இந்தப் புத்தகத்தின் அரைவாசிப்பகுதி நூலாசிரியரின் இளமைக்காலம், குடும்பம், அவரது கிராமத்தின் வாழ்வுச் சூழல், 1980 களின் நடுப்பகுதி வரையான இலங்கைத்தீவின் அரசியல், போராட்ட நிலைமைகள் குறித்த விடயங்களைப் பேசுகின்றது. மீதமுள்ள பகுதி வெளிநாடு ஒன்றுக்குப் பயணமாகும் இலக்குடனான முன்னெடுப்புகள், அதில் எதிர்கொண்ட சிக்கல்கள், போராட்டங்கள் என்பவற்றைப் பகிருகின்றது.
ஈழத்திலிருந்து 1980 களின் நடுப்பகுதியில் போர் மற்றும் குடும்பப் பொருளாதார நிலைமைகள் காரணமாகத் தனது 17 ஆவது வயதில் புலம்பெயர்ந்த இளைஞனைப் பற்றிய கதையே ‘The Sadness of Geography’ எனும் இந்த நூல். இதனை எழுதியவர் லோகதாசன் தர்மதுரை. யாழ். மாவட்டத்தின் சங்கத்தானை கிராமத்தைப் பூர்வீகமாகக்கொண்ட இவர், 1986 இலிருந்து கனடாவில் வசித்துவருகின்றார். அங்கு ஒரு கணினித்துறைப் பொறியியலாளராகப் பெருநிறுவனமொன்றில் பணிபுரிகின்றார். புலம்பெயர்ந்து முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் (2019) தனது கதையைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
தன்னனுபவக் கதை – அபுனைவு
இந்நூல் முற்றிலும் ஒரு தன்னனுபவக்கதை. இலக்கியத்தில் அபுனைவு வகைமைக்குள் அடங்குகின்றது. சங்கத்தானைக் கிராமமும் – அதன் வாழ்வின் ஒரு பகுதியும் – வெளிநாடொன்றில் வதிவிடம் தேடி அலையும் இளைஞனின் போராட்டங்களும் பற்றியது இந்தக்கதை. கதையாசிரியர் தன் குடும்பத்தின் கதையைத் தனித்தனி அத்தியாயங்களில் தனித்தனிப் பாத்திரங்களாக முன்வைக்கின்றார். வெளிநாடொன்றில் வதிவிட உரிமை தேடும் அவருடைய போராட்டம் கால நீட்சியுடையது. ஒன்றல்ல இரண்டல்ல, பல்வேறு நாடுகளில் பிடிபடுதல், சிறை அடைப்பு, முகாம் வாழ்வு, ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் சட்டவிரோதமாக எல்லையைக் கடத்தல், போலிக் கடவுச் சீட்டுடன் விமானமேறுதல் போன்ற பயணங்களின் தொகுப்பாகவும் அமைகிறது.
தந்தை நகை வணிகராகவிருந்த காரணத்தால் ஊரிலும் சுற்றுவட்டாரத்திலும் மிகுந்த செல்வாக்கும் செல்வச் செழிப்புமுடைய குடும்பம் இவர்களுடையது. ஆனால் போர் உக்கிரமடைந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, நகை வணிக வீழ்ச்சி காரணமாக குடும்பம் மிகுந்த வறுமைக்குள் தள்ளப்படுகின்றது. உலகெலாம் அலைந்து வாழ்வு தேடிய ஒரு தலைமுறையின் வாழ்வைப் பிரதிபலிக்கின்றது ஆசிரியரின் அனுபவம். கதை சொல்லலின் போக்கில் ஈழப் போரும் அரசியலும் வாழ்வும் பேசப்படுகின்றன.
