‘இலங்கை இந்தியத் தொழிலாளர் நிலைமை’ : தோட்டத் தொழிலாளர் வேதன நிர்ணய அறிக்கைகளுக்கான எதிர்வினை
Arts
28 நிமிட வாசிப்பு

‘இலங்கை இந்தியத் தொழிலாளர் நிலைமை’ : தோட்டத் தொழிலாளர் வேதன நிர்ணய அறிக்கைகளுக்கான எதிர்வினை

January 16, 2025 | Ezhuna

மலையகத் தமிழரின் சமூக, அரசியல் விடுதலைக்காகத் தன் வாழ்வின் பெரும்பாகத்தை அர்ப்பணித்த நடேசய்யர் குறித்த ஆய்வுகள் அவரது பங்களிப்பை அறிமுகப்படுத்தல், அவற்றை மதிப்பிடுதல் என்ற தளங்களில் முன்னோடி முயற்சிகளாக விளங்குகின்றன. இருந்தபோதிலும் அவை குறிப்பிட்ட சில மட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.  நடேசய்யரின் மூல ஆவணங்கள் பல கிடைக்கப்பெறாத காலத்தில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், சில புதிய மூலங்களைக் கண்டறிந்தும் அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அவற்றுள் நடேசய்யரின் மொத்தப் பங்களிப்புகளும், அவரின் கருத்தியல் தளத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படாத நிலையே தொடர்கிறது. அந்தவகையில், ஏற்கனவே கிடைக்கப்பட்டுள்ள நூல்களையும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள நூல்களையும் மதிப்பிடுவதன் மூலம் நடேசய்யரின் பங்களிப்புகளையும், அவர் காலத்து சமூக, அரசியல் அசைவையும் கண்டுகொள்ளவும் நடேசய்யர் பற்றிய ஆய்வுகளில் நிலவும் இடைவெளியை நிரப்பவும் எதிர்கால ஆய்வுகளுக்கான திசைகாட்டல்களை வழங்கவும் ‘கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை’ எனும் இத் தொடர் எழுதப்படுகிறது.

“ஏழைத்தொழிலாளி தோட்டக்காட்டில் திக்கற்றவனாய்த் தவிக்கிறான். அவனுக்கு இப்போது கிடைக்கும் தினச்சம்பளம் சுமார் 40 அல்லது 45 சதம் தான். அதிலும் மாதம் 30 நாளும் அவனுக்கு வேலை கிடைப்பதரிது. சில தோட்டங்களில், அதிலும் ரப்பர் தோட்டங்களில் சில மாதங்களில் 17 நாட்கள்கூட வேலையிருப்பதரிதாகிறது. சராசரி 20 நாள் ஒரு தொழிலாளி உழைக்கிறானென்று வைத்துக்கொண்டால், அவனுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 9 கிடைக்கிறது. இப்போது நாம் கவனிக்க வேண்டியது, இச்சம்பளம் ஒரு தொழிலாளிக்குத் தன் சுதேசத்தில் கிடையாதா என்பதே. இதற்கதிகமாகவே சாதாரணமாய்த் தென் இந்தியாவில், கூலிவேலை செய்பவன் ஒருவன் சம்பாதிக்கக் கூடுமென்பதைத் தென் இந்தியாவைத் தெரிந்தவர்கள் ஒப்புக்கொள்ளக்கூடியதே. விறகு வெட்டியும் சுமைதூக்கியும் வாரத்திற்குப் பயிர் செய்வோனும் மிகவும் எளிதாய் இவ்வொன்பது ரூபாய்க்குமேல் ஒரு மாதத்தில் தன் நாட்டிலேயே சம்பாதித்துக் கொள்வானென்பதற்குச் சந்தேகமேயில்லை. சுதேசத்தில் கிடைக்கும் ஊதியம் தன் ஜீவனத்திற்குக் காணாததனாலேயே அயல்நாடாகிய இத்தீவுக்கு வந்திருக்கும் நம் சகோதரத் தொழிலாளிக்கு என்ன சம்பளம் கொடுக்க டர்னர் கமிட்டியார் நியமிக்கிறார்கள்? நாளொன்றுக்குச் சதம் 51. ஒரு மாதத்துக்கு அதாவது வேலையில்லாத, அல்லது செய்யாத நாட்கள் போகவுள்ள சுமார் 20 நாட்களுக்கு அவனுடைய வருமானம் ரூ. 10.20 (பத்து ரூபாய் இருபது சதம்). எந்த வகையில் தொழிலாளியின் நிலைமை இந்தியாவைவிட இங்கு செம்மைப்பட்டுவிடும் என்று நாம் கமிட்டியாரைக் கேட்க விரும்புகிறோம்? பொருளாதார சாத்திரத்திற்கு இது சிறிதும் பொருந்தியதில்லையே. சுதேசத்தைவிட அதிகச் செலவுள்ள இந்நாட்டில் சுதேசத்தில் கிடைக்கக்கூடியதைவிடக் குறைவான சம்பள விகிதம் தீர்மானிக்க முற்பட்ட இக்கமிட்டியாரின் புத்தி நுட்பத்தையும் ஆராய்ச்சியையும் மனோபாவத்தையும் நாமென்னென்று சொல்லுவது !”

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் – 23.03.1925 அன்று தேசபக்தன் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கத்தில் தோட்டத் தொழிலாளர் சம்பள நிர்ணயம் தொடர்பிலான டர்னர் குழுவின் (வெயிட் தலைமையிலான குழு) சிபாரிசுகளுக்கான எதிர்வினையை மேற்கண்டவாறு நிகழ்த்தியுள்ளார், நடேசய்யர். ஓர் இதழியலாளன் என்ற நிலையிலிலிருந்து நடேசய்யர் மேற்கொண்டுள்ள எதிர்வினை வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாகும். தொழிலாளரின் வேதனத்தை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட வெயிட் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த முதற்குரலாக அந்த எதிர்வினை அமைகிறது.

உழைப்புக்கேற்ற ஊதியமின்மை தோட்டத் தொழிலாளர் முகங்கொள்ளும் பிரச்சினைகளுள் முதன்மையானதாகும். தென்னிந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் குடியேறிய காலம் முதல் இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்துள்ள சமகாலம் வரை அவர்களுக்கு நியாயமான கூலி வழங்கப்படுவதில்லை. அதனால் அம்மக்கள் முன்னெடுத்த போராட்டங்களில் கூலி உயர்வுக்கான போராட்டம் முன்நிலை பெறுகிறது. அவர்கள் பெற்ற சிறு ஊதிய உயர்வுகூட போராட்டங்களால் பெறப்பட்டதாகவே விளங்குகிறது. அத்தகையே போராட்டங்களை முடக்கும் வகையில் கூட்டு ஒப்பந்தம் என்ற முறைமையை அறிமுகப்படுத்தி (1998), இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையே சம்பளம் பற்றி மீள்பரிசீலனை மேற்கொள்ளலாம் என்ற விதியை – சூழ்ச்சியை ஆளும் அதிகார சக்திகள் கொண்டுவந்தன. தொழிலாளர்களுக்குத் தலைமைதாங்கிய தொழிற்சங்கங்களும் அற்ப இலாபங்களுக்காக அதனை ஏற்று வழிமொழிந்தன. அதனால் தொழிலாளர் ஊதிய உயர்வுப் போராட்டம் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை என ஒத்திப்போடப்பட்டது.

