வட அமெரிக்க இறைமை தங்களது பூர்வீக நிலங்களை நிராகரித்ததைத் தெரிவித்து, பூர்வீக இந்திய வட அமெரிக்கர்கள் தங்களை வட அமெரிக்கப் பிரசைகளாக ஏற்றுக் கொள்வதையும் மறுத்திருந்தார்கள். தங்களை காலனித்துவத்திற்கு உட்படுத்தியவர்கள், தங்களை ஒரு சனநாயக பொறிமுறையினூடு அங்கீகரிப்பதை முற்போக்கான அரசியல் விருப்பாக அவர்கள் நோக்கவில்லை.[12] பூர்விக / சுதேச சமூகத்திலிருந்து எழும் திறனாய்வாளர்கள், (f)பிரான்ஸ் (f)பனனின் கருத்தியல் பங்களிப்பிலிருந்து அங்கீகரித்தலின் அரசியல் விவாதத்தை தொடங்குகின்றனர். அதன் இரு பிரதான பங்களிப்பாளர்களாக க்ளன் க்ளாகாட் (Glen Coulthard), ஒத்ரா சிம்சன் (Audra Simsan) ஆகியோர் காணப்படுகின்றனர். அவர்கள் இருவருடைய முன்வைப்புகளும் ஏற்கனவே இவ் விவாதப் பரப்பில் இருந்த அங்கீகரித்தல் ஆய்வுப் பரப்பின் அற ஒழுக்கத்தன்மையை சிக்கலுக்குட்படுத்தியது. க்ளோகாட் அவருடைய நூலான ‘Red Skin White Masks : Rejecting the Colonial Politics of Recognition’ இல் எவ்வாறு அங்கீகரித்தலின் அவசியம் காலனித்துவ அதிகார நலன்களைப் பேணுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது என விளக்குகின்றார். நூலாசிரியர் குறிப்பிடுகையில்; “பனனின் வாதப்படி (காலனித்துவ) ஆதிக்க யதார்த்த சூழமைவில், அங்கீகாரத்தின் விதிமுறைகள் காலனித்துவவாதிகளால், அவர்களுடைய நலன்களுக்காக மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக காலனித்துவத்திற்கு உட்பட்ட மக்கள் தாமாகவே எசமான் – அடிமைக் கட்டமைப்பை உளப்பாங்கு ரீதியாக உருவாக்கிக் கொள்கின்றார்கள (தமிழில் சொல்வதானால்; கொத்தடிமை மனநிலை). எதற்காகவெனில் பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளை தக்கவைப்பதற்காக.”[13] “காலனித்துவத்திற்கு உட்பட்ட மக்கள் எவ்வாறு காலனித்துவத்தால் கட்டமைக்கப்பட்ட நிறவெறி அங்கீகரிக்கும் கட்டமைப்புகளை தன்னகத்தே (தனித்து/கூட்டாக) அகவயப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்”[14] என்பதை பனன் சுட்டிக் காட்டுகின்றார். ஐரோப்பியக் காலனித்துவம், காலனித்துவத்திற்கு உட்பட்ட மக்களை நாகரீகமடையாதவர்களாக, தாழ்வானவர்களாக படைபல வெற்றி கொள்ளல் செயற்பாடு மூலமாக கட்டமைத்து, அதையே காலனித்துவத்திற்கு உட்பட்ட மக்கள் மீது திணித்தது மட்டுமல்லாது, அதை அகவயப்படுத்தி சாதாரணமயப்படுத்தியது. இவ்வாறான காலனித்துவ அதிகார இயங்குநிலை அகத்திலும், புறத்திலுமிருந்து கட்டவிழ்க்கப்பட வேண்டும். இதற்கு மாற்றீடாக பனன் இன்னொரு கருத்தியலை அறிமுகம் செய்கின்றார்;[15] கூட்டான சுய அங்கீகரிப்பு (collective self-recognition). இச் செயற்பாடு காலனித்துவத்திற்கு உட்பட்ட மக்கள் தங்களை சுய விழிநிலையில் இருந்து கொண்டு காலனித்துவ வாதிகளில் தங்கியிராமல் மேற்கொள்ளும் செயற்பாடு[16] என வர்ணிக்கின்றார்.

பிறேசர் உடைய முன்வைப்புத் தொடர்பில் வோல்கர் கெய்ன்ஸ் (Volker Heins) விபரிக்கின்ற விமர்சனத் திறனாய்வு அவதானிக்கப்பட வேண்டியது. மேற்குலக கோட்பாட்டாளர்கள் ஐரோப்பிய மையச் சிந்தனையிலிருந்து தங்களது முன்வைப்புகளை ஆரம்பிக்கின்றனர்; குறிப்பாக ஐரோப்பிய தேச – அரசு என்பதே ஆரம்பப் புள்ளியாக அமைகின்றது.

