வடக்கு மாகாணத்தின் எதிர்கால வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி மாற்றம்
Arts
18 நிமிட வாசிப்பு

வடக்கு மாகாணத்தின் எதிர்கால வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி மாற்றம்

July 4, 2024 | Ezhuna

ஒரு பிரதேசத்தின் பல்வேறு விடயங்களை கட்டமைப்பதில் அந்தப் பிரதேசத்தின் இயற்கை அம்சங்கள் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றன. குறிப்பாக ஒரு பிரதேசத்தின் காலநிலை சார்ந்த அம்சங்கள் அந்தப் பிரதேசத்தினுடைய இயற்கையையும் அந்த பிரதேசத்திற்குரிய பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களையும் கட்டமைப்பதில் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றது. அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தினுடைய பல்வேறு வகைப்பட்ட விடயங்களை தீர்மானித்ததில் வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை மிகப்பெரிய செல்வாக்கினை பெற்றிருக்கின்றது. வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை சார்ந்த பாரம்பரிய அறிவியல் விடயங்களையும் நவீன விஞ்ஞான ரீதியிலான ஆய்வு சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கியதாக வடக்கு மாகாணத்தினுடைய காலநிலைப் பண்புகளை முழுமைப்படுத்தி வெளியிடுவதாக ‘பிராந்திய காலநிலையியல் : வடக்குப் பிராந்தியம், இலங்கை‘ எனும் தொடர் அமைகின்றது.

அறிமுகம்

ஒரு பிரதேசத்தின் எதிர்கால காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வுகள் இன்று உலகளாவிய ரீதியில் முதன்மை பெற்ற விடயங்களாக மாறி வருகின்றன. எதிர்கால காலநிலை மாற்றம் பற்றிய விடயங்களை அறிந்து கொள்வதன் ஊடாக காலநிலை மாற்றத்தை குறைப்பதற்கான அல்லது இயைபாக்குவதற்கான செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுக்க முடியும் என்ற அடிப்படையில், எதிர்காலக் காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வுகளை பல்வேறு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன (Hamadamin & Khwarahm, 2023). காலநிலை மாற்றத்திற்கு எதிரான பன்னாட்டு அரச குழுவின் அறிக்கைகளின் பிரகாரம், ஆரம்ப காலத்தில் பிரதிநிதித்துவப் பாதை (Representative Concentration Pathways – SSP) என்ற அடிப்படையில், காபன் வெளியீட்டுக் காலங்கள் வரையறுக்கப்பட்டு, ஒவ்வொரு காலகட்டங்களிலும் நிகழ்கின்ற எதிர்கால காலநிலை மாற்றத் தன்மைகள் பற்றி, குறிப்பாக மழைவீழ்ச்சி – வெப்ப நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் பற்றி, பல்வேறுபட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன (Dasandara et al., 2021). எனினும் 2020 ஆம் ஆண்டு ஐ.பி.சி.சி., பகிரப்பட்ட சமூகப் பொருளாதார பாதைகள் (Shared Socio Economic Pathways – SSP) என்ற அடிப்படையிலான காபன் வெளியீட்டுக் காட்சித் தோற்றங்களை உருவாக்கி, அவற்றின் ஊடாக எதிர்காலத்தில் காலநிலை மாற்றம் பற்றிய விடயங்கள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பான அடிப்படைகளை வெளியிட்டது. அதன் அடிப்படையில் உலகின் பல நாடுகளும், தங்களுடைய நாடுகளிலும் நாட்டின் பிராந்தியங்களிலும் நிகழ உள்ள எதிர்கால காலநிலை மாற்றத் தன்மைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தணிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. அந்த அடிப்படையில் நான்கு காலநிலைக் காலங்கள் வரையறுக்கப்பட்டு, அவற்றின் காலநிலை மாற்றத் தன்மைகள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன (Bai et al., 2023)). அந்த அடிப்படையில் 2020 முதல் 2039 வரை, 2040 முதல் 2059 வரை, 2060 முதல் 2079 வரை, 2070 முதல் 2099 வரை என நான்கு வெவ்வேறு காலநிலைக் காலங்கள் வரையறுக்கப்பட்டு எதிர்கால காலநிலை மாற்றங்கள் கண்டறியப்படுகின்றன (Katzenberger et al., 2021).

அட்டவணை 10.1 எதிர்கால காலநிலை மாற்றறம் பற்றிய எதிர்வுகூறலுக்கு பயன்படுத்தப்பட்ட மாதிரிகள்

மூலம் : உலக வங்கியின் காலநிலை மாற்ற ஆய்வு அமைப்பு

வடக்கு மாகாணத்தின் எதிர்கால காலநிலை மாற்றம் பற்றி இந்த அத்தியாயம், 16 மாதிரிகளின் அடிப்படையில் பெறப்பட்ட எதிர்காலக் காலநிலைப் போக்கினை, பகிரப்பட்ட சமூகப் பொருளாதார நிலைமை என்ற வரையறைக்குக் கீழ், வேறுபட்ட காட்சித் தோற்றங்களில், வேறுபட்ட காலநிலைக் காலங்களின் அடிப்படையில் விபரிக்கவிருக்கிறது. குறிப்பாக, குறைந்த அளவில் காபன் வெளியீட்டு நிலைமை, நடுத்தர அளவிலான காபன் வெளியீட்டு நிலைமை, உச்ச அளவிலான காபன் வெளியீட்டு நிலைமை என்பவற்றின் அடிப்படையில், எதிர்காலத்தில் எத்தகைய வெப்பநிலை அதிகரிப்பு குறிப்பிட்ட இந்த நான்கு காலநிலை காலங்களிலும் இடம்பெறும் என்ற விடயத்தினையும், எவ்வாறு மழைவீழ்ச்சி மாற்றம் ஏற்படும் என்பதனையும் விளக்குவதாக இது உள்ளது. இதற்காக காலநிலை மாற்றத்திற்கான உலக வங்கியின் காலநிலை மாற்ற செயற்றிட்டத்தின் கீழ் தரவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள், குறிப்பாக மாதாந்தத் தரவுகள், 2020 ஆம் ஆண்டிலிருந்து 2,100 ஆம் ஆண்டு வரைக்கும் பெறப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன (Wen et al., 2021). 

