நாகர் பற்றிக் குறிப்பிடும் ரஜகல எனும் ராசமலைக் கல்வெட்டுகள்
Arts
10 நிமிட வாசிப்பு

நாகர் பற்றிக் குறிப்பிடும் ரஜகல எனும் ராசமலைக் கல்வெட்டுகள்

October 27, 2024 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

 

அம்பாறை மாவட்டத்தில், அம்பாறை நகரில் இருந்து மகாஓயாவுக்குச் செல்லும் வீதியில் 26 கி.மீ தூரத்தில் பக்கியல்ல என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு பிரதான வீதியின் மேற்குப் பக்கத்தில் ரஜகல மலை அமைந்துள்ளது. மலையின் தெற்குப் பக்கத்தில் நவக்கிரி குளம் காணப்படுகிறது. இம்மலை ராஸ்ஸ ஹெல, ராஸ்ஸகல, ரஜகலதென்ன, ராசமலை ஆகிய பெயர்களிலும் அழைக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 1038 அடி உயரத்தில், அடர்ந்த காடுகளையும், மலைகளையும் கொண்ட இம்மலையில் 983 ஏக்கர் பரப்பளவில் பண்டைய இடிபாடுகள் காணப்படுகின்றன. மலையின் உச்சியில் உள்ள ஒரு சமதரையில் ஒரு சிறிய குளம் அமைந்துள்ளது. இது ரஜகல குளம் என அழைக்கப்படுகிறது. இக்குளத்தைச் சுற்றி பண்டைய கால வழிபாட்டிடங்கள் பல அக்கால மன்னர்களாலும், அரச பிரதானிகளாலும் கட்டப்பட்டுள்ளன. 

இம்மலைக்கு ராஸ்ஸகல (ராசமலை) எனும் பெயர் வந்தமைக்கு இவ்விடத்தை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளரான டி.எம்.டி. பண்டார ஒரு காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். ராக்சஸர் எனும் பழங்குடி இனத்தவர்கள் இம்மலையில் வாழ்ந்ததாகவும், சாதாரண மக்களைப் போன்ற இவர்கள் ராக்சஸ வழிபாட்டைக் கடைப்பிடித்தவர்கள் எனவும், இதனால் இது ராக்சஸகல என அழைக்கப்பட்டு அதுவே ராஸ்ஸகல என திரிபடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ராக்சஸ என்பது இராவணனின் வம்சத்தவர்களைக் குறிக்கும் பெயராகும். இராவணன் சிவ வழிபாட்டை மேற்கொண்ட மன்னன் என்பது அனைவரும் அறிந்ததே. இமயமலைப் பகுதியில் உள்ள கைலாச மலையின் தெற்கில் அமைந்துள்ள ஒரு ஏரி ‘ராக்சஸ தல் ஏரி’ என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் இராவணன் ஏரி என்பதாகும். இலங்கையில் பலாங்கொடையின் அருகில் உள்ள ஒரு மலையும் ராக்சஸ ஹெல எனப் பெயர் பெற்றுள்ளது. இது இராவணன் இருந்த மலை எனக்  கூறப்படுகிறது. அந்த வகையில் ராஸ்ஸ கல எனும் ரஜகல மலையும் இராவணனுடன் தொடர்புடைய மலையாக இருக்க வேண்டும். இவர் குறிப்பிடும் ராக்சஸசர் வழிபாடு என்பது யக்ஷ தெய்வ வழிபாடாக இருக்க வேண்டும். அதே சமயம் யக்ஷ குளத்தைச் சேர்ந்த இராவணன் சிவ வழிபாட்டை மேற்கொண்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜகல மலையில் சிவ வழிபாடு மற்றும் நாக வழிபாடு போன்றவை 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருந்துள்ளன என்பதற்கு இங்கு காணப்படும் பிராமிக் கல்வெட்டுகள் சான்றுகளாக விளங்குகின்றன. இவற்றைத் தவிர இங்கு இவ்வழிபாடுகளின் சான்றுகள் பல காணப்படுகின்றன. நாகராஜரின் புடைப்புச் சிற்பம், ஐந்து தலை நாகத்தின் சிற்பம், சுடுமண்ணில் செய்யப்பட்ட பெண் தெய்வத்தின் சிலை, சதுரவடிவ ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கம், முற்றுப்பெறாத வடிவம் கொண்ட ஆவுடையார், மகரக் கோமுகி, மேலும் சில கோமுகிகள் ஆகியவை இங்கு காணப்படுகின்றன.  