ஒரு தேச – அரசிற்குள் உருவாகும் பண்பாட்டுப் போராட்டங்கள் அந்த தேச – அரசின் ஒருமைத் தன்மையை (homogeneity), அரசியல் இனக் குழுக்களின் சக இருப்பைப் பாதிப்பதில்லை என்பது ஹொனத்தினுடைய ஊகமாக / அனுமானமாக இருக்கிறது. ஆனால் ஐரோப்பிய மையத்தைத் தவிர்த்துள்ள ‘மூன்றாம் உலகத்தில்’ (Third World) அரசியல் யதார்த்தம் அவ்வாறில்லை. “வெவ்வேறு பண்பாட்டு, இனக்குழுமங்கள் வாழுகின்ற நவீன நாடுகளில் ஒரு தேச – அரச கோட்பாட்டை சிக்கலுக்குட்படுத்துகின்ற கிளர்ச்சிகள், போராட்டங்கள் எழுகின்றன.”[17]

ஏனெனில் 90 களில் வெளிவந்த அங்கீகரித்தல் தொடர்பான ஆய்வுகள் தாராளவாத சட்டகத்திற்குள்ளிருந்தே அங்கீகரித்தலை நோக்கியிருந்தன.[18] அவ்வாறான நோக்குநிலை சிக்கலுக்குரியது என்பதை அனிபல் குயிஞ்ஞானோ (Anibal Quijano) தனது ‘காலனித்துவ அதிகாரம், ஐரோப்பிய மையவாதமும் இலத்தீன் அமெரிக்காவும்’ என்ற கட்டுரையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.[19] அதில் காலனித்துவம் உருவாக்கிய ஏதேச்சதிகார முறைமை, அத்தோடு தொடர்புடைய ஐரோப்பிய மைய அறிவு உருவாக்கம், முதலாளித்துவம் போன்றவற்றிற்கிடையிலான தொடர்பு இவையெல்லாம் எவ்வாறு பேரரசுக் கட்டமைப்பிலிருந்தும் காலனித்துவத்திலிருந்தும் அதிகாரத்தை உருவாக்கி தற்போதுள்ள சனநாயக, பொருளாதாரக் கற்கைநெறிக் கட்டமைப்புகளுக்கூடாக அதிகார பலத்தை தக்கவைக்க முயற்சிக்கின்றது போன்ற விடயங்களை ஆய்வுக்குட்படுத்துகின்றார். ஆசியாவில் பின்காலனித்துவ சிந்தனைப் பள்ளிக் கருத்தியல்கள் முனைப்புப் பெற, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் காலனித்துவ நீக்க சிந்தனைப் பள்ளிக் கருத்தியல்கள் வளர்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

தற்போதுள்ள உலக ஒழுங்கு, பேரரசுக் கட்டமைப்பை, ஒரு துருவ, இரு துருவ, பல் துருவ வில்லைகளுக்கூடாக பார்க்க விரும்புகிறது. இத் துருவ ஒழுங்குகள் அரசியல் கட்டமைப்பே ஆயினும், சர்வதேச அதிகார மையத்தை ஆய்வுக்குட்படுத்துவதற்கு இவ்வாறான பிரிப்பு முறைகள் உதவி செய்யும். அதனடிப்படையிலேயே யார், யாரை அங்கீகரித்தலிற்கு உட்படுத்துகின்றார்கள் என்பதை உற்று நோக்க வேண்டியிருக்கும். தற்போதுள்ள ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்பில் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதை மறுப்பதிற்கில்லை. என்றாலும், ஒரு சில அலகுகள் ஏனையவற்றை விடவும் முன்னுரிமை பெறுவதை அவதானிக்கலாம். அவற்றுள் ஒன்றாகவே புவிசார் அரசியலின் திறனாய்வுப் பரப்பு நோக்கப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட சட்டகத்திற்குள் இருந்து கொண்டே ‘தமிழ் இன அழிப்பு அங்கீகரித்தல்’ அரசியலை உற்று நோக்குவது ஈழத்தமிழர் விடுதலைப் போராட்ட தொடர் செயன்முறைக்கு உதவி செய்யும் எனக் கருதுகின்றேன்.

இனப்படுகொலையை அங்கீகரித்தலின் அரசியல்

பலஸ்தீன இன அழிப்பு தொடர்பில் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேலுக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. அந்தக் குற்றச்சாட்டின் நம்பகத் தன்மையை சர்வதேச நீதிமன்று ஏற்றுக் கொண்டுள்ளமை வரலாற்றுத் திருப்பம் என்றே கொள்ள வேண்டியிருக்கும். ஏனென்றால் இனப் படுகொலைக்குரிய குற்றத் தன்மையை வடஅமெரிக்கா, பலஸ்தீனம் தொடர்பில், தொடர்ந்து நிராகரித்து வருகின்றமை பொது வெளி அறிவுக்குட்பட்டது.