1000 ரூபாயாகச் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என அம்மக்கள் நீண்டகாலமாக முன்னெடுத்த போராட்டம் பலனின்றி நீர்த்துப்போனமை அண்மைய வரலாறாகும். அதற்கு அம்மக்களின் தலைமைகள் எனக்கூறும் அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் உடந்தையாக இருந்தமை பொதுவெளியில் பரவலாக அம்பலப்படுத்தப்பட்டன. இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிமிக்க காலத்தில் தோட்டத்தொழிலாளரின் வேதனம் மிகவும் கீழான நிலையிலேயே இருப்பது வேதனைக்குரியதாகும். ஆனால், அம்மக்களின் தெழிற்சங்க அமைப்புகளும் அரசியல் தலைமைகளும் தொழிலாளரின் வேதன உயர்வு தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பின்நிற்கின்றன. ஆளும் அரச தரப்புகளும் தோட்டத் தொழிலாளர் வேதன உயர்வில் அக்கறையற்றிருப்பதுடன் தம் அரசியல் இலாபங்களுக்கான கருவிகளுள் ஒன்றாகத் தோட்டத் தொழிலாளர் ஊதியப் பிரச்சினையைக் கைக்கொண்டு வருகின்றன. அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தோட்டத் தொழிலாளர் சம்பளம் 1700 ரூபாயாக உயர்த்தப்படும் என வெளியிடப்பட்ட வர்த்தமானி (மே 21, 2024 – இல. 2385/14), அரசினாலேயே ஜீலை 10, 2024 அன்று ரத்து செய்யப்பட்டமை அதற்கு நல்ல சான்றாகும்.

தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை வரலாற்றுப் பின்புலத்தில் நோக்கும்போது, தொடக்ககாலத்தில் தோட்டவுடைமையாளர் தீர்மானிக்கும் அளவே சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. தோட்டவுடைமையாளருக்கும் தொழிலாளருக்கும் இடையிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொழிலாளரின் சம்பளம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் பிந்திய காலத்தில் (1865 மற்றும் 1889) கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் இருதரப்பு பேச்சுவார்த்தையினூடாக சம்பளம் நிர்ணயிக்கப்படாது, தோட்டவுடைமையாளரே அதனைத் தீர்மானித்து வந்துள்ளார். முறையான கால ஒழுங்கில் சம்பளம் வழங்கப்படாது, தோட்டவுடைமையாளர் தீர்மானிக்கும் காலத்திலேயே வழங்கப்பட்டு வந்துள்ளது. நீண்ட காலமாகச் சம்பளத்தின் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை. பெருந்தோட்டத்துறை வேதனங்களை வரலாற்றுப் பின்னணியில் ஆராய்ந்துள்ள மு. சின்னத்தம்பி, தொழிலாளரின் வேதனங்களில் மாற்றங்கள் ஏதுமின்றி தேக்கநிலையில் வைத்திருப்பதற்கு ஏதுவாக அமைந்த காரணிகளாகப் பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார்:

1. ஆரம்ப காலங்களில் தோட்ட உரிமையாளர்களுக்கு இடையே ஊழியத்துக்கான போட்டியானது தொழிலாளருக்குச் செலுத்தப்படும் வேதனங்களின் அடிப்படையிலன்றி தொழிலாளரைத் திரட்டுவதற்குச் செலுத்தப்பட்ட முற்பணங்களின் அளவிலேயே தங்கியிருந்தமையால் போட்டியடிப்படையில் வேதனங்களை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை.

2. தொழிலாளரது மாதாந்த வருவாயானது குறிப்பிட்ட மாதத்தில் அவர்கள் வேலை செய்யும் மொத்த நாட்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணிக்கப்பட்டமையால், தோட்டங்களில் காணப்பட்ட வேலைப்பளுவிற்கேற்ப ஒரு மாதத்தில் கொடுக்கப்படும் வேலைநாட்களை தோட்ட உரிமையாளர் மாற்றினர். குறிப்பிட்ட மாதத்தில் தொழிலாளருக்குக் கிடைக்கும் வேலைநாட்களின் எண்ணிக்கையே அவர்களது மாதாந்த வருவாயை நிர்ணயித்தது. எனவே, வேதனத்திலும் பார்க்க ஒரு மாதத்தில் வேலை வழங்கப்படும் நாட்களுக்கே கூடிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

3. தொழிலாளரது பிரதான உணவுப்பண்டமான அரிசியை அதனது சந்தை விலையில் ஏற்படும் தளம்பல்களைக் கவனத்தில் கொள்ளாது நிலையான விலையில் விநியோகிப்பதன் மூலம் வாழ்க்கைச் செலவில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப வேதனங்களை மாற்றியமைக்கவேண்டிய தேவை தவிர்க்கப்பட்டது.

தொழிலாளரின் ஊதியத்தில் நிலவிய தேக்கநிலை காரணமாக வாழ்க்கைச் செலவில் ஏற்படும் அதிகரிப்புக்கு ஏற்ப அவர்களின் வேதனம் உயர்த்தப்படவில்லை. அதனால் தொழிலாளரின் கடன்சுமை மேலும் மேலும் அதிகரித்துள்ளது. அக்கடன்சுமையிலிருந்து அம்மக்களை மீட்கும் முயற்சிகள் 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலேயே அழுத்தம்பெறத் தொடங்கியுள்ளன. அதற்கு இந்திய அரசின் இடையீடு காரணமாக விளங்கியுள்ளது. இந்திய அரசைத் திருப்திப்படுத்த முயன்ற இலங்கை அரசு, தொழிலாளரின் வேதனம் உள்ளடங்கலாக வாழ்க்கைத்தர மேம்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டது. அதற்கெனக் குழுக்களை நியமித்தது. அக்குழுக்கள் தொழிலாளர் நலன் என்ற தளத்தில்நின்று அறிக்கைகளைத் தயாரிக்காமல் காலனிய – காலனியத் தோட்ட உடமையாளர் நலன்களைக் கருத்தில்கொண்டு தயாரித்துள்ளன. அந்த அறிக்கைகளுக்கான எதிர்வினைகளை நடேசய்யரே அக்காலத்தில் வலுவாக முன்னெடுத்துள்ளார்.