போர்ச்சூழல்
1983 ஆம் ஆண்டில் தொடங்குகின்றது கதை. இராணுவத்தின் சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றிலிருந்து தப்புவதற்காக வீட்டிலிருந்து பற்றைகள், தோட்டங்களைக் கடந்து நெடுந்தூரம் ஓடுவது பற்றிய விபரிப்புடன் தொடங்குகிறது புத்தகத்தின் முதலாவது அத்தியாயம். உயிரச்சத்தோடு ஓடியொளிதல், தப்பித்தல், வீடு திரும்புதல் என மிக நுணுக்கமான விபரணைகளை அந்த அத்தியாயம் கொண்டுள்ளது. ” இத்தனை ஆண்டுகள் கழிந்தும் வெறுங்கால்களுடன் தார்ச்சாலையில் ஓடும்போது எழுந்த மெல்லிய ஓசை இன்றும் என் காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றது ” என அந்த நினைவுகளை மீட்கின்றார் லோகதாசன். கறுப்பு ஜூலைக்கு முன்னரானதும் பின்னரானதுமான சிங்கள-தமிழ் இன முரண்பாடுகளின் பின்னணி, தகவல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பகிரப்படுகின்றது. ஈழ விடுதலைப் போராட்டமும் போராளி இயக்கங்களும் உருவாகுவதற்கான நிர்ப்பந்தம் ஏற்பட்டமை குறித்தும் தொட்டுச் செல்லப்படுகின்றது.
ஒளிவுமறைவின்றித் தன் குடும்பத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் எடுத்துரைக்கின்றார். குறிப்பாக தந்தை, தாய், சகோதரர்கள் குறித்த நிகழ்வுகளை விபரமாகப் பகிர்ந்துள்ளார். அவர்களுக்காகத் தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் பற்றிய அறிமுகம் நிகழ்கின்றது. பின்னர் கதையின் ஓட்டத்தில் முக்கிய பாத்திரங்களாக அவர்கள் பற்றிய கதைகள் வெவ்வேறு சம்பவங்களின் ஊடாகச் சொல்லப்படுகின்றன. தந்தை பற்றி மிக வெளிப்படையாகப் பேசப்படுகின்றது. ஒரே வீட்டில் தாயுடனும் தாயின் தங்கையுடனுமாக இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடாத்தியதை எழுதுகின்றார். அதனால் எழுந்த குடும்பப் பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், தாயைத் தந்தை நடாத்திய விதம், அதனால் தந்தைக்கும் இவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளும் பேசப்படுகின்றன. ஆண் மைய குடும்ப அமைப்பினைத் தன் குடும்ப மனிதர்கள், நிகழ்வுகள், சூழல்கள், அனுபவங்களுக்கூடாக விபரிக்கின்றார்.
இராணுவத்தின் சுற்றிவளைப்புத் தேடுதலின் பின், அன்றைய நாள், கிராமத்தின் இளைஞர்கள் பலர் காணாமற் போயிருந்தனர். அந்தக் காணாமற் போதல் இரண்டு அடிப்படைகளிலாலானது. ஒன்று இராணுவத்தினராற் சில இளைஞர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். மற்றையது, இளைஞர்கள் இயக்கங்களில் இணைந்தமையைக் குறிக்கின்றது. இது அன்றைய காலகட்டச் சூழ்நிலையைப் பிரதிபலிக்கின்றது. இது ஒரு நாளின் சம்பவமாக லோகதாசனின் அனுபவப் பதிவில் இருந்தாலும், அது ஆயுதப் போராட்டத்திற்கான அழுத்தமும் திணிப்பும் எழுந்த புறநிலையைப் பிரதிபலிக்கின்றது.
குடும்பப்பின்னணி – சமூக நடைமுறை
உறவு – உணர்வு நெருக்கம் இல்லாத அதேவேளை சமூக அந்தஸ்து மற்றும் கல்வி, தொழில் வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்ட குடும்ப நிலைமைகள் குறித்தும் பகிரப்படுகின்றது. குறிப்பாகத் தந்தை, குடும்பத்தை ஒரு வணிக அமைப்புப் போல அணுகியதாகவும் வெற்றி மட்டுமே அளவீடாக இருந்ததாகவும் வர்ணிக்கப்படுகின்றது. குடும்பம் சார்ந்த பகிர்வுகள் நுண்ணுணர்வு மிக்கவை. தாயார் பெருத்த அவமானங்களையெல்லாம் எப்படித் தாங்கிக் கொண்டார், தாயின் கையறு நிலை, சகிப்பின் எல்லை போன்றவற்றை இன்றுவரை தன்னாற் புரிந்து கொள்ள முடியவில்லை என்று குறிப்பிடுகின்றார்.