மேலும் இங்குள்ள கற்குகைகளில் ஆதிவாசிகள் வரைந்த கற்கால ஓவியங்கள் உள்ளதாகவும், இவை சுமார் 35,000 ஆண்டுகள் பழமையானவை எனவும் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். சாம்பல் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றால் வரையப்பட்ட இவ் ஓவியங்களில் திரிசூலக் குறியீடுகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்மலை உச்சியில் உள்ள ரஜகல குளத்தைச் சுற்றியும், மலைச் சரிவுகளிலும், மலையின் அடிவாரத்திலும் இயற்கையாக அமைந்துள்ள நூற்றுக்கணக்கான கற்குகைகளும், ஏராளமான வழிபாட்டிடங்களின் இடிபாடுகளும் காணப்படுகின்றன. சுமார் 500 இற்கும் மேற்பட்ட தொல்லியல் இடிபாடுகள் இங்குள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இங்கு மொத்தமாக 64 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் 49 குகைக் கல்வெட்டுகளும், 11 பாறைக் கல்வெட்டுகளும், 2 கற்பலகைக் கல்வெட்டுகளும், 2 தூண் கல்வெட்டுகளும் அடங்குகின்றன. இவற்றைத் தவிர எழுத்துகள் எழுதப்பட்ட 34 செங்கல் துண்டுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவற்றில் 48 குகைக் கல்வெட்டுகள் முற்கால பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டாகும். ஒரு குகைக் கல்வெட்டு மட்டும் பொ.ஆ. 7 ஆம் நூற்றாண்டுக்குரிய சிங்கள எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு பாறையின் மீது பொறிக்கப்பட்டுள்ள 11 பாறைக் கல்வெட்டுகளும் பொ.ஆ. 1 முதல் 4 ஆம்  நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டவையாகும். எஞ்சியுள்ள 2 கற்பலகைக் கல்வெட்டுகளும், 2 தூண் கல்வெட்டுகளும் பொ.ஆ. 7 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் பொறிக்கப்பட்டவையாகும்.

பிரதான வீதியில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் ரஜகல மலை உச்சி அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் மலையடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குச் செல்வதற்கு தென்மேற்கு பக்கமாகவும், வட கிழக்குப் பக்கமாகவும் இரண்டு கற்படிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கற்படிகள் பல இடங்களில் சிதைந்தும் உடைந்தும் காணப்படுகின்றன. ஒவ்வொரு பாதையும் சுமார் 1000 மீற்றர் (ஒரு கிலோ மீற்றர்) நீளமானவை. இப்பதைகள் இரண்டும் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில், மலை உச்சியில் உள்ள ரஜகல குளத்தின் கரையில் இணைகின்றன.

மலையடிவாரத்தில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில் இருந்து ஆரம்பமாகும் இப்பாதைகளில் தென்மேற்குப் பக்கமாகச் செல்லும் பாதையில் முதலாவதாக திறந்தவெளி தொல்பொருள் காட்சிச்சாலை காணப்படுகிறது. ரஜகல மலையில் கிடைக்கப்பெற்ற பல பண்டைய தொல்லியல் சின்னங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதை அடுத்து மேல் நோக்கிச் செல்லும் பாதையில் சுமார் 900 மீற்றர் தூரத்தில் இப்பாதை இரண்டாகப் பிரிகிறது. ஒரு பாதை வடமேற்கு நோக்கி சிலைமனை மற்றும் தூபிகள் அமைந்துள்ள இடத்திற்குச் செல்கிறது. அடுத்த பாதை வடக்கு நோக்கி குளக்கரைக்குச் செல்கிறது.

பிரதான வாகனத் தரிப்பிடத்தில் இருந்து செல்லும் வடகிழக்குப் பக்கப் பாதையில் மேலும் மூன்று வாகனத் தரிப்பிடங்கள் உள்ளன. இவற்றை அடுத்து மலை உச்சிக்குச் செல்லும் பாதை தொடங்குகிறது. இப்பாதையில் மேல் நோக்கிச் செல்லும் போது கற்புருவங்கள் வெட்டப்பட்ட இரண்டு கற்குகைகள் காணப்படுகின்றன. இவற்றில் பிராமி எழுத்துகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கடந்து மேலும் மேல் நோக்கிச் செல்லும் ஒரு சிறிய கற்சுனை காணப்படுகிறது. இதை கடந்து செல்லும் போது சிறிது தூரத்தில் பாதை இரண்டாகப் பிரிகிறது. இதில் மேற்குப் பக்கம் செல்லும் பாதை குளக்கரைக்கும், வடக்கு நோக்கிச் செல்லும் பாதை பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ள பல கற்குகைகளுக்கும் செல்கிறது. இப்பாதையிலும், பாதையின் முடிவிலும் 15 இற்கும் மேற்பட்ட கற்குகைகள் அமைந்துள்ளன. இவற்றில் கற்புருவங்கள் வெட்டப்பட்டு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