தொழிலாளரின் உழைப்புக்கேற்ற – அவர்களது வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விரிவாக எடுத்துக்காட்டியுள்ள நடேசய்யர், வேதனத்தை நிர்ணயிப்பதற்கு அமைக்கப்பட்ட குழு, அக்குழுவினர் முன்வைத்த பரிந்துரைகளின் போதைமைகள் முதலானவற்றையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். டர்னர் குழுவின் அமைப்பையும் – அக்குழுவில் தொழிலாளர் பிரதிநிதிகள் எவரும் இல்லாதிருப்பதையும், குழு உறுப்பினர்கள் தோட்டத் தொழிலாளர் வாழ்வு தொடர்பிலான போதுமான தெளிவற்றவர்களாக இருப்பதையும் – அக்குழு தொழிலாளி ஒருவரின் வேதனத்தை நிர்ணயிப்பதற்கு அடிப்படையாக அமைகின்ற விடயங்கள் தொடர்பில் அக்கறை செலுத்தாமையையும் தேசபக்தன் ஆசிரியத் தலையங்கங்களிலும் ஏனைய சில கட்டுரைகளிலும் வெளிப்படுத்திவந்துள்ள நடேசய்யர், டர்னர் குழுவுக்கு முற்பட்ட காலத்தில் தோட்டத் தொழிலாளரின் சம்பள நிர்ணயம் தொடர்பில் உருவாக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் மீதான எதிர்வினைகளையும் அவ்வப்போது நிகழ்த்திவந்துள்ளார். பத்திரிகைகளில் மட்டுமன்றி துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவும் தன் எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் ‘தோட்டத்துரைமார் இராச்சியத்தின்கீழ்’, ‘இலங்கை இந்தியத் தொழிலாளர் நிலைமை’ ஆகிய துண்டுப்பிரசுரங்கள் தோட்டத் தொழிலாளர் வேதன முறையையும் அவ்வேதன முறையில் மாற்றங்கள் தேவை என்பதையும் விரிவாக எடுத்துரைத்துள்ளன.

“இலங்கை இந்தியத் தொழிலாளர் நிலைமை” என்ற துண்டுப்பிரசுரம் முதலில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை நடேசய்யரே தமிழ்ப்படுத்தி தேசபக்தனில் தொடராக வெளியிட்டுள்ளார். அதன் ஒவ்வொரு தொடரின் தொடக்கத்திலும் இடம்பெறும்,

“இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களது சம்பள விகிதம் உயர்த்த வேண்டித் தற்சமயம் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியை யுத்தேசித்து, இந்தியா சட்டசபை அங்கத்தவர்களுக்கும், சென்னை அங்கத்தவர்களுக்கும் இலங்கை இந்தியத் தொழிலாளர்களின் உண்மை நிலையை அறிவித்தற்பொருட்டும் வெளியிடப்பட்டு வரும் ஆங்கில புஸ்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. வாசகர்கள் ஊன்றி வாசிப்பார்களாக”.

என்ற குறிப்பு, ஆங்கிலத் துண்டுப்பிரசுரத்தின் நோக்கத்தினை வெளிப்படுத்தி நிற்கிறது.  தோட்டத் தொழிலாளரின் சம்பள விகிதத்தை உயர்த்த வேண்டும் என்ற அழுத்தம் ஏற்பட்டபோது இலங்கை அரசு தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை நிர்ணயிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்போது நடேசய்யர், தோட்டத் தொழிலாளரின் உண்மையான வாழ்க்கை நிலையையும் அவர்களுடைய சம்பள விகிதம் உயர்த்தப்பட வேண்டிய தேவையையும் இந்தியச் சட்டசபை உறுப்பினர்களுக்கும் சென்னை மாகாண அரசியல் உறுப்பினர்களுக்கும் அறியப்படுத்துவதற்கு இப்பிரசுரத்தை முதலில் வெளியிட்டுள்ளார். பின்னர் அதனைத் தோட்டத் தொழிலாளர் உள்ளடங்கலாக ஏனையோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தானே தமிழ்ப்படுத்தித் தேசபக்தனில் வெளியிட்டுள்ளார்.

இத்துண்டுப்பிரசுரத்தின் ஆறு தொடர்களைத் தேசபக்தனில் கண்டறிய முடிந்தது. அதன் இறுதித் தொடரிலும் ‘தொடரும்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அடுத்து வந்த இதழ்களில் அதன் தொடர்ச்சியைக் காணமுடியவில்லை. அத்துடன் ஆங்கில மூலத்தையும் கண்டறியமுடியவில்லை. அதனால் இப்பிரசுரம் முழுமையானதா என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.

இரண்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ள இப்பிரசுரத்தில் முதல் அத்தியாயத்தில் இலங்கையில் இந்தியத் தொழிலாளரின் குடியேற்றம், கோப்பிக்காலத்தின் தொடக்கத்தில் கங்காணிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையிலான உறவு, அக்காலத்தில் சம்பளம் வழங்கப்பட்ட முறை, துண்டு முறையினால் தொழிலாளர் அடைந்த துயர், துண்டுமுறை நீக்கம், துண்டுமுறை நீக்கத்தால் கங்காணிகள் அடைந்த இழப்பு, தோட்டத் தொழிலாளர் சம்பள நிர்ணயக் குழுக்களின் பாரபட்சமான செயற்பாடுகள், தொழிலாளர் சம்பள விகிதத்தை அதிகரிக்க வேண்டியதன் தேவை முதலான விடயங்கள் சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் அத்தியாயம் ‘கங்காணி முறை’, ‘காப்பி – தேயிலைக் காலங்கள்’ என இரண்டு உபதலைப்புகளைக் கொண்டுள்ளது. கங்காணி முறையின் அமைப்பு, கங்காணிகள் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்த விதம், கங்காணிகளுக்கு வழங்கப்பட்ட கூலி, கங்காணிகள் எதிர்கொண்ட சிக்கல்கள் எனக் கங்காணி முறையின் இயக்கம் சுருக்கமாகக் விளங்கப்படுத்தப்பட்டுள்ளதுடன் தோட்ட உடைமையாளர்களதும் கங்காணிகளதும் சுரண்டல், தொழிலாளரின் சம்பள விகிதம், சம்பளப் பிரச்சினையைத் தீர்க்க உருவாக்கப்பட்ட குழுவினருடைய அறிக்கைகள்மீதான எதிர்வினை, தொழிலாளர்களின் பொருளாதார நிலைமை, துண்டுமுறை நீக்கத்துக்குப்பின் கங்காணிகள் தம் கடன்களைப் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகள், தோட்டவுடைமையாளர்கள் கங்காணிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகையைக் கொடுக்காமலிருப்பதற்காக மேற்கொண்ட சூழ்ச்சிகரமான செயற்பாடுகள் முதலானவை விவரிக்கப்பட்டுள்ளன.

தென்னிந்தியாவின் செழிப்பையும் செழிப்பின்மையையும் ஒட்டி பெருந்தோட்டத் தொழிலாளர் குறைவாகவும் மிகுதியாகவும் இலங்கைக்கு வந்ததாகக் கூறும் நடேசய்யர், அத்தொழிலாளர்கள் எக்காலம் முதல் இலங்கைக்கு வருகைத் தரத் தொடங்கினர் என்பதைத் திட்டவட்டமாகக் கூறமுடியாதுள்ளமையை, “இலங்கைத் தீவில் தொன்றுதொட்ட நாள் முதல் இந்தியர்கள் குடியேறிக்கொண்டு வந்திருக்கிறார்கள். எக்காலந்தொட்டு தோட்டங்களில் தொழில் செய்து பிழைப்பதன் பொருட்டு தொழிலாளர் நிலைமையில் இந்தியர் இந்நாட்டிற்கு வந்தார்களென வரையறுத்துக் கூறுதல் முடியாத காரியம்” எனக் குறிப்பிட்டுள்ளதுடன் கங்காணிகளினூடாகத் கூலித்தொழிலாளர்களைத் திரட்டும் முறைமை வளர்ச்சிபெறத் தொடங்கிய 1847 ஆம் ஆண்டு முதல் தொழிலாளர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக் கோப்பித் தோட்டங்களில் தமிழ்நாட்டைவிட சற்று அதிகமாகக் கிடைத்த சம்பளம், தமிழ்நாட்டில் அடிக்கடி இடம்பெற்ற பஞ்சங்கள் முதலானவற்றால் தமிழ்நாட்டிலிருந்து தொழிலாளர்கள் இலங்கைக்கு அதிகமாக வந்தனர் எனக் குடிவருகைக்கான பிரதான காரணங்களை வரையறுத்துள்ள நடேசய்யர், கோப்பிச் செய்கை பாதிப்படைந்தபோது தொழிலாளரின் வருகை குறைந்து, தேயிலைச் செய்கை வளர்ச்சியடையத் தொடங்கியதும் மீண்டும் அதிகரித்தது எனத் தொழிலாளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றத்துக்கான அடிப்படைக் காரணத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். தேயிலைச் செய்கையின் விரிவாக்கத்தாலும் கோப்பிச்செய்கையில் போலல்லாது தேயிலைத் தோட்டங்களில் வருடம் முழுதும் உழைப்பாளர் தேவைப்பட்டமையாலும் தொழிலாளர் கேள்வி அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொடிய பஞ்சங்கள் அக்கேள்வியை நிவர்த்திசெய்யத் துணைபுரிந்துள்ளன.

