இலங்கையில் அரிசி அரசியலும் அதனை எதிர்கொள்வதில் கூட்டுறவுத் துறையின் வகிபாகமும் 
Arts
14 நிமிட வாசிப்பு

இலங்கையில் அரிசி அரசியலும் அதனை எதிர்கொள்வதில் கூட்டுறவுத் துறையின் வகிபாகமும் 

December 3, 2024 | Ezhuna

2009 இல், போரின் முடிவில், போர் தந்த சிதைவுளுக்கு நாம் முகம் கொடுத்தோம். இதில் மிக முக்கியமானது போர் சிதைத்த எமது நிறுவன நினைவு வளம் (Institutional Memory) ஆகும். மனித இழப்புகளுக்கு அடுத்ததாக, எம்மால் கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்வும், சிதைவும் பிடுங்கி எறியப்பட்ட பூசணிக் கொடிகள் போல எங்கும் பரவிக் கிடக்கிறது. நிறுவனங்களின் சிதைவுகளில் மிக முக்கியமானதும், மிகவும் பாதிக்கப்பட்டதுமாக அமைவது கூட்டுறவு இயக்கமாகும்; கூட்டுறவுத் துறையின் வெற்றிக்கு அச்சாணியாக இருந்த கடனுதவுக் கூட்டுறவுச் சங்கங்களும் அதனோடு இணைந்தே அழிவுக்குள்ளாகின. இச் சிதைவுகளைக் கண்டறிந்து மீள் உருவாக்கம் செய்ய வேண்டிய காலமிது. அதன் பொருட்டு, கூட்டுறவு இயக்கம் – கூட்டுறவின் கட்டமைப்புக்கள் மிக முக்கிய அசைவியக்கமாக மாற முடியுமா? போரின் பின்னரான மீள் கட்டுமானத் திட்டங்களுக்கும் நிலையான அபிவிருத்திக்கும் கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் யாது? எங்கிருந்து தொடங்குவது? போரின் பின்னரான சிதைவுகள், அதன் விளைவாக விளைந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு அதனால் உதவ முடியுமா? ஆகிய வினாக்களை இத் தொடர் முன்வைத்து ஆராய்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகம் உட்பட, இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள கூட்டுறவுத் துறையினால் ஒரு வலுவான மாற்றுப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு சிறப்பாக உதவ முடியும். கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி சார் விடயங்களை மையமிட்டு காத்திரமான விடயங்களை தர்க்கத்துடன் கலந்துரையாடி, சிந்தனைக்கான முன்மொழிவுகளை தரும் இத் தொடர் ‘கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : போரின் பின்னரான மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும்’ எனும் பெயரில் அமைகிறது.

ஆசியாவில் அரிசி உற்பத்தி

ஆசியாவில் உள்ள அரசாங்கங்கள் அதிக அரிசியை உற்பத்தி செய்வதற்கும், உலகச் சந்தையின் உறுதியற்ற தன்மையிலிருந்து தங்கள் அரிசி உற்பத்தித் துறைகளை, அதன் வணிகக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் அரசியல் முயற்சிகள் செய்கின்றன. ஆசியாவில் அரிசியே ஆட்சி செய்கிறது எனலாம். அது தினசரிக் கலோரிகளில் 30 – 76 சதவீதத்தை மக்களுக்கு வழங்குகிறது. மேற்கு நாட்டின் எந்தவொரு உணவும் கிழக்கு நாட்டின் அரிசி உணவின் ஆதிக்கத்தை ஒத்திருக்க முடியாது. இங்கு அரிசி என்பது ஒரு பண்டமல்ல; அதற்கு ஒரு படி மேலாக ஆசிய நாடுகளின் நாட்டின் உணவுப் பாதுகாப்பின் பிரதான அம்சம்; ஒரு முக்கிய அரசியல் பொருள் (A Pivotal Political Commodity). அரிசியின் பொருளாதார வகிபாகம் சிறப்பானது. நாளாந்த உழைப்பாளர்கள், நகர்ப்புறத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற நிலமற்றவர்கள் தங்கள் மொத்த வருமானத்தில் 50 – 70 சதவீதத்தை அரிசிக்காகச் செலவிடுகிறார்கள். அவர்களால் கடுமையான விலைவாசி உயர்வைப் பொறுத்துக்கொள்ள முடியாது. அதன் விளைவு, அரசியல் உறுதியைச் சீர்குலைக்கும். ஆசியக் கலாசாரத்தில், அரிசியின் இடம் பல்நிலை கொண்டது. அரச கொள்கை வகுப்பில் அரிசியின் பங்கு வலிமையாக உள்ளது.