லோகதாசன் குடும்ப நலனுக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்ட மனவுறுதியும் துணிச்சலுமுடையவராகத் தனது தாயாரைக் காண்கின்றார். இன்று தான் எப்படியாக உருவாகியிருக்கின்றேனோ தனது அந்த ஆளுமையைத் தனக்குள் வடிவமைத்ததில் தாயாரின் பங்கினையும் நினைவுகூருகின்றார். தாயகத்திற் தனது குடும்பத்தினது வாழ்வு எத்தகையதொரு சாதிய அமைப்புமுறையைப் பேணியதாக இருந்தது அல்லது தந்தை அதனைப் பேணுவதற்கு எத்தகைய முக்கியத்துவத்தினைக் கொடுத்தார் என்பதைப் பல்வேறு சம்பவங்கள் மூலம் சொல்கின்றார். தொழிலாளர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவு உண்டமைக்குத் தண்டனை, சந்தையில் வாழைப்பழம் விற்றமைக்குத் தண்டனை, கடலில் நீந்துவதை மீனவர்களுடன் தொடர்புபடுத்தியமை, சொந்தக்காரர்கள் தவிர்ந்த கிராமத்தின் குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்காமை போன்ற இன்னபிற சம்பவங்கள் புத்தகத்தில் இடம்பெறுகின்றன. அவற்றையெல்லாம் மீட்டுப்பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை நிராகரிக்கின்ற அல்லது அவை சார்ந்த தனது பிற்கால – சமகால நிலைப்பாட்டினையும் பலவிடங்களில் லோகதாசன் வெளிப்படுத்துகின்றார். ” துரதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் சாதி அமைப்பு இலங்கையில் வாழ்வோடு பிணைந்த நடைமுறையாக இருந்தது. அத்தகைய ஒரு குறிப்பிட்ட ஏற்பாட்டுடன் வளரும் போது இது எல்லா இடங்களிலும் சகஜமான, வாழ்வோடு ஒட்டியிருக்கவேண்டிய அம்சமென்று நினைப்பது எளிது.” என்கிறார்.
ஒரு விடயம் சிக்கலுக்குரியது. ” சங்கத்தானைக் கிராமம் முந்நூறுக்கும் அதிகமில்லாத குடும்பங்களைக் கொண்டது. அதிற் பெரும்பான்மையினர் தந்தையின் சாதியைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் சாதி குறைந்த கிராமத்தவர்கள் ” என்கிறார். மீனவர்கள், விவசாயிகள், பொதுத்தொழிலாளர்களை அவ்வாறு விளிக்கின்றார். சமூகநீதி சாதியத்திற்கு எதிரான பார்வையுடன் இச்சொல்லாடல் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த விபரிப்பு சாதியப் படிமுறைகளைப் பேணிய – பேணுகின்ற ஒரு சமூக அமைப்பினைப் பதிவுசெய்கின்றது. ஆனால் சமூகநீதி பற்றிய பிரக்ஞையுடன் எழுதும்போது, குறைந்த சாதி என்று எழுதமுடியாது. Oppressed caste / Oppressed people / Oppressed villagers என்பதே பிரக்ஞைபூர்வமான பதம். பெண்கள் பற்றிய சமூகத்தின் பார்வையும் அவர்கள் எப்படியாக நடாத்தப்பட்டார்கள் என்பதையும் தனது தாய் பற்றிய குறிப்புகளோடு பகிர்கின்றார்.
பாதித்த சம்பவங்கள்
இவர் விடுதியிற் தங்கியிருந்து சென்.ஜோன்ஸ் கல்லூரியிற் பயின்ற காலத்திற்தான் யாழ் நூலக எரிப்பு நிகழ்கிறது. தீவைக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விடுதியிலிருந்து தீயணைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களில் ஒருவனாக அது குறித்த நேரடி அனுபவங்களையும் அது ஏற்படுத்திய தாக்கத்தினையும் கையறு நிலையில் நின்றதையும் துயரம்தோய விபரிக்கின்றார்.