1921 ஆம் ஆண்டுக்கான சனத்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, அப்போதிருந்த சுமார் 2000 தோட்டங்களில் 495,150 இந்தியத் தொழிலாளர் தொழிலில் ஈடுபட்டு வந்தமையையும் அவர்களுள் 4,214 பேர் முஸ்லிம்களாகவும் சுமார் 300 பேர் தெலுங்கர்களாகவும் மீதமுள்ளோர் தமிழராகவும் இருந்தமையையும் நடேசய்யர் பதிவு செய்துள்ளார். இப்புள்ளிவிபரங்கள் தோட்டத் தொழிலாளர் என்ற வர்க்க அடையாளத்துக்குள் அல்லது மலையகத் தமிழர் என்ற இன அடையாளத்துக்குள் அடங்கியிருக்கும் வெவ்வேறு குழுக்களையும் அவர்கள் ஒன்றிணைந்து கட்டியெழுப்பியுள்ள மலையகத்தின் பண்பாட்டு வாழ்வியலையும் புரிந்துகொள்வதற்கு அவசியமானவையாகும். இன்றும் தோட்டங்களில் எஞ்சியிருக்கின்றன முஸ்லிம்களின் தொடர்ச்சியையும் தம் தாய்மொழியான தெலுங்கை வீட்டுச் சூழலில் தொடர்ந்தும் பேணிவரும் மக்களின் பண்பாட்டு இருப்பையும் அறிந்துகொள்வதற்கு இப்புள்ளிவிபரங்கள் துணைபுரிகின்றன.

இந்தியத் தலைவர்கள், நம் சகோதரத் தொழிலாளர் விஷயத்தில் மிகுந்த சிரத்தையெடுத்து, அவர்களுடைய வாழ்வைச் செம்மைப்படுத்த இச்சந்தர்ப்பத்தில் முற்பட்டால் மட்டிலும் சம்பள விகிதம் கூட்டப்படும்” என்ற நோக்கை அடிப்படையாகக் கொண்டுள்ள இத்துண்டுப்பிரசுரத்தில் தோட்டத் தொழிலாளரின் பொருளாதார நிலைமையை விரிவாக எடுத்துக்காட்டியுள்ள நடேசய்யர், தொழிலாளரின் வேதனம் தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுக்களுடைய அறிக்கைகளை விமர்சனபூர்வமாக ஆராய்ந்து அவற்றின் போதாமைகளையும் அம்பலப்படுத்தியுள்ளதுடன் தொழிலாளரின் வேதனம் உயர்த்தப்படவேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்களை ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளார்.

தோட்டத் தொழிலாளரின் சம்பள விகிதத்தில் 1900 ஆம் ஆண்டும், 1918 ஆம் ஆண்டும் சிறிதளவு உயர்ச்சி ஏற்படுத்தப்பட்டபோதிலும் துண்டுமுறை நீக்கப்படும் வரை தொழிலாளரின் சம்பள உயர்வு குறித்து முன்னேற்றகரமான செயற்பாடுகள் எவையும் இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள நடேசய்யர், அக்காலப்பகுதியில் மக்களின் வாழ்வாதாரச் செலவுகள் அதிகரித்து வந்தமையைப் புள்ளிவிபரங்களுடன் எடுத்துக்காட்டியுள்ளார். தோட்டத்திலுள்ள ஆண் ஒருவருக்கு மாதமொன்றுக்குத் தேவையான சராசரி உணவையும் அதற்கான செலவையும் (மாமிசம் மற்றும் காய்கறிகளின் கணக்கு விபரம் இல்லாமல்) 1882 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் கணிப்பிட்டுள்ள அவர், 1924 ஆம் ஆண்டு வரை உணவுக்கான செலவைக் கணித்துள்ளார். அதன்படி, 1882 ஆம் ஆண்டு மாதமொன்றுக்கு 1.65 ½ சதமாக இருந்த செலவு 1924 ஆம் ஆண்டு 4.88 ½ சதமாக உயர்ந்துள்ளது. அவ்வாறே உடைகளின் விலையில் ஏற்பட்டுவந்துள்ள மாற்றங்களையும் தனியே எடுத்துக்காட்டியுள்ளார். அதன்படி, 1882 ஆம் ஆண்டு 2.50 சதமாக இருந்த உடைக்கான செலவு, 1924 ஆம் ஆண்டு 07 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், இந்த வாழ்க்கைச்செலவு மாற்றங்களுக்கு ஏற்ப தொழிலாளரின் வேதனம் உயர்த்தப்படவில்லை. இப்புள்ளிவிபரங்களைக் கொண்டு, “ஒரு குடும்பத்திலுள்ள இருவருமே (கணவனும் மனைவியும்) சம்பாதித்தும் அவர்கள் தங்களையே பாதுகாத்துக்கொள்ள சக்தியற்றவர்களாயிருக்கிறார்கள்” என்பதைத் துலக்கமாக வெளிப்படுத்தியுள்ளதுடன் தொழிலாளர்கள் மீளாக் கடனுக்குள் தத்தளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கான பின்புலத்தையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

தொழிலாளரின் வரவையும் செலவையும் கள ஆய்வுத் தகவல்களைக் கொண்டு ஆராய்ந்துள்ள நடேசய்யர், 1892 ஆம் ஆண்டுக்கு முன்னைய பொருளாதார நிலையையும் அதற்குப் பின்னரான நிலையையும் ஒப்பிட்டுக் காட்டி, தொழிலாளரின் பொருளாதார நிலைமை வரவர பின்தங்கிய நிலைக்குச் செல்வதை விபரித்துள்ளார்.