“உள்நாட்டு அமைதியின்மையின் முதல் அறிகுறி பெரும்பாலும் அரிசி விலை உயர்வால் கண்டறியப்படுகிறது” என்கிறார் பொருளாதார நிபுணர் டொக்டர். மஹபூப் ஹொசைன். அரிசி விலை உயர்ந்தால், தொழிலாளர்கள் அதிக ஊதியத்தைக் கோருவார்கள், இது நாட்டின் பொருளாதாரத்தின் போட்டி வலிமையைக் குறைக்கிறது. நாடு வலிமை குன்றும்; படிப்படியாகச் சீரழியும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இலங்கை. உரத்தை இறக்குமதி செய்வதற்கான நிதி இல்லாமை காரணமாக அதன் இறக்குமதியைத் தடை செய்த அரசாங்கத்தின் முடிவுடன் இலங்கையில் விவசாயத்தின் அவலநிலை தொடங்கியது. அது பின்னர் நவம்பர் 2021 இல் இரத்துச் செய்யப்பட்டது.  

பெரும்பாலான ஆசிய நாடுகள் விலை ஏற்ற இறக்கத்தைக் குறைக்க அரிசியைச் சேமித்து வைத்திருக்கின்றன. ஆனால் உணவுப் பாதுகாப்பை அடைவதற்கு அல்லது நிலைநிறுத்துவதற்கு அரிசியில் தன்னிறைவு கொள்ளவேண்டும் என்பது அவசியமில்லை. அரிசியை சிறந்த முறையில் விநியோகிப்பதே இங்கு அவசியமானது. குறைந்த விலையில் தரமான அரிசியை விநியோகிப்பது, ஆண்டு தோறும் அரிசியை ஒரே விலையில் வைத்திருப்பது என்பன மிக முக்கியம் என்கிறார் அரிசி விநியோக ஆய்வாளர் கலாநிதி ஹொசைன். இதை ஒரு சில நாடுகள் நிரூபித்துள்ளன. மலேசியா தனது அரிசியில் 40 சதவீதத்தை இறக்குமதியே செய்கிறது. அரிசியை உற்பத்தி செய்யாத சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகியவற்றின் அரிசி விநியோகம் தொடர்பான திடமான கொள்கை சிறப்பாகச் செயற்படுகிறது. இவை அரிசியை இறக்குமதி செய்கின்ற போதும், சிறப்பான விநியோகம் காரணமாக உணவுப் பாதுகாப்பில் முன்னிலை வகிக்கின்றன. 

இலங்கையில் அரிசி உற்பத்தி

அரிசி இலங்கையின் பிரதான உணவுகளில் ஒன்றாகும். இது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு பருவ மழைக்காலங்களில் பயிரிடப்படுகிறது. இலங்கையில் நெல்லுக்கு சுமார் 708,000 ஹெக்டேயர் (1,750,000 ஏக்கர்) நிலம் பயன்படுத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் அரிசியின் பங்கு 0.078% ஆகும்.