வடக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் அவதானிக்கப்பட்ட தரவுகளோடு, மாதிரிகளின் மூலம் உருவாக்கப்பட்ட கடந்த காலத் தரவுகள் ஒப்பீடு செய்யப்பட்டு, அவற்றின் உண்மைத் தன்மை அறியப்பட்டு, உண்மைத் தன்மையின் அடிப்படையில், தரவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது (Meinshausen et al., 2020). பல்வேறு நாடுகளின் வானிலை ஆராய்ச்சி நிலையங்களின் ஆய்வுகளில் உருவாக்கப்பட்ட வேறுபட்ட மாதிரிகளின் அடிப்படையில், எதிர்கால காலநிலை மாற்றம் பற்றிய பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன (படம் 10.1 மற்றும் 10.2). 

1. image

படம் 10.1 வேறுபட்ட காபன் வெளியீட்டு தோற்றப்பாட்டின் அடிப்படையிலான வேறுபட்ட காலநிலைக் காலங்களுக்கான எதிர்கால வெப்பநிலை அதிகரிப்பு.

2. image

படம் 10. 2. வேறுபட்ட காபன் வெளியீட்டு தோற்றப்பாட்டின் அடிப்படையிலான வேறுபட்ட காலநிலைக் காலங்களுக்கான எதிர்கால மழைவீழ்ச்சி மாறுபாடு.

‘SSP 4.5 இன்’ கீழான வெப்பநிலை அதிகரிப்பு

இந்தக் காபன் வெளியீட்டுத் தோற்றப்பாட்டின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டிலிருந்து 2100 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், வடக்கு மாகாணத்தின் வெப்பநிலை, 2.3 பாகை செல்சியஸ் அதிகரிக்கும் என முடிவுகள் காட்டுகின்றன. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமான வெப்பநிலை அதிகரிப்பு காணப்படும் எனவும், இது 1.25°C இருக்கும் என்றும், இதற்கு அடுத்தபடியாக ஜூன் மாதத்தில் 1.24°C வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், ஜூலை மாத வெப்பநிலை 1.23°C அதிகரிக்கும் எனவும், 4.5 காபன் வெளியீட்டுக் காலத்தினுடைய பொதுமைப்படுத்தப்பட்ட மாதிரிகள் குறிப்பிடுகின்றன. அனைத்து மாதிரிகளும், இந்தக் காலப் பகுதிகளுக்கான வெப்பநிலை ஒரு பாகை செல்சியஸ் இற்கும் அதிகமாக இருக்கும் எனக் காட்டுகின்றன. மிகக் குறைவாக, நவம்பர் மற்றும் டிசம்பரில் இந்த அதிகரிப்பு என்பது 1.01°C ஆகக் காணப்படும் எனவும் மாதிரிகள் காட்டுகின்றன. வெப்பநிலை அதிகரிப்பைப் பொறுத்தவரையில், அனைத்து மாதிரிகளுமே, இந்த 4.5 இன் கீழான காட்சித் தோற்ற அமைப்பின் கீழ், ஒவ்வொரு காலநிலைக் காலங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும் எனக் குறிப்பிடுகின்றன (படம் 10.3 10.4 மற்றும் 10.5).

3. image

படம் 10.3 பகிரப்பட்ட சமூகப் பொருளாதாரப் பாதைகளின், 4.5 காபன் வெளியீட்டு தோற்றக் காட்சியமைப்பில் வேறுபட்ட காலநிலைக் காலங்களுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட எதிர்கால வெப்பநிலை அதிகரிப்பு (A 2020-2040, B2040-2060, C2060-2080, D2080-2100).

4. image

படம் 10.4 பகிரப்பட்ட சமூகப் பொருளாதாரப் பாதைகளின், 4.5 காபன் வெளியீட்டு தோற்றக் காட்சியமைப்பில் வேறுபட்ட காலநிலைக் காலங்களுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட எதிர்கால மாத அடிப்படையிலான வெப்பநிலை அதிகரிப்பு (ஒவ்வொரு பத்தாண்டு அடிப்படையிலும்).

படம் 10.5 பகிரப்பட்ட சமூகப் பொருளாதாரப் பாதைகளின், 4.5 காபன் வெளியீட்டு தோற்றக் காட்சியமைப்பில் வேறுபட்ட மாதிரிகளின் மாத அடிப்படையிலான எதிர்கால வெப்பநிலைப் போக்கு.