1892 ஆம் வருடத்திற்கு முன்பு வந்த தொழிலாளரிற் பலர் தனியாகக் குடும்பமின்றி வந்தமை, அக்காலத்தில் வாழ்க்கைச் செலவு குறைவாக இருந்தமை, தொழிலாளர் எண்ணிக்கை குறைவாக இருந்தமை, சம்பள விகிதம் சாதாரணமானதாக இருந்தமை, நிலத்தின் விலை குறைவாக இருந்தமை முதலான காரணங்களால் சிக்கனமாக இருந்தவர்கள் சிலர் நிலவுரிமையாளர்களாக மாறினர் என்பது நடேசய்யரின் கண்டுபிடிப்பாகும். அதேவேளை, 1902 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வருவதற்கான செலவு அதிகரித்தமை, பயணச் செலவைத் தொழிலாளரே ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தமை, உணவுப் பொருட்களினதும் ஆடைகளினதும் விலை அதிகரித்தமை, தொழிலாளரின் சம்பளம் உயர்த்தப்படாமை முதலானவை தொழிலாளரின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவதற்கும் அவர்களின் கடன்தொகை பெருகுவதற்கும் காரணமாக விளங்கியுள்ளவாற்றை எடுத்துக்காட்டியுள்ளார். இந்த ஒப்பீடு தொழிலாளரின் வேதனம் நிச்சயமாக உயர்த்தப்படவேண்டும் என்பதை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தொழிலாளரின் உண்மையான வாழ்க்கை நிலைமைக்கு மாறாகவும் உண்மை நிலைமையைக் கவனத்தில் கொள்ளாமலும் தொழிலாளர் வேதனம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளை நடேசய்யர் கேள்விக்குட்படுத்தியுள்ளார். இந்திய அரசு ஏற்படுத்திய அழுத்தத்தினால் தோட்டத் தொழிலாளரின் வேதனம், வீடு, சுகாதாரம் முதலியன தொடர்பில் திருப்திகரமான ஏற்பாடுகளை வழங்குவதற்கு உடன்பட்ட இலங்கை அரசு, பேர்ட்மென் என்பவரைத் தோட்டத் தொழிலாளரின் வரவு செலவுகளை கணிப்பிட்டு, சம்பள நிர்ணயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க நியமித்தது. அவரின் அறிக்கை 1923 ஆம் ஆண்டு வெளிவந்தது. அவருடைய அறிக்கை பல வகையிலும் பிற்போக்கானது எனக்கூறும் நடேசய்யர், “ஒரு கூலியின் சராசரி செலவைக் கண்டுணர வேண்டுவோர் எவ்வித விஷயங்களை ஆராய வேண்டுமோ அவற்றைச் சிறிதும் கவனியாது ஒரு குருட்டு வழியையனுசரித்துக் கூலியின் சராசரி செலவை நிச்சயித்துவிட்டார்” என அவ்வறிக்கையை முழுமையாக நிராகரித்துள்ளார். உண்மைநிலைமைக்கு மாறாக தோட்டத்தொழிலாளி ஒருவர் வருடமொன்றுக்கு 10 – 12 ரூபாய்களைச் சேமித்துவிடலாம் என பேர்ட்மென் குறிப்பிட்டுள்ள முடிவின் அபத்தத்தைத் தேசபக்தனில் எழுதிய ஏனைய குறிப்புகளிலும் நடேசய்யர் அம்பலப்படுத்தியுள்ளார்.

பேர்ட்மெனுக்குப் பின்னர் மார்க்கஸ் பெர்ணாண்டோ தன்னுடைய உரையொன்றில் தோட்டத் தொழிலாளரின் வரவு-செலவுகளைக் குறிப்பிட்டு, தோட்டத் தொழிலாளி ஒருவர் வருடமொன்றுக்கு 24 ரூபாய்களைச் சேமித்துவிடலாம் என்று கணித்துள்ளார். அவரின் இக்கண்டுபிடிப்பை நடேசய்யர், “இவர் அறிவரோ” என்ற தேசபக்தன் ஆசிரியத் தலையங்கத்தில் விரிவாக விவாதித்துள்ளார். அக்குறிப்பில், “ஸர். மார்க்கஸ் பெருனாண்டோ தொடுத்த பிரசங்கத்தால் தோட்டத் தொழிலாளரின் சிக்கன ஜீவியத்தில், அவருக்குப் போதிய ஆராய்ச்சி இருக்குமோவென ஐயுறுகிறோம். அவர் பேச்சளவைக் கொண்டு, அவர் ஆராய்ச்சி மிகுந்தவரல்லர் என்பது புலனாகிறது. ஆராய்ச்சியின்றேல் அனுபோகமிருக்க வேண்டும். அனுபோகமிருப்பதாயும் அறிவதற்கில்லை. அன்னவருக்கு ஆராய்ச்சி குறுகியும் உத்தேசம் பெருகியுமிருக்கிறது. அவரது கூற்றும் உத்தேசத்தையே வெளியிடுகிறது” என மார்க்கஸ் பெர்ணாண்டோவின் உரை, ஆய்வியல் அடிப்படைகளுக்கு மாறாக எடுகோள்களை முன்நிறுத்தி நிகழ்த்தப்பட்டுள்ளது எனச்சுட்டிக்காட்டி, அவ்வுரையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

பேர்ட்மென்னுடைய அறிக்கைக்குப் பின்னர் வெயிட் என்பவர் தலைமையில் நிர்ணயிக்கப்பட்ட குழுவினர் தோட்டத் தொழிலாளரின் சம்பளம் தொடர்பிலான அறிக்கையை 1925 ஆம் ஆண்டு வெளியிட்டனர். அக்குழுவில் இடம்பெற்றிருந்த டர்னர் என்பவரே அறிக்கைக்கான அடிப்படைச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். அதனால் அதனை டர்னர் அறிக்கை என்றே நடேசய்யர் அடையாளப்படுத்துகிறார். அந்த அறிக்கையின் போதாமையையும் நடேசய்யர் இத்துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளதுடன், அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி சம்பளம் தீர்மானிக்கப்பட்டால், “கூலியாளரின் கடனும் கஷ்டமும் நீங்காமல், சாப்பாட்டுக்குக்கூட இல்லாமல் தவிப்பார்களென்பதில் ஐயமில்லை” எனக் கணித்துள்ளார்.