” சம்பவ இடத்திற்கு நான் சென்றபோது வானம் அடர்ந்த புகையுடன் அதீத மஞ்சள் நிறமாக இருந்தது. மூக்கைத் துளைக்கும் வகையிற் கடுமையான நாற்றம் வீசியது. வெப்பத்தின் சக்தி மிகவும் உக்கிரமாக இருந்தது. அது நம்மைக் கிட்ட நெருங்கிவிடக்கூடாது என்று அச்சுறுத்துவது போல் இருந்தது. மக்கள் எறும்புப் புற்றில் எறும்புகளைப் போல எல்லாத் திசைகளிலும் ஓடினர். நம்பிக்கை தகர்ந்திருந்தது. கட்டடத்தின் பெரும்பகுதி ஏற்கனவே தீயில் எரிந்து கொண்டிருந்தது. எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை “
1984 இல் ஒரு முறை விடுதியிலிருந்து விடுப்புப்பெற்று குடும்பத்தினைப் பார்க்க வீடு செல்லும் போது தொடருந்தில் நடந்த ஒரு சம்பவத்தினைப் பகிர்ந்துகொள்கின்றார். அது இராணுவத்தினரால் பாலியல் ரீதியான வன்முறைக்கு உட்பட்ட சம்பவம். அந்தச் சம்பவத்தினை மிக வெளிப்படையாக எழுதியுள்ளார். தமிழ்ச் சூழலில் ஒரு ஆண் தனக்கு நடந்த ஒரு பாலியல் வன்முறையை எழுதுவது சாதாரண விடயமல்ல. இது அவருடைய மனத்துணிவினதும் முதிர்ச்சியினதும் வெளிப்பாடு. அதன்போது எதிர்கொண்ட மன – உடற் போராட்டம், அந்தச் சம்பவம் ஏற்படுத்திய மனக்குமைவு, அவமானம் இன்றுவரை அவரைத் தொந்தரவு செய்யும் துன்பியல் என்பதைப் பல இடங்களில் இந்நூலிற் பேசியிருக்கின்றார்.
தொடருந்துப் பெட்டியொன்றில் இவர் மட்டும் அமர்ந்திருக்கின்றார். இவரது இருக்கையை நோக்கி வந்த இராணுத்தினர் சுற்றிவர நின்றபடி இவரைப் பரிகாசம் செய்திருக்கின்றனர். ஒரு இராணுவத்தினன் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இவரது காற்சட்டைக்குள் கையைவிட்டு ஆணுறுப்பினை அழுத்தி, விந்து வெளியேறும் வரை தூண்டியிருக்கின்றான். அப்போது சுற்றிநின்ற இராணுவத்தினர் கூச்சலிட்டுக் கேலிசெய்திருக்கின்றனர். அற்பமாகப் பார்த்தனர் என்றும் எழுதுகின்றார்.
” தொடருந்தின் ஜன்னல் ஊடாக வெளியே பார்க்கிறேன். சிறுவயதிலிருந்து என் புறங்கைபோலப் பரிச்சயமாக இருந்த அந்த நிலத்தோற்றம் இப்போது மிக அந்நியமாகவும் கொடூரமாகவும் தோற்றமளித்தது ” என அந்நேர மனநிலையைச் சொல்கிறார். ஒரு குற்றவாளி தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்படுவது போன்ற உணர்வுடன் வீட்டுக்குச் சென்றதாகவும் அந்தச் சம்பவத்தின் பின்னான மனநிலையை எழுதுகின்றார். அந்தச் சம்பவம் ஏற்படுத்திய கோபம், அவமானம், இயலாமை, குழப்பம், பழிவாங்கும் உணர்வு என, பின்-உழல்வு (post-trauma) நிலைபற்றி நிறையவே பேசுகின்றார். நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ள பின்னுரையிற்கூட அச்சம்பத்தின் பின்-உழல்வு பற்றியும் அதனை அண்மையிற்தான் ( இந்தப் புத்தகத்தில் வெளிப்படையாகப் பகிர்வதற்கு முன்) தன் மனைவியிடம் மட்டும் பகிர்ந்து கொண்டதாகக் கூறியுள்ளார்.