மாதிரிகளின் படி, எதிர்வுகூறப்பட்ட வெப்பநிலை ஒவ்வொரு மாதமும் மாதிரிகளுக்கு இடையில் பல மாறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன. ‘GFDL_CM3’ இல் அதிக அதிகரிப்பு உள்ளது. இம்மாதிரியின் அடிப்படையில் 2020 – 2100 காலப்பகுதியில் ஜனவரியில் 2.43°C அதிகரிப்பு இருக்கும் என்பதோடு, ஜனவரிக்கான மிகக் குறைந்த கணிப்பு ‘BCC_CSM1_1_M’ இனாலும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் அளவு 1.04°C ஆகும். ஏனைய மாதிரிகள் இந்த மாதத்திற்கான வெப்பநிலை அதிகரிப்பின் பல்வேறு பெறுமானங்களைக் குறிக்கின்றன. பெப்ரவரி மாதத்தைப் பொறுத்தவரை, மாதிரியானது 2.63°C வெப்பநிலையைக் காட்டுகிறது. இதனால் இந்த மாதத்திற்கான அதிகபட்ச பெறுமானம் ‘GFDL_CM3’ மாதிரியால் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த பெறுமானம் (1.01°C) ‘BCC_CSM1_1_M’ மாதிரியால் கணிக்கப்பட்டுள்ளது. ‘CSIRO_MK3_6_0’ மாதிரியானது மார்ச் மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலையாக 2.86°C இருக்கும் என்று கணித்துள்ளது. ‘FIO_ESM’ மாதிரியானது குறைந்த வெப்பநிலைப் பெறுமானத்தைக் கணித்துள்ளது, மேலும் இதன் அளவு 0.87°C ஆக இருக்கும் எனக் குறிப்பிடப்படுகின்றது. 2020 முதல் 2100 வரையிலான காலகட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான அதிகபட்ச பெறுமானத்தை (3.28°C) ‘CSIRO_MK3_6_0’ மாதிரி கணித்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் குறைந்த பெறுமானத்தை (0.92°C) ‘FIO_ESM’ மாதிரி காட்டுகின்றது. ஏப்ரல் மாதத்தைப் போலவே, அதே மாதிரியிலிருந்து, அதிகபட்ச வெப்பநிலை அதிகரிப்பு மே மாதத்திற்கும் காணப்படுகின்றது. இதன் பெறுமானம் 2.93°C ஆகும்.  மேலும் குறைந்த அதிகரிப்பாக 0.81°C உள்ளது. ஜூன் மாதத்தின் அதிகூடிய வெப்பநிலை ‘GFDL_CM3’ இனால் முன்மொழியப்பட்டுள்ளது. இம்மாதிரி, ஜூன் மாதத்தில் 2.99°C வெப்பநிலை அதிகரிப்புக் காணப்படும் எனக் கூறுகின்றது. ஏனைய மாதிரிகளுடன் ஒப்பிடும்போது ‘BCC_CSM1_1’ மாதிரி, ஜூன் மாதத்திற்குரிய மதிப்பிலிருந்து 1.11°C ஆகக் குறைந்த அளவீட்டைக் காட்டுகிறது. ஜூலை மாதத்தில், ‘GFDL_CM3’ (2.67°C) அதிகபட்சப் பெறுமானத்தைக் கணித்துள்ளது. மேலும் ஜூலை மாதத்திற்கான குறைந்த பெறுமானத்தை ‘GISS_E2_R’ (1.18°C) மாதிரி கணித்துள்ளது. ஏனைய மாதிரிகளுடன் ஒப்பிடும்போது ‘IPSL_CM5A_MR’ மாதிரியானது ஓகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் அதிகூடிய வெப்ப அதிகரிப்பைக் காட்டுகின்றது. ஓகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் வெப்பநிலை முறையே 2.3°C, 2.55°C மற்றும் 2.33°C என்றவாறு அதிகரிக்கும் என மாதிரிகள் வெளிப்படுத்துகின்றன. ஓகஸ்ட் மாதத்திற்கான ஏனைய மாதிரிகளில், ‘CCSM4’ மாதிரி மிகக் குறைந்த பெறுமானத்தை (1.16°C) முன்வைக்கிறது. ‘BCC_CSM1_1’ மாதிரி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான குறைந்த வெப்பநிலைப் பெறுமானத்தைக் காட்டுகிறது. எதிர்வுகூறப்பட்ட வெப்பநிலையின் அதிகபட்ச பெறுமானத்தை, ‘GFDL_CM3’ மாதிரியானது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கணிக்கிறது. வட மாகாணத்தில் 2020 முதல் 2100 வரையில், நவம்பர் மாதத்துக்கான குறைந்த பெறுமான எதிர்வுகூறலை ‘GISS_E2_H’ மாதிரியும், டிசம்பர் மாதத்துக்கான குறைந்த பெறுமான எதிர்வுகூறலை ‘BCC_CSM1_1_M’ மாதிரியும் காட்டுகின்றன.

6. image

படம் 10.6 பகிரப்பட்ட சமூகப் பொருளாதாரப் பாதைகளின், 4.5 இன் கீழ், வடக்கு மாகாணத்தின் எதிர்வுகூறப்பட்ட வெப்பநிலையின் பொதுமைப்படுத்தப்பட்ட இடம்சார் பரம்பல்.

‘SSP 8.5’ இன் கீழ் எதிர்வுகூறப்பட்ட வெப்பநிலை

‘SSP 8.5’ காட்சிகளின் கீழ், 2020 முதல் 2100 வரை எதிர்வுகூறப்பட்ட வெப்பநிலை, ஒவ்வொரு மாதிரியிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றது. எவ்வாறாயினும், மாதிரிகள் பொதுமைப்படுத்தப்பட்டமையின் அடிப்படையில், இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் இந்தக் காலத்திற்கான சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 1.81°C என எதிர்வு கூறப்படுகின்றது. இருப்பினும், மாத அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் வேறுபாட்டைக் காட்டுகின்றது. பகுப்பாய்வின் படி, ஏப்ரல் மாதத்தில், மாதிரிகளின் பொதுமைப்படுத்தப்பட்ட வெப்பநிலை எதிர்வுகூறல் மிக அதிகமாக உள்ளது. அவை, ஏப்ரல் மாதத்தில், சராசரியாக 2.06°C எதிர்வுகூறலைக் காட்டுகின்றன. அனைத்து மாதிரிகளின் பொதுமைப்படுத்தலின்படி, நவம்பர் மற்றும் டிசம்பரில் மிகக் குறைந்த பெறுமான எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இரண்டு மாதங்களும் ஒரே பெறுமான (1.69°C) அதிகரிப்பையே காட்டுகின்றன (படம் 10.7).  

7. image

படம் 10.7 பகிரப்பட்ட சமூகப் பொருளாதாரப் பாதைகளின், 8.5 காபன் வெளியீட்டுத் தோற்றக் காட்சியமைப்பில் வேறுபட்ட காலநிலைக் காலங்களுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட எதிர்கால வெப்பநிலை அதிகரிப்பு (A 2020-2040, B 2040 -2060, C 2060-2080, D 2080-2100)

ஒவ்வொரு மாதிரியின் பகுப்பாய்வின் படி, சராசரி வெப்பநிலை அதிகரிப்பிலும் கணிசமான வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும், அதிகபட்ச சராசரி வெப்பநிலைப் பெறுமானத்தை ‘IPSL_CM5A_MR’ மாதிரியில் அடையாளம் காணலாம். இதன் சராசரிப் பெறுமானம் 4.18°C ஆகும். இதற்கு அடுத்தபடியாக, ‘GFDL_CM3’ மாதிரியானது உயர் சராசரிப் பெறுமானத்தை 4.17°C ஆகவும், ‘MIROC_ESM_CHEM’ மாதிரியானது உயர் சராசரிப் பெறுமானத்தை 4.15°C ஆகவும், 2020 முதல் 2100 ஆண்டுக்கான காலப்பகுதிக்கான ‘SSP 8.5’ காட்சித் தோற்றத்தில் எதிர்வுகூறியுள்ளன. மறுபுறம், குறைந்த சராசரி வெப்பநிலை மதிப்புகள் ‘GISS_E2_R’ இல் அடையாளம் காட்டப்படுகின்றன. இதன் பெறுமானம் 2.45°C ஆகும். ‘GISS_E2_H’ மாதிரியானது சராசரியாக 2.51°C பெறுமானத்தைக் காட்டுகிறது. இருப்பினும், ‘SSP 4.5’ உடன் ஒப்பிடும்போது ‘SSP 8.5’ அதிகூடிய பெறுமான எதிர்வுகூறலை வெளியிடுகின்றது.  