‘பெயரிடுதலின் அரசியல்: இனப்படுகொலை, சிவில், யுத்தம், கிளர்ச்சி’ (The Politics of Naming: Genocide, Civil War, Insurgency)[20] என்கின்ற கட்டுரையில், இனப்படுகொலை எனப் பெயரிடுவதற்கு பின்னாலுள்ள அரசியலை மஃமுட் மம்தானி (Mahmood Mamdani)  ஈராக்கையும் (Iraq) டாவூரையும் (Darfur) உதாரணங்களாகக் கொண்டு விளக்குகின்றார். இரண்டு இடங்களிலும் இடம்பெற்ற பேரவலத்திற்குரிய ஒற்றுமைகள் அதிகமாகவிருப்பினும், இரண்டுமே வெவ்வேறு மொழி நடையினால் பெயரிடப்பட்டன. ஈராக்கில் நடந்தது ‘கிளர்ச்சி (insurgency), கிளர்ச்சியை அடக்குதல் (counter – insurgency)’ என்ற சொல்லாடலாலும் டாவூரில் நடந்தது இனப்படுகொலை என்ற சொல்லாடலாலும் அழைக்கப்பட்டது.

ஊடகவியலாளர் ஒருவர் கட்டுரையாளரிடம் பகிர்ந்தது: முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்ட இன அழிப்பு நினைவு நாள் வருடந்தோறும் மே 18 இல் முள்ளிவாய்க்காலில் ஒருங்கிணைக்கப்படுகின்றது. இவ் ஆண்டு, 15 ஆம் ஆண்டு நினைவு மட்டுமல்ல, சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலர் வந்திருந்தபடியால் சர்வதேச ஊடகவியலாளர்கள் நினைவேந்தலாகவும் அமைந்திருந்தது. அவர்களில் ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “இன அழிப்பு’ என்ற கோசங்களை தாங்கிய பதாதைகளுக்கு முன்னுரிமை கொடுத்தோ அல்லது அதைப் பின்னணியில் கொண்டோ எந்தப் புகைப்படமும் எடுக்கலாகாது.” 

தமிழ் இன அழிப்பை பெயரிடுதல், சர்வதேச நிறுவனங்களால் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகும்.

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அரசியல் நீக்கம் செய்தல்

ஈழத்தமிழர் அரசியலை அரசியல் நீக்கம் செய்கின்ற அரசியல் வேலைத்திட்டம் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. தனித்தனி இராச்சியங்களாக இருந்த அரச அலகுகளை ஒன்றுபடுத்தியதிலிருந்து இச்செயற்பாடு ஆரம்பிக்கின்றது. தீவின் இனங்களின் புள்ளிவிபர மதிப்பீட்டின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட இன விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை, இன அடையாள சமூகங்களை நிறம் சார்ந்த (racial) கண்ணாடியூடாக பார்க்கின்ற ஒரு அரசியல் பொறிமுறையை உருவாக்கியமை ஆகியன அதன் பின்னரான செயற்பாடுகளாக அமைந்தன. இவ்வாறான அடையாளப்படுத்துகின்ற செயன்முறை ‘றோயல் ஏசியாட்டிக் சொசைற்றி’ ஊடாக முன்னெடுக்கப்பட்டது. சிங்கள – பௌத்தர்கள் ஆரிய இன வழி வந்தவர்கள்; ஆரிய வம்சா வழியினர் என்ற இன மேலாண்மைக் கருத்தியலை ஆசியாட்டிக் றோயல் சொசைற்றி தமது ஆய்வுக் கட்டுரைகள் மூலம் கட்டமைத்தது.[21] அடுத்த நகர்வாக, மகாவம்சத்தை மையப்படுத்திய புனித நகராக புதிய அனுராதபுரத்தை, தொல்லியல், வரலாற்றியல், ஆய்வுகளுக்கூடாக உருவாக்கியது.[22] மேற்கூறப்பட்டவைகள் புராதன தொல்லியல் தன்மையைக் கொடுத்தது மட்டுமல்லாது சிங்களவர்கள் ஈழத் தமிழர்களை விட மேம்பட்டவர்கள் என்ற ஏற்றத்தாழ்வு இருமைக் கட்டமைப்பை உருவாக்கியதோடு, சிங்கள இனத்திற்கு கூட்டு – தன்னம்பிக்கையையும் (collective self – confidence), சுய தனித்துவத்தையும், அதீத தன்னுணர்வு விழிநிலையையும் வழங்கியது. பிரித்தானிய காலனித்துவ அல்லது ஐரோப்பிய காலனித்துவ சரிவிற்குப் பின்னர் ஏக துருவ பேரரசுக் கட்டமைப்பு வட அமெரிக்காவை மையமாகக் கொண்டிருந்து. இது இரண்டாம் உலகப் போரின் பின்னர் முனைப்புப் பெற்றதையும் அவதானிக்க வேண்டும்.