இயக்கத்தில் இணையும் உந்துதல்
அவமானம் உயிரைத் தின்றுகொண்டிருந்தது என்றும் அந்தத் துன்புறுத்தும் நினைவுகளிலிருந்து ஓடியொளிய முடியாது என்பதையும் ஒரு கட்டத்தில் உணர்ந்து கொள்கின்றார். சிறீலங்கா இராணுவத்தினைப் பழிவாங்கும் மனஉந்துதலோடு இயக்கத்தில் இணையும் முடிவினை எடுத்ததாகவும் குறிப்பிடுகின்றார். இயக்கத்தில் இணைவதற்கான பிரயத்தனங்களின் போதான அனுபவங்களும் விரிவாகப் பகிரப்படுகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரச்சாரப் பிரிவில் போஸ்ரர் ஒட்டுதல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், நிதிசேகரித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்ட கதைகள் நூலில் உள்ளன. ஆமியைச் சுடவேண்டுமென்பதே அவர் இயக்கத்தில் இணைவதன் இலக்காக இருந்திருக்கிறது. இயக்கங்களுக்கிடையிலான அதிகார மோதல்கள், படுகொலைகளாற் சலிப்பும் ஏமாற்றமுமடைந்த நிலை, குடும்பத்தின் பொருளாதார நிலைமையைச் சீர்செய்தல் போன்ற காரணங்களுக்காக வெளிநாட்டுக்குச் செல்லும் முடிவினை எடுக்கின்றார்.
வெளிநாட்டுப் பயண முனைப்பு
ஜேர்மன் நாட்டில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புகலிட அனுமதியும் வேலைவாய்ப்பும் கொடுக்கின்றார்கள் என்ற வாய்வழிக் கதையை நம்பி கொழும்புக்குப் புறப்படும் லோகதாசன், ஏஜென்சிக்காரனால் ஏமாற்றப்பட்டுத் தங்குவதற்கு இடமின்றிக் கொழும்பு வீதிகளில் பல நாட்கள் அலைகின்றார். பதினேழு வயதில், இனக்கலவரம் நிகழ்ந்து நாட்டில் அரசியற் பதற்றமும் தமிழர்களுக்கெதிரான பௌத்த சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைகள் – வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு சூழலில் கொழும்பு வீதிகளில் அலைந்த அனுபவங்கள் பகிரப்படுகின்றன. தங்குவதற்கு பணமின்றி காலிமுகத்திடல் கடற்கரையில் இரவுகளில் படுத்துறங்கியிருக்கின்றார். திக்குத்தெரியாத காட்டிற் தனித்துவிடப்பட்ட நிலைமையை ஒத்தவை அந்த அனுபவங்கள்.
தன்னலமற்று உதவிய மூன்று பெண்கள்
பாஸ்போர்ட்டையும் பணத்தையும் ஏஜென்சியிடம் பறிகொடுத்துக் கையறு நிலையிற் செய்வதறியாது கொழும்புத் தெருக்களில் அலைகிறார் லோகதாசன். கொழும்பில் பிறந்து வளர்ந்த தேவி என்ற ஒரு தமிழ் இளம்பெண் பாஸ்போர்ட்டையும் பணத்தையும் மீட்டுக் கொடுக்கின்றார். தேவியின் மிடுக்கும் துணிச்சலும் செயற்திறனும் அபாரானவை. லோகதாசன் கொழும்புக்கு வரும்போது தொடருந்தில் தற்செயலாகச் சந்தித்த பெண் அவர். கொழும்பில் செய்வதறியாது லோகதாசன் அலைந்து திரிந்த தருணத்தில் மீண்டும் தற்செயலாக ஒரு சந்திப்பு நிகழ்கிறது. இவரின் நிலையைக் கேட்டறிந்து எந்தவிதப் பிரதிபலனையும் எதிர்பாராது தன்னலமற்று உதவுகின்றார் தேவி. ஒரு த்ரில்லர் படத்தினைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகின்றது ஏஜென்சியைக் கண்டுபிடிப்பதற்கும் பாஸ்போர்ட்டினையும் பணத்தினையும் மீட்டெடுப்பதற்கும் தேவி மேற்கொண்ட நடவடிக்கைகள். 80 களின் நடுப்பகுதியில் இத்தகையதொரு மனத்துணிவும் செயற்திறனும் மிக்க தமிழ்ப்பெண் தேவி; என்னை மிகவும் கவர்ந்த பாத்திரங்களில் தேவி பாத்திரம் முதன்மையானது. உதவிசெய்த பின்னர், லோகதாசனுக்கும் தேவிக்குமிடையில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ” அவருடைய தொடர்பு விபரத்தை நான் கேட்கவில்லை. அவருடைய தன்னலமின்மைக்கு நன்றி சொல்லும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. ஒரு முறை தொடருந்தில் என்னைச் சந்தித்தது மட்டுமே எமக்கிடையேயான பழக்கம். ஆனால் உண்மையான அர்த்தத்தில் அவர் என் உயிரைக் காப்பாற்றியவர். ஒரு நாள் அவர் இந்நூலைப் படிக்கக்கூடும். நான் அவருக்கு எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்வார் என்று நம்புகிறேன்” என தேவியை நன்றியோடு நினைக்கிறார் நூலாசிரியர்.