வடக்கு மாகாணத்தின் மாதாந்தச் சராசரி எதிர்வுகூறப்பட்ட வெப்பநிலை அளவுகளின் மாதிரிகளிடையே சில வேறுபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதிரியும் இலங்கையின் வடக்குப் பகுதியில் வெவ்வேறு மாதாந்தச் சராசரி மாற்றங்களைக் காட்டுகிறது. ஜனவரியில், ‘MIROC_ESM_CHEM’ மாதிரியில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை 4.15°C ஆகும். இதே மாதத்துக்கான குறைந்த பெறுமானத்தை (2.21°C) ‘GFDL_ESM2G’ மாதிரி குறிப்பிடப்பட்டுள்ளது. பெப்ரவரியின் பொதுமைப்படுத்தப்பட்ட சராசரி வெப்பநிலை 2.98°C ஆகும். ஆனால் மாதிரிகளுக்கிடையே, பெப்ரவரியில் சில உயர்ந்த மற்றும் குறைந்த கணிப்பு மாறுபாடுகள் உள்ளன. இம்மாதத்துக்கான அதிகபட்ச பெறுமானத்தை (4.39°C) ‘MIROC_ESM_CHEM’ மாதிரி காட்டுகின்றது. குறைந்த பெறுமானத்தை (2.18°C) ‘BCC_CSM1_1_M’ வெளியிட்டுள்ளது. 2020 முதல் 2100 வரையான காலத்துக்கான மார்ச் மாதத்துக்கான மாதிரிகளின் பொதுமைப்படுத்தப்பட்ட சராசரி வெப்பநிலை எதிர்வுகூறல் 3.11°C ஆகும். இம்மாதத்துக்கான அதிகபட்ச பெறுமானத்தை (4.27°C) ‘MIROC_ESM’ மாதிரியும், குறைந்தபட்ச பெறுமானத்தை (2.16°C) ‘BCC_CSM1_1_M’ மாதிரியும் வெளிப்படுத்துகின்றன (படம் 10.8).

8. image

படம் 10.8 பகிரப்பட்ட சமூகப் பொருளாதாரப்பாதைகளின், 8.5 காபன் வெளியீட்டுத் தோற்றக் காட்சியமைப்பில் வேறுபட்ட காலநிலைக் காலங்களுக்கான வேறுபட்ட மாதிரிகளின் அடிப்படையிலான எதிர்கால வெப்பநிலைப் போக்கு (மாதாந்த ரீதியானது).

‘CSIRO_MK3_6_0’ ஆனது ஏப்ரல் மாதத்திற்கான கணிக்கப்பட்ட வெப்பநிலையின் அதிகபட்ச பெறுமானத்தைக் காட்டுகிறது. இது 5.04°C ஆகும். மேலும் இதுவே வட மாகாணத்தில் ஒவ்வொரு மாதமும் எதிர்வுகூறப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாகும். ஏப்ரல் மாதத்துக்கான எதிர்வுகூறப்பட்ட வெப்பநிலையின் குறைந்தபட்ச பெறுமானத்தை (2.44°C) ‘GISS_E2_H’ மாதிரி காட்டுகின்றது. மேலும் ஏப்ரல் மாதத்துக்கான அனைத்து மாதிரிகளின் பொதுமைப்படுத்தப்பட்ட மாதசராசரிப் பெறுமானம் 3.18°C ஆகும். மே மாதத்திற்கான மாதிரிகளின் சராசரிப் பெறுமானம் 3.41°C ஆகும். இருப்பினும், ‘CSIRO_MK3_6_0’ மாதிரி, மே மாத வெப்பநிலை 4.82°C ஆல் அதிகரிக்கும் எனக் கூறுகின்றது. மேலும் ‘GISS_E2_H’ மாதிரி, மே மாதத்தில் 2.54°C அதிகரிப்பு இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. இருப்பினும், CESM1_CAM5, GFDL_CM3, MRI_CGCM3, MIROC_ESM, MIROC_ESM_CHEM போன்ற வேறு சில மாதிரிகளும் இந்த மாதத்தில் அதிக வெப்பநிலை இருக்கும் எனக் காட்டுகின்றன. ஜூன் மாதத்தில், மாதிரிகளின் சராசரி பொதுமைப்படுத்தப்பட்ட வெப்பநிலை அதிகரிப்பு 3.33 பாகை செல்சியஸ் ஆக அமையும் என மாதிரிகள் எதிர்வுகூறியுள்ளன. இருப்பினும், ‘GFDL_CM3’ மாதிரி, ஜூன் மாத வெப்பநிலை 4.64°C ஆக அதிகரிக்கும் எனக் காட்டுகின்றது. அதேவேளை ‘GISS_E2_R’ மாதிரி, குறைந்தபட்ச அதிகரிப்பைக் (2.54°C) காட்டுகின்றது. ஜூலை மாதத்திற்கான மாதிரிகளின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 3.14°C  ஆகும். 

ஓகஸ்ட் மாதத்தின் அதிகபட்ச பெறுமானத்தை ‘IPSL_CM5A_MR’ மாதிரி காட்டுகின்றது. இதன் பெறுமானம் 4.41°C ஆகும். மேலும் ‘GFDL_ESM2 G’ மாதிரி, இம்மாதத்துக்கான மிகக் குறைந்த பெறுமானத்தைக் (2.01°C) காட்டுகிறது. இந்த மாதத்துக்கான  அனைத்து மாதிரிகளினாலும் எதிர்வுகூறப்பட்ட வெப்பநிலைகளின் சராசரிப் பெறுமானம் 3.08°C  ஆகும். 2020 முதல் 2100 வரையிலான காலத்துக்கான செப்டெம்பர் மாத சராசரி எதிர்வு கூறல் 3.04°C ஆகும். மேலும், அதிகபட்சப் பெறுமானத்தை (4.43°C) ‘IPSL_CM5A_MR’ இல் இருந்து அடையாளம் காணலாம். குறைந்த பெறுமானத்தை (1.91°C) ‘MRI_CGCM3’ இல் இருந்து அடையாளம் காணலாம்.