மம்தானி தன்னுடைய கட்டுரையில் ‘அரசியல் நீக்கம்’ செய்தல் என்ற கருத்தியலுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பதைக் காணலாம். விடுதலை அரசியல் பரப்பில் கூட்டு அரசியல் மயப்படுத்தல் மிக அவசியமானது. கூட்டு அரசியல் மயப்படுத்தலில் தான் விடுதலை அரசியல் தொடர்பான கருத்தியல் தெளிவுகள் ஏற்படுவதற்குரிய சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு விடுதலைப் போராட்டத்தினைப் பெயரிடுவதற்கு அதனை கோட்பாட்டு ரீதியாக வலுவூட்ட வேண்டிய தேவை இருப்பதை மறக்க முடியாது. இது ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல எல்லா தேசிய/ இனக்குழும விடுதலைப் போராட்டங்களுக்கும் பொதுவானது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்குரிய கோட்பாட்டு மைய விளக்கவுரை அன்ரன் பாலசிங்கத்தின் ‘சோசலிசத் தமிழீழத்தை நோக்கி’ என்ற தமிழ்க் கைநூலில் (ஆங்கிலத்தில் : ‘Our Theoretical Guide to the National Question’[23]) வெளிவந்திருந்தது. இந்தக் கோட்பாட்டு வரையறையே ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்குரிய பாதையையும், இலக்கையையும் தீர்மானித்தது. தமிழர் விடுதலைப் போராட்டத்தை, ‘தேசிய விடுதலைப் போராட்டமாகவே’ ஈழத்தமிழர்கள் அங்கீகரித்திருந்தனர், ஏற்றுக் கொண்டிருந்தனர். ‘தேசியம்’ என்ற சொல்லாடலுக்கூடாக, கூட்டு ஈழத் தமிழர் நலனும், அரசியல் வேணவாவும், தாயகம் பற்றிய தெளிவும், இனக்குழுமத் தனித்துவமும், இன்னும் பிறவும் வெளிக்கொணரப்பட்டது. இவை பற்றிய போதியளவு தெளிவுரைகள் அரசியல் பொதுப்பரப்பில் உள்ளதால் இக்கட்டுரை அதை ஆய்வுக்கு உட்படுத்துவதைத் தவிர்க்கிறது.

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அரசியல் முதிர்ச்சி, மெய்நடப்பு அரசை கட்டியெழுப்பியதன் மூலம் சர்வேதேச கவனத்தை ஈர்த்தது என்பதை மறுக்க முடியாது. இவ்வாறான பாரிய வளர்ச்சி (ஏனைய தேசிய விடுதலைப் போராட்டங்கள் கண்டிராத), ஏகாதிபத்திய கட்டமைப்பிற்கு சவாலாக இருந்ததை ஏற்கனவே வந்த ஒரு சில அறிக்கைகள் மட்டும் ஆவணப்படுத்தியுள்ளன. ஏகாதிபத்திய கட்டமைப்பு அலகு தனது பேரரசுக் கட்டமைப்பு வேலைத்திட்டத்தை உப ஒப்பந்தம் ஊடாக (subcontract) பிராந்திய உபபேரரசுக் கட்டமைப்பிடம் ஒப்படைப்பது, அரசியல் வரலாற்றில் புதிய நடைமுறை அல்ல. இதற்காக ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்பு நலன் கொண்ட ‘மனநிலை’ உள்ள அரசியல் கட்டமைப்புகள், கோட்பாடுகள், வேலைத்திட்டங்கள் தெரிவுக்கு உட்படுத்தப்படுகின்றன.

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தினை அரசியல் நீக்கம் செய்கின்ற அரசியல் வேலைத்திட்டம் பன்முகப் பரிமாணங்களைக்  கொண்டிருந்தாலும், அவற்றை இரு பெரிய பிரிவினுள் அடக்குவது, ஆய்வுக்குட்படுத்த இலகுவாயிருக்கும். ஒன்று; ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு வெளியே சர்வதேச அரசியல் தளத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம், இரண்டாவது; அகத்தில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்குள் உருவாக்கப்பட்ட வேலைத்திட்டம். இவையிரண்டுமே முக்கியமான காரணிகளாயிருந்தாலும், புறக்காரணியை/களை ஆய்வுக்குட்படுத்துவது, புறக்காரணிகள் எவ்வாறு ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஒரு பரிமாணமாகிய ஆயுத விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்தது என்பதை கோடிட்டுக் காட்ட உதவும். மீண்டும் இவ்வாறான சிந்தனைச் செல்நெறி புவிசார் அரசியலை மையமாகக் கொண்டு, 2009 இற்குப் பின்னர் பொதுவெளிக்குள் விவாதிக்கப்படுவது அவதானிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மிக அண்மைய அரசியல் வரலாற்றிலிருந்து ஆரம்பித்தால், வட அமெரிக்காவின் பயங்கரவாதத்தின் மீதான போரின் தாக்கம் கனதியான செல்வாக்கைச் செலுத்தியது. இதனடிப்படையில் 2002 சமாதானப் பேச்சுவார்த்தை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னணியும் நோக்கப்பட வேண்டும். இது தொடர்பில் அன்ரன் பாலசிங்கம் எழுதிய கட்டுரையும், பேச்சு வார்த்தையில் பங்குபற்றிய அவதானிகளாக இருந்தவர்கள் எழுதிய அரசியல் கட்டுரைகளும் மிக முக்கியமானது. இங்கு அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய கருத்தாக கட்டுரையாளர்கள் கொள்வது, தமிழ் இன அழிப்பில் வட அமெரிக்க, மேற்குலக உடந்தைத்தன்மை. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அற ஒழுக்கத்தையும், சட்ட முறைமை நிலையையும் (legitimacy) சிதறடித்தல் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்த வடஅமெரிக்காவின், அதன் நட்பு நாடுகளின் அரசியல் வேலைத்திட்டமாக இருந்தது, இருப்பது. இங்கு குறிப்பிடப்படும் சட்ட முறைமை நிலைமை மக்களிடமிருந்து கிடைத்த ஆணைக்கூடாகவும் விடுதலைப் போராட்ட முதிர்ச்சியூடாக போராடிப் பெற்றுக் கொண்ட இறைமைக்கூடாகவும் பெற்றுக் கொண்டதாகும். பேச்சு வார்த்தை மேடையிலிருந்தும், ரோக்கியோ நிதிதருநர்கள்  மாநாட்டிலிருந்தும் விடுதலைப் புலிகளை நீக்கியிருந்த அரசியல் செயற்பாடு; வட அமெரிக்கா,  அதன் நட்பு நாடுகளின் அரசியல் நலன் கருதி நடந்தது மட்டுமல்லாமல், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் பெற்றுக் கொண்ட இறைமையையும் சிக்கலுக்குட்படுத்தியது.