இலங்கையில் சுதந்திரத்திற்குப் பிறகு ஒவ்வொரு அரசாங்கமும் அரிசியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற குறிக்கோளுக்கு முக்கியத்துவம் அளித்துவந்தன. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நெல் உற்பத்திக்கென பல உள்ளகக் குடியேற்றங்களும் அரச உதவியுடன் அரங்கேற்றப்பட்டன. பாசன நீர் வழங்கல், நில மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாடுகள், பண்ணை இயந்திரமயமாக்கல், கடன் – மானிய உள்ளீடுகள் மற்றும் விவசாயிகள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் போன்ற ஆதரவு வசதிகளுக்கு கணிசமான அளவு வளங்கள் ஒதுக்கப்பட்டன. இலங்கையில் பழங்காலத்திலிருந்தே பயிரிடப்படும் முக்கிய உணவுப் பயிராக அரிசி இருந்து வருகிறது. இதன் விளைவாக, அரிசி உற்பத்தி சீராக அதிகரித்தது எனலாம். இலங்கைக்கு அரிசியில் தன்னிறைவு காணும் கனவு இருந்தது. அரிசி இறக்குமதியை முழுமையாகக் குறைக்கவேண்டும் என்ற நோக்கு எப்போதும் இருந்துவந்துள்ளது. ஆனால், தன்னிறைவின் வருகை என்பது ஒரு மலராத மொட்டாகவே இன்றும் இருக்கிறது.  

புதிய அரசாங்கம், குறுகிய கால அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளது. சதொச மற்றும் அரச வர்த்தக சட்டபூர்வ கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். புதிய அரசு முகம் கொடுக்க வேண்டிய முதன்மையான பிரச்சினை இதுவெனலாம். புதிய அரசாங்கம் தேசிய மற்றும் உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சியில் அதீத கவனம் கொள்ளும் நிலைப்பாட்டில் இருக்கும் போது, அரிசி அரசியல் சிக்கலுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது துரதிஷ்டம் எனலாம். 

அரிசி விநியோகப் பற்றாக்குறை மற்றும் சில்லறை விலை உயர்வு ஆகியவை எப்போதும் கடுமையான சமூகக் கொந்தளிப்பை தரக்கூடியவை. மழைக்காலம் மலரும் முன் வழமையாக வரும் சமூகக் கொந்தளிப்பு என்பது திடீரென உயரும் அரிசி விலைதான். இந்தப் பின்னணியில், அரிசித் துறையின் தற்போதைய பிரச்சினைகளின் அடித்தளங்களைக் கண்டறிந்து, முறையாகத் திட்டமிட்ட அணுகுமுறையை அமுலாக்குவது இன்றைய உடனடித் தேவையாக உள்ளது.

இலங்கையின் நெல் உற்பத்தியின் அளவு நாட்டின் தேவைகளை ஈடுசெய்யப் போதுமானது என்று கணிக்கப்படும் போதும், அரிசியின் விலை அதிகரித்தே செல்கிறது. அரிசித் தட்டுப்பாடு தான் இதற்கான காரணம் எனக்கூறப்பட்டாலும், அத் தட்டுப்பாடு திட்டமிட்டே ஏற்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

அரிசியின் விலையை நிர்ணயிக்கும் தனியார் ஆலைகள் 

ஜனவரியில் இருந்து, நெல் மற்றும் அரிசியின் விலைகள் படிப்படியாகக் குறைவடைந்து, மார்ச் மாதத்தில் மிகக் குறைந்த அளவை எட்டுகின்றன. இது ஏப்ரல் மாதத்தில் சிறிது அதிகரித்து, ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் சிறிய சரிவைச் சந்திக்கிறது. அனைத்து வகை அரிசிகளின் விலையும் செப்டெம்பர் மாதம் முதல் கடுமையாக உயர்ந்து, டிசம்பரில் உச்சத்தை அடைந்து, ஜனவரி மாதத்தில் மீண்டும் சரியத் தொடங்குகிறது. செப்டெம்பர் – ஜனவரி காலப்பகுதியில் ஏற்படும் அரிசி விலை அதிகரிப்புக் காரணமாக நுகர்வோர் எதிர்கொள்ளும் சிரமங்கள் நாட்டின் அரசியல் ரீதியான பிரச்சினைகளில் ஒன்றாகும்.