ஒக்டோபர் (4.13°C)  மற்றும் நவம்பர் (4.31°C)  மாதங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை கணிப்புகள் ‘IPSL_CM5A_MR’ இல் இருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளன.  ஒக்டோபர் மாதத்தின் குறைந்த பெறுமானத்தை (2.6°C) ‘GFDL_ESM2G’ மாதிரி எதிர்வு கூறியுள்ளது. நவம்பர் மாதத்துக்கான குறைந்த பெறுமானத்தை (2.16°C) ‘GISS_E2_H’ மாதிரி எதிர்வு கூறியுள்ளது. டிசம்பர் மாதத்துக்கான குறைந்த மாதாந்தச் சராசரியாக 2.88°C கணிக்கப்பட்டுள்ளது. மாதிரிகளின் பகுப்பாய்வின்படி, எதிர்காலத்திலும், டிசம்பர் மாதமே, வட மாகாணத்தில் மிகவும் குளிரான மாதமாக இருக்கும். ‘GFDL_CM3’ மாதிரி டிசம்பர் மாதத்துக்கான அதிகபட்சப் பெறுமானத்தை (4.16°C)  எதிர்வுகூறியுள்ளது. குறைந்த பெறுமானத்தை (2.26°C) ‘GISS_E2_H’ மாதிரி எதிர்வுகூறியுள்ளது. 

‘SSP 4.5’ காட்சிகளின் கீழ் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் எதிர்கால மழைவீழ்ச்சி மாற்றங்கள்

‘SSP 4.5’ காட்சிகளின் கீழ், 2020 முதல் 2100 வரையிலான காலப்பகுதிக்கான எதிர்கால மழைவீழ்ச்சிக் கணிப்புத் தொடர்பாக மாதிரிகளுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன. அனைத்து மாதிரிகளின் பொதுமைப்படுத்தப்பட்ட அடிப்படையிலான எதிர்வுகூறலின் படி, வட மாகாணத்தில், ‘SSP 4.5’ காபன் வெளியீட்டுக் காட்சியமைப்பில், மழைவீழ்ச்சிக்கான அதிகரிப்பாக 106.19 மி.மீ. எதிர்வு கூறப்பட்டுள்ளது. இருப்பினும், மாதிரிகளுக்கிடையே இது மாதாந்தம் வேறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக ஜனவரி மாதத்தினைப் பொறுத்தவரையில் மாதிரிகளின் பொதுமைப்படுத்தப்பட்ட சராசரி 2.8 மில்லி மீற்றரால் வேறுபடும் என மாதிரிகள் குறிப்பிடுகின்றன. அதேபோன்று பெப்ரவரி மாதத்தின் சராசரி என, கிட்டத்தட்ட 4.8 மில்லி மீற்றரை மாதிரிகள் காட்டுகின்றன.  வடக்கு மாகாணத்தில் ‘SSP 4.5’ காபன் வெளியீட்டுக் காலத்தில் மறைப்பெறுமானத்திலேயே மழைவீழ்ச்சி இருக்கும் என மாதிரிகள் குறிப்பிடுகின்றன.  மார்ச் மாதத்தில் இது -3.8 மில்லி மீற்றராகவும், ஏப்ரல் மாதத்தில் -2.6 மில்லி மீற்றராகவும், மே மாதத்தில் -9.8 மில்லி மீற்றராகவும் உள்ளன. இந்த மாதிரிகளின் அடிப்படையில், வடக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் வறட்சி நிலமையே காணப்படும் என அறிய முடிகின்றது. எதிர்காலத்திற்கான மழைவீழ்ச்சி குறைவடைந்து வெப்பநிலை அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில், வடக்கு மாகாணம் மிகப்பெரிய நீர்ப் பற்றாக்குறையை அனுபவிக்கும் என்பதைக் கணிப்பிட முடிகின்றது. 

மாதிரிகளுக்கு இடையே 2020 முதல் 2100 வரையிலான சராசரி மழைவீழ்ச்சியில் வேறுபாடுகள் உள்ளன. அதிகபட்ச சராசரி மழைவீழ்ச்சி ‘CSIRO_MK3_6_0’ மாதிரியால் கணிக்கப்பட்டுள்ளது. இதன் அளவு 342.76 மி.மீ. ஆகும். அதே நேரத்தில், ‘FIO_ESM’ மாதிரி, சராசரி மழை அளவை எதிர்மறை மதிப்பில் எதிர்வுகூறியுள்ளது. இதன் பெறுமானம் -48.05 மி.மீ. ஆகும். ‘NORESM1_M’ மாதிரியின் சராசரி மழையளவு 288 மி.மீ. ஆகவும், ‘MIROC_ESM’ மாதிரியின் சராசரி மழையளவு 269.5 மி.மீ. ஆகவும், ‘MIROC5’ மாதிரியின் சராசரி மழையளவு 249.88 மி.மீ. ஆகவும், ‘MIROC_ESM_CHEM’ மாதிரியின் சராசரி மழையளவு 279.88 மி.மீ. ஆகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘GFDL_ESM2G’ மாதிரியின் சராசரி மழையளவு 229.29 மி.மீ ஆகவும், ‘CGFDL_ESM2G1’ மாதிரியின் சராசரி மழையளவு 221.5 மி.மீ. ஆகவும், ‘_CSM1_1_M’ மாதிரியின் சராசரி மழையளவு 190.04 மி.மீ. ஆகவும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ‘SSP 4.5’ காட்சிகளின் கீழ், 2020 முதல் 2100 வரையிலான சராசரி மழையளவு ‘IPSL_CM5A_MR’ ஆல் 2.85 மி.மீ. எனவும், ‘GFDL_CM3’ ஆல் 65.8 மி.மீ. எனவும், குறைவான அளவில் கணிக்கப்பட்டுள்ளது (படம் 10.9).

9. image

படம் 10.9. பகிரப்பட்ட சமூகப் பொருளாதாரப் பாதைகளின், 4.5 காபன் வெளியீட்டுத் தோற்றக் காட்சியமைப்பில் வேறுபட்ட காலநிலைக் காலங்களுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட எதிர்கால மழைவிழ்ச்சிப் போக்கு (ஒவ்வொரு பத்தாண்டு அடிப்படையிலும்).