உள்ளக முரண்பாடுகளை அரசியலாக்கி அதனூடாக ஆயுதப் போராட்டத்தை மௌனிக்கச் செய்வதற்கான காரணத்தை பிறிதொரு ஆய்வில் கண்டறிய முடியும்.

சிறிலங்கா அரசை ஒரு கருவியாக இயக்கிய வடஅமெரிக்கா, மேற்குலக, மேலும் அதன் நட்பு நாடுகள் ‘பயங்கரவாத ஒழிப்பை’ இடையீட்டிற்கான அல்லது தலையீடு செய்வதற்கான ஒரு போர் உத்தியாகக் கையாண்டன. இடையீட்டு / தலையீட்டு அரசியலில் எப்போதுமே ஒரு சாராரை ‘அரக்கர்களாக/தீயதாக’ கட்டமைக்க வேண்டிய தேவைப்பாடு உருவாக்கப்படும் போது, இச்சொல்லாடல் இருமை எதிர்ப்பைக் கட்டமைக்கும். அவ்வாறெனில் அரக்கர்/தீயது எதிர் நல்லது/ சிவிலியன்/அப்பாவிகள் என்ற இருமை உருவாக்கப்படும். அப்பாவிகள் அல்லது innocense என்ற  கட்டமைப்பு  ஒரு குழுவை அரசியல் அற்ற (apolitical) குழுவாகச் சித்தரிக்கிறது. அரக்கர் எதிர் நல்லவர் இயங்கு நிலைக்கு வரும் போது அரக்கர்களிடமிருந்து/தீயதிடமிருந்து நல்வர்கள்/அப்பாவிகள்/சிவிலியன்கள் காப்பற்றப்பட வேண்டிய தேவை உருவாக்கப்படுகின்றது. இந்தத் தேவை ‘காப்பாற்றுதல்’ என்ற போர்வையில் தீயதிடமிருந்து தாக்குதலைத் தடுப்பதற்கான முன் முயற்சியில் தலையீடு தேவையாகின்றது. இந்தத் தலையீடு நேரடியாகவோ, மறைமுகமாகவோ மேற்கொள்ளப்படுகின்றது. நல்லவர்களை/சிவிலியன்களை பாதுகாப்பதற்காக தலையீடு செய்பவர்கள் மீட்பர்களாக வருணிக்கப்பட்டு அவர்களுக்கான அனுமதி வழங்கப்படுகிறது. பயங்கரவாத ஒழிப்பில், சிறிலங்கா அரசிற்கு தனது மக்களை காப்பாற்றுவதற்கான பொறுப்பு வலியுறுத்தப்பட்டு, இன அழிப்புக் (genocide) குற்றத்திற்குள் வரக்கூடிய அரச பொறுப்பு (state responsibility) இல்லாமல் செய்யப்படுகிறது.