பெரிய சேமிப்பு வசதிகள் இன்மை, வாங்கும் திறன் இன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை இன்மை ஆகிய காரணங்களோடு முன்னணி அரிசி ஆலைகளின் கூட்டு முடிவெடுக்கும் தன்மை மற்றும் போட்டி ஆகிய நடைமுறைகளால் அரிசி விலையை நிர்ணயிப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றன. பல மாதங்களாக நிச்சயமற்ற முன் மூலதனத் தேவை காரணமாக நெல் சேமித்து வைக்கும் திறன் இல்லாததாலும், கடன் பிணைப்பு உறவுகளாலும் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஒரே நேரத்தில் தங்கள் அறுவடையை விற்பனை செய்வதால், சந்தையில் விவசாயிகள் இயல்பாகவே பின்தள்ளப்படுகின்றனர். 

நெற் சந்தையில் போதுமான அளவு (சுமார் 33.8%) கொள்முதல் பங்கைக் கையாளும் பெரிய ஆலைகள், அறுவடைக் காலத்தில் அதிக அளவு அரிசியை சந்தைக்குக் கொண்டுவருவதன் மூலம், ஒரு பெருந்தீனியை உருவாக்கி, விலையை திட்டமிட்டுக் குறைத்து, குறைந்தபட்ச விலையில் நெல்லை வாங்கும் சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். ஆரோக்கியமான போட்டிநிலையைக் குழப்பி எதிர்ப்பு நடைமுறைகளான பிரத்தியேக விநியோக ஒப்பந்தங்கள், கிடைமட்ட ‘கார்டெல்’ நடைமுறைகள் மூலம் அவர்களுக்கு மட்டுமே நெல்லை விற்குமாறு நிர்ப்பந்திக்கும் அவலம் நடைமுறையில் இடம்பெறுகிறது. இதன் காரணமாக சிறு குழு ஆலைகள் தான் மிகவும் பாதிக்கப்படுகின்றன. இலங்கையின் மீள் உருவாக்கம் என்பது இந்நிலையைப் புரட்டி சமநிலையைக் கொண்டுவருவதில் தான் தங்கியுள்ளது.

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டம் நுகர்வோருக்கு தீங்கு விளைவிக்கும் போட்டி எதிர்ப்பு நடைமுறைகளைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது. நுகர்வோர் விவகார அதிகாரசபை ஒரு சமச்சீரான விலை முறைமையை உருவாக்க, சட்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கும் போதும் நடைமுறையில் இதனால் அரிசி விலை தொடர்பாக செல்வாக்குச் செலுத்த முடியாதுள்ளது. இது ஒரு சட்ட வலுமிக்க அதிகாரசபையின் கையறுநிலை எனலாம்.

நெல் சந்தைப்படுத்தல் வாரியமானது (Paddy  Marketing  Board) 1971 ஆம் ஆண்டின் பாராளுமன்றச் சட்ட எண் 14 இன் கீழ் நெல்லை வாங்குவதற்கும் கையாளுவதற்கும், விவசாய உற்பத்தியாளரின் நலன்களுக்குச் சேவை செய்வதற்கும் ஒரு வர்த்தகப் பொறிமுறையைச் செயற்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. 1990 களின் நடுப்பகுதியில் அரசியல் ஆதரவுடன் தனியார் ஆலை உரிமையாளர்கள் சுயநலத்திற்காக அதன் செயற்பாடுகளை வலுவிழக்க செய்தனர். அரசியல் செல்வாக்குமிக்க நெல் ஆலையாளர்கள் அறுவடைக் காலங்களில் அரசு வங்கித் துறையிலிருந்து எளிதாக நிதியைப் பெறுவதன் மூலம் ‘வெற்றியை’ அடைந்தனர். அதே வங்கிகளில் கடன்களைப் பெறுவதில் பல தடைகளை எதிர்கொண்ட சிறிய ஆலை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 1,200,000 மெட்ரிக் தொன் நெல் மற்றும் அரிசிக் கையிருப்புகளை இலங்கையின் நான்கு தனியார் ஆலைகள் கொண்டுள்ளன. இது நெல் சந்தைப்படுத்தல் வாரியத்தின் வசமுள்ள 300,000 மெட்ரிக் தொன்னை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