தேவி மட்டுமல்ல, பயணத்திற்கான நிதி உறுதிப்படுத்தல் ஆவணத்தினை ஏற்பாடு செய்துகொடுக்கும் நளினி மற்றும் ஜேர்மனிக்கு பயணப்படுவதற்கு முன்னர் சிலநாட்கள் தனது வீட்டில் தங்குவதற்கு முன்பின் அறிமுகமில்லாத இவருக்கு இடமும் உணவும் கொடுத்த முஸ்லிம் பெண் ஆகியவர்களும் முக்கியமான உதவிகளைச் செய்த பெண்களாவர். இக்கட்டான ஒரு சூழலிற் சிக்கியிருந்தவரை அவற்றிலிருந்து மீட்டு விமானமேறுவதற்கான சூழலை அமைத்துக் கொடுத்தவர்கள் இந்த மூன்று பெண்களுமே.
ஜேர்மன் – பிரான்ஸ் – பிரித்தானியா – கனடா
இலங்கையிலிருந்து ஜேர்மனுக்குச் சென்று, அங்கு பிடிபட்டு, முதலிற் சிலநாட்கள் சிறையிலிருக்கிறார். பின்னர், அகதிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வு. அடுத்து, பிரான்ஸிலுள்ள தமையனின் ஏற்பாட்டில் ஜேர்மனியிலிருந்து கார்களில் வெவ்வேறு ஏற்பாட்டாளர்களின் பொறுப்பில் பிரான்சிற்குப் பயணமாகின்றார். அங்கும் நிரந்தர இருப்புக்குரிய வாய்ப்புகளைக் கண்டடைய முடியாத நிலையில், போலிக் கடவுச்சீட்டுடன் கனடாவிற்குப் பயணமாகும் திட்டம் பாரிஸ் விமானநிலையத்திலேயே தடைப்படுகிறது. பிடிபட்டுச் சிறையிலடைக்கப்படுகின்றார். தமையனின் ஏற்பாட்டில் விடுதலையாகி, பின் மீண்டும் போலிக்கடவுச்சீட்டுடன் இலண்டனுக்கான பயணம் தொடங்குகிறது. பிடிபடாமல் லண்டனைச் சென்றடைந்தபோதும், அங்கு வதிவிட உரிமை, கல்வி, வேலைவாய்ப்புப் பெறுவதிலுள்ள சிக்கல்களால் அங்கும் இருப்பினை நிலைநிறுத்த முடியவில்லை. அங்கிருந்து கனடாவுக்கான பயணமே அவர் எதிர்பார்த்த இறுதி இலக்கினை நிறைவேற்றுகின்றது. தொடர் தோல்விகள், நம்பிக்கை இழப்புகளுக்கு மத்தியில் மீண்டும் மீண்டும் விடாமுயற்சியால் இறுதி இலக்கு நிறைவேறுகின்றது.