இன அழிப்பில் அரச பொறுப்பு

‘ஈழத்தழிழ் இன அழிப்பு’ குற்றத்தில் நேரடிக் குற்றவாளியாக சிறிலங்கா அரசு இனங்காணப்பட்டுள்ளது. அவ்வாறு இனங்காணப்பட்டுள்ள சூழலில் இன அழிப்பு புரிவதற்கான ‘உள்நோக்கம்’ தெளிவுபடுத்தப்பட வேண்டும். இந்த இன அழிப்பு புரிவதற்கான உள்நோக்கம், ஒரு இனத்தை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தது என்பதை ஐயமின்றி எண்பிக்க வேண்டும். குறிப்பிட்ட உள்நோக்கம் (special intent/dolus specialis) நிரூபிக்கப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட, குறிப்பிட்ட/விசேட உள்நோக்கத்தில் இலக்கு/நோக்கம் பற்றிய பொறுப்பு (objective responsibility) அவதானிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இது அரசு தனது அரச அலகுகளுக்கூடாக இன அழிப்புத் தொடர்பில் புரியும் குற்றங்கள் தொடர்பிலானது.[24]

மிக அண்மைய பட்டறிவின் படி, ஒரு அரசு இன அழிப்பு குற்றத்தை அரங்கேற்றியதற்காக சர்வதேச நீதிமன்றில் (ICJ) முன்னிறுத்தப்பட்டால், சர்வதேச விதிகளுக்கமைய, இன அழிப்பு சாசனத்தின் (1948) சரத்து II இற்கு அமைய பின்வரும் குற்றங்கள் குறிப்பிட்ட / விசேட உள்நோக்கோடு அரங்கேற்றப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அது இன அழிப்புக் குற்றமாகக் கருதப்படும்.

ஒரு தேசம், இனம், நிறம் அல்லது சமயம் சார்ந்த குழுமத்தை முழுமையாக அல்லது பகுதியளவில் அழிக்கும் உள்நோக்கத்துடன் பின்வரும் குற்றங்கள் புரிந்தது நிரூபிக்கப்பட்டால், அது இன அழிப்புக் குற்றமாகக் கருதப்படும்.

அ) அக்குழுவைச் சார்ந்தவர்களைக் கொலை செய்தல்,

ஆ) அக்குழுவைச் சார்ந்தவர்களுக்கு கடுமையான உடல், உள தீங்கிழைத்தல்,

இ) முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ உடல் ரீதியான அழிவை, அக்குழுவிற்கு இழைக்கும் வகையில் திட்டமிட்டு ஒரு வாழ்க்கை முறையை அக்குழுவின் மீது திணித்தல்,

ஈ) அக்குழுவிற்குள் பிறப்பைத் தடுக்கும் உள்நோக்குடன் திட்டங்களைத் திணித்தல்,

உ) அக்குழுவைச் சார்ந்த குழந்தைகளை வேறொரு குழுவுக்கு வலிந்து மாற்றுதல்,

மேற்கூறப்பட்டவற்றோடு பின்வரும் குற்றங்கள் புரியப்பட்டிருந்தாலும், அரசு தனது கடமையிலிருந்து தவறியதற்காக இன அழிப்பு குற்றவாளியாக இனங்காணப்படலாம்.

அ) அரசு தனது இன அழிப்பைத் தடுக்கும் பொறுப்பிலிருந்து தோல்வியுற்றிருந்தால்,

ஆ) இன அழிப்பு  குற்றம் புரிவதற்கான முயற்சி, சதி மூலம் அல்லது நேரடியான பகிரங்கமான தூண்டுதல் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பொறுப்பு அரசிடம் உள்ள போது,

இ) அரசு இன அழிப்புக் குற்றத்தை புரிவதற்கு உடந்தையாக உள்ள போது.

அரச சார்பற்றவர்கள் இன அழிப்பு தொடர்பான குற்ற முயற்சிகள் புரிகின்ற போது (state responsibility for acts of non-state actors) அதனைத் தடுப்பதில் அரசுக்கு பொறுப்பிருக்கின்றது. இது தொடர்பான விவாதத்தை கூர்ந்து நோக்குவது சிறந்தது. இதை விட இன அழிப்புத் திட்டம் சார்பாக அரச ஈடுபாடு நிரூபிக்கப்பட்டால் அதுவும் அரசை இன அழிப்பு குற்றப் பொறுப்புக் கூற வழிவகுக்கும்.[25]

இன அழிப்பைத் தடுப்பதற்கான பொறுப்பும் கடமையும் ஒரு அரசிற்கு உள்ளது. இந்த இன அழிப்பு தடுப்பு முயற்சிகள் போர் நடைபெறும் காலத்திலும், போர் அல்லாத காலத்திலும் நடைபெறலாம். இன அழிப்புச் செயற்பாடுகளை கூர்ந்து அவதானித்து தடுப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இன அழிப்பைத் தடுக்கின்ற கடமையிலிருந்து தவறுவது, பொறுப்புக்கூறலில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் நேர் மறையான, எதிர் மறையான ஆய்வு அவதானிப்புகள் தொடர்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 

இதை விடவும் மூன்றாவது மக்கள் தீர்ப்பாயம் வட அமெரிக்க, ஐக்கிய இராச்சிய, ஐரோப்பிய ஒன்றியத்தின் அல்லது ஒன்றிய நாடுகளின் தமிழ் இன அழிப்பில் உடந்தைத் தன்மையை வெளிக்கொணர்ந்திருக்கிறது.