தொழிலாளி ஒருவரின் சம்பளத்தை நிர்ணயிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படையான அம்சங்களை டர்னர் குழுவினர் கருத்தில்கொள்ளவில்லை என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளதுடன் அக்குழுவின் அறிக்கை நியாயமானதாக அமையவில்லை என்பதையும் நடேசய்யர் எடுத்துக்காட்டியுள்ளார். அக்குழுவினர் பெருந்தோட்டங்களை உயர்நிலத் தோட்டங்கள், இடைநிலத் தோட்டங்கள், தாழ்நிலத் தோட்டங்கள் என மூன்று பகுதியாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு அளவில் சம்பளத்தை நிர்ணயம் செய்துள்ளமையின் பொருத்தமின்மையைச் சுட்டிக்காட்டி, எல்லா தொழிலாளர்களுக்கும் பாகுபாடின்றி ஒரே அளவு சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். இருந்தபோதிலும் அக்குழுவின் சிபாரிசுகளே 1927 ஆம் ஆண்டு இந்தியத் தோட்டத் தொழிலாளர் குறைந்தபட்ச வேதனச் சட்டமாகக் கொண்டுவரப்பட்டது. அதுவே இலங்கையில் இந்தியத் தொழிலாளரின் வேதனத்தை நிர்ணயிப்பதற்குக் கொண்டுவந்த முதற்சட்டமாகும். அச்சட்டம் தோட்டங்களை உயர்நிலத் தோட்டங்கள், இடைநிலத் தோட்டங்கள், தாழ்நிலத் தோட்டங்கள் என மூவகையாகப் பாகுபடுத்தி ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு சம்பளத்தை நிர்ணயித்தது. அதன்போது உயர்நிலத் தோட்டங்களின் சம்பளம் அதிகமாகவும் தாழ்நிலத் தோட்டங்களின் சம்பளம் குறைவாகவும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளரின் யதார்த்த நிலைமையைக் கண்டறியும் பொருட்டு அமைக்கப்படும் குழுக்களில் இந்தியர் சார்பாக இடம்பெறுபவர்களும் இந்திய உத்தியோகஸ்தர்களும் தொழிலாளர் நலன்சாராது, தோட்டவுடைமையாளர் நலன்சார்ந்து இயங்குவதை நடேசய்யர் வெளிப்படையாகக் கண்டித்துள்ளார். இத்துண்டுப்பிரசுரத்தில் 1919 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மசோதா தொடர்பாகச் சாட்சியம் அளிக்கையில் பாண்டியன் என்பவர், “இலங்கைத் தோட்டம் ஓர் இந்தியத் தொழிலாளிக்குச் சொர்க்கலோகமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டி, அவர் அவ்வாறு உண்மைக்கு மாறாக கருத்துத் தெரிவித்தமைக்கான பின்புலத்தினைத் தெளிவுபடுத்தியுள்ளார். அதேவேளை, அச்சாட்சியத்தின்போது பெரி. சுந்தரமும் கருமுத்து தியாகராசரும் தொழிலாளரின் உண்மைநிலையை விளக்கியுள்ளனர். அதனைப் பதிவுசெய்துள்ள நடேசய்யர், “உண்மையை அறியக் கமிட்டியாருக்கு மனமில்லாததால் அவ்விருவருடைய சாட்சியங்களைப் பொருட்படுத்தவில்லை” எனக் குறிப்பிட்டு, அக்காலத்தில் அரசு நியமிக்கும் குழுக்களின் பக்கச்சார்பை, தொழிலாளர் விரோத நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கைக்கான இந்தியாவின் முதலாவது முகவராக விளங்கிய ரெங்கநாதன், டர்னர் குழுவின் அறிக்கைக்கு ஒத்தவகையிலான அறிக்கையினையே சமர்ப்பித்துள்ளார். அவரின் அறிக்கைகள் மீதான கருத்துகளையும் நடேசய்யர் தேசபக்தனில் வெளிப்படுத்தியுள்ளார்.

துண்டு முறையின் ஆபத்தையும் அம்முறை நீக்கப்பட வேண்டிய தேவையையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்துள்ள நடேசய்யர், அம்முறையை நீக்கும் செயன்முறை இடம்பெற்றவாற்றையும் அதனால் ஏற்பட்ட சாதக-பாதகங்களையும் விரிவாக ஆராய்ந்துள்ளார். எடுத்துக்காட்டாக, துண்டு முறையினால் தொழிலாளிகள் மீளாக் கடனில் மூழ்கித் தவிக்க வேண்டிய சூழலையும் இரக்கமற்ற தோட்ட முதலாளிகள் செய்த சூழ்ச்சியையும் “ஒரு தொழிலாளியாவது, கங்காணியாவது ஏதாவது காரணங்களினால் தோட்டத்தைவிட்டுப்போக நேரிட்டால், தோட்டக்காரர் அவனுடைய பற்றுவரவு கணக்கு நகலொன்று அவனுக்குக் கொடுத்தனுப்புவார். அக்கணக்கு நகலைப்பெற்ற அக்கூலி மற்றொரு முதலாளியையணுகி கணக்கு நகலை (துண்டு என்பது அதன் பெயர்) காட்டுவார். அப்புதிய முதலாளியும் தனக்குப் பிரியமிருந்தால் கூலியைத் தன் தோட்டத்திலிருத்திக் கொண்டு, துண்டுப்பிரகாரம், அவனுடைய பழைய முதலாளிக்குச் சேரவேண்டிய கடனைக் கொடுத்து விடுவார். ஆகவே, தொழிலாளியின் கடன் ஒரு முதலாளியிடமிருந்து மறுமுதலாளிக்கு மாற்றப்பட்டதேயன்றி கடன் நீங்கினபாடில்லை. தவிறவும் பிணக்கங்கொண்டு தோட்டத்தைவிட்டகலும் தொழிலாளி, சில கருணையில்லாத முதலாளிகளால் அநியாயமாக ஏமாற்றப்பட்டும் போயினர். கணக்கு வழக்கொன்றும் சிறிதுமறியாத ஏழைக் கூலிக்குக் கொடுக்கப்படும் துண்டில் கூட்டிக்குறைத்து சில்லறைக் கடன் என எழுதவும் ஆரம்பித்தார்கள். தொழிலாளியின் மூடத்தனமும் படிப்பின்மையும் ஏழ்மையும் தோட்டக்காரர் மனம்போனபடியெல்லாம் அதிக்கிரமஞ் செய்வதற்குச் சாதகமாயிருந்தன” எனத் தெளிவுபடுத்தியுள்ளமையைக் குறிப்பிடலாம்.

துண்டுமுறை நீக்கப்படுவதற்கு முன்னர், தொழிலாளரின் கடனை இல்லாதொழிக்கும் முயற்சி 1919 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. அம்மசோதாவில் தொழிலாளர் கடனையொழிக்க முன்வைத்த ஏற்பாட்டையும் அதனைத் தோட்டவுடைமையாளர்களும் கங்காணிகளும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டமையையும் நடேசய்யர் இத்துண்டுப்பிரசுரத்தில் பதிவுசெய்துள்ளார். “கங்காணிகள் தொழிலாளிகளுக்குக் கொடுத்திருந்த பணத்தைத் தோட்டக்காரர்கள் கங்காணிகளுக்குக் கொடுக்க வேண்டுமென்றும் அப்படியின்றேல், வேறு எவ்வித வரி விதித்தாவது கங்காணிகளுக்குப் பணம் கொடுக்கப்பட வேண்டும் என்றும்” அம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளதால் தோட்டவுடைமையாளரும் கங்காணிமாரும் ஒன்றுகூடி, தொழிலாளரின் சம்பளத்தில் பாதியைத் தம் கடனுக்காகப் பிடித்துக்கொண்டுள்ளனர். அக்கொடுமையைத் தொழிலாளியின் குரலாய் வெளிப்படுத்தியுள்ள நடேசய்யர், அதன்பின்பே இந்திய அரசு குடியேற்ற நாடுகளுக்குப் புலம்பெயரும் தொழிலாளர் தொடர்பில் புதிய ஏற்பாடுகளைக் கொண்டுவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். குடியேற்ற நாடுகளில் இந்தியத் தொழிலாளர் தொடர்பில் நிலவும் குறைபாடுகள் நீக்கப்படாவிட்டால் தொழிலாளர்களை அந்நாடுகளுக்கு அனுப்புவதில்லை என்ற நடவடிக்கையை இந்திய அரசு முன்னெடுத்ததால் இலங்கை அரசு துண்டு முறையை முழுமையாக நீக்கியுள்ளதுடன் தோட்டங்களுக்கு வரும் தொழிலாளியின் பயணச் செலவு தொழிலாளர்க்கு உரியது என்பதையும் அகற்றியுள்ளது.