தனி ஒருவரின் வாழ்வு தேடும் போராட்டங்களின் அனுபவப் பகிர்வாக இருந்தாலும், இது வெளிநாடுகளில் வாழ்வு தேடிய ஒரு தலைமுறையின் அனுபவங்களை விபரிக்கின்றது. இன்னொரு வகையிற் சொல்வதானால் தனிமனிதனின் கதையாக இருந்தாலும் இது ஒரு சமூகத்தின் கதையைப் பிரதிபலிக்கின்றது. சமாந்தரமாக இலங்கை அரசியல் நிகழ்வுகள், வரலாற்று ரீதியான அதன் போக்குகள் பேசப்படுகின்றன. அவை வலிந்த திணிப்புகளாக அல்லாமல், தனது சொந்த அனுபவத்திலிருந்தும் அறிதலுக்குட்பட்ட நிலைகளிலிலிருந்தும் முன்வைக்கப்படுகின்றன.
தொடர் தோல்விகள் – சிறை – போலிக்கடவுச் சீட்டுடன் பயணம்
லோகதாசனுடைய போராட்டம் தனக்கும் குடும்பத்திற்குமான வளமான ஒரு வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான முனைப்பாகும். அதன் முதற்படி வெளிநாடொன்றுக்குச் சென்றடைதலும் அங்கு வதிவிட உரிமையைப் பெற்று வேலைவாய்ப்பினைப் பெறுவதாகும். அந்தப் போராட்டத்தின் இலக்கினை அவர் அத்தனை சுலபமாக அடைந்துவிடவில்லை. தொடர் தோல்விகள், காலதாமதங்கள் மட்டுமல்ல; போலிக் கடவுச்சீட்டுடன் பயண முயற்சிகளாற் சிறைபட்டு ஒரு குற்றவாளியாக முத்திரையும் குத்தப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு நாட்டிலும் பட்டபாடுகள், எதிர்கொள்ளல்கள், அகதி முகாம் வாழ்வு, சிறை அனுபவங்கள் விபரிக்கப்படுகின்றன.
” சிறை பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை பெரிய மோசமானதாக இருக்கவில்லை. நீண்ட காத்திருப்பே மோசமானதாக இருந்தது. அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகின்றது என்பதை அறியாத நிலை என்னை மிகவும் தொந்தரவு செய்தது. ஒவ்வொரு மணி நேரமும் ஒரு யுகம்போல் தோன்றியது ” என்கிறார்.
நூலின் பிரதிபலிப்பு
அன்றைய காலகட்டத்தில் நாட்டின் அரசியல் பொருளாதாரக் காரணங்கள், அவற்றின் பாலான நிர்ப்பந்தங்கள் காரணமாக வெளிநாட்டுக்குப் புறப்பட்ட இளைஞர்கள் எத்தகையதொரு நெருக்கடியான ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பதன் பிரதிபலிப்பாக இந்நூலின் பின்பாதியை மதிப்பிடமுடியும். இத்தகைய தன்னனுபவப் பாடுகளை எழுதுவதென்பது அடிப்படையில் மனதில் நீண்டகாலமாகச் சுமந்து திரிகின்றதும் மனதை அரித்துக் கொண்டிருக்கின்றதுமான நினைவுகளை இறக்கிவைப்பதற்கு உதவக்கூடியது. நூலாசிரியர் தனது பின்னுரையில் அதனைத்தான் கூறுகின்றார். இந்த நினைவுக் குறிப்புகளை எழுதுவது தனது வாழ்வின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த மோசமான நினைவுகளைக் கையாள்வதற்கான முதற்படி என்றும் தன்னை ஒரு வலுவான மனிதனாக்க இதனை எழுதியமை பங்களித்துள்ளதாகவும் கூறுகின்றார். இந்தவகை எழுத்திற்கு மூன்று பரிமாணங்கள் உள்ளன. ஒன்று எழுதியவர் சார்ந்தது. மற்றையது வாசகர்களுக்குக் கடத்தக்கூடிய உணர்வும் அறிதலும். இந்த இரண்டிற்கும் அடுத்தது இதன் பயன்பாடு, ஆவணப்பெறுமதி, காலப்பிரதிபலிப்பு, பேசாப்பொருட்களை மிக வெளிப்படைத்தன்மையோடு பேசியமை போன்ற பரிமாணங்களாகும்.