மம்தானி டாவூர், கொங்கோ, றுவாண்டா ஆகிய நாடுகளைக் கொண்டு ஆய்வு செய்தார். இன அழிப்பின் விசேட உள்நோக்கம் நிரூபிக்கப்படா நிலையிலும் டாவூரில் நடைபெற்று வந்ததை இன அழிப்பாக முதலில் வட அமெரிக்காவே அறிவித்திருந்தது. அதற்கான அரசியலை மம்தானி விளக்குகின்றார். அதே நேரத்தில் றுவாண்டா இன அழிப்பில் வட அமெரிக்காவின் பங்களிப்பையும் அவர் பதிவு செய்கின்றார்.

‘இன அழிப்பு அங்கீகாரம்’ எதனடிப்படையில் நடைபெறுகின்றது என மம்தானி தனது வார்த்தைகளில் கூறுகின்றார்:

“நமக்குள் ஒரு அறம்சார் திசைகாட்டி உண்டு. அதன் ஊசி மனிதப் பேரவலத்தால் மட்டும் இயங்குவதல்ல, மனிதத் தீமையாலும் இயக்கப்படுகின்றது. இது தான் இன அழிப்பை சிறப்பானதாக்குகின்றது. இறப்புகளின் எண்ணிக்கை மட்டுமல்ல அவற்றின் பின்னணியில் உள்ள அரசாங்கக் கொள்கைகளும்.”

மேலும் இன அழிப்பை பெயரிடுவதன் பின்னணி அரசியல் பற்றி குறிப்பிடுகையில்,

“இன அழிப்பு என்பது உங்கள் மோசமான எதிரி மீது ஒட்டிக்கொள்ளப் பயன்படும் ஒரு அடையாளச் சீட்டாக மாறி விட்டது; இது நோபல் பரிசின் எதிர்மறையான மாற்று வடிவம். நட்பு வட்டங்களுக்கு தண்டனை விலக்களிப்பை உறுதி செய்வதற்கும், எதிரியை இழிவுபடுத்தவும் பயன்படும் சொல்லாடல் ஆயுதமாக இன அழிப்பு மாறிவிட்டது.”[26] என்கிறார்.

உசாத்துணை

  1. Balaton-Chrimes, Samantha, and Victoria Stead. ‘Recognition, Power and Coloniality’. Postcolonial Studies 20, no. 1 (2 January 2017): 1–17. https://doi.org/10.1080/13688790.2017.1355875.
  2. Balsingham, Anton. ‘Our Theoretical Guide to the National Question’. Accessed 28 August 2024. https://antonbalasingham.com/archives/856.
  3. Celik, Simona. ‘State Responsibility for Genocide: ICJ Ruling in Bosnia and Herzegovina’s Genocide Case’. SSRN Scholarly Paper. Rochester, NY, 11 July 2014. https://doi.org/10.2139/ssrn.4196127.
  4. Chakrabarty, Dipesh. ‘History and the Politics of Recognition’. In Manifestos for History Edited by Sue Morgan, Keith Jenkins, and Alun Munslow. Routledge, 2007.
  5. Coulthard, Glen Sean. Red Skin, White Masks: Rejecting the Colonial Politics of Recognition. Minneapolis: Univ Of Minnesota Press, 2014.
  6. Heins, Volker. ‘Three Meanings of Equality: The “Arab Problem” in Israel’. Res Publica 18, no. 1 (1 February 2012): 79–91. https://doi.org/10.1007/s11158-012-9187-1.
  7. Jeganathan, Pradeep. ‘Authorizing History, Ordering Land: The Conquest of Anuradhapura’. In Unmaking the Nation: The Politics of Identity & History in Modern Sri Lanka, Edited by Pradeep Jeganathan and Qadri Ismail. South Focus Press, 2009.
  8. Kiss, Elizabeth. ‘Democracy and the Politics of Recognition’. In Democracy’s Edges, edited by Casiano Hacker-Cordón and Ian Shapiro, 193–209. Contemporary Political Theory. Cambridge: Cambridge University Press, 1999. https://doi.org/10.1017/CBO9780511586361.012.
  9. Lindemann, Thomas, and Erik Ringmar. International Politics of Recognition. 1st edition. Boulder, CO: Routledge, 2011.
  10. Mamdani, Mahmood. ‘The Politics of Naming: Genocide, Civil War, Insurgency’. London Review of Books, 8 March 2007. https://www.lrb.co.uk/the-paper/v29/n05/mahmood-mamdani/the-politics-of-naming-genocide-civil-war-insurgency.
  11. Marisa Angell. ‘Understanding the Aryan Theory’. In Culture and Politics of Identity in Sri Lanka Edited by Mithran Tiruchelvam and ‎Dattathreya C. S. International Centre for Ethnic Studies, Colombo, 1998.
  12. Quijano, Aníbal. ‘Coloniality of Power and Eurocentrism in Latin America’. International Sociology 15, no. 2 (June 2000): 215–32. https://doi.org/10.1177/0268580900015002005.
  13. Smith, Robin M. ‘State Responsibility and Genocidal Intent: A Three Test Approach’. The Australian Year Book of International Law Online 34, no. 1 (1 January 2017): 87–125. https://doi.org/10.1163/26660229-034-01-900000008.
  14. Young, Iris Marion. ‘Five Faces of Oppression’. In Geographic Thought: A Praxis Perspective, edited by George L. Henderson and Marvin Waterstone, 55–71. Oxford: Routledge, 2009.