2020 முதல் 2100 வரையிலான மாத அடிப்படை சராசரிக் கணிப்பு ஒவ்வொரு மாதிரியிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஜனவரியில், ‘MIROC_ESM_CHEM’ ஆல் கணிக்கப்பட்ட அதிகபட்ச சராசரி 57.73 மி.மீ. ஆகும். மேலும், ‘IPSL_CM5A_MR’ மாதிரியால் கணிக்கப்பட்ட ஜனவரி மாதத்துக்கான சராசரி -37.15 மி.மீ. ஆகும். ‘GISS_E2_R’ மாதிரியானது பிப்ரவரி மாதத்திற்கான மழைவீழ்ச்சி மாற்றங்களின் அதிகபட்ச பெறுமானத்தைக் கணித்துள்ளது. இது 37.65 மி.மீ ஆகும். அதே நேரத்தில், ‘GFDL_ESM2G’ மாதிரி பெப்ரவரி மாத மழை அளவு -18.91 மி.மீ. எனக் கணித்துள்ளது. மார்ச் மாதத்தில், ‘GISS_E2_R’ மாதிரியானது சராசரி மாத மழையளவு 17.08 மி.மீ.  அதிகரிக்கும் என்றும், ‘MRI_CGCM3’ மாதிரியானது மழையளவு -23.57 மி.மீ. ஆல் குறையும் என்றும் எதிர்வுகூறியுள்ளன. பெரும்பாலான மாதிரிகள், 2020 முதல் 2100 வரை ஏப்ரல் மாதத்தில், வட மாகாணத்தில் மாதாந்திரச் சராசரி மழைவீழ்ச்சி குறையும் என்று குறிப்பிடுகின்றன. ‘BCC_CSM1_1_M’ மாதிரி, இந்த மாதம் மழைவீழ்ச்சி -67.81 மி.மீ. குறைவாக இருக்கும் என்று கணித்துள்ளது. இருப்பினும், மிகச் சில மாதிரிகள் ஏப்ரல் மாதத்தில் அதிகரிப்பைக் குறிக்கின்றன. ஆனால் ‘GFDL_CM3’ மாதிரியானது 14.78 மி.மீ.  குறைவைக் கண்டறிந்துள்ளது. ‘BCC_CSM1_1_M’ மாதிரியானது, மே மாதத்தில் சராசரி மாத மழைவீழ்ச்சியில் 93.6 மி.மீ. அதிகரிப்பு இருக்கும் என்று சுட்டிக்காட்டியது. அதே நேரத்தில், ‘GFDL_ESM2G’ மாதிரி இந்த மாதத்தில் மழைவீழ்ச்சி 24.86 மி.மீ. குறைவாக இருக்கும் என்று எதிர்வுகூறுகிறது. ஜூன் மாதத்தின் படி, ‘SSP 4.5’ காட்சிகளின் கீழ், 2020 முதல் 2100 வரையிலான காலகட்டத்தில், சராசரி மழைவீழ்ச்சி எதிர்வுகூறல்களில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. ‘BCC_CSM1_1’ மாதிரியானது ஜூன் மாதத்தில் 37.58 மி.மீ. மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்றும், ‘GISS_E2_H’ மாதிரியானது இந்த மாதத்திற்கான மழைவீழ்ச்சி -90.25 மி.மீ. ஆக இருக்கும் எனவும் கணித்துள்ளது (படம் 10.10).

10. image
10.1 image

படம் 10.10 பகிரப்பட்ட சமூகப் பொருளாதாரப் பாதைகளின், 4.5 காபன் வெளியீட்டுத் தோற்றக் காட்சியமைப்பில் வேறுபட்ட காலநிலைக் காலங்களுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட எதிர்கால மழைவீழ்ச்சி மாற்றம் (A 2020-2040, B2040 -2060, C2060-2080, D2080-2100).

‘BCC_CSM1_1_M’ மாதிரியானது ஜூலை மாதத்திற்கான அதிகபட்ச மழைப்பொழிவை (39.29 மி.மீ.) முன்மொழிந்துள்ளது. அத்தோடு ‘FIO_ESM’ மாதிரியானது மிகக் குறைந்த மழைப்பொழிவைக் (-24.41மி.மீ.) கணித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தைப் பொறுத்தவரை, ‘FIO_ESM’ மாதிரியைத் தவிர அனைத்து மாதிரிகளும், மாதாந்த சராசரியில் அதிகரிப்பைக் குறிக்கின்றன. ஆனால் ‘FIO_ESM’ மாதிரி, இந்த மாதத்திற்கான மழைவீழ்ச்சி -35.52 மி.மீ. குறைவாக இருக்கும் என்று கணித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்துக்கான அதிகூடிய அதிகரிப்பை, BCC_CSM1_1 மாதிரி கணித்துள்ளது. அதன் அளவு 88.82 மி.மீ. ஆகும். அதேவேளை ‘GISS_E2_H’ மாதிரி குறைந்த பெறுமானத்தைக் (-22.86 மி.மீ.) கணித்துள்ளது. ‘CSIRO_MK3_6_0’ மாதிரியானது ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சிப் பெறுமானத்தை முறையே 71.71 மி.மீ.  மற்றும் 118.74 மி.மீ எனக் கணித்துள்ளது. ‘NORESM1_M’ மாதிரியானது 2020 முதல் 2100 வரையிலான டிசம்பர் மாத அதிகபட்ச மழைப்பொழிவு 122.2 மி.மீ. ஆக இருக்கும் என எதிர்வுகூறியுள்ளது. இருப்பினும், ‘MIROC5’ மாதிரியானது, ஒக்டோபர் மாதத்திற்கான மிகக் குறைந்த மழைப்பொழிவு -17.6 மி.மீ. ஆக இருக்கும் என முன்னறிவித்துள்ளது. மேலும் ‘CESM1_CAM5’ மாதிரியானது, நவம்பர் மாதத்திற்கான குறைந்த மழைப் பெறுமானத்தை (62.39 மி.மீ.) எதிர்வு கூறியுள்ளது. அதேவேளை டிசம்பர் மாத குறைந்தபட்சப் பெறுமானத்தை (-48.92 மி.மீ.) ‘CCSM4’ மாதிரி கணித்துள்ளது.

11. image

படம் படம் 10.11 பகிரப்பட்ட சமூகப் பொருளாதாரப் பாதைகளின்-2, 4.5 காபன் வெளியீட்டுத் தோற்றக் காட்சியமைப்பில் வேறுபட்ட காலநிலைக் காலங்களுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட எதிர்கால மழைவீழ்ச்சி மாற்றத்தின் இடம்சார் பரம்பல் பாங்கு.