அரசாங்கத்தின் நெல் சந்தைப்படுத்தல் வாரியம், அரிசி ஆலைகளின் பாதுகாப்பு வலையமைப்பாகச் செயற்படுகிறது. ஆலைகளின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளத் தவறியமைக்கு இந்த மறைமுக அனுசரணை தான் காரணம். இதன் விளைவாக, விவசாயிகள் தகுந்த விலை கிடைக்காமல் தங்களின் நெல் அறுவடைக்குரிய கடன்களை அடைக்கப் போராடுகிறார்கள்; நுகர்வோர், சில்லறை விலை உயர்வால் தினமும் திண்டாடுகின்றனர். ஒரு சில பெரிய அளவிலான அரிசி ஆலைகள் அரிசி விற்பனை மூலம் 50 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டக்கூடிய சூழலில், நுகர்வோர் அதிக சில்லறை விலைக்கு முகம்கொடுக்க ஆளாகின்றனர். 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் குடும்பம் அரிசி அரசியலில் செல்வாக்குமிக்கது. இவர்களது ‘அரலிய’ அரிசி ஆலை விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி, பின்னர் அதனை அதிக விலைக்கு விற்று இலாபம் சம்பாதிக்கிறது. இலங்கை அரிசி ஆலைகள் சங்கத்தின் முக்கியஸ்தரான சிறிசேன குடும்பம் நாட்டின் சர்ச்சைக்குரிய அரிசிச் சந்தையில் தனது பங்கைப் பாதுகாப்பதற்காக முயன்றுவருகிறது. அரலிய அரிசி ஆலை ‘அரிசி மாஃபியாவின்’ ஒரு பகுதி என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

பெரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசி இருப்புகளை, குறிப்பாக கொந்தளிப்புக் காலங்களில், பதுக்கி வைத்திருப்பதாய் அறியப்படுகிறது. விநியோகத்தை நிறுத்தி வைப்பதன் மூலம், செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, விலைவாசி உயர வழிசெய்யப்படுகிறது. அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையைப் (MRP) பராமரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு முடியாத பணியாகவே உள்ளது. தரத்திற்கு பெயர் போன ‘கீரி சம்பா’ அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 260 (ஒரு கிலோவுக்கு). இருப்பினும், ஏகபோக நடைமுறைகள் காரணமாக உண்மையான சந்தை விலை, அதை விட அதிகமாகவே உள்ளது. பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களால் உருவாக்கப்பட்ட செயற்கைத் தட்டுப்பாடுகளே இந்த ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் எனலாம். அரிசி ஆலைகளின் செயற்பாடுகள் மட்டுமல்ல, அரசாங்கக் கொள்கைகள் மற்றும் மேற்பார்வையின் தோல்விகளும் இதற்குக் காரணமாக இருப்பதாகக் கூறமுடியும். 

இலங்கையில் அரிசிச் சந்தைக்குள் எவரும் இலகுவாக நுழைந்துவிட முடியாது. இது மிகவும் பிரத்தியேகமான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தனியார் ‘கிளப்’ ஆக இயங்குகிறது. சிறு உற்பத்தியாளர்கள் களத்தில் இறங்குவதற்கான நியாயமான வாய்ப்புகள் இங்கு இல்லை. இது அரிசியின் விலையை மட்டுமல்ல; பழங்கள், காய்கறிகள், முட்டை, மீன்கள் என உள்நாட்டில் விளைவிக்கப்படும் அனைத்துப் பொருட்களினதும் விலையை உயர்ந்ததாக்கிவிட்டது. 