மலை உச்சியில் உள்ள குளத்தைச் சுற்றி மேலும் சில கற்குகைகளும், கல்வெட்டுகளும், பல கட்டிட இடிபாடுகளும் காணப்படுகின்றன. தெற்குப் பக்கத்தில் மகிந்த தூபியும், கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட பாறையும் காணப்படுகின்றன. குளத்தின் வலது பக்கம் வடக்கு நோக்கிச் செல்லும் பாதையின் இரு மருங்கிலும் பல கட்டிட இடிபாடுகள் காணப்படுகின்றன. இப்பாதையின் வலது பக்கம் கல்குடை என்றழைக்கப்படும் கற்குகையும், ஆதி மனிதர்கள் வரைந்த ஓவியங்களுடன் கூடிய ஒரு கற்குகையும் காணப்படுகின்றன. இவற்றை அடுத்து கற்பாத்திரங்களும், மகரக் கோமுகியும், மேலும் சில கோமுகிகளும் காணப்படும் கட்டிட இடிபாடும், இரு கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. பாதையின் இடது பக்கம் சதுர வடிவமான இரு கட்டிடங்களின் சிதைவுகளும், நீள்வட்ட வடிவமான கட்டிட இடிபாடு ஒன்றும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஏராளமான கற்தூண்களுடன் காணப்படுகின்றன. இவற்றைக் கடந்து சென்றதும் பாதை இரண்டாகப் பிரிகிறது. நேராக வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் சிறிய கற்பாலமும், அதை அடுத்து வலது பக்கம் கற்கால மனிதர்கள் வாழ்ந்த கற்குகையும் உள்ளன. இக்கற்குகையில் திரிசூலக் குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. பாதையின் இடது பக்கம் இரட்டைத் தூபிகள் அமைந்துள்ளன.

நீள்வட்டக் கட்டிட இடிபாட்டை அடுத்து பிரிந்து செல்லும் மேற்குப் பக்கப் பாதையின் ஓரத்தில் படுத்த நிலையில் உள்ள, 18 அடி நீளமான புத்த பகவானின் சிலை காணப்படுகிறது. மண்ணில் சற்று புதைந்த நிலையில் காணப்படும் இச்சிலை முழுமையாக வடிக்கப்படாத, முற்றுப்பெறாத சிலையாகும். சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் இடிபாடுகள் காணப்படும் ரஜகல மலையில் இருந்து கிடைக்கப்பெற்ற ஒரே ஒரு புத்தரின் சிலை இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிருந்து மேற்குப் பக்கத்தில் மேலும் சில கட்டிடங்களின் சிதைவுகள் காணப்படுகின்றன.

குளத்தின் தென்மேற்குப் பக்கமாகச் செல்லும் பாதையின் இடது பக்கம் கற்புருவங்கள் வெட்டப்பட்டு கல்வெட்டு பொறிக்கப்பட்ட இரண்டு கற்குகைகள் அமைந்துள்ளன. இவற்றை அடுத்து குளத்தின் மேற்குப் பக்கத்தில் வட்ட சிலை மனை, சிலை மனை, மேலும் சில கட்டிடங்கள் ஆகியவற்றின் சிதைவுகள் காணப்படுகின்றன.

இலங்கையில் அனுராதபுரம், மிகுந்தலை, சிகிரியா, பொலநறுவை ஆகிய பண்டைய தொல்லியல் மையங்களை அடுத்து அதிகமான கட்டிட இடிபாடுகளையும், தொல்லியல் சின்னங்களையும், அதிகமான கற்குகைகளையும், பிராமிக் கல்வெட்டுகளையும் கொண்ட இடமாக ரஜகல மலை காணப்படுகின்றமை இதன் சிறப்பம்சமாகும். 

நாகசேன தேரர் மற்றும் நாகதேரர் பற்றிக் குறிப்பிடும் பிராமிக் கல்வெட்டுகள் 

ரஜகல மலையில் காணப்படும் 60 பிராமிக் கல்வெட்டுகளில் நான்கு கல்வெட்டுகள் நாகர் பற்றிக் குறிப்பிடுகின்றன. இக்கல்வெட்டுகளில் இரண்டு குகைக் கல்வெட்டுகளாகும். ஏனைய இரண்டும் பாறைக் கல்வெட்டுகளாகும். நாகர் பற்றிக் குறிப்பிடும் முதலாவது குகைக் கல்வெட்டில் மொத்தமாக 11 எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக் கல்வெட்டில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: 

நாகசேன தேரச சுதசனே

இதன் பொருள் ஆங்கிலத்தில் “(The cave named) Sudassana of the elder Nagasena” என்பதாகும். தமிழில் இது “நாகசேன தேரரின் சுதர்சன எனும் பெயருடைய குகை” எனப் பொருள்படும்.