[1] Thomas Lindemann and Erik Ringmar, International Politics of Recognition, 1st edition (Boulder, CO: Routledge, 2011), 4.

[2] Dipesh Chakrabarty, ‘History and the Politics of Recognition’, in Manifestos for History ed. Sue Morgan, Keith Jenkins, and Alun Munslow (Routledge, 2007).

[3] Chakrabarty, 77.

[4] Chakrabarty, ‘History and the Politics of Recognition’.

[5] Chakrabarty.

[6] Chakrabarty.

[7] Chakrabarty.

[8] Chakrabarty.

[9] Quoted in Elizabeth Kiss, ‘Democracy and the Politics of Recognition’, in Democracy’s Edges, ed. Casiano Hacker-Cordón and Ian Shapiro, Contemporary Political Theory (Cambridge: Cambridge University Press, 1999), 200, https://doi.org/10.1017/CBO9780511586361.012.

[10] Iris Marion Young, ‘Five Faces of Oppression’, in Geographic Thought : A Praxis Perspective, ed. George L. Henderson and Marvin Waterstone (Oxford: Routledge, 2009), 37–60.

[11] Kiss, ‘Democracy and the Politics of Recognition’, 200.

[12] Samantha Balaton-Chrimes and Victoria Stead, ‘Recognition, Power and Coloniality’, Postcolonial Studies 20, no. 1 (2 January 2017): 1–17, https://doi.org/10.1080/13688790.2017.1355875.

[13] Glen Sean Coulthard, Red Skin, White Masks: Rejecting the Colonial Politics of Recognition (Minneapolis: Univ Of Minnesota Press, 2014), 26.

[14] Coulthard, 31–32.

[15] Coulthard, 34.

[16] Coulthard, 131.

[17] Volker Heins, ‘Three Meanings of Equality: The “Arab Problem” in Israel’, Res Publica 18, no. 1 (1 February 2012): 79–91, https://doi.org/10.1007/s11158-012-9187-1.

[18] Balaton-Chrimes and Stead, ‘Recognition, Power and Coloniality’.

[19] Aníbal Quijano, ‘Coloniality of Power and Eurocentrism in Latin America’, International Sociology 15, no. 2 (June 2000): 215–32, https://doi.org/10.1177/0268580900015002005.

[20] Mahmood Mamdani, ‘The Politics of Naming: Genocide, Civil War, Insurgency’, London Review of Books, 8 March 2007, https://www.lrb.co.uk/the-paper/v29/n05/mahmood-mamdani/the-politics-of-naming-genocide-civil-war-insurgency.

[21] Marisa Angell, ‘Understanding the Aryan Theory’, in Culture and Politics of Identity in Sri Lanka Edited by Mithran Tiruchelvam and ‎Dattathreya C. S. (International Centre for Ethnic Studies, Colombo, 1998).

[22] Pradeep Jeganathan, ‘Authorizing History, Ordering Land: The Conquest of Anuradhapura’, in Unmaking the Nation: The Politics of Identity & History in Modern Sri Lanka, Edited by Pradeep Jeganathan and Qadri Ismail (South Focus Press, 2009).

[23] Anton Balsingham, ‘Our Theoretical Guide to the National Question’, accessed 28 August 2024, https://antonbalasingham.com/archives/856.

[24] Robin M. Smith, ‘State Responsibility and Genocidal Intent: A Three Test Approach’, The Australian Year Book of International Law Online 34, no. 1 (1 January 2017): 87–125, https://doi.org/10.1163/26660229-034-01-900000008.

[25] Simona Celik, ‘State Responsibility for Genocide: ICJ Ruling in Bosnia and Herzegovina’s Genocide Case’, SSRN Scholarly Paper (Rochester, NY, 11 July 2014), https://doi.org/10.2139/ssrn.4196127.

[26] Mamdani, ‘The Politics of Naming’.


ஒலிவடிவில் கேட்க

1755 பார்வைகள்

About the Author

அருட்தந்தை எழில்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஆய்வாளரான அருட்தந்தை எழில் அவர்கள், தன்னுடைய முதுகலைமாணிப் பட்டப்படிப்பை லண்டன் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் நிறைவு செய்துள்ளார்.

இவர், தமிழின விடுதலை சார்ந்த அநுபவங்களை உள்ளடக்கிய ‘உள்மை’ என்ற கவிதைத் தொகுப்பை 2006 ஆம் ஆண்டிலும், 2009 இற்குப் பின்னரான தமிழ்த் தேசிய வெளி, தமிழ்த் தேசிய அரசியற் கருத்தியல் சார்ந்த பத்திகளின் தொகுப்பை ‘பின்முள்ளிவாய்க்கால்’ என்ற பெயரில் 2023 ஆம் ஆண்டிலும் வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • September 2024 (16)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)