‘SSP 8.5’ காட்சிகளின் கீழ் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் எதிர்கால மழைவீழ்ச்சி மாற்றங்கள்

‘SSP 8.5’ இன் கீழ் 2020 முதல் 2100 வரை எதிர்வுகூறப்பட்ட மழைவீழ்ச்சியில் பல வேறுபாடுகள் உள்ளன. இது, வட மாகாணத்தில் எதிர்வுகூறப்பட்ட மழைவீழ்ச்சி மாற்றங்களை விளக்குகிறது. 2020 முதல் 2100 வரையிலான அனைத்து மாதிரிகளினதும் பொதுமைப்படுத்தப்பட்ட ‘SSP 8.5’ காட்சித் தோற்றத்தின் கீழ், இலங்கையின் வடக்குப் பகுதியில் சராசரியாக 159.46 மி.மீ. மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆயினும்கூட, மாதாந்த அடிப்படையில் இதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளமை அவதானிக்கத்தக்கது. ‘SSP 8.5’ இன் கீழ், ஜனவரி முதல் ஜூன் வரை மாதாந்த மழைவீழ்ச்சி அளவு குறைந்து வருகிறது. ஜனவரி -3.01 மி.மீ. ஆலும், பிப்ரவரி -6.01 மி.மீ. ஆலும், மார்ச் -0.42 மி.மீ. ஆலும், ஏப்ரல் -6.11 மி.மீ. ஆலும், மே 8.23 மி.மீ. ஆலும், மற்றும் ஜூன் 4.28 மி.மீ. ஆலும் மழைவீழ்ச்சி குறையும் என மாதிரிகளின் பொதுமைப்படுத்தப்பட்ட சராசரிகள் காட்டுகின்றன. ‘SSP 4.5’ காபன் வெளியீட்டுக் காலத்துடன் ஒப்பிடுகையில், சில மாதங்களில் சராசரி மழைவீழ்ச்சியில் குறைவு உள்ளது. இருப்பினும், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாத மழைவீழ்ச்சி, அதிகரித்து வருவதாக மாதிரிகள் வெளிப்படுத்துகின்றன. மாதிரிகளின் பொதுமைப்படுத்தப்பட்ட சராசரியின் படி, ஜூலை மாத மழை அளவு 16.34 மி.மீ. இனால் அதிகரித்து வருகின்றமை கவனிக்கத்தக்கது. ‘SSP 8.5’ காபன் வெளியீட்டுத் தோற்றப்பாட்டின் ஜூலை மாத அதிகரிப்பை, ‘SSP 4.5’ வெளியீட்டுத் தோற்றப்பாட்டுடன் ஒப்பிடும் போது, கணிசமான அதிகரிப்பை இனங்காண முடியும். மாதிரிகளின் ஓகஸ்ட் மாத சராசரிகள், 29.47 மி.மீ. மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வெளிப்படுத்துகின்றன. 2020 முதல் 2100 வரையான காலப்பகுதியில், ‘SSP 8.5’ இன் கீழ், செப்டெம்பர் மாத மழைவீழ்ச்சி 30.61 மி.மீ.  அதிகரிக்கும் எனவும், ஒக்டோபர் மாத மழைவீழ்ச்சி 56.57 மி.மீ. அதிகரிக்கும் எனவும், நவம்பரில் 34.82 மி.மீ. மழைவீழ்ச்சி அதிகரிக்கும் எனவும், டிசம்பரில் 19.73 மி.மீ. மழைவீழ்ச்சி அதிகரிக்கும் எனவும் மாதிரிகளின் பொதுமைப்படுத்தப்பட்ட சராசரிகள் காட்டுகின்றன. 

‘SSP 8.5’ இன் கீழ், 2020 முதல் 2100 வரையிலான மாதிரிகளின் சராசரி எதிர்வுகூறல்களிடையே வேறுபாடுகள் உள்ளன. ‘BCC_CSM1_1_M’ மாதிரியானது, மேற்கூறிய காலத்திற்கான அதிகபட்ச சராசரி மழை அதிகரிப்பை 55.51 மி.மீ. எனக் கணித்துள்ளது. ‘FIO_ESM’ மாதிரியானது -3.19 மி.மீ. எனவும், ‘MIROC_ESM_CHEM’ மாதிரியானது -1.87 மி.மீ. எனவும், ‘NORESM1_M’ மாதிரியானது 42.62 மி.மீ. எனவும், CSIRO_MK3_6_0 மாதிரியானது 41.34 மி.மீ. எனவும், ‘MIROC5’ மாதிரியானது 36.01 மி.மீ.  எனவும்  மழைவீச்சியைக் கணித்துள்ளன (படம் 10.12 மற்றும் 10.13).

12. image

படம் 10.12. பகிரப்பட்ட சமூகப் பொருளாதாரப் பாதைகளின்-5, 8.5 காபன் வெளியீட்டுத் தோற்றக் காட்சியமைப்பில் வேறுபட்ட காலநிலைக் காலங்களுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட எதிர்கால மழைவீழ்ச்சி மாற்றம் (மாத ரீதியாக ஒவ்வொரு பத்தாண்டு அடிப்படையிலும்).

13. image

படம் 10.13. பகிரப்பட்ட சமூகப் பொருளாதாரப் பாதைகளின்-5, 8.5 காபன் வெளியீட்டுத் தோற்றக் காட்சியமைப்பில் வேறுபட்ட காலநிலைக் காலங்களுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட எதிர்கால மழைவீழ்ச்சி மாற்றம் (A 2020-2040, B 2040-2060, C 2060-2080, D 2080-2100).