உள்நாட்டில் ஏராளமான அரிசி உற்பத்தி செய்யப்பட்டாலும், செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டுள்ளதால், தற்பாதுகாப்பு நடவடிக்கையாக அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாட்டில் கீரி சம்பா அரிசி போதுமான அளவு கையிருப்பில் இருந்தும், குறிப்பிட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்கள் அரிசி இருப்புகளை மறைத்து அதன் விநியோகத்தை வேண்டுமென்றே குறைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, பெரும்பான்மையான மக்களால் பொதுவாக உட்கொள்ளப்படும் நாட்டு அரிசி மற்றும் சிவப்பு – பச்சை அரிசி போன்ற பிற அரிசி வகைகள் தற்போது தாராளமாகக் கிடைக்கின்றன. 

முடிவு : அரிசி விலையேற்றத்தைத் தடுப்பதில் கூட்டுறவின் வகிபங்கு

இலங்கையில் நெல் கொள்வனவுச் செயற்பாட்டில் கூட்டுறவுகள் பிரதான பங்கை வகித்தன. குறிப்பாக, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பல கூட்டுறவு ஆலைகள் அரிசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் கணிசமானளவு பங்கு வகித்தன. ஆனால், இன்று அவை மிகவும் வலுவிழந்துள்ளன. கடந்த காலங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் நல்ல விலைக்கு நெல்லைக் கொள்முதல் செய்வதை உறுதிசெய்ய தங்கள் பேரம் பேசும் சக்தியை பலப்படுத்திக்கொண்டிருந்தன; உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்த உதவின; சந்தை தேவைக்கு ஏற்ப விநியோகத்தைச் சீரமைத்தன. அரிசி உற்பத்தியில், நெல்லைப் பதப்படுத்துதல் என்பது ஒரு முக்கியமான செயற்பாடாகும். கூட்டுறவுச் சங்கங்கள் தாங்கள் சேகரிக்கும் நெல்லை, தங்கள் சொந்த அரிசி ஆலைகளிலோ அல்லது ஒப்பந்தம் மூலம் தனியார் ஆலைகளிலோ பதப்படுத்திய பல கடந்த கால அனுபவங்கள் உண்டு. அவை தங்கள் சொந்தக் கிளைகள் அல்லது தனியார் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் நன்கு பதப்படுத்திய அரிசியை விற்பனையும் செய்தன.

நெல் உற்பத்திச் செலவைக் குறைக்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டிய நிலை இன்று எழுந்துள்ளது. உரம் மற்றும் விவசாய உள்ளீடுகளின் விலை உயர்வு காரணமாக, இயற்கை விவசாயத்தில் கவனம்கொள்ள வேண்டியிருக்கிறது. சிறிய அளவிலான விவசாயிகள், ஜப்பான் விவசாயக் கூட்டுறவு போன்ற பொருத்தமான செயற்பாட்டு அலகுகளின் அனுபவங்கைப் பெற்று, ஒழுங்கமைப்புப் பெற வேண்டிய தேவை வந்துள்ளது. 

இந்த விடயத்தில் வியட்நாம் அனுபவத்தை முன்னுதாரணமாகக் கொள்ளலாம். பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய முதல் ஐந்து நாடுகளில் வியட்நாமும் உள்ளது. மீகாங் டெல்டா பகுதி வியட்நாமின் தேசிய அரிசி உற்பத்தியில் 55.7% பங்களிப்பை வழங்குகிறது. சிறிய அளவான விளைநிலங்கள் மற்றும் வேளாண் இரசாயனங்கள் காரணமாக மீகாங் டெல்டா பகுதியின் விவசாயத்துறை பாதிக்கப்பட்டது. நெல் உற்பத்தி மற்றும் நிலையான அபிவிருத்தியில் கவனம் கொண்ட வியட்நாம் விவசாயிகள், ஒரு  நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வை நாடினர். கூட்டுப் பொருளாதார முயற்சிகள் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ஆகியவை குறிப்பிடத்தக்க நன்மையான தாக்கத்தை விவசாயிகளுக்குத் தந்தன. மீகாங் டெல்டா பகுதியின் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் நெற் கூட்டுறவுகளின் பங்கு இன்றியமையாதது. இக் கூட்டுறவுகள் காலநிலை ஸ்மார்ட் வேளாண்மை (CSA) முயற்சிகளுக்கு 26.1% பங்களிப்பை வழங்குகின்றன. மேலும், உயர் தொழில்நுட்பத்தின் மூலம் 130,192 ஹெக்டேயர் (8.5%) பரப்பளவில், நிலையான விவசாய நடைமுறைகளான மாற்று நனைத்தல் மற்றும் உலர்த்துதல் (Alternative Wetting and Drying) முறைகளைச் செயற்படுத்துகின்றன.

விவசாய முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு விவசாயிகளின் கூட்டுப் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க வழிவகுக்க வேண்டும். நெல் மற்றும் அரிசியின் விலைகளை கடுமையான ஏற்ற – இறக்கங்கள் இன்றி நிலைப்படுத்தி, சிறு குழு விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தை உறுதிப்படுத்தி, நெல் விவசாயத்தை வாழ்வாதாரமாக மாற்ற பலமான கூட்டு அணுகுமுறை முன்னெடுக்கப்பட வேண்டும். 

நெல் உற்பத்தி, விநியோகம் என்பன ஆலைகளின் பிடிக்குள் இருக்கின்றன. சுதந்திரமான சந்தை நடைமுறையில், திட்டமிட்ட ஒரு பொறிமுறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் கடமை ஆகும். ஆலைகளுக்கு போட்டியாக, மாற்று வழிகளை உருவாக்க வேண்டும். கூட்டுறவின் கூட்டுப் பங்காண்மை ஒரு நடைமுறை வழியாகும். புதிய அரசாங்கம் முழு வீச்சுடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு பாய்ச்சலை முன்வைக்கும் இத்தருணத்தில் கூட்டுறவின் வகிபாகம் மீள்-வாசிப்புக்கு உட்படவேண்டியுள்ளது. பலர் கருதுவது போல கூட்டுறவு காலாவதியாகிய கட்டமைப்பு அல்ல. கைவிடப்பட்ட கூட்டுறவின் அருமையை உணரும் காலம் வந்துள்ளது. அரசுக்கு இதில் முக்கிய பங்கு உண்டு. பல கூட்டுறவு அமைப்புகள் நிதித்தேவையை வலியுறுத்துகின்றன. உண்மையில் கூட்டுறவு அமைப்புகள் தங்கள் நோக்கம் அறிந்து, பலம் அறிந்து செயற்படவேண்டும். ஒரு தோப்பாக மாறி கூட்டுறவுக் காடுகளை உருவாக்க வேண்டும். அரசாங்கம் இது பற்றி உடனடியாகக் கவனம் கொள்ளவேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு ஆகும். 


ஒலிவடிவில் கேட்க

1469 பார்வைகள்

About the Author

வை. ஜெயமுருகன்

சமூக அபிவிருத்தி ஆய்வாளரான இவரது எழுத்துக்கள் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கவனம் கொள்வதுடன் போரின் பின்னரான நினைவுகொள் காலத்தின் மீள் கட்டமைப்புக்கள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. இவர், அபிவிருத்திக் கல்விக்கான கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக 'இலங்கையின் போரின் பின்னரான அபிவிருத்தி முரண்நிலை' என்னும் கருப்பொருள் மீதான ஆய்வை முன்னெடுத்தவர். இவ் ஆய்வு நூலாக வெளிவரவுள்ளது. சர்வதேச கிறிஸ்டின் பல்கலைக்கழகத்தில் 'M.A in Peace Study' ஆய்வுப் பட்டம் செய்ய ரோட்டரி (Rotary Peace Fellow) புலமைப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்