துண்டுமுறை நீக்கத்தினால் தொழிலாளரின் கடன் முழுமையாக அகற்றப்படவில்லை என்பதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக்காட்டியுள்ள நடேசய்யர், இத்துண்டுப்பிரசுரத்தில் துண்டுமுறை நீக்கத்தினால் தொழிலாளர்களுக்குக் கடன் வழங்கிய கங்காணிமார்கள் அடைந்த துயரை விரிவாக விளக்கியுள்ளார். துண்டுமுறை நீக்கச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது கங்காணிகள் வழங்கிய கடனைத் திரும்பப் பெறுவதற்கான எவ்வித சட்ட ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படாததால் கங்காணிகள் வழங்கிய கடனை மீளப்பெறுவதில் தடையேற்பட்டுள்ளது. கங்காணிகள் வழங்கிய கடனைத் தோட்டவுடைமையாளர்களே திரும்ப வழங்க வேண்டும் என்பது நடேசய்யரின் நிலைப்பாடாக இருந்துள்ளது. கங்காணிகள் தோட்டக்காரரின் நன்மை கருதியே கடன் வழங்கியதால் அக்கடனைத் தோட்டக்காரரே மீளச் செலுத்த வேண்டும் என்பதை அவர் மீளமீள வெளிப்படுத்தியுள்ளார்.

கங்காணிகளுக்குத் ‘துண்டு’ என்பதே அவர்கள் வழங்கிய கடனை மீளப்பெறுவதற்கு அடிப்படையாக விளங்கிவந்துள்ளது. துண்டுமுறை நீக்கப்பட்டதும் அதற்கான வழி இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் கங்காணிகள் தாம் வழங்கிய கடனைப் பெற பலவாறு முயற்சித்துள்ளனர். அவர்களுள் சிலர் சட்டமுறையில் அணுகி வழக்குத் தொடுத்துள்ளனர். ஆனால், சட்டத்தில் அதற்கு இடமில்லாததால் அவர்களால் வெற்றிபெறமுடியவில்லை. இந்நிலையால் தோட்டவுடைமையாளருடன் சமாதானமான பேச்சுவார்த்தையின் மூலமே கங்காணிமார்கள் தாம் வழங்கிய கடனைப் பெற்றுக்கொள்ள வழியிருந்துள்ளது.

தோட்டவுடைமையாளருடனான பேச்சுவார்த்தையின்போது அவர்கள் ஐந்து வருடங்களுக்குள் கங்காணிகளின் கடனைத் திருப்பித்தருவதாக வாக்களித்துள்ளனர். இருப்பினும் அதனை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடாமல் சூழ்ச்சிகரமான தந்திரங்கள் மூலம் கங்காணிகளுக்குக் கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுக்காமலிருந்துள்ளனர். அவற்றை எடுத்துக்காட்டியுள்ள நடேசய்யர், ஐந்து ஆண்டுகளுக்குள் கங்காணிகளின் கடனைத் திரும்பத் தருகிறோம் என்பதே தோட்டவுடைமையாளரின் சுயநலன்கருதிய முடிவு என்பதை, “இலங்கை கவர்ன்மெண்டும் இந்தியா கவர்ன்மெண்டும் 1923-ம் வருஷத்தில் சட்டங்களை இயற்றியதும், ஒருவேளை தொழிலாளர் தோட்டங்களைவிட்டுப் போய்விடுவார்களோ என்ற சந்தேகம் தோட்டக்காரருக்கு உண்டாயிற்று. தொழிலாளிகள் போய்விடின் தங்களுடைய பொக்கிஷங்கள் நிரப்பப்படாமற் போய்விடுமே யென்று பயந்த தோட்டக்காரர் இவ்வாசைமொழியை யளித்து, தொழிலாளரைத் தோட்டங்களில் இருத்திக்கொள்ளும்படி கங்காணிகளைத் தூண்டினார்கள்” என விளக்கிக்காட்டியுள்ளார்.

கங்காணிகள் பற்றிய நடேசய்யரின் பார்வையானது அவர்களை முற்றிலும் எதிர்நிலையில் நிறுத்துவதாக அமையவில்லை. கங்காணிகளின் சுரண்டல்களையும் அராஜகங்களையும் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, அவர்களால் விளைந்த நன்மைகளையும் எடுத்துக்காட்டியுள்ளார். தொழிலாளர் குழுவிலிருந்து கங்காணிகளை வேறுபடுத்தாமல் அவர்களையும் தோட்டத்தொழிலாளருடன் இணைத்து நோக்கியுள்ள நடேசய்யர், கங்காணிகள் தொழிலாளர்களிடத்து பரிவுடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்தும் வலியுறுத்திவந்துள்ளார். அதன்வெளிப்பாட்டை இப்பிரசுரத்திலும் காணமுடிகிறது. கங்காணி’ என்ற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் நம்மில் அநேகருக்கு ஒருவித அதிருப்தி ஏற்படுவது இயல்பு. அவ்வித அதிருப்தியை நீக்கும் பொருட்டு கங்காணிகளைக் கொண்டு தொழிலாளரை நடத்தும் முறையைப் பற்றி பொது ஜனங்களுக்கு நன்கு விளக்கிக்காட்ட முற்படுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ள நடேசய்யர், அந்நோக்கத்துக்கு ஏற்ப கங்காணிமுறையின் அமைப்பையும் இயக்கத்தையும் இத்துண்டுப்பிரசுரத்தில் சுருக்கமாக எடுத்துரைத்துள்ளார். அக்கருத்துகளைப் பின்வருமாறு தொகுத்துக்கொள்ளலாம்:

  1. கோப்பித் தோட்டங்கள் செழிப்பாயிருந்த காலத்தில், கங்காணிமார்கள் தங்களுடைய சொந்தப் பொறுப்பில், இந்தியத் தொழிலாளருக்குப் பணவுதவி செய்து இலங்கைக்கு அழைத்துவந்து தமது மேற்பார்வையில் தோட்டங்களில் வேலைசெய்யும்படி நியமித்தனர்.
  2. கோப்பிக் காலத்தின் தொடக்கத்தில் தொழிலாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையே சம்பளம் கொடுக்கப்பட்டு வந்தால் அக்காலத்தில் தொழிலாளர்களுக்குத் தேவையான சகலவற்றையும் கங்காணிமார்களே வழங்கிவந்ததுடன் சம்பளம் வழங்கியதும் அவற்றை வசூலித்துள்ளனர்.
  3. கோப்பித் தோட்டங்கள் வீழ்ச்சியடைந்ததும் தோட்டவுடைமையாளர் பலர் தொழிலாளர்களைக் கைவிட்டுவிட்டு வெளியேறியபோது, கங்காணிகளே தொழிலாளர்களுக்குத் தேவையான பொருளுதவிகளைச் செய்தனர்.
  4. இலங்கைத் தோட்டங்களில் தொழிலாளரின் கேள்வி அதிகப்படவே, கூலிக்கு ஆட்கள் திரட்டுவதே வியாபாரமாகியது. அதன்போது பொய்யான பிரசாரங்கள் மூலம் இந்தியாவிலிருந்து மக்களைத் தோட்டத்தொழிலுக்கு அழைத்து வந்தனர்.
  5. தோட்டவுடைமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இணைப்புப் பாலமாகத் தலைமைக் கங்காணிகளான பெரிய கங்காணிமார்களே தொழிற்பட்டுள்ளனர். அவர்கள் வேலை ஸ்தலங்களிலும் தோட்டங்களிலும் சர்தார் அல்லது சப் ஓவர்ஸியர் போன்று தொழிலாளரை மேற்பார்வை செய்கின்றனர்.
  6. கங்காணிகளில் தலைமைக் கங்காணிகள் (பெரிய கங்காணி), உதவிக் கங்காணிகள் (சில்லறைக் கங்காணி) என இரு வகுப்பினர் இருக்கின்றனர்.
  7. பெரிய கங்காணிமார்கள் தமிழ்நாட்டுக்குச் சென்று நேரடியாக ஆட்சேர்ப்பில் ஈடுபடாமல் தமக்குக் கீழே சில்லறைக் கங்காணிகளை நியமித்து அவர்களூடாக ஆட்சேர்ப்புச் செய்கின்றனர்.
  8. தலைமைக் கங்காணிகள் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு உதவிக் கங்காணிகளிடம் பணம் கொடுக்கின்றனர். அவர்கள் தொழிலாளர்களை திரட்டிக்கொண்டு இலங்கை வந்ததும் தாம் பெற்ற கடனுக்கான செலவு விபரத்தைத் தலைமைக் கங்காணியிடம் வழங்குவர். செலவு செய்த தொகை உதவிக் கங்காணியின் பற்றில் வைக்கப்படும்.
  9. தலைமைக் கங்காணிகள், தொழிலாளர்கள் தேவைப்படும் தோட்டங்களிலிருந்து முற்பணம் பெற்றும், முற்பணம் போதாதபோது வேறுவழியில் பணத்தைத் திரட்டியும் உதவிக் கங்காணிகளுக்கு வழங்கித் தொழிலாளரைத் திரட்டுகின்றனர்.
  10. கங்காணிமார்களுக்கான ஊதியமானது பின்வரும் மூன்று வழிகளில் கிடைத்துள்ளன:

அ) தமிழ்நாட்டிலிருந்து தொழிலாளரை அழைத்து வருவதற்கு அக்காலத்தில் தொழிலாளர் ஒருவருக்கு 10 தொடக்கம் 15 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதில் தலைமைக் கங்காணி 05 ரூபாயைத் தம் பங்கிற்குப் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஆ) கங்காணிமார்கள் தோட்டங்களிலுள்ள தொழிலாளரை மேற்பார்வை செய்யும் வேலையைப் பார்த்துவந்தால் நாட் சம்பளமோ சொற்ப மாதச் சம்பளமோ வழங்கப்பட்டுள்ளது.

இ) ஒவ்வொரு தொழிலாளிக்கும் இவ்வளவெனத் தலைப்பணம் (ஹெட்மனி) அல்லது பென்ஸ்பணம் (பென்ஸ்மனி) கங்காணிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலையொன்றுக்கு 5 அல்லது 6 சதம் தலைப்பணமாகக் கொடுக்கப்படும். அதில் தலைமைக் கங்காணிகள் 2 சதமாகவும் உதவிக் கங்காணிகள் 3 அல்லது 4 சதமாகவும் பிரித்துக்கொள்வர். நாட்சம்பளமற்று வேலைக்கு இவ்வளவு என்று கொடுக்கப்படும் தோட்டங்களில் தொழிலாளர் சம்பளத்திலிருந்து நூற்றுக்குப் பதினைந்து வீதம் தலைப்பணத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பத்து வீதத்தை உதவிக் கங்காணிகளும் ஐந்த வீதத்தைத் தலைமைக் கங்காணிகளும் பெற்றுக்கொள்வர்.

தோட்டத் தொழிலாளரின் சம்பள அளவை தீர்மானிப்பதற்கு உருவாக்கப்பட்ட குழுக்களுடன் தோட்டதுரைமார் சங்கத்தினர் நேரடியாக உரையாடலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தம் ஐயங்களையும் கருத்துகளையும் அக்குழுவினருடன் பகிர்ந்துகொண்டுள்ளனர். இத்தகைய எந்த வாய்ப்பும் தோட்டத்தொழிலாளர்க்கு இல்லாத நிலையில் அம்மக்களின் குரலாக நடேசய்யரே ஒலித்துள்ளார். தோட்டத் தொழிலாளர் சம்பளம் தொடர்பில் சட்டசபையிலும் பொதுவிலும் அவர் வெளிப்படுத்திய கருத்துகள், தோட்டத் தொழிலாளர் சார்பிலான இந்தியாவின் அழுத்தங்களை மிகுவிக்க துணையாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாகவே 1927 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளருக்குக் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அச்சட்டத்திலேயே தொழிலாளருக்கு மாதாமாதம் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது. நீண்ட பயணத்தில், பெரும்போராட்டங்களுக்கு மத்தியில் தொழிலாளர் சம்பளம் தொடர்பில் இடம்பெற்ற முன்னேற்றகரமான மாற்றங்களாக இவை அமைகின்றன. அந்நெடும் பயணத்தில் நடேசய்யரே தொழிலாளர் சார்பில் வலுவான இடையீட்டினை நிகழ்த்தியுள்ளார். அவருக்கு முன்னர் சேர்.பொன். அருணாசலம் தோட்டத் தொழிலாளருக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படவேண்டும் என்பதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளார். தோட்டத் தொழிலாளருக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த முன்னோடியாக அவரே விளங்குகிறார். அவருக்குப்பின் கருமுத்து தியாகராஜ செட்டியார் தொழிலாளரின் வேதனம் உயர்த்தப்படவேண்டிய தேவையை வலியுறுத்திவந்துள்ளார். அவர்களுக்குப்பின் தோட்டத் தொழிலாளரின் பொருளாதார நிலைமை, தொழிலாளர் வேதன நிர்ணயக் குழு அறிக்கைகளின் போதாமைகள் முதலானவற்றைக் கள ஆய்வுத் தகவல்களுடன் வரலாற்றுப் பின்புலத்தில் ஆராய்ந்து, தொழிலாளரின் வேதனம் உயர்த்தப்படவேண்டும் என்பதை நியாயப்படுத்தியவராக நடேசய்யர் விளங்குகிறார். அவருக்கு இணையான வகையில் அவர் காலத்திலோ அவருக்குப் பின்போ வேறு எவரும் அத்தகைய இடையீட்டினை நிகழ்த்தவில்லை. அதற்கு இத்துண்டுப்பிரசுரமும் சான்றாக விளங்குகிறது. 


ஒலிவடிவில் கேட்க

2288 பார்வைகள்

About the Author

எம். எம். ஜெயசீலன்

எம்.எம். ஜெயசீலன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி, முதுதத்துவமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், இந்தியப் பொதுநலவாய நாடுகளின் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் (தஞ்சாவூர்) கலாநிதிப் பட்ட ஆய்வைச் சமர்ப்பித்துள்ளார். கல்வெட்டியல், பண்பாட்டு வரலாறு, இலக்கிய விமர்சனம், நவீன இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வமுள்ள இவர், அத்துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து வருவதுடன் ஆய்விதழ்களிலும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்தும் எழுதிவருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்