‘SSP 8.5’ இன் கீழ், 2020 முதல் 2100 வரையிலான மழைவீழ்ச்சியின் மாதாந்த அடிப்படைக் கணிப்பு மாதிரிகளுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. ஜனவரியில், ‘NORESM1_M’ மாதிரியானது மழைவீழ்ச்சியை அதிகபட்சமாக 95.36 மி.மீ. எனக் கணிக்கும் அதேவேளை, ஜனவரியில் ‘GFDL_ESM2G’ மாதிரியானது குறைந்த மழைவீழ்ச்சியை -43.08 மி.மீ. எனக் கணிப்பீடு செய்துள்ளது. ‘GISS_E2_R’ மாதிரியானது பெப்ரவரியில் 33.66 மி.மீ. மழை கிடைக்கும் என எதிர்வு கூறியுள்ளது. ஆனால், ‘CCSM4’ மாதிரியானது பெப்ரவரி மாதத்திற்கான மழைவீழ்ச்சி -41.92 மி.மீ. ஆல் குறைவடையும் என எதிர்வுகூறியுள்ளது. ‘GISS_E2_R’ மாதிரியானது மார்ச் மாதத்தில், 9.74 மி.மீ. ஆல் மழைவீழ்ச்சி உயரும் எனக் கணித்துள்ளது. அதேவேளை, ‘GFDL_ESM2G’ மாதிரியானது மார்ச் மாதத்திற்கான மழை -42.05 மி.மீ. இனால் குறைவடையும் என மதிப்பிட்டுள்ளது.  ஏப்ரல் மாத மழைவீழ்ச்சியை பொறுத்தவரை, ‘NORESM1_M’ மாதிரியானது அதிக மழைவீழ்ச்சி அதிகரிப்பைக் (17.95 மி.மீ.) கணித்துள்ளது. ஆனால் ‘BCC_CSM1_1_M’ மாதிரியானது ஏப்ரல் மாதத்தில் மிகக் குறைந்த (-60.54 மி.மீ.) மழைப்பொழிவைக் கணித்துள்ளது. ‘NORESM1_M’ மாதிரியானது மே மாதத்திற்கான அதிகபட்ச மழைவீழ்ச்சி 24.73 மி.மீ. இனால் அதிகரிக்கும் என்றும், ‘GFDL_ESM2G’ மாதிரி ஏப்ரலில் மழைவீழ்ச்சி -57.22 மி.மீ. குறைவடையும் என்றும் கணித்துள்ளன. 2020 முதல் 2100 வரையிலான ‘SSP 8.5’ காட்சிகளின் கீழ், ஜூன் மாதத்திற்கான மாதாந்திர மழைவீழ்ச்சியின் மாதிரிகளுக்கு இடையே பரந்த மாறுபாடு உள்ளது. இதில் ‘BCC_CSM1_1’ மாதிரி குறைந்த மழைவீழ்ச்சியையும் (76.91 மி.மீ.), ‘FIO_ESM’ மாதிரி அதிக மழைவீழ்ச்சியையும் (132.07 மி.மீ.) எதிர்வுகூறியுள்ளன. ஜூலையில், ‘BCC_CSM1_1_M’ மாதிரி அதிகபட்ச மழைவீழ்ச்சியையும் (61.61 மி.மீ.), ‘FIO_ESM’ மாதிரி குறைவான மழைவீழ்ச்சி (-49.2 மி.மீ.) எதிர்வு கூறலையும் கணித்துள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்த எதிர்வு கூறலிலும் மாதிரிகளுக்கு இடையே மாறுபடும் தன்மைகள் காணப்படுகின்றன. அதிகூடிய பெறுமான (195.29 மி.மீ.) எதிர்வுகூறலை ‘BCC_CSM1_1_M’ மாதிரி கணித்துள்ளது. அதேவேளை குறைந்த மழைவீச்சிப் பெறுமான (-37.93 மி.மீ.) எதிர்வுகூறலை ‘MIROC_ESM’ மாதிரி காட்டுகின்றது. ‘CCSM4’ மாதிரியானது செப்டம்பர் மாதத்திற்கான அதிகபட்ச மழைப்பொழிவைக் (115.14 மி.மீ.) கணித்துள்ளது. மேலும் ‘GISS_E2_R’ மாதிரியானது செப்டம்பர் மாதத்திற்கான மிகக் குறைந்த (-43.12 மி.மீ.) மழைவீழ்ச்சியைக் கணித்துள்ளது. வெவ்வேறு மாதிரிகளால் கணிக்கப்படும் மழையின்படி, அக்டோபர் மாதம் தனித்துவமானது. ஏனெனில் அனைத்து மாதிரிகளும் அதிகரித்து வரும் மழைவீழ்ச்சி முறையைக் குறிப்பிடுகின்றன. இருப்பினும், அனைத்து மாதிரிகளின் அதிகரிப்பு அளவில் வேறுபாடுகள் உள்ளன. ‘BCC_CSM1_1_M’ மாதிரி 246.12 மி.மீ. இனையும், ‘GISS_E2_R’ மாதிரி 87.94 மி.மீ. இனையும், ‘CSIRO_MK3_6_0’ மாதிரி 196.81 மி.மீ. இனையும் எதிர்வுகூறியுள்ளன. ‘BCC_CSM1_1’ மாதிரி நவம்பரில் குறைந்த மழைவீழ்ச்சியாக -95.79 மி.மீ. இனை எதிர்வுகூறியுள்ளது. டிசம்பர் மாதத்தை பொறுத்தவரை, ‘CSIRO_MK3_6_0’ மாதிரி 17 மி.மீ. அதிக மழைவீழ்ச்சி இருக்கும் எனவும்,  CESM1_CAM5 மாதிரி  -48.3 மி.மீ. மழைவீழ்ச்சி குறையும் எனவும் எதிர்வு கூறியுள்ளன. 

படம் 10.14 பகிரப்பட்ட சமூக பொருளாதாரப் பாதைகளின்-5, 8.5 காபன் வெளியீட்டுத் தோற்றக் காட்சியமைப்பில் வேறுபட்ட காலநிலைக் காலங்களுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட எதிர்கால மழைவீழ்ச்சி மாற்றத்தின் இடம்சார் பரம்பல் பாங்கு.

காலநிலை மாற்றத்தினால் இலங்கையின் வடக்குப் பகுதி மிகவும் பாதிக்கப்படுகிறது. இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் அனர்த்த வரலாற்றின் படி, 2004 இல் ஏற்பட்ட சுனாமி தவிர்ந்த ஏனைய அனர்த்தங்கள் அனைத்தும் காலநிலை தொடர்பானவை. ஆகையால், வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் பற்றிய அடையாளங்கள் மற்றும் ஆய்வுகள், இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் நடவடிக்கைகளுக்கு இன்றியமையாததாகும்.

அண்மைய காலநிலை மாற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து, உலகின் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த மக்களும், காலநிலை அனர்த்தங்கள் குறித்து விழிப்புடன் செயலாற்றுகின்றனர். இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் காலநிலையானது இந்தப் பிராந்தியத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கின்றது. காலநிலை அனர்த்தங்கள், வட பிராந்தியத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நீண்ட காலமாக தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான பதிவுகள் உள்ளன. இலங்கையின் வடக்குப் பகுதியானது அதன் புவியியல் அமைப்பு மற்றும் காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி போன்ற காலநிலை அனர்த்தங்களிலிருந்து பல சவால்களை எதிர்கொள்கிறது. இவற்றை ஓரளவு முன்கூட்டியே அனுமானிப்பதன் மூலம், அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க உபாயம் தேடலாம். 

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

1859 பார்வைகள்

About the Author

நாகமுத்து பிரதீபராஜா

கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார். காலநிலையியலில் தனது கலாநிதி பட்டத்தினை பூர்த்தி செய்த பிரதீபராஜா காலநிலையியல் தொடர்பான பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை பற்றியும் பொதுவான காலநிலை அம்சங்கள் தொடர்பாகவும் 07 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 40 இற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரித்துள்ளார். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, வடக்கு மாகாணத்தினுடைய வானிலை தொடர்பான இவரது எதிர்வு கூறல்களை பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (5)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)