இரண்டாவது கல்வெட்டும் ஒரு வரியில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 13 எழுத்துகள் காணப்படுகின்றன. இதிலுள்ள விபரங்கள் பின்வருமாறு: 

நாக தேரக லேனே இடசல கொஹ

இதன் பொருள், “நாக எனும் தேரரின் இந்தசால குகா எனும் பெயருடைய குகை” என்பதாகும். இது ஆங்கிலத்தில் “The cave of the elder Naga, named Indasala Guha” எனப் பொருள்படுகிறது.  

இவ்விரண்டு கல்வெட்டுகள் மூலம் நாக எனும் பெயரில் தேரர்கள் இருந்துள்ளார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது. பண்டைய கால நாகர் தமிழரின் ஓர் இனக்குழு என பேராசிரியர் பத்மநாதன் கூறியுள்ளார். அக்கூற்றின்படி இவர்கள் நாக வழிபாட்டை மேற்கொண்ட தமிழர்களாக இருக்க வேண்டும். பின்பு இவர்கள் பெளத்த நெறியை ஏற்றுக் கொண்டு தேரர்களாக மாறியிருக்க வேண்டும். எனவே இவர்களை பண்டைய கால தமிழ் பெளத்தர்கள் எனக் கொள்ளலாம். அந்த வகையில் ரஜகல மலையில் பண்டைய காலத்தில் தமிழ் பெளத்தர்கள் வாழந்துள்ளார்கள் எனவும் கொள்வது தவறல்ல. 

உபராஜன் நாகன் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு

ரஜகல மலை உச்சியில் உள்ள ரஜகல குளத்தின் கிழக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கற்பாறையில் நான்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் உபராஜன் நாகன் பொறித்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இது பொ.ஆ 1 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட பிற்கால பிராமிக் கல்வெட்டாகும். 1961 ஆம் ஆண்டு பேராசிரியர் பரணவிதான இந்தக் கல்வெட்டைக் கண்டுபிடித்த போதும், 1983 ஆம் ஆண்டுதான் நூல்களில் இக்கல்வெட்டு பதிவு செய்யப்பட்டது. இக்கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் பின்வருமாறு:

லஜக ரஜஹ அதி சமஹி கட கபடுக வபி குபிலபி திச பவதஹி நியதே குடகண கமினி திசஹ புத உபராஜ நாகய படிகணபய இம விஹரஹி நியதே

இதன் பொருள் “லஜ்ஜ மன்னனால் கட்டப்பட்ட கபடுக எனும் குளம், மன்னன் குட்டகண்ண காமினி தீஸனின் மகனான யுவராஜன் நாகனால் மீண்டும் புனரமைக்கப்பட்டு குபிலபி திச பர்வதம் எனும் மலையில் உள்ள விகாரைக்கு வழங்கப்பட்டது.” என்பதாகும்.  

நாகனின் மகன், குதிரை வீரன் நாகன் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு

நாகன் பற்றிய இரண்டாவது கல்வெட்டும் இதே பாறையில் பொறிக்கப்பட்டுள்ள இன்னுமோர் கல்வெட்டாகும். இதுவும் பிற்கால பிராமிக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டு மொத்தமாக மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் உள்ள விபரங்கள் பின்வருமாறு:

“1. சித்தம் திக அவ அசனஹி வட மனயஹ வசன கபகதர- நாகயஹ 

   புத அச அறுக நாகயஹ-

2. கிரிகபல அவி திசமஹா விஹரஹி எக சதக கஹவன ஆரியவாச 

   வடட வெடின தினி மெ-

3. கஹவனக வடகென மெ விஹரஹி ஆரியவாச கரனக கொடு தினி   

இதன் பொருள் “வெற்றி, தீகவாபியின் அருகில் உள்ள வட்டமானக எனும் இடத்தில் வசிக்கும் குதிரை வீரன் நாகன், கபகதர என்னுமிடத்தைச் சேர்ந்த நாகன் என்பவனின் மகன், கிரிகும்பில தீச விகாரைக்கு 100 கஹவனு பணத்தை வைப்புச் செய்து அதில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தில் இங்கு நடைபெறும் ஆரியவாச எனும் பூஜையை தொடர்ந்து நடத்த வேண்டும்.” என்பதாகும்.


ஒலிவடிவில் கேட்க

2665 பார்வைகள